முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வானொலியின் குரல் ஒலிக்கத் துவங்கியது எனலாம். சீனாவின் குறிப்பிட்டசில நகரங்களில் அரசியல் சூழலுக்காகவே உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல் மாஸ்கோவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒலியலைபரப்பிகளின் ஊடாக சோதனை முயற்சியைத் துவங்கியது.
ஷின்ஹுவா புதிய சீன வானொலி ( Xinhua New Chinese Radio (XNCR) ) என்ற பெயரில் யான்னானிலிருந்து 1940ம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள்30ம் நாள் ஒலிக்கத் துவங்கியது. இந்த வானொலியானது 1945களில் இதன் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டுச் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், போர் குறித்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றோடு கலை மற்றும் இலக்கியஞ்சார்ந்த நிகழ்ச்சிகளை பரவலாக ஒலிபரப்பத்துவங்கியது.
சீன வானொலி நிலையம் போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்தில் சீனாவின் வடமேற்கு பகுதியான யான்னானிலிருந்து 1941ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ம் நாள் பீகிங் அதன் ஒலிபரப்பைத் துவங்கியது. துவங்கியபோது ஜப்பானிய மொழியில் மட்டும் ஜப்பானிய-சீன அறிவிப்பாளர் ஹாராகியோஷி அவர்களால்15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. அதன் பின் 1947ல் செப்டெம்பர் 11ம்தேதி முதல் தடவையாக சீனாவின் குரல் ஆங்கில மொழி பேசும் உலகில் அறிவிப்பாளர் திருமதி. வெய் லின் அவர்களால் சென்றடைந்தது.
போர் உக்கிரமாக நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டமான 1947, செப்டெம்பர் 11ம்தேதி சீனாவின் ஹெபெய் மாநிலத்தின், டைகாங் மலைப்பகுதியில் ஷாஹே என்ற குக்கிராமத்தில் முதல் தடவையாக வானொலியில் அறிவிப்பாளர் திருமதி. வெய் லின் அவர்களால் ஆங்கில மொழி பேசும் உலகில் சென்றடைந்தது.
பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியா, ஸ்பெய்ன், கனடா, மாலி, பிரேசில், கியூபா, அமெரிக்கா முதலிய 10க்கும் அதிகமான நாடுகளின் வானொலி நிலையங்களுடன் நிகழ்ச்சி ஒத்துழைப்புறவை 1987ம் ஆண்டு முதல் சீன வானொலி நிலையம் மேற்கொண்டு அதன் எல்லையை விரிவாக்கம் செய்தது.
80களில் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள்
1993ம் ஆண்டு சனவரி 1ம்தேதி பீகிங் வானொலிநிலையம் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சீன சர்வதேச வானொலி நிலையமாக முகிழ்த்தது.
1997ல் சீனத் தமிழ் வானொலியின் இணையதளம் மூலம் அறிமுகப்படுத்தும் சோதனை முயற்சியில் ஈடுபட்டதில் வெற்றிகண்டு, 1998 டிசம்பர் திங்கள் 26ம்நாள் இணையதளத்தை நிறுவும் முயற்சிகளில் அயற்சி இல்லாமல் களமிறங்கியது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ரஷ்யா, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம் உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளிலும் 17 மொழி இணையக் கிளைகள் இடம் பெறும் பன்னோக்க இணைய வலையம் நிறுவப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டில், தமிழ்ப் பணியாளர்களும் நேயர்களும்
2000ஆம் ஆண்டில் சீனத் தமிழ் வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டிலிருந்து, கட்டுரை மற்றும் பொது அறிவுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தத் துவங்கியது. இப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பு நேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், சீனாவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்று வருவதுதான் இதன் சிறப்பம்சம். அப்போது முதல் வெளிநாட்டு வானொலிகளின் மூலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலை அதிகரித்துள்ளது.
2002ஆம் ஆண்டு நேயர் தொடர்புப் பணியை மேலும் பயன் தரும் முறையில் கையாளும் வகையில், நேயர் மின்னணுப் பதிவேடு கையாளுவது நடைமுறைக்கு வந்தது.
2003ஆம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் ஆங்கிலம், ரஷியம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலான நிகழ்ச்சிகள், நாளுக்கு நாள் சுமார் 80 மணி நேரத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளின் மத்திய அலை மற்றும் பண்பலைவரிசை மூலம் நேரடியாக ஒலிபரப்பாகி, நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2003ல் 61 மொழிகளில் இணையதளம் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணமாக இணைய உலகில் வலம் வரத் துவங்கியது. சீனாவின் முன்னணி பெற்ற செய்தி நிறுவனங்களுள் ஒன்றாக இந்த இணையதளம் மக்களிடையே பிரசித்தி பெற்றது.
2004ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் நாள், 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகி வந்த சீனத் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் நாள்தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பாக மாறி, முதல் ஒலிபரப்பு, மறு ஒலிபரப்பு என மொத்தம் இரண்டு மணி நேரமாக முன்னேறியது.
“சீனத் தமிழொலி,” எனும் சீனத் தமிழ் வானொலியின் முதலாவது தமிழிதழ் 2004ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தமிழ்ப் பிரிவால் வெளியிடப்பட்டது.. “சீனத் தமிழொலி” இதழ், நேயர்களுக்கிடையில் பெரும் வரவேற்பைப் பெற்று வலம்வருகிறது.
2004ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் நாள், 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகி வந்த சீனத் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் நாள்தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பாக மாறி, முதல் ஒலிபரப்பு, மறு ஒலிபரப்பு என மொத்தம் இரண்டு மணி நேரமாக முன்னேறியது.
2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளிலிருந்து ஹாங்காங் வட தொலைக்காட்சிச் சேவை மூலம், சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் ஒலிபரப்பு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் பண்பலை சேவையைத் தொடங்கியது. (2009ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், அப்பண்பலை சேவை நிறுத்தப்பட்டது.)
2006ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 27ம்தேதி சீனத் தமிழ் எஃப்.எம். கென்யாவின் நைரோபி நகரில் முகிழ்த்தது. அதே ஆண்டு நவம்பர்த் திங்கள் 19ம்தேதி லாவோசில் வியன்டியென்னில் சீன அதிபர் ஹு ஜின்டோவும் லாவோஸ் அதிபர் சோமலே சாயாசோன் அவர்களும் இணைந்து சீனத் தமிழ் வானொலியின் எஃப்.எம். வானொலி நிலையத்தை துவங்கிவைத்தனர்.
கைபேசி உபயோகிப்பாளர்கள் “m.cri.cn” என்று தட்டச்சினால் செய்திகள், வர்த்தகம்,பொழுதுபோக்கு மற்றும் பயணச்செய்திகளை அறிந்துகொள்ளும்வகையில் 2009ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 16ம்தேதி செல்லுமிடமெல்லாம் கேட்டு மகிழும் வண்ணம் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது, சீனத் தமிழ் வானொலியின் வரலாற்றில் புதிய மைல் கல் எனலாம்!
2010ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள், இலங்கைப் பண்பலை FM102 ஒலிபரப்பைத் தமிழ்ப் பிரிவு தொடங்கியது. 2012ஆம் ஆண்டு இறுதியில், அது FM97.9யாக மாறியது.
2009ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இந்த இணைய தளம் முதன்முறையாகச் சீரமைத்து வடிவமைக்கப்பட்டது. பிறகு, 2013ஆம் ஆண்டு ஜனவரி திங்களில், இரண்டாவது முறையாக அது சீரமைக்கப்பட்டு, மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணைய தளத்தில், ஒலி, ஒளி, படங்கள் கொண்ட பல்லூடக வடிவத்தில், சீன மற்றும் உலகச் செய்திகள், சீனப் பண்பாடு, சீனச் சுற்றுலா பயணம், சீனாவில் தமிழர்கள், சீன மொழிப் பாடம் என பலதரப்பட்ட சிறந்த, சிந்தைக்கு விருந்தளிக்கும் தகவல்களை அளிக்கின்ற ஒலிபரப்பாகச் சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பு மாறியுள்ளது என்றால் அது மிகையில்லை. தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர் தி. கலையரசி 2009ஆம் ஆண்டு சீன வானொலி முதன்மை அறிவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவிப்பாளர் என்ற பதவியில் இது மிக உயர்ந்த புகழ் வாய்ந்ததாகும்
2010ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள், இலங்கைப் பண்பலை FM102 ஒலிபரப்பைத் தமிழ்ப் பிரிவு தொடங்கியது. 2012ஆம் ஆண்டு இறுதியில், அது FM97.9யாக மாறியது. சீன மொழியைக் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சியையும் தமிழ்ப் பிரிவு தயாரித்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
2012ஆம் ஆண்டின் அக்டோபர் வரை, 61 அந்நிய மொழிகள், மெண்டரின் மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 3500 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. தமிழ் தவிர, பெங்காலி, உருது, ஹிந்தி ஆகிய 3 இந்திய மொழிகளிலும் சி.ஆர்.ஐ. தனது ஒலிபரப்புச் சேவைகளை வழங்கி வருகிறது.
2013ஆம் ஆண்டில், இணையதளத்தின் கைபேசி வடிவம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
நேயர் கடிதங்கள்….
உலகில் எந்த வானொலி நிலையத்துக்கும் இல்லாத சிறப்பு சீனத் தமிழ் வானொலிக்கு உண்டு என்பதை என்னால் அழுத்தம் திருத்தமாகச் சொல்லமுடியும். அதுதான் நேயர்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள். 1963ஆம் ஆண்டு, நேயர்களிடமிருந்து இரண்டு கடிதங்கள் மட்டுமே கிடைத்த நிலை மாறி, ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கில் நேயர் கடிதங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடைமழைபோலக் கொட்டி வெள்ளப்பெருக்கெடுத்து வழிந்தோடுகிறது.
2010ஆம் ஆண்டில், 5 லட்சத்து 61 ஆயிரத்துக்கு மேலான கடிதங்கள், சீனத் தமிழ் வானொலிக்கு வந்து சேர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் இணையதளம் மூலமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களும் இப்போது தமிழ்ப்பிரிவிற்கு குவியத் துவங்கியுள்ளது.
பொன்விழா காணும் இந்த வானொலியின் இனியநேயர்களாக, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, செளதி அரோபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பரவியுள்ளனர். தமிழ் நேயர்களின் நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150ஆக உள்ளது. பதிவு செய்யப்பட்ட நேயர்களின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரத்துக்கும் கூடுதலாகும்.
சீன அரசு நட்புறவு விருது…
முதன்முதலில் இலங்கையிலிருந்து சென்ற தமிழாசிரியர் மாதகல், திரு.வ.கந்தசாமி பணியாற்றினார். அதன்பின்னர் இலங்கையிலிருந்து சீன வானொலியில் பணியாற்றவும், அயல்மொழிப் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்புப் பணிபுரியவும், தமிழ் கற்பிப்பதற்காகவும் தமிழாசிரியர் திரு.கே.சனகன், திருமதி ராணி இரத்தினதேவி, திரு.வீ .சின்னத்தம்பி ஆகியோர் பணியாற்றினர்.
50 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவின் ஒளிமயமான சாதனைகளில், மொத்தமாக 9 தமிழ் நண்பர்கள், வெளிநாட்டு நிபுணர்களாக, தமிழ்ப் பிரிவில் சேர்ந்து, பணி புரிந்துள்ளனர். சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் முழுநேரமாகப் பணி புரிந்த 9 தமிழ் நிபுணர்கள்,இலங்கையைச் சேர்ந்த மாதகல் கந்தசாமி, சின்னதம்பி, தமிழகத்தைச் சேர்ந்த ந.கடிகாசலம், சிவக்குமார், ராஜாராம், அந்தோனி கிளிட்டஸ், தமிழன்பன், புஷ்பா ரமணி, பாண்டியன் ஆகியோரடங்குவர். அவர்களில் பேராசிரியர் முனைவர் ந.கடிகாசலம், மூன்று முறையாக ஏறக்குறைய 12 ஆண்டுகள் சீனத் தமிழ் வானொலியில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக, அவரது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு, சீன அரசு நட்புறவு விருதை அவருக்கு வழங்கிக் கெளரவித்தது.
“சீனாவில் இன்ப உலா”…..
“கலைமகள்” என்றழைக்கப்படும் “சாவோ ஜியாங்” சீனத் தமிழ் வானொலியின் தலைவர்.
இவர்”சீனாவில் இன்ப உலா”என்ற புத்தகத்தை எழுதி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டுள்ளார்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எவருடைய உதவியுமின்றி தமிழில் சீனா சுற்றுலாத்தலங்கள் குறித்து எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் புத்தகம் எழுதிய முதல் சீனப்பெண்மணி இவர் என்றபெருமையையும் தட்டிச் சென்றுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் சீனப் பெருநகரங்களான பெய்ஜிங், சாங்காய் போன்ற நகரங்கள் தோன்றிய வரலாறு, திபெத்திய நாகரிகம், சீனர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை எளியமுறையில் 26 கட்டுரைகளாக எழுதியுள்ளார். முதன்முறை சீனாவுக்குச் சுற்றுலா செல்பவர்களுக்குஇந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்முனையளவும் அய்யமில்லை.
சீனத் தமிழ் வானொலியின் தலைவர் கலைமகள் (சாவோ ஜியாங்-Zhao Jiang) தமிழ் பிரிவின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும்போது:-
சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தொடங்கிய போது, நாள்தோறும் அரை மணி நேரம் தான் நிகழ்ச்சியை வழங்கப்பட்டது. சில தலைமுறை பணியாளர்களின் முயற்சி மூலம், தமிழ்ப்பிரிவு மென்மேலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்போது, சிற்றலை, பண்பலை, இணையதளம், தமிழொலி என்னும் இதழ், கைபேசி இணையம் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. பன்முக ஊடகமாக தமிழ்ப்பிரிவு மாறியுள்ளதாகக் கூறலாம். இன்றைய தமிழ்ப்பிரிவில் இளம் பணியாளர்கள் மிக அதிகம். இந்த இளைஞர்களின் புதிய கருத்துக்களால் தமிழ்ப்பிரிவின் வளர்ச்சி பெரிதும் முன்னேற்றப்பட்டு வருகிறது.
பெற்ற சாதனைகளை அடிப்படையாக கொண்டு, தமிழ்ப்பிரிவு தொடர்ந்து வளரும். எதிர்காலத்தில் ஒத்துழைப்பு என்பது, தமிழ்ப்பிரிவின் புதிய கடமையாக மாறும். நாங்கள் எங்களது திறனை வலுப்படுத்துவதோடு, பல்வேறு துறைகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள முயற்சி செய்வோம். குறிப்பாக, தமிழகத்தில் பண்பலை நிகழ்ச்சியைத் தொடங்குவது, கன்ஃப்யூசியஸ் கல்லூரி நிறுவுவது, தமிழொலி என்னும் இதழ் தமிழகத்தில் அச்சிட்டு வழங்குவது ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இவ்வாண்டு, தமிழ் ஒலிபரப்புத் தொடங்கிய பொன் விழா ஆண்டாகும். அனைவரின் கூட்டு முயற்சியில் தமிழ்ப்பிரிவு, மேலும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு உறுதியாக நம்புகின்றோம் என்றார்.
தமிழ் ஒலிபரப்பு தென்னாசியா ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. தற்போது, சீனத் தமிழ் வானொலியில் 18 சீனப் பணியாளர்களும் 2 தமிழ்ப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
சீனத் தமிழ் வானொலியில் பணி புரிவோர்:-
கலைமகள் தமிழ்ப் பிரிவின் தலைவர் (சாவோ ஜியாங்-Zhao Jiang) (கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர் )
வாணி,(காய் ஜுன்) தமிழ்ப் பிரிவின் துணைத் தலைவர் (அறிவியல் மற்றும்
நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி அறிவிப்பாளர் )
மீனா (சீனப் பண்பாடு நிகழ்ச்சி தயாரிப்பாளர் )
வான்மதி, (சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்
மோகன், (விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி அறிவிப்பாளர்,ஒளிப்படத்
தயாரிப்பாளர்)
மதியழகன்,(கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
கலைமணி, (நட்புப் பாலம் நிகழ்ச்சி அறிவிப்பாளர் )
தேன்மொழி, (நேயர் விருப்பம், நேருக்கு நேர், அறிவியல் மற்றும்
நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)
ஈஸ்வரி, (இன்றைய திபெத் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
சிவகாமி, (உங்கள் குரல், நேயர் கடிதம், நேயர் நேரம் நிகழ்ச்சிகள்
அறிவிப்பாளர்)
சரஸ்வதி, (சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
ஜெயா, (உங்கள் குரல், நேயர் கடிதம், நேயர் நேரம் நிகழ்ச்சிகள்
அறிவிப்பாளர்)
இலக்கியா, (மக்கள் சீனம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
நிலானி, (சீனக் கலைஞர்களின் இதய ஒலி நிகழ்ச்சி
அறிவிப்பாளர்)
ஓவியா, (சீன இசை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
மேகலா, (சீனாவில் இன்பப் பயணம், மக்கள் சீனம் நிகழ்ச்சிகள்
அறிவிப்பாளர்)
நிறைமதி, (மலர்ச்சோலை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
பூங்கோதை, (மலர்ச்சோலை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
சீனப்பணியாளர்கள் எவர் பெயரும் இல்லையே என்று பார்க்கிறீர்களா? மேற்சொன்ன அனைவரும் சீனப்பணியாளர்களே!
தங்கள் பெயரை அழகு தமிழ்ப்பெயராகச் சூடிக்கொண்டுள்ளனர் இவர்களனைவருமே!இவர்களின் அளப்பரிய அர்ப்பணிப்புப் பணி நம்மை வியக்க வைக்கிறது.
இன்று…..பொன்விழா…..
மூத்த மொழியே, புகழ் பூத்த மொழியே, நேற்று,இன்று, நாளை என்று நிலவுகின்ற காலக்கணக்கைக் கடந்த மொழியாம் எம் செம்மொழியாம் தமிழ் மொழி சீன வானொலி நிலையத்தில் தமிழ் ஒலிக்கத் துவங்கி ஐம்பது ஆண்டு பொன் விழா காணவுள்ள சீன வானொலித் தமிழ் பிரிவிற்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வாழ்த்தைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.
இது உன் விழா…என் விழா …இரண்டும் அல்ல
சீனத் தமிழ் வானொலியின் நேசிப்புத் தமிழர்கள்
தன் விழா என்று நினைக்கும்
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவின் பொன்னான பொன் விழா!
அமெரிக்காவில்…..
நான் அமெரிக்கா வந்த புதிதில்(1990களில்) ஃபோர்ட்வைன் என்ற நகரத்தில் தமிழ் பேசுபவர்களைக் காண்பது அரிதாக இருந்தது.
எதேச்சையாக ஒரு தமிழ்க் குடும்பத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டேன். அதன் பின் மின்னசோட்டா மாநிலத்தின் மினியா பொலிசு நகரத்திற்கு போனபோது அங்குள்ள தமிழ் சங்கத்தை தேடிப் போனேன். அங்கு கூடிய தமிழர்கள் தமிழ் பேசவில்லை; அப்படியே பேசினாலும் அது தமிங்கிலமாகவே இருந்தது. (இது குறித்து ஒரு கட்டுரையே “அமெரிக்காவில் தமிழ் என்று இணைய இதழ்களில்
எழுதி வெளியானது) ஒரு அந்நிய நாட்டில் தமிழ் பேசுபவர்களைக் ஒருவிதத் தவிப்போடு தாகத்தோடு தேடிக்கொண்டிருந்தபோதுதான் 1997ல் முதன் முதலாக சீன வானொலி ஒலிபரப்பு குறித்து அறிந்தேன். எனது ஓய்வு நேரங்களில் இணையதளங்களுக்கு எழுதுவதையும்கனடாவின் வான்கூவர் நகரில் தமிழ் வானொலியில் வாரம் ஒரு முறை, “செவிக்கினிய சிந்தனைகள்” என்ற செய்தியினை வழங்கத்துவங்கியிருந்தேன்.
1999ல் சீன வானொலி இணையதளம் பார்த்து வியந்தேன். எனது பணிப்பளுவில் எப்போதாவது நேரம் கிடைக்கும்போதும் மட்டுமே சீனத் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வந்தேன். ஆனால் இணையதளம் முழுமையான பயன்பட்டுக்கு வந்த பின் அன்றாடம் பலவிதமான தகவல்களை அறிவதில் நாட்டம் கொண்டேன். சீனப்பண்பாடு, சீன உணவரங்கம், சுற்றுலா, அறிவியல்செய்திகள் என்று கால்நடைகளுக்கு நல்ல பசும்புல் கிடைத்தால் குனிந்த தலை நிமிராமல் மேய்வதில் கவனம்கொள்ளுமே அதுபோல நான் மூழ்கிவிடுவதுண்டு!
தேனீர் விரும்பி…..
இன்பப் பயணம் என்ற தலைப்பில் தாலி நகரம் என்ற இடத்தைக் குறித்த கட்டுரையில் தேனீர் குறித்த செய்தி படித்தேன். பொதுவாக தேனீரில் சர்க்கரை போடாமல் அருந்துபவர்கள் உடல் நலம் குறித்த அக்கறையில்அல்லது மருத்துவர் ஆலோசனையின் பேரில்தான் அருந்துவார்கள். ஆனால் இந்தத் தாலி தலத்தின் வசிப்பிட மக்களான பெய் இன நட்பார்ந்த மக்கள் 3 சுவை தேநீர் அளித்து உபசரிப்பார்கள் என்றும்,அது கசப்பான தேநீர், இனிப்பான தேநீர், நினைவு கூரும் தேநீர் என்றும் அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உள்ளது என்றும் வாசித்ததும் அதன் பிறகு நானும் தேனீர் விரும்பியாக மாறியதும் என் வாழ்வில் மறக்க இயலாதது!
சிங்தௌ நகரம், யுன்செ வனப்பூங்கா,ஹென்சான் கோயில், குவாங்சோவில் சுற்றுலா,தைய் இனக் கிராமம், கடலோர நகரான டியான்ஜின் சீனாவின் பாலைவனச் சோலை, வூயி மலை போன்ற தகவல்கள் எனக்குள் இந்தப் பகுதியை ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் போய்க் கண்குளிரக் காணவேண்டும் என்ற ஆவல் அடங்காமல் எழுந்தது!
சமூக வாழ்வு செய்தியில், சீனாவில் 56 தேசிய இனங்கள் இருக்கின்றனர் என்றும் பல்வேறு தேசிய இன மக்கள் இணக்கமாகுவும் இன்பமாகவும் வாழ்வதையும் இனம், மியௌ இனம், துங் இனம், திபெத்தினம், கொரிய இனம், ஹுய் இனம், சுவாங் இனம், தஜிக் இனம் என்றெல்லாம் பல்வேறு இனங்கள் வாழ்வதை எல்லாம் நேசித்து வாசித்தது என் அடிமன ஆழத்தில் உறைந்து கிடக்கிறது.
சீன தேசிய இன குடும்பம் ஒரு மிக நல்ல பயன் மிக்க தகவல்களை உள்ளடக்கியது என்பது மறுக்கவியலாத பேருண்மையாகும்.சீனாவின் மேற்குப் பகுதியின் பண்பாடு, உய்கூர் இன மாணவர்கள்போன்ற பல நல்ல தகவல்களை என்னுள் உள்வாங்கிய அற்புதப் பொழுதுகளவை!
உணவே மருந்து……
குறிப்பாக “விகுர்” இன மருத்துவம் குறித்து எனக்குள் பெரும் ஆர்வம் எழுந்தது. “மூலிகை மருந்து, தாதுப்பொருள், விலங்கு ஆகிய மூன்று வகை சிகிச்சையில், அவை, தத்தன் சனிச்சிறப்பியல்புடையதை அறிந்தேன். இது இயற்கை மருந்து என்பதால், அதன் பக்க விளைவு குறைவு. ஆனால், சிகிச்சை பயன்மிக்கது. உணவு மூலம் சிகிச்சை பெறுவதும், பராமரிப்பு மூலம் சிகிச்சை என்பது நாம் உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வது போல உணவு மூல சிகிச்சை என்பது,விகுர் இன மக்கள் தயாரித்தளிக்கும் வெவ்வேறான உணவுகளால் நோயைத் தடுத்து குணப்படுத்துவதாகும். இதையெல்லாம் நேரில் அறிந்து நமது பாரம்பரியப் பழக்கங்களை ஒட்டியமைந்த இதன் சிறப்பைக் காண இன்றளவும் என் மனம் ஏங்கிக்கொண்டுள்ளது.
சீன வானொலியைக் நான் தொடர்ச்சியாக கேட்பதும், அஞ்சல் அனுப்புவதும் என்று தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டது 2004ம் ஆண்டிலிருந்துதான். 2004ல் ஏரிக்கரையில் என்ற ஒரு சிறு சோகமான கதையைப் படித்தது என் மனதில் இன்னும் பசுமரத்தாணி பதிந்தது போலஅதன் எச்சம் ஒட்டியே இருக்கிறது.
என்னை சீன வானொலித் தமிழ் பிரிவில் என்னை நானே பிணைத்துக்கொண்டேன். அதன் சுவாரசியச் செய்திகள் அவர்களின் பண்பாடு குறித்த ஆர்வம் என்னை மேலும் தீவிரமாக ஈடுபாடு கொள்ள வைத்தது. தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகள், பொது அறிவுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றேன். தொலைபேசியின் ஊடாக அப்போதைய சீனவானொலி தமிழ் பிரிவின் தலைவர் திருமதி.கலையரசி அவர்கள் என்னைப் பலமுறை தொடர்புகொண்டு என் கருத்துக்களை ஒலிபரப்பினார்கள்.
இன்பப் பயணம்,பண்பாடும் கதையும்,சமூக வாழ்வு, சமூக வாழ்வு, சீன தேசிய இன குடும்பம், நல வாழ்வுப் பாதுகாப்பு, விளையாட்டுச் செய்திகள் என்று இதன் சுவையான தகவல்களை இரசித்தே வந்துள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன் என்னைக் கவர்ந்த செய்தி ஒன்றையும் இங்கே தருகிறேன்.
“மிக நீண்ட நூடுல்ஸ்”
“உலகின் மிகப்பெரிய தோசை, கேக், சாக்லேட் என்பது போல உலகில் மிக நீண்ட நூடுல்ஸும் சேர்ந்துள்ளது என்ற செய்திதான் அது. நூடுல்ஸ் என்றாலே சீனாதானே. ஒரே ஒரு கிலோ மாவைக் கொண்டு 2853 கிமீட்டர் நீள நூடுல்ஸை தயாரித்து கின்னஸ் உலக சாதனையில் பதிவாகியுள்ளதை இணையதளத்தில் வெளியிட்ட செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் லி என்ஹாய் எனும் ஒரு சீனர். நூடுல்ஸ் தயாரிப்பதையே ஒரு வித்தைபோல் மாவை சுழற்றி வீசி அசத்தும் லி என்ஹாய் ஒரு சமையற்கலை வல்லுனராம். ஒரு கிலோ மாவைக்கொண்டு 2852 கிலோமீட்டர் நீள நூடுல்ஸ் செய்கிறார் என்றால் நிச்சயம் வல்லுனராகத்தானே இருக்க முடியும். 2852 கி.மீ. நூடுல்சு என்றால் அதன் நீளத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன். 2852 கி.மீ. என்பது கன்னியாகுமரியிலிருந்து புது டெல்லிவரை (2865கி.மீ) உள்ள தூரம்! சாலை வழியாகச் சென்றால் சுமார் 42 மணி நேரம் செல்ல வேண்டிய தூரம்! ஏ! அப்பா!?
என் சேமிப்புக் கிடங்கிலிருந்து இதோ நீங்கள் பார்த்து இரசிக்க அந்தப் படம் இதோ…..
2006ம் ஆண்டு அமெரிக்க சீன தமிழ் வானொலிநேயர் மன்றம் துவங்கினேன். தமிழகத்திலிருந்து என்னோடு பலர் தொடர்புகொண்டனர். நான் சீனத் தமிழ் வானொலி நேயர் மன்றத்துக்காக உருவாக்கிய வலைப்பூக்களைப் பார்த்த பேளுக்குறிச்சி நேயர் செந்தில் அவர்களுடைய நேயர் மன்றத்துக்காக வலைப் பக்கங்களை உருவாக்கித் தர இயலுமா என்றார். அவருக்காக அவருடைய நேயர் மன்றத்துக்கு உருவாக்கிகொடுத்தேன்.
வலைப்பூக்கள்…..
சீனத் தமிழ் வானொலி அமெரிக்க நேயர் மன்றத்துக்காக நான் உருவாக்கிய வலைப்பூக்களும் நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் மதுரை நேயர்
மன்றங்களுக்காக 2006-07களில் உருவாக்கிய வலைப்பூ முகவரிகள்:-
http://critamilusa.blogspot.
http://critamilcontest.
http://
http://namakalcri.blogspot.
http://tamilcriusa.blogspot.
நான் தமிழகம் சென்றிருந்தபோது நாமக்கல் செல்ல நேர்ந்தது. அப்போது அதுவரைநேரில் பார்த்திராத பேளுக்குறிச்சி செந்தில் மற்றும் சேந்தமங்கலம் இரவிச்சந்திரன் ஆகியோரைப் பார்க்கும் ஆவல் என்னுள் எழுந்தது. தொலைபேசியில் நான் தகவல் சொன்னபோது செந்தில் உற்சாகமாகிவிட்டார். ஏதோ நீண்டகாலம் பார்க்காத உறவினரைப் பார்ப்பதுபோல வரவேற்று என்னை சேந்தமங்கலம் இரவிச்சந்திரன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு எனக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சீனத் தமிழ் வானொலி நேயர் மன்ற நேயர்கள் அலுவலகம் முழுக்க நிறைந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி தேனீர் விருந்து கொடுத்து, எனக்கு அன்போடு நினைவுப் பரிசு எல்லாம் வழங்கிக் கெளரவித்ததை எண்ணிப் பார்க்கிறேன். சேந்தமங்கலம் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் அங்கேயே என்னை சீனத் தமிழ் வானொலிக்காக என்னை நேர்காணல் செய்யத் துவங்கிவிட்டார்.இந்த உறவுகள் எல்லாம் எனக்கு நட்பாக எப்படிக் கிடைத்தார்கள்? ஏதோ ஒரு நீண்ட பந்தம் இருப்பது போல தமிழக நேயர்மன்ற தலைவர் வளவனூர் செல்வம்,பாண்டிச்சேரியிலிருந்து பாலகுமார், முத்துசிவக்குமரன்….இன்னும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். சரி இதாவது நான் சார்ந்துள்ள தாய்த் தமிழகம்! இன்னொரு நட்புறவுச் செய்தியையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அரிய பொக்கிசம்….
2010ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த என் இனிய நண்பரும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தன் குடும்பத்தோடு சீனப் பயணம் மேற்கொண்டிருந்தார். சீனாவில் பெய்ஜிங்கில் இருந்தபோது என்னிடம் பேசியபோது தமிழ் தெரிந்த முகங்கள் இங்கு இல்லையே என்று தன் மன ஆதங்கத்தைத் தெரிவித்தார். அப்போதைய தலைவர் தி.கலையரசி அவர்களைத் தொடர்பு கொண்டு எனது நண்பரின் வருகை குறித்து தெரிவித்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டேன். நண்பரின் தொடர்பு எண்ணில் தி.கலையரசி அவர்கள் தொடர்புகொண்டு பேசியபோது நண்பருக்கு வியப்புத் தாளவில்லை.
தமிழ் நாட்டிலிருந்து சீனாவுக்கு வந்து தலைமுறை தலைமுறையாக வசிப்பவர்கள் கொஞ்சம் மழலைத் தமிழ் போல பேசுகிறார்கள் போல என்று நண்பர் நினைத்துவிட்டார்.
ஆனால் நண்பர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று தி.கலையரசி அவர்கள் சந்தித்தபோது நண்பருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சீனர்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுவார்களா என்று. அதன் பின் கலையரசி அவர்கள் சீன தமிழ் வானொலி அலுவலகம் அழைத்துப் போய் அவர்களை பேட்டி எல்லாம் எடுத்து ஒலிபரப்பியதையும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் பேசியபோது அவரால் நம்ப முடியாமல் திகைத்துப்போனதாக தமிழகம் திரும்பிய பிறகு குறிப்பிட்டார். இவ்வளவு சிறப்பாக பணிபுரியும் அவர்கள் தங்கள் பெயர்களையும் அழகு தமிழ் பெயர்களாக தேர்வு செய்து தாங்களே சூட்டிக்கொண்டு பணி புரிவது வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாதது என்று வியந்தும் மகிழ்ந்தும் பேசினார். “சீனவானொலித் தமிழ்ப் பணியாளர்கள் தமிழகம் வந்தால் தவறாமல் எனக்குத் தகவல் தாருங்கள். சிறப்பாக வரவேற்க வேண்டும்”,என்று மிகுந்த உணர்ச்சி வயப்பட்டுக் கூறினார். இந்த நட்புறவு எனக்குக் கிடைத்த அரிய பொக்கிசமாகவே இன்றளவும் கருதுகிறேன்.
செம்மொழி மாநாட்டில்….
கோவை செம்மொழி மாநாட்டிற்கு அப்போதைய மாநாட்டுச் செயலாளரும் தஞ்சை பல்கலைக் கழக துணைவேந்தருமான முனைவர்.இராசேந்திரன் அவர்களை, நான் அமெரிக்காவிலிருந்து அழைத்து தி. கலையரசி அவர்களைப் பங்கேற்கச் செய்யும்படி கேட்டேன்.
அவரும் அதற்கு ஆவன செய்து தி.கலையரசி அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள் என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். இதைச் சொல்லும்போது நான் மட்டுமல்ல, நேயர்மன்ற நேயர்கள் இந்த வானொலியுடன் ஒரு குடும்ப உறவுபோல நட்பாக ஒருவருக்கொருவர் ஈடுபாட்டுடன் மிளிர்வதை பிறர் அறிந்துகொள்வார்கள்.
சீன உணவரங்கம் நிகழ்ச்சியை தற்போது கலையரசி அவர்களும் தமிழன்பன் அவர்களும் இணைந்து வழங்கிவருகின்றனர்.
தமிழன்பன் அவர்களின் கணீர் குரலொலி நம்மை வசீகரப்படுத்தும் விதமாக இருக்கும். சீனத் தமிழ் வானொலியில் பணிபுரியும்
ஒரே தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழன்பன் |
அறிவியல் அற்புதங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து முன்னேறிவருகிறது. நேற்று ஒரு கண்டு பிடிப்பு செய்யப்பட்ட ஈரம் உலர்ந்து போகும் முன் இன்றைக்கு நேற்றைவிட புதிதான கண்டுபிடிப்பு மலர்கிறது. அதன் வாசம் எல்லோரின் சுவாசங்களுக்கும் சென்று சேர்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு சீன வானொலிச் செயற்பாட்டுக்கும் இன்றையச் செயற்பாட்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியும்.
கூகுள் ப்ளஸ், டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவுச் செய்து, இணைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு இணையத்தில் உடனடியாக பரிமாற்றம் செய்ய முயலப்போவதாக சீனவானொலித் தமிழ்ப் பிரிவின் இளைய பட்டாளம் அறிவித்துள்ளது. இதை இணையதளத்தின் அடுத்த கட்ட நகர்வாக நான் பார்க்கிறேன். சீன வானொலித் தமிழ் பிரிவிற்கு என்னாலியன்ற முழு ஒத்துழைப்பையும் நல்குவேன் என்று இந்தப் பொன்விழா ஆண்டில் உரத்துச் சொல்கிறேன்.
வாருங்கள் தோழர்களே, தோழியர்களே சீன வானொலித் தமிழ்த் தேர் வடம் பிடித்து இழுப்போம்! வானமே எல்லையென்றாலும் அதையும் தாண்டி வரலாறு படைப்போம் வாரீர்! வாரீர்!!
சீனத் தமிழ் வானொலியை நீங்களும் கேட்டு இரசித்து வானொலி நடாத்தும் போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகள்
பெற இங்கே சொடுக்குங்கள்:- http://tamil.cri.cn/
-ஆல்பர்ட், விஸ்கான்சின்,அமெரிக்கா.
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22
- சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா
- கவிதாவின் கவிதைகள்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி
- எதிர்பாராதது
- காலம் கடத்தல்
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4
- சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- தாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !
- நீங்காத நினைவுகள் – 5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12
- கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்
- விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்
- சூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)
- நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 9.அறிவால் உலகை வியக்க வைத்த ஏழை….
- வேர் மறந்த தளிர்கள் 4-5
- அக்னிப்பிரவேசம்-36