உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு

This entry is part 23 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

 

உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு ஆக்ஸ்ட் 3ஆம் நாள் சீனாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் மூத்தவர்கள், பெய்ஜிங்கிலுள்ள தமிழ் மொழி ஆய்வாளர்கள், இந்தியச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள், சீனாவுக்கான இந்தியா மற்றும் சிங்கப்பூர் தூதரகங்களின் அலுவலர்கள், நேயர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் அதில் கலந்து கொண்டனர்.

நேயர்களின் ஈடுபாடு, பல்வேறு சர்வதேசச் செய்தி ஊடகங்களில் தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சி, சீன வானொலி தமிழ்ச் சேவையின் வளர்ச்சி போக்கு முதலியவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள், ஒத்துழைப்பு, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது முதலியவை குறித்து தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

சீனாவுக்கான இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் திரு கே. ஜேக்கப் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். இந்திய-சீன நட்புறவு வளர்ச்சியில் சீன வானொலி ஆற்றிய பங்கை அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்தியத் தூதர் முனைவர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்தியத் தூதரகப் பணியாளர்களின் சார்பில் தமிழ் ஒலிபரப்பின் பொன்விழாவுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

சீன வானொலி தமிழ் ஒலிப்பரப்பு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் துவங்கியது. சீனாவையும் உலகத்தையும் அறிந்து கொள்ளும் முக்கிய சாளரத்தை, உலகின் பல்வேறு இடங்களில் வாழ்கின்ற தமிழருக்கு, சீன வானொலி தமிழ்ச் சேவை தமது நிகழ்ச்சிகள் மூலம் வழங்கி வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்ச் சேவை, தொடக்கத்தில் நாள்தோறும் 30 நிமிட நேர சிற்றலைவரிசை நிகழ்ச்சிகளை வழங்கியதிலிருந்து, தற்போது சிற்றலைவரிசை, பண்பலை, இணையத்தளம், செல்லிடப்பேசிச் சேவை, தமிழொலி எனும் இதழ் முதலிய பல் ஊடக வடிவங்களுடைய முழு ஊடகப் பரப்பு மேடையாக உருவாகியுள்ளது. சீன வானொலி தமிழ்ச் சேவை இப்போது நாள்தோறும் 8 மணி நேர நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் 4 மணி நேர சிற்றலைவரிசை நிகழ்ச்சிகளும், இலங்கை கொழும்பில் பண்பலையில், 4 மணி நேர நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுகின்றன.

தமிழ் ஒலிபரப்பு வெளிநாடுகளில் மிக அதிக அளவில் நேயர்களைக் கொண்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட நேயர் சங்கத்தின் எண்ணிக்கை 350க்கும் மேலாகும். கடந்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 5இலட்சம் கடிதங்களைத் தமிழ்ச் சேவை பெற்று வருகிறது.

பாரம்பரிய ஒலிபரப்பின் மேம்பாடுகளை நிலைநிறுத்தியதோடு, தமிழ்ச் சேவை புதிய செய்தி ஊடக வளர்ச்சிக்கும் நலன் தரும் முறையில் முயற்சி மேற்கொண்டு, அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது.

2003ஆம் ஆண்டு டிசம்பர் சீன வானொலி தமிழ்ச் சேவையின் இணையத்தளம் திறக்கப்பட்டது. செழிப்பான உள்ளடக்கங்கள், சிறப்பான நிழற்படங்கள் ஆகியவற்றுடன், இணையத்தில் அது விரைவாக முனைப்புடன் காணப்பட்டு, பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சி.பி மோகனின் சீனப் பயணம் எனும் சுற்றுலா பயணப் பதிவேடு, 100 இந்திய இளைஞர்கள் கலந்து கொண்ட இந்திய இளைஞர் நிழற்படப் போட்டி, சீனாவில் தமிழர் எனும் ஒளிப்பதிவுகள் முதலியவை, இணையத்தைப் பயன்படுத்துவோரின் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளன.  2013ஆம் ஆண்டு ஏப்ரல் செல்லிடப்பேசி இணையத்தளம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. இந்திய பல்கலைக்கழகப் பண்பலைக்காகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் இவ்வாண்டு ஒலிபரப்பப்பட்டது.

தமிழொலி எனும் இதழைத் தவிர, சீன-தமிழ் அகராதி, சீனம்-தமிழ் கலை சொல் அகராதி முதலிய தமிழ் மொழி நூல்களையும், தமிழ்ச் சேவை வெளியிட்டுள்ளது. மேலும் சீனாவில் இன்ப உலா எனும் நூலை, தமிழ்ச் சேவையின் தலைவர் கலைமகள் எழுதி, இந்தியாவின் பெரியார் இலக்கிய விருதைப் பெற்றார். சீனரால் எழுதப்பட்டு, இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் நூலாக, அந்த நூல் திகழ்கிறது.

ஒளிவீசும் கடந்த 50 ஆண்டுகளை மீட்டாய்வு செய்தபோது, செய்தி பரப்புதல், பண்பாடு பரிமாற்றம் முதலிய துறைகளில் தமிழ் சேவை மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் தெளிவாகத் தெரிகின்றன. உயிராற்றல் மிக்க செய்தி ஊடகமான தமிழ் சேவை, பல்லூடக முறையில் உண்மையான சீனாவை, உலகின் பல்வேறு இடங்களிலுள்ள தமிழருக்கு அறிமுகப்படுத்தி, மேலும் முழுமையான, வசதியான தகவல் சேவையை, தமிழருக்கு வழங்கி வருகிறது.

எதிர்வரும் காலத்தில் சீன வானொலி தமிழ் பயன்பாட்டு மென்பொருள், கைப்பேசி பயன்படுத்துவோருக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அப்போது, உலகின் பல்வேறு இடங்களில் வாழ் தமிழர்கள், சீனாவை அறிந்து கொள்ள வல்ல மேலும் வசதியான வழி ஒன்றைப் பெறுவர்.

Series Navigationவிக்ரமாதித்யன் கவிதைகள் ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை முன் வைத்து..கவிதைகள்
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *