ஸூ ஸூ .

This entry is part 22 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

எஸ். சிவகுமார்.

 

டெட்டி பியர், பார்ப்பி வரிசையில் இப்போ ஸூஸூ. இந்த ஸூஸூ பொம்மையினால் கங்காவின் வாழ்க்கையில் பெரிய விபரீதம் நடந்தது என்று நான் சொன்னால், ‘இந்த மாதிரி பேய்க்கதை ஏற்கனவே கேட்டாச்சு’ என்று, கேள்வி கேட்காமல் என்னை அடிக்க வருவீர்கள். கொஞ்சம் பொறுங்கள்; இது பேய்க்கதை அல்ல என்பதை அவளை நேரில் பார்த்து நீங்களே தெரிந்துகொண்டால் நல்லது. அதனால் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் உங்களை அவள் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன். சத்தமின்றி என்கூட வாருங்கள். இதுதான் அவள் வீடு. மதியம்; சாப்பாட்டு நேரம்.

இன்று கங்காவின் அப்பா இன்னும் வாய் திறக்கவில்லை; அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். யாருமே பேசவில்லை. சாப்பிடும் முன் அவர் ஆங்கிலத்தில் பிரார்த்தனை சொல்வார்; அவர் சொல்லி முடிக்கும்வரை நிசப்தம் நிலவும்.

 

“படைத்துக் காத்து அழித்தலும் செய்யும் எல்லாம் வல்ல இறைவா ! உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும் அளித்த உன் கருணையை நினைத்து நன்றிகூறி நமஸ்கரிக்கிறேன்! இவை யாவும் எங்களுக்குக் கிடைக்க உன் அருளாலும் ஆக்ஞையாலும் உதவிய அனைவருக்கும் நன்றிகூறி நமஸ்கரிக்கிறேன்! ஆமென்!” என்று அவர் சொல்ல, எல்லோரும் ‘ஆமென்’ சொன்னபிறகு சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

 

அவர் ராணுவத்தில் இருக்கும்போது ஏற்பட்ட பழக்கம் இது. ‘மேஜர்’ என்றால் இந்த வட்டாரத்தில் எல்லாருக்கும் தெரியும்; ‘சிக்கய்யா’ என்ற அவர் பெயர்கூட பல பேருக்கு மறந்துப் போயிருக்கும். அவர் பேசும்போது எதிர்த்துப் பேச யாரும் நினைக்க மாட்டார்கள்; அப்படி ஒரு குரல், அப்படி ஒரு அழுத்தம். ஆனால் கண்களை மூடிக்கொண்டு அவர் பிரார்த்திக்கும்போது கீழ் ஸ்தாயியில் கமல்ஹாசன் பேசுவதுபோல இருக்கும்.

 

அவருக்குத் தாய்மொழி கன்னடம். ஆங்கிலத்தில் புலமை அதிகம். ஆனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என ஆறு மொழியிலும் பேசுவார். ராணுவ வாழ்க்கையின் உபயம் அது. சிலநாள் குளித்துவிட்டுத் துண்டைமட்டும் கட்டிக்கொண்டு, நெற்றி நிறைய திருநீறு பூசி, ‘நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!’ன்னு டி.எம்.எஸ். குரலில் சிவபுராணம் சொல்வார். சில நாள், சாப்பாடு போட மனைவி காலம் தாழ்த்தினால், சாப்பாட்டுத் தட்டில் தாளம் போட்டுக் கொண்டே, ‘நீயில்லாத இடமே இல்லை’ன்னு எம்.எஸ்.வி. குரலிலே ‘அல்லா’ பாட்டுப் பாடுவார்.

 

கங்காவின் அம்மா இவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்துச் சாப்பிட வரவேமாட்டாள். கணவன் சொல்லும் பிரார்த்தனையில் அவளுக்கு உடன்பாடு இல்லை. “பூஜை செஞ்சுச் சாமிக்குப் படைச்சப்பறம் பிரார்த்தனை என்ன வேண்டிக் கெடக்கு, கொழந்தை பெத்தப்பறம் கல்யாணம் செஞ்சுக்கற மாதிரி? “ என்று அவர் இல்லாதபோது குழந்தைகளிடம் கத்துவாள். ஆனால், “நீயும் உட்காறேன் லக்ஷ்மி!“ என்று கணவன் சொன்னால், ப்ரார்த்தனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, “நான் சாப்பிடுவேனா, உங்களுக்குப் பரிமாறுவேனா? அப்பறமா சாப்டுக்கறேன்” என்று உட்கார மறுத்துவிடுவாள்.

 

இன்றைக்கும் அதே கதைதான்; ஆறுபேர் அமரக்கூடிய சாப்பாட்டு மேஜையைச் சுற்றி நான்கு பேர்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். மதிய உணவுக்கு மேஜர் அலுவலகத்திலிருந்து வந்ததுமே, “கங்கா! நீ இங்க உக்காரு” என்று அப்பாவுக்கு நேர் எதிரில் அவளுக்கு இடம் ஒதுக்கி விட்டார்கள். அவளும் தன் ‘ஸூஸூ’ பொம்மையை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

 

“பெரியவ ஆகி வருஷம் ஆச்சு; இன்னும் என்ன எப்பப் பார்த்தாலும் பொம்மை வேண்டிக்கெடக்கு?“ என்று முன்பெல்லாம் கோபமாகக் கத்தும் அம்மா, இப்போது பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

 

ஒரு பக்கமாக அக்கா யமுனாவும், தம்பி (சந்திர)போஸும் அவர்களுக்குள் அந்தரங்கமாக அமைதியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டு நாற்காலிகளும் காலியாகக் கிடக்கின்றன.

 

ஊரிலிருந்து காலையில்தான் கங்கா வந்தாள். அவளைக் காரில் கூட்டிவந்த அப்பா, நேரமாகிவிட்டது எனச் சிற்றுண்டிகூடச் சாப்பிடாமல் அலுவலகம் சென்று விட்டார். நான்கு வருடங்களுக்குமுன் ராணுவத்தை விட்டுவிட்டு வந்தவர், இப்போதுதான் ஒரு வருடமாக வெளிநாட்டுக் கம்பனி ஒன்றில் பாதுகாப்பு ஆலோசகராக வேலை பார்க்கிறார்.

 

ஆ….! சொல்ல மறந்துவிட்டேன்; இன்று கங்காவுக்குப் பிறந்தநாள். பதினெட்டு முடிந்து அவளும் ‘மேஜர்’ ஆகிவிட்டாள். “அப்பா இல்லாமல் எப்படி ‘கேக்’ வெட்டறது? சாயங்காலம் கொண்டாடலாம்” என்று சொல்லிவிட்டாள்.

 

அம்மாதான் இன்று அவளுக்கு எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டாள். தலை உலர்வதற்காகக் குட்டையான அவள் முடியிலும் நடுவே கொஞ்சம் ஒதுக்கிக் கிளிப் போட்டுவிட்டாள். அவளுக்காக முதன்முதலாக வாங்கி வைத்திருந்தப் புதுப் புடவையைக் கட்டிவிட்டாள். பூஜை அறையிலும், அம்மாவுக்கும் நமஸ்காரம் செய்த கங்கா, ஏழு வயது பெரியவளான அக்காவையும் நிற்கச் சொல்லி நமஸ்கரித்தாள். அவளை அப்படியே வாரியெடுத்த யமுனா, “பேசாம உனக்கே முதல்ல கல்யாணம் பண்ணிடலாம் போலிருக்கே! “ என்று திருஷ்டி கழித்தாள்.

 

யமுனாவுக்கு ஜனவரி மாதத்திலேயே கல்யாணம் நிச்சயமாகிவிட்டது; செப்டம்பர் மாதத்தில் முஹூர்த்தம். யமுனாவைவிட கங்கா வளர்த்தி – உயரத்திலும், அகலத்திலும். எல்லோரும் கங்காதான் அக்கா என்று நினைத்துக் கொள்வார்கள். “கேலி செய்யாதேக்கா; நான் ஹோம் சயின்ஸ்ல டிக்ரீ வாங்கிட்டுத்தான் வேற எதுவும்!” என்று வெட்கப்பட்டாள். அவள் கன்னம் சிவந்ததைப் பார்த்து, அம்மாவும் அக்காவும் ஏதோ உலக அதிசயத்தைப் பார்ப்பதுபோல் அவளைப் பார்த்தார்கள்.

 

கங்காவைப் பார்த்து நீங்களும் அதிசயப்பட வேண்டுமானால், ஆறு வருடத்து முன்கதையை நான் உங்களுக்குச் சொல்லியாகவேண்டும்.

 

ஏழாம் வகுப்புப் படிக்கும்போது கங்கா ‘பெரியமனுஷி’ ஆகிவிட்டாள். அம்மா வேதியல் ஆசிரியையாகப் பணிபுரியும் பள்ளியில்தான் கங்காவும் படித்து வந்தாள். அப்பாவால் உடனே வரமுடியவில்லை. அம்மாதான் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, அவளுக்கு எல்லாவற்றையும் கவனித்துச்  செய்தாள். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அக்கா அனைத்து ‘விஷயங்களையும்’ விளக்கிச் சொல்லி அவளின் பயத்தைப் போக்கி அவ்வப்போது ஆறுதல் சொன்னாலும், கங்காவுக்குச் சரியாக எதுவும் புரியவில்லை;  தலையத் தலையை ஆட்டிவைத்தாள். தனக்கு ஏதோ முக்கியத்துவம் வந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

 

பெரிய விழாவாகக் கொண்டாடாவிட்டாலும், அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா என எல்லா உறவினர்களும் அவரவர் சௌகரியத்துக்குத் தனித்தனியாக வந்து, அவளுக்கு இனிப்புக்களும், பரிசுப் பொருட்களுமாகக் குவித்துவிட்டர்கள். கங்காவுக்கு இரண்டாவது நாளிலிருந்தே ஒரே சந்தோஷம். ஒரு இளவரசி போலத் தன்னை உணர்ந்தாள்.

 

கங்காவுக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும். பால்பேப்பர், சாக்பீஸ், ரப்பர், பால், தயிர், சர்க்கரை, புதன்கிழமை அணிந்துகொள்ளும் விளையாட்டுச் சீருடை, அம்மா தலையில் குண்டுமல்லிகை, ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், நீண்ட அங்கிப் பாதிரியார், வீணை மீட்டும் சரஸ்வதிதேவி எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இப்போது அந்தப் பட்டியலில் புதிதாக ஓன்று சேர்ந்தது. அதுதான் ‘ஸூஸூ’. மொட்டைத் தலையுடன் மொழுமொழுவென்று வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்தப் பொம்மை மாமாவின் பரிசு. சட்டென்று அவளோடு ஒட்டிக கொண்டது.

 

ஒரு வாரம் கழித்து அவள் மீண்டும் பள்ளிச் செல்லக் கிளம்பியபோது பிரச்சனை ஆரம்பமானது. புத்தகப் பை, மதிய உணவு, தண்ணீர்ப் பாட்டில் என எல்லாம் எடுத்துக் கொண்டு வாசல்வரை சென்றவள், அப்படியே திரும்பி உள்ளே ஓடினாள். திரும்பி வரும்போது அவள் கையில் ‘ஸூஸூ’ இருந்தது. “இதை எதுக்குடி ஸ்கூலுக்கு எடுத்திட்டு வர்ர்ரே?” என்ற அம்மாவின் எதிர்ப்பை லட்சியம் செய்யாமல், “ என் ஸூஸூ! “ என்று அதை இறுக அணைத்துக்கொண்டு அம்மாவுடன் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

 

அந்த நாளின் பிறகு ‘ஸூஸூ’ இல்லாமல் அவளைத் தனியே பார்ப்பது என்பது அரிதானது. படிக்கும் நேரம், சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம், தூங்கும் நேரம் என எல்லா நேரங்களிலும் அது அவளின் அங்கமானது. குளிக்கச் செல்லும்போது கூட, அறைக்கு வெளியே காவல் மாதிரி அதை நிற்கவைத்துவிட்டுச் செல்வாள். ஆசிரியையின் மகள் என்பதாலும், அவள் கல்வித் தரத்திலே இதனால் எந்தக் குறைபாடும் ஏற்படாததாலும், சக மாணவர் யாரிடமும் அதைக் கொடுத்து விளயாடாததாலும்,  பள்ளித் தலைமையும் அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டது. பெரியமனுஷி ஆனபின்னும் குழந்தைபோல் இருக்கும் அவளைக் கண்டு அம்மா மட்டும் எப்போதும் கவலையுடனேயே இருந்தாள்.

 

நாட்கள் செல்லச் செல்ல இந்தக் காட்சி பழகிப் போனது. அம்மாவும் கொஞ்சம் சமாதானம் ஆகிவிட்டாள் என்றே தோன்றியது. இருந்தாலும், எப்போதும் தன்னுடனேயே பள்ளிக்குக் கூட்டிச்சென்று, தான் பள்ளியிலிருந்துக் கிளம்பும்வரை காத்திருக்கச் சொல்லிக் கங்காவைக் கூட்டிக் கொண்டு வீடு திரும்புவாள். ‘ஸூஸூ’வுடனான இந்த நெருக்கம் கங்காவிடம் ஏற்படுத்திய மாறுதல்களை கவனிப்பதைக் கிட்டத்தட்ட எல்லோரும் விட்டுவிட்டு, ஒருவருட காலத்தில் மெல்ல மெல்ல  மறந்தும் போனார்கள்.

 

கங்கா இப்போது எட்டாம் வகுப்புதான் என்றாலும், இறுதித் தேர்வுக்குச் சிலகாலமே இருந்ததால், அம்மாவுக்காகக் காத்திருக்க வேண்டிய நேரம் அதிகமானது. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டியிருந்தது அம்மாவுக்கு.

 

தம்பி போஸ் படிப்பது வேறு பள்ளியில். அவனைப் பற்றிக் கவலையில்லை. மாலையில் வீடுதிரும்பியதும் வாசலிலேயே பைகளைப் போட்டுவிட்டு நண்பர்களுடன் விளையாடப் போய்விடுவான். அம்மா வந்துக் கூப்பிட்ட பிறகுதான் திரும்புவான்.

 

அது ஒரு சனிக்கிழமை. மாலை ஆறு மணியாகியும் இன்னும் அம்மா இன்னும் சிறப்பு வகுப்பை முடிக்கவில்லை. எத்தனை நேரம் இப்படியே உட்கார்ந்திருப்பது என்று கங்கா அலுத்துக் கொண்டாள். ‘ஸூஸூ’வுடன் விளையாடிக் கொஞ்சி “டயார்டா ஆயிடிச்சா? கொஞ்சம் ரெஸ்ட் எடு ” என்று அதைத் தூங்கவைத்து விட்டாள். பசித்தது. மீதம் இருந்த இரண்டு பிஸ்கட்டையும் சிறிது சிறிதாகக் கொறிக்க ஆரம்பிக்கும்போது பிரபு வந்து கொண்டிருந்தான்.

 

பிரபு பன்னிரெண்டாம் வகுப்பு. கங்காவின் அம்மாதான் வகுப்பாசிரியை. அவளை நோக்கி நேராக வந்தவன், “டீச்சர் இன்னும் ரொம்ப நேரமாகும்னு வீட்டுல கொண்டுபோய் உன்னை விட்டிட்டு வரச் சொன்னாங்க; கிளம்பு, போகலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான். “டிஸ்டர்ப் பண்ணாதே, ஸூஸூ தூங்குது” என்று அவன் கையை ஒதுக்கிவிட்டு, ஸூஸூவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, “அம்மா வரவரைக்கும் நீ தூங்கு செல்லம்” என்றாள். “சரி சரி, உன் ஸூஸூவை டிஸ்டர்ப் பண்ணாம நான் தூக்கிட்டு வரேன், எங்கூட வா” என்று முரட்டுத்தனமாக பொம்மையைப் பிடிங்கினான்.

 

அவன் ஏதோ வம்பு செய்யத்தான் வந்திருக்கிறான் என்று பயம் எட்டிப் பார்த்தாலும், பள்ளியுள்தானே இருக்கிறோம் என்று துணிவும் இருந்தது. “அம்மா வரட்டும், அப்புறமாப் போறேன்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், தன் பையைக் கீழே தொப்பென்று அப்படியே போட்டுவிட்டுப் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான். என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே கங்காவும் எல்லாப் பைகளையும் அப்படியே கீழே போட்டுவிட்டு அவன் பின்னால் ஓட ஆரம்பித்தாள்.

 

அந்தப் பள்ளியில் தொழிற்கல்விக்கூடம் சற்றுத் தள்ளி  ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. ஏதாவது ஒரு கைத்தொழிலை ஒவ்வொரு மாணவரும் கற்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டு எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட்டப் பாடத்திட்டம் அது. பள்ளியிலிருந்து அனைவரும் வீட்டுக்குப் போகும்வரை திறந்தே இருக்கும் அந்தக் கூடத்தை நோக்கி வேகமாக ஓடிய பிரபுவை, “என் ‘ஸூஸூ’வைக் குடுடா” என்று திரும்பத் திரும்பக் கத்திக் கொண்டே துரத்திச் சென்றாள் கங்கா.

 

கூடத்துள் அவள் நுழையும் போது பிரபுவைக் காணோம். அவளுடைய பொம்மைமட்டும் கீழே கிடந்தது. அதை எடுக்கக் குனிந்தவளைப் பின்னாலிருந்து பாய்ந்துவந்து ஒரு மரக்கட்டையால் தாக்கினான் பிரபு. அதற்குப்பின் நடந்த எதுவும் தெரிந்துகொள்ள முடியாதவாறு அவள் மயக்கமானாள்.

 

ஆறரை மணிக்கு வகுப்பு முடித்து வெளியே வந்த லக்ஷ்மி, கங்கா வழக்கமாக காத்திருக்கும் இடத்தில் அவளைக் காணாமல் பதறிப் போனாள். கிளம்பிக் கொண்டிருந்த மற்ற ஆசிரியர்களும், அப்போதுதான் வந்த இரவுக் காவலாளியும் அவளின் கூக்குரலைக் கேட்டுப் பதறியோடி வந்தார்கள்; பள்ளி முழுதும் தேடினார்கள்; இறுதியில், தொழிற்கூடத்துள் கங்காவையும், அவளுடைய பொம்மையையும் கண்டார்கள். அவளை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது பார்த்தவுடனேயே தெளிவாகத் தெரிந்தது. அப்படியே அவளை அள்ளிக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.

 

நேரில் கண்ட சாட்சி எதுவும் இல்லையென்றாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைகளும், தடவியல் முடிவுகளும் பிரபுவைக் குற்றவாளி என்று உறுதி செய்தன. பதினெட்டு வயது பூர்த்தியாகாத காரணத்தால் சிறைத்தண்டனை எதுவும் கொடுக்கப்படாமல், சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். தன்னுடைய வகுப்பு மாணவனே இந்தக் கொடுமையைச் செய்ததைத் தாங்கமுடியாமல், லக்ஷ்மி ஆசிரியப் பணியிலிருந்து வெளிவந்தாள். அந்த அதிர்ச்சியிலிருந்து அவளாலும் மீளமுடியவில்லை.

 

அவசர விடுப்பில் வந்தத் தன் கணவனை மீண்டும் ராணுவத்துக்குச் செல்லாமல் குடும்பத்துடனேயே தங்கியிருக்கக் கட்டாயப்படுத்தினாள். சிக்கய்யாவும் தன் நிலைமையை உயர் அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லி உடனடியாக ஓய்வுபெற்றார். கங்காவை உரிய இடத்தில் சேர்த்துக் கவனித்துச் சிகிச்சை அளிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துத் தானும் கூடவே இருந்தார் சிக்கய்யா.

 

சைக்கோ எஜுகேஷன், ஸ்ட்ரெஸ் இனாகுலேஷன், ரிலேப்ஸ் ப்ரிவென்ஷன் என மூன்று கட்டங்களில் பதினாறு பிரிவுகளாக அவளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தனக்கு ஏற்பட்டக் கொடுமையின் அதிர்ச்சியிலிருந்து மெள்ள மெள்ள விடுபட்டக் கங்கா, விடுதியில் இருந்துகொண்டே தனிப்பட்ட முறையில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் அளவுக்குத் தயாராகிவிட்டாள். இனி விடுதிக்குத் திரும்பிச் செல்லவேண்டிய அவசியம் இல்லை; காலி செய்துவிட்டு வந்துவிட்டாள். இப்பொழுதும் அவள் ஸூஸூ பொம்மையை விட்டுவிடவில்லை; ஆனால், யாராவது கேட்டால் உடனே அவர்களுக்கே கொடுத்துவிட்டு, வேறு ‘ஸூஸூ’ வாங்கிக் கொள்கிறாள்.

 

பிறந்தநாளுக்காக இன்று அவளே வாங்கிக் கொண்ட பத்தாவது ‘ஸூஸூ’தான் இப்போது அவள் மடியில் கிடக்கிறது. “என்ன என்னையே பார்த்திகிட்டு இருக்கீங்க?” என்று அமைதியைக் கலைத்த கங்கா, “ரொம்ப க்யூட்டா இருக்கம்மா நீ” என்றதற்கு, “போங்கப்பா, வெக்கமா இருக்கு” என்று முகம் சிவந்தாள். உடனே எழுந்துநின்ற அப்பா,

“வானத்தினின் றிறங்கிவந்த என்

மின்னிடும் தாரகையே! புது

        வெண்பனித் தேவதையே! முழு

முல்லைபூப் புன்னகையே !

        வெள்ளை நிலவே! துள்ளும் முயலே! என்

செல்லத் திருமகளே! எழில்

பொங்கும் நதிப் புனலே !”

 

என்று மேற்கத்திய இசைப் பாணியில் ஆங்கிலக் கவிஞர் போலக் கையை ஆட்டிக்கொண்டு உற்சாகமாகப் பாடினார். பாடி முடித்துவிட்டு, “சாப்பிடலாமா?” என்று அவர் உட்காரப்போனதும், “ப்ரேயர்?” என்று மூவரும் ஒரே குரலில் ஆச்சர்யமாகக்  கேட்டார்கள். பிரார்த்தனையை எப்படி மறந்தோம் என்று திடுக்கிட்டவர், கண்களை மூடிக் கொண்டு வழக்கத்திற்கு மாறாக உரத்த குரலில் மேல் ஸ்தாயியில் ஜபிக்கலானார்:

 

“படைத்துக் காத்து அழித்தலும் செய்யும் எல்லாம் வல்ல இறைவா ! உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும் அளித்ததற்கும் மேலாக இன்று எங்கள் அன்பு மகளை, எங்கள் குழந்தைகளின் அருமைச் சகோதரியை மீட்டு எங்களுக்குத் திரும்ப அளித்த உன் கருணையையும் அதற்கு உதவிய அன்பர்களையும் நினைத்து ஆயிரங்கோடி நன்றிகூறி நமஸ்கரிக்கிறேன்! ஆமென்!”

 

‘ஆமென்’ என்னும்போது அவர் குரல் நடுங்கியதை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் ‘ஆமென்’ சொன்னபிறகு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணை அவர் திறக்கும்பொழுது சுனாமி போலப் பொங்கிவந்தக் கண்ணீரை உள்ளேயே அடக்கிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தார். யாரும் எதற்காகவும் கண்ணீர் சிந்தக்கூடாது என்பது அவரின் பிடிவாதமானக் கொள்கை. அவர் கண்களிலிருந்து தப்பித்து வெளியே விழுந்த ஒரே ஒரு நீர்த்துளி, முதல்பிடிச் சோற்றிலே கலந்தது.

 


 

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14இரு துருவங்களை இணைக்கும் கவித்வம் – ஒரு துருவம் மனுஷி, இன்னொரு முனையில் நாஞ்சில் நாடன்
author

எஸ். சிவகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *