தேமொழி
ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா? இதனை எப்படித் தெரிந்து கொள்வது?
உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்),
-
10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன
-
22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கின்றன
-
35% மொழிகள் நல்ல பயன்பாட்டில் இருக்கின்றன ஆனால் அவற்றின் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது
-
21% மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப்படுகிறது
-
13% மொழிகள் அழியும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன, இதனை பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் இம்மொழிகளின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.
இந்த 7105 உலக வாழும் மொழிகளில், அமெரிக்க நாடுகளில் 1060, ஆப்பிரிக்கா நாடுகளில் 2146, ஐரோப்பிய நாடுகளில் 284, ஆசிய நாடுகளில் 2304, ஆஸ்திரேலிய/பசிஃபிக் நாடுகளில் 1311 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. வாழும் மொழிகள் அதிக எண்ணிக்கையில் ஆசியாவிலும், எண்ணிக்கையில் குறைவாக ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன. அத்துடன் அதிக மொழிகள் அழியக்கூடிய ஆபத்தில் இருப்பது அமெரிக்க நாடுகளில். வாழும் மொழிகளில் பல நல்ல பயன்பாட்டில் இருப்பது ஆப்ரிக்க, ஆசிய மற்றும் ஆஸ்திரலிய/பசிஃபிக் பகுதியில் உள்ள நாடுகளில். ஐரோப்பிய நாடுகளில் மொழிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பல மொழிகள் நல்ல மேன்மையான நிலையில் பயன்பாட்டில் உள்ளன.
இது போன்ற மொழிகளைப் பற்றிய புள்ளி விபரங்களைத் தருவது ‘எத்னலாக்’ (Ethnologue – http://www.ethnologue.com/). எத்னலாக் என்பது ஒரு விரிவான மொழி அட்டவணை (comprehensive language catalogue). உலகளவில் மொழியியல் வல்லுனர்களுக்கும், மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது ஒரு இன்றியமையாதப் பட்டியல். பொதுவாக மதத்தினை பரப்பும் பொருட்டு தங்கள் மறை நூல்களை/விவிலியத்தை மொழிபெயர்க்கும் பணிகளுக்கு பெரும் பொருளைச் செலவு செய்ய எண்ணும் மதநிர்வாகத்தினர் இந்தப் பட்டியலின் துணையுடன் ஒரு குறிப்பிட்ட மொழியின் தற்கால நிலையை அறிந்து அதற்கேற்ப பொருட் செலவு செய்வதைப் பற்றி முடிவெடுப்பார்கள். இது போன்ற மற்றும் பல மொழி சார்ந்த திட்டங்களுக்கும் இப்படியல் தரும் புள்ளி விபரங்கள் உதவும்.
இந்தப் பட்டியல் 1951 ஆண்டு முதற்கொண்டு ‘தி சம்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லிங்க்விஸ்டிக்ஸ்’ (The Summer Institute of Linguistics – SIL) என்ற மொழியியல் நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. பல மொழியியல் வல்லுனர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் தொகுக்கப் பட்டது இந்த விரிவான மொழி அட்டவணை. இப்பட்டியல் உலகில் உள்ள அனைத்து புழக்கத்தில் உள்ள மொழிகளையும், 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு மறைந்த மொழிகளையும் பற்றிய செய்திகளைத் தரும் ஒரு தகவல் களஞ்சியம். இப்படியல் தரும் புள்ளி விபரங்களில் ஒரு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிவின் மக்கட்தொகை, அவர்கள் கல்வியறிவின் நிலை, உலகின் எப்பகுதிகளில் அம்மொழி பேசப்படுகிறது, அதன் தற்கால வளர்ச்சி நிலை போன்ற தகவல்கள் அடங்கும். ஏறத்தாழ ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட ‘எத்னலாக்’ பதிப்பு வெளியிடப்படுகிறது. தற்பொழுது வெளிவந்துள்ள இப்புதிய பதிப்பின்படி 1950 ஆம் ஆண்டு வழக்கில் இருந்த மொழிகளில் 375 மொழிகள் மறைந்துவிட்டது தெரிய வருகிறது.
இந்த அண்டு மார்ச் மாதம் (மார்ச் 2013) வெளிவந்துள்ள ‘எத்னலாக்’கின் புதிய 17 ஆம் பதிப்பு இணையத்தின் வழியாக மொழியியல் துறை வல்லுனர்கள் மட்டுமின்றி, மொழியைப் பற்றிய ஆர்வலர்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நூல் வடிவம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுளள்ளது. இப்புதிய பதிப்பில் ஒவ்வொரு மொழிக்கும் மூன்றெழுத்திலான ஒரு குறியீடு (ISO-codes, three-letter language identifier codes) அளிக்கப்பட்டுள்ளது. இக்குறியீடுகள் சர்வதேச தரநிர்ணய அமைப்பின் (International Organization for Standardization, ISO 639-3) முறையினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மூன்றெழுத்துக் குறியீடுகள் ஆகும். இதில் தமிழுக்காக ஒதுக்கப்பட்ட குறியீடு tam (http://www.ethnologue.com/language/tam). பொதுவாக ஒரு மொழியை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நிலை இருக்கும்பொழுது இந்த சீரான குறியீட்டு முறை குழப்பத்தைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக, சமஸ்கிரதம் என்பது சான்ஸ்க்ரீட் என்றும் வடமொழி என்றும் அறியப்படும் பொழுது ‘san’ என்னும் அதன் குறியீடு குழப்பத்தைத் தவிர்க்கிறது (http://www.ethnologue.com/language/san). கவனத்தைக் கவரும் பக்க குறிப்பு ஒன்று: இந்த அட்டவணை தரும் தகவலின்படி சமஸ்கிரதம் ஒரு செம்மொழி (Classical language) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தமிழ் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.
இப்பட்டியல் தமிழ் மொழியைப் பற்றி அளிக்கும் தகவல்: தமிழ் உலகளவில் 68 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அதில் 60 மில்லியன் தமிழர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். இது தமிழகப்பகுதியில் பெரும்பாலும் பேசப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அன்றி இரண்டாம் நிலையில் ஒரு மாநிலத்தின் மொழியாக உள்ளது (Language Status – 2 /Provincial). இளநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகிறது. 1727 ஆம் ஆண்டு முதல் தமிழ் விவிலியத்தின் முழுமையான பதிப்பு வழக்கில் உள்ளது. அத்துடன் உலகில் மற்ற எந்தெந்த நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது என்றும், எத்தனை வட்டார வழக்குகள் உள்ளன என்றும் குறிபிடப்பட்டுள்ளது. மலேஷியா, சிங்கப்பூர், மரைட்டஸ், ஸ்ரீலங்கா நாடுகளில் தமிழின் நிலை பற்றிய மேலதிகத் தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளது. அவற்றில் ஸ்ரீலங்காவில் மட்டும் தமிழ் ஆட்சி மொழியின் நிலையிலும் (நிலை 1), மற்ற பிற நாடுகளில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படும் நிலையிலும் (நிலை 4) இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
மொழிவாரியாகவும், உலகின் பகுதிவாரியாகவும், நாடுகள் வாரியாகவும் தகவல்கள்கள் வழங்கப் பட்டுள்ளன (http://www.ethnologue.com/statistics). குறிப்பாக இந்தியாவில் மொழிகளின் நிலையைப் பற்றி அறிய விரும்பினால், இத்தளம் வழங்கும், இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் பகுதிகளை விளக்கும் வரைபடங்கள் (http://www.ethnologue.com/country/IN/maps), மற்றும் இந்திய மொழிகளின் நிலையைப் பற்றிய தகவல்கள் (http://www.ethnologue.com/country/IN) ஆகியவற்றின் துணை கொண்டு அறிந்து கொள்ளலாம். இந்திய மொழிகள் எனப் பட்டியலிடப் பட்ட 461 மொழிகளில் 447 மொழிகள் மட்டுமே தற்பொழுது புழக்கத்தில் உள்ளன,14 மொழிகள் முற்றும் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. அவ்வாறு இருக்கும் 447 மொழிகளிலும் 55 மொழிகள் ஆபத்தான நிலையிலும், 12 அழிவுப் பாதையிலும் சென்று கொண்டுள்ளன, 380 மொழிகள் மட்டுமே நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளன.
மொழியின் அளவுகோல்:
இவ்வாறு பற்பல தகவல்களை திரட்டித் தரும் இந்த அட்டவணை, மொழிகளின் வளர்ச்சி நிலையை எவ்வாறு அளக்கிறது என்பதையும் அறிந்து கொள்வது நம் மொழியின் வளர்ச்சியை நாம் கண்காணிக்க உதவும். இப்புதிய பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ‘மொழிமேகம்’ (Language Cloud) என்ற விளக்கப் படம் ஒரு ‘மொழிவளர்ச்சி அளவுகோல்’ ஆகும். ஒரு மொழியின் தற்கால வளர்ச்சி நிலையை உலகில் உள்ள மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் வண்ணம் வரைபடமாகவும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த அளவீடுகள் மிகவும் பயனுள்ளது. மொழியின் உபயோக நிலையை பல்வேறு வர்ணங்களால் குறியிட்டு விளக்கப்படுவதால் இம்முறை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
இந்த அளவிடும் முறை EGIDS (Expanded Graded Intergenerational Disruption Scale) என்று குறிப்பிடப்படுகிறது. ‘ஜாஷுவா ஃபிஷ்மேன்’ (Joshua Fishman) என்னும் மொழியியல் வல்லுநர் (linguist) 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘ரிவர்சிங் லாங்குவேஜ் ஷிஃபிட்’ (Reversing Language Shift) என்னும் நூலில் அவர் உருவாக்கியிருந்த GIDS (Graded Intergenerational Disruption Scale) என்ற முறையினை அடிப்படையாகக் கொண்டு, அதனை மேலும் விரிவுபடுத்தியதாக இம்முறை விளங்குகிறது. 0 முதல் 10 வரை உள்ள அளவுகளில் குறிக்கப்படும் இந்த அளவுகோளின்படி, 0 என்னும் நிலை ஆங்கிலம் போன்ற ஒரு பன்னாட்டு மொழியையும், 10 என்பது மறைந்துவிட்ட மொழியையும் குறிக்கும். மேலும் இந்த 0 – 10 வரை உள்ள மொழியின் வளர்ச்சி நிலையை மேலும் தெளிவாக வகைப்படுத்த, மொழிகளைப் பலப் பிரிவுகளாகப் பிரித்து அப்பிரிவுகளுக்கு ஒரு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளது.
ஊதா = (EGIDS 0-4) — நிலைபடுத்தப்பட்டுவிட்ட மொழி – மொழி நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளது
நீலம் = (EGIDS 5) — வளரும் மொழி – மொழி பயன்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கிறது
பச்சை = (EGIDS 6a) — உயிரோட்டமுள்ள மொழி – மொழி நல்ல பயன்பாட்டில் இருக்கிறது ஆனால் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது, ஆனால் பரவலான பயன்பாட்டில் இல்லை
மஞ்சள் = (EGIDS 6b-7) — சோதனையைச் சந்தித்துள்ள மொழி – மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கிறது, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப் படுவது மட்டுமே மொழியின் நிலை மாறக்கூடும் என்று நம்பிக்கையைத் தரும் வகையில் உள்ளது
சிவப்பு = (EGIDS 8a-9) — அழியும் நிலையில் உள்ள மொழி – மொழி அழியும் ஆபத்தான நிலையில் இருக்கிறது, இதனை பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் மொழியின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.
கருப்பு = (EGIDS 10) — அழிந்துவிட்ட மொழி – யாருமே பயன்படுத்தாத நிலையை அடைந்து, யாரும் தங்கள் கலாச்சாரப் பின்னணியாகவும் அந்த மொழியை அடையாளம் காட்டாத நிலை (கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மேற்கூறப்பட்ட இந்த அளவீடை அடிப்படையாகக் கொண்டது).
இந்த அளவிடும் முறைப்படி மொழியின் தற்கால நிலையென (0 விலிருந்து 10 வரையான எண்) கணக்கிடப்பட்ட EGIDS அளவு உலகில் அம்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டு, பிறகு இம்மொழியையும் அதனது பயன்பாட்டு நிலையைக் குறிக்கும் வண்ணத்தில் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தில் ஒரு புள்ளியாகக் குறிப்பதால், ஒரே பார்வையில் அந்த மொழியின் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம். உலகத்தில் உள்ள 7105 மொழிகளும் இந்த வரைபடத்தில் அதன் வளர்ச்சிக்கேற்ப ஒரு புள்ளியாகக் குறிப்பிடப்படுகிறது. நேர் அச்சில்(y axis) மொழியினைப் பேசும் மக்கட்தொகை ‘மடக்கை அளவிலும்’ (in logarithmic scale, 100 = 1; 102 = 100; 104 = 10,000; 106 = 1,000,000; 108 = 100,000,000), கிடை அச்சில் (x axis) EGIDS அளவீடான மொழியின் வளர்ச்சியின் அளவும் குறிக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்து மொழியின் புள்ளிகளையும் ஒருங்கே பார்க்கும் பொழுது இப்படம் ஒரு மேகம் போலத் தோற்றமளிப்பதால் ‘மொழிமேகம்’ என்று இந்த வரைபடம் குறிப்பிடப்படுகிறது. அதிகமாகப் பேசப்படும், நன்கு வளர்ச்சியடைந்த மொழி படத்தில் இடது மேற்புறம் ஊதா வண்ணத்திலும் அழிந்துவிட்ட மொழி படத்தில் வலது கீழ்புறத்தில் கருப்பு வண்ணத்திலும் இடம் பெறும்.
ஒவ்வொரு மொழிக்காகவும் ஒரு குறியீடு கொடுக்கப்பட்டிருப்பது போலவே, ஒவ்வொரு மொழிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அதன் தனிப் பக்கத்தில் மொழிமேகத்தில் அந்த மொழியின் வரச்சியைக் குறிக்கும் வரைபடமும் கொடுக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில், படம் – 1 இல் ‘மொழியின் அளவுகோல்’; படம் -2 இல் மொழியின் அளவுகோலைக் கொண்டு உருவாக்கப் பட்ட மாதிரி ‘மொழிமேகம்’ விளக்கப்படம்’; படம் – 3 இல் ‘தமிழின் வளர்ச்சி நிலை’ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் நிலை தற்கால நிலை:
இந்த மொழியின் அளவுகோலின்படி, ஒரு மொழி பயிற்றுமொழியாக இருப்பது ஒரு முக்கிய அடிப்படைத் தகுதியாகவும், அளவுக்குறியாகவும் இருக்கிறது. ஒருவருக்கு அவரது தாய்மொழியில் படிப்பதுதான் எளிது என்ற ஆராய்ச்சி முடிவுகளைக் கருத்தில் கொண்டு, உலக ஐக்கிய நாடுகள் சபை (UNESCO) தாய்மொழிக் கல்வியினை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாளை தாய்மொழி நாளாகக் குறிப்பிட்டு, விழா எடுத்து தாய்மொழியின் முக்கியத்தை உணர்த்தப் பாடுபட்டு வருகிறது. மொழிகளைப் பாதுகாக்க உலகம் தழுவிய முறையில் எடுக்கப்படும் உன்னதமான நடவடிக்கையாக இச்செயல் விளங்குகிறது.
இன்றைய நிலையில் தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்திருந்தாலும் அது ஒரு மாநில மொழி மட்டுமே, இந்தியாவில் தமிழ் ஓர் ஆட்சி மொழியல்ல. தமிழர்களும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கெளவரமாகவும், ஆங்கில நூல்களைப் படித்து விவாதிப்பதைப் பெருமையாகவும் பல தலைமுறைகளாகக் கருதி வருகின்றனர். மேலும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அறிவும் குறைவு என்ற ஆணித்திரமான மனப்பான்மையும் உள்ளவர்கள் பெரும்பாலான தமிழர்கள்.
இவ்வாறாக மொழியின் அளவுகோலின்படி மொழியின் மாட்சியான நிலையெனக் குறிக்கும் ஒவ்வொரு அளவீடுகளிளும் தமிழின் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழின் நிலை இவ்வாறிருக்க, சமீபத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளும், பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி என்ற நிலைப்பாடும் மொழியின் வளர்ச்சி அளவுகோலின் பயிற்றுமொழி என்ற தகுதியிலிருந்தும் தமிழை விலக்கிச் செல்லும் முதல் நடவடிக்கையாக இருக்கிறது. இந்த முடிவு சரிதானா என்பதை மொழியின் ஆர்வலர்கள் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகிறது.
References:
[1] Ethnologue’s newest edition reports vitality of sign languages worldwide. (http://www.sil.org/about/news/ethnologue%E2%80%99s-newest-edition-reports-vitality-sign-languages-worldwide)
[2] Assessing endangerment: Expanding Fishman’s GIDS. Revue Roumaine de Linguistique, Paul M. Lewis & Gary F. Simons. 2010. 55.2: 103–20. (http://www-01.sil.org/~simonsg/preprint/EGIDS.pdf)
[3] Language development versus language endangerment: Assessing the situation worldwide, Gary F. Simons, SIL International. IAS and GILLBT conference on Language and Culture in National Development, University of Ghana, Legon, 12–13 April 2012. (http://www-01.sil.org/~simonsg/presentation/Ghana%202012.pdf)
[4] Expanded Graded Intergenerational Disruption Scale.(http://surveywiki.info/index.php/EGIDS)
[4] International Mother Language Day (IMLD). (http://www.un.org/en/events/motherlanguageday/)
[5] UNESCO Atlas of the World’s Languages in Danger.(http://www.unesco.org/culture/languages-atlas/index.php)
[6] Analyzing the role of instructional language in Enhancing scientific cognition of elementary level Students belonging to marginalized communities; Sindh – Pakistan, Dr. Tayyaba Zarif and Dr. Aijaz Ahmed. ISSN: 2186-8492, ISSN: 2186-8484 Print Vol. 2. No. 1. February 2013. (http://www.ajssh.leena-luna.co.jp/AJSSHPDFs/Vol.2(1)/AJSSH2013(2.1-29).pdf)
[7] Karuna opposes English in govt schools as medium of instructions, Chennai, May 14, 2013. (http://indiatoday.intoday.in/story/karuna-opposes-english-in-govt-schools-as-medium-of-instructions/1/271024.html)
- படைப்பு
- மொழியின் அளவுகோல்
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.
- புகழ் பெற்ற ஏழைகள் – 12
- கல்யாணியும் நிலாவும்
- மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25
- நம்பிக்கை
- தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
- என்னைப் பற்றிய பாடல் – 23
- காரைக்குடி கம்பன் கழகம்
- மனதாலும் வாழலாம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- லிங்கூ-வில் இயங்கும் காலமும் வெளியும் – கவிஞர் என்.லிங்குசாமி கவிதைகளை முன்வைத்து
- மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்
- ப.மதியழகன் கவிதைகள்
- பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்
- கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 8,9,10
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15
- உள்ளே ஒரு வெள்ளம்.
- ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8
- “செங்கடல்”
- இரயில் நின்ற இடம்
- என்ன ஆச்சு சுவாதிக்கு?
- நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7