ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் புத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் எழுந்தார் “இன்று தீட்சை பெறவிருக்கும் ராகுலன் சங்கத்தின் முன் சபதமேற்பார்” என்று அறிவித்தார்.
காவி உடை தரித்த ராகுலன் அனைவரின் முன் வந்து இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்
“புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி”
என்று மூன்று முறை மொழிந்தார்.
பெரியவர் “ராகுலரே.தங்களுக்குத் தாம் ஏற்க வேண்டிய ஐந்து சபதங்கள் தெரியுமா?” என வினவினார்.
“தெரியும் மூத்த பிட்சு அவர்களே”
“தாங்கள் அந்த சபதங்களை மனமுவந்து ஏற்கிறீர்களா?”
“ஆம் ஐயா. மனமுவந்து ஏற்கிறேன்”
“அந்த சபதங்களை என்றும் கடைப்பிடிப்பீர்களா?”
“என்றும் வழுவாது கடைப்பிடிப்பேன் ஐயா”
“நீங்கள் முறைப்படி ஐந்து சபதங்களை இப்போது செய்யுங்கள்”
“புத்தரின் பெயரால், தர்மத்தின் பெயரால், சங்கத்தின் பெயரால் நான் சபதம் செய்கிறேன்”
“நான் எந்த உயிரையும் கொல்ல மாட்டேன். இது சத்தியம்.
பிட்சையாகத் தரப்படாத எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். இது சத்தியம்.
காம வசப்பட்டு சரீர சுகம் தரும் செயல்களில் ஈடுபட மாட்டேன். இது சத்தியம்.
பொய் பேச மாட்டேன். பிறர் மனம் புண்படப் பேச மாட்டேன். இது சத்தியம்.
மனதையும் ஒழுக்கத்தையும் சிதற அடித்துத் தடுமாற வைக்கும் மதுவையோ, போதை தரும் வேறு எதையுமோ உட்கொள்ள மாட்டேன். இது சத்தியம்.
இந்த நெறிகளினின்று நான் என்றுமே வழுவாது நிற்பேன்.
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி”
காவி உடையும் மழித்த தலையுமாயிருந்த ராகுலனைப் பார்த்து யசோதராவின் கண்களில் நீர் வழிந்தது.
மூத்த பிட்சு “ராகுலரே. இன்று முதல் தாங்கள் சங்கத்தின் பிட்சுவாக தீட்சை பெற்றீர்கள். நெறி வழுவாது தர்ம வழியில் நடப்பீராக” என்றார். ராகுலன் இரு கரம் கூப்பி அனைவரையும் வணங்கி மற்ற பிட்சுக்களுடன் சென்று அமர்ந்தார்.
புத்தர் எழுந்து நின்று பேசத் துவங்கினார்” ஒரு பணக்கார மனிதர் காட்டுக்குள் வழி தவறிப் போய் விட்டார். அவரால் ஒரு விதத்திலும் தாம் வந்த வழியைக் கண்டுபிடிக்க இயலவில்லை. பகல் கடந்து மாலை நேரம் நெருங்கும் போது அவருக்கு மிகவும் அச்சமாகி விட்டது. இரவில் எங்கே தங்குவது? வன விலங்குகள் ஏதேனும் தம்மைத் தாக்கினால் என்ன் செய்வது? எப்படித் தப்பிப்பது? உணவுக்கு என்ன செய்வது? நாளை காலையில் கூட வழி தெரியும் என்று என்ன உத்தரவாதம்?”
இப்படிப் பலவாறாக அவர் மனம் பதைத்த போது, அதிர்ஷ்டவசமாக, ஒரு வனவாசி அவர் கண்ணில் தென்பட்டார். தனக்கு உதவும்படி இவர் அவரிடம் வேண்டினார். ஒருவரது பாஷை மற்றவருக்குப் புரியாததால் வனவாசி தொடர்ந்து நடந்து செல்ல, நகரவாசியும் அவரைத் தொடர்ந்து சென்றார். அதுவே பாதுகாப்பானது என்று அவர் கருதினார்.
வனவாசிகளின் குடியிருப்பில் இருவரும் நுழைந்தனர். அவர்களின் தலைவருக்கோ வேறு யாருக்குமோ நகரவாசி பேசும் பாஷை புரியவில்லை. தம்மிடம் இருந்த சில பொற் காசுகளை எடுத்து அவர்களிடம் கொடுத்தார் அந்த செல்வந்தர். அதை சில நொடிகள் மட்டுமே ஆர்வத்துடன் பார்த்து விட்டு அவரிடமே திருப்பிக் கொடுத்தார் வனவாசித் தலைவர்.
பாஷை புரியாவிட்டாலும் அவருக்குத் தங்க இடமும் உணவும் கொடுத்து, மறு நாள் காலை காட்டு எல்லை வரை கொண்டு போய் விட்டார்கள் அந்த வனவாசிகள். பணமும் காசும் தேவைப்படாத தன்னிறைவான திருப்தியான வாழ்க்கை வாழும் அவர்களைப் பார்த்து செல்வந்தருக்கு வியப்பாக இருந்தது. அவர்கள் தமது குடில்களில் ஒரு நாள் தேவைக்கு மேல் உணவு சேமித்திருக்கவில்லை. தங்கம் செல்லுபடியாகாத ஒரு ஊரைத் தம் வாழ்நாளிலேயே அன்று தான் அவர் முதல் முறையாகப் பார்த்தார். அவருக்கு அந்த வாழ்க்கை முறை விளங்கவே இல்லை.
நகரத்தில் செல்வத்தை அல்லது உயர்குடிப் பிறப்பை அல்லது அதிகார பலத்தை வைத்தே ஒருவரது மதிப்பு இருக்கிறது. செல்வமும் சுகமும் அதிகாரமும் சமுதாய உறவுகளை முடிவு செய்கின்றன. இதிலிருந்து விலகி நின்று மெய் ஞானம் தேடும் வழியில் பௌத்த சங்கத்தில் நாம் அனைவரும் அந்த வனவாசிகளைப் போல் தன்னிறைவானவர்கள். சுகம் பணம் அதிகாரம் தேடாமல் ஞானத் தேடலில் நிலைப்பதற்காக ஒன்று பட்டவர்கள். நம்முடன் இன்று புதிய சகபயணியாக ராகுலன் புத்த பிட்சுவாக இணைந்திருக்கிறார்.
எது விலை மதிப்பற்றது?
எதை விலை கொடுத்து வாங்க இயலாதோ அதுவே விலை மதிப்பற்றது. அதே போல் எந்த விழிப்பும் ஞானத்தேடலும் எல்லா உயிரையும் தானாகவே எண்ணி அவர்களின் நலம் பேணும்படி நம்மை வழி நடத்துமோ அதற்காகவே தம் வாழ்க்கையையே அர்ப்பணிப்பது பொருந்தும்.
பௌத்தத்தில் நாம் அகம்பாவமும் போகம் தேடும் காமமும் இல்லாத விழிப்பில் நிலைக்கிறோம். நம்மை நாமே நெறிப்படுத்திக் கொள்கிறோம். நம்மை நாமே அதனாலேயே ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று ஒன்று படுவது பெரிய பேறாகும்.
மகத ராணி கேமா அந்தப் புரத்திலிருந்து வெளிப்பட்டு நந்தவனம் வழியே நடந்தார். அந்தப்புரம் மன்னரின் கோடைக்கால அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்தது. குளிர்கால, மாரிக்கால அரண்மனைகளும் அருகருகே இருந்தன. மற்ற இரு அரண்மனைகளில் ராணி கேமாவுக்கு மட்டுமே அறைகள் இருந்தன.
மன்னரின் மாளிகை வளாகத்தை ஒட்டியே இளவரசன் அஜாத சத்ருவின் மாளிகை இருந்தது. பட்டாபிஷேகத்துக்குப் பின் அஜாதசத்ரு மன்னரின் மாளிகையில் இருக்கத் துவங்கினார்.
ராணி கேமா நந்தவனம் வழியே அஜாத சத்ருவின் மாளிகையின் முன்பகுதியை அடைந்தார். முன்பெல்லாம் கல்தூண் தீபங்களும் சரவிளக்குகளுமாகப் பளிச்சென்று ஒளி விடும் அரண்மனை, குறைந்த அளவு தீப்பந்தங்கள் ஆங்காங்கே கொக்கிகளில் மாட்டியிருப்பதாகக் களையிழந்து காணப் பட்டது.
முன் வாயிற் காவலர்கள் ராணிக்கு வணங்கி வழி விட்டனர். ராணி மேற்புறம் செல்லும் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளத்துக்குச் சென்றடைந்தார். இரண்டு காவலாளிகள் நுழைவாயிலில் இருந்த அறையை அவர் நெருங்கிய போது “மன்னிக்க வேண்டும் மகாராணி, தாங்கள் உணவு எதையும் எடுத்து வரவில்லையே” என்று வினவினான்.
“இல்லை”
“எங்கள் கடமை தங்களுக்கு இந்த அறைக்குள்ளே மன்னருக்கு உணவு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று நினைவு படுத்துவதாகும்”
“அதை நான் அறிவேன்” என்று ராணி முன்னே நகர அவர்கள் இருவரும் வழி விட்டனர்.
ஒருவன் ராணியின் பின்னாடியே வந்து தனது கையிலிருந்த தீப்பந்தத்தினால் மன்னரின் படுக்கைக்கு அருகில் இருந்த கல் தூண் தீபத்தை ஏற்றினான்.
மங்கிய ஒளியில் தாடியும் மீசையும் பஞ்சடைந்த கண்களுமாக இருந்த பிம்பிசாரரைப் பார்க்கும் போதெல்லாம் ராணி கேமாவால் கண்ணீரைக் கட்டுப் படுத்த இயலவில்லை.
மட்பாண்டத்தில் இருந்து நீரை உள்ளங்கையில் ஊற்றி மன்னரின் முகத்தைத் துடைத்தார் மகாராணி. தயங்கி அருகேயே நின்ற காவலனிடம் “நீ வெளியே இரு. நான் மன்னரிடம் தனிமையில் பேச வேண்டும்” என்ற உடன் அவன் தலை வணங்கி வெளியே சென்றான்.
அவன் நகர்ந்து ஓரிரு நிமிடங்கள் சென்ற பின் திரும்பிப் பார்த்துத் தனிமையை உறுதி செய்து கொண்ட மகாராணி, தமது மேலங்கியில் கழுத்துப் பக்கமாக இருந்த ஒரு முடிச்சை அவிழ்த்தார். இருபக்க முடிச்சும் அவிழ்ந்ததும் அதனுள் இருந்த மூன்று சப்பாத்திகள் தென்பட்டன.ஒரு பருப்பு வகைக் கூட்டு அதனுடன் ரொட்டிகளுக்குள்ளே இருந்தது. முதல் வாயை அவருக்கு ராணி ஊட்டும் போது அவருக்கு விக்கலெடுக்க , காவலாளி வந்தான். ராணி சப்பாத்தியை மறைத்து விட்டு , மட்பாண்டத்தில் இருந்த நீரைக் கோப்பையில் ஊற்றி அவருக்குப் புகட்டினார். காவலன் திரும்பிச் சென்றான்.
கண்களில் இருந்து பீறிடும் கண்ணீர் கன்னத்தில் வழிய ஒவ்வொரு வாயாக விழுங்கினார் பிம்பிசாரார்.
உண்டு முடித்ததும் அவரது முகத்தைத் துடைத்து விட்டு அவரைத் தம் மடியில் கிடத்திக் கொண்டு,” வேண்டாம் பட்டாபிஷேகம் என்ற என் கருத்தை அன்று நிராகரித்தீர்கள். இன்று தங்களுக்கு இப்படிப் பட்டினியும் சிறைவாசமும் தந்து விட்டானே! நீங்கள் அரியணையில் இருந்திருந்தால் இதையெல்லாம் அவன் செய்திருக்க முடியுமா?”
“கேமா.. நான் அன்றைக்கு உனக்குக் கூறிய பதிலை நீ அப்போதும் புரிந்து கொள்ளவில்லை. இப்போதாவது தெளிவாக அறிந்து கொள். கலகமும் தேசத்துக்கு உள்ளே போரும் நிகழ்ந்திருக்கும் – நான் அவனுக்கு மகுடம் சூட்டாமல் இருந்திருந்தால் கோசல நாட்டுப் படையுடன் சேர்ந்து வந்து அவன் மகதத்தையே துண்டாடி இருப்பான். மகத மக்களும் படைகளும் பேரழிவை அடைந்திருப்பார்கள். போரினால் பல குடும்பங்களும் கிராமங்களும் நிர்மூலமாகி இருக்கும்”
“எளிதாக இதைச் சொல்லுகிறீர்கள் மாமன்னரே. ஒரு தாயாக, என் மகன் செய்யும் இழிச் செயல் என்னை மிகவும் வேதனைக்கு ஆட்படுத்துகிறது. கணவன் பட்டினியாய், தனிமைச் சிறையில் வாடும் போது , உணவை ஒளித்து வந்து தரும் அவல நிலை எவ்வளவு துயரமானது என்று எனக்கு மட்டுமே தெரியும்”
“கேமா. நம் பெருமையின் சின்னமாக நினைத்த நம் மகன், என்னை சிறுமைப் படுத்தித் தானும் கீழானவனாய் செயற்படுவதில் இருந்து என்ன தெரிகிறது சொல்”
“என்ன தெரிகிறது ஸ்வாமி? நாம் பெற்றது சத்து இல்லை விஷ வித்து என்று தெரிகிறது”
‘அப்படி இல்லை கேமா. … எந்த மகன் நம் அகந்தையின் சின்னமாக இருந்தானோ, அந்த சின்னம் உடைபட்டதில் இருந்து நம் அகம்பாவம் அழியும் நல்ல காரியமும் நடக்கிறது என்று தானே பொருள்?”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் மாமன்னரே?”
“ஒரு முதியவர், ஒரு பிணம், ஒரு துறவி மூவரையும் பார்த்த சாக்கிய முனியான புத்தருக்கு வாழ்வில் நிலையாமை புரிந்து ஞானம் ஒன்றே நிலையானது என்று அதைத் தேடினார். அஜாத சத்ரு சற்றே கடுமையாக எனக்கு அந்த வழியைக் காட்டி விட்டான். புத்தரின் புனித மொழிகளைக் கேட்டு அவரது பாதம் பணியக் கிடைத்த வாய்ப்பு மட்டுமே இப்போது பெரும் பேறாகத் தோன்றுகிறது. மக்தத்து மகாராஜாவாக வாழ்ந்ததெல்லாம் அகம்பாவத்தின் வெவ்வேறு நிலைகளாகவே தோன்றுகின்றன”
“நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும் அஜாதசத்ருவின் அராஜகத்தை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது”
“அதை ஏற்றுக் கொள்வது என்பது வேறு. அதை முழுமையாய்ப் புரிந்து கொள்ளுவது என்பது வேறு கேமா. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் இருந்து வெளியேறும் வழி தெரியாத பாலகன் அபிமன்யுவை அவனது தாத்தாவும் சித்தப்பாக்களுமே யுத்த நெறிகளை மீறிக் கொன்றார்கள். அன்றும் குடிமக்கள் ராஜ விசுவாசத்தால் மௌனம் சாதித்தார்கள். இன்றும் அதுவே நிலை. மகதம் என்பது ராஜ குடும்பம் மட்டுமல்ல கேமா. மகதம் முழுவதும் இதே சுய நலமும், அதிகார போக வெறியும் விரிந்திருக்கின்றன. அவற்றின் வடிவங்கள் மாறலாம். அவ்வளவே. புத்தரின் போதனைகள் சரியான கால கட்டத்தில் ம்கதத்தை வந்து அடைந்துள்ளன. நம் மக்களும் வரலாறும் பிம்பிசாரனுக்கு நிகழ்ந்தவற்றில் இருந்து படிப்பினை பெறப் போகிறார்கள்”
‘அவ்வாறெனில் மகாபாரத காலத்துக்குப் பின்பு மறுபடி இப்படி ஒரு விபரீதம் ஏன் நிகழ்ந்தது ஸ்வாமி? மகாபாரதத்தை யாரும் ஆழ்ந்து வாசித்து நல்லது கெட்டது எது என்று புரிந்து கொள்ளவில்லையா? மக்களும் ராஜ வம்சத்தவனான அஜாத சத்துருவும் மறுபடி ஒரு அநியாயத்தைச் செய்தோ, சாட்சி ஆகியோ பங்களித்தவர்கள் ஆகி விட்டார்களே. இதை நீங்கள் எப்படி மன்னா விளங்கிக் கொள்ளச் சொல்லுகிறீர்கள் ?”
“காமமும் அகந்தையும் மனித மனதை மிகவும் பலவீனமாக்கி விடுகின்றன கேமா. கடுமையான நெறிகளை புத்தர் ஏன் வைத்தார்? பிட்சை எடுத்து அகம்பாவத்தை ஒழித்து விடு என்று ஏன் சொல்கிறார்? காமமும் அகந்தையும் நோயாக மனதைப் பீடித்து அதை வலிமை அற்றதாக ஆக்கி விடுகின்றன. ஞானத்தையே பற்றி நிறக வேண்ர்டும் நாம்.
இந்த சூட்சமத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் சாக்கிய வம்ச ராணிகளும் , இளவரசர்களுமே. நான் பிட்சுவாக தீட்சை பெற்றிருக்க வேண்டும். இன்று தனிமைச் சிறையில் புத்தரின் அருள் வேண்டி தவமிருக்கிறேன்” தொர்டர்ந்து பேச முடியாமல் களைப்புற்று மன்னர் விழிகளை மூடிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து ” காலம் பல தலைமுறைகளைத் தாண்டிக் கடந்தாலும் மனித மனம் தன்னைத் தீமையின் பிடியிலிருந்து காத்துக் கொள்ள புத்த தேவனின் நெறிகளை நாடியே உய்ய வேண்டும்.” என்றார்.
காவலாளிகள் உள்ளே வந்து நேரமானதை நினைவு படுத்த ராணி கேமா கண்ணீருடன் வெளியேறினார்.
- 1. சாகசச் செயல் வீரன்
- தீவு
- புகழ் பெற்ற ஏழைகள் -18
- ஐயனார் கோயில் குதிரை வீரன்
- மெங்கின் பயணம்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 13
- சூறாவளி ( தொடர்ச்சி )
- மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்
- இன்ப அதிர்ச்சி
- நீங்காத நினைவுகள் 13
- சதக்கா
- கஃபாவில் கேட்ட துஆ
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31
- அசல் துக்ளக் இதுதானோ?
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’
- புது ரூபாய் நோட்டு
- தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 21
- குமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -35 என்னைப் பற்றிய பாடல் – 28 (Song of Myself) எனது காதலிகள் .. !
- வணக்கம் அநிருத்
- விக்ரமாதித்யன் கவிதைகள் ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை முன் வைத்து..
- உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு
- கவிதைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -13 மூன்று அங்க நாடகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! மிகப் பெரும் புதிய வால்மீன் உற்பத்தி வளையத் தட்டு ஏற்பாடு கண்டுபிடிப்பு
- வேர் மறந்த தளிர்கள் – 23-24-25