நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்

This entry is part 18 of 21 in the series 2 ஜூன் 2013
salim-mama2

கவிஞர் நாகூர் சலீம் 01-06-2013 அன்று மரணமடைந்தார்..வண்ணக் களஞ்சியப் புலவர்அவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. , இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா காயல் ஏ.ஆர்.ஷேக்முகமது ,இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை. கவிஞர் நாகூர் சலீம் பாடல்கள் 500 இசைத்தட்டுகளாகவும், 100க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர் இவர். எழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமியின் தாய் மாமா . இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், கதை, வசனம், நாடகங்கள், கவிதைகள் படைத்தவர் . இவர் தமிழக அரசின் கலை மாமணி பட்டம் பெற்றவர்.

இஸ்லாமிய மக்கள் மட்டுமல்ல அனைத்து சமய மக்களும் ரசித்து உணரும் விதத்தில் தனது எளிமையான பாடல்வரிகளை எழுதியவர். உலகம் அறிந்த இசைமுரசு நாகூர் இ.எம் .ஹனிபாவின் குரல் நாகூர் சலீமின் பாடல்களுக்கு மெருகூட்டியது.
துவக்க காலத்தில் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா உடன் தெவிட்டாத தேன்குரலில் பாடிய ராணி யும் இணைந்து அழியாத கானங்களை தமிழுக்கு தந்துள்ளனர்.

தீனோரே நியாயமா மாறலாமா/வாழ வாழ நல்ல வழிகளுண்டு,/திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன.. என்பது போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம்.(நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து பாடிய ராணி இப்போது இருக்கிறாரா குறிப்பிட்டகாலத்திற்கு பிறகு அவர் ஏன் பாடல்களைப் பாடவில்லை..அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி தெரிந்தால் நண்பர்கள் பதிவிடுங்கள்)
இன்று வந்து நாளை போகும் நிலையிலே நிலையிலே
என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே உலகிலே…
என வாழ்வின் மீதான தீராத கேள்விகளை எழுப்பியவர்

தமிழக முஸ்லிம்களுக்கிடையில் புத்துணர்ச்சி ஊட்டிய ஒரு நீள்வகைப்பாடலையும் நாகூர் சலீம் எழுதியுள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளனின் கவனத்தோடு அழகியல் மாறாமல் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.
சூபி பண்பாடு,தர்காக்களின் வரலாற்றை ஞாபகப் படுத்திய காயல் ஏ ஆர் ஷேக் முஹம்மது பாடிய அப்பாடல் மிகவும் பிரபல மடைந்த பாடலாகும்.
அவுலியாக்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்களை
ஆங்காங்கே ஏற்படுத்தி
அனைத்துலக மக்களுக்கும் நல்ல வழி காட்டி வைத்த
அல்லா ஒருவனுக்கே எல்லா புகழும்
0
தமிழகத்து தர்காக்களை பார்த்துவருவோம்
தூய வழி காட்டச் சொல்லி கேட்டு வருவோம்
இறை வணக்கம் புரிபவர்க்கு எளிதில் நடக்கும்
இரசூல் நபி நாயகத்தின் ஆசி கிடைக்கும்.

நாகூர் சலீம் சுதந்திரக் கதிர் ,பிரார்த்தனைப் பூக்கள், காதில் விழுந்த கானங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதி உள்ளார்.இவர் எழுதிய “’காதில் விழுந்த கானங்கள்’ என்கிற இந்தப் புத்தகம் முக்கியமான 118 பாடல்கள் மட்டும் கொண்டது. இசைத்தட்டு, சிடி, கேஸ்ஸட்டுகளில் வெளிவந்த பாடல்கள். இ.எம்.ஹனிபா, காயல் ஷேக் முஹம்மது, திருச்சி யூசுப், ராமநாதபுரம் வாஹித், நெல்லை உஸ்மான், ஷாஹுல்ஹமிது, ஜெய்னுலாப்தீன் பைஜி, அத்தாஅலி ஆஜாத், குத்தூஸ், சரளா, வாணி ஜெயராம், ஸ்வர்ணலதா மற்றும் பலர் பாடிய பாடல்கள் இதில் தொகுக்கப் பட்டுள்ளன. கலைஞர் கருணாநிதியின் அணிந்துரை, ’கவிஞர் சலீமின் பாடல்கள் (பக்கவாத்திய) ஓசைகளையும் விஞ்சி போதங்களின் நாதங்களாக நின்று நிலவுவது தனிச்சிறப்பு’ எனும் ’சிராஜுல் மில்லத்’ மர்ஹூம் அப்துஸ்ஸமது அவர்களின் மதிப்புரையும் உண்டு.
கவிஞர் சலீம் எழுதிய “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி” என்ற பாடலைப் பாராட்டி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ஆர் ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கியிருக்கிறார். அந்தப் பணம் கூட இவரின் கைக்கு வந்து சேரவில்லை,இடையில் சுருட்டப்பட்டு விட்டது.கலைஞர்,எம்.ஜி.ஆர் என அரசியல் நிலைபாடுகளில் சார்பு,எதிர்ப்பு அரசியலை பாடலாக மாற்றியதும் உண்டு.
சங்கீதவித்வான்கள் பாடுவது மாதிரி – தர்ஹா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களிடம் ட்யூன் போடுவதற்காக – சலீம் எழுதிவைத்த நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இசைமுரசுவால் எடுத்துச் செல்லப்பட்ட விமர்சனமும் வெளியாகி உள்ளது.

நாகூர் சலீம் இறையியல் தளத்தோடு நின்றுவிடாமல் பாடல்களை முஸ்லிம்களின் வாழ்வியல் தளத்திற்கு கைபிடித்து அழைத்துவந்தவர். தாயக மண்ணை இழந்து மனைவி,பிள்ளைகளைப் பிரிந்து புலம் பெயர்ந்த அகதி வாழ்வாக வளைகுடா அரபு நாடுகளில் நம் சகோதரர்கள் தஞ்சம் புகுந்த நிலையில் வாழ்கிறார்கள். கணவர்களை பிரிந்து வாடும்அந்த சகோதரிகளின் பிரிவுத்துயரை தனது பாடல் வரிகளில் கண்ணீராய் நனைத்து வைத்தவர் கவிஞர் நாகூர் சலீம். இப்பாடல் வரிகளை காயல் ஏ.ஆர். ஷேக் முகமதுவுடன் இணைந்து பாடியவர் திருமதி ஜெயபாரதி.

கப்பலுக்கு போன மச்சான்
கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
எப்பத்தான் வருவீங்க எதிர் பார்க்கிறேன் – நான்
இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

கண்ணுக்குள்ளே வாழ்பவளே
கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லா விரைவில் வருவேன் – நான்
இஷ்டம் போல நினைச்சதெல்லாம் தருவேன்..

Series Navigationசூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 9.அறிவால் உல​கை வியக்க ​வைத்த ஏ​ழை….
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

5 Comments

 1. Avatar
  கவிஞர் இராய செல்லப்பா says:

  நான் இராணிப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவன். மேல்விஷாரம் அப்துல் ஹக்கீமில் துவக்கப்பட்ட பி.எஸ்சி. முதல் ‘பேட்ச்’ என்னுடையது. நாகூர் ஹனீஃபாவின் படல்களைக் கேட்காத நாட்களே இல்லை. அவருடைய மனதை உருக்கும் வெண்கலக்குரலில் காலம் கடந்து நிற்கும் கருத்துள்ள பாடல்களை எழுதியது யார் என்று தெரிந்துகொள்ளாமல் போனேனே என்று வெட்கப்படுகிறேன். அமரர் நாகூர் சலீம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நான் மறவாமல் இருக்கும் அவருடைய இரண்டு பாடல்களை நீங்களும் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது: (1) தீனோரே நியாயமா மாறலாமா, (2) திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன…… நியூஜெர்ஸியிலிருந்து கவிஞர் இராய செல்லப்பா.

 2. Avatar
  தேமொழி says:

  ///நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து பாடிய ராணி இப்போது இருக்கிறாரா///

  இவ்வாறு எழுதுவதைத் தவிர்த்து, நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து பாடிய ராணி இப்பொழுது எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்று எழுதுவது உகந்ததாக இருக்கும் (தவறாகக் கொள்ள வேண்டாம்).

  அமரரான கவிஞரைப் பற்றிய கட்டுரை நன்று, கவிஞர் நாகூர் சலீம் புகழும் கவிதைகளும் என்றும் நிலைத்திருக்க விழைகிறேன்.

  அன்புடன்
  ….. தேமொழி

 3. Avatar
  Dr.G.Johnson says:

  மறைந்த கவிஞர் நாகூர் சலீம் அவர்களுக்கு ஏற்ற இரங்கலை அழகுபட எழுதியுள்ள ஹெச். ஜி. ரசூல் அவர்களுக்கு நன்றி. நாகூர் சலீம் மறைந்தாலும் அவரின் பாடல்களின் மூலமாக வாழ்ந்து கொண்டிருப்பார். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . டாக்டர் ஜி.ஜான்சன்.

 4. Avatar
  Bala says:

  தலைப்புக்கு என்னதான் பொருள்? நாகூரின் தாகூர் என்பதில் இரண்டே சொற்கள்தாம் உள்ளன. இதில் அதிகபட்ச சொற்கள் எவை?

 5. Avatar
  punaipeyaril says:

  நாகூரின் தாஹூர், எதுகை மோனை நல்லத் தான் இருக்கு… அதற்காக தாஹூரை இப்படி போட்டுத் தாக்க வேண்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *