போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19

This entry is part 1 of 29 in the series 12 மே 2013

Buddha_in_Sarnath_Museum_(Dhammajak_Mutra)

 

 

“பௌத்த தர்மம் என்று இது அழைக்கப் படும். பௌத்ததை ஏற்கும் நம்பிக்கை உடையவர் உபாசகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நம் ஐவரையும் முதல் அரஹந்தர்களாக புத்த பெருமான் அங்கீகரித்திருக்கிறார்” என்றார் கௌடின்யன்.

“அரஹந்தரின் பணி என்ன?” என்றார் பர்ப்பா.

” துறவு கொள்ள வருவோரை பிட்சுக்களாக பௌத்தத் துறவிகளாக ஏற்பது”

“அதற்கு யார் முன் வருவார்கள்?”

” ஏற்கனவே யசன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்”

“பிட்சுவாக ஒரே நாள் போதுமா?” இது பஸிகாவின் கேள்வி.

“கால அளவை வைத்துப் பார்க்காமல் முதலில் பப்பஜர்களாகத் தமது இல்லத்தைத் துறந்து வருவோர் பின்னர் பிட்சுக்களுக்கான சபதங்களை ஏற்பர். அதாவது துறவறங்களுக்கான சபதங்களைச் செய்து பௌத்த தர்மத் துறவிகளாவர்”

“சிறுவர்களுக்குப் பிட்சு ஆகும் தகுதி உண்டா?”

“உண்டு. முதலில் ஸ்ரபுணேரர்களாக நம்முடன் இணைந்து, கல்வி பயின்று 20 வயதுக்குப் பிறகு பிட்சுக்களாக ஆகலாம்’

“பிட்சுக்களின் உடை என்ன?” இது பர்ப்பாவின் அடுத்த கேள்வி.

“காவி உடைதான். இப்போது புத்தர் அணிந்திருப்பது போலவே இருக்கும்”

அஸ்வஜித் ” ஆரம்பத்தில் தலையை முழுதும் மழித்தே பிரிவிராஜராக, வைராகியாக இருந்தார். தற்போது தலையில் சிகை உள்ளது. எது சரியான தோற்றம் ஒரு பிட்சுவுக்கு?”

“புத்தர் ஞானம் பெறும் போது இருந்த தோற்றம் அவருக்கு மட்டுமே. அவர் ஞானம் தேடும் போது இருந்த தோற்றமே பிட்சுக்கள் எல்லோருக்கும்”

“அரஹந்த், பிட்சுக்கள் இவர் தவிர சாதாரண ஜனங்கள் வரும் போது அவர்கள் பெயர் என்ன?” என்றார் மஹாநாமா.

” பௌத்தத்துக்கு வரும் போது நான் முன்பே கூறியது போல யாருமே உபாசகரே”

“சரி. உபாசகர், பிட்சு, அரஹந்த் அனைவரையும் சேர்த்து பௌத்த வழி நடப்போரின் பெயர் என்ன?”

“சங்கா”

“பெண்கள் பிட்சுவாகலாமா?” என்றார் பஸிகா.

“கூடாது” என்றார் கௌடின்யர்.

சிலையாக அமர்ந்திருந்தார் சுத்தோதனர். யசோதராவும், ராணி பஜாபதி கோதமியும் அவர் மௌனம் கலைக்கும் வரை பொறுமையாக இருந்தனர். ராகுலன் மட்டுமே ஓடி விளையாடி அந்த சூழ்நிலையில் பாதிக்கப்படாதவனாக இருந்தான்.

ஒரு சேவகன் வேகமாக வந்து “வணக்கம் மகாராஜா. கலா உதாயின் வந்து விட்டார்” என்று கூறி வணங்கினான்.

“வரச்சொல்”

கலா உதாயின் நடுவயதினராக இருந்தார். “மகாராஜா, ம்காராணி, இளவரசி அனைவருக்கும் வணக்கம்”. மன்னர் ஆசனம் தந்தும் அமர மறுத்து “கட்டளை என்ன மகாராஜா?” என்றார்.

“உதாயின் உனது பால்ய நண்பன் சித்தார்த்தன் ஞானம் பெற்று புத்தராகி மகத நாட்டில் வகிக்கிறான் அறிவாயா?”

“கேள்விப்பட்டேன் மகாராஜா. சாக்கிய முனி என்று அழைக்கப்பட்ட அவர் தற்போது கௌதம புத்தர் என வணங்கப் படுகிறார். மகத நாடு பாக்கியம் செய்திருக்கிறது”

“கபிலவாஸ்துவும் சாக்கிய மண்ணும் என்ன பாவம் செய்தன உதாயின்?”

“மன்னிக்க வேண்டும் மகாராஜா. அவ்வாறில்லை. சாக்கிய வம்சட்த்து வழித்தோன்றல் புத்தரானால் பெருமை தந்தையாகிய தங்களுக்கே”

“பெருமிதம் ஏதுமில்லை உதாயின். துக்கமே எஞ்சியது. மகுடம் சூட்டிக் கொள்ள வேண்டிய என் ம்கன் இன்று பிட்சை எடுத்துத் துறவியாய் வாழ்கிறான். மகன், மனைவி, குடும்பம் என்னும் பற்றைத் துறந்து வெகு நாளாயிற்று . தனது தர்ம சாதனையை இந்த மண்ணில் நிகழ்த்தலாமே? அதை அவனிடம் எடுத்துச் சொல்ல பால்ய நண்பனான நீயே பொருத்தமானவன்’

கலா உதாயின் பதிலே சொல்லவில்லை.

“ஏன் உதாயின் என்ன தயக்கம்?”

“உங்கள் ஆணைக்குப் பிறகு தயக்கம் ஏது மகாராஜா? என்னிலும் அறிவில் சிறந்தவர் அவர். அவர் முன்னர் நான் எறும்பு போல நிற்பேன்”

“நீ தனியாகப் போக வேண்டாம். மந்திரிகளில் ஒருவரும் நிறைய வீரர்களும் பொதுமக்களும் உன்னுடனே வருவார்கள்”

“அவர் பாதம் பணிந்து நம் தேசத்துக்குத் திரும்ப அழைத்து வருவோம் மகாராஜா”

கௌதம புத்தருடன் கஸ்ஸாபா என்ற குலத்தைச் சேர்ந்த உருவேலா, நாடி, கயா என்னும் சகோதரர்கள் நடந்து கொண்டிருந்தனர். மூத்தவனான உருவேலா “எங்கள் பகுதிக்கு நீங்கள் வந்ததது எங்களுக்குப் பெருமையாயிருக்கிறது. ஆனாலும் எங்களுக்கு எனப் பெருமை மிகுந்த பாரம்பரியம் உண்டு. சூரியனோ சந்திரனோ நட்சத்திரங்களோ இவை யாவும் ஒளி வடிவே. ஒளி என்பது அக்கினியில் இருந்து தான் உண்டாவது. அக்கினி தேவனே அனைத்துக்கும் அதிபதி. அவனை வணங்குவதை விடவும் உயர்ந்த எந்தத் தத்துவத்தைத் தாங்கள் கூற இயலும்?”

மலையின் ஏற்ற இறக்கங்களில் அவன் சொல்வதைக் கேட்டபடியே வந்த புத்தர் ஒரு பாறையின் மீது அமர்ந்தார். கஸ்ஸாபா சகோதரர்கள் மறும் புத்தருடன் வந்திருந்த நூற்றுக்கணக்கானவருக்கும் மூச்சு வாங்குவதிலிருந்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. சூரியன் மறைந்து இருள் கவிந்து கொண்டிருந்தது. மலையின் மேலிருந்து செவ்வானம் அழகிய சித்திரமாய்த் தெரிந்தது.

“நீங்களும் உங்கள் மலை நாட்டு மக்களும் விருப்பங்கள் நிறைவேற அக்கினித் தேவனை வழிபடுவீர்கள் தானே உருவேலா?” என்று துவங்கினார் புத்தர்.

“ஆம் புத்தரே. அவரிடம் வைக்கும் பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் கண்டிப்பாக நிறைவேறும்”

“மற்ற நாட்டு மக்களும் ஏதேனும் ஒரு பிரார்த்தனையைத் தமது இஷ்ட தெய்வத்திடம் வைத்துக் கொண்டு தான் இருப்பார்கள். இல்லையா உருவேலா?”

“அவரவர் வழிபாட்டு முறையில் இது தினசரி நடப்பது தானே புத்தரே?”

“விருப்பங்கள் நிறைவேறும்படி நாம் தினசரி வேண்டுகிறோமென்றால் ஒரேடியாக விருப்பம் நிறைவேறி மனம் நிறைவுற்றது என்று நிலைமை கிடையாது என்று பொருளா?”

“புரியவில்லை புத்தரே”

“வேறுவிதமாகக் கேட்கிறேன். துன்பம் வரும் போது நாம் கடவுளை வேண்டுகிறோம் இல்லையா?”

“ஆமாம். துன்பம் நீங்கக் கடவுளை விட்டால் வேறு யாரிடம் வேண்டுவது?”

“துன்பம் ஏன் நீங்க வேண்டும் உருவேலா?”

நன்கு இருட்டி விட்டது. உருவேலாவின் ஆட்கள் தீப்பந்தத்துடன் அருகில் வந்து நின்றனர்.

“துன்பம் என்பது வலி புத்தரே. மனதுக்கோ உடலுக்கோ தாங்க முடியாதபடி ஏற்படும் காயமோ வலியோ. அது நீங்காமல் எப்படி நிம்மதியாக இருப்பது?”

“துன்பங்கள் எத்தனை விதமாக இருந்தாலும் வலியும் வேதனையும் பொதுவாக இருக்கின்றன. நான் சொல்வது சரியா உருவேலா?”

உருவேலா பதில் சொல்லவில்லை.

இரவு உணவு வந்தது. தீப்பந்தங்கள் மீது வந்து விழும் பூச்சிகளை விரட்ட கோரைப் புற்களால் செய்யப்பட்ட பெரிய சாமரங்களைப் பணியாளர்கள் வீச கஸ்ஸாபா சகோதரர்களும், புத்தருடன் வந்தவரில் துறவு ஏற்காதவரும் உணவு உண்டனர். புத்தரும் துறவு ஏற்றவர்களும் உணவு உண்ணவில்லை.

விடியற்காலையில் அருவிப்பக்கம் புத்தர் கிளம்பிச் சென்ற போது அவருடனேயே நடந்தான் உருவேலா.

“இரவு முழுவதும் உறங்கவில்லையா உருவேலா?” என்றார் புத்தர்.

தனது மனநிலையை எப்படிக் கண்டுபிடித்தார் என வியந்தான். “புத்தரே. துன்பங்கள். பிரார்த்தனைகள் இரண்டும் நிரந்தரமாகத் தான் இருக்கின்றன. துன்பத்திலிருந்து விடுதலை உண்டா?”

“துன்பம் இல்லாத போது இன்பமாக இருக்கிறதா உருவேலா? இதற்கு மட்டும் யோசித்து பதில் சொல்”

காலை, பகல், என நேரம் கடக்க புத்தர் தம்மை நாடி வந்தவருடன் அளவளாவிக் கொண்டிருந்தார். மாலையும் வந்தது. அதே பாறையில் பள்ளத்தாக்கை ரசிப்பது போல மோன நிலையில் இருந்தார் புத்தர். அவர் உருவேலா அருகில் அமரும் அசைவு கண்டு அவனை கவனித்தார்.

“யோசித்து விட்டேன் புத்தரே. துன்பம் நீங்கினாலும் அந்த நிலையை இன்பம் என்று சொல்ல முடியவில்லை’

‘ஏன் உருவேலா?”

” அந்த இன்பம் நிலைக்குமா என்ற பதட்டமும் நிலைக்காது என்ற பதிலும் இன்பத்துக்கு வழியில்லாமல் செய்து விடுகின்றன”

“அச்சுறுத்தும் ஒரு நிழல் போல நிலையாமை நம் மீது படர்ந்து கொண்டே இருக்கிறது இல்லையா?”

“இதில் இருந்து தான் விடுதலை தேட வேண்டும் புத்தரே. எப்படி என்பதுதான் புரியவில்லை”

மாலை கடந்து இரவின் இருள் எங்கும் கவ்வியது.

புத்தரும் உருவேலாவும் வெகு நேரம் அமர்ந்திருந்தனர் மௌனமாக.

‘அதைப் பார் உருவேலா” புத்தர் சுட்டிக்காட்டிய இடத்தில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்தது.

“காட்டுத்தீ புத்தரே”

“அது எங்கிருந்து வந்தது?”

“தங்களுக்குத் தெரியாததா புத்தரே? காட்டில் காய்ந்து கிடக்கும் சருகுகள் வெப்பத்தில் தீப்பற்றிக் கொள்ள, பின் அது பெரிய தீயாகிறது’

‘அவ்வாறெனில் அந்தத் தீ காடினுள் இருந்து தானே துவங்குகிறது இல்லையா?”

” இதில் சந்தேகமென்ன?”

“ஆனால் அது தன்னைப் பிறப்பித்த காட்டையே அழிக்கிறதே”

“சாதாரணமான உண்மைதானே இது புத்தரே”

“காட்டு தனது தீயில் தானே அழிவதையும், நம் மனதில் துன்பம் ஏற்படுத்தும் வலியையும், துன்பம் நீங்கினாலும் இன்பம் நிலைக்காது என்னும் அச்சத்தையும் அது கொடுக்கும் பதட்டத்தையும் ஒப்பிடலாமா உருவேலா?”

‘எப்படி? எனக்கு விளங்கவில்லையே?”

“சொல்கிறேன். நம்மை வாட்டும் வலியோ துன்பமோ எங்கிருந்து துவங்கின?”

உருவேலா பதில் சொல்லவில்லை.

“சரி. இதற்கு பதில் சொல். உடலில் ஒரு காயம் ஏற்படுகிறது. அதை மனதில் ஏற்படும் ஒரு ஏமாற்றம், அவமானம், இழப்பு அல்ல்து எதிர்பார்ப்பு நிறைவேறுமா இல்லையா என்று தெளிவான விடை கிடைக்காத தவிப்பு இவற்றோடு ஒப்பிடு”

“ஒப்பிடும் காரணமென்ன புத்தரே? ”

“ஒன்றோடு ஒன்றை ஒப்பிடலாம். அதாவது உடலில் வரும் வலி நீண்ட நாள் நிலைத்துத் தொல்லை தருகிறதா அல்லது மனது உணரும் வலியா எது மிகவும் துன்பம் தருகிறது? மனதில் வலி மட்டுமல்ல, நிச்சயமின்மை குறித்த பதட்டம், அச்சம் இவைகளை உடல் வலியுடன் ஒப்பிடுவோம்”

அண்ணனுடன் அமர்ந்து மரியாதை நிமித்தமாக மௌனமாக இருப்பது போல இருந்த தயா கஸ்ஸாபா ” எனது தாழ்மையான கருத்து, மனதில் ஏற்படும் வலியே நீண்டு நிரந்தரமாகவும் தாள இயலாததாகவும் ஆகி விடுகிறது புத்தரே” என்றான்.

“அதன் காரணத்தை அறிந்து கொண்டால் அதைக் கடக்கும் வழியும் தென்படலாம் இல்லையா?”

“அதில் ஐயமில்லை” என்றான் தயா.

“ஆறு வருடங்களுக்கு மேல் அலைந்து திரிந்த போதும், நாற்பத்து ஒன்பது நாட்கள் தவமிருந்த போதும் அந்தக காரணத்தையே நான் தேடிக் கொண்டிருந்தேன் தயா”

“எங்களுக்கும் தாங்கள் அறிந்து உணர்ந்தவற்றைக் கூறுங்கள்” என்றான் உருவேலா.

” ஆசை சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்புப் போன்றது. விழித்திருந்தாலும், உறங்கினாலும் இடைவிடாது நம்மைத் தொடரும் ஆசையே துன்பத்திற்கும், இன்பம் தொலைந்து போகுமே என்னும் அச்சத்திற்கும் காரணம்”

“ஆசையே படாமல் வாழ முடியுமா புத்தரே?”

“முடியாது உருவேலா. ஆனால் ஆசையை வென்று வாழ இயலும்”

” என் தர்ம சக்கரம் பற்றி நான் கயையில் கூறியவற்றை நான் உங்களுக்காகக் கூறுகிறேன் கேளுங்கள்”

புத்தரின் சொற்களை உன்னிப்போடும் பூரண நம்பிக்கையோடும் செவி மடுத்தனர் கஸ்ஸாபா சகோதரர்கள்.

Series Navigationமருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *