பிம்பிசாரரின் எதிரே கலா உதாயின் வணங்கி நின்றிருந்தார். “நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிகின்றன உதாயின். ஆனால் கௌதம புத்தர், மன்னர் பிம்பிசாரர் கருதுவது போலத் தங்கள் பாலிய சினேகிதராக இல்லை. கஸ்ஸாபா பழங்குடியினர் அக்கினி தேவனைத் தவிர வேறு யாரையும் ஏற்காதவர்கள். அவர்களே தங்களது தலைவர்களான கஸ்ஸாபா சகோதரர்களுடன் பௌத்தத்தில் இணைந்திருக்கிறார்கள்”
“சிறியவனுடைய பேச்சு அதிகப்பிரசங்கமாக இருந்தால் மன்னிக்கவும். பெற்ற தாயையும் தந்தையையும், நம்பி வந்த மனைவியையும் தான் பெற்ற மகனையும், பிறந்த மண்ணையும் விடவா ஞானமும் துறவும் உயர்ந்தவை?”
‘சாக்கிய நாட்டின் ஒரு சாதாரண சேவகராகத் தாங்கள் பேசவில்லை. சுத்தோதனரின், கபிலவாஸ்து மக்களின் குரலாக இதைக் கூறுகிறீர்கள் என்பதை உணர்கிறேன். புத்தர் உங்கள் மண்ணுக்கு உங்க்ள் வேண்டுகோளை ஏற்று கபிலவாஸ்துவுக்குத் திரும்பினால் அது சுத்தோதனரின் மன நிம்மதிக்கு வழி வகுக்கும். ஆனால் மகதம் அவரைப் பிரிய வேண்டியது தான். மகதம் செய்த பாக்கியம் அவர் இங்கே ஞானம் பெற்றது”
“நன்றி மகாரஜா. தாங்கள் அழைப்பை தூதுவர் மூலம் அனுப்புங்கள். புத்தர் இங்கே வரட்டும். தாங்களும் பணிவுடன் நானும் அவரிடம் பேசினால் அவரிடம் மனமாற்றம் ஏற்படலாம் இல்லையா?”
” அது முறையல்ல உதாயின். புத்தர் சித்தார்த்தராக இங்கே வரவில்லை.பூரண ஞானம் பெற்றவராக மகதமே ஏற்கும் மகானாக வந்திருக்கிறார். நாளை பல தேசங்களும் ஏன் மனித குலமே வணங்க இருக்கும் அவரை நான் இங்கே வரச்சொல்லித் தூதுவரை அனுப்புவது முறையாக இருக்காது. ராஜகஹத்துக்கு வெளியே ஒரு பனந் தோப்பில் அவரும் அவரது சீடர்களும் தங்கி இருக்கின்றனர். அங்கே நாம் சென்று அவரை வணங்கி சுத்தோதனரின் செய்தியைத் தெரிவிப்பதே முறை”
சங்கு முழங்கியது. உயர்ந்து வளைந்திருந்த மரக்குழல் வாத்தியமும் முழங்கியது. “மன்னர் பிம்பிசாரர் வாழ்க” என்னும் கோஷங்களுக்கிடையே நான்கு குதிரைகள் பூட்டிய மிகப் பெரிய ரதத்தில் பிம்பிசாரர் கிளம்பினார். பின்னால் குதிரைப் படை வீரர்கள். அவர்களைத் தொடர்ந்து கபிலவாஸ்து மந்திரிகளில் ஒருவரும் கலா உதாயினும் ஒரு ரதத்தில் அமர்ந்து வந்தனர். அவர்கள் இருவருடன் வந்திருந்த பொது மக்களும் படை வீரர்களும் கால் நடையாகப் பின் தொடர்ந்தனர்.
ஒரு கட்டிலின் மேற் பகுதி மூங்கிற் சட்டங்களால் நெருக்கிப் பின்ன்பட்டிருந்தது மையப் பகுதி. அதன் மேல் போர்த்தியிருந்த வெள்ளைத் துணி அந்தக் கட்டிலின் கால்களை மறைத்துத் தரையைத் தொட்டபடி இருந்தது. அது புத்தருக்காகக் காத்திருந்தது.
அதற்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார் பிம்பிசாரர். தரையில் உட்கார்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுள், முன் வரிசையில் கலா உதாயின் மற்றும் கஸ்ஸாபா சகோதரர்கள். பனை ஓலைகள் அசையும் சத்தம் மற்றும் தூரத்தில் ஆடு மாடுகள் மேயும் சத்தம் தவிர அந்த இடம் பூரண அமைதியில் இருந்தது.
சிறிது நேரத்தில் புத்தரும் அவருடைய சீடர்களும் பிட்சை ஏற்றபின் அந்த மூங்கில் வனத்துக்கு திரும்புவதைக் கண்ட மக்களிடையே சிறு சலசலப்பு. பிம்பிசாரரும் மக்கள் அனைவரும் புத்தர் கூட்டத்தைத் தாண்டிப் பின்னே வனத்துக்கு உட்புறம் செல்லும் வரை எழுந்து நின்று வணங்கினர். புத்தரும் சீடர்களும் வனத்தில் வட்டமாக அமர்ந்து பிட்சையாக ஏற்று வந்த உணவை உண்டனர்.
புத்தர் உணவு முடித்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்டிலில் வந்து அமர வந்ததும் பிம்பிசாரரும் மற்ற அனைவரும் எழுந்து நின்று அவரை வணங்கினர். புத்தர் கைகூப்பி வணங்கி அமர்ந்தார்.
“நம்முடன் அமர்ந்து சிறப்பித்திருக்கும் மகாராஜா பிம்பிசாரருக்கு நன்றி” என புத்தர் பேசத் துவங்கினார்.
‘ஞானம் தேடி அலைந்த போது நான் ராஜகஹத்தில் மாமன்னரை சந்தித்தேன். ஞானம் பெற்றால் மன்னர்களில் முதலில் மன்னர் பிம்பிசாரரையே சந்திப்பேன். இந்த நகருக்கே வருவேன் என வாக்களித்தேன். அது இன்று பூர்த்தியாகி விட்டது. பௌத்தம் என்னும் மார்க்கமாக என் வழி அறியப்பட்ட பின்பு கூடும் முதல் சபை இது. நீங்கள் எல்லோரும் என் பேச்சைக் கேட்கத்தானே வந்திருக்கிறீர்கள்?”
முதலில் யாரும் பதில் பேசவில்லை. ஓரிரு நொடிகள் கடந்தன. “ஆம் புத்த தேவரே” என்றாள் சுஜாதா. ” ஆம் சித்தார்த்தரே” என்றான் கலா உதாயின். உருவேலா கஸ்ஸாபா சினந்து “அவரை அவ்வாறு அழைப்பது மரியாதையில்லை” என்றான்.
“பரவாயில்லை உருவேலா” என்ற புத்தர் “நானோ நீங்கள் பேசுவதைக் கேட்ட பிறகே நானும் பேசலாம் என்று எண்ணி வந்திருக்கிறேன்” என்று “உங்களுள் துக்கம் அனுபவிக்காதவர் யாரேனும் இருக்கிறீர்களா?” என்றார். யாரும் பதில் பேசவில்லை.
சற்று நேரம் காத்திருந்து தொடர்ந்தார் புத்தர் ” நாம் அனைவரும் நிறையவே துன்பம் அனுபவித்து விட்டோம். அதுவே நம் வாழ்க்கையின் கசப்பான பகுதி. துன்பம் எது, எந்த வகைப் பட்டது என்பதை நீங்கள் முதலில் கூறுங்கள். யார் வேண்டுமானாலும் தாங்கவே இயலாத துன்பம் அவர் கருத்தில் என்ன என்பதைக் கூறுங்கள்”
‘திருமணமான ஒரு பெண்ணுக்குப் பிள்ளைப் பேற்றில் தாமதமும், ஒரு கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் ஆவதில் ஏற்படும் தடைகளுமே மிகவும் துக்ககரமானவை’ என்றாள் சுஜாதா.
கலா உதாயின் “தனது மகன் இல் வாழ்க்கையைத் துறந்து ஞானமார்க்கத்தில் செல்லும் போது அந்தத் தந்தைக்கும், ம்றுபக்கம் அவனது மனைவி குழந்தைகளுக்கும் ஏற்படும் ஏமாற்றமும், பிரிவுத் துன்பமுமே மிகவும் வருத்தமான துன்பங்கள்” என்றான்.
‘மழை பொய்த்து விளைச்சலைக் காண முடியாது, தன் விவசாயப் பணிகளை நிறுத்தும் கட்டாயம் ஏற்படுவதே மிகவும் துக்கம்” இது ஒரு விவசாயியின் பதில்.
“தனது குழந்தை அகால மரணமடைவதே பெரிய துக்கம்” இது ஒரு தாயின் பதில்.
“நோயும் முதுமையுமே துக்கமானவை” என்றார் ஒரு முதியவர்.
“கள்வர்களிடம் நான் உழைத்து ஈட்டிய பொருட்களைப் பறிகொடுப்பதே துக்கம்” என்றார் ஒரு வியாபாரி.
“ஊர் உறவு தவறான கருத்தில் செய்யாத குற்றத்தைக் கூறி அவமானப் படுத்துவதே துக்கம்” இது ஒரு நடுவயதுக்காரரின் கூற்று.
தொடர்ந்து வேறு யாரும் பேசாத போது புத்தர் தம் உரையைத் துவங்கினார்:
“நமது சகோதர சகோதர சகோதரிகள் குறிப்பிட்ட துன்பங்கள் நம்மில் யாரேனும் ஒருவருக்கு தினமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தனது குழந்தையை அகாலமாய்ப் பறி கொடுப்பதைப் பற்றி ஒரு தாய் குறிப்பிட்டார். அது மட்டுமல்ல. தனது நோயோ வலியோ தரும் துன்பத்தை விட, குழந்தை நோயுறும் போதோ வேறு துன்பத்தை எதிர் கொள்ளும் போதோ தாய் தந்தையரின் மனம் மிகவும் வருத்தமடைகிறது. தானும், தன் குடும்பமும் பொருளும் சுகமுமாக இருக்க வேண்டும் என்னும் விருப்பம் நமக்கு எப்போது இருக்கிறது. அது நிறைவேறாத போதோ, அல்லது ஒரு சுகமோ ஒரு பொருளோ தனக்கோ தன் குடும்பத்துக்கோ பறி போகும் போது – அதுவும் வருத்தத்தையே தருகிறது.
விரும்புவதும், விரும்பியது கிடைக்குமா, இருப்பது நிலைக்குமா, எப்போதுமே விருப்பம் நிறைவேறும் நலம் தொடருமா என்னும் கேள்விகள் துரத்திக் கொண்டே இருக்கின்றன.
இன்பமோ துன்பமோ நிலையானதில்லை, வாழ்க்கை என்பது நிலையானதில்லை என்பதை ஏறுக்கொள்ள மனம் ஒப்புவதில்லை.
மறுபடியும் நாம் துன்பங்கள் என்று குறிப்பிட்டவற்றை நினைவு கூறுவோம். குடும்பம், சமூகம் என்னும் இரண்டுக்கும் மேலாக, என் நில, என் பொருள், என் உறவு, என் சுற்றம் என்னும் பற்றைச் சுற்றியே மனம் கொள்ளும் துன்பம் அமைகிறது. இந்தப் பற்று துன்பத்தை பன்மடங்காக்கி மேலும் எந்த வருத்தமோ துக்கமோ வராமல் இருக்க வேண்டும் என்னும் அச்சத்தை சேர்த்தே கொண்டிருக்கிறது.
நான் எனது என்னும் பற்றைப் பற்றிப் பேசும்முன் வேறு ஒரு கேள்வியை எடுத்துக் கொள்வோம். நான் – என் குடும்பம் – என் சுகம், என் துக்கம் – என் செல்வம் என்று போகும் மன ஓட்டம், ஒரு கேள்வியை எப்போது விட்டு விடுகிறது. “நான் இன்னொரு ஜீவனுக்கு ஊறு செய்யாமல் இருக்கிறேனா?”
பேச்சை நிறுத்தி விட்டு நீண்ட நேரம் மௌனமாக இருந்தார் புத்தர். மக்களில் யாருமே அசையவில்லை. அவர்கள் புத்தர் தங்கள் முன் வைக்கும் சிந்தனைகளை உணர்ந்து, புரிந்து கொள்ளும் கவனத்தில் இருந்தார்கள். பனை ஓலைகளின் சத்தம் மட்டுமே அந்த அமைதியில் ஓரே ஒலியாக இருந்தது.
புத்தர் தொடர்ந்தார் ” இந்தப் பனை ஓலைகளின் சத்தம் அதிக இடைவெளி இன்றிக் கேட்டுக் கொண்டே இருப்பது போல, நமது ஆசைகள் நம் மனதில் ஓயாது ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கின்றன. “மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருக்கின்றேனா என்னும் கேள்வியே அந்த ஆர்ப்பரிப்பை மீறி எழுவதில்லை. ஒன்றின் மீது ஆசைப்பட்டதும் அதை அடைவது நியாயமானதே – எனக்கு உரிமையானதே என்னும் எண்ணம் வலுத்து விடுகிறது. தான் – தன் சுகம் – தன் புகழ் – தன் பாதுகாப்பு என்று தனிமனிதனின் தான் ஒரு மையப் புள்ளியாக அமைய ஒரு குறுகிய வட்டத்துக்குள் அவன் தேங்கி விடுகிறான். அந்த வட்டத்தில் என் குடும்பம் – என் குலம்- என் உறவு என்பவற்றுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. இந்தக் குறுகிய வட்டத்துக்குள் துவங்கும் ஆசை எப்போதுமே எண்ணங்களில் இழையோடுகிறது. மனதளவில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது. எண்ணம் பேச்சாகிறது. ஆசைகளின் தீவிரமும் வலுப்படுகிறது. பின்னர் பேச்சு செயலாகிறது. அது அவரை மட்டுமின்றி அவரை மட்டுமன்றி அவரது சொந்த பந்தங்களையும் சமுதாயத்தையுமே பற்றுக்களில் மேலும் பிணைத்து விடுகிறது. ஒருவரின் ஆசை மனோ, வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களில் ஒரு பிணைப்புச் சங்கிலியையே உருவாக்கி விடுகிறது.
ஒருவருடைய மரணத்தில் கூட இந்தச் சங்கிலி அறுந்து போவதில்லை. அவர் பின்னிய ஆசை வலை – பிறர் பின்னிய ஆசை வலை என வரும் தலைமுறைகளில் பிறக்கும் குழந்தைகளும் இந்த சங்கிலியின் இன்னொரு கண்ணியாக, இவர்களின் இன்னொரு பிறவியாகப் பிறக்கும் குழந்தைகள் வாழ்க்கையைத் துவங்குகின்றனர். தொடங்கும் போதே இந்த மீளா ஆசை வலையில் சிக்கிக் கொண்டு விடுகின்றனர்.
அலை ஓய்ந்து சமுத்திரத்தில் ஸ்னானம் செய்ய இயலுமா? புதை மணல் தனது இயல்பை மாற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியுமா? கண்டிப்பாக சாத்தியம் இல்லை. நோயும் அழுக்குகளும் உடைய உடலை நான் என்றே நம்புகிறது மனம். அந்த உடலின் சுகம் அல்லது வலி குறித்து அலைப்புறுவது போலவே, ஆசைகளை சுமந்து திரிவது தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது.
நெருப்பை ஒரு விளக்குத் திரியைக் கொண்டோ, அடுப்பிலோ மூட்டி நாம் நமது தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்துகிறோம். கவனம் பிசகினால அது நம்மையே அழித்து விடும் என்பதை நாம் நன்கறிவோம்.
ஆசையை உலக நன்மைக்கான ஆசையாக விரிவு படுத்தி, மறுபக்கம் அது நம்மை ஆட்டிப் படைக்காமல் கட்டுப்படுத்தி வாழும் அறநெறி மிகுந்த வாழ்க்கைக்கு பௌத்தம் உங்களை அழைக்கிறது. உடல், மனம், செயல் இவை யாவற்றிலும் பிறருக்கு ஊறு விளைவிக்காத திரிகரண சுத்தியில் நாம் இயங்குவோம். மனித குலம் நன்னெறியோடு வாழ வேண்டும் என்னும் உயர்ந்த லட்சியம், அது நிறைவேறும் என்னும் நன்னம்ப்பிக்கை, அந்த நன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக நாம் முதலில் நன்னெறியில் நிலைத்திருப்பது துவக்கம். தனது தொழிலில் நேர்மையாக், பேச்சில் அன்பை விதைப்பவனாக, தனது நடத்தையில் அப்பழுக்கற்றவனாக, தனது அறிவை உலக நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துபவனாக ஒருவன் வாழ்வாங்கு வாழ்வதே பூரணமான அடுத்த நிலை. இதை தியானத்தின் மூலம் மனதைக் கட்டுப் படுத்தி அடையலாம். பௌத்தம் ஒரு நல்ல அன்பு மயமான மனித நேயம் மிக்க சமுதாயமாக நாம் எல்லோரும் உயர வழி செய்யும்”
புத்தர் தமது பேச்சை முடித்து வெகு நேரம் ஆகியும் அனைவரும் அவரது ஆணைக்காகக் காத்திருப்பது போல அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
கலா உதாயின் முதலில் எழுந்து என்னை மன்னியுங்கள். நான் தங்கள் வழியில் பௌத்ததில் இணைகிறேன்” என்று கண்ணீர் மல்கக் கூறி அவரது பாதம் பணிந்தான். புத்தர் அவனை ஆசீர்வதித்தார். பின்னர் சுஜாதாவும் அவளது கணவனும் பௌத்த்ததை ஏற்று அவரை வணங்கினர். பிம்பிசாரர் தமது கிரீடத்தை புத்தரின் பாதத்தில் வைத்து பௌத்தத்தை ஏற்றதும் திரண்டிருந்த அனைவரும் ஒவ்வொருவராக வந்து வணங்கி பௌத்தத்தில் இணைந்தனர்.
பலரும் விடை பெற்றதும் கஸ்ஸாபா சகோதரர்களும் அவர்களது ஊர்க்காரர்களும் சேவகர்களும் மட்டுமே இருந்தனர். இரண்டு இளைஞர்கள் புத்தரை வணங்கினர். ” என் பெயர் சரிபுட்டா. இவன் பெயர் மோகல்லனா. நாங்கள் இருவரும் தங்கள் சீடராகித் துறவைத் தழுவ விரும்புகிறோம்” என்றனர்.
“பௌத்தத்தில் துறவியாக சில நிபந்தனைகள் இருக்கின்றன. சில சபதங்களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்க வேண்டும். பல தேசங்களுக்கும் எனது ஐந்து அரஹந்தர்கள் சென்றிருக்கின்றனர். அவர்கள் வந்த உடன் உங்களுக்கு தீட்சை தரப்படும்”
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20
- அக்னிப்பிரவேசம்-34
- பின்னற்தூக்கு
- நீர்ப் பாலை – மார்ச் 22 ” பூமி தினம் “ நீரின்றி அலையப் போகும் உலகம்
- மருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்
- அவசரம்
- நீங்காத நினைவுகள் – 3
- அஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவி
- திருப்புகழில் ராமாயணம்
- சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)
- வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை
- இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை
- சில பறவைகள் எத்தனை பழகினும் அருகே வருவதில்லை
- எசக்கியம்மன்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10
- விளையாட்டு வாத்தியார் -2
- தேவலரி பூவாச காலம்
- சுவீகாரம்
- வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்
- நாகராஜ சோழன் M.A.M.L.A.
- பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.
- சூறாவளியின் பாடல்
- புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 7.தோல்விகளைக் கண்டு துவளாத ஏழை………..
- மதிப்பீடு
- ‘பாரதியைப் பயில…’
- முற்பகல் செய்யின்…….
- துண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்
- என்னால் எழுத முடியவில்லை
- விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி