அவசரம்

author
18
0 minutes, 1 second Read
This entry is part 6 of 33 in the series 19 மே 2013

 

டாக்டர் ஜி.ஜான்சன்

 

நான் தொடர் வண்டியில் ஏறிய போது து இரவு பத்து மணி. அது மாயவரம் சந்திப்பு.

முன்பதிவு செய்யாததால் விரைவாக நுழைந்து சன்னலோரம் காலியாக இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டேன். அந்த இடம் கிடைத்தது அதிசயம்தான்.நல்ல வேளையாக அதில் அமர்ந்து வந்தவர் மாயவரத்தில் இறங்கினார்.

அது ரேணிகுண்டா துரித பிரயாணி தொடர் வண்டி ( fast passenger ). . நான் வேலூர் சென்று கொண்டிருந்தேன். மருத்துவக் கல்லூரி விடுமுறை முடிந்து திரும்பி கொண்டிருந்தேன்.தரங்கம்பாடியிலி ருந்து பொறையார் சென்று தொடர் வண்டி மூலமாக மாயவரம் வந்திருந்தேன்.

இருக்கையில் அமர்ந்தபின்  வெளியே பார்த்தேன்.பாபரப்புடன் ஒரு குடும்பம் நான் அமர்ந்திருந்த பெட்டி நோக்கி வருவதைக் கண்டேன்.

அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஒரு முதியவர், ஒரு மூதாட்டி, ஒரு இளைஞன், ஒரு மணப்பெண் , ஆகியோர் அடங்கிய குடும்பம் அது. அண்டா குண்டா என்று நிறைய சாமான்களையும் ( ஒருவேளை பலகாரங்களாக இருக்கலாம்) தூக்கி வந்தனர்.அவற்றை முதலில் வண்டிக்குள் ஏற்றியபின்பு ஒவ்வொருவராக ஏறினர்.

என் இருக்கைக்கு எதிர்புறம் காலியாக இருந்ததால் அங்கு அமர்ந்து கொண்டனர்.

அந்த பெண்ணுக்கு நாளை திருமணம் என்பது அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. மணப்பெண் கழுத்து நிறைய தங்க நகைகள் அணிந்து புதுப் பட்டுப் புடவை அணிந்திருந்தாள். மங்கிய அந்த விளக்கொளியில் ஒரு தேவதை போன்றே காட்சியளித்தாள். பெண்களுக்கு ஒரு சிறப்பு உள்ளது. அவர்கள் சாதாரணமாக அவ்வளவு அழகு இல்லாமல் இருந்தால்கூட மணப்பெண்ணாக அலங்கரிக்கும்போது தனி அழகுடன் காணப்படுகின்றனர்.,

என் எதிரேதான் அவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்தனர். நானும் அவர்களைப் பார்த்தேன். ஆனால் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

அவர்கள் நெல்லிக்குப்பம் சென்று கொண்டிருந்தனர்.காலையில் திருமணம்.

மாயவரத்தில் புறப்பட்ட வண்டி சீராக சீறிக்கொண்டு கரியையும் புகையையும் கக்கிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.நான் அயர்ந்து கொஞ்ச நேரம் கண் மூடினேன்.

பெரும் இரைச்சல் கேட்டு விழித்தேன். கொள்ளிடம் பாலத்தின்மேல் சென்று கொண்டிருந்தது. அந்த பாலத்தின் இரும்புத் தூண்களைக் கடக்கும்போது படக் படக் என்று இரைச்சலுடன் ஓசை எழும்.

எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பெண் வீட்டார் உறங்கிக் கொண்டிருந்தனர்

அடுத்தது சிதம்பரம். தொடர்வண்டி நிலையத்தின் மறு பக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம். அதன் மாணவர்கள் பலரை இரவு நேரங்களில் அங்கு வெறுமனே சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். வண்டி நின்றதும் ஒவ்வொரு பெட்டியாக உள்ளே பார்த்துக்கொண்டு போவதே அவர்களின் பொழுது போக்கு. அன்றும் அப்படிதான் .நான் வெளியில் சென்று அவசர அவசரமாக தேநீர் பருகிவிட்டு விரைந்து திரும்பினேன்.அன்று என் பெட்டி அருகில் மாணவர் கூட்டம் அதிகம்.அந்த புதுப் பெண்தான் அதற்குக் காரணம்.

வண்டி மீண்டும் புறப்பட்டு கடலூரை நோக்கி விரைந்தது. எதிர் வரிசையில் நன்றாக உறங்கிவிட்டனர். இரவும் நள்ளிரவை நெருங்கியது.

திருப்பாப்புலியூர், கடலூர் சந்திப்புகளில் சிறிது நேரம் நின்றபின் பயணம் மீண்டும் தொடர்ந்தது.

நெல்லிக்குப்பம் நெருங்கிய போது சொல்லி வைத்தது போன்று அவர்கள் விழித்துக் கொண்டனர்.

மணப்பெண்ணின் தாயார் பரபரப்பானார். அவர் நடுத்தர வயதினர். நல்ல நிறம். அழகு சொட்டும் முகம். நெற்றியில் வட்ட வடிவில் பெரிய செந்நிற குங்குமப் பொட்டு எடுப்பாக பளிச்சென்றிருந்தது. அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவி என்பதை முகத்தில் எழுதி ஒட்டியது போலிருநதது .

அவரின் கவனமெல்லாம் கொண்டுவந்துள்ள பலகார அண்டா குண்டாக்களின் மீது இருந்தது. இருக்கையின் அடியில் வைக்கப்பட்டிருந்த அவற்றை வெளியில் இழுத்து வைத்தார்.

வண்டியும் நெல்லிக்குப்பம் வந்துவிட்டது. இருக்கையில் இருந்து அவர்களும் எழுந்து விட்டனர்.நானும் எழுந்து கதவருகே சென்று நின்றேன்.

அவர்கள் சாமான்களை இறக்கிக் கொண்டிருந்த்தனர்.

மணப்பெண் முதலில் இறங்கி விட்டாள் . கீழே இறங்கிவிட்ட அவளின் அப்பா அண்டா குண்டாக்களை ஒவ்வொன்றாக வாங்கி மகளின் அருகே வைத்துக்கொண்டிருந்தார்..அந்த அம்மாவும் மகனும் சாமான்களை எடுத்து தந்து கொண்டிருந்தனர்.

வேறு ஏதும் சாமான்கள் உள்ளதா என்று தேடிக்கொண்டு அந்த அம்மா இறுதியாக இருக்கைக்குச் சென்றிருந்தார். அப்போது மணி அடிக்கப்பட்டு விசில் ஊதும் சத்தம் கேட்டது!

அம்மாவும் மகனும் இன்னும் இறங்கவில்லை.வண்டி நகர்ந்தது! மகன் பரபரப்பானான்! உள்ளே ஓடி அம்மாவின் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.

வண்டியின் வேகம் அதிகமானது. இன்னும் பிளாட்பாரம் தாண்டவில்லைதான்.

நான் கதவருகில்தான் நின்று கொண்டிருந்தேன்.

அவர்கள் என்னருகில் வந்துவிட்டனர்.

” வெளியே குதிங்க அம்மா! வெளியே குதிங்க அம்மா! ” அவன் கத்தினான். ” அவரை கையைப் பிடித்து இழுத்து வந்தான்.

நான் அவனைத் தடுத்தேன். ” வேண்டாம் ! இது ஆபத்து! ” என்று கத்தியபடி அந்த அம்மாவின் கையைப் பிடித்துகொண்டேன்!

” விடுங்க சார் என் அம்மாவை ! ” என்று உரக்க கூறிய அவன் என் கையைத் தட்டிவிட்டு, அவரை இழுத்து வெளியே இறங்கச் சொன்னான்.

குழப்பமுற்ற அந்த அம்மா படியில் கால் வைத்தார்கள்! அவ்வளவுதான்! அவரின் உடல் வண்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் நடுவில் சென்று மறைந்தது! வீல் என்ற மரண ஓலம் வண்டி ஓடும் சத்தத்துடன் சேர்ந்து கேட்டது! அவரின் மகன் ,” ஐயோ அம்மா! ” என்று அலறினான்!அவனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அரை விட்டேன்!

நான் உடன் ஓடி அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தேன்! அப்படியும் கொஞ்ச நேரம் ஓடியபின்தான் வண்டி நின்றது. அதற்குள் பிளாட்பாரம் தாண்டி வந்து விட்டது .

 

வெளியில் காரிருள்

நான் உள்ளே ஓடி பையில் வைத்திருந்த கை விளக்கை ( டார்ச் லைட் ) எடுத்துக் கொண்டு கீழே குதித்தேன் . அடுத்தடுத்த பெட்டிகளிலுமிருந்து ஒருசிலர் இறங்கிவிட்டனர்.

” என்ன ஆச்சு? என்ன ஆச்சு ? ” அவர்கள் கேட்டனர்.

” விபத்து! ” என்று மட்டும் கூறிவிட்டு ஒளியை அடித்துக்கொண்டு பின்னோக்கி ஓடினேன்.அவர்களும் பின்தொடர்ந்தனர்.

தொடையுடன் துண்டிக்கப்பட்ட ஒரு கால் கிடந்தது!

இன்னும் ஓடினேன்!

அடுத்த காலும் தொடையில் துண்டிக்கப்பட்டு கிடந்தது!

மேலும் ஓடினேன்!

ஐயோ ! அது ஒரு கோரக் காட்சி!

அந்த அம்மாவின் தலை சப்பையாகி அதன்மேல் ஒரு சக்கரம் நின்றது! இரத்தமும் மூளையும் வழிந்து கொண்டிருந்தது!

( முடிந்தது )

 

Series Navigationமருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்நீங்காத நினைவுகள் – 3
author

Similar Posts

18 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பயங்கரப் பரிதாபக் கதை இது. கதாசிரியர் மனநிலை எப்படிக் கொந்தளித்தது முடிவில் என்று சிந்திக்க முடிய வில்லை. இம்மாதிரித் துன்பியல் முடிவு திருமண நாளன்று நிகழ வேண்டுமா ?

    சி. ஜெயபாரதன்.

  2. Avatar
    வே.ம.அருச்சுணன் says:

    அவசரம் கதை மிகுந்த சோகத்தைத் தாங்கி வந்துள்ளது. சரளமான நடை கதையை விரைவாக வாசிக்க முடிந்தது.வாழ்த்துகள்.

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

  3. Avatar
    பவள சங்கரி says:

    மிக யதார்த்தமாக ஆரம்பித்த கதை, இறுதியில் அப்பப்பா.. நேரில் கண்டதை அப்படியே எழுதியது போல உள்ளதே.

    அன்புடன்
    பவள சங்கரி

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு சி .ஜெயபாரதன்அவர்களுக்கு வணக்கம்.அவசரம்அனுபவம் பயங்கரமானதுதான் அதை மனதில் இருந்து வெளியேற்ற பல வருடங்கள் ஆனது . அவ்வளவு கோரமானது..கருத்துக்கு நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

  5. Avatar
    Dr.G.Johnson says:

    நண்பர் வே.ம.அருச்சுணன் அவர்களுக்கு வணக்கம். அவசரம் கதையைப் படித்து அதன் சோகத்தை உணர்ந்து கருத்து கூறியுள்ளதற்கு நன்றி….டாக்டர் ஜி.ஜான்சன்.

  6. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரிக்கு வணக்கம். அவசரம் படித்து உங்களின் உணர்வைக் கூறியுள்ள விதம் நன்று…நன்றி ….டாக்டர் ஜி. ஜான்சன்.

  7. Avatar
    கோவிந் கருப் says:

    கற்பனையில்லாமல் அனுபவங்கள் இப்படி வரும் போது நல்ல கதைகள் கிடைக்கின்றன. தலைப்பும் அருமை. விபத்து… அதன் அஸ்திவாரமே அவசரம். அடுத்த கதைக்கு காத்திருக்கிறோம்

  8. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு கோவிந் கருப் அவர்களுக்கு வணக்கம்.அவசரம் தலைப்பு அருமை என்று சொல்லியுள்ளதற்கு நன்றி.. ஆம். அனுபவப்பட்டு எழுதுவதற்கும், வெறும் கற்பனையில் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அனுபவத்தை விவரிப்பது சரளமாகவும் எளிமையாகவும் எழுத வருவது உண்மையே…டாக்டர் ஜி.ஜான்சன்.

  9. Avatar
    Peter Johnson says:

    உண்மைச் சம்பவத்தை (துயரச் சம்பவம்) அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை இது. எனவே, வாசகர்களின் மனத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது இயற்கையே. மலேசிய எழுத்தாளருக்கு (மருத்துவருக்கு!) நமது பாராட்டுகள்.
    பீட்டர் ஜான்சன், மலேசியா.

  10. Avatar
    அரு.நலவேந்தன் says:

    வணக்கம்,தங்களுக்கு ஏற்பட்டுயிருக்கும் அனுபவத்தை கதையின் வழி தெரிந்துக் கொண்டேன்.மிகவும் வேதனையான சம்பவம்.ஆற்றோட்டமான நடை.யதார்த்தச் சூழல்.நன்றி

    அரு.நலவேந்தன் – மலேசியா

  11. Avatar
    வாணிஜெயம் says:

    அன்புள்ள டாக்டர்…அவசரம் படித்து அதிர்ந்தேன்.இறுதியில் கோரக் காட்சியை புனைந்த விதத்தில் கதைசொல்லியின் உணர்வை காட்டாது முடித்ததில் உங்கள் உள்ளம் நேரடியாக எந்த அளவிற்கு பாதிப்புற்றுள்ளது என புரிகிறது.அனுபவம் மிக இயல்பாக வெளிப்படுகிறன அழகிய சொல்லாடல்களுடன்.இருந்தும் இந்த கதையை{துயரம் என்பதால்}மறுமுறை வாசிக்க மனம் நடுங்குகின்றது.

  12. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

    “அவசரம்” கதையை அவசரமாகவே படித்தேன்.

    ஒரு சாதாரண ரயில் பயணம் விபரீதமான விபத்தில் கொண்டு போய் நிறுத்திய விதம் மனதைப் பிழிந்தது.

    நீங்கள் தடுத்துப் பார்த்தும் விடவில்லையே…விதி..!

    அந்த அம்மாவின் லக்ஷணமான முகத்தை வர்ணித்து விட்டு..கடைசியில்….சக்கரத்தடியில் கொண்டு போய் நிறுத்திக் காண்பித்து விட்டீர்கள்.இது போன்ற அவசரத்தால் நேர்ந்து விட்ட நிஜமான நிகழ்வுகள் – அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசரம்.

    நன்றி
    ஜெயஸ்ரீ ஷங்கர்

  13. Avatar
    புனைபெயரில் says:

    இதில் இரண்டு விதமாக அந்த பெண் ரயிலை விட்டு இறங்குவதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்ட விஷயத்தை பார்க்கலாம். ரயில் கிளம்ப ஆரம்பித்து, அந்த மகன், அம்மாவை குதி.. குதி.. என்று கத்தியிருக்கிறான். அப்போது, அந்த பிரயாணி அப் பெண்மணியின் கையைப் பிடித்து தடுத்தலில் ஏற்பட்ட தாமதம் தொடர்ந்த மகனின் கட்டளைப்படி தடுமாற்றத்துடன் படியில் காலை வைத்து இடுக்கில் காணாமல் போகிறாள். இது ஒரு நடந்த சம்பவம். ஆனால், ஒரு வேளை அப் பெண் தடுக்கப்படாமல் மகனின் பேச்சைக் கேட்டு குதித்திருந்தால், மிக பலத்த அடிகளோடு உயிர் பிழைத்திருக்கலாமோ? எனும் நடக்காத இரண்டாவது நிலைப்பாடு இருக்கிறது. இதெல்லாம் தாண்டிய மூன்றாவது நிலைப்பாடு, அப் பிரயாணியின் சொல்படி கேட்டு, குதிக்காமலும், இறங்க முயலாமலும் அடுத்த நிலையம் வரை பொறுமையுடனோ… இல்லை சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்தியும் இருந்தால் எல்லாம் நலமாயிருக்கும். என்ன செய்வது விதி வலியது என்பதா? இல்லை புத்தியில்லா நிலை என்பதா? மொத்தப் பாத்திர மூடைகளின் எண்ணிக்கையை கொண்டு, இறங்கும் போதே எண்ணியிருக்கலாம். இல்லை, கதவோரம் கொண்டு வைக்கும் போதே, சீட் அடியில் செக் செய்திருக்கலாம். அவரசம், திட்டமிடாமல் செயல்படுதலுமே நம்து வாழ்வின் பெரும் பகுதியை நாசமாக்கிறது. அற்புத கதை… பாராட்டுக்கள் திரு.ஜான்சன்.

  14. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு பீட்டர் ஜான்சன் அவர்களுக்கு வணக்கம். ஆம்.உண்மை சம்பவம், அது சோகமானால் வாசகரின் மனதிலும் அந்த சோகத்தின் தாக்கத்தை உண்டுபண்ணுவது இயல்பே….உங்களின் கருத்துக்கு நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

  15. Avatar
    Dr.G.Johnson says:

    திரு அரு. நலவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.. அவசரம் சிறுகதை பற்றியும் அதன் யதார்த்த சூழல் குறித்தும் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

  16. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள வாணி ஜெயம், அவசரம் சிறுகதையில் உள்ள கோரத்தை உணர்ந்து அதன் சோகத்தை மீண்டும் உணரவேண்டாம் என்ற நல்ல உள்ளத்துடன் மீண்டும் படிக்க தயங்கும் அளவுக்கு சம்பவம் உங்களைப் பாதித்து உள்ளது என்பதை என்னால் உணரமுடிகிறது.உள்ளதை உள்ளபடியே கூறியுள்ள உங்களின் நல்ல உள்ளத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி….டாக்டர் ஜி.ஜான்சன்.

  17. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கருக்கு வணக்கம். அவசரமாக ” அவசரம் ” கதையைப் படித்துவிட்டு அவசரமாக அவசரத்தின் விளைவுகள் பற்றிய கருத்து கூறி பாராட்டியுள்ள உங்களுக்கு என் அவசரமான நன்றியையும் அவசரமாகவே கூறிக்கொள்கிறேன். அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  18. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு புனை பெயரில் அவர்களுக்கு வணக்கம். அந்த பெண்மணியின் நிலையை 3 கோணத்தில் பார்த்துள்ளீர்கள்:

    1. மகன் பேச்சையைக் கேட்டு கேட்டு குதித்து அடிபட்டு காயங்களுடன் தப்புவது.

    2. பிரயாணியின் பேச்சைக் கேட்டு குதிக்காமல் இருந்து அடுத்த ஊரில் பத்திரமாக இறங்குவது.

    3. அபாயச் சங்கிலியை பிரயாணியோ அல்லது மகனோ இழுத்து வண்டியை நிறுத்துவது.

    முதல் வழியைத் தவிர மற்ற இரண்டும் பாதுகாப்பானது.காயம் இல்லாமல் உயிர் பிழைத்திருக்கலாம். அவர் ஓடும் வண்டியில் இருந்து குதிக்கும் வயதுடையவர் அல்ல.அதனால்தான் அவரை பிரயாணி தடுத்தார்.அதனால் கால விரயம் ஆனது என்று கூற இயலாது.

    ஆனால் எது எப்படியோ, அந்த பரபரப்பான நேரத்தில் பிரயாணி நல்ல எண்ணத்துடன்தான் அந்த அம்மாவைக் காக்க முயன்றார் என்பதே உண்மை.ஆனால் அவரின் உயிர் ஒரு சில வினாடிகளில் கை நழுவிப் போய்விட்டது. உங்கள் நல்ல கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே….டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *