செய்யாறு. தி.தா.நாராயணன்
ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துக் கிடக்கிறது நெற் பயிர். கதிர் முற்றி விட்டதால் பசுமை குறைந்து தலை சாய,, அறப்புக்கு தயாராய் படுத்துக் கிடக்கிறது..
சற்று தூரத்தில் அறுவடை இயந்திரம் ஒன்று அசுரனைப் போல் காத்திருக்கிறது,துவம்சம் பண்ணுவதற்காக…
நாலஞ்சி வருசமாகவே இந்த பக்கம் சரியான மழையில்லாம வெள்ளாமை அத்துப் போச்சுது. ஏதோ புண்ணியவசம்.இந்த வருசந்தான் ஏரிக்கு சொற்பமாக ஒரு ஆறு மாசத் தண்ணி வரவும் ஜனங்க துணிஞ்சி முழுவீச்சில வெதைப் பாடு விட்டு, பொன்னி நாத்து போட்டாச்சி… நாலு வருசமா காய்ஞ்சி கிடந்த பூமியாச்சா?., பட்டம்—நவரைப் பட்டம் வேற.. கேக்கணுமா?. இன்னிக்கு கன அறப்பு. எல்லாருக்கும் ஒரு குத்து.தளைக்கு இருவது இருவத்தஞ்சி மூட்டைக்கு குறை இல்லை.
“டிரைவரு தம்பீ! அதோ ரோட்டுக்கு அப்பால மோட்டங்கால்ல தனியா கருவேல மரம் ஒண்ணு நிக்கிதே தெரியுதா?..”
“ஆமாங்கய்யா!.”
“அது சத்தார் பாய் கழனி. அங்கிருந்துதான் நீ ஆரம்பிக்கணும்.ஏரி பாச்சவாரி மொத்தம்1490 ஏக்கரா, இந்த போகம் மொத்த கழனி காடும் பயிரேறியிருக்கு. எப்படியும் பத்து நாளைத் தாண்டும்.பத்தாம் நாளு கடைசி அறப்பு என்னுது. ஏரிக்கு கீழ மொத மடையில பதினெட்டு ஏக்கரா.புரிஞ்சிதா?.”—-டிரைவர் தலையாட்டிவிட்டு நகர்ந்தான்.
மனுசனுக்கு மொதமடையில கழனி அமையறது பூர்வபுண்ணியம். பயிருக்கு மடை மாத்தி தண்ணி கட்ட தேவையில்ல.,கீழே ஊத்து ஓட்றதிலேயே நீர் பெரளும். நாத்து நட்டுட்டு போயிட்டா, அப்பால அறப்புக்கு அருவா எடுத்தும் போனால் போதும்னு சொல்றது. .மோட்டாங்கால் கழனிக்காரன் கதை அப்படியில்ல.தண்ணி அருந்தட்டலு காலத்தில நடு ராத்திரிக்கு மேலதான் தண்ணி முறை அகப்படும்.அதுக்கே வெல்வாயனா இருக்கணும். இரண்டு மூணு பர்லாங்கு தூரம் வாய்க்கா கட்டிம்போயி பாய்ச்சணும்.அசந்தா நடுவால எவனாவது களவாணிப் பய தன் கழனிக்கு மடை மாத்திக்குவான்.
”டர்.ர்.ர்.ர்…டர்ர்ர்ர்…டர்ர்ர்ர்.”
அறுவடை மெஷின் கழனியில் அறுத்துத் தள்ளியபடி போய்க் கொண்டு இருந்தது.தூரத்தில் நின்றபடி விவசாய கூலிகள் அதை பார்த்துக் கொண்டிருந்தனர்.சுத்துப்பட்ட எல்ல ஊர்களிலும் இரண்டு மூணு வருஷங்களாக புகைந்து கொண்டிருக்கிற விஷயம் இது. கூலிக்காரன் பொழப்பு அத்துப் போச்சுது. விவசாயமே அத்துப் போச்சுதுங்கிறது வேற கவலை. இனிமே விவசாயத்தை நம்பி பிரயோசனமில்லைன்னு கூலியாட்கள் வேலை தேடி பக்கத்து டவுனுக்கு படையெடுத்துக் கொண்டிருந்தனர். காலை ஆறு மணி டவுன் பஸ் ஜனங்களை வாரிச்சென்று டவுனுக்குள் கொட்டிவிட்டு வருகிறது..ஆணாளு, சித்தாளு,சுண்ணாம்பு அடிக்கிறது, பெயிண்ட் வேலை,மூட்டை தூக்கறது. இப்படி .எந்த வேலை கிடைச்சாலும் சரி. ஆனால் அங்கே எதுவும் சுலபத்தில் கிடைக்கிறதில்லேன்றது யதார்த்தம். சுத்துப்பட்ட எல்லா கிராமங்களிலும் இதே நிலைமைதானே? எல்லா சம்சாரிகளும் அங்கதான் லைனு கட்டிட்டு நிக்கிறானுவ.. .சம்சாரிங்க பொழப்ப இயற்கை ஒரு பக்கம் மழை பெய்யாம, அல்லது பேஞ்சு கெடுக்குதுன்னா, இந்த நாத்து நட்ற மெஷினும்,அறப்பு மெஷினும் கூலிக்காரன் பொழைப்பை குதறிப் போடுகின்றன.. வாரமெல்லாம் போய் வந்தால் மூணு நாளு வேலை கிடைக்கிறது அருபொருள்.
மிச்ச நாளுக்கு ஒட்டு திண்ணையில் தூங்கி,குடும்பத்தை காப்பாத்த பொவுசு இல்லாம மோட்டுவளையை வெறிச்சிக்கிட்டு, பொண்டாட்டியின் அசிங்கமான வசவுகளை தாங்கமாட்டாமல் பொருமி,–விளைவு? ரோட்டோரங்களிலும்,சாராயக் கடையில முணுக்கென்றால் கோவம் பத்திக்க, சண்டைக்கு பாய்கிற வெறி வந்திருக்கிறது கண்ணன் கிழவன் தன் மகனிடம்.
”டேய் முருவா! ஏரிப்பக்கம் போனியா?. செம அறப்புடா.கமிட்டியில நிக்க எடம் கொள்ளல. நெல்லு மிதிபடுது.”
தூரத்தில் அறுவடை மெஷின் ஓடும் சத்தம் கேட்கிறது
“இன்னைக்குதான் கடைசிஅறப்பு, பெர்தனக் காரங்க வூட்டுது.”
“ஏம்பா! அப்பல்லாம் இம்மாம் நேரம் நம்மாளுங்க தலைக்கு மூணு நாலு மூட்டையாவது தேத்தியிருக்கமாட்டாங்க.?.த்சு.!.”
“ இனிமே ஏண்டா அந்தக் கதை? கவர்மெண்ட்டு இனாம் அரிசி போட்றதில ஏதோ படிக்கு பாதின்னு வயித்த கழுவிக்கிறோம். ஆனா அதுவே பொயப்பாயிடுமா?. அது எத்தினி நாளுக்கு? இனிமே இங்க பொயக்க முடியாதுடா. டவுனுப் பக்கம் நவுந்திடுவோம்.சுலுவா எத்துல பொழைச்சிக்கலாம்டா .டவுனுக்காரங்களுக்கு சோம்பலு ஜாஸ்தி,குனிஞ்சி எடுக்கிறதுக்குக் கூட தாராளமா கூலி குடுப்பாங்கடா.”
“சொம்மா மூடிக்குணு போ.அங்க போனாத்தான் அதும் பவுசு தெரியும். டவுனுகாரன்க வெனையம் புடிச்சவனுங்க. பக்கத்தில செத்தா கூட இன்னான்னு கேக்கமாட்டானுங்க. இப்ப எட்டூரு ஜனங்களும் அங்கதான அல்லாடுதுங்க அங்கியும் எம்மாம் பேருக்குத்தான் வேல ஆப்டுமாம். ஆமாம் நாளைக்கு எதுக்கு இங்க ஊரை கூட்டியிருக்கானுங்களாம்?.’
“வேறென்ன சாராயக்கடை சண்டைதான். நம்ம குணாளன் பய, கடைக்காரன் புள்ளை குப்பனை, அதான் பொலிஎருதாட்டம் ஒண்ணு சுத்தி வருதே, அதை அடிச்சிட்டானாம். அதான். கூப்டு அபராதம் தீட்டப் போறானுங்க..”
மன்னார்சாமி கோயில் ஆலமரத்தினடியில் ஊர் கூடியிருந்தது..ஈசான மூலைப் பக்கம் கூலிக்காரங்க கும்பல் கூடியிருந்தது. இரண்டு தரப்பிலும் பெருமளவு கும்பலு. .பார்த்துவிட்டு சின்ன பெருந்தனம் தாண்டவராயன், வேணு கோனாரிடம். “என்னய்யா எப்பவுமில்லாம ரெண்டு பக்கமும் இவ்வளவு கூட்டம்?. எதுக்கோ தயாராய் வந்திருக்காப்பல படுது”.
“யோவ்! எவன்னா எப்படினா போவட்டும்.நாம சீக்கிரமா என்ன ஏதுன்னு விசாரிச்சி முடிச்சிட்டா கூட்டம் தன்னால கலைஞ்சிடப் போவுது. எரியறத புடுங்கினா கொதிக்கிறது அடங்குது..”
ஊர் ஆட்கள் பக்கம் ஒரு கும்பல் மந்திராலோசனையிலிருந்தது.
“மொதல்ல அடாவடியா சண்டைக்கு வந்தவன் அவந்தான்.மண்டையில தையல் போட்ற அளவுக்கு அடிச்சிருக்கான். ராஸ்கோலு! வுடக்கூடாது. வெயிட்டா அபராதம் போட வெச்சாத்தான் புத்தி வரும்.”
“அவனுங்க கட்டமாட்டேன்னு தகறாரு பண்ணுவானுங்கப்பா.”
“ரத்தக் களறிதான்.. டேய் மாப்ளே! இன்னிக்கு குடுக்கிறது ஜென்மத்துக்கும் நெனப்புல இருக்கணும் அவன்களுக்கு.”
எதிர் முகாம் கமுக்கமா இருக்கு. அதுவே இவங்களுக்கு வயித்தை கலக்குது. இல்லாதவனோ பொல்லாதவனோ. இல்லாதவனுக்குத்தான் துணிச்சல் ஜாஸ்தி.
“யார்றா இங்க பிராது குடுத்தவன்?.முன்னே வா.”
குப்பன் வந்து நின்று பஞ்சாயத்தாரைப் பார்த்து கும்பிட்டான். தலையில் பெருசா கட்டு போட்டிருந்தான்.
“உன் பிராது என்னா?,சொல்லு.”
“இந்த குணாளன் பொறம்போக்கு நாயி, கஞ்சிக்கில்லாத நாயி என்னை அடிச்சிட்டுது மாமா ஆறு தையல் போட்டிருக்கு.”
கேட்டுவிட்டு குணாளன் ஆவேசமாய் ஓடி வந்தான்.அவன் மணிக்கட்டில் மாவுகட்டு போட்டிருந்தான்.
“ டேய்! நாயே! நீ இன்னாடா பொறம்போக்கு இல்லாம பட்டாவா?. உன் ஆத்தாள கேட்டுப் பாரு நீ பொறம்போக்கா? பட்டாவான்னு சொல்லுவா.”.
குணாளன் சொன்ன வார்த்தையைக் கேட்டதும் ஒரே கூக்குரல். ஒரு கும்பல் குணாளனை அடிக்க ஓடியது. தாண்டவ`ராயன் ஆவேசத்துடன் கத்திக் கொண்டிருந்தார்.
அங்கே எதிர் அணியும் தயாராய்தான் நிற்கிறது. அங்கங்கே கைகளில் உருட்டுக் கட்டை.கள். தயாரிப்பு இல்லாமல் பாய்ந்த கும்பல் இப்போது ஜகா வாங்கியது. வேணு கோனார் எழுந்து சத்தம் போடவும் கொஞ்சம் அடங்கியது. அதற்கப்புறம் விசாரனை ஆரம்பித்தது. ,.இரண்டு தரப்பையும் விசாரித்து முடிக்க மதியமாகிவிட்டது.,வேணு கோனார் மற்ற பெருந்தனக்காரர்களுடன் கலந்துப் பேசி விட்டு தீர்ப்பை சொல்ல எழுந்தார்..
“எங்க தீர்ப்பு என்னான்னா…குணாளன் குப்பனுடைய மண்டையில தையல் போட்ற அளவுக்கு அடிச்சிருக்கிறான். அதனால குப்பன் வைத்திய செலவுக்கு முந்நூறு ரூபாயும், ஊருக்கு இருநூறு ரூபாயும், ஆக ஐந்து நூறு ரூபாய் அபராதம் கட்டணும்..”
முருவன் ஆவேசமாய் எழுந்தான்
.” இன்னாய்யா உங்க பெர்தனம்?.ஆங்! சண்டையில எங்க ஆளுக்கு கை உடைஞ்சி, மாவு கட்டு போட்டிருக்கு, உன் ஆளுக்கு தலையில அடி.பட்டு .கட்டு போட்டிருக்கான். அது இன்னா ஒருத்தனுக்கு வெண்ணை ஒருத்தனுக்கு சுண்ணாம்பு. எந்த ஊரு ஞாயம் இது?.அபராதம்னு எங்கஅளு பத்து பைசா கூட கட்ட மாட்டான். ஆமாம்..”
தாண்டவராயன் கோபமாய் எழுந்தார்
”குப்பனுக்கு ஏன் அபராதம் போடலேன்னா அவன் அடிக்கல, கீழ புடிச்சி தள்ளியிருக்கான் அவ்வளவுதான். ஆனா தடியால மண்டையில அடிச்சது குணாளன் தான்.சாட்சி இருக்கு.”
“ உன் சாட்சிய தூக்கி குப்பையில போடுய்யா. வேலிக்கு ஓணான் சாட்சி.அப்ப குணாளன் மாவுக் கட்டு போட்டிருக்கானே அது?..”
“அத்த நாங்க நம்பல.”.—அவ்வளவுதான்.முருவன் பக்கம் ஆளாளுக்கு எழுந்து கத்த ஆரம்பித்தார்கள்.
“டாய்!…டாய்! என்னா?. நீ சொன்னா வேத வாக்கு, நான் சொன்னா வேத பூ………?
இந்தப் பக்கத்திலேயும் வெறி பற்றிக் கொள்ள,.கூட்டம் குபீரென்று எழுந்துக் கொண்டது.ஒரே கூச்சல், தள்ளுமுள்ளுக்கு வந்துவிட்டார்கள்.
“டாய்!…டாய்! அட்றா…அட்றா அவனை வுடாத…”
“முருவா! மேல் வரப்பு,கீழ்வரப்புன்னு இல்லாமஇதென்ன திமிர் பேச்சு?.”—இது இன்னொரு பெருந்தனம் சாமுண்டி.
இன்னாய்யா மேல்வரப்பு,கீழ்வரப்பு/? எந்த ஊர்ல கீற?எந்த ஒலகத்தில கீற நீ? .என்னமோ உங்களாலதான் நாங்கள்லாம் பொயக்கிற மாதிரி. .அதான் இருக்கிறதையெல்லாம் வெச்சி வாங்கி துன்னுக்கிணு கீற கதையாப் போச்சே ..”—சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ள, குரல் கம்மியது முருவனுக்கு. “
‘யோவ்! ஆளு எங்க வர்றான், பார்த்தியா?.டியேய்! நீங்கள்லாம் தலைகீழா நின்னாலும் இனிமேஅது நடக்காதுடீ. கழனியில கால் வெக்க வுடமாட்டோம்..அப்பா..எம்மாம் ஆட்டங்காட்டுவீங்க?. இஷ்டம் போல தினத்துக்கு ஒரு கூலி ஏத்தி சவடிப்பீங்களே,மறப்பமா?. பட்டது போதும்டா சாமி..”
சாமுண்டியும் ,பலராமனும் கொக்கரித்தனர்.பெரிய பெருந்தனம் எழுந்தார்..
” எப்பவுமே அபராதம் போட்டா கட்டமாட்டேன்னு தகராறு பண்றதே உங்க வேலையாப் போச்சிய்யா… அப்புறம் ஊருன்னு எதுக்கு இருக்குது?.சொல்லிட்டேன் அபராதத் தொகையை கட்டலேன்னா குணாளன் குடும்பத்தை ஊரை வுட்டு விலக்கி வைக்கிறதைத் தவிர வேற வழியில்லை தெரிஞ்சிக்க. புரட்சி பண்றேன்னு கண்டவன் பேச்சையெல்லாம் கேட்டு பிரச்சினை பண்ணிக்கிட்டு திரியாதீங்க..”
முருவன் தன் கூட்டத்துடன் எழுந்தான்.
“குப்பனுக்கும் அபராதம் போட்டாதான் நாங்க கட்டுவோம். . அப்புறம் இன்னா சொன்ன? . ஊரை வுட்டு விலக்கி வெக்கப்போறியா?செய்யி. அப்பிடியே கும்பலா செத்துப்புட போறோம் பாரு.அட..போய்யா சரிதான்”.
இப்போது இரண்டு தரத்தாருக்கும் இது கவுரவ பிரச்சினையாகி விட்டது. இவர்கள் அடித்துக் கொள்வார்களே தவிர ஒருத்தரும் இறங்கிவரமாட்டார்கள். உலகில் எல்லா சண்டைகளும் யார் பலசாலி? என்பதிலேதானே நடக்கிறது?மக்களிடம் ஏற்படும் இது போன்ற சின்னச் சின்ன பகைமைகள் தாம் பெருசாகி பேரழிவுக்கு வித்திடுகின்றன….
கூட்டத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்து, இதுவரைக்கும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வேணு கோனாருடைய அப்பா ராமசாமி கோனார் எழுந்தார்.. எழுந்து முன்னேவந்து நின்றார்.
“நான் கொஞ்சம் பேசணும். தயவு செஞ்சி எல்லாரும் உட்காருங்கப்பா..”—என்றார். அவர் குரலுக்கு கூட்டம் அடங்கியது. அவரைப் பற்றி இரண்டொரு வார்த்தை வயசு—எழுபதை தாண்டியாச்சி, விவரவாளி, படிப்பு—அந்த காலத்து பி.யூ.சி…மூணு தடவை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். கொஞ்சம் பரோபகார சிந்தனை.பசின்னு போய்விட்டால் சப்பாடு போடாம அனுப்பமாட்டார். கை சுத்தம், ஊரில் எல்லா தரத்து மக்களிடமும் அவருக்கு ஒரு தனி மரியாதை இருந்தது.. இப்போது எல்லாருக்கும் ஒரு விஷயம் புரியவில்லை. வேணு கோனார் தலையெடுத்தப் பிறகு ஊர் விவகாரங்களிலிருந்து ஒதுங்கிக் கொண்டு. கோயில்,குளம்னு இருக்கிறவர். நடுவில் ஒரு பிரச்சினைக்காக கூப்பிட்டபோது கூட, இனிமே என்னை கூப்பிடாதீங்க வரமாட்டேன்.என் பையன் இருக்கான் இல்லே, அவனை வெச்சி நடத்துங்கோ என்று கத்தரித்துக் கொண்டவர்,இப்போது எதுக்கு வந்திருக்கிறார்?..
“மொதல்ல குப்பன் குடுத்த பிராதை தூக்கி கடாசுங்கப்பா.”—என்றார்.
கூலிக்காரர்கள் பக்கமிருந்து அதற்கு பலமாக கைத் தட்டலும், ஊர்மக்களிடமிருந்து அவேசக் கூச்சல்களும் எழுந்தன..
“சராயக்கடை சண்டைகளுக்கெல்லாம் ஊர் வரக்கூடாதுப்பா.. அது குழந்தைங்க சண்டை மாதிரி.நாளைக்கே ரெண்டு பேரும் தோள் மேல கை போட்டுக்கிட்டு சாராயக் கடைக்குப் போவானுங்க. இதைவிட முக்கியமான ஒரு விசயத்தை உங்ககிட்ட பேசலாம்னுதான் இன்னிக்கி வந்தேன். விதியா முருவனே அந்த விசயத்தை தொட்டுட்டான்.. காலங்காலமா நாமளும், கூலிக்காரங்களும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருந்துதான் பொழைச்சி வந்திருக்கோம்.. ஆனா இப்ப ரெண்டு மூணு வருசமா அப்படி இல்லை. மிஷின் அறப்பை கொண்டாந்துட்டோம். அவங்க பொழப்பும் அத்துப்போச்சுது, தாட்சண்யங்களும் அத்துப் போச்சுது.. அதனாலதான் நமக்குள்ளசின்னதும்,பெருசுமா அடிக்கடி சண்டைகள் வர ஆரம்பிச்சிது… நம்ம நாட்ல அறுபது சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி பொழைக்கிறவங்கதான்.. அவங்க கதி என்னாவறது?.எவ்வளவு பேருக்குதான் வேற வேலை அகப்படும்?.”.
சற்று நேரம் கூட்டத்தில் நிசப்தம்.இந்த திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. எதுக்கோ கூட்டத்தை கூட்டி, இப்ப எதுவோ நடக்கிறது. ஊர்காரர்களில் சாமுண்டியும் இன்னும் நாலஞ்சிபேரும் வேகமாக எழுந்தார்கள்.
“அதனால..அதனால என்ன இப்ப?.தோ பாருப்பா மிசினு அறப்பு வந்தப்புறம்தான் நிம்மதியா இருக்கோம் அறப்புன்னா.ஒரு வாரம் லோல்பட்றதோடில்லாம கூலிக்காரங்க குடுத்த கொடைச்சலு இருக்குதே ஐயய்யோ எப்பா. அதெல்லாம் ஒழிஞ்சிது. மூணு மணி நேரத்தில அலுங்காம குலுங்காம வரப்புல நின்னுக்கிட்டே மேல் வேலைய பார்க்க முடியுது.அறுத்து, அடிச்சி தூத்தி,ஒப்படிப்பு பண்ணி, நெல்லு மூட்டைய கமிட்டிக்கு ஏத்திட முடியுது. அதுக்கு உலை வெக்க பார்க்கிறீங்களா? நாங்க யாரும் மிசினு அறப்பை விட்றதா இல்லை. ஆமாம் அபராதம் போட்றோம்னு கூட்டத்தை கூட்டிட்டு ,இப்ப இன்னா விசயம் நடக்குது இங்க ?.”
ஊர் ஆட்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து கிழவருக்கு எதிராக கூச்சலிட்டார்கள்
முருவனும்,குணாளனும் ஆத்திரத்துடன் சூளுரைத்தபடி தன் பரிவாரங்களுடன் வெளியேறினார்கள். எதிரணியும் கூச்சல் போட்டபடி கலைய ஆரம்பித்தது.. கிழவர் அவசர அவசரமாக தன் பிள்ளையின் காதில் ஓதி மறுநாள் காலை பத்து மணிக்கு மறுபடியும் ஊர் கூட்டம் இருக்கிறது என்று அறிவிக்க வைத்துவிட்டார்.
அன்றிரவு ஊரின் பெரும் புள்ளிகளெல்லாம் கூடி வேணு கோனார் வீட்டில் ரகசியக் கூட்டம் போட்டார்கள்.
“யோவ்! நீ எத்தியோ மனசில வெச்சிக்கிணுதான் நாளைக்கும் ஊரை கூட்டியிருக்கிற.இது .இன்னா உங்க அப்பா புதுசா விவகாரம் பண்றாரு?.என்ன ஆனாலும் சரி மறுபடியும் அவனுங்களை கழனி வேலைக்கு கூப்பிடமாட்டோம். வெள்ளக்காரன் கெட்டிக்காரன்ய்யா. எல்லாத்துக்கும் மிசினு கண்டுபுடிச்சி வெள்ளாமைய சுலுவக்கிட்டான் பாரு..”
வேணு கோனார் வாயை திறக்கவில்லை.. கிழவர் சம்மன் இல்லாம ஆஜர் ஆனார்.
“டேய்! அனுபவஸ்தன் சொல்றேன்,கேளுங்கப்பா. இது விவசாய நாடு. விவசாயத்த நம்பியிருக்கிற கூலிக்காரங்க ஜாஸ்தி. தமிழ் நாட்ல மட்டும் நூத்துக்கு அறுவது பேரு வெள்ளாமை வேலைய நம்பியிருக்கிறவங்கடா. நீங்க இப்படி திடீர்னு அவங்க வயித்தில அடிச்சா அது வேற மாதிரி திரும்பிடும்டா.நுணுக்கமா புரிஞ்சிக்கங்கடா.ஒரு சமூகத்தையே ஒதுக்கிட்டு நாம மட்டும் நிம்மதியா இருக்க முடியாதுடா..”
”அது எங்களுக்கும் தெரியும் நீ நவுரு.”
மறு நாள் ஊர் கூடிய போது இரண்டு தரத்தாரும் பெருமளவு ஆஜராகியிருந்தனர்..என்ன நடக்குமோ? என்ற அச்சம் எல்லாருக்குமே இருந்தது. வன்முறைக்கு இரண்டு தரப்பும் தயாராக இருப்பதாகத்தான் படுகிறது. ஆனால் ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதிசயமாய் கிழவரின் ஆலோசனைப் படியே எல்லா தீர்மானங்களும் எதிர்ப்பில்லாமல் இரண்டு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு,”நிறைவேறின.
1)சாராயக்கடை சண்டைக்கு போட்ட அபராதத்தை ரத்து பண்ணி, இருவரையும் எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்.
2)வெள்ளாமை வேலைக்கு மிஷின்களை வைக்கிறது ஒரு ஐந்து வருசத்துக்கு தள்ளி வைக்கப் பட்டது.. .அதுவரைக்கும் அறுவடை மெஷின் ஊருக்குள்ள வரக்கூடாது. இது ஊர் கட்டளை., உள்ளூர் கூலிக்காரங்க அந்த வேலையை செய்வாங்க.”
கூலிக்காரங்க பக்கமிருந்து கைத்தட்டல் கிளம்பியது. ஊர் ஆட்கள் அடுத்த ஷரத்தை பேச கிழவரை விடவில்லை. கொதித்துப் போய் எழுந்துக் கொண்டார்கள்.
“இன்னாய்யா தீர்ப்பு இது?.தெரியும்யா.. நீ பங்காளி கழுத்தைத் தானே பதம் பார்த்து வெட்டுவே..”
கிழவர் தெளிவாகப் பேசினார்.
“எல்லாருக்கும் சொல்றேன்.முழுசா கேட்டுட்டு முடிவு பண்ணுங்கப்பா.நான் எல்லாருக்கும் பொதுவானவனாகத்தான் பேசறேன் ஊர் நல்லா இருக்கணும்..”
எழுந்தவர்கள் உட்கார்ந்தார்கள்.
“கூலிக்காரங்களுக்கு ஒண்ணு சொல்றேன். நீங்க இஷ்டம் போல இனிமே கூலிய ஏத்தறது கூடாது.ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை நியாயமான கூலிய நிர்ணயம் பண்ணிக்குவோம்.. சாதிக்கு ஒருத்தர்னு அஞ்சி பேர் கொண்ட கமிட்டி கூடி அதை நிர்ணயம் பண்ணட்டும்.அடுத்த ரெண்டு வருசத்துக்கு அதுதான் கூலி.. குடுக்கிறவன்,வாங்கறவன் இதில யார் பேச்சு மாறினாலும் சரி, அப்பவே கட்டு உடைஞ்சிரும். பழையபடி மிசினு அறப்பு வந்துரும் எனக்கு என்னா நீங்க எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாம ஒத்துமையா இருக்கணும்பா..”
கொஞ்ச நேரம் கூட்டம் ஆழங்காணா அமைதியிலிருந்தது. அப்புறம் கைகளைத் தட்டி தங்கள் சம்மதத்தை தெரிவித்தார்கள்
அப்போதே தீர்மானங்கள் எழுதப்பட்டு எல்லாரிடமும் கையெழுத்து வாங்கப் பட்டன. எல்லோருடனும் கலந்து பேசி ஐந்து பேர் கமிட்டியை நியமித்தார்கள்.. இரண்டு தரப்புக்கும் பூரணமான திருப்தி இல்லையென்றாலும் அதிருப்தி இல்லை. இரண்டு தரத்தாரும் கிழவனின் நேர்மையான குணத்தை சிலாகித்து பேசிக் கொண்டே கலைந்து சென்றனர். இரவு வீட்டில் பெரிய பெருந்தனம் தன் அப்பனிடம்
“என்னா மந்திரம் போட்டப்பா. நேத்தைக்கெல்லாம் அப்பிடி குதிச்ச ஊர்காரங்க அங்க எல்லா தீர்மானங்களுக்கும் பெருமாள் மாடு கணக்கா அப்பிடி தலையாட்டிட்டாங்களே.”
“ ஆறடி மதில் சுவரு, இரும்பு கேட்டு,,காவலுக்கு உசரமாய் ராஜபாளையம் நாயி, பின்கட்டுல வேலைக்காரங்க, இவ்வளவு இருந்தும் ராத்திரி நம்ம வீட்டில பத்து மூட்டை நெல்லு திருடு போயிடுச்சில்ல?. அதைச் சொன்னேன். இதுவரைக்கும் இது மாதிரி எப்பவும் நம்மூரில நடந்ததில்லை… களத்து மோட்டில மூட்டைய அட்டி போட்டு அடுக்கிட்டு போதையில் கிடப்போம் ஒரு மணி களவு போனதில்லை. ராஜபாளையம் நாய் இருந்தும் அது குலைக்கவே இல்லை. என்னா அர்த்தம்?. வந்தவன் அதுக்கு தெரிஞ்ச மூஞ்சி.விஷயம் புரியுதா?என்றேன்.இல்லாதவனுக்கு இல்லாம போனால், இருக்கிறவனுடையது இல்லாமப் போயிடும்னு புரிய வெச்சேன்..அப்புறம் தான் எல்லாருக்கும் உறைச்சிது. “உண்மைதாம்பா. படுபாவிங்க நம்மவூட்லியே கையை வெச்சிட்டானுங்களே.ஆமா. இதை என்னத்துக்கு வெளிய சொன்ன?. நமக்குத்தான் அசிங்கம். இருக்கட்டும் இதை கண்டுபிடிக்காம உடமாட்டேன். அன்னைக்கு வெச்சிக்கிறேன் கச்சேரி.”.” “திருட்னவன் யாருன்னு எனக்குத் தெரியும்டா.” “யாரு….யாரு? சொல்லு.” ”நான் தான் அந்தத் திருடன். நம்ம ஆள்காரனை வெச்சி திருடினேன். நான் நடத்தினது ஒரு பொய்நாடகம் தான். ஒரு நல்லதுக்காக சொன்ன பொய். தப்பு இல்லை.. மூட்டை இப்ப மாட்டுக் கொட்டாய்ல வெக்கப் போருக்குக் கீழ அடுக்கி வெச்சிருக்கு.”
வேணு கோனார் சிரித்துவிட்டார்.
”ஆமா என்னா தீர்ப்பு இது?வழவழா வெண்டைக்காய்னு. பிரச்சினையை தள்ளிப் போட்றது. சரியான குழப்படி. அஞ்சி வருசம் கழிஞ்சாலும் மறுபடியும் அடிச்சிக்கத்தான் போறாங்க,. இதை விட அதிகமாய். .சரீ இனிமே மெஷின் அறப்பே கூடாதுன்றீங்களா?.”.
“ இல்லை,வளர்ச்சிய யாரும் தப்புன்னு சொல்லமுடியாதுப்பா, சொல்லக் கூடாது. கொஞ்சம் அவகாசம் வேணும் எடுத்துக்கிட்டோம். அடுத்த அஞ்சி வருசத்தில என்ன வேணாலும் நடக்கலாம். அவங்கள்ல பரவலா அங்கங்கே பிள்ளைங்க படிச்சிட்டு வேலைக்கு போவுதுங்க…. நிறைய பிள்ளைங்க இப்ப படிச்சிக்கிட்டு இருக்காங்க.. கொஞ்சம் பேர் டவுனுக்கு நமந்தக்கார வேலைக்கு தினசரி போய்க்கிட்டு இருக்காங்க. மாத்தூர் பக்கம் தொழிற் பேட்டை (சிப்காட்) வரப் போவுது. கட்டடங்க வேகமா எழும்பிக்கிட்டிருக்கே பார்க்கல?. அப்ப வேற வழியில்லாம நாமளே மிசினு அறப்பை தேட வேண்டி வரலாம்.. பெர்தனம் பாக்கிறவன் இப்படி நாலையும் அனுசரிச்சிப் பார்க்கணும்.இந்தமாதிரி சுலபத்தில பத்திஎரியக்கூடிய சாதி, விவகாரங்களுக்கு எடுத்தேன் கவுத்தேன்னு தீர்ப்பு சொல்லிடக் கூடாது. தீர்ப்பு சொல்லாம தள்ளிப் போட்டுக்கிட்டேபோறது கூட ஒரு நல்ல தீர்ப்பு தான். தெரிஞ்சிக்க இப்ப என்ன அடுத்த அஞ்சி வருசத்துக்கு மூக்கணாங்கயிறு போட்டாச்சில்ல?. அப்புறம் கதைய அன்னிக்கு பார்த்துக்கலாம்..”—கிழவர் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, வேணு கோனாரும் சிரித்தார்.
“ஆமாமா.சாதிக்கொருத்தர்னு அஞ்சிபேர் கமிட்டி போட்டியே சூப்பர்பா.”
காலங்காலமாக நடக்கும் இது போன்ற வர்க்கப் போராட்டங்களில் உழைப்பவர்களுக்கு எதிராக இப்படித்தான் வியூகங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. உத்திகள் வெவ்வேறாயினும், விளைவுகள் மட்டும் எப்பவும் ஒன்றை நோக்கியே…
- தாயின் அரவணைப்பு
- அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘
- புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
- 3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்
- நடுங்கும் என் கரங்கள்…
- உனக்காக ஒரு முறை
- இந்திரா
- உழவு
- ஆகஸ்ட் 15
- இராஜராஜன் கையெழுத்து.
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15
- முக்கோணக் கிளிகள் ! [நெடுங்கதை] மீள் பதிப்பு
- சிவதாண்டவம்
- கொம்புத்தேன்
- வசை பாடல்
- மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு
- பாரம்பரிய இரகசியம்
- பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1
- வேர் மறந்த தளிர்கள் – 29
- விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !
- கருத்தரங்க அழைப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30
- விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்
- சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…
- அசடு
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33
- மங்கோலியன் – II
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23