ப.லெட்சுமி,
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
ஈ.வெ.ரா பெரியார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
படைப்பாளர்கள் தற்கால நிகழ்வுகளோடு ஒட்டித் தம் பதிவுகளைப் படைப்புக்களில் பதிய வைக்கின்றனர். இதன் காரணமாக படைப்புகள் உயிர்த்தன்மையுடன் திகழ்கின்றன. கவிஞர் மேத்தா வானம்பாடி இயக்க காலக் கவிஞராவார். தொடர்ந்து புதுக்கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தமிழ்ச்சமுதாயம் பற்றிய பல விமர்சனங்களைத் தந்து தமிழ்ச்சமுதாயத்தின் இக்கட்டுக்களை, ஏற்ற இறக்கங்களை மதிப்பிட்டு அது சரியான வழியில் நடைபோட ஆக்கமும் ஊக்கமும் மிக்கக் கவிதைகளை படைத்தளித்து வருகின்றார்.
‘‘வெவ்வேறு வகையான நாலூரில் சுற்றிவரும் நாடோடிக் கவிஞன் நான், பசித்து அழும் ஏழையர்க்காய்ப் பால் ஊறும் கவி மார்பின் பணி மட்டும் நிற்காது ’’ என்று சமுதாய நோக்கம் மிகுந்த கவிதைகளை அளிப்பதே தன் பணி எனக் கவிதைகளைப் படைத்து வருபவர் மேத்தா ஆவார். இவர் தன் மொழி வளரவேண்டும், தன் சமுகம் வளரவேண்டும் என்ற எண்ணத்தில் பல கவிதைகளைப் புனைந்துள்ளார். இவரின் கவிதைகள் தரும் தமிழ், தமிழ்ச்சமுதாயம் பற்றிய சிந்தனைகளை இக்கட்டுரை தொகுத்தளிக்கின்றது.
தமிழ்மொழி
தமிழ் தமிழர்களின் தாய்மொழி. ஆனால் தமிழ் மொழியைத் தமிழர்களே புறக்கணிக்கும்போக்குத் தற்போது காண்படுகிறது என்பதைத் தன் கவிதைகளில் எடுத்துரைக்கின்றார் மேத்தா.
‘‘தமிழில் எனக்குப்
பேசவராது – என்று
சொல்வதுகூட ஒரு
தகுதியாகி விட்டது’’(மு,மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகள், ப. 99)
என்று தமிழ்மொழியில் தாய்மொழியில் பேசுவதை இழிவாக நினைக்கும் தமிழ்ச்சமுதாயத்தின் அவலத்தை இக்கவிதை எடுத்துரைக்கின்றது.
தமிழ் மொழி வல்லுநர்கள், அறிஞர்கள், புலவர்கள் இவர்களிடத்தில் தமிழ் மொழி வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர்களாலும் தமிழ் மொழி வளரவில்லை என்று கருதுகிறார் மேத்தா,
‘‘தமிழ் என்கிற
தங்கச் சீப்பு
எப்போதும் உள்ளது
எங்கள் கைகளில்
இருந்து பயனென்ன?
ஒவ்வொரு நாளும்
ஒருவரை ஒருவர்
மொட்டையடிக்கிற முயற்சியில்
உள்ளோமே!
எங்களிடம்
எந்தச் சீப்பிருந்து
என்ன பயன்’’ ( மு.மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்,ப. 22)
என்ற இந்தக் கவிதையில் தமிழ் தங்கச் சீப்பு என்ற குறியீடாகக் காட்டப் பெற்றுள்ளது. சீப்பு தலைமுடியை வாரிவிடுகிற நல்ல தொழிலைச் செய்யக் கூடியது. ஆனால் அதற்கு வாய்ப்பு வைக்காமல் தமிழ் அறிந்தவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதாக மேத்தா கருதுகின்றார்.
தமிழ் இனம்
தமிழ் இனம் தமிழ்நாட்டில் காலூன்றி இருப்பதுடன் பல வெளிநாடுகளிலும் தன் பரவலை பரவலாக்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் தமிழினம் பரவியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் எல்லா இடங்களிலும் தமிழினத்திற்குப் பல தடைகள் எழுந்து வருகின்றன. இதனைக் கருத்தி;ல் கொண்டு மேத்தா பல கவிதைகளைப் படைத்தளித்துள்ளார்.
‘‘தமிழினமே தமிழினமே
உனக்கு மட்டும்தான்
உள்ளத்தில் உறுதி உண்டு
ஊர் ஊராக
உதைபடுவதற்கு’’(,மேத்தா, கனவுக் குதிரைகள், ப. 23)
என்ற கவிதை தமிழினம் எங்கு சென்றாலும் உதைபடும் சமுதாயமாக இருக்கிறது என்று கவலை கொள்ளுகின்றார் மேத்தா.
பக்கத்து மாநிலங்களில் கூட தமிழர்கள் கவலையின்றி வாழ முடியாத சூழலை இவரின் மற்றொரு கவிதை தெரிவிக்கின்றது.
‘‘ஆற்றுநீரை
அனுப்புங்கள் என்றோம்
தமிழர்களை
ஒட்டுமொத்தமாக
ஊருக்கு
அனுப்பிவிட்டார்கள்’’( மு.மேத்தா, கனவுக்குதிரைகள்,ப.23)
என்று கர்நாடக மாநிலத்தின் தண்ணீர் தராத நிலையையும் தமிழர்களை விரட்டும் நிலையையும் எளிமையான கவிதை அடிகளால் புரிய வைத்துவிடுகிறார் மேத்தா.
‘‘சுட்டும் விழிச்சுடரால்
சுதந்திர ஈழத்தின்
ஜோதியைத்
தரிசிக்கக் காத்திருந்த
தமிழனின் கண்கள்
சிறைக்குள்ளேயே
சிதைக்கப்பட்டதாம்’’( மு,மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்,ப. 45)
என்று இலங்கையில் நடைபெற்ற தமிழர்க்கெதிரான நடவடிக்கைகளின் சாரத்தை சிற்சில கவியடிகளுக்குள் காட்டி நிற்கிறார் மேத்தா.
‘‘எல்லார்க்கும் விருந்தளித்து
ஏற்றம் பெற்ற
எங்கள் இனம்
மரண தேவதையின்
கோரப்பசிக்கு
விருந்து கொடுத்தபிறகு
அங்கே
இப்போது
அகதியானது’’(மு.மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், ப.61)
என்ற கவிதை இலங்கைத் தமிழர் நிலையின் இறுதியை எடுத்துரைப்பதாக உள்ளது. இக்கவிதை 1984 ஆம் ஆண்டு மேத்தாவால் எழுதப்பெற்ற கவிதை. ஆனால் இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் அவலத்தை அன்றைக்கே எடுத்துரைப்பதாக இது விளங்குகின்றது.
தமிழக அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகத் தமிழினம் தரமிழந்து போனதை ஒரு சிறுகவிதைக்குள் அடக்கிக் காட்டுகின்றார் மேத்தா.
‘‘நீதி கிடைக்குமென்று –மனு
நீதிச் சோழனிடம்- ஒரு
தூது அனுப்பிவைத்தோம்- அவன்
தூதனைக் கொன்றுவிட்டான்
காவல் நிலையத்திலே – சொந்த
கணவன் கண்ணெதிரில்- ஏழைக்
கண்ணகி கற்பிழந்தாள் – தூக்கில்
கோவலன் தொங்குகிறான்’’( மு.மேத்தா, கனவுக்குதிரைகள்,ப. 53
என்ற கவித்தொடர்கள் இக்காலத் தமிழகத்தின் இன்னல் மிக்க சூழல்களை எடுத்துரைப்பதாக உள்ளது.
‘‘எங்கள் தேசத்தில்
ஒவ்வொரு கட்சிக் கொடியும்
உயரத்தில்தான் பறக்கிறது
எங்கள் சகோதரர்களின்
தாழ்ந்து குனிந்த
தலைக் கம்பங்கள் மீது’’( மு,மேத்தா, திருவிழாவில் ஒரு தெரு;பாடகன், ப. 10)
என்று தமிழகத்தின் அரசியல் நிலைப்பாட்டை மேத்தாவின் மேற்கவிதை எடுத்துரைக்கின்றது.
தமிழ், தமிழினம் பற்றிய மேத்தாவின் விமர்சனங்கள் சமுதாயம் திருந்துவதற்கு வாய்;ப்பளிப்பனவாகும். இவரின் இந்த எச்சரிக்கைகளை ஏற்றுத் தமி;ழ்ச்சமுதாயம் நலம் பெற்றால் அது மேத்தாவின் சிந்தனைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
——————————————————————————————————————————————
பயன்கொண்ட நூல்கள்
மு,மேத்தா, மனிதனைத்தேடி, கவிதா பப்ளிகேசன்ஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2004
மு,மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், திருமகள் நிலையம், சென்னை, ஏழாம் பதிப்பு, 2004
மு,மேத்தா, கனவுக்குதிரைகள், திருமகள் நிலையம், சென்னை, நான்காம் பதிப்பு, 2004
மு.மேத்தா, முகத்துக்குமுகம், திருமகள் நிலையம், சென்னை, ஒன்பதாம் பதிப்பு,
one_zero@rediffmail.com
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை