இரா. கௌரிசங்கர்
“இந்த ரோட்டிலயா போகப் போற” என்றேன் அஜய்யைப் பார்த்து.
நான் இராகவன் – அஜய் என்னுடன் ஒன்றாக ‘ராம்ஸ்’ நிறுவனத்தில் மேனேஜராக வேலைப் பார்க்கிறான். நான் பைனான்ஸ் மேனேஜர். அஜய் டெக்னிகல். இருவரும் சம வயதுகாரர்கள். நண்பர்கள். நாங்கள் இருவரும் ஒரே பகுதியிலிருந்து அலுவலகத்திற்கு வந்தாலும் அவரவர் காரில் தான் தினமும் வருவோம். அன்று என்னுடைய காரை சர்விஸ் விட்டிருந்ததால், அஜய் எனக்கு லிப்ட் கொடுத்திருந்தான். நாங்கள் செல்லும் பாதையில் ஒரு குறுக்கு வழி – ஒரு கார் போகும் படியான பாதை – தார்ரோடுதான். ஆனால், அந்த ஏரியா ஒரு நிழலான பகுதி – அதன் பெயரே ‘கொலைகாரன்பேட்டை’!. அங்கு நிறைய அசம்பாவிதங்கள் நடப்பதாகப் படித்திருக்கிறேன். எனக்கும் கூட ஒரு கசப்பான அனுபவம் அங்கே நிகழ்ந்திருக்கிறது. அதிலிருந்து, அந்த பாதையைத் தவிர்த்து மெயின் ரோடிலேயே வழக்கமாகப் போவேன். அதனால்தான், அஜயிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டேன்.
“ஏன், என்னாச்சு, இப்படிப் போனால் ஷார்ட் கட் – ஒரு கிலோமீட்டர் வரை குறைவு. ஏன் வேண்டாமென்கிறாய்” என்றான் அஜய்.
“இல்லை, இது ஒரு மோசமான ஏரியா. பார், நிறைய பேர் இதைத் தவிர்ப்பதால்தான் அதிக நடமாட்டம் இல்லாமல் இருகிறது” என்றேன்.
“சே! சே! நம்முடைய சென்னையில், அதுவும் இந்த சாயங்கால வேளையில், யார் என்ன செய்ய முடியும்? இந்தியா ஒரு சுதந்திர நாடு பாஸ்” என்று என் வாயை அடைத்தான்.
“இல்லை அஜய். நான் போன முறை வந்த போது, ஒரு பைக் காரன் தவறாக வந்து என் காரில் மோதினான். என்னுடைய பம்பர், ஹெட் லைட் எல்லாம் காலி. அவன் கீழே விழுந்துவிட்டான். உடனே கூட்டம் கூடிவிட்டது. அசிங்கம், அசிங்கமாகப் பேசினார்கள். ‘காரில் உட்கார்ந்தால், கண்ணு மண்ணு தெரியாதா’ என்று!. கெட்ட வார்த்தைகள் வேறு!. நான் சொன்னது எதுவும் எடுபடவில்லை. கடைசியில் என்னிடமிருந்து நாலாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்துவிட்டுதான், விட்டார்கள். இப்படிப் பகற்கொள்ளை செய்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால், என்னிடம் காசு வாங்கியபின், அதுவரை நொண்டிக்கொண்டிருந்த அந்தப் பைக் காரன் சிரித்துக் கொண்டே ஜாலியாக சாதரணமாக நடந்து சென்றதை காண முடிந்ததுதான்.”
“எப்போதுமே, பெரியவண்டி-சின்னவண்டி மோதலில், பெரிய வண்டியைத்தான் குறை சொல்வார்கள். இது ஒரு சமுதாயக் கோபம்; ‘நான் ‘இந்த’ நிலையில் இருக்கும் போது இவன் ‘அந்த’ நிலையில் இருக்கிறானே!’ என்று. நீ சொன்ன விபத்து எங்கே நடந்தாலும் இதுதான் நடக்கும். அதற்காக ஏரியாவைக் குறை கூறாதே” என்றான் அஜய்.
பேசிக் கொண்டே அந்த ஏரியாவின் மையப் பகுதிக்கு வந்துவிட்டோம். சாலை அமைதியாக இருந்தது. குறுகலாக இருந்தாலும் ஒரு சீராக அவனால் ஓட்டிச்செல்ல முடிந்தது. ஒருவேளை அஜய் சொல்வது சரிதானோ என்று தோன்றியது. வீணான கற்பனையில் நான்தான் ரொம்பப் பயந்துவிட்டேனோ?
இருட்ட ஆரம்பித்ததில் அஜய் ஹெட் லைட்டைப் போட்டான்.
அப்போது அந்த சம்பவம் எங்கள் இருவர் கண்கள் முன்னால் நடந்தது.
* * * * * * *
சீராக ஓடிக்கொண்டிருந்த காரை அஜய் திடீர் ப்ரேக் போட்டு நிறுத்தினான். முன்னால் தள்ளப் பட்டாலும், சரி செய்துகொண்டு என்ன நடக்கிறது என்று கண்ணாடி வழியாகப் பார்த்தேன்.
திடீரென்று வலப் பக்கத்திலிருந்து ஒருவன் ஓடிவந்தான். பின்னால் சிலர் அவனைத் துரத்திவந்தனர். இடப் பக்கத்திலிருந்து சிலர் ஓடி வந்து அவனைச் சுற்றி வளைத்தனர். ஓநாய்களிடம் மாட்டிக் கொண்ட மான் போல மருண்ட பார்வையுடன் அவன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது இருவர் பின்னால் வந்து, அவனைப் பிடித்துக்கொண்டனர். இடப்பக்கத்திலிருந்து வந்தவர்களில் ஒருவன் அவனை நெருங்கினான். அவன் கையில் ஒரு பெரிய மின்னும் அரிவாள்
மாட்டிக்கொண்டவன் எங்கள் வண்டிக்கு தன் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தான். அரிவாளுடன் நின்றிருந்தவனை ஹெட் லைட் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. அவன் ஒரு அழுக்குபடிந்த ‘டி சர்ட்’ மற்றும் ‘லுங்கி’ அணிந்திருந்தான். வெறும் காலுடன்தான் இருந்ததாகத் தோன்றியது. அவனுடைய நெற்றியில் பாம்பு போல ஒரு பெரிய தழும்பு, ஹெட் லைட் வெளிச்சத்தில் மின்னியது.
வாயைத் திறந்து கத்திக் கொண்டே (சத்தம் எங்களுக்குக் கேட்கவில்லை) அரிவாளை ஓங்கி அவனை வெட்டினான். அவன் நகர்ந்து கொண்டானா அல்லது குறி தப்பியதா தெரியவில்லை. வெட்டு அவன் தோளில் பட்டு, வெட்டப்பட்டவனின் கை, தனியாகத் தெறித்துப் போய் விழுந்தது. ரத்தம் பீறிட்டு அடித்தது. அதில் ஒரு துளி நச்சென்று எங்களுடைய வின்ட் ஷீல்டின் நடுவில் திலகம் போல் விழுந்தது. கத்தி கையை வெட்டிய போது, பிடித்துக் கொண்டிருந்தவனின் மேலும் சிறிது பட்டிருக்கவேண்டும். வெட்டுப் பட்டவனுக்கு ஏதோ பிடித் தளர்ச்சி கிடைத்திருக்க வேண்டும். கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகித்து அவன் சட்டென்று இடப்பக்கமாக ஓடி மின்னல் வேகத்தில் மறைந்து விட்டான், தன்னுடைய கையை மறந்து! மற்றவர்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினர்.
நாங்கள் உறைந்த நிலையிலிருந்தோம். இருவரும் ஒன்றும் பேசவில்லை. அதிர்ந்து போயிருந்தோம். சண்டையிலிருந்தவர்களில் இருவர் ஏதோ சொல்லிக்கொண்டே எங்கள் வண்டியை உருட்டுக் கட்டையால் தட்டினார்கள். விட்டால் போதும் என்று அஜய் வண்டியைக் கிளப்பினான். வண்டி நகரும்போது கண்ணாடி வழியாக, துண்டுபட்டு விழுந்துக் கிடந்த கையைக் காணமுடிந்தது. அது துடித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.
வீட்டிற்கு வந்த பிறகும், அடுத்து வந்த நாட்களிலும், அந்த சம்பவம் நினைவை விட்டு அகல மறுத்தது. அஜய் மூன்று நாட்கள் அலுவலகம் வரவில்லை. அதன் பிறகும் நாங்கள் அதைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தோம்.
யோசித்து பார்த்ததில், எப்படிப்பட்ட சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்று நினைத்தால், பயமாக இருந்தது. நாம் மனிதர்களுடன் வாழ்கிறோமா அல்லது மிருகங்கள் மத்தியிலா என்ற சந்தேகம் வந்தது. மிருகங்கள் கூட பசிக்கு அல்லது தற்காப்பிற்குத்தான் மற்றவர்களைத் துன்புறுத்தும் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆசை, வெறுப்பு, விருப்பங்களுக்காக சக மனிதனை அழிக்கும் செயலை மனிதன் ஒருவன்தான் செய்கிறான் என்று புரிந்த போது மிகவும் வெறுப்பாக, வேதனையாக இருந்தது.
* * * * * * *
நாட்கள் ஓடின. இது நடந்து ஆறு மாதங்கள் இருக்கலாம். அன்றைக்கு காலை எழுந்திருக்கும் போதே, எனக்கு மிகச் சோம்பலாக இருந்தது. இரண்டு நாட்களாகவே இடது கை தோளிலிருந்து முழுதும் மிகவும் வலித்துக் கொண்டிருந்தது. காது வேறு அடைத்துக்கொண்டது போலிருந்தது. அன்று அலுவலகம் போகவே பிடிக்கவில்லை. ஆனால், அன்று போயே ஆகவேண்டிய நாள். இந்த வருடம் ஆடிட் அன்று தான் முடிகிறது. அது முடிந்து கம்பனியின் ரிசல்ட்டை வெளியிட்டுவிட்டால், பின்னர் ஒன்றும் பளு இல்லை. இரண்டு நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு ஆபீஸ் சென்றேன்.
நாள் முழுவதும் நிறைய வேலைகள், முடிவெடுப்புகள், மேற்பார்வைகள், திருத்தங்கள் என்று போய்கொண்டிருந்தது. ஆடிட்டர் மற்றும் எம்.டி யுடன் மீட்டிங், கணக்குகளை இறுதியாக்கல் என்று எல்லாம் முடிந்து ஆபீஸ் விட்டு கிளம்பும்போது மணி எட்டு ஆகிவிட்டது. நாள் முழுவதும் (வேலை மிகுதியில் கவனிக்காவிட்டாலும்) மிக அசதியாக, அலுப்பாக இருந்தது.
என்னுடைய அசதியில், அலுப்பில், களைப்பில் மற்றும் ஏதோ நினைவில் மூழ்கியதில், காரை ஓட்டிக் கொண்டு வந்தவன், ‘கொலைகாரன்பேட்டை’ குறுக்குச் சந்தில் புகுந்துவிட்டேன். சிறிது தூரம் போனபின்தான் உறைத்தது-‘என்ன இது, இந்த ரோடில் போய் வந்துவிட்டோமே’ என்று!. திரும்பிப்போய் விடலாமா என்று யோசித்தேன். அலுப்பாக இருந்ததால் எதுவும் முடிவெடுக்காமல், மெதுவாக காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். திடிரென்று ஒரு பயம் பிடித்துக்கொண்டது. அந்த ஏரியாவின் மையப் பகுதிக்கு வந்தபின் அது இன்னும் அதிகமாகியது. வேர்த்துக் கொட்டியது – ஒரு பவுண்டன் போல, காரின் ஏ.ஸி.யையும் மீறி!. யாரோ என்னைப் பிடித்து அழுத்துவது போல இருந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு விதமான ‘அன்ஈஸி’ நிலையிலிருந்தேன்.
காரை அப்படியே நிறுத்தி, கதவைத் திறந்து இறங்க முற்பட்டேன். நான் காரிலிருந்து கீழே நடுரோடில் விழுவதை பார்த்துக் (உணர்ந்து) கொண்டே, நினைவிழந்தேன்!
* * * * * * *
எனக்கு நினைவு வந்து, நான் ராகவன், உயிரோடுதான் இருக்கிறேன் என்று புரிவதற்கு சில நிமிடங்களாகின. “நான் எங்கேயிருக்கிறேன்” என்றேன் தீனமானக் குரலில்.
சினிமாவில் எப்போதும் ஆஸ்பத்திரியில் கேட்கப்படும் முதல் கேள்வியை நானும் கேட்க நேரிடும் என்பது விநோதமாக இருந்தது. வாழ்க்கையின் நிஜத்தைத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள் போலும்.
பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மனைவி, பின்னால்…. அட..என் நண்பன் டாக்டர் சீனி, இவர்களைப் பார்த்ததும்தான் புரிந்தது. நான், டாக்டர் சீனியின் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று. மயங்கி ரோடில் விழுந்ததும், ஞாபகம் வந்தது. சீனியைப் பார்த்தேன்.
சீனி சிரித்துக்கொண்டே “மை பாய்! யு ஆர் இன் மை ஹான்ட்ஸ். கவலைப்படாதே! யு ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட்” என்றான்.
“எனக்கு என்ன ஆயிற்று?” என்றேன்.
“நீ போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறாய்! அந்த கடவுளுக்கு நன்றி சொல். உனக்கு ‘மாசிவ் ஹார்ட் அட்டக்’ வந்து நடு ரோடில் மயங்கி விழுந்து விட்டாய். நல்ல வேளை அந்த குப்பத்தில் இருப்பவர்கள் உன்னைப் பார்த்து என்னிடம் கொண்டு வந்தார்கள்”
““எப்போது?…. எப்படி? ….? “ என்றேன்
“ராகவா அந்த குப்பத்திலிருக்கும் இளைஞர்கள் கடவுளைப்போல் உனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் உனக்கு முதல் உதவி செய்து உன்னை ஸ்திரப்படுத்தியிருக்கிறார்கள். பின், உன் மொபைலிலிருந்து ‘டாக்டர்’ என்கின்ற என் நம்பரைப் பார்த்து எனக்கு போன் செய்தார்கள். உன் காரிலேயே உன்னைப் படுக்க வைத்து, அவர்களில் ஒருவன் ஓட்டிக்கொண்டு வந்தான். எல்லா பரபரப்பும் அடங்கிய பின்னர், உன்னைச் சரிசெய்த பின்னர்தான், பக்குவமாக வத்சலாவுக்குச் சொல்லி அவளை வரவழைத்தேன்.” என்றார்.
சே! அது ‘கொலைகாரன்பேட்டை’! அங்கு இருப்பவர்கள் எல்லோரும் மிருகங்கள்!- என்ற அபிப்ராயத்தில் அல்லவா இருந்தேன்?. அங்கும் கூட, மனிதர்கள் மற்றும் மனிதாபிமானம் உள்ளதே! ஒரு கூட்டமாக மனிதர்களை மதிப்பீடு செய்வது என்பது தவறு என்று புத்தியில் உறைத்தது. மனிதர்கள் மேல் நம்முடைய அபிப்ராயங்கள் நம்மைச் சார்ந்த செயல்களைப் பொறுத்துதான் அமைகிறது என்று புரிந்தது. அபிப்ராயம் ஒன்றும் இல்லாமல் இருப்பது நல்லது என்று தோன்றியது.
“நான் அவர்களைப் பார்க்க வேண்டும்” என்றேன்.
“அவர்கள் ஐந்து பேர்கள். அவர்களுள் குமார் என்பவன்தான் மிகத் துடிப்பாக எல்லாம் செய்தான். அவனை வரச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, ஒரு சிப்பந்தியை அழைத்து, குமாரை அழைத்து வரச்சொன்னார்.
குமாரைப் பார்க்க நான் ஆவலாகக் காத்திருந்தேன். என்னைக் காப்பற்றியிருக்கிறான். என்னுடைய வாயில் அவன் வாயை வைத்து, எனக்கு உயிர் மூச்சைக் கொடுத்திருக்கிறான். இது ஒரு பிணம் என்று போட்டு விட்டுப் போகாமல், சக மனிதன், ஒரு உயிர் சம்பந்தமான விஷயம் என்று மதிப்பு கொடுத்து செயல் பட்டிருக்கின்றான். வேறு எங்காவது மெயின் ரோடில் இது நடந்திருந்தால், சீண்டியிருக்க மாட்டார்கள். இவ்வளவு நேரம் எனக்குக் காரியம் நடந்துகொண்டிருந்திருக்கும்.
அவனைப் பார்க்கவேண்டும். பார்த்து, கையெடுத்துக் கும்பிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
“வா. குமார்…! “ என்றார் டாக்டர்.
கதவைத்திறந்து உள்ளே நுழைந்து அக்கறையுடன் என்னை கவனித்தவனைப் பார்த்தேன்.
அவனுடைய நெற்றியில் பாம்பு போல ஒரு பெரிய தழும்பு மருத்துவமனை லைட் வெளிச்சத்தில் மின்னியது.
* * * * * * * * *
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20
- அக்னிப்பிரவேசம்-34
- பின்னற்தூக்கு
- நீர்ப் பாலை – மார்ச் 22 ” பூமி தினம் “ நீரின்றி அலையப் போகும் உலகம்
- மருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்
- அவசரம்
- நீங்காத நினைவுகள் – 3
- அஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவி
- திருப்புகழில் ராமாயணம்
- சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)
- வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை
- இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை
- சில பறவைகள் எத்தனை பழகினும் அருகே வருவதில்லை
- எசக்கியம்மன்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10
- விளையாட்டு வாத்தியார் -2
- தேவலரி பூவாச காலம்
- சுவீகாரம்
- வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்
- நாகராஜ சோழன் M.A.M.L.A.
- பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.
- சூறாவளியின் பாடல்
- புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 7.தோல்விகளைக் கண்டு துவளாத ஏழை………..
- மதிப்பீடு
- ‘பாரதியைப் பயில…’
- முற்பகல் செய்யின்…….
- துண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்
- என்னால் எழுத முடியவில்லை
- விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி