1. சாகசச் செயல் வீரன்

This entry is part 1 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

ஒரு படப்பிடிப்பு அரங்கம்.

நாயகன் சண்டையிடும் காட்சி.

படப்பிடிப்புக் குழுவினர் தயாராய் இருக்கின்றனர்.

காட்சி சற்றே ஆபத்தானது என்பதால் கதாநாயகனுக்கு பதிலாக ஸ்டண்ட் நடிகர் அழைக்கப்பட்டார்.

இயக்குநர் காட்சியைப் பற்றி ஸ்டண்ட் கலைஞர்களின் ஒருங்கிணைப்பாளரிடம் விவரித்தார்.

“நாயகன் வில்லன் நடிகருடன் சண்டையிட்டுக் கொண்டே பதினைந்தடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும், அதுவும் பின் பக்கமாக” என்று தன் திட்டத்தைச் சொன்னார் இயக்குநர்.

“இதை எளிதில் செய்துவிடுவார் என் ஆள்” என்றார் ஒருங்கிணைப்பாளர் வேகமாக.

“காட்சிக்குத் தயாராகச் சொல்லுங்கள்” என்றார் இயக்குநர்.

“குதிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இடுப்பில் கட்ட கம்பி, கீழே வலையோ அட்டை டப்பாக்களோ போடுங்கள்..” என்று ஆணையிட்டார் ஒருங்கிணைப்பாளர்.

அவர் சொல்லச் சொல்ல இடைமறித்த இயக்குநர் “இந்தக் காட்சிக்கு அதெல்லாம் தேவையில்லை” என்றார்.

“உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் உயிரைப் பணயம் வைக்கும் என்னுடைய ஆளுக்கு நிச்சயம் அது தேவை” என்றார் ஒருங்கிணைப்பாளர்.

“இடுப்பில் கம்பியைக் கட்டிக் கொண்டு குதித்தால், குதிப்பது இயல்பாக இல்லாமல் ஏதோ ஒரு பொம்மை குதிப்பது போல இருக்கும். எனக்கு அப்படி இருக்கக் கூடாது” என்றார் தன் விருப்பத்தை.

அதற்கு ஒருங்கிணைப்பாளர் “என்னுடைய ஆட்களை என்னால் இத்தகைய ஆபத்தான காரியத்தைச் செய்யச் சொல்ல முடியாது. கரணம் தப்பினால் மரணம். அவ்வளவு தான்” என்றார் கோபமாக.

“அதற்காகத் தானே அவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள்?” என்றார் ஏளனமாக.

“அநியாயம். அதை அப்படிச் செய்ய வேண்டுமானால், நீங்களே செய்து கொள்ளுங்கள். இந்த ஆபத்தானக் காரியத்தைச் செய்ய என் ஆட்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்” என்றார் மேலும் கோபத்துடன்.

இதையெல்லாம் ஸ்டண்ட்காரர்களுடன் நின்றிருந்த பதினேழு வயது இளைஞன் கேட்டுக் கொண்டு இருந்தான். விவாதம் வலுப்பதை அறிந்து தன்னால் அதைச் செய்ய முடியுமா என்று ஆழ்ந்து சிந்தித்தான். பதினைந்தடி. பின் பக்கமாக அதுவும். பின்னால் விழ வேண்டுமென்பதால், தரையை எப்போது தொடுவோம் என்பதைச் சரியாகக் கணக்கிடுவது தான் கடினமான விஷயம். ஆனால் நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு, தலையை தரைக்கு வரும் முன்பே திருப்பி விட்டால், உயிருக்கு ஆபத்தில்லாமல் விழலாம் என்று உணர்ந்தான்.

அந்த ஸ்டண்டைச் செய்யத் துணிந்தான்.

தன்னால் செய்ய முடியும். செய்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தான்.

உடனே வாக்குவாத்தில் இருந்த இருவரையும் குறுக்கிட்டு, “மன்னிக்கவும். நான் இது போல் விழ முயற்சி செய்கிறேன்” என்றான்.

ஒருங்கிணைப்பாளர் அவனை உற்று நோக்கி, இறுகிய முகத்துடன் அவனை சற்று ஓரமாக இழுத்துச் சென்று, “என்ன? என்னைப் பார்த்தால் முட்டாளாத் தெரியுதா?” என்றார் ஆத்திரத்துடன்.

அதற்கு அந்த இளைஞன் மிகவும் அமைதியாக “இல்லையே” என்று கூறிவிட்டு, தாடையைத் திருப்பி விட்டுக் கொண்டே, “நீங்க சரியாத் தான் சொல்றீங்க. இயக்குநர் விவகாரமான ஆசாமி தான். உங்களுக்கு அனுபவம் மிக்க ஸ்டண்ட்காரர்களை இழக்க மனசில்லாம தான், இந்தக் காரியத்தச் செய்ய முடியாதுண்ணு சொல்றீங்க. நானோ ஒண்ணுமில்லாதவன். யாருக்கும் என்னைத் தெரியாது. இதுபோல நான் எதுவும் செய்யாட்டா, நான் எப்போதும் யாருக்கும் தெரியாமலேயே போயிடுவேன். நான் இதச் செய்யத் தவறினா, இயக்குநருக்கு நீங்க செஞ்சது சரின்னு புரியும். அதே, நான் ஜெயிச்சிட்டா, நான் நீங்க சொன்ன மாதிரிச் செஞ்சதாலே தப்பிச்சேன்னு சொல்றேன். அதுக்குப் பிறகு, இப்படிப்பட்ட ஆபத்தான காரியத்தைச் செய்யச் சொல்ல மாட்டாரில்லையா?” என்று கேட்டான்.

ஒருங்கிணைப்பாளர் கண்களைச் சுருக்கி, அவனைச் பார்த்து, “யூன் லோ.. நீ ரொம்ப புத்திசாலியா பேசிட்டதா நினச்சிக்காதே. உனக்குப் பேர் வரணும்ன்னு ரொம்ப யோசிக்காதே” என்றார்.

இருந்தாலும் அவன் சொல்வதை ஏற்று, இயக்குநர் பக்கம் திரும்பி, கைகளை உயர்த்தி, “சரி.. இங்கே இந்த ஸ்டண்டைச் செய்ய ஒரு முட்டாள் ஒத்துக்கிட்டு இருக்கான். நான் முடிஞ்ச வரைக்கும் சொல்லிப் பாத்துட்டேன். செஞ்சே ஆகணும்ன்னு இருக்கான். அதனால சாகாத அளவுக்கு என்ன செய்யணுமோ அதச் சொல்லிடறேன். அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தா பிழைச்சிப்பான். இல்லன்ன முடமாறது என்னவோ நிச்சயம்” என்று கூறிக்கொண்டே இயக்குநர் அருகே சென்றார்.

அவரைப் பக்கத்தில் பார்த்ததும் ஆத்திரம் வரப் பெற்றவராய், தன் கோபமான மூச்சுக்காற்று படுமளவிற்கு, அவரது முகத்துக்கருகே தன் முகத்தை வைத்துக் கொண்டு, “நீ.. நீ.. இது போல மறுபடியும் எதையாவது செய்யச் சொன்னா.. நாங்க எல்லாரும் தளத்தை விட்டு போயிடுவோம். நீ ரொம்ப பெரிய கொம்பனா இருக்கலாம். பெரிய எண்ணங்க.. கர்வம்.. அதப் பத்தியெல்லாம் கவலயில்ல. நாங்க ஸ்டண்ட்காரங்க.. அதனால உயிரைப் பணயம் வைக்கிறோம். நீ சொல்றபடியெல்லாம் நாங்க ஆட முடியாது” என்று ஆச்சுறுத்தும் வகையில் எடுத்துரைத்தார்.

Baby_slicked_hair

இதைக் கேட்டு இயக்குநரும் சற்றே பயந்து தான் போனார். ஸ்டண்ட்காரர்கள் முச்சு விடாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டு, தன் காரியம் நடக்கிற சந்தோஷத்தில் இயக்குநர் தலையை ஆட்டிவிட்டு, ஒளிப்பதிவாளருக்குச் சைகை செய்து தயாராகச் சொன்னார்.

ஒருங்கிணைப்பாளர் அந்த இளைஞனின் தோளில் தொட்டு, “வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டு, “உடலை சற்றே தளர்த்திக்கோ. தரையைத் தொட்டதுமே உருளத் தயாராயிடு. என்னானாலும் தலையாலோ முதுகாலோ தரையத் தொட்டுடாதே. உன்ன ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக எனக்கு ஆட்சேபமில்ல. ஆனா.. உன்ன கல்லறைக்கு மட்டும் கொண்டுப் போக வச்சிடாதே” என்றார்.

நடிப்புக்குத் தேவையான உடைக்கு மாறினான் அந்த இளைஞன். முகத்திற்கு மேக்கப் போட்டு, புருவத்திற்கு மேலொரு இரத்தக் கீறலை வரைந்தாள் ஒப்பனைப்பெண். படிவழியாக மேலேறி பதினைந்தடிக்கு மேலேயிருந்த பால்கனிக்குப் போனான். கீழே நிற்பவர்களைக் கண்டான். எல்லோர் கண்களும் அவன் மேலேயே இருந்தன. கேமிராவும் ஓடத் தயாரானது. அந்த நிமிடத்தில் அவனுக்குத் தன் கூட்டாளி ஸ்டண்டகாரர்களின் கண்கள் அவனது முட்டாள்தனமான சாகசச் செயலைக் காண ஆவலுடன் காத்திருப்பது மட்டுமே மனத்தில் இருந்தது.

“தயாராகுடா.. சாதித்துக் காட்டு” என்று தனக்குத் தானே தைரியமூட்டிக் கொண்டான். வில்லனாக நடிக்கும் நடிகன் அந்த இளைஞனால் அதைச் செய்ய முடியுமா என்று நம்பிக்கையில்லாமல் தயாரானான். உடலைக் குலுக்கிக் கொண்டு, அவரை நோக்கி முறுவலித்துத் தான் தயார் என்று காட்ட கைகளை உயர்த்தினான் அந்த இளைஞன்.

“ஆக்ஷன்” என்று கத்தினார் இயக்குநர்.

“கேமிரா ஓடுது” என்றார் ஒளிப்பதிவாளர்.

வில்லன் நடிகன் அடிப்பது போல் பாவனை செய்து கொண்டே அடித்தான். ஆனால் அது தவறி மூக்கிலே பட்டு வலியை ஏற்படுத்திய போதும், அவ்விளைஞன் பின்புறமாகச் சாய்ந்தான். மனத்திலே தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டே, முதுகை வளைத்து, காற்றிலே உடலைச் சுழற்றி, தரையைக் கண்டதுமே, தலையை மேலே தூக்கி, காலை கீழே கொண்டு வந்து, சரியான நேரத்தில் பாதத்தை தரையிலிட்டான். சற்றே தடுமாறினாலும், ஒரு அடி முன் வைத்து, நேராக நின்றான்.

“வெற்றி.. வெற்றி..” தனக்குள் சொல்லிக் கொண்டான் இளைஞன். கேமிராவை நிறுத்தச் சொல்லிவிட்டு இயக்குநர் அதிர்ந்து எழுந்தேவிட்டார். ஒருங்கிணைப்பாளர் அவனிருக்கும் இடத்திற்கு ஓடிச் சென்று, முதுகிலே தட்டிக் கொடுத்து “நீ உண்மையான ஸ்டண்ட் ஆசாமி ஆயிட்டே” என்று பாராட்டினார்.

“தரையைத் தொடும் போது கொஞ்சம் தடுமாறிட்டேன்” என்று சொன்னவன் தொடர்ந்து, “இன்னொரு தடவை செஞ்சா.. சரியாக நிப்பேன்” என்றான்.

ஒருங்கிணைப்பாளர் அவனது கைகளை வலிக்குமளவிற்கு அழுத்திச் சிரித்தார். “இன்னொரு தடவையா? இதக் கேட்டீங்களா? ஒரு தடவ செஞ்சது போறலையாம்.. இவனுக்கு” என்றார்.

“லுங்‡ப+ மோ சீ” என்று அனைவரும் கத்தினர். சீன மொழி லுங்‡ப+ மோ சீ என்பதற்கு டிராகன் புலி என்று அர்த்தம். சாகசச் செயல் செய்பவர்களை அந்தக் குழுவினர் இப்படிப் சொல்லி பாராட்டுவார்கள். அந்தப் பாராட்டைப் பெற்ற இளைஞனுக்கு பெரு மகிழ்ச்சி.

தன் பத்து வருட நாடகப் பயிற்சி வாழ்க்கைக்குப் பிறகு, தன் காதலி ஓ சாங்கைப் பிரிந்த பின், தான்தோன்றியாகத் திரிந்த தான் எங்கே என்ன செய்ய வேண்டுமோ அங்கே வந்து சேர்ந்து விட்டதாக உணர்ந்தான். தனக்கு ஒரு குடும்பம் கிடைத்துவிட்டதென்று எண்ணினான். இது தான் இனி அவன் வீடு. அவன் உலகம். ஆம்.. ஸ்டண்ட் உலகமே அவன் உலகமானது. ஸ்டண்ட் கூட்டாளிகளே அவன் குடும்பமானார்கள்.

அன்றிரவு அனைவரும் அதைக் கொண்டாடினார்கள். அப்போது ஒருங்கிணைப்பாளர் “நான் இயக்குநராக ஆக விரும்பினாலும், திரையுலகில் நிறைய பகைவர்கள் இருப்பதால் என்னால் அதைச் செய்ய முடியாதுன்னு நினக்கிறேன். ஆனா.. உங்கள்ல்ல யாராவது இயக்குநராக வாய்ப்பு கிடச்சா.. நீங்க உங்க ஸ்டண்ட்காரங்கள மதிக்கறவங்களா இருந்தா.. நல்ல படம் செய்யணும்ன்னு, உங்களால முடியாதத, செய்ய விரும்பாதத.. மத்தவங்கச் செய்யணும்னு எதிர்பாக்காதீங்க.. செய்யச் சொல்லாதீங்க. என்கிட்டேயிருந்து நீங்க எதையும் கத்துக்காம போனாலும்.. இந்த விதியை மட்டும் என்னைக்கும் மனசுல வச்சிக்கோங்க” என்று எல்லோரிடமும் கூறினார்.

ஸ்டண்ட் உலகத்தையே தனதாக்கிக் கொண்ட அந்த இளைஞன் தான் நம் சாகச நாயகன். ஹாங்காங்கில் பிறந்து இன்று திரையுலகத்தில் தனக்கென தனி முத்திரை படைத்தான் யூன் லோ. இதுவே நமது சாகச நாயகனின் முதன்முதல் பாராட்டத் தகுந்த ஸ்டண்ட் அனுபவம்.

சாகச நாயகனின் படங்களில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் தத்ரூபமாக அமைய இதுவே முதல் படி என்று சொல்லலாம். தன் படங்களில் ஆபத்தான ஸ்டண்டுகளைச் செய்யச் சொல்லும் போதெல்லாம், ஒருங்கிணைப்பாளர் தந்த அறிவுரையை மட்டும் தான் மீறியதில்லை என்று சாகச நாயகன் சொல்வார்.

“முடியாததைச் செய்யச் சொல்வதால் சிலர் என்னை வெறித்தனமான இயக்குநர் என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு என்று நான் உறுதியுடன் சொல்வேன். எந்தவொரு ஆபத்தான ஸ்டண்டை நான் மற்ற ஸ்டண்ட்காரர்களைச் செய்யச் சொல்கிறேனோ அவையெல்லாம் நான் முன்பே செய்தவையாக இருக்கும். அது எப்படி என்னைக் கொல்லவில்லையோ அது போல் அதிர்ஷ்டமிருந்தால் வீடு திரும்பலாம் என்று உயிரைப் பணயம் வைக்கும் கலைஞர்களையும் அது கொல்லாது என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுவார் சாகச நாயகன்.

தன்னுடைய சண்டை முறையால், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது மனங்களையும் கட்டிப் போட்ட சாகச நாயகனின் வாழ்க்கையில் இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகள் பல உண்டு. அப்படிப்பட்ட சாகச நாயகன் யார் என்று ஊகித்துவிட்டீர்களா? அவர் யார் என்று அடுத்தத் தொடரில் தெரிந்து கொள்ளலாம்.

Series Navigationதீவு
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *