கவிதை என்பது பேரனுபவம்… அது படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் வாய்க்கக் கூடியது. கதிர்பாரதியின் மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற நூலில் காணக் கிடைக்காத ஒரு உலகம் காட்சி அளிக்கிறது. ஒரு முரட்டு குதிரையின் வேகத்தில் காட்சிகள் அனுபவங்களை மனதில் வரைந்து செல்கின்றன. அவைகள் வெறும் சித்திரங்களாய் அல்லாது உயிருள்ள உருவங்களாய் நம்மை உணர்வூட்டி அசைத்துச் செல்கின்றன.
அன்றாட வாழ்க்கையில் சாமான்ய தொழிலாளரிலிருந்து கணினியிலேயே வாழ்க்கையை நகர்த்துகிற முகநூல் பொழுதுபோக்கி வரை அவர்களின் அன்றாட செய்கைகளின் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு கவிதை பேரனுபவம் ஒட்டி இருக்கிறது. அதை உணராமல் பார்க்காமல் நகர்ந்து சென்றவர்களெல்லாம் துரதிஷ்டக்காரர்கள். அதை தொட்டு உணர்ந்து கவிதையாய் உயர்த்தியவர்கள் பாக்கியவான்கள். கதிர்பாரதியின் கவிதைக்கு எத்தனை மச்சங்கள்… எத்தனை அனுபவங்கள்.. எத்தகைய அனுபவங்கள்..விரிந்து செல்கிற அந்தக் கவிதைகளின் வீச்சு கதிர்பாரதியை ஒரு தனித்துவமிக்க கவிஞனாக உற்று நோக்க வைக்கிறது.
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் நூலில் சில கவிதைகளையும் அதன் கவிதானுபவத்தையும் இங்கே பகிர்கிறேன்..
அன்பின் வாதையில் அன்பிற்கும் அறத்திற்கும் அதிக விலையே இல்லை என்பது சுற்றுலா வழிகாட்டிக்கு கொடுத்த சில பணத்தாள்களிலேயே தெரிகின்றது.
நூற்றாண்டுகள் கடந்த வரலாற்று மாளிகைக்குள் பயணிக்கிறது காலாதிகாலத்தின் தூசி எனப்படும் கவிதை. காலாதிகாலத்தின தூசியில் வரைந்த சித்திரமாய் தெரிகிறது வரலாற்றின் வலிமையான முகம்.
அராஜகத்தின் இன்னொரு ஒப்பனை முகமாய் சமாதானம் ஹிட்லர் கவிதையில்…
விரிந்த கடலின் வீச்சு சோழக்கடற்கரை பிச்சி எனும் கவிதையில். சோழக் கடற்கரையில் அழகான கடல் தேவதை வனப்புடன் படுத்து கிடக்கிறாள். உப்பு தோய்ந்த அந்த உலகத்தின் பல்வேறு கதாபாத்திரங்களின் உணர்வு பரிமாற்றங்கள் கவிதைக்குள்ளிருந்து நம் மனதினுள் வித்தியாசமான காட்சிகளை நயமுற சித்திரப் படுத்துகின்றன.
வயிறு பெரிதாக இருப்பதாலோ வருடத்திற்கொருமுறை உண்ணுகிறார் இந்த பிள்ளையார்…சீந்துவாரற்ற அந்த பிள்ளையாரின் மேல் நாய் சிந்தும் மூத்திரம் திடுக்கிடத்தான் வைக்கிறது. பிள்ளை சிந்திய மூத்திரமாக பிள்ளையார் எடுத்துக் கொள்வாரோ.
கிழிந்த நாட்களில் உருவாக்கிக் கொள்ளும் பொம்மைகளோடு விளையாடுகிற எஞ்சிய நாட்கள்தான் நாளின் பொம்மைக்கு உயிர் கொடுத்திருக்கின்றன.
அரசல்புரசலின் நிறம் அரசல்புரசலாகத்தான் இருக்கும். அதன் நிறத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள அந்தக் கவிதையைத்தான் படிக்க வேண்டும்.
ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான் கவிதைக்குள் ஒரு பரோட்டாக் கடையின் பிரளயம் கேட்கிறது. ஒரு பரோட்டாவின் பக்குவத்துடன் அதன் மாஸ்டரை உருவாக்கும் லாவகத்தை கவிதையில் காண்கிறோம். அவன் வளமற்ற வாழ்க்கையில் மட்டும் நிச்சயம் பரோட்டாவின் சுவை இருக்காது.
கொண்டலாத்தியோடு வரும் கோடைக் கவிதையில் கோடை அழகாகவே இருக்கிறது… வளமாகவும் இருக்கிறது. ஆனால் மனது மட்டும் பிரிவை எண்ணி பரிதவிக்கிறது.
லாபங்களின் ஊடுருவலில் தனிமையின் கௌரவம் நிலை நிறுத்தப் படுகிறது. தனிமையின் புராதனமான அழகு கவிஞன் மட்டுமே அறிந்தது. அவன் போற்றுகிற அந்தப் புனிதமான தனிமையை எச்சரிக்கையுடன் பொக்கிஷமாய் பாதுகாக்க நினைக்கிறான் கவிஞன்.
வேம்பு கசக்காத கதிர்பாரதியின் கோடை வசந்தமாய் வளமாகவே இருக்கிறது.
வனத்தாகத்துடன் வருகிறது பறவையின் பாடல். கனமான கனவோடு கவிதை நகர்கிறது.
யானையை நேசம் கொள்ளும் முறையில் சிங்கத்தையும் நேசம் செய்யலாமென நமக்கு நம்பிக்கை பிறக்க வைத்திருக்கிறார் கதிர்பாரதி.
கொடிய ரத்தக் காட்டேரியாய் பாய்ந்து செல்லும் நெடுஞ்சாலை மிருகத்தோடு காலமும் கை கோர்த்துச் செல்கிற போது இதயம் நிறையவே வலிக்கிறது.
மெசியாவின் மூன்று மச்சங்களுக்குள் மசியாத எஞ்சி இருக்கும் ஆசைகளாய் எத்தனை மச்சங்களோ.
பரந்த வெளியில் உச்சியில் உயரப் பறக்கும் பருந்தினுள் இருக்கிறது தியானத்தின் புனிதம்.
பிச்சைக்காரனின் பாடல் உதாசீனப்படுகிறது வேர்க்கடலை உமியாய் அதைக் கொரிக்கிற பயணியின் முன்பு. கவிதைக்குள் எஞ்சி நிற்கிறது சத்தான வேர்க்கடலை.
முகநூலில் இறந்தவனின் முகம் கன்ஃபர்மில் நன்றாகத் தெரிகிறது.
கதறும் மறிக்காய் கடவுளைக் கேட்கிறது கதிர்பாரதியின் கருணை இதயம். காட்சிகள் வார்த்தைகளில் நவீன ஓவியங்களாய் விரிகின்றன. உணர்வுகள் ஒப்பனையின்றி உயிரோட்டமாய் ஒளிர்கின்றன.
கதிர்பாரதியின் கவிதைகளில் குளம் இருக்கிறது.. ஈரம் இருக்கிறது.. அழகான வனம் இருக்கிறது.. அலையடிக்கும் ஆர்ப்பரிப்புடன் அழகான கடல் இருக்கிறது.. சுதந்திரமாய் மீன்கள் நீந்துகின்றன. அன்பான மனிதர்கள் இருக்கிறார்கள்.. அழகான பறவைகள் இருக்கின்றன. அவரது கவிதை உலகினில் மொத்தத்தில் கோடையும் வசந்தமாய் சுகமாய் இருக்கிறது. யுகம் தாண்டிய பேரனுபவம் கதிர்பாரதியின் கவிதையில் கிடைக்கின்றன.
கதிர்பாரதியின் கவிதைகளை சுற்றி அடர்ந்த வனத்தின் திரட்சி இருக்கிறது… பலர் கடக்க இயலாத வனமாக காட்சி தரும் அந்த சூழலுக்குள் நயமாக நுழைந்தால் கதிர்பாரதியின் கவிதைகளின் பன்முக பரிமாணங்களோடு பயணிக்கலாம்.
வெளியீடு
புது எழுத்து
68 பக்கங்கள்
விலை -ரூ.60-
ஆசிரியர்-கதிர்பாரதி
அலைபேசி – 098417 58984
குமரி எஸ். நீலகண்டன்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22
- சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா
- கவிதாவின் கவிதைகள்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி
- எதிர்பாராதது
- காலம் கடத்தல்
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4
- சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- தாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !
- நீங்காத நினைவுகள் – 5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12
- கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்
- விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்
- சூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)
- நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 9.அறிவால் உலகை வியக்க வைத்த ஏழை….
- வேர் மறந்த தளிர்கள் 4-5
- அக்னிப்பிரவேசம்-36