விடுப்பு

This entry is part 3 of 18 in the series 14 ஜூலை 2013
                   டாக்டர் ஜி,ஜான்சன்
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் போது மருத்துவ விடுப்பு தருவது பெரும் பிரச்னையாகும்.

அதில் குறிப்பாக திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் மருத்துவ விடுப்புக்காக ” நோயாளிகள் ” அலை மோதுவதுண்டு. வார இறுதி விடுமுறையுடன் இன்னும் ஒரு நாள் சேர்த்துக்கொள்ள இந்த முயற்சியாகும்.

இதனால் திங்கள் அன்றும் வெள்ளி அன்றும் மருத்துவர்களுக்கு வேலை அதிகம் என்பதோடு யாருக்கு விடுப்பு தருவது யாருக்கு மறுப்பது என்பதில் சிரமம் உண்டாகும்.

கலையில் சுமார் நூற்று ஐம்பது வெளி நோயாளிகளைப் பார்க்கும் அவசரத்தில் நின்று நிதானமாக ஒவ்வொரு நோயாளியிடமும் பேசியும் விளக்கியும் கொண்டிருக்க முடியாது. மின்னல் வேகத்தில் இயங்கினால்தான் ஒரு மணிக்கு மதிய உணவுக்கு செல்ல முடியும்.

பெரும்பாலும் விடுப்பு தருவதில்தான் நேரம் வீணாகும். முடியாது என்றால் வீண் வாக்குவாதம் எழும் நேரம் வீணாகும். நாங்கள் நேரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு அவசர அவசரமாக நோயாளிகளைப் பார்த்தாக வேண்டும்.

வாக்குவாதம் வேண்டாம் எனில் விடுப்பு தந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் விடுப்பு தந்தாலும் பிரச்னை உள்ளது .விடுப்பு தராவிட்டாலும் பிரச்னைதான். நாங்கள் இரு தலைக்கொள்ளி எறும்பாகத்தான் பல வேளைகளில் செயல்படுவதுண்டு.இதை யாரிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

” டாக்டர். எனக்கு சரியான தலைவலி .சரியான வயிற்று வலி.ஒரே கால் வலி . ஒரு நாள் எம்.சி .கிடைக்குமா? ” பொய் சொன்னாலும் சரியாகச் சொல்ல வேண்டும். இப்படியா? இந்த மூன்று விதமான வலிக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன?

சில கெட்டிக்காரர்கள் எதைச் சொன்னால் மருத்துவரை எளிதில் ஏமாற்றலாம் என்று தெரிந்து வைத்திருப்பார்கள்.ஒற்றைத் தலைவலி, மாதவிலக்கு வலி, இடுப்பு வலி, வயிற்றுப் போக்கு, வந்தி, மயக்கம், தலைச சுற்று என்று சொன்னால் மருத்துவர் நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது.

சிலர் அறைக்குள் நொண்டி நொண்டி வருவதுண்டு. கடுமையான இடுப்பு வலி என்பார்கள்.விடுப்புச் சீட்டு தந்ததும் வெளியேறுவார்கள். சன்னல் வழியாகப் பார்த்தால்  வெளியில் மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். மருந்து கூட அவர்கள் வாங்குவதில்லை! இப்படியா நாங்கள் ஏமாற வேண்டும்?

பேசாமல் விடுப்பு தந்தால் என்ன ஆகிப்போகிறது , குடியா மூழ்கிப் போகும் என்று நீங்கள் கேட்கலாம். அங்கேதான் விஷயமே உள்ளது.

துவக்கத்தில் நான் தாராளமாகத்தான் விடுப்பு தந்து கொண்டிருந்தேன். குறிப்பாக தமிழ் மக்களிடையே அதிகம் பாசமும் கருணையும் காட்டினேன். ஆனால் கொஞ்ச நாட்களில் ஊரிலுள்ள அத்தனைத் தமிழர்களும் என்னைத்தான் பார்க்க வேண்டும் என்று பெயர் பதியும் மலாய் ஊழியர்களிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டனர். நான் நன்றாகப் பார்கிறேன் என்பதற்காக அல்ல. சுலபமாக விடுப்பு கிடைக்கும் என்பதற்காக!

இதை அந்த மலாய் ஊழியகள் தலைமை மருத்துவ அதிகாரியிடம் பற்ற வைத்து விட்டனர். அவர் என்னை அழைத்து , ” இங்குள்ள தமிழ் நோயாளிகளெல்லாம் உங்களைத்தான் பார்க்க வேண்டும் என்கிறார்களாமே? நீங்கள் அவர்களுக்கு எம்.சி .கொடுப்பதால்தான் என்று புகார் வந்துள்ளதே? ” என்று சத்தம் போட்டார்.”

” தமிழ் நோயாளிகள் பற்றி எனக்குத் தெரியும். அவர்கள் கடின உழைப்பாளிகள். தோட்டப்புறத்தில் அவர்கள் வெயிலிலும் மழையிலும் பாடு படுபவர்கள். தொழிற்ச்சாலைகளில் பணிபுரியும் தமிழர்களின் நிலையும் அப்படித்தான். ” நான் விளக்க முயல்வேன்.

தமிழ் நோயாளிகளிடம் இன்னொரு குணமும் உள்ளது.அதுவே ஆச்சரியமானது! விடுப்பு தரவில்லை என்றால் விபரீதமாகிவிடும்!

மருத்துவமனை  நுழை வாயிலிலேயே புகார்ப் பெட்டி உள்ளது. விடுப்பு தர மறுத்தால் அதில் இல்லாததையும் பொல்லாத தையும் எழுதி போட்டு விடுவார்கள்.  இதுபோன்று புகார் எழுவதில் தமிழர்களே வல்லவர்கள்.

மருத்துவர் சரியாக பார்க்கவில்லை. எரிந்து விழுகிறார். பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார், அடிக்கடி தேநீர் கடைக்குப் பொய் விடுகிறார். கழிவறைக்கும் சென்றுவிடுகிறார் இது போன்றவை நிறையவே இருக்கும்.

மாலையில் இந்த புகார்களை தலைமை மருத்துவர் படித்தபின் அழைத்து அவற்றை படிக்கக் கொடுப்பார்..

” நீங்கள் தமிழர் தமிழர் என்று இரக்கம் காட்டினீரே . அந்த தமிழர்கள் தான் இப்படி உங்கள் மீது புகார் பண்ணியுள்ளார்கள் ! இதன் நகலை சுகாதார அமைச்சுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். நான் என்ன செய்வது? ” இவ்வாறு சலித்துக் கொள்வார். அவர் மலாய்க்காரர்.

அவர்களில் சிலர் என்னை நேரில் பார்க்கும்போது சிறிது கொண்டு நன்றாகத்தான் பேசுவார்கள்.அனால் முதுகில் இப்படி குத்துகிறார்களே என்று மனம் வெதும்புவேன்.புகார் எழுதுபவர்கள் தங்களின் உண்மைப் பெயர் , முகவரி, அடையாள அட்டையின் எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.அப்போதுதான் அவர்களின் புகார் பரிசீலிக்கப்பட்டு பதில் தரப்படும்.

” விடுப்பு தரவில்லை என்ற கடுப்பில் இது எழுதப்பட்டுள்ளது .” என்றுதான் நான் சமாளிப்பதுண்டு.

இதைத் தவிர்க்க விடுப்பு தந்தாலும்  அவர் கூப்டுவார்.விடுப்பு பெற்றவரின் தொழிற்சாலையின் அதிகாரி அது பற்றி புகார் கடிதம் அனுப்பியிருப்பார். அதையும் என்னிடம்  தருவார். இப்படி விடுப்பு தந்தால் நாங்கள் எப்படி எங்கள் உற்பத்தியை தொடர்வது என்று அதில் எழுதியிருக்கும

” இவர்களுக்கு நான் என்ன பதில் தருவது? ” கோபமாக என்னிடம் கேட்பார்.

” விடுப்பு தருவதும் தராததும் மருத்துவருக்கு உள்ள உரிமை.யாருக்கு விடுப்பு தேவை என்பது அவருக்குத் தெரியும் .இதில் நீங்கள் தலையிட வேண்டாம் . ” என்று எழுதி அனுப்புங்கள் என்பேன் .

” இப்படி எழுதினால் அவர்கள் என்மேல் சுகாதார அமைச்சுக்கு புகார் கடிதம் எழுதி விடுவார்கள்.நான் இங்கு இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா ? ” என்பார் .

” என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? விடுப்பு தந்தாலும் குற்றம்! தராவிட்டாலும் குற்றம்! நான் என்னதான் செய்வது? நூற்று ஐம்பது பேர்களை தொடர்ந்து இடைவிடாமல் பார்ப்பது போதாதென்று இது வேறு பிரச்னையா? ” அவரிடமே திருப்பி கேட்பேன்.

” உண்மையில் வேலைக்குச் செல்ல முடியாதவர்களுக்கு விடுப்பு தந்தால் போதும்.அதற்கு போதுமான  பதிவுகள் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.” இது அவரின் அறிவுரை. இது எனக்குத் தெரிந்ததுதான்.

:          ” சரிங்க டாக்டர். நேரம் போனாலும் பரவாயில்லை. இந்த நிமிடத்திலிருந்து நான் மிகவும் கண்டிப்பாக இருக்கப் போகிறேன். தேவை என்றால் விடுப்பு தருவேன். தேவை இல்லாவிட்டால் அவர் யாராக இருந்தாலும் விடுப்பு தர மாட்டேன்.” இந்த சபதத்துடன் விடை பெற்றேன்.

இனிமேல் எத்தகைய சூழலிலும் யார் மீதும் இரக்கம் கொண்டு விடுப்பு தருவதில்லை என்ற முடிவுடன் மாலை வரை நிதானமாகச் செயல் பட்டேன்.

வேலை முடியும் நேரம்.

கைத் தொலைப்பேசி ஒலித்தது.

அதன் திரையில் தலைமை மருத்துவ அதிகாரியின் பெயர் மின்னியது.

” ஹலோ டாக்டர் . வேறு ஏதும் புகார் வந்துள்ளதா? ” சந்தேகத்துடன் கேட்டேன்.

” இல்லை. இந்த பெயரையும் அடையாள அட்டையின் எண்களையும் குறித்துக் கொள்ளுங்கள். ”

அது ஒரு பெண்ணின் பெயர்.

” இவர் யார் ? எதற்கு இதைத் தருகிறீர்கள்? ” புரியாத நிலையில் அவரிடம் கேட்டேன்.

” இவர் என் மனைவி. இன்று அவர் வேலைக்குச் செல்ல வில்லை. ஒரு எம்.சி எழுதிக்கொண்டு வீட்டுக்கு வாருங்கள். தேநீர் அருந்தி விட்டு போகலாம் .” தொடர்பு துண்டிக்கப்பட்டது !

( முடிந்தது )

 

Series Navigationகதவுமருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

6 Comments

 1. Avatar
  subrabharathimanian says:

  சுவாரஸ்யமான கதை. தமிழர்களின் முகம் தென்படுகிறது. கடைசி டுவிஸ்ட் சிறப்பு. தொழில் களமே கதைக்களமாகியிருபதை ஆசிரியரின் பல கதைகள் சொல்கின்றன

  சுப்ரபாரதிமனியன்

 2. Avatar
  Dr.G.Johnson says:

  கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பர் சுப்ரபாரதிமணியன் அவர்களே.நீங்கள் கூறியுள்ளபடி நான் கதைக் களம் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. தொழில் களமே எனது கதைக்களமாகி விடுகிறது…அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன் .

 3. Avatar
  Dr.G.Johnson says:

  ” தொழில் களமே சிறுகதைக்கு சிறந்த களம் ” என்று கருத்து கூறியுள்ள திரு அரு. நலவேந்தன் அவர்களுக்கு நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

 4. Avatar
  ஆத்மா says:

  மருத்துவர்கள் படும் பாடு குறித்து அறிந்துகொள்ள முடிந்தது… வாழ்த்துக்கள் டாக்டர்… ;)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *