அக்னிப்பிரவேசம்-36

This entry is part 21 of 21 in the series 2 ஜூன் 2013

yandamuri veerendranath

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

“எனக்காக்தானே இந்த எதிர்பார்ப்பு?”

வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்தவாறே இருந்த சாஹிதி, திடுக்கிட்டுப் பார்த்தாள். பரமஹம்சா முறுவலுடன் நெருங்கி வந்தான். சாஹிதி பயந்துவிட்டாள்.

பாவனாவின் தூண்டுதல் பேரில் அவனுக்கு எதிர்பதமாய் இத்தனைக் காரியங்களையும் பண்ணினாள். ஆனால் அவனே எதிர்ப்பட்ட பொழுது வாயில் வார்த்தை வரவில்லை.

அவனே மேலும் பேசினான். “அனாவசியமாய் என்னோடு மோதிக்கொண்டு விட்டாய். இதையெல்லாம் உனக்குப் பின்னால் இருந்து கொண்டு அந்த பாவனாதான் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். ஆனால் உன்னுடைய கோபம் உண்மையான கோபம் இல்லை. என்மீது ஊடல் கோபம். அதானே?”

சாஹிதியின் இதழ்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. உள்ளே இருந்து ஆவேசம் பொங்கி எழும்பிக் கொண்டிருந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

“நீ உன் தாய் என்ன நினைப்பாளோ என்று யோசிப்பதாய் தோன்றுகிறது. நான் சொன்னால் நிர்மலா மறுக்க மாட்டாள். ஆனாலும் உனக்கு அந்தப் பயம் இருந்தால் ஒரு காரியம் பண்ணு. நாளைக்கே ஒரு வீட்டைப் பார்த்து வைக்கிறேன். நாளை மறுநாள் இரவில் சூட்கேஸ் எடுத்துக் கொண்டு போய்விடு. நான் அடிக்கடி வந்து சந்திக்கிறேன். இரண்டாம் பேருக்குத் தெரியாது. நிர்மலாவுக்கு மெதுவாய் சொல்லிக் கொள்ளலாம்.”

“சீ.. நீயும் ஒரு மனிதன்தானா? என் பெற்ற தாயுடன் குடும்பம் நடத்திக்கொண்டே என்னோடும் உறவு கொள்ள விரும்புகிறாயா?”

“சாஹிதி! நான் இந்த பூமியில் அவதாரம் எடுத்திருக்கும் கடவுள். உனக்குத் தெரியாதவை கூட எனக்குத் தெரியும். நீ எனக்காகவே பிறந்து இருக்கிறாய். அன்றைக்கு சீதை ஸ்ரீ ராமனுக்காக ஒரு இடத்தில் பிறந்து இன்னொரு இடத்தில் வளர்ந்தாற்போல் யாருடைய வயிற்றிலேயோ பிறந்த நீ இங்கே நிர்மலாவின் வீட்டில் வளர்ந்து வருகிறாய். அவ்வளவுதானே தவிர நீ நிர்மலாவின் மகள் இல்லை. நாமிருவரும் தெய்வப் பிறவிகள். நான் ஸ்ரீ மகாவிஷ்ணு, நீ மகாலக்ஷ்மி.”

சாஹிதிக்குப் புரியவில்லை. கண்கள் அகல விரிய பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் சொன்னதை ஏற்றுக் கொள்வதற்கோ புரிந்து கொள்வதற்கோ மனம் ஒத்துழைக்கவில்லை.

அவன் மேலும் சொன்னான். “பிரம்மா தன் மகளான சரஸ்வதியை மணம் செய்து கொண்டார். அது போலவே இதெல்லாம் நான் தோற்றுவித்த மாயைதான். உன்னை அடைவதற்காக விதியின் உருவத்தில் இந்த வீட்டிற்கு உன்னை கொண்டு வந்து சேர்த்தேன். இனி நிர்மலாவைப் பற்றி நீ வருத்தப்பட வேண்டியதில்லை. அவள் உன் தாய் இல்லை.”

“பொய்!” கத்தினாள்.

“இல்லை. உண்மை.” என்றான் அவன். “பொய் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை. உன்னோடு கூட அதே சமயத்தில் இன்னொரு குழந்தையும் பிறந்தது. தெய்வத்தின் உத்தரவு, அதாவது என்னுடைய ஆணையின் படி அந்தக் குழந்தைகளை மாற்றிவிட்டாள் ஒரு நர்ஸ். அந்த நர்ஸின் மகன் பாஸ்கர் ராமமூர்த்தி என்பவன் தற்சமயம் ஜெயிலில் இருக்கிறான். குடிசையில் வசிக்க வேண்டிய நீ ராஜபவனத்திற்கு வந்தாய் ஆனாலும் இதெல்லாம் யாருக்குமே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சொத்தை எல்லாம் உன் கணவன் பெயரில் எழுதி வைத்து அதற்குக் கார்டியனாய் என்னை நியமித்து இருக்கிறாள் நிர்மலா. கார்டியன் மற்றும் கணவன் நானே ஆவேன்.

என் காதல் சாம்ராஜ்ஜியதிற்குள் காலடி எடுத்து வைத்து, பயமில்லாமல் சகல சௌக்கியங்களையும் அனுபவி. அந்த பாஸ்கர் ராமமூர்த்தி என்பவன் முதலில் என்னை சந்தித்தான். அதற்குப் பிறகு உங்க அம்மாவைச் சந்தித்து இருக்கிறான் போலும். உங்க அம்மா ஒரு பைத்தியம். நான் சொன்னால் தவிர எதையும் நம்பமாட்டாள். சொத்து உன் கையைத் தாண்டி வெளியில் போய்விடக் கூடாது என்று உங்க அம்மாவிடம் பொய் சொன்னேன். உன்னையும், என்னையும் சேர்த்து வைப்பதற்காகவே என்னைப் பொய் சொல்ல வைத்தார் கடவுள். அந்தக் கடவுளே இவ்வளவு நாளும் நிர்மலாவை நான் சொன்னதை கேட்கும்படியாக செய்யவைத்தார். இனியும் செய்ய வைப்பார். நிர்மாவிடம் எனக்கு இருப்பது நண்பனின் மனைவி என்ற கடமை. உன்னிடம் எனக்கு இருப்பது காதல். வேண்டுமானால் என் கண்களுக்குள் உற்றுப் பார்” என்று திரும்பினான்.

எப்பொழுது போனாளோ தெரியாது, சாஹிதி அந்த இடத்தை விட்டு உள்ளே போய் விட்டிருந்தாள். அந்த இடத்தில் சிலையாய் நின்று கொண்டிருந்தாள் நிர்மலா.

******

சூறாவளியாய் வீட்டிற்குள் நுழைந்தாள் சாஹிதி. நடுங்கும் விரல்களுடன் நம்பரை டயல் செய்தாள். “ஹலோ! ஹோம் மினிஸ்டர்ஸ் ஆபீஸ்.”

“எஸ்”

“மேடம் பாவனாவிடம் பேச வேண்டும் அர்ஜென்ட்!”

“நீங்க யாரு மேடம்?”

“சாஹிதி என்று சொல்லுங்கள்” என்றாள். வெளியே தோட்டத்தில் இருந்த பரமஹம்சாவையோ, தாயையோ பொருட்படுத்தவில்லை. அவள் மார்பு வேகமாய் படபடத்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிஷத்திற்குப் பிறகு பாவனா லைனுக்கு வந்தாள்.

“என்ன? அத்தனை டென்ஷனோடு இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“பாஸ்கர் ராமமூர்த்தி என்ற ஒரு ஆள் ஜெயிலில் இருக்கிறான். அவன் எங்கே இருக்கிறான் என்று உங்க செல்வாக்கை பயன்படுத்தி அவசரமாய் கண்டுபிடிக்கணும்.” அவசர அவசரமாய் பேசினாள்.

“எதுக்கு?”

“என் பிறப்பின் ரகசியம் ஒன்று அவனுக்குத் தெரியும். எல்லா விஷயங்களையும் நேரில் வந்து சொல்கிறேன். முதலில் இதைக் கண்டுபிடியுங்கள்.”

“பாஸ்கர் ராமமூர்த்தி எங்கே இருக்கிறான் என்று தேட வேண்டிய அவசியம் இல்லை. எனக்குத் தெரியும்.”

“எப்படி?”

“அவன் என் மாஜி கணவன் என்பதால்.”

“மைகாட்!”

“இப்போ சொல்லு. விஷயம் என்ன?”

*******

முன்பின் அறிவிப்பு கொடுக்காமல் ஜெயிலுக்குள் வந்து கொண்டிருக்கும் ஹோம் மினிஸ்டரை பார்த்து, வார்டன் கலவரமடைந்தார்.

“பாஸ்கர் ராமமூர்த்தி எந்த செல்?” மற்ற எந்த விவரமும் கேட்காமல் நேராகக் கேட்டாள்.

“கூப்பிடச் சொல்றீங்களா மேடம்?”

‘தேவையில்லை. நாங்களே போகிறோம். தனிப்பட்ட முறையில் பேசணும்.”

“சரி மேடம்.”

அவள் போனபோது ராமமூர்த்தி செல்லில் சுவற்றில் சாய்ந்த நிலையில் உட்கார்ந்து ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்துவிட்டுச் சட்டென்று எழுந்து நின்றான். அவள் உள்ளே நுழைந்தாள்.

“நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்.”

“ஏன் அப்படி நினைக்கிறாய்?”

“நான் உன் கணவன். நீ ஹோம் மினிஸ்டர் பதவியில் இருக்கிறாய். என்னை வெளியே கொண்டு வரத்தானே வந்திருக்கிறாய்?”

“ரொம்பக் குறைவாக எடைபோட்டு விட்டாய். என்னை கிரோசின் ஊற்றி கொளுத்திய குற்றத்திற்கும் சேர்த்து எப்படி தண்டனை தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

ராமமூர்த்தியின் முகம் சிவந்தது. “பின்னே எதுக்கு வந்தாய்?” என்று கேட்டான்.

“உன் தாய் ஆதிலக்ஷ்மி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குழந்தைகளை மாற்றினாள் இல்லையா?”

“ஆமாம். அந்த விஷயம் உனக்கு யார் சொன்னது? பரமஹம்சாவா? நிர்மலாவா?”

“யார் சொன்னால் என்ன? சாஹிதியின் உண்மையான தாய் யார்? நிர்மலாவின் உண்மையான மகள் எங்கே இருக்கிறாள்?”

“எதுக்கு?”

“எனக்கு வேண்டும்.”

“நான் சொல்ல மாட்டேன்.”

“ஏன்? எதற்காக சொல்ல மாட்டாய்?”

“அதனால் எனக்கு என்ன லாபம்?”

“இவ்வளவு நடந்தும் உனக்கு இன்னுமா புத்தி வரவில்லை?” என்றவள் “சாஹிதி!” என்று அழைத்தாள். சாஹிதி உள்ளே வந்தாள். “இந்தப் பெண்ணைப் பார். இவளைத்தான் உன் தாய் நிர்மலாவின் பக்கத்தில் படுக்க வைத்திருக்கிறாள். தன்னுடைய உண்மையான தாய் தந்தை யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடிக்கிறாள். மனிதநேயத்திற்கு கட்டுப்பட்டாவது இவளுடைய பெற்றோர் யார் என்று சொல்ல வேண்டிய பொறுப்பு உன் மீது இருக்கிறது. நீ சொல்ல மறுத்தால் எப்படி சொல்ல வைக்கணும் என்று எனக்குத் தெரியும்.”

“உன்னால் எனக்கு எந்த உதவியும் செய்ய முடியாதா பாவனா?” தீனமாய் கேட்டான்.

பாவனாவுக்கு அருவருப்பு ஏற்பட்டது. கோபமும் வந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு “சரி, செய்கிறேன். சொல்லு” என்றாள்.”

“பிராமிஸ்?”

“பிராமிஸ்!”

‘சாஹிதி விஸ்வத்தின் மகள்” என்றான். பாவனாவுக்குச் சட்டென்று புரியவில்லை. ஏதோ மேகத்திரை விலகினாற்போன்ற உணர்வு.

“அப்படி என்றால்.. அப்படி என்றால்..” இடையிலேயே நிறுத்திக் கொண்டு விட்டாள்.

“இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பதிமூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் என் தாய் மாற்றிய குழந்தைகள் நீங்கள் இருவரும்தான். சந்திரன், நிர்மலாவின் குழந்தை நீ தான்.”

“நோ!” கத்திவிட்டாள் பாவனா. அவளுக்குத் தன் தாய் நினைவுக்கு வந்தாள். விஸ்வம் நினைவுக்கு வந்தார். தங்கைகள் நினைவுக்கு வந்தார்கள். தன் வீடு, தோட்டம் எல்லாம் நினைவுக்கு வந்தன. எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றையடுத்து இன்னொன்றாய அவள் நினைவுத் திரையில் மளமளவென்று வேகமாய் சுழன்றன.

சாஹிதியின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது. ஆனால் அதில் வருத்தத்தைவிட குழப்பம்தான் மிகுதியாய் இருந்தது. நிர்மலா தன்னுடைய தாய் இல்லை என்று நினைத்த போது…

ஆச்சரியம்! வருத்தமாக இருக்கவில்லை.

தாயின்பால் தன்னுடைய உறவு இவ்வளவு பற்று இல்லாததா? நினைத்தாலே அவளுக்கு வியப்பாக இருந்தது. மனதில் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம் சந்தோஷம். அது சுயேச்சைக்கு சம்பந்தப்பட்டது. தனக்கு இனி எந்த பந்தங்களும் இல்லை. தன் தாய் தந்தை யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ஏற்படவில்லை. வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. கஞ்சாவை புகைக்க வேண்டும் போல் இருந்தது.

பாவனா ராமூர்த்தியை நோக்கித் திரும்பினாள். “நீ சொன்னது எல்லாம் உண்மைதானா?” என்று கேட்டாள்.

“உண்மைதான் சொல்கிறேன். உங்க இரண்டு பேரில் ஒருத்தருக்கு தொடையில் மச்சம் இருக்கும். மச்சம் இல்லாத குழந்தையின் துடையில் அதே இடத்தில் என் அம்மா ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறாள். என் தாய் இறக்கும் போது என்னிடம் சொன்ன விஷயம் இது. அன்று முதல் சந்திரனின் மகளை தேடத் தொடங்கினேன். விஸ்வத்தின் விலாசம் ஆஸ்பத்திரியில் பழைய ரிக்கார்டுகளில் கிடைத்தது. அந்த விலாசத்தைத் தேடிக் கொண்டு வந்த போதுதான் நீ தென்பட்டாய்.”

“உண்மை விஷயத்தை மறைத்து வைத்து, பெரிய சீர்திருத்த வாதியைப் போல் என்னை மணந்தாய். லட்சக்கணக்கான் சொத்திற்கு அதிபதியாகி விடலாம் என்று நினைத்தாய் இல்லையா?” அவனை அருவருப்புடன் பார்த்துக் கொண்டே கேட்டாள் பாவனா.

வரதட்சணையை எதிர்பார்க்காமல் தன்னை மணந்து கொண்டான் என்று அவளுக்கு மனதில் அவன் பால் இதுவரை கொச்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த மதிப்பு கூட இப்போது போய் விட்டது.

ராமமூர்த்தி பதில் பேசவில்லை. பாவனா சாஹிதியின் பக்கம் பார்த்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்தால் கவலையாய் இருந்தது. இரத்தம் முழுவதும் வற்றிவிட்டாற்போல் முகம் வெளிறி இருந்தது.

“வா, போகலாம்” என்றாள்.

இனி அங்கே வேலை எதுவும் இல்லை என்பதுபோல், தூக்கத்தில் நடப்பவள் போல் சாஹிதி பின்னால் திரும்பினாள்.

உள்ளே இருந்து அவன் சொன்னான். “பாவானா! என்னுடைய தண்டனை குறையும் வழியைச் சொல்கிறேன் என்று சொன்னாயே?”

அவள் நின்று மெதுவாய் சொன்னாள். “இந்த கற்பழிப்பு கேசில் உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று நாளைக்குக் கோர்ட்டில் சொல்லு ராமமூர்த்தி. உன்னுடைய குறையைப் பற்றி மனைவியாய் நானும் சர்டிபிகேட் தருகிறேன். தண்டனை பெரும்பாலும் குறைந்து விடும். அது ஒன்றுதான் நான் உனக்கு செய்யக் கூடிய உதவி.”

“ஆனால் ஏன் விஷயம் எல்லோருக்கும் தெரிந்து போய் விடுமே?”

“உனக்கு இரண்டே வழிகள். ஆண்மகனைப் போல் தண்டனையை அனுபவிப்பது, ஆண்மை இல்லையென்று நிரூபித்துவிட்டு வெளியே வருவது.”

“இரண்டில் எது தேவலை என்கிறாய்?”

“வசந்தி இல்லாமல் இதுவரையில் நீ வாழ்க்கையில் எந்த முடிவையும் சொந்தமாக எடுத்துக் கொண்டதில்லை. இதை ஒன்றாவது எடுத்துக் கொள்.” சாஹிதியுடன் சேர்ந்து வெளியே நடந்தாள் அவள்.

“என்னுடைய தாய் தந்தை யார்?” வெளியே வந்ததும் கேட்டாள் சாஹிதி.

“அப்பாவின் பெயர் விஸ்வம். ஸ்கூல் வைஸ் ப்ரின்ஸிபாலாய் ஒய்வு பெற்றார். தாய் இறந்துவிட்டாள்.”

சாஹிதி அந்த வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஏதோ யோசனையில் சொன்னாள். “மனிதர்களில் ஜீன்ஸ் பாதிப்பு நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன். எங்க அப்பா, அதாவது உங்க அப்பா சந்திரன் ரொம்ப கெட்டிக்காரர். எல்லா பிசினெஸ் விஷயங்களையும் தன்னந்தனியாகவே பார்த்துக் கொள்வார். அந்தக் குணாதிசயம்தான் உங்களுக்கும் வந்திருக்கும் போலிருக்கு.”

பாவனா பதில் பேசவில்லை. சாஹிதி மேலும் சொன்னாள். “நீங்க போய்க் கொள்ளுங்கள்.. அம்மா எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்.”

“நீ?” ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“இனி அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன். அந்த வீடு, சொத்து, எல்ல்லாம் உங்களுடையதுதான்.”

“முட்டாள்தனமாய் பேசாதே. வா.”

“வரமாட்டேன்.”

பாவனா எரிச்சலும், கோபமும் கலந்த குரலுடன் “நீ என்ன பேசுகிறாய் சாஹிதி? நான் அவ்வளவு தூரம் பணத்தின் பால் மோகம் கொண்டவள் போல் தென்படுகிறேனா? எனக்கும் எந்தச் சொத்தும் தேவை இல்லை. நீயும், நானும், அம்மாவும் எல்லோரும் சேர்ந்தே இருக்கலாம். இதுகூட சொத்துக்காக நான் சொல்லவில்லை. பிரமஹம்சாவை இப்பொழுது எனக்கு வந்து சேர்ந்திருக்கும் புது ஹோதாவால் எதிர்ப்பதற்காகக் கேட்கிறேன்” என்றாள்.

“நான் எங்க அப்பாவையும், தம்பி தங்கைகளையும் பார்க்கணும்.” ஒரு முடிவுக்கு வந்தவளாய்ச் சொன்னாள் சாஹிதி.

‘எதுக்கு அவர்களுகெல்லாம் இந்த விஷயம் தெரியணும்?’ என்று சொல்லப் போன பாவனா அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். அவ்வாறு வேண்டாம் என்று சொல்வதற்கு அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒருக்கால் தன் தந்தை கூட தான் இல்லாமல் சாஹிதியைப் போன்றவள் மகளானதற்கு சந்தோஷப்படுவாரோ என்னவோ? அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை அவள் என்றோ இறந்துவிட்டாள். சாஹிதியின் பிரவேசத்தை அவள் ஏன் தடுக்க வேண்டும்? ‘சரி போ. ஆனால் உனக்காக நானும் அம்மாவும் இங்கே காத்துக் கொண்டு இருப்போம் என்பதை மட்டும் மறந்து விடாதே. நீ அவர்களை சந்தித்துவிட்டு உடனே திரும்பி வந்துவிடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தால் உன்னை அனுப்புகிறேன்” என்று கையை நீட்டினாள்.

‘சும்மா பாத்துவிட்டு வந்து விடுகிறேன். விஷயத்தைக் கூட அவர்களிடம் சொல்ல மாட்டேன். என்னைப் போன்ற மகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது.” சுய இரக்கத்துடன் சொன்னாள் சாஹிதி. அவளைப் புரிந்து கொண்டாற்போல் மௌனமாய் இருந்து விட்டாள் பாவனா.

“நான் அங்கே காரில் போகிறேன், இங்கிருந்து இப்படியே.” ஏதோ புரியாத வெறுப்புடன் சொன்னாள் சாஹிதி.

“உங்க அம்மாவிடம் கூட சொல்ல மாட்டாயா?”

‘எங்க அம்மா இல்லை. உங்க அம்மா.” காரில் ஏறிக் கொண்டே சொன்னாள். “உங்க அம்மா உனக்காகக் காத்துக் கொண்டு இருப்பாங்க. பரமஹம்சாவும் அங்கேதான் இருப்பான். அந்தக் கயவன் பண்ணிய அயோக்கியத்தனத்தை எல்லாம் அம்மா காதால் கேட்டாள்.”

*****

பரமஹம்சா நிர்மாவைப் பார்த்தான். லட்சம் ஓல்ட் ஷாக் அடித்தாற்போல் சிலையாய் நின்று விட்டாள் அவள். முகத்தில் இருந்த ரத்தமெல்லாம் வடிந்து விட்டாற்போல் வெளுத்து விட்டிருந்தது.

கடலில் அலையடுத்து அலையாய் வந்து கற்பாறையை மோதியது போல் உண்மை யடுத்து உண்மை தெரிய வந்து அவளை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தது. அவள் யோசிக்கவில்லை.

சலனமில்லாத அந்த நிலையிலேயே அவன் அவளை அனைத்துப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றான். தூக்கத்தில் நடப்பவளைப் போல் அவன் கூடவே போனாள் அவள். காரில் ஏற்றி உட்கார வைத்து ஸ்டார்ட் பண்ணினான்.

“கடவுள் ஆடும் சதுரங்கத்தில் நீங்கள் எல்லோரும் பகடைக் காய்கள். சம்பவங்கள் நிகழும் போது அதனை திறமையாக கையாளக் கூடியவன் நான். கிருஷ்ண பரமாத்மா குருக்ஷேத்ர சங்கிராமத்தின் போது தூது நடத்தியது போல் நான் இந்த விதமாய் நிகழ்வுகளை சமாளித்துக் கொண்டு போகிறேன். விதியின் கையில் பகடைக் காய்களைப் போல் உங்களை ஆட்டுவிப்பதற்காகவே கடவுளின் அம்சமாய் நான் பிறந்திருக்கிறேன். உன் மகள் முன்னால் என்னை அவ்வாறு பேச வைத்தது கடவுள்தான். நீ என்னைப் புரிந்து கொள்வாய். எனக்கு உன் வாழ்க்கையை நைவேத்தியம் செய்ததால் அவ்வாறு புரிந்து கொள்ளும் சக்தியை நானே உனக்கு தந்தேன்.”

அவன் கார் பிரதான சாலையில் நுழைந்தது.

எதிரே வந்த காரில் பாவனா இருந்தாள். அவள் இவர்களைப் பார்த்துவிட்டுக் காரைப் பின்னால் திருப்பச் சொன்னாள். மெய்க்காப்பாளர்களுடன் கூட வந்த அவள் கார், பின்னுக்குத் திரும்புவதற்குள்ளாகவே பரமஹம்சாவின் கார் ட்ராபிக்கில் கலந்து மாயமாகிவிட்டது.

பாவனாவின் மனம் தீங்கை எடை போட்டது. அவன் கார் எங்கே இருந்தாலும் சரி, கண்டிபிடிக்கச் சொல்லி உத்தரவிட்டாள். ஐந்து நிமிஷங்களுக்குப் பிறகு அவன் கார் குன்றின் மேல் இருந்த சிறிய முருகன் கோவிலுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதாக செய்தி வந்தது.

கோவில் பக்கமாய் அவன் அவளை அழைத்துக் கொண்டு போனபடி சொன்னான். “ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரம் முடிவடையும் முன் யாதவர்களுக்கு இடையே கலகம் ஏற்பட்டது. இராமர் தீய சகுனங்களைக் கண்டு தன் அவதாரம் முடிவடையப் போவதாய் உணர்ந்து கொண்டார். என் பேச்சை நீ கேட்டது கூட அதுபோலவே நடந்து விட்டது. உன் பிறவிப்பயன் முடிவடைந்து விட்டது நிர்மலா. இனி நீ போகலாம். எனக்காக மேல் உலகத்தில் காத்துக் கொண்டிரு. நானும் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரத்தில் வந்து விடுகிறேன்.”

அவளும் அவனும் குன்றின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார்கள். கீழே பள்ளத்தாக்கு போன்ற அதள பாதாளம்.

அவன் அவள் தோள் மீது கையை வைத்தான். “போ நிர்மலா.”

அதை வசீகரணம் என்பார்களா அல்லது ஹிப்னாடிசம் என்பார்களா தெரியாது. அவள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவளைப் போல் அவ்வளவு உயரத்திலிருந்து கீழே குதித்துவிட்டாள். சிறிய ஓசையுடன் கழுத்து எலும்பு உடைந்து, ரத்தம் பக்கத்தில் இருந்த கற்கள் மீது தெறித்தது. மக்கள் ஓட்டமாய் ஓடி வந்து கூடி விட்டார்கள். எல்லாம் நிமிட நாழிகைக்குள் நடந்து முடிந்து விட்டது.

அவன் படியிறங்கி கீழே வந்து சேருவதற்குள் பாவனா அங்கே வந்தாள். அவள் தொலைவிலிருந்தே நிர்மலா கீழே விழுந்ததைப் பார்த்தாள். கண்முன்னாலேயே அவ்வளவு பெரிய கொடுமை நிகழ்ந்ததை, தன் வாழ்க்கையில் எத்தனையோ திருப்பங்களை கண்டிருக்கும் பாவனா கூட இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டாள்.

கிழிந்த பட்டம் மரக்கிளையில் மாட்டிக்கொண்டு படபடப்பது போல் நிர்மாவின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. ‘அம்மா…அம்மா..” என்று எண்ணிக கொண்டாள் மனதிற்குள். நிர்மலாவும் அவளை அடையாளம் தெரிந்து கொண்டுவிட்டாள் போலும். அவள் வலதுகையைத் தூக்க முயன்றாள். பாவனா கண்ணீர் மல்கிய கண்களுடன் தாயைப் பார்த்தாள். அவளிடம் தன் உருவ ஒற்றுமை இருந்தது தெளிவாய் தெரிந்தது.

போலீசார் மக்களை தொலைவிற்குத் தள்ளிவிட்டு வளையமாய் நின்றார்கள். தாயின் தலையை மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள் பாவனா. பரமஹம்சா ஒருத்தன்தான் நின்று கொண்டிருந்தான் பக்கத்தில்.

நிர்மலா பேச முயன்று திரும்பவும் தோற்றுவிட்டாள். “நான்தான் அம்மா, உன்னுடைய மகள். அம்மா! ஒரு வார்த்தை சொல்லு போதும். உன் மரண வாக்குமூலத்தால் இந்த ராட்சசனைத் தூக்கு மேடைக்கு அனுப்பி வைக்கிறேன். இவன்தானே உன்னைத் தள்ளி விட்டான்? இந்தக் கயவன்தானே சொத்துக்காக உன் உயிரை பறித்தான்?”

நிர்மலா மெதுவாய்க் கண்களை நிமிர்த்தி பரமஹம்சாவைப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பாவனா அவ்விருவரையும் பார்த்தபடி இருந்தாள். அங்கு ஊசி விழுந்தாலும் கேட்கும்படியான நிசப்தம்.

நிர்மலா தன் சக்தியை எல்லாம் திரட்டிக்கொண்டு இரு கைகளையும் மேலே தூக்கினாள். கைகளைக் கூப்பி பரமஹ்ம்சாவை வணங்கினாள்.

அவள் தலை சாய்ந்துவிட்டது.

1987 ல் ஜோன்ஸ் என்பவன் தன் குட்டு வெளிப்பட்டு விடும் என்று தெரிந்ததும் போலீசார் வருவதற்குள் இறந்துப் போகச் சொல்லி ஆணையிட்டதுமே சுமார் ஐநூறு பக்தர்கள் மனைவி குழந்தைகளுடன் சைனேட் குடித்து இறந்துவிடார்களாம்.

எத்தனையோ மனைவியர்கள் வரதட்சணை கொடுமையால் இறக்கும் சமயத்தில் தம் கணவனுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு அவர்களை காப்பாற்றி இருக்கிறார்கள். எத்தனையோ மூடர்கள் புதையலுக்காக சொந்தக் குழந்தைகளைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் பாவனா படித்திர்க்கிறாள். ஆனால் இப்போது நேரடியாகப் பார்க்கிறாள். ஆதாரப்படும் குணம் உடைய நபர்கள் எவ்வளவு கண்மூடித்தனமாய் நம்புகிறார்கள் என்பதை சுயமாக கண்களால் பார்த்தாள்.

அவளுக்கு சாஹிதியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. ஜீன்ஸ்! தன் தாய் இவ்வளவு அதைரியசாலியா? மனதளவில் இவ்வளவு பலவீனமானவளா?

அவள் தன் தாயின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு திறந்திருந்த கண்களை மூடினாள். இதயம் கனத்தது. கண்கள் கசிந்தன. அவளுக்குத் தன் தாய் அருந்ததி நினைவுக்கு வந்தாள். கேன்சர் நோயால் வேதனை அனுபவித்துக் கொண்டிக்கும் போது கூட அவளுக்காகவே தவித்துப் போய்க் கொண்டிருந்த தாய்! கஷ்டம் என்ற உலைக்களத்தில் வெந்து புனிதமாகிவிட்டாள் அந்தத் தாய்! சுகம் என்றெண்ணிக் கொண்டிருந்த ஹோமத்தீயில் வெந்து சாம்பலாகி விட்டாள் இந்தத் தாய்.

தன் மீது நிழல் பட்டதும் சுதாரித்துக் கொண்டாள் பாவனா. பரமஹம்சா நிர்மாவின் மீது குனித்து கண்ணீர் மல்க சொல்லிக் கொண்டிருந்தான். “நிர்மலா! என்னை மன்னித்துவிடு. உள்ளோடு கூட நானும் வந்திருக்க வேண்டியவந்தான். ஆனால் இங்கே நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அதனால்தான் நின்றுவிட்டேன்.”

“உன் கொட்டம் இனி பலிக்காது என்று தெரிந்து, இவ்வளவு கொடுமைக்கு வழி வகுத்து விட்டாயா? உன்னை நம்பிய வரையில் உயரத்தில் வைத்திருந்தாய். உன் உண்மை சொரூபம் அவளுக்குத் தெரிந்து விட்டது என்றதுமே அந்த உயரத்திலிருந்து தள்ளிவிட்டாய். நீ ஒரு மனிதன் தானா?” என்று கத்தினாள்.

“தவறாகப் புரிந்து கொண்டு விட்டாய் பாவனா. ஹோம் மினிஸ்டருக்கு இவ்வளவு ஆவேசம் உதவாது.”

“ஷட்டப்! நீ என்ன செய்தாய் என்று எனக்கு எல்லாமே தெரியும். இதற்காக நீ தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும்.”

“இந்தக் கோர்ட்டுகளுக்கு என்னைத் தண்டிக்கும் சக்தி கிடையாதும்மா. நான் இந்த நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டவன்.”

“நீ எதற்குமே அப்பாற்பட்டவன் இல்லை. நீ ஒரு சைக்கோபாத்! கீழ்த்தரமான ஆசைகளால் உன்னை நீயே கடவுள் என்று சொல்லிக்கொண்டு அந்த பிரமையில் திருப்தி அடையும் சைகிக் நீ.”

“அஞ்ஞானம் என்றும் அந்தகாரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் உன்னைப் போன்ற சிஷ்யைகளை மன்னிப்பதே தெய்வத்துவம். ஒரு காலத்தில் நீயும் என் காலடியில் வந்து விழுவாய் என்று என் தெய்வாம்சம் கூறுகிறது. இருள் விலகிப் போகும் அந்த நாளுக்காக, காத்திருந்துதான் ஆக வேண்டும்.”

“இருள் விலகப் போகும் அந்த நாளுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன் பரமஹம்சா! சொத்தை எல்லாம் உன் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டு, பிறகு..” என்று சொல்லிக் கொண்டிருந்த அவள் வார்த்தைகளை இடைமறித்துச் சிரித்தான் அவன்.

‘சொத்து என் பெயரில் இல்லை இப்பொழுது. நான் சாஹிதிக்கு கார்டியன் மட்டும்தான். அதானால் பணத்திற்காக நான் அவளைக் கொன்று விட்டதாய் உன்னால் நிரூபிக்க முடியாது. அவள் கீழே விழுந்த பிறகு சாகும் தருவாயில் கூட என்னை வணங்கினாள். அதனை இங்கே அத்தனை பெரும் பார்த்தார்கள். குன்றின் மேல் அழைத்துச் சென்றது மட்டும்தான் நான் செய்தது. தள்ளியது நான் இல்லை. எந்த விதத்தில் நீ என்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பப் போகிறாய்?”

அவன் முகத்தில் சிரிப்பு மறைந்தது. மெதுவாக உள்ளங்கையை விரித்தான். “உள்ளங்கையில் இந்த மச்சத்தைப் பார்த்தாயா பாவனா! சந்திர மேட்டில் மச்சம் இருப்பவர்களை யாராலுமே எதுவும் செய்ய முடியாது. என்றுமே வெற்றி அவனுக்குத்தான்.”

நிர்மலாவின் உடலை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பாவனா தாயைப் பார்த்தாள். ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய பந்தம். ஒன்று சேருவதற்குள் அறுந்து விட்டது. அவள் ஹோம் மினிஸ்டரின் தாய் என்று தெரிந்தால் அங்கு நிலைமை எப்படி மாறி இருக்குமோ?

காதலித்தாலும், துன்புறுத்தினாலும் ஆணிடம் வழிவழியாய் தெய்வத்தையே கண்ட இந்தியப் பெண்களின் வாரிசாக அவள் போய்க் கொண்டிருந்தாள். பாவனை ஏன் அழுது கொண்டிருக்கிறாள் என்று அங்கிருந்த யாருக்குமே தெரியாது. பரமஹம்சா அவளுக்கு என்னவாக வேண்டும் என்றும் தெரியாது. மூவருக்கும் இடையே வினோதமான பந்தம் அது.

அம்புலென்ஸ் நகர்ந்தது. அவன் போய் விட்டான்.

சாஹிதியை உடனே அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டாள். அதிகாரிகள் கிளம்பிப் போனார்கள்.

அவள் மட்டுமே எஞ்சி நின்றாள். அவளோடு கூட நிசப்தமும். அந்த நிசப்தத்திலிருந்து அவள் மெதுவாய் தன உள்ளங்கையை விரித்தாள். அவள் உள்ளங்கை நடுவில் சிறிய மச்சம்.

(தொடரும்)

Series Navigationவேர் மறந்த தளிர்கள் 4-5
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *