நீராதாரத்தின் எதிர்காலம்

11
0 minutes, 21 seconds Read
This entry is part 23 of 40 in the series 26 மே 2013

தேமொழி

 

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.  உலகின் பெரும்பான்மைப் பகுதி நீரினால் சூழப்பட்டிருந்தாலும் உயிரினங்கள் வாழத் தேவையான நீராதாரத்தின் பற்றாக்குறை இந்த நூறாண்டின் தலையாயப் பிரச்சனையாகவே இருப்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம். இதனால் மூன்றாம் உலகப் போரும் நிகழக்கூடும் என்று எச்சரிக்கப் படுகிறது. நீராதாரத்தைத் தடையின்றிப் பெற மரம் வளர்த்தல், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் தன்னார்வக் குழுக்களும் அரசுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.  அத்துடன் நீராதரத்தின் தேவையை திட்டமிடத் தொழில்நுட்பமும் உதவக்கூடும் என்றால் அந்த முயற்சி வரவேற்கத் தக்கதாகவே இருக்கும்.

 

உலக ஆதாரவளங்கள்  நிலையம் (World Resources Institute / WRI) உலகில் நீராதாரத்தில் ஏற்படும் மாறுதல்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களின் தாக்கத்தை முன்னறிய உதவும் ஒரு மென்பொருள் தளத்தை உருவாக்கியுள்ளது.  அதிக வெள்ளப்பெருக்கினாலோ அல்லது நீரற்ற வறட்சி காரணமாகவோ ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிக்க இத்தளம் உதவ வேண்டும் என்பது இதனை உருவாக்கிய உலக ஆதாரவளங்கள்  நிலையத்தின் குறிக்கோள். “ஆக்வடக்ட்” (Aqueduct) ‘கால்வாய்’ என்ற பொருள் படும் இந்த மென்பொருள் உருவாக்கும் வரைபடங்கள், நீர்வளத்தினால் விளையக்கூடிய  அபாயங்களை ஆய்ந்தறிய ஒரு சிறந்த கருவியாகும். இதனை உருவாக்க உதவியதில் ஜி.இ (GE), ஷெல் (Shell), ப்ராக்டர் அண்ட் காம்பிள் (Procter & Gamble) போன்ற பெருவணிக நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.

 

இந்த வரைபடங்கள் அபாயம் குறைந்த பகுதிகளை வெளிர் மஞ்சள் நிறத்தில் தொடங்கி, அதிக அபாயத்திற்குரிய பகுதிகளை கருஞ்சிவப்பு நிறம் வரை வேறுபடுத்திக் காட்டும் வகையில் உருவாக்கப் படுகிறது.  இதுவரை உருவாக்கப்பட்டவைகளிலேயே மிகத் துல்லியமாக தகவல்களைக் குறிக்கும் வரைபபடமாகவும், அத்துடன் நிலத்தடி நீர் அளவின் தகவல்களையும் இணைத்து வழங்கும் வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

 

மிக சமீபத்தியத் தகவல்களை (2010 ஆம் ஆண்டு) உள்ளடக்கிய இந்த வரைபட மென்பொருள், உலக அளவில் நீரினை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கூறுகளை அளக்க உதவுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் உபயோகத்திற்காகக் கிடைக்கும் நீரின் அளவின் வேறுபாடு, வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு (எத்தனை முறை வெள்ளம் ஏற்படுகிறது, அது விளைவிக்கும் பாதிப்பின் தீவிரம் போன்ற தகவல்கள்), வறட்சியின் தீவிரம் (எவ்வளவு காலத்திற்கு, எந்த அளவிற்கு தீவிரமாக வறட்சி பாதிக்கிறது), நிலத்தடி நீரின் அளவு, மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகளின் தகவல்கள், நீர் சுத்திகரிப்பிற்குத்  தேவைப்படும் நீரின் அளவு, நீராதாரச் செய்திகளுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவம், பருவநிலை மாறுதல்களினால் ஏற்படும் இடர்கள், போன்ற பல முக்கியத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, அவற்றினை ஆராய்ந்து, கணித்து, அதன் அடிப்படையில் கிடைக்கும் தகவல்களினைக் கொண்டு இந்த வரைபடங்கள் உருவாக்கப் படுகின்றன.

 

அத்துடன் இந்த வரைபடங்கள் மேலே குறிப்பிடப்பட்டவைகளை உள்ளடக்கிய மிக முக்கியமான 12 நீர் அபாயக் குறியீடுகளைக் (water risk indicators) கொண்டு நீராதாரத் திட்டமிடலுக்கு உதவியாகக் கணிக்க உதவுகிறது.  நீராதார பற்றாக்குறையினால்  வேளாண்மை, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு, வேதிப்பொருட்கள் உற்பத்தி, மின்சாரம், குறைக்கடத்திகள் (semiconductor), எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, சுரங்கத் தொழில், கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில் ஆகிய தொழில் துறைகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை அறிய முடியும். மேலும், நாட்டின் எந்தப் பகுதிகளில் நீராதார அபாயத்தின் தாக்கம் தீவிரமாகக் காணப்படும் என்பதையும் கண்டறியலாம்.

 

ஒவ்வொரு தொழில் துறை மற்றும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் எனத் தேவைகேற்ப தகவல்களைத் தனித்தனியாகவும்; இவை அனைத்தையும் அடுக்குகளாக (layers) ஒன்றன் மேல் மேல் ஒன்றாக ஒருங்கிணைத்து பொதுவான தகவல்களையும் அறிய முடியும்.  இதனால் நிகழ் காலத்திலும் எதிர்காலத்தில் நீராதாரத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  இது போன்ற தகவல்களால் நீராதாரத்தை நம்பியுள்ள தனிப்பட்ட தொழில் துறைகளும், அரசும் தங்கள் திட்டமிடுதலை சீர் செய்து கொள்ள இயலும். தனியார் தொழில் துறைகளுக்கும், அரசாங்கங்களுக்கும், அரசுசாரா அமைப்புகளுக்கும் இத்தகவல் திட்டமிடுதலுக்கு மிகவும் உதவும். ஏனைய பெரும்பாலோருக்கு ஒன்பது தொழில்துறை அறிகுறிகளையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு முன்னிருப்பாக (default) அமைக்கப்பட்ட விளக்கப்படமே போதுமானது.

 

இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நீர்த்தேவை என்பதே நாடுகள் சந்திக்கப் போகும் பெரிய சவால்களில் ஒன்றாகும். அத்துடன் அதிமுக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சவாலாகவும் நீராதார வளம் அமைந்திருக்கிறது என்று இந்த மென்பொருளினை வடிவமைத்த உலக ஆதாரவளங்கள்  நிலையத்தின் இயக்குனர் பெட்சி ஓட்டோ (Betsy Otto, Director of Aqueduct for WRI) குறிப்பிடுகிறார்.

 

இந்தியாவைப் பொறுத்தவரையில் நாட்டின் வடபகுதியில் இமயத்தில் இருந்து தோன்றும் வற்றாத நதிகளினால் வெள்ள அபாயம் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் தென் பகுதியில் பருவ மழைகள் பொய்க்கும் பொழுது வறட்சி ஏற்படும் நிலையும் உள்ளது.  அதிலும் குறிப்பாகக் காவிரி பாசனப் பகுதியின் நீராதாரம் விவாதங்களுக்கு உட்பட்டே இருக்கிறது.  நியாயமாக, இயற்கையில் நதியின் போக்குப்படி உழவுத் தொழிலுக்கு கிடைக்க வேண்டிய நீர்பங்கீட்டினைக் கேட்டு தமிழகம் போராட, தங்களுக்கே நீர் போதவில்லை எனக் கர்நாடகம் கைவிரித்து போராட்டம் நடத்தும் நிலை யாவரும் அறிந்த ஒரு முடிவற்ற தொடர் கதை.  இந்த இரு மாநிலங்களுக்கிடையேயான  நீர்ப் பிரச்சனை நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு செல்லவேண்டிய கட்டாயமும் தொடர்ந்து வருகிறது.  நீதிமன்றத்தின் தலியீட்டுக்குப் பிறகும் நீராதாரப்  பிரச்னை இரு மாநிலங்களுகிடையிலும்  தீர்ந்தபாடில்லை.  இந்த சூழ்நிலையை ஆராயும் பொருட்டு இந்த மென்பொருளைக் கொண்டு உருவாக்கப் பட்ட தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியப் பகுதியின் வரைபடங்களில், தென்னிந்தியாவின் தற்கால நீராதரமும், நீராதாரத்தின் எதிர்கால நிலையின் படங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

watere1

 

water2

 

வரைபடங்கள் அளிக்கும் தகவலின்படி தமிழகத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்கால நீராதாரத்தின் நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது என்பதை நாம் அறியமுடிகிறது

 

குறிப்பு:

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்ற நீராதாரத்தின் எதிர்காலத்தை ஆராய்ந்தறியும் படங்களை உருவாக்க இத்தளத்திற்குச் செல்லவும்: http://aqueduct.wri.org/

 

 

மேலும் தகவல்களுக்கு:

http://pdf.wri.org/aqueduct_metadata_global.pdf

http://www3.weforum.org/docs/WEF_GlobalRisks_Report_2013.pdf

Series Navigationமீள்தலின் பாடல்திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்
author

தேமொழி

Similar Posts

11 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ” நீரின்றி அமையாது உலகு “, என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மை எச்சரித்திருந்தும் இன்றும் தமிழகம் நீர்ப் பற்றாகுறையால் அல்லோலகல்லோலப்படுவது

    வேதனைக்குரியதே!

    இத்தனை ஆண்டுகளில் இது பற்றி மத்திய – மாநில அரசுகள் உருப்படியான நிவாரணம் காண முடியவில்லை.

    வடக்கிலிருந்து புறப்படும் பெரிய நதிகளின் நீர் வீணாக கடலில் கலக்குகின்றது. அந்த நதிகளையெல்லாம் தென்னாட்டு நதிகளுடன் இணைத்தால் தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறை தீரும் என்று சிலர் அவ்வப்போது கூறுவது கேட்டுள்ளேன். இது உண்மையில் சாத்தியமானதா என்பது எனக்குத் தெரியாது. அப்படிச் செய்ய முடியுமானால் ஏன் இதுபற்றி இன்னும் மத்திய – மாநில அரசுகள் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை ? இது பற்றி தெரிந்தவர்கள் விளக்கலாமே?

    இத்தகைய பயன்மிக்க , ஆதாரபூர்வமான கட்டுரையைத் தந்துள்ள தேமொழிக்கு நன்றியும், பாராட்டும், வாழ்த்துதல்களும்…..டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    http://jayabarathan.wordpress.com/our-earth/

    கடல்நீர் கொட்டிக் கிடந்தாலும்
    குடிநீர் குவளை அளவு !
    நீர்மயம் எப்புறம் இருப்பினும்
    தூய நீர் அருந்தப் பூமியில்
    துளி நீரிலை !
    மண்டினி ஞாலத்தில்
    உண்டி உயிர் கொடுத் தாலும்
    குடிநீர் இல்லையேல்
    முடிந்திடும் ஆயுள் !

    1. “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    2. “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

    டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

    தற்போது தமிழ்நாட்டுக்குத் தேவையான நீர்வளச் சேர்ப்புக் கட்டுரை. பாராட்டுகள் தேமொழி.

    சி. ஜெயபாரதன்.

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    டாக்டர் ஜி. ஜான்சன்,

    “இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1) (9/23/2004)” [பழைய திண்ணை]” [எனது 10 கட்டுரைகள்]

    ஜீவ நதிகளைச் செத்த நதிகளோடு இணைக்கும் இந்தியத் திட்டத்தைத் தீர்க்கதரிசி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஆரம்பித்தி வைத்தார். அத்திட்டம் குஜராத்தில் வெற்றி கரமாக நிறைவேறியது.

    மற்ற மாநிலங்களில் அவற்றின் உள்ளாற வெறுப்பாலும், நதி இணைக்கத் தடுத்து நில அனுமதி தராமலும் ஆரம்பம் ஆகாது, துவங்கியவை முடங்கி, அடங்கி விட்டன !!!

    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40409232&format=html

    “தேசீய நதியிணைப்புத் திட்டங்கள் பூர்த்தியானால், இந்தியர் ஒருமைப்பாடு வளரப் போவதாய் அரசாங்கம் அறிவித்து வருகிறது! அது தவறான அறிவிப்பு! பகைமைப்பாடு குறைந்து மாநிலங்களுக்குள் ஒருமைப்பாடு மிகுந்தால்தான், நதியிணைப்புத் திட்டம் எதுவுமே நிறைவேறப் போகிறது!”

    சி. ஜெயபாரதன்

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1-10 கட்டுரைகள்) [பழைய திண்ணை]

    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40409232&format=html [கட்டுரை :1]

    முன்னுரை: இந்திய அரசாங்கம் முதலாய்வு செய்து தேர்ந்தெடுத்த நதியிணைப்புத் திட்டங்கள் பாதகத்தை விட கூடுமானப் பலன்களை அளிக்குமாயின், மாநிலங்கள் அவற்றை நிறைவேற்ற முடியும் என்னும் உறுதிப்பாடு கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது. அரசாங்கம் மறு சீராய்வுகள் செய்து, உடன்பாடுகளுடன் உறுதி பெறாத இந்தத் திட்டங்கள் மக்களுக்குப் பலன்தருமா, பாதகம் தருமா, பகை உண்டாக்குமா, நிதி விரையமாகுமா அல்லது நிறுத்தப்படுமா என்னும் தகவலின்றித் திட்டங்களின் தலைவிதியைத் தீர்மானம் செய்வது கடினம். நீர்ப்பங் கீட்டுக்கு ஒருமைப்பாடும், இடப்பெயர்ச்சிக்கு பொறுமைப் பாடும் இல்லாமல் பகைமூளும் மாநிலங்களில் இத்திட்டங் களுக்கு விதையிட்டால் பயிர்கள் வளர்வதற்குப் பதிலாகக் களைகளே விளையப் போகின்றன! ஆதவே மாநில அரசுகளின் பூரண ஒப்பந்தம், பாதிக்கப்படும் மக்களின் உடன்பாடு பெறாத இத்திட்டங்களைத் போற்றிக் கொள்ளுவதோ அல்லது புறக்கணித்துத் தள்ளுவதோ சரியில்லை என்பது என் கருத்து. புதிய முயற்சிகளை ஒப்புக் கொண்டு நிறைவேற்றும் போது எதிர்பார்க்கும் பாதிப்புகளும், எதிர்பாராத பாதிப்புகளும் இடையிடையே எழத்தான் போகின்றன! பாதிப்புகள் எவையேனும் இல்லாமல் எந்தப் பலாபலனும் உண்டாவதில்லை!
    நான் ஒரு நீர்ப்பாசான, நீர்வளத்துறை எஞ்சினியர் அல்லன். நதியிணைப்புத் திட்ட பணிக்குழுவில் [Task Force] உறுப்பினரான பாரத ஏவுகணைத் திட்ட அதிபர், டாக்டர் கஸ்தூரிரங்கன் நீர்வளத்துறை எஞ்சினியர் அல்லர்! மக்களைப் பாதித்துப் பலனளிக்கும் சிக்கலான பொறித் துறைத் திட்டங்களில் பங்கெடுத்து வெற்றிகரமாகச் சாதித்த எவரும் நதியிணைப்புத் திட்டங்களைச் சீராய்வு செய்யத் தகுதி உடையவர்களே! இந்தியா, கானடா இரண்டு நாடுகளின் கனநீர் அணுமின்சக்தி நிலையங்களில் கட்டமைப்பு, இயக்கம், பராமரிப்புப் பணிகளில் நாற்பது ஆண்டுகளும், பெரியாறு நீர்மின்சார நிலைய நிறுவகத்தில் சில காலமும் அனுபவம் பெற்ற எனது சீராய்வு முழுமையான தன்று! அது பன்முகப் பார்வையில் இல்லாமல் இருக்கலாம். விடுதலை அடைந்த இந்தியா, இமாலய நீர்வளத்தை திருப்பிப் பாக்ரா, நங்கல் அணைகைளைக் கட்டி, பஞ்சாப்-ராஜஸ்தான் கால்வாய் மூலம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நீர்ப்பாசான வசதிகளை விருத்தி செய்து வருகிறது. விடுதலை இந்தியாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு மின்சார நிலையங்கள் உருவாகிக் கன யந்திரத் தொழிற்சாலைகள் தோன்றி இந்தியர்களின் நிபுணத்துவமும், எதனையும் நிறுவகம் செய்ய உதவும் பிரம்மாண்டமான யந்திரச் சாதனங்களும், நுணுக்கக் கருவிகளும் கைவசம் உள்ள போது, நதியிணைப்புகள் போன்ற பூதத் திட்டங்களில் முற்படுவதில் எவ்விதத் தவறும் இல்லை!

    பல மொழிகள் பேசி வேற்று மாநிலங்களில் வாழும் இந்தியர் ஒருங்கிணைந்து அணு ஆராய்ச்சித் துறைகள், அணுமின்சார நிலையங்கள் ஆகியவற்றைப் பாரதமெங்கும் நிறுவகம் செய்து கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் பராமரித்து வருகிறார்கள்! இந்திய அணுமின்சார வளர்ச்சியும், விருத்தியும் புதிய நீர்ப்பாசான நதியிணைப்புத் திட்ட அமைப்புகளுக்கு முன்மாதிரியாக, வழிகாட்டியாகக் கண்முன்னே நிற்கின்றது. கன யந்திரத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கிவரும் இந்தியர், நதியிணைப்புத் திட்டங்களைச் சாதிப்பதில் ஏன் பின்வாங்க வேண்டும் என்பதே எனது கேள்வி! பெரும் நதியிணைப்புத் திட்டங்களுக்கு இந்தியாவில் வித்திட்டு, அடித்தள மிட்டுக் கட்ட ஆரம்பித்த ஸர் ஆர்தர் காட்டன், விஸ்வேஷ்ரையா, கே.எல். ராவ், காப்டன் தஸ்தூர் ஆகிய அத்தனை பேரும் நீர்வளத்துறை, நீர்பாசானப் நிபுணத்தில் பொறியியல் மேதைகள் என்பதை முதலில் இங்கே குறிப்பிட விழைகிறேன். நதியிணைப்புத் திட்டங்களை நிறைவேற்றப் பொறித்துறை நுணுக்கங்கள், கட்டுமானச் சாதனங்கள், மனித வல்லமைகள், மனிதர் எண்ணிக்கை எல்லாம் இருந்தும், முதல் வினை ஊக்கியான [Catalyst] ஒருமைப்பாடு மட்டுமே இந்தியா வெங்கும் மக்களிடையே பெரும்பான்மையாகக் காணப்படாத பண்பாகத் தோன்றுகிறது!

    சி. ஜெயபாரதன்

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    “சரித்திர பூர்வமாக ஜீவநதிகளை ஓயும் நதிகளுடன் இணைத்துத் தமிழ்நாட்டில் நீர்ப்பஞ்சத்தை நீக்கியவர், இருநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னகத்தில் பணியாற்றிய ஆங்கில இராணுவ அதிகாரி, ஜெனரல் ஸர் ஆர்தர் காட்டன் [General Sir Arthur Cotton (1803-1899)]! நீர்ப்பாசான எஞ்சினியரான [Irrigation Engineer] ஆர்தர் காட்டன் மெட்ராஸ் மாகாணப் பொறியியல் குழுவினராய் 1828 இல் தென்னகத்தில் [இந்திய விடுதலைக்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மலையாளம் ஆகிய நான்கு பகுதிகளும் ஒன்றாய்ச் சேர்ந்திருந்தன] நீர்ப்பாசான வசதிகளை விருத்தி செய்து, பயிரின வளர்ச்சியைப் பெருக்குவது ஒன்றையே தனது விருப்பக் குறிப்பணியாய்ச் செய்து வந்தார். அத்துடன் சென்னையில் இந்திய நீரழுத்தப் பொறியியற் துறைப்பள்ளி [Indian School of Hydraulic Engineering] ஒன்றையும் ஏற்படுத்தினார். அவரது நீர்ப்பாசான விருத்திப் பணித் தென்னாட்டில் கோடிக் கணக்கான மக்களின் உயிரைப் பஞ்சத்தின் கோரப் பிடியிலிருந்து காப்பாற்றியது என்று வரலாறுகளில் அறியப்படுகிறது. அவரது உருவச்சிலை, நினைவுக் காட்சியகம் ஆந்திரா ராஜமுந்திரியில் இன்றும் பாதுகாப்பாகக் கண்காணிக்கப் பட்டு வருகின்றன. 2003 ஆம் ஆண்டில் பாரதம் ஜீவ நதிகளைத் தென்னக நதிகளுடன் இணைக்கத் திட்ட மிட்டுள்ளது, அவரது 200 பிறப்பாண்டு விழாவைக் கொண்டாடுவதாக நாம் எண்ணிக் கொள்ளலாம்!”
    எதிர்பார்க்கப்படும் 160 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நீர்ப்பாசானப் பெருக்கத்திற்கு புதுவித நீர்த்துறை அமைப்புகள் உருவாக வேண்டும். கங்கை, பிரமபுத்திரா நதிகளில் வெள்ளப் பெருக்குகள் தவறாது நிகழும் விபத்துகளாகி, தேசத்தின் 60% நீரோட்டம் அவற்றில்தான் ஓடுகின்றன! 1950 இல் வெள்ளத்தில் நேர்ந்த சிதைவு இழப்பு 52 கோடி ரூபாயாக இருந்தது, 1998 இல் 5846 கோடி ரூபாயாகப் பூத பெற்றது! பீஹார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நேர்ந்த வெள்ளங்களின் அடிப்பால், மக்கள் பட்ட வேதனையுடன் நிதி இழப்பு சராசரி ஆண்டுக்கு 1343 கோடி ரூபாய் ஏற்படுகிறது! அதே சமயத்தில் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆண்டு தோறும் தவறாது மழை சுண்டி வறட்சி ஏற்படுகிறது. ஏறக்குறைய 85% மழையற்ற வறட்சி இப்பகுதிகளைத்தான் தாக்குகிறது!

    எதிர்கால உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; பெருக்கெடுத்தோடி பயிரழிக்கும் ஆற்று வெள்ளங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; மழைநீர் சுருங்கி வறட்சி பெருகி ஏற்படும் பயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும்;

    இந்தியாவின் 1000 மில்லியன் ஜனத்தொகை இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் இரட்டிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது! அப்போது மக்களுக்குத் தேவைப்படும் உணவு தானியத்தின் அளவு: 450 மில்லியன் டன்! ஆற்றுநீரைப் பயன்படுத்தி 1950 ஆண்டில் நீர்ப்பாசானம் செய்த 50 மில்லியன் டன் தானிய உற்பத்தியிலிருந்து, 2000 இல் 200 மில்லியன் டன்னாகப் பெருக்கிச் சுயதேவைப் பூர்த்தி அடைந்துள்ளது இந்தியா. நீர்ப்பாசானத் தகுதி பெற்ற நிலங்கள் 22 மில்லியன் ஹெக்டா ஏக்கரிலிருந்து 95 மில்லியன் ஹெக்டா ஏக்கராக அதே காலத்தில் பெருகியுள்ளன. 2040 ஆம் ஆண்டில் 2000 மில்லியன் மக்களுக்கு தானியம் அறுவடை செய்ய 160 ஹெக்டா ஏக்கர் நீர்ப்பாசான நிலங்கள் எதிர்ப்பார்க்கப்படும்! ஆனால்
    இந்தியாவின் பொதுப்படையான நதி, நீர்வளத் தேக்கங்கள் மூலமாக நீர்ப்பாசானம் செய்யத் தகுதி யுடையவை: 140 மில்லியன் ஹெக்டா ஏக்கரே! அதாவது, 2040 இல் தேவை யானது: 160 மில்லியன் ஹெக்டா ஏக்கர்! ஆனால் கிடைப்பது: 140 மில்லியன் ஹெக்டா ஏக்கர் மட்டுமே!”

    சி. ஜெயபாரதன்

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    “இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எழுந்த இமாலயத் திட்டம்”

    “பழைய மத்திய மந்திரியும் நீர்ப்பாசான எஞ்சினியருமான டாக்டர் கே.எல். ராவ் 1972 இல் சமர்ப்பித்த கங்கா காவேரி இணைப்புத் திட்டம் நிதி விழுங்கும் என்று அங்கீகாரம் ஆகவில்லை! பாரதப் பெருநதிகளைச் சிறுநதிகளுடன் இணைக்கும் பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட அப்பழைய திட்டம், திடாரெனப் புத்துயிர் பெற்று 2003 ஆண்டில் ஆலமரமாய் விரிந்து விழுதுகள் விட்டுப் பரவியது! பாரத நாட்டின் குடிநீர்ப் பற்றாக்குறை, நீர்ப்பாசானப் பிரச்சனைகளைத் தீர்க்கும் மாபெரும் அந்த நீரிணைப்புத் திட்டம் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றது! ஆனால் இந்தியச் சமூகக், கலாச்சார, அரசியல், பூகோளச் சூழ்மண்டலக் கோலத்தைச் சீர்குலைக்கப் போகும் அந்த இமாலயத் திட்டங்கள் எவ்விதம் நிறைவேறப் போகின்றன என்னும் ஐயம் பலரது இதயத்தில் பேரதிர்ச்சியையும் பெருந் துடிப்புகளையும் உண்டாக்கி விட்டிருக்கிறது! கங்கா, பிரமபுத்திரா பூத நதிகளை இணைக்க முடியுமா, இணைத்தாலும் அவற்றிலிருந்து ஏராளமான நீர்வெள்ளம் அடித்துக் கொண்டு வருமா, அப்படி வந்தாலும் வெள்ளம் கால்வாய் மூலமாக ஆயிரம் மைல்கள் ஓடிக் கொள்ளிடம் காவிரி நதியில் கலக்குமா என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழுந்துள்ளன! இந்திய அரசாங்க நீர்த்துறைப் பூதள நிபுணர்கள் கணக்கீடும், மதிப்பீடும் செய்த 42 நதி யிணைப்புத் திட்டங்களில் பல காரணங்களால் 25% புறக்கணிப்பாகி நான்கில் மூன்றைச் சாதித்தாலும், முப்பது நீரிணைப்புத் திட்டங்களால் நீர்வளமும், நீர்ப்பாசானமும் இந்தியா வெங்கும் பேரளவு பெருகத்தான் போகின்றன.”

    சி. ஜெயபாரதன்

  7. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    “தேசீய ஒருங்கிணைப்புப் பண்புகளை ஊட்டுவிப்பது எப்படி ?”

    “இந்தியா ஓர் ஐக்கியக் குடியரசு. ஐக்கியம் என்னும் பதத்தில் செழித்த மாநிலம் ஏழமை மாநிலத்துக்கு உதவும் பண்பும் பொருளும் அடங்கியுள்ளது. ஒருதாய் மக்கள்போல் சொத்துகளைப் பங்கீடு செய்து கொள்ளும் பண்பு ஒட்டியுள்ளது. மாநிலங்களின் ஐக்கியத்தை இறுக்கிப் பிணைப்பது மக்களின் ஒருமைப்பாடு. நிலைப்பாடு இல்லாத ஒருமைப்பாடை மாநிலங்கள் தமக்குள் உண்டாக முன்னடி வைத்துச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்! தேய்ந்து போகும் ஒருமைப்பாடை, மாநிலப் புதிய அரசுகள் அடிக்கடித் தமக்குள் புதுப்பித்துக் கொள்வது அவசியம். அண்டையில் இருக்கும் இல்லங்கள் நட்புடன் பழகிக் கொள்வதுபோல், மாநிலங்கள் தமக்குள்ளும் மத்திய அரசுக்கு இடையேயும் ஒப்புடன் நடந்து கொள்வது, நதி யிணைப்புத் திட்டங்களைத் தீர்மானிக்கவும் நிறைவேற்றவும் ஆணிவேராக நிலைத்து நிற்கும். இந்தியர் பேசும் மொழிகள், பிறந்த மாநிலங்கள், பிழைக்கும் முறைகள், வெளித்தோல் நிறங்கள், தோன்றிய இனங்கள் வெவ்வேறு ஆயினும், யாவரும் ஒரே இந்தியப் பாதுகாப்புக் குடையின் கீழ் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலத்தில் வசித்துக் கொண்டு எல்லைக் கோடுகளைப் போட்டு, இல்லாத வேலிக்குள் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.”
    மாநில முதலமைச்சர்கள், மாண்புமிகு மந்திரிமார்கள், கல்லூரி, பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், வெள்ளித்திரை நடிகர்கள், இயல், இசை, நாடகக் கலைஞர்கள் ஆகியோர், மாநில மக்கள் ஒருமைபாடுக்குப் பல முறைகளில் இருபோக்கு ஆக்கப் பாதைகளை அமைக்கலாம். வேற்று மொழிகளையும், அவற்றைப் பேசுவோரையும் எள்ளி நகையாடிக் கொண்டு பகைமைப் பயிர்களை வளர்க்கும் அண்டை மாநிலங்களில் நதியிணைப்புத் திட்டம் எதுவும் நடக்கப் போவது கடினம்! அண்டை மாநில அறிஞர், அரசாங்க அமைச்சர், கலைஞர் ஆகியோரைத் தங்கள் விழாக்களில் அழைத்துக் கலந்து கொள்ளச் செய்து கெளரவிக்கலாம். உதாரணமாகத் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் பிற மாநிலங்களின் நட்பைச் சம்பாதிக்க தெலுங்கு, கன்னடம், மலையாள, மராட்டி, பஞ்சாபி, வங்காள போன்ற பிறமொழி மாணவர்களுக்குச் சலுகைகள் அளிக்கலாம். தமிழ்நாட்டில் அண்டை மாநிலக் கண்காட்சிகளை அமைத்து அவரது மகத்தான சாதனைகளைப் பொது நபர்களுக்குக் காட்டலாம். இதுபோல் பல ஆக்க வழிகளில் ஒருமைப்பாடை உண்டாக்க அண்டையில் உள்ள இரு மாநிலங்கள் தமக்குள் பல பாலங்களைக் கட்டிக் கொள்ளலாம். மாநிலங்களுக்குள் ஏற்படும் ஒருமைப்பாடு ஒன்றுதான் நதியிணைப்புத் திட்ட ஆரம்பத்துக்கும் வெற்றிகரமான முடிவுக்கும் உதவப் போகிறது. திட்டங்களின் இடையிடையே ஏற்படும் தடைகளையும், தாமதத்தையும் தவிர்க்க ஒருமைப் பாடுதான் துணையாகக் கைகொடுக்கப் போகிறது.”

    சி. ஜெயபாரதன்

  8. Avatar
    தேமொழி says:

    கட்டுரையினைப் படித்துப் பாராட்டிய டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ….. தேமொழி

  9. Avatar
    தேமொழி says:

    கட்டிரையின் கருத்துக்களை அலசி ஆராய்ந்ததுடன், மேலும் பல அறிய தகவல்களையும், தனது கட்டுரையினைப் படிக்கும் வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு சுட்டியினைக் கொடுத்துதவிய சி. ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ….. தேமொழி

  10. Avatar
    R.Venkatachalam says:

    தேமொழி ஜெயபரதன் ஆகிய இருவருக்கும் நன்றி. என்னைப்போன்ற பின்னனி கொண்டவர்களுக்கு இக்கட்டுரைகளுக்குள் சென்று புரிந்து கொள்வதென்பது அசாத்தியமான செயல். ஆகவே நான் உடனே கட்டுரைகளைப்பற்றி ஏதும் கூறாவிடினும் திருக்குறள் வான் சிறப்பு அதிகாரத்தின் கடைசிக்குறளை தேமொழி தன்னுடைய கட்டுரையில் முதலில் வைத்துள்ளார். அக்குறள் அவருடைய கட்டுரைக்கு மிகப் பொருத்தமான பின்னூட்டாக அமையக்கூடியது. அதனை நான் புரிந்துகொண்டுள்ள வகையில் கீழே தந்துள்ளேன்.

    நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு 20

    பரிமேலழகர் உரை:
    (இதன்பொருள்) யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது = எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையின்றி உலகியல் அமையாதாயின்;
    ஒழுக்கு வான் இன்று அமையாது = அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானையின்றி அமையாது.

    பரிமேலழகர் உரைவிளக்கம்:
    பொருள் இன்பங்களை உலகியல் என்றார், அவை இம்மைக்கண் ஆகலின்.
    இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல்.
    நீர்இன்றி அமையாது உலகு என்பது, எல்லாரானும் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படுமென்பார் ‘நீரின்றமையாதுலகு எனின்’ என்றார்.
    இதனை நீரையின்றி அமையாது உலகாயின், எத்திறத்தார்க்கும் மழையையின்றி ஒழுக்கம் நிரம்பாது என உரைப்பாரும் உளர்.
    இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

    முவ அவர்களது உரை “மழையின்றி ஒழுக்கம் நிரம்பாது என உரைப்பாரும் உளர்” என்ற கூற்றினை ஒட்டி உள்ளது: ”எப்படிப்பட்டவருக்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்”

    நான் தமிழ்த்துறையினன் அல்லன். தமிழ்ப்புலமையும் இல்லாதவன். ஆனால் திருக்குறளை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து படித்து புரிந்துகொள்ள முயற்சிப்பவன் என்ற அளவில் தொடர்ந்து மழை இல்லையெனில் எல்லா இடங்களிலும் காலம் காலமாக உள்ள சிறந்த நடைமுறைகளெல்லாம் தறி கெட்டு பெரும் பாதகங்கள் விளையும் என்று இந்தக்குறள் கூறுகிறதென நினைக்கிறேன். உதாரணமாக ஒரு நதிக்கு இயற்கையாக அமைந்துள்ள படுகையின் மக்களுக்கே அந்நீரின் மீது உரிமை என்ற சிறந்த நடைமுறை தலைகீழாக மாறி வருவதைக்காணலாம். இந்த நடைமுறை காவிரி விசயத்தில் தற்போது ஏற்பட்டு வருகிறதல்லவா?

  11. Avatar
    தேமொழி says:

    உங்கள் கருத்துரைக்கு நன்றி திரு. வெங்கடாசலம் அவர்களே. உண்மை, நீர் பற்றாக்குறை மக்களின் வன்முறைக் குணங்களுக்கு வழி வகுக்கும்.உணவும் நீரும் காற்றும் உயிர் வாழஅடிப்படை ஆதாரம். இவற்றிற்க்கு ஏற்படும் போராட்டம் மக்களை மாக்கள் ஆக்கிவிடும். ஒரு நாட்டின் நதி நீரை பொது சொத்தாகக் கருதாதன் விளைவு இன்று மாநிலங்களுக்குள் எழும் போராட்டம். உங்கள் கருத்துரைக்கு மீண்டும் நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *