கஃபாவில் கேட்ட துஆ

This entry is part 12 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

1

யூசுப் ராவுத்தர் ரஜித்
40 ஆண்டுகளாய் அடைகாத்த ஆசை இதோ ஜூலை 12ல் நிறைவேறப் போகிறது. முகம்மது நபி (ஸல்) பிறந்த மண், குர்ஆன் அருளப்பட்ட மண், அல்லாஹ்வால் அடையாளம் காட்டப்பட்டு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டு, நபி இப்ராஹிம் (அலை) அவர்களால் மறுநிர்மானம் செய்யப்பட்டு பிறகு முகமது நபி (ஹல்) அவர்களால் புனிதமாக்கப்பட்டு, ஆண்டாண்டு லட்சோப லட்சம் ஹஜ் பயணிகள் தரிசிக்கும் வகையில் பொது உடமை யாக்கப்பட்ட அந்த கஃபா இருக்கும் மண் அதுதான் மெக்கா மற்றும் நபிகள் நாயகம் அடங்கி யிருக்கும் ரவுலாஷரீப் இருக்கும் மதினாவின் நப்வி பள்ளிவாசல் ஆகிய புனிதத் தலங்களை நேரில் சென்று தரிசிக்கும் ஆசைதான் கதீஜா 40 ஆண்டுகளாய் அடைகாத்த ஆசை. அந்த ஆசைதான் ஜூலை 12ல் உம்ராவாக நிறைவேறப் போகிறது. கதிஜாவின் கணவர் முகம்மது கதிஜாவின் ஆசையை நிறைவேற்ற ஒவ்வொரு ஆண்டும் முயற்சிப்பார். ஆனாலும் தள்ளியே போனது. 40 ஆண்டுகால திருமண வாழ்வில் ஆண்டுக்கணக்காய் அனுபவித்த தாகம் இந்த ஜூலை 12ல் தான் தீரப்போகிறது
விமான டிக்கெட், விசா எல்லாம் வந்த பிறகுதான் முக்கியமானவர்களுக்கெல்லாம் சொல்லவேண்டும் என்று கதிஜா விரும்பினார்.எல்லாம் கிடைத்துவிட்டது. முதலில் தன் மகளுக்குத்தான் சொல்ல வேண்டும்.
கதிஜாவின் மகள் ஹலிமா அமெரிக்காவில் இருக்கிறார். பேத்தி சல்மாவுக்கு இப்போது எட்டு வயது. எல்லாரையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தது. அவர்களுக்குத்தான் முதலில் சொல்லவேண்டும். மகளை அழைக்க கதிஜா தொலைபேசியை எடுத்தபோது அட மகளிடமிருந்தே அழைப்பு வருகிறது. என்ன ஆச்சரியம். கதிஜா பேசுகிறார்.
‘மகளே ஆச்சரியமாய் இருக்கிறதம்மா. உன்னை அழைக்க உன் எண்ணை பதித்துக் கொண்டிருக்கும்போதே உன்னிடமிருந்து அழைப்பு. ஏதும் முக்கியமான தகவலா மகளே.
‘ஆம் அம்மா. நாங்கள் சிங்கப்பூர் வருகிறோம்.’
2
‘எப்போதம்மா?’
அதற்கிடையில் கதிஜா அல்லாஹ்விடம் துஆ கேட்டுக் கொண்டார். ‘அல்லாஹ் நான் உம்ரா செல்லும் தேதியும் ஹலிமா சிங்கப்பூர் வரும் தேதியும் இணக்கமாக இருக்கும்படி செய்துவிடு’ துஆவை முடித்துக்கொண்டு
மீண்டும் கேட்டார் கதிஜா.
‘எப்போதம்மா வருகிறீர்கள். ஆனந்தமாய் இருக்கிறது ஹலிமா. ஐந்து ஆண்டுகளாகிவிட்டது நாம் பிரிந்து’
‘என் மாமனாருக்கு சென்னையில் உடல்நிலை சரியில்லை. ஆகையால் சென்னைக்குப் போக ஏற்பாடுகள் நடக்கிறது. உங்களைப் பார்க்காமால் எப்படியம்மா சென்னைக்குப் போவேன். அதனால்தான் சிங்கப்பூரில் ஐந்து மணிநேரம் ஒதுங்கிவிட்டு பின் பயணத்தைத் தொடர்வதுபோல் டிக்கெட் எடுத்துள்ளோம். இந்தியா போய்விட்டு மீண்டும் சிங்கை வர ஒரு மாத காலமாகும். விமானத்தில் கால் வைத்தால் அம்மாவைப் பார்க்கத்தான் வைப்பேன் என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறேனம்மா. ஜூலை 25ம் தேதி இரவு 8 மணிக்கு வருகிறோம். அன்று இரவு 2 மணிக்குத்தான் எங்களுக்கு சென்னை விமானம். உங்களைக் காண அந்த 6 மணிநேரம் கிடைத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேனம்மா, அதற்குப் பிறகு உங்களைக் காண மீண்டும் ஒரு மாதம் ஆகும்.’
கதிஜா மனதாரச் சொல்லிக் கொண்டார். அல்லாஹு அக்பர். அல்லாஹ் மிகப் பெரியவன். எவ்வளவு அழகாக இந்த தேதிகள் அமைந்துவிட்டன. கதிஜா ஜூலை 23ல் சிங்கப்பூர் திரும்புகிறார். ஹலிமா 25ம் தேதிதான் சிங்கப்பூர் வருகிறார். நெசஞ்சைக் கிள்ளிக் கொண்டே இருந்த இரண்டு ஆசைகள் ஒரே சமயத்தில் நிறைவேறப் போகிறது அதுவும் எந்தச் சிக்கலுமின்றி.
ஜூலை 12. கதிஜாவும் முகம்மதும் எல்லா ஏற்பாடுகளுடன் விமான நிலையம் புறப்பட்டுவிட்டார்கள். கூட நெருங்கிய நண்பர்கள் பலரும் வந்தார்கள். அவர்கள் குழுவில் மொத்தம் 30 பேர். ஹஜ்ரத் முகம்மது சாலி அவர்கள்தான் வழிகாட்டி. முகம்மது சாலி மிகச் சிறந்த மார்க்க அறிஞர். கதிஜாவுக்கு அதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. விமான நிலையத்தில் ஏகப்பட்ட கூட்டம். எல்லாருக்கும் சலாம் சொல்லி விடை பெற்றுக் கொண்டார்கள். எல்லாரும்
3
தன் சலாமை அண்ணல் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு எத்திவைக்கச் சொன்னார்கள். அவரவர்களுக்காக அந்தப் புனித மண்ணில் துஆவும் கேட்கச் சொன்னார்கள். எல்லார் வேண்டுகோளையும் சுமந்துகொண்டு கதிஜாவும் முகம்மதும் விமானம் ஏறினார்கள்.
முதலில் மதினாவுக்குத்தான் சென்றார்கள். மதினாவின் மஸ்ஜித் நப்வி பள்ளிவாசல் கண்கொள்ளா அழகு. அங்குதான் ஈருலகச் சக்கரவர்த்தி அண்ணல் நபி முகம்மது(ஸல்) அவர்களின் அடக்கஸ்தலமான ரவுலாஷரீப் இருக்கிறது. 1500 ஆண்டுகளுக்குமுன் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் தொழுகை வைத்த இடம் அவர்கள் வாழ்ந்த வீடு அத்தனையும் உள்ளடக்கிய இடத்தில்தான் அந்த ரவுலாஷரீப். அதை உள்ளடக்கித்தான் மஸ்ஜித் நப்வி பள்ளிவாசல் நிர்மானிக்கப்பட்டிருக்கிறது. மதினாவில் இருந்தது நான்கு நாட்கள். பல முக்கிய சரித்திரப் புகழ்பெற்ற இடங்களையும் பார்த்தார்கள். பரவசப்பட்டார்கள். அன்று காலை பஜ்ரு தொழுகை முடித்த கையோடு ரவுலா ஷரீஃபுக்கு வெளிப் பக்கமாய் உள்ள பரந்த திடலில் முகம்மது அமர்ந்தார். கதிஜாவும் பெண்கள் பகுதியில் தொழுதுவிட்டு முகம்மதுக்கு அருகிலேயை வந்து அமர்ந்து கொண்டார். முகம்மது சொன்னார்.
‘பார்த்தாயா கதிஜா. இங்கு நாம் அமர்ந்திருக்கிறோம். இதோ வலதுபக்கம் அண்டகோடியின் அரசர் நபி முகம்மது(ஸல்) அவர்கள் அடங்கியிருக்கிறார்கள் இடதுபக்கம் நபிகளாரின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அடங்கியிருக்கிறார்கள். நடுவே நாம் அமர்ந்திருக்கிறோம்.உலகம் படைக்கப்பட்டபோதே இந்த வினாடிகள் எழுதப்பட்டுவிட்டது கதிஜா.’
‘இதற்காகத்தானே தாகித்துக் கொண்டிருந்தோம் இத்தனை காலமாய்.’ என்றார் கதிஜா.
மதினாவை முடித்துக் கொண்டு கதிஜாவும் முகம்மதும் தங்கள் குழுவுடன் மெக்காவுக்கு புறப்பட்டார்கள். ஹஜ்ரத் முகம்மது சாலி சொன்னார்,
நீங்கள் பல ஆண்டுகளாக தொலைக் காட்சியில், பத்திரிகைகளில், பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்ட அந்த கஃபாவை நேரில் பார்க்கப் போகிறீர்கள். உம்ரா கடமைகளை முடித்துவிட்டுத்தான் நாம் தங்கியிருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு நாம் அனைவரும் தயார் நிலையில்தான்
4
இருக்கிறோம். கஃபா இருக்கும் ஹரம் ஷரிஃப் பள்ளிவாசலில் நாம் நுழைந்ததும் சில படிகள் கீழே இறங்க வேண்டும். கொஞ்சம் நடந்த பிறகு மீண்டும் சில படிகள் இறங்க வேண்டும். மீண்டும் கொஞ்சம் நெருங்கிய பிறகுதான் கஃபா முழுமையாகத் தெரியும். அதுவரை தலையைக் குனிந்தபடி செல்லுங்கள். முழுத் தோற்றறமும் தெரியும் இடம் வந்ததும் தலையை நிமிர்த்துங்கள். அதுவரை எட்டி எட்டி கஃபாவைக் காண முயற்சிக்கவேண்டாம். சதுர வடிவில் கருப்புத் துணி போர்த்தப்பட்டு கம்பீரமாய் நிற்கும் அந்தக் கஃபாவை நோக்கித்தான் உலக இஸ்லாமியர்கள் தொழுகிறார்கள். அந்தப் புனித கஃபாவை தொடு தூரத்தில் இருந்து பார்க்கப் போகிறோம். அந்த உணர்ச்சிப் பெருக்கைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அனுபவித்துப் பாருங்கள். அந்த சில நொடிகளில் நீங்கள் கேட்கும் துஆவைக் கபுல் செய்வதாக அல்லாஹ் சொல்கிறான். அந்த முதல் பார்வையில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்.
மெக்கா மண்ணில் கால் வைத்ததும் அப்படியே கவிழ்ந்து சுஜுது செய்து கொண்டார் முகம்மது.
‘இந்த மண்தானே பெருமானாரைப் பெற்ற மண். இங்குதானே குர்ஆன் ஷரீஃப் அருளப்பட்டது. எவ்வளவு புனிதமான இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம் கதிஜா’
எல்லாரும் ஹரம்ஷரீஃப் சென்றார்கள். ஹஜரத் முகம்மது சாலி தலையை நிமிர்த்தச் சொன்னபோது உடம்பெல்லாம் லேசான மின்சாரம் பாய்ந்ததை உணர்ந்தார்கள். அப்படியே கைகளை உயர்த்தி அவரவர்கள் துஆ கேட்டார்கள். நீண்ட நேரம் அழுதழுது துஆ கேட்டார் கதிஜா. முகம்மதும் அப்படித்தான் கேட்டார். ஹஜ்ரத் முகம்மது சாலி சொன்னார்.
‘இந்த கஃபாவின் மேலிருந்து அல்லாஹ்வின் அர்ஸ் அருளைப் பொழிந்து கொண்டேஇருக்கிறது. ஏழு முறை கஃபாவைச் சுற்றி தவாப் செய்யும்போது நீங்களும் அந்த அருள்மழையில் நனையலாம், நம் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் தன் பேரருளால் மன்னிக்கிறான்.’
கதிஜாவிடம் முகம்மது கேட்டார்.
‘கஃபாவைப் பார்த்ததும் என்ன துஆ கேட்டாய் கதிஜா.’

5
‘மகுத்தாகும்வரை நம் தேவைக்காக யாரிடமும் கையேந்தக் கூடாது என்று கேட்டேன். மகள் ஹலிமா சுகமாக சிங்கை வரவேண்டும். கட்டித் தழுவி பாசம் பொழிய வேண்டும். பேத்தி சல்மாவை ஆரத்தழுவ வேண்டும். அவர்கள் சிங்கப்பூருக்கு நிரந்தரமாய் வந்துவிடவேண்டும் என்றெல்லாம் கேட்டேன்.’
‘நானும் அதேதான் கேட்டேன். மகளைப் பார்க்கும் அந்த வினாடியையும் நான் எண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன்.’
கஃபாவை சுற்றியதோடு உம்ரா கடமைகளை ஒவ்வொன்றாக அதே சமயம் முழுமையாகச் செய்து முடித்தார்கள்.
அடுத்த நாள் காலை கதிஜாவுக்கு லேசான காய்ச்சல். சிங்கப்பூரின் வெப்பம் அதிகமாகப் போனால் 33 டிகிரிதான். மெக்காவின் சாதாரண வெப்பநிலையே 37 டிகிரி. வானத்தில் துண்டு மேகம் காணமுடியாது. இந்த வெப்பநிலை மாறுபாடு கதிஜாவுக்கு காய்ச்சலை கிளப்பிவிட்டது. இன்று தேதி ஜூலை 22. நாளை சிங்கப்பூர் திரும்பவேண்டும். மகளைப் பார்க்கப் போகும் ஆனந்தம், கஃபாவைத் தரிசித்துவிட்ட சிலிர்ப்பு இதற்கிடையே காய்ச்சல் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை
ஜூலை 23. சிங்கப்பூருக்குப் புறப்பட விமானம் ஏறியபோது கதிஜாவுக்கு லேசான காய்ச்சல் இருந்துகொண்டுதான் இருந்தது. விமானத்தில் ஒரு துண்டுச் சீட்டு கொடுத்தார்கள். சீனாவிலும் சவுதி அரேபியாவிலும் ஒருவகை நச்சுக்கிருமி பரவிக்கொண்டிருக்கிறது. நீங்கள் சிங்கப்பூர் சென்றதும் காய்ச்சல் சளி இருக்குமானால் உடனே மருத்துவரைப் பாருங்கள் என்று அந்தத் துண்டுச் சீட்டு அறிவுறுத்தியது.
23ம் தேதி மதியம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்கள். இன்னும் கதிஜாவுக்கு காய்ச்சல்தான்..இரவு நன்றாகத் தூங்கினார். 24ம் தேதி காய்ச்சல் அதிகமானது. வெப்பமானி 39ஐத் தொட்டது. கலவரப்பட்டார் முகம்மது. உடனே தாங்கள் வழக்கமாகப் பார்க்கும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
வெப்பநிலையைப் பார்த்ததும் மருத்துவர் அதிர்ந்தார் பின் கேட்டார்.
‘நீங்கள் ஏன் மொட்டை போட்டிருக்கிறீர்கள் முகம்மது?’
6
‘நாங்கள் மெக்கா போய்விட்டு நேற்றுதான் வந்தோம்.’
கேட்ட மாத்திரத்தில் பயங்கரக் கனவு கண்டு விழிப்பதுபோல் விழித்தார் மருத்துவர். தன் இருக்கையிலிருந்து எகிறிக் குதித்தார். முகக் கவசங்களைக் கொண்டுவரச் சொல்லி தாதிகளிடம் இரைந்தார். ஆளுக்கொன்று அணிந்து கொள்ளுங்கள். கதவை மூடுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவர் கிருமிகள் தாக்காத உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தார். பின் சொன்னார்.
‘நான் உங்களை வீட்டுக்கு அனுப்பினால் நானும் குற்றவாளியாகிவிடுவேன். சவதியிலிருந்து வந்திருக்கிறீர்கள். நாங்கள் சந்தேகப்படும் வைரஸ் உங்களைத் தாக்கியிருக்கலாம் என்று பயப்படுகிறேன்.’
டன்டாக்செங் மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து கதிஜாவையும் முகம்மதையும் அனுப்பிவைத்தார்.
டன்டாக்செங் மருத்துவமனையில் வெளிநாடு சென்று திரும்பியோர் பிரிவு. தாதிகள் முகமூடிகளுடன் அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். கதிஜா சக்கர நாற்காலியோடு இறக்கப்பட்டார். முகம்மதை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு பரிசோதனைக் கூடத்துக்கு கதிஜாவை வேகவேகமாய்த் தள்ளிச் சென்றார்கள். 100, 200 மில்லி ரத்தம் பல்வேறு தவணைகளாய் உறிஞ்சப்பட்டது. எக்ஸ் கதிர் சோதனை மற்றும் பெயர் தெரியாத பல சோதனைகள். கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்குப்பின் தாதி சொன்னார்.கதிஜாவை தொற்று நோய்ப் பிரிவுக்கு கொண்டு செல்லப் போகிறோம். சோதனைகளின் முடிவுகள் தெரியும்வரை பொறுத்திருங்கள்.அவசரச் செய்திக்கு இதோ இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்றார்.
முகம்மதும் கதிஜாவும் தொற்றுநோய்ப் பிரிவுக்கு அழைத்துவரப்பட்டார்கள். அறை எண் ஏ1. இரண்டு கதவுகள் தாண்டி பின் படுக்கை. படுக்கையில் படுக்கவைத்துவிட்டு தாதி சொன்னார்
‘கதிஜாவிடம் தொலைபேசி இருக்கட்டும். பேசிக்கொள்ளுங்கள். நீங்கள் இனிமேல் இங்கு வரமுடியாது. நாங்களே கூட தகுந்த பாதுகாப்பின்றி இந்த அறைக்குள் நுழைய முடியாது. பரிசோதனை முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை மதியத்துக்குள் வந்துவிடும். நல்லதே நடக்க பிரார்த்திப்போம்’

7
பொழுது வடிந்தது. ஜூலை 25. இரவு 8.30க்கு ஹலிமா வருகிறார். மதியம் இரண்டு மணிவரை ஒரு செய்தியும் இல்லை. தொலைபேசியில் உடனே தொடர்பு கொண்டார் முகம்மது.
அறை எண் ஏ1ல் இருக்கும் கதிஜாவின் கணவர் பேசுகிறேன். சோதனை முடிவுகள் வந்துவிட்டதா? எப்போது என் மனைவியை நான் வீட்டுக்கு அழைத்துச் செல்வது?
‘கொஞ்சம் அப்படியே காத்திருங்கள். மருத்துவரைக் கேட்டு தகவல் தருகிறேன்.’
பதட்டம் நிறைந்த அமைதியாய்ச் சில நிமிடங்கள் கழிந்தன. இதோ குரல் மீண்டும் கேட்கிறது.
‘இந்த நிமிடம் வரை எதுவும் தெரியவில்லை.’
‘எப்போது தெரியும்’
‘சொல்லமுடியாது. மாலை 4 மணிக்குள் வந்துவிட்டால் அதுவும் ஒரு நல்ல செய்தியாக இருந்துவிட்டால் வீட்டுக்கு அனுப்பும் உத்தரவில் கையொப்பமிடும் மருத்துவர் இருப்பார். அனுப்பிவிடலாம். அதற்குப் பிறகும் தாமதமானால் நாளைதான் அனுப்பமுடியும்.’
கதிஜா அழைத்தார்
‘என்னங்க நம் மகளைக் காண எவ்வளவு துஆ கேட்டேன். நம் மகள் இந்தியா சென்று திரும்பிய பின்தான் பார்க்க முடியுமா? எவ்வளவு ஆசை ஆசையாக ஹவிமா வருவாள். அந்தப் பிஞ்சுமனம் தாங்காதுங்க. என் மீது எதுவும் பாவக் கணக்கு இருக்கிறதா? இது கொடுமையான தனிமை.’
கரைபுரண்டது கண்ணீர். முகம்மது சொன்னார்.
‘பொறுமை அவசியம் கதிஜா. அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் அல்லாஹ்வுக்கு முன் எல்லாரும் சக்தியற்றுக் கிடக்கிறோம். நம்மால் முடிந்தது. பொறுத்திருப்பது மட்டுமே’

8
5 மணி. தாதியை மீண்டும் தொடர்பு கொண்டார் முகம்மது. குரலைக் கேட்டதும் தாதி விளங்கிக் கொண்டார்.
‘ஐயா ஒரு நல்ல செய்தி. முடிவுகள் வந்துவிட்டன. நாம் பயந்த அந்த நச்சுக்கிருமி இல்லை. இது வெறும் ஃப்ளூதான். அவர் வீட்டுக்குப் போகவாம் நல்ல வேளை. வீட்டுக்கு அனுப்பும் உத்தரவில் கையெழுத்திடும் மருத்துவர் இங்குதான் இருக்கிறார். ஏதோ அவசர ஆலோசனை. அவர் ஆறு மணிக்குத்தான் செல்வார். நீங்கள் உடனே புறப்பட்டு வாருங்கள். நான் எப்படியும் கையெழுத்து வாங்கிவிடுகிறேன்.’
மணி 5.45. வெளியில் இருந்தபடி முகம்மது தாதியை அழைத்தார்.
‘நான் உங்களை அழைக்க நினைத்தேன். நீங்கள் அழைத்துவிட்டீர்கள். கையெழுத்து வாங்கிவிட்டேன். நிச்சயமாக உங்கள் மகளை கதிஜா சந்தித்துவிட முடியும். நீங்கள் பதட்டமின்றி இருங்கள். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. சில மருந்துகள் வாங்கவேண்டும். இப்போதே நான் கதிஜாவை டன்டாக்செங் மருத்து மனையின் மருந்துப் பிரிவுக்கு அனுப்பிவிடுகிறேன். நீங்கள் அங்கு சென்று கதிஜாவை அழைத்துக் கொள்ளுங்கள்.’
அல்ஹம்துவில்லா. அல்லாஹ் மிகப் பெரியவன். உடனே முகம்மது மருந்துப் பிரிவுக்கு விரைந்தார். கதிஜா அங்கே காத்துக் கொண்டிருந்தார். ஒரு கையைப் பிடித்தபடி நெற்றியை நீவினார். நெற்றியில் வைத்த கையை அழுந்தப் பிடித்தார் கதிஜா. கை லேசாக நடுங்கியது
‘சரி அடுத்ததைக் கவனிப்போம் கதிஜா’
மருந்துகள் வாங்கப்பட்டன. வீட்டுக்கச் சென்றுவிட்டு சரியாக 7.30க்குப் புறப்பட திட்டம். விமானம் 8.30க்குத் தரையிறங்கு மென்று குறுஞ்செய்தி அறிவித்தது. புறப்பட்டனர்.
விமானம் தரையிறங்கிவிட்டது. கடவுச் சீட்டுகளுடன் குடிநுழைவ அதிகாரியிடம் ஹலிமா ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். அம்மாவைப் பார்த்துவிட்டு கையசைத்தார். இங்கே கதிஜாவும் முகம்மதும் கையசைத்தார்கள். ஒரு மின்வெட்டு கரங்களுக்கிடையே கடந்து சென்றது. கண்ணாடிக் கதவுகள் தாண்டி ஹலிமா வெளியே வந்தார். கதிஜாவை
9
அப்படியே கட்டிக் கொண்டார். அவர்கள் இருவரையும் சேர்த்து சல்மா அணைத்துக் கொண்டாள். மருமகர் உமரும் இதோ வந்துவிட்டார். சலாம் சொல்லிவிட்டு மருமகரை அணைத்துக் கொண்டார் முகம்மது. உணர்ச்சிமயமான நிமிடங்கள் கடந்தன. கதிஜாவின் விழிக்குளமும் முகம்மதின் விழிக்குளமும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டன. அந்தப் பார்வை அவர்களின் நாற்பதாண்டு வாழ்க்கைச் சுருக்கத்தை வாசித்துக் காட்டியது

Series Navigationசதக்காபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ” கஃபாவில் கேட்ட துஆ ” சிறுகதையை மிகவும் அழகாக சித்தரித்துள்ளார் திரு யூசுப் ராவுத்தர் ரசீத்.புனித மெக்காவுக்கு இஸ்லாமிய அன்பர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதை நாம் அறிந்திருந்தாலும் அங்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைத் தெரியாமல் இருந்து வருகிறோம். கதாசிரியர் கதையினூடே நம்மையும் அங்கு கொண்டு சென்றுள்ளார்.40 ஆண்டுகளாக நிறைவேறாத ஆசை கதீஜாவுக்கு கிடைத்த தருணத்தில் , 5 வருடங்களுக்குப் பின் மகள் ஹலிமாவையும் , பேத்தி சல்மாவையும் ஒருசேர காணும் வாய்ப்பும் கிட்டிய நேரத்தில் கடும் காய்ச்சல் வந்த காரணத்தால் , மருத்துவமனையிலிருந்து வெளிவர முடியாத சூழலில் உண்டான ஏமாற்றமும் ,பரபரப்பும் நன்கு எழுதப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை வீண் போகாது என்று கதையை முடித்துள்ள விதம் இந்த ரமலான் பண்டிகைக்கு ஏற்ற கதையாக சிறப்பூட்டுகிறது….வாழ்த்துகள் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் அவர்களே!….டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *