குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22

This entry is part 14 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

ராதிகா இல்லாத நேரம் பார்த்து வாழிநடையில் இருந்த குப்பைக்கூடையைச் சோதித்த தீனதயாளன் அதனுள் அந்த டிக்கெட் ஒட்டுத் துண்டுகள் இல்லை யென்பதைக் கண்டார்.  பிறிதொரு நாளில், ‘நீ வேற யாரையோ அரையுங் குறையுமாப் பாத்துட்டு நான்குறே’ என்று தாம் சொல்லக் கூடுமென்பதால், அந்தத் துணுக்குகளை எடுத்து அவள் பத்திரப்படுத்திக்கொண்டு விட்டாள்  என்று ஊகித்து அவர் பெருமூச்செறிந்தார்.

அவருக்கும் ராதிகாவுக்குமிடையே இருந்த உறவு பல பிற குடும்பங்களில் போல் சாதாரணமானதாக இருந்திருப்பின்  அவர் அந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருந்திருக்க மாட்டார். எத்தனையோ குடும்பங்களில் தகப்பன்மார்கள் இது போன்ற தப்பைச் செய்கிறார்கள். செய்துவிட்டு, ‘நான் அப்படித்தான் செய்வேன்! அது என் இஷ்டம்!’ என்று வெட்கமே இல்லாமல் உறுமுகிற ஆண்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்களே தவிர – அல்லது எவராலும் தட்டிக்கேட்கப்படவே முடியாத அகங்காரர்களாக இருக்கிறார்களே தவிர –  தம்மைப் போல் மகளுடன் ஒரு நண்பன் மாதிரிப் பழகுகிறவர்கள் மிகச் சிலரே என்பதாலேயே உறுத்தல் தமக்கு அதிகமாக இருக்கிறதோ என்றும் அவர் நினைக்கத் தலைப்பட்டார்.

ஒட்டி ஒட்டிப் பழகுவது இனிக் குறைந்துவிடும் என்பதும், தங்களிடையே ஒரு விரிசல் ஏற்பட்டுவிட்டது என்பதும், அதன் விளைவு தமக்கும் தனலட்சுமிக்குமிடையே உள்ள நல்ல உறவைப் பாதித்து விடக்கூடும் எனும் கண்கூடான நிலையும் அவரை ஒரு சுயவெறுப்பில் அமிழ்த்தின. ராதிகாவை அவர் அறிந்திருந்த வரையில், அவரது இரண்டாம் வாழ்க்கை பற்றித் தான் தெரிந்துகொண்டிருப்பினும், தனலட்சுமிக்குச் சொல்லமாட்டாள் என்று அவர் நம்பினார்.  அவர் மீது அவளுக்கு எவ்வளவு உயிரோ அதே அளவுக்கு அவளுக்குத் தன் தாயின் மீதும் அன்பு இருந்தது.  எனவே அவரது துரோகத்தை அவளுக்குத் தெரிவித்து அவளது அமைதியை ராதிகா கெடுக்க மாட்டாள்! எனவே, அதன் விளைவாய்த் தமது மன நிம்மதியும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கருதி அவர் அந்த வேதனையிலும் ஓர் அமைதியை உணர்ந்தார். இனித் தம்மால் பழையபடி அவளை ஏறிட்டுப் பார்க்க இயலாது என்பதால், அவளுக்கு விரைவில் மணமுடித்து அனுப்பிவிடவேண்டும் எனும் எண்ணம் அவருள் வலுப்பெறலாயிற்று.

மூவாயிரத்துக்கு அவளிடம் டிக்கெட்டுகள் வாங்கிய பையனைப் பற்றி மறு நாளே விசாரிக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். பிற்பகல் இரண்டு மணி வாக்கில் அவர் தனலட்சுமியிடம் சொல்லிக்கொண்டு சிந்தியாவின் வீடு நோக்கிக் காரில் புறப்பட்டார்.

… தீனதயாளன் கூப்பிடுமணியை அழுத்தியதும் சிந்தியா விரைந்து வந்து கதவைத் திறந்தாள். அவர் இறுகிய முகத்துடன் உள்ளே நுழைந்தார்.

“ரொம்பக் கோவமா இருக்கீங்க போல!”

“பின்னே?  என்ன காரியம் பண்ணிட்டே, சிந்தியா! எவ்வளவு பெரிய ரிஸ்க் அது!” என்று உறுமிக்கொண்டே காலணிகளை அகற்றிய பின், அவர்களது தனியறைக்குச் சென்று, கட்டிலில் உட்கார்ந்து, காலுறைகளைக் கழற்றினார். பிறகு  அவற்றச் சுவரை நோக்கி விசிறியடித்தார்.

“என்னங்க உங்களுக்கு இம்புட்டுக் கோவம்! உங்க குடும்பத்தைப் பாக்கணும், குறிப்பா உங்க மிசஸைப் பாக்கணும்னெல்லாம் எனக்கு எம்புட்டு ஆவல், தெரியுமா? எத்தினி நாளா நானும் கேட்டுக்கிட்டு இருக்கேன் – ஒரு நாள் அவங்களோட ஒரு குறிப்பிட்ட நாள்லே, குறிப்பிட்ட தியேட்டருக்கு வாங்க, நானும் தற்செயலா வர்ற மாதிரி வந்து அவங்களைப் பாக்கறேன்னு எத்தினி வாட்டி கெஞ்சினேன்!  நானென்ன அவங்களைப் பாத்துப் பேசிட்டு,  ‘நான் உங்க கணவருக்கு இன்னொரு மனைவி, உங்க சக்களத்தி’ன்னெல்லாம் சொல்லி உங்க நிம்மதியைக் கெடுக்கப்பட்டவளா நான்? சொல்லுங்க. உங்க மனசுக்கே நல்லாத் தெரியும் – நான் அப்படிப்பட்டவ இல்லேன்னு.  ஏதோ ஒரு அற்ப ஆசை. உங்க அந்த ஒய்ஃபும் அழகாத்தான் இருக்காங்க.. உங்க மக ராதிகா அச்சு அவங்க சாயல்தான். ராதிகாவைப் பாத்ததும் நான் எந்த உலகத்துக்கோ போயிட்டேங்க. அவளை எனக்குப் பொறந்த மகளா ஒரு கணம் கற்பனை பண்ணிப் பாத்து அப்படியே சிலிர்த்துப் போயிட்டேங்க!”  என்ற சிந்தியா பொத்தென்று விழாக் குறையாக அவரருகே உட்கார்ந்து தோள்கள் அதிர அழத் தொடங்கினாள்.

“ஏய்! என்ன, இது? எதுக்கு இப்ப அழறே?  ஞாயித்துக் கெழமையை உன்னோட சந்தோஷமாக் கழிக்கலாம்னு ஆவலோட வந்தா, இப்படி ஒப்பாரி வைக்கிறியே! என்ன இது?”

“சந்தோஷம்கிறது உங்களுக்கு ‘அது’ மட்டும்தான்.  ஆனா எங்களுக்கு அப்படி இல்லீங்க! ராதிகாவோட அம்மா, உனக்குக் கொழந்தைங்க உண்டான்னு கேட்டப்ப, எனக்கு மனசே வெடிச்சுடும் போல ஆயிடிச்சு.  ஒரு கொழந்தையை யாச்சும் பெத்ததுக்கு அப்பாலதான் ஒரு பொண்ணு தன் மண வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் ஏற்பட்டதா நினைச்சு சந்தோஷப்பட்றா. கொழந்தை பெத்துக்க என்னை விட்டீங்களா நீங்க? ரெண்டு தரம் நான் கன்சீவ் ஆனப்பவும் கட்டாயப்படுத்திக் கலைக்க வெச்சீங்க.  அதுக்கு அப்பால் அந்த  ‘மூணெழுத்து’த் தடை இல்லாம நீங்க  என்கிட்ட வர்றதே கிடையாது. … என்னோட வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லாம போயிடிச்சுங்க, எந்த அர்த்தமும் இல்லாம போயிடிச்சு!”

“இத பாரு, சிந்தியா! நீ இப்ப அழுவறதை நிறுத்தப் போறியா, இல்லியா? அடிக்கடி இந்த டாபிக்கை எடுத்துடுறே.   நீ இது மாதிரி பண்றதா இருந்தா, இனிமேல்பட்டு நான் இங்க வரல்லே!”
“நீங்களும் இது மாதிரி எத்தினியோ வாட்டி என்னைப் பயமுறுத்தியாச்சு…. அத விடுங்க. நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல நான் கன்சீவ் ஆகப் போறேனா என்ன! நான் உங்களோட போடுறது அர்த்தமில்லாத சண்டைதான்!…..”

அவள் இறங்கிவந்து விட்டது அவருக்கு மகிழ்ச்சியளித்த போதிலும், ‘நீங்களும் இது  மாதிரி எத்தினியோ வாட்டி என்னைப் பயமுறுத்தியாச்சு’  என்று அவள்  சொன்னது கன்னத்தில் அடித்தார்ப்போல் அவருள் ஓர் அவமான உணர்ச்சியை விளைவித்தது.  ‘உன்னோட சிண்டு என் கையில இருக்கு.  நான் நினைச்சா உன் சந்தோஷத்தைக் கெடுத்துப் பழி வாங்க முடியும்!’ என்பது அதன் பொருளா, இல்லாவிட்டால்,  ‘என் உறவு இன்றி உன்னால் இருக்க முடியாது’ என்பது அதன் பொருளா!

எப்படியோ! அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு அழுகையை நிறுத்தியது அவருக்கு நிம்மதி யளித்தது.  அடுத்து, அவர் அவளைத் தேற்றும் சாகசங்களில் இறங்கினார்.

……பூட்டப்பட்ட அறையிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தயாவுக்குப் புரியவில்லை. அவளை விடுவிப்பது எப்படி என்பது சாம்பவிக்குப் புரியவில்லை. மகள் பூட்டப்பட்டது ரேவதிக்குச் சம்மதமாக இல்லை யென்றாலும், அப்படிச் செய்யாவிட்டல் அவள் கடலில் விழுந்தோ, அல்லது ஏதாவது விஷம் வாங்கித் தின்றோ தற்கொலை செய்துகொண்டுவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் அவளை வாய் மூடச் செய்தது.

தயாவோ அழுதவாறே இருந்தாள். சீனுவின் உதவியால் சங்கரனுக்குச் செய்தி யனுப்பலாம்தான். ஆனால், சங்கரனா¡ல் என்ன செய்யமுடியும் என்று அவளுக்குப் புரியவில்லை.

மறு நாள் காலையிலேயே ரமணி தன் பெற்றோருடன் வந்தான். அவன் வந்ததும் ஈசுவரன் ஜாடை காட்ட, தயா இருந்த அறைக் கதவு திறக்கப்பட்டது. மூவரும் உள்ளே வந்த போது தயா சமையற்கட்டில் இருந்தாள்.

“உங்க வீடு துடைச்சு வெச்சாப்ல ஒரு வசதியும் இல்லாம இருக்குன்னு இதெல்லாம் வாங்கிப் போடட்டுமான்னு ரமணி கேட்டான். ‘தாராளமாச் செய்யேண்டா’ ன்னேன்,” என்று அங்கிருந்த பொருள்களைப் பார்த்தவாறு ரமணியின் அம்மா சொன்னாள்.

“இந்தக் காலத்துல உங்களாட்டமா யாரு இருப்பா? ரொம்ப தேங்க்ஸ், அம்மா! இதோ, டி·பன், காப்பி ரெடி பண்றேன்.”

“டி·பனெல்லாம் வேண்டாம். காப்பி மட்டும் குடுத்தாப் போறும். . . . அவ எங்கே, கலியாணப் பொண்ணு?”

“மொகம் கழுவிக்கக் கெணத்தடிக்குப் போயிருக்கா. இதோ வந்துடுவா.”
மாப்பிள்ளைப் பையன் போட்டுக்கொண்டிருந்த ‘சென்ட்’ அந்தத் தெருவையே கூட்டும் போலிருந்தது.

அவசரமாய்க் கண்சாடை காட்டி ரேவதியை உள்ளே கூட்டிச் சென்ற ஈசுவரன், “ நீ போ கெணத்தடிக்கு. அவ பாட்டுக்கு கெணத்துலெ விழுந்து கிழுந்து வெச்சுடப் போறா! போ, போ! சாம்பவி காப்பி போடட்டும்,” என்றார் கிசுகிசுப்பாக.

ரேவதி அப்படியே செய்தாள்.

“சம்பந்தி! வர்ற வெள்ளிக்கிழமை யன்னிக்கே ஒரு முகூர்த்தம் இருக்கு. அன்னைக்கே நிச்சயதார்த்தம், கல்யாணம் ரெண்டையுமே நடத்திடலாம். கல்யாணத்தைத் திருநெல்வேலியில வச்சுக்கலாம். அங்கேன்னா எங்களுக்கு ஆள், அம்பெல்லாம் சுலபமாக் கிடைப்பா.”

“நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியேம்மா.”

“கல்யாணப் பொண்ணை வரச் சொல்லுங்க.”

“இதோ!”

தயா செலுத்தப்பட்ட மின் பொம்மை போல் நடந்து வந்து எல்லார் எதிரிலும் நின்றாள்.

ரமணியின் அம்மா, தயாவின் களையிழந்த முகத்தைக் கவனித்துவிட்டு, “கலியாணம்னாலே எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஒரு கிலி வர்றதுண்டு. சொந்த பந்தத்தை யெல்லாம் விட்டுப் பிரியப் போறோமேன்னு வருத்தமாத்தான் இருக்கும். கலியாணம் ஆனா எல்லாம் சரியாப் போயிடும்,” என்று சிரித்தாள்.

ஒரு புன்னகை கூடச் செய்ய முடியாத தயா தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அந்த நிலையிலும் ரமணி வெட்கமற்றுத் தன்னைப் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு அரையாய்த் தெரிந்தது.

தயா விடுப்பில் இருப்பதாகவும், எனவே அவளைச் சந்திக்க அவன் அவளது அலுவலகத்துக்குப் போக வேண்டாமென்றும் ஈசுவரன் ரமணியிடம் தெரிவித்தார். காப்பி குடித்துவிட்டு எல்லாரும் விடை பெற்றுச் சென்றார்கள்.

அவர்கள் அந்தப் பக்கம் போனதும் தயாவை இந்தப்பக்கம் அறைக்குள் தள்ளி ஈசுவரன் பூட்டினார். சாம்பவி கண்கலங்கியபடி வெளியே நின்றாள்.

“ஏம்ப்பா! அவாதான் மிக்சி, டி.வின்னு குடுத்து ஆசை காட்றான்னா, நீங்களும் துளிக்கூட வெக்கமே இல்லாம எல்லாத்தையும் வாங்கிக்கிறேளே! விருப்பப்படாத பொண்ணை பலவந்தப் படுத்த்¢ இந்த சாமான்களுக்காக நீங்க கலியானம் பண்ணிக் குடுக்கப் போறதை நெனச்சா எனக்கு வாந்தி வருது.  விபசாரம் பண்றாப்ல இருக்கு!”

“என்னது! என்ன வார்த்தைடி சொல்றே, நாயே!” என்றவாறு அவளை நோக்கிக் கையை ஓங்கிக்கொண்டு பாய்ந்த அவரை ரேவதி ஒடி வந்து தடுத்தாள்.

கிணற்றடிக்கு ரேவதி வருவதற்கும் முன்னால், சாம்பவி சங்கர் இருப்பது எந்த மருத்துவமனை, எத்தனையாவது அறை ஆகிய விவரங்களை தயாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தாள். இவ் விவரங்களைச் சீனுவிடம் கூறி அவனை உடனே சங்கரனைச் சந்திக்க அங்கு அனுப்பிவைத்தாள்.

மருத்துவ மனையைச் சீனு அடைந்த போது, அந்த அறையில் யாருமில்லை. ஒரு பணிப்பெண்ணை விசாரித்தான். சங்கரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டி இருந்ததால் அவனை அச்சிகிச்சைக் கூடத்துக்குக் கூட்டிச் சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

மறு நாளும் சீனு மருத்துவனைக்குப் போனான். தூக்க மருந்து கொடுத்திருந்ததால், சங்கரன் அப்போது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.

மூன்றாம் நாள்தான் பார்க்க முடிந்தது.

“அக்காவுக்கு வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணி யிருக்கா. எங்க பெரியக்கா சாம்பவியும் தயாவும் என்னை உங்க கிட்ட அனுப்பி வெச்சா. என்ன செய்யறதுன்னு கேட்டுண்டு வரச் சொன்னா..”

கணத்துள் திமிறிய கண்ணீரில் சங்கரனின் விழிகள் மூழ்கின.

“யாரு இந்தப் பையன்?” என்று கேட்டவாறு ராமலட்சுமி அப்போது அங்கு வந்தாள்.

“தயாவோட தம்பிம்மா.”

“என்னவாம்?”

“அவளுக்குக் கல்யாணம் நிச்சயமா யிருக்காம். இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. அதிலேர்ந்து தப்பறதுக்கு வழி கேட்டு இவனை அனுப்பி யிருக்க¡.”

ராமலட்சுமி ஒரு நொடி திகைத்துவிட்டு, “இதுல நாம என்ன பண்ண முடியுமாம்? எது ஒண்ணும் ஆண்டவன் விதிச்சபடிதான் நடக்கும். நீயோ இப்படிப் படுத்துண்டிருக்கே. இல்லைன்னாலும் போய்ச் சொல்லிப் பாக்காலாம்.”

“இப்ப     தான் என்னம்மா? ஒண்ணும் மோசம் போயிடல்லே. அப்பா போய் அவளோட அப்பாவைப் பாத்துப் பேசலாமில்ல?”
“உங்கப்பாதானே? சரிதான், போ. அதுக்கு நான் வேணாப் போய்க் கேக்கறேன்.”

சங்கரனின் விழிகள் விரிந்து முகத்தில் மின்னலடித்தது: “நெஜமாவாம்மா, சொல்றே?”

“ஆமாண்டா. நெஜமாவேதான் சொல்றேன்.”

“அப்ப, உன்னால இந்தப் பையனோட அவா வீட்டுக்குப் போயிட்டு வர முடியுமா?”

“நான் ரெடிடா. ஆனா என்னன்னு சொல்லணும்? அதையெல்லாம் விவரமாச் சொல்லு.”

சங்கரன் எல்லா விஷயங்களையும் சொன்னான். சொல்லிவிட்டு, “ .  .  . ‘நாங்க ஏழைகள். ஆனாலும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர். . . ஆங்.. . .  கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்றதால, அவா ஆசைக்கு நாம குறுக்கே நிக்கக் கூடாது. எனக்கும் ரெண்டு பொண்ணுகள்  இருக்கு. அதுல மூத்தவளுக்கு மட்டுமாவது பண்ணிட்டா, அதுக்கு அப்புறம்  தயா எங்காத்துக்கு மாட்டுப்பொண்ணா வரலாம். அது வரைக்கும் அவளுக்குக் கலியாணம் பண்ணவேண்டாம்’ அப்படின்னு எடுத்துச் சொல்லு. அதுக்கு மேல கடவுள் விட்ட வழி!”

பணிப்பெண்ணிடம் சங்கரனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ராமலட்சுமி சீனுவுடன் புறப்பட்டாள்.

சங்கரன் தேர்வு முடிவு அச்சாகியுள்ள நாளிதழை வாங்கப் போனவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரபரப்புடன் காத்திருக்கலானான். ஆனால், ‘இது நடக்கப் போவதில்லை’ என்று  அவனுக்கு உள்ளுணர்வாய்த் தோன்றிவிட்டது.

. . . தயாவின் வீட்டை யடைந்த ராமலட்சுமி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். அப்போது ஈசுவரன் வீட்டில் இருந்தார். அவரும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற முறையில் பேசி அவளது வாயை அடைத்துவிட்டார்.

“இத பாருங்கம்மா! எனக்கு இன்னொரு பொண்ணு இருக்கா. மாப்பிள்ளையாத்துக்காரா அவா செலவில கலியாணம் பண்றா. அந்த இன்னொ¡ரு பொண்ணோட கல்யாணச் செலவுக்குன்னு எங்க கையில முப்பதாயிரம் இப்ப சத்தியா குடுக்கப் போறா.. அதோ பாத்தேளா? அந்தப் புது டி.வி., ·ப்ரிட்ஜ், மிக்சி எல்லாம் மாப்பிள்ளை கொண்டுவந்து குடுத்திருக்கார். சாம்பவிக்குத் தையல் மிஷின் வாங்கித் தறேன்னிருக்கார். இதெல்லாம் உங்களால முடியுமா? சொல்லுங்கோ. நடைமுறையைப் பாக்கணும்மா. இந்தக் காலத்துப் பொண்ணுகளும் பிள்ளைகளும் கண்ட கண்ட கழிசடைக் கதைகளைப் படிச்சுட்டும், சினிமாவைப் பாத்துட்டும் காதல் கத்திரிக்காய்னு பேத்தறா! அதில யெல்லாம் என்ன இருக்கு? கடேசில எல்லாம் எதில முடியறது? உடம்புலதானே? பச்சையாப் பேசறேனேன்னு தப்பா எடுத்துக்காதங்கோ. அதுதானேம்மா உன்மை? கல்யாணம் முடிஞ்ச கையோட வாழத் தொடங்கிட்டா எல்லாம் சரியாயிடும். உங்க பிரச்சனைகளை முடிச்சுட்டு, உங்க பிள்ளைக்கும் ஒரு நல்ல பொண்ணாப் பாத்துக் கலியாணம் பண்ணி வையுங்கோ! கெளம்பறேளா?”

வாயடைத்துப் போன ராமலட்சுமி எழுந்து நடந்தாள்.

மருத்துவமனையை அவள் அடைந்த போது ரமா வந்திருந்தாள்.

“என்னம்மா சொன்னா?”

“அந்தப் பொண்ணு தயா கண்ணுலயே படல்லே. பூட்டி வெச்சிருக்கான்னு அந்தப் பையன் சொன்னது நெஜந்தான். வீட்டுக் கூடத்துல ரூம்ல பூட்டுத் தொங்கிட்டிருந்துது.. . .” என்று தொடங்கிய ராமலட்சுமி எல்லாவற்றையும் அப்படியே தெரிவித்தாள்.

. . . “தயா ஆ·பீசுக்கு வரல்லே. அதான் உங்களைப் பாத்துட்டு அப்படியே தயா வீட்டுக்கும் போயிட்டு வரலாம்னு. . . “ என்ற ரமா கவலையுடன் சங்கரனைப் பார்த்தாள்.

“சங்கர்! இன்னமும் லேட்டாயிடல்லே. நான் போய்ப் பாத்துட்டு வறேன்.  அவளைப் பூட்டி வெச்சிருக்கிறதை எங்கிட்டேர்ந்து மறைக்கப் பார்ப்பா. உள்ளே விடமாட்டான்னும் தோண்றது. என்ன செய்யலாம், சங்கர்?”

“நீங்கதான் சொல்லுங்க, ரமா. நான் இன்னும் பத்து நாள் நர்சிங் ஹோம்ல இருக்கணுமாம். அதுக்கு அப்புறமும் ஒரு மாசம் வரைக்கும் கையை அசைக்கக் கூடாதாம். நான் லீவ் எடுக்க வேண்டி வரும்.”

“உங்களை இப்படி யாரோ அடிச்சுப் போட்டது பத்திப் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்தேளா, சங்கர்?”

“அதுக்கெல்லாம் எங்க அப்பாதான் முனையணும். அவருக்குப் போற¡து. தவிர பெரிய பெரிய ஆளுங்கல்லாம் அடிபட்றதுக்கே எந்த நடவடிக்கையும் இல்லே. நானெல்லாம் வெறும் சுண்டைக்காய்.”

“சரி. ஏதோ சதி பண்ணி அவளைக் கிளப்பிண்டு வர முடியறதுன்னே வெச்சுப்போம். அதுக்கு அப்புறம்?”

“அவ எங்க வீட்டிலலதான் இருக்கணும். அதுக்கு எங்க அம்மாவும் அப்பாவும் ஒத்துக்கணும்.”

ராமலட்சுமி பட்டுக்கொள்ளாமல் மவுனம் காத்தாள்.

சங்கரன் தொடர்ந்தான்: “எங்கப்பா இருக்காரே, அவர்தான் என்னோட மொத எதிரி.  தானே அவளை அவா வீட்டில கொண்டு போய் விட்றுவார். இல்லேன்னா, வந்து கூட்டிண்டு போகச் சொல்லிடுவார்.”

“அவளால மட்டும் வெளியில வர முடிஞ்சுட்டா, அவளை எங்க வீட்டுல கொண்டு போய் வெச்சுக்க முடியும். ஆனா அவளை எப்படி வெளியில கொண்டு வர்றதுன்னு தெரியலியே?” என்று ரமா அங்கலாய்த்தாள்.

“ஆமா.”

ஓரிரு நிமிடங்களில் ரமா புறப்பட்டுப் போனாள். ரமாவால் ஏதேனும் செய்ய முடியுமோ என்கிற ஆசை சங்கரனின் உள்ளத்தில் துளிர் விட்டது.

. . . ஒரு மணிப் பொழுதுக்குள் ரமா திரும்பி வந்தாள்.

“சங்கர்! அவா வீட்டில யாருமே இல்லே. அந்தப் போர்ஷனே பூட்டியிருக்கு.  பக்கத்துப் போர்ஷன்காரங்களை விசாரிச்சேன். கலியாணம் நிச்சயமாயிருக்குன்னும், வேற ஒரு இடத்துல போய் எல்லாரும் தங்கப் போயிருக்கான்னும் சொன்னா. இனிமே என்ன செய்யறது? அவா எங்கே போயிருக்கான்னு யாருக்குமே தெரியல்லே,” என்று பெருமூச்செறிந்த ரமா உடனே கலங்கிப் போன சங்கரனின் விழிகளின் பாதிப்பால் தானும் கண் கலங்கினாள். சீனு எப்படியாவது வந்து விவரம் சொல்லுவான் என்று சங்கரன் எதிர்பர்த்ததும் நடக்கவில்லை.

ஒரு வாரம் கழித்துத் திருநெல்வேலியி லிருந்து அவளது அலுவலகத்துக்குத் தான் வேலையை ராஜிநாமாச் செய்வதாய் தயாவிடமிருந்து கடிதம் வந்தது.

தொடரும்
jothigirija@live.com

Series Navigationசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32கவிதைகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *