விட்டல் ராவின் கூடார நாட்கள்

This entry is part 12 of 25 in the series 7 ஜூலை 2013

VittalRaoவிட்டல் ராவின் தாய் மொழி கன்னடம் ஹோசூர் காரர். கற்றது தமிழ்.  வாழ்ந்த பள்ளி நாட்கள் சேலம் மாவட்டத்தில்  தந்தையாரின் அலுவலக மாற்றலுக்கு ஏற்ப சேலத்தின் ஊர்கள் பலவற்றில் வாசம்.  கர்நாடகத்திலிருந்து அதிக தூரம் தள்ளி வந்துவிடவில்லை.  தமக்கை கன்னட நாடகக் குழுக்களிலும் ஆரம்ப கால தமிழ் சினிமாக்களிலும் நடித்தவர். அதிகம் கன்னட நாடக குழுக்களில்.  சங்கீதமும் நாடக நடிப்பும் மிக பரிச்சயமானவை விட்டல் ராவின் சகோதரிக்கு.  இதன் காரணமாகவும், விட்டல் ராவுக்கு கன்னட தமிழ் நாடகச் சூழலும்  சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் கிடைத்த சினிமாச் சூழலும் தந்த பரிச்சயம்  அந்த ஆரம்ப பரிச்சயம், கன்னட நாடகத்தின் குப்பி வீரண்ணா காலத்திலிருந்தும், தமிழ் நாடகத்தின் சேலம் நாட்களிலிருந்தும், அதன் சினிமாவாக உருமாற்றம் பெற்று இன்று வளர்ந்துள்ளது வரை.  அதுவே கன்னடம் தமிழ் ஹிந்தி, வங்காளி, மலையாளம், மற்றும் ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ரஷ்யன் என  உலக மொழிகளில் வளர்ந்துள்ள சினிமா முழுதையும்  தன்  ரசனை வட்டத்துக்குள் கொணர்ந்துள்ளது,   ஒரு தரத்த ரசனையும் ஆர்வமும் விட்டல் ராவுக்குள்ளது போன்றோருக்கே வாய்க்கும்.  அது மட்டுமல்ல. விட்டல் ராவின் ஆளுமையும் ரசனையும் இன்னும் பரவலாக விரிந்துள்ளது . அது போன்ற வளர்ச்சியை நான் வெகுசிலரிடமே காண முடிந்துள்ளது. .

ஒரு நாவலாசிரியராகவும் சிறுகதைக்காரராகவுமே அதிகம் அவர் தெரிய வந்திருப்பவர்  தமிழ் எழுத்துலகில்.  அவர் எழும்பூர் கலைக் கல்லூரியில் ஓவியப்  பயிற்சி பெற்றவர். அவர் தலைமுறையைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பிகள்  தனுஷ்கோடி, ஜெயராமன், ட்ராட்ஸ்கி மருது என இப்படி பலர் அவரது சக மாணாக்கராக இருந்தவர்கள்,  ராமானுஜம் அதில் குறிப்பாகச் சொல்லப்படத் தக்க ஒரு சித்திரக்காரர்.  சந்தானராஜ், அந்தோணி தாஸ் போன்றோர் ஆசிரியராக இருந்த காலம் அது.

அந்த ஆரம்ப காலத்திலிருந்தே பழைய புத்தகங்கள், பத்திரிகைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவருக்கு ஆர்வமிருந்து அவற்றை ஒழுங்காகச் சேகரித்து முறைப்படி பாதுகாத்தும் வந்துள்ளார்.

அந்தக் காலத்தில் நானும் Life, Illustrated Weekly of India, Soviet Literature, Chinese Literature, Hungarian Quarterly, Imprint என்றெல்லாம் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படித்து வந்திருக்கிறேனே ஒழிய அவற்றைச் சேகரிக்க மனம் தோன்றியதில்லை. ஆக சேகரித்து வந்ததில்லை. Sooviet literature, Chinese literature எல்லாம் ஐம்பதுக்களில் என்னைச் சிலகாலம் கவர்ந்தாலும் பின்னர் அலுத்துவிட்டது. Argosy கிடைத்தும் அதை நான் தொட்டதில்லை. Saturday Evening Post எனக்கு ஹிராகுட் என்னும் அணைக்கட்டு முகாமில் கிடைத்ததில்லை. ஆனால் விட்டல் ராவின் அக்கறைகள் மிக விரிந்தது. Life பத்திரிகையில் என்னைக் கவர்ந்தவை இப்போது நினைவில் இருப்பவை எல்லாம் பிரபஞ்சத்தைப் பற்றியும் ஸ்டாலின், லெனின் இறந்ததும் தன் சகாக்களை ஒழித்துக் கட்ட நடத்திய வழக்குகளையும் பற்றிய தொடர்கள், அமெரிக்க ஆண் பெண்களின் பாலியல் உறவுகளைப் பற்றிய விசாரணைத் தொடர் ஒன்று ஆல்பெர்ட் லிண்ட்சேயோ என்னவோ, இப்படி சில நினைவிலிருக்கிறது. ஆனால் விட்டல் ராவ் ரோமானிய சரித்திரம் பற்றியும் சரோயான் கதைகள் பற்றியும் யூலிஸிஸின் சாகஸப் பயணங்களைப் பற்றியுமான Life பத்திரிகையின் தொடர்களைப் பற்றிப் பேசுவார். இப்படி அனேகம் Collector’s Item என்று சொல்லக்கூடிய பழைய அரிய புத்தகங்கள், ஓவியங்கள் அடங்கிய பதிப்புகள் இப்படியாக அத்தனையும் ஒரு பெரிய archive வே அவரிடம் உண்டு. இன்னமும் பத்திரமான சேமிப்பில் அவரிடம் இருப்பது கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நானும் ஒரு காலத்தில் ஐம்பதுக்களிலிருந்து illustrated weekly, யிலிருந்து அக்கால ஓவியர்களைப் பற்றியும் நடன கலைஞர்கள் பற்றியும் கர்நாடக, ஹிந்துஸ்தானி பாடகர்கள் பற்றியுமான கட்டுரைகளைச் சேர்த்து வைத்திருந்தவன் தான். ஆனால் 50 களிலிருந்து எத்தனை இடங்கள் மாறி மாறிச் செல்ல வேண்டியிருந்ததில் அவை போன இடம் தெரியவில்லை. அக்காலத்தில் Shankar’s Weekly யில் Aeolus என்ற புனை பெயரில் சங்கீத விமர்சனம் வெகு உயர்ந்த தளத்தில், ஒவ்வொருவரின் கச்சேரியையும் அச்சங்கீத அனுபவத்தின் தத்துவார்த்த ஆழத்தில் எழுதிய ஒரே விமர்சகரின் கட்டுரைகளைப் போன்று வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. அவையும் இப்போது போன இடம் தெரியவில்லை. ஒரு சமயம் க்ரியா ராமகிருஷ்ணனை அவரிடம் அழைத்துப் போயிருக்கிறேன்.  ராகவ் மேனன் என்பார் எழுதி வந்தார் வெகு அபூர்வமாக, மிக ஆழமாக. .ஆனால் அவை போன இடம் தெரியவில்லை.

விட்டல் ராவிடமோ எல்லாம் இன்று வரை பாதுகாப்பாக இருப்பதோடு அந்த அனுபவங்களின் சரித்திரத்தையும் “வாழ்வின் சில உன்னதங்கள்” என்று ஒரு மிகச் சிறப்பான புத்தகத்தில் எழுதியுமிருக்கிறார். தன் அப்பாவின் அலுவலக பணி மாறும் இடங்கள் எல்லாம் சேலம் மாவட்டத்துக்குள்ளேயே இருந்த காரணமாக, போகும் இடம் எல்லாம் அங்குள்ள கோட்டைகளைப் பார்க்கணும் என்று நச்சரித்த சின்ன பையன் தான் இன்றைய விட்டல் ராவ், தமிழகக் கோட்டைகள் என்ற புத்தகத்தில் தன் அனுபவங்களைப் பதிவும் செய்தவர். கால வெளி என்னும் ஒரு குறுநாவலில், எழுபதுகளில் சென்னையில் கலைக்கல்லூரியின் படித்த நாட்களில் கலைக்கல்லூரி தோழமைகள், அனுபவங்களோடு அந்நாளைய இலக்கிய சிறு பத்திரிகையாளர்களுடனான அனுபவங்களையும் ஒரு சிறு நாவலாக எழுதியிருக்கிறார். Radiographer  ஆக பணி செய்த போது நடந்த ஒரு வேலைநிறுத்தத்தில் தானும் பங்கு கொள்ள்வேண்டும், அதே சமயத்தில் மருத்துவ மனையில் இருக்கும் தன் மனைவியையும் காப்பாற்றவேண்டும் என்ற ஒரு சிக்கல், மற்றவர்கள் என்ற நாவலில்.  தன் தன் மூத்த சகோதரி கன்னட தமிழ் நாடகங்களில் நடித்த நாட்களை உடன் இருந்த பார்த்த அனுபவங்களும் வ்ண்ணமுகங்கள் என ஒரு நாவலாக அவரிடமிருந்து வந்துள்ளது. இத்தகைய பன்முக ஆளுமையும் பலதரப்பட்ட அக்கறைகளும் அனுபவங்களும் கொண்ட இன்னொரு தமிழ் எழுத்தாளரை நாம் காணமுடியாது. முதலில் அவர் நாவல்களையும் சிறுகதைகளையும் படித்திருக்கும் வாசகர்கள் அதிகம் பேர் படித்திருக்க மாட்டார்கள். அவரது  நதிமூலம்  என்ற முதல் நாவலே தமிழ் நாவல் களிலேயே குறிப்பிட்டுப் பேசப் படத்தக்க ஒன்று என்பதும் பலருக்குத் தெரிந்திராது. மாத்வா பிராமணகுடும்பத்தின் மூன்று தலைமுறை சரித்திரம் அதில் அக்கால சமூக சரித்திரத்தின் நாடகம், சினிமா முதலியவற்றின் பின்னணியில் அவை அனைத்துடனும்  பின்னிப் பிணைந்த வரலாறாக வந்துள்ளது. ஆக, அவர் எழுத்து எல்லாமே அனேகமாக அவரது அனுபவங்களைப் பதிவு செய்த வரலாறு போன்றவை தான்.

இத்தகைய ஒரு ஆளுமை தன் பழைய நினைவுகளை சிறு சிறு காட்சிகளாக தந்தால் அது தான் நம் முன் இருக்கும் கூடார நாட்கள் என்னும் கட்டுரைத் தொகுப்பு  சில நினைவுகளின், சில ஆளுமைகளைப் பற்றிய சில அனுபவத் தெறிப்புகள்.

கூடாரம் என்று விட்டல் ராவ் குறிப்பிடுவது ஆரம்ப கால டூரிங் டாக்கீஸ் என்று ஊருக்கு ஊர் பயணப்படும் தாற்காலிக சினிமா கொட்டகைகளைப் பற்றியதாகும். அந்தக் கூடாரங்களில் சர்க்கஸ் கம்பெனிகளும் வந்தன. அக்காலச் சூழலை விட்டல் ராவ் திரும்பக் கொணர்கிறார்,. ஒரே ப்ரொஜெக்டர் தான் இருக்குமாதலால் ஒவ்வொரு ரீலையும் மாற்றும் சில நிமிட இடைவெளியில் சோடா கலர், பாட்டு புத்தகங்கள் விற்பவர்களின் கூச்சல் எழும். திரையில் படம் சரியாக விழுகிறதா என்று பார்க்க ப்ரொஜெக்டர் அறையின் துவாரத்திலிருந்த் ஆபரேட்டர் பார்த்தால் உடனே “டே ஒழுங்கா ஓட்டுடா” என்றும் கூச்சல் எழுமாம். இது என் அனுபவத்தில் இல்லாத புது விஷயம். பின்னால் நாற்காலியில் அபூர்வமாக வந்து அமரும் உயர் வகுப்பு பெண்களை இடைவேளைகளில் தரையில் இருக்கும் சிலர் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருப்பார்களாம். இன்னும் சிலர் வெற்றிலை மென்று தரை மணலில் துப்பி மூடிவிடுவார்கள். என்று இப்படிப் பட்ட காட்சிகள்..

பசுபு லேடி கண்ணாம்பா என்னும் அக்கால நக்ஷத்திர நடிகை பற்றி எழுதும்போது கண்ணாம்பா தமிழறியாத காரணத்தால் கண்ணகியோ, ஹரிச்சந்திராவோ எதானாலும் அந்த நீண்ட வசனங்களையும் கூட தெலுங்கில் எழுதி மனப்பாடம் செய்து தான் தமிழில் பேசுவாராம். பேசுவாரா, இல்லை கனல் தெறிக்குமா, கதறுவாரா, ஒன்றாம் மாதம் , இரண்டாம் மாதம் என்று லோகிதாசனைப் பெற்ற வேதனையைப் பட்டியலிட்டு? அப்படியும் கூட நமக்கு அது தெரியாது தமிழாக ஒலித்தது பெரிய விஷயம் தான். இப்போது விட்டல் ராவ் சொல்லித் தான் இந்த விஷயம் எனக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அக்காலத்தில் தான் டப்பிங் வசதிகள் கிடையாதே. அப்படியும் அவர் அக்கால நக்ஷத்திர நடிகையாக உயர முடிந்திருக்கிறது. எம்.ஆர். ராதா முதலில் ஜகந்நாதய்யர் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் தான் சேர்ந்தாராம். இக்கம்பெனியின்  1924- வருட நாடகம் “கதரின் வெற்றி” மிகப்புகழ் பெற்றது என்றும் அந்த நாடகத்தை, ராஜாஜி, மகாத்மா காந்தி, கஸ்தூர்பாய், தேவதாஸ் காந்தி, போன்றோரின் பாராட்டைப் பெற்றதாகவும் எழுதுகிறார் விட்டல் ராவ். காந்தியும் ராஜாஜியும் நாடகம் பார்த்தார்கள், பாராட்டினார்கள் என்பது புதிய கேள்விப்பட்டிராத செய்தி. எம்.ஆர். ராதாவின் கோபத்துக்கும் முரட்டு சுபாவத்துக்கும் ஆளானவர்கள் எம்.ஜி.ஆருக்கும்  முன்னர் சிலர் இருந்தனராம். கிட்டு என்ற சக நடிகர் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டார் என்றும், தனக்கு பதிலாக கே.பி.காமாட்சி என்பவரை சினிமாவில் ஒப்பந்தம் செய்ததற்கு என்.எஸ்.கேயை கொல்லப்போகிறேன் என்று கிளம்பியவரை என்.எஸ்.கே போய் சமாதானம் செய்யவேண்டி வந்தது என்றும் பல இம்மாதிரி சம்பவங்கள் விட்டல் ராவிடமிருந்து தெரிகின்றன. சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆரம்பித்தது 1934-ல். இது புரிகிறது. ஆனால் நமக்குத் தெரியாத, ஆச்சரியப்படவைக்கும் தகவல், முதல் மலையாளப் படமே சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிக்கப்பட்டது 1935-ல் என்ற தகவல் விட்டல் ராவிடமிருந்து வருகிறது.  மாடர்ன் தியேட்டர்ஸை டி.ஆர் சுந்தரம் நிறுவியதன் காரணமாக, சேலமே சினிமா நக்ஷத்திரங்களும், நாடக நடிகர்களும் நிறைந்த, அவர்கள் போவதும் வருவதுமான காட்சிகளும், விருந்தினர் மாளிகைகளும், ஹோட்டல்களும், இப்படியான ஒரு சலசலப்பும் பரபரப்பும் நிறைந்த நகரமாக உரு மாறியிருந்த காலம். டி.ஆர். சுந்தரம், மிகுந்த கட்டுப்பாடு நிறைந்த, எந்த பெரிய நடிகரையும் அதிகாரம் செய்து வேலை வாங்குபவர் என்ற புகழோடு, வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து, வெள்ளைத்தோலும் நீலக்கண்களும் கொண்ட புத்திரர்களும் கொண்டவர் என்றால், சேலத்தில் எல்லோரும் அது பற்றித் தானே பேசுவார்கள்! அதிலும் டி.ஆர். சுந்தரத்துக்கு சினிமா, நாடகம் என்று வாழ்க்கையின் திசை திரும்பியதற்கு அவரது மனைவிதான் காரணம் என்றால். ஒரு காலகட்டத்தின் தமிழ் நாடக சினிமா வளர்ச்சியில் க்ளாடிஸ் என்னும் அந்த பெண்ணிற்கும் பங்கு உண்டு என்றால்….. ஆனால் 1963-ல் சுந்தரத்தின் மரணத்தோடு அந்தக் கதை முடிந்தது. க்ளாடிஸ் அதற்கு முன்னே பிரிந்து சென்று விட்டாள்.

விட்டல் ராவ் சொல்லும் சில துணுக்குக் காட்சிகள்: அக்கால படங்களிலிருந்து. இது மாடர்ன் தியேட்டருக்கு மாத்திரமான சிறப்பு அல்ல. ஏதோ ஒரு ஹைதர் காலத்துக் கதை. என் டி ராமராவும் பாலாஜியும் கத்திச் சண்டை போடுவார்கள். க்ளோஸ் அப் காட்சி வரும். ராமராவ் ராஜா உடையில் வாளும் மோதிரங்களும். அத்தோடு சமீபத்தில் வாங்கிய ரிஸ்ட் வாட்சும் ஒளி வீசும்.  இன்னொரு காட்சியில் வீரர்கள் தப்பிச் செல்ல வசதியாக சுவற்றில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்விச்சை அணைக்க இருள் சூழும்.

ரஞ்சனைப் பற்றி எழுதும் போது அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சங்கீதமும் நடனமும் கற்றவர் என்றும் பெயர் வெங்கட் ரமணி என்றும் அவர் நடித்த படங்களின் பட்டியல் ஒன்றும் மற்ற தகவல்களோடு தருகிறார். மங்கம்மா சபதம் படத்தில் திருடனைப் பிடிக்க நகர் சோதனைக்கு வரும் சுகுணன் சுடுகாட்டில் மளிகைக்கடை வைத்திருக்கும் செட்டியாரைச் சந்திக்கிறார். வேடிக்கை, சுடுகாட்டில் மளிகைக்கடை செட்டியார்.   எப்படி எல்லாம் கதைகள் சமவங்கள் உருவாக்கப்படுகின்றன! தமிழில் நாட்டியம் என்ற முதல், ஒரு வேளை ஒரே ஒரு நாட்டிய பத்திரிகையைத் தொடங்கியவர் ரஞ்சன். ஒவியம் வரையத் தெரிந்தவர்.  சினிமா வாழ்க்கை முடிந்த காலத்தில் விட்டல் ராவுடன் ஓவியக் கல்லூரியில் பயில்கிறார்.  நங்கநல்லூரில் ஒரு வீட்டின் மாடியில் குடியிருக்கும் அடையாளம் தெரியாது முதுமையடைந்துவிட்ட வசுந்துரா தேவி. விட்டல் ராவின் அம்மா பார்த்துவிடவே, உடனே அந்த வீட்டைக் காலிசெய்கிறார் வசுந்தரா தேவி.

இதிலிருந்து இந்திய மொழிகளில் வெளியான தரமான படங்களையும், நடிகர்களையும், இயக்குனர்களையும், காமிராமென்களையும் பற்றிப் பேசுகிறார். இது காறும் தமிழ் சினிமா  நாடகங்கள் பற்றி விட்டல் ராவ் தரும் தகவல்கள், வரலாற்றுச் செய்திகளில் சுவாரஸ்யம் கொண்ட நான் மற்ற இந்திய மொழிகளின் படங்கள், நடிப்புத் திறன்கள் இயக்குனர்களின் கலை மொழி பற்றிப்பேசும் போது முன்னர் கண்ட விட்டல் ராவிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு விட்டல் ராவைப் பார்க்கிறோம். அதெப்படி பூமிகாவின் ஸ்மிதா பாட்டீலையும் ஹரிஸ்சந்திராவின் பசுபுலேடி கண்ணாம்பாவையும் நடிப்பின் தரத்திற்காக ரசித்துப்பாராட்ட முடிகிறது? உண்மை, அது வேறு காலம், இது வேறு காலம். மன்மோஹன் தேசாய் உருவாக்கும் அமிதாபுக்கும் ராம் கோபால் வர்மாவின் அமிதாபுக்கும் வித்தியாசமில்லையா? அமிதாப் பச்சன் இரண்டையும் ஒரே தரத்ததாகத் தான் சொல்வார். நடித்தவர். அதில் பிழைத்தவர். கண்ணாம்பாவின் பிழையல்ல. அக்காலத்தின் ரசனையின் நடைமுறையின் பிழை. ஆனால் இரண்டையும் பார்ப்பது நாம் தானே.

ஆனால் என் வியப்பு அவ்வளவு சினிமா நாடகத் தகவல்களையும் எப்படி பாதுகாத்து வைத்திருப்பது மட்டுமல்ல. அதை வேண்டியது உடன் கிடைக்கும்படி ஒழுங்கு படுத்த வேண்டும். எது எங்கு கிடைக்கும் என்று தெரியவேண்டும். விட்டல்ராவின் திறமைகள், ஈடுபாடுகள் மிக அபூர்வமானவை தான்.

அக்கால ஆங்கிலப் பட ரசிகர்களைப் பற்றியும் விட்டல் ராவ் தரும் செய்திகள். சண்டைக்காட்சிகளையும் முத்தக் காட்சிகளையும் பார்க்கவே வரும் ஆங்கிலப் பரிச்சயம் கொண்டவர்கள் சிரிப்புக்காட்சிகளுக்கு கொஞ்சம் பலமாகவே சிரிப்பதும், அடுத்தவருக்கு தான் புரிந்துகொண்டதை விவரிப்பதும்… அனேகமாக இம்மாதிரியான படங்களே அன்று இங்கு காணக் கிடைத்தன. ஆனால் ஹிந்தி,  வங்காளி, கன்னடம், மலையாளப் படங்களில் சிறந்தவற்றைப் பற்றி மாத்திரம் விட்டல் ராவ் எழுதுகிறார். சத்கதியில் ஓம் பூரி பற்றியும் சாருலதாவில் மாதுரி பற்றியும் எழுதும் போது, சந்தான ராஜின் ஒவியம் பற்றியும், ஆதிமூலத்தில் கோடுகள் தரும் அனுபவம் பற்றியும் எழுதுவது போன்ற ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர் எழும்பூர் ஓவியக் கல்லூரியில் படித்த நாட்களின் அனுபவங்கள், ஓவியர்கள், ஆசிரியர்கள் பற்றியெல்லாம் எழுது கிறார். எல்லாம் ஏதும் நீண்ட சரித்திரம் அல்ல. அனுபவத் துணுக்குகளும், அந்த ஆளுமைகளின் சித்திரமும் தான்.

சில்லரைக் கடனிலிருந்து ஆர்மபித்து தொடர்ந்த பெரிய கடன் வரை தன்னை வருத்திய ஆனால் கோவித்துப் பிரிய முடியாத நாயர் ஒருத்தர், அக்கால சண்டைக்காட்சிகளில் தோன்றிய கொக்கோ என்ற நடிகர், (யாருக்காவது பெயராவது தெரியுமோ?) அக்கால ஜான் கவாஸ் அவர். தன் சைக்கிள் அனுபவங்கள். சினிமா தொடர்பும், சீட்டுக்கட்டும், பெண்பித்துமாக வாழ்க்கையையும் சொத்தையும் தொலைத்த தாடி என்று பெயர் பெற்ற பெரியப்பா, நாயர் கொடுத்த இலவச டிக்கட்டில் சாகுராமாரு என்னும் ஜப்பானிய சொகுசு கப்பல் பார்க்கப் போய் நாள் பூராவும் வரிசையில் காத்திருந்து காத்திருந்து “ it is closed” என்று கடைசியில் திருப்பி அனுப்பப்பட்ட கதை,  இத்தகைய அனுபவப் பதிவுகளோடு, எஸ் வைதீஸ்வரன், கன்னட விமர்சகர் குர்த்துகோடி, சி.டி. நரஸிம்மையாவின் மைசூர் த்வன்யலோகா, இந்திரா பார்த்தசாரதி என்னும் நவீன நாடகக் கலைஞன் என ஒரு ஆவணப் படம் ஆதிமூலம், சந்தான ராஜ் பற்றி சற்று விரிவாக, எல்லாம் எழுதிய விட்டல் ராவ்,  தன்னையே அழித்துக்கொண்ட, தம் முழுமையை எட்டக் கொடுத்து வைக்காத ஒரு அபூர்வ கலைஞனான ராமானுஜம் பற்றி தனியே எழுத ஆரம்பித்த போதிலும் ஒரிரு சிறு கோடுகளோடு முடித்துவிட்டார் விட்டல் ராவ். எனக்கு வருத்தம் தான். அவரிடம் மாத்திரம் இல்லை. சக மாணவர்கள், ஆசிரியர்கள் யாருமே ராமானுஜத்தைப் பற்றி விரிவாக ஏதும் பதிவு செய்யவில்லை. அதுவும் வருத்தம் தான்


கூடார நாட்கள்; (கட்டுரைத் தொகுப்பு) விட்டல் ராவ்: அம்ருதா, கிழக்கு சி.ஐ.டி நகர், நந்தனம், சென்னை-35. பக்கங்கள் 200 விலை ரூ 160

 

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10உ(ரு)ண்டை பூமியை நோக்கி
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    era.murukan says:

    யாருமே ராமானுஜத்தைப் பற்றி விரிவாக ஏதும் பதிவு செய்யவில்லை// The protagonist Raju of my novella ‘Raathri vandi’ has shades of Ramanujam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *