டாக்டர் ஜி. ஜான்சன்
ஆங்கில முறை மருத்துவம் பயின்ற என்னைப் போன்ற பல மருத்துவர்கள் நாங்கள் கற்றது அறிவியல் பூர்வமானது என்று திடமாக நம்புகிறோம்.
இந்த முறை ஆய்வியல் அடிப்படையில் மேல்நாடுகளில் தோன்றி, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் நாம் நாடுகளில் கொண்டுவரப்பட்டது.
இந்த மேல்நாட்டு மருத்துவம் பயின்ற நாங்கள் இதர உள்நாட்டு மருத்துவ முறைகளின் மீது அவ்வளவு நம்பிக்கை கொள்வதில்லை. அவை அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு சரிவர உட்படுத்தப்படவில்லை என்ற காரணம் கூறி அவற்றை ஊக்குவிப்பதில்லை.
என்னுடைய நிலையும் அப்படிதான்…
நான் மருத்துவ பயிற்சி செய்தபோது மூன்று மாதங்கள் நகரி புத்தூரில் தங்கி ஒரு கிராம மருத்துவமனையில் வேலை செய்தேன்.
நுட வைத்தியத்தில் புகழ் பெற்ற ஊர் அது. நான் அது பற்றி ஆர்வம் இன்றி அங்கு சென்று பார்க்க வில்லை.
ஒரு அருமையான வாய்ப்பை இழந்து போனதாக பின்னர்தான் உணர்ந்தேன். எதையும் பார்த்து உணர்ந்த பின் நாம் ஒரு முடிவுக்கு வருவதே நல்லது என்பதை பின்னர் உணர்ந்தேன்.
அங்கிருந்து திருப்பதி , திருத்தணி கோவில்களுக்குகூட சென்று வந்தேன். ஆனால் அந்த நுட வைத்தியசாலைக்குச் செல்லவில்லை.
நுட சிகிச்சையில் அப்படி என்ன பிரமாதமாக செய்துவிடுகின்றனர் என்று எண்ணியிருந்தேன். எலும்பு முறிவுக்கு மருந்து வைத்து கட்டு போடுகின்றனர் . அது கூடிவிடுகிறது. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?
கட்டு போடாவிட்டாலும் அது இயற்கையிலேயே கூடத்தான் போகிறது. ஆனால் கோணலாக கூடிவிடும்.இவ்வளவுதான் வித்தியாசம்!
மேலும் நுடவைத்தியம் செய்பவர்களுக்கு எக்ஸ் -ரே பற்றி தெரியாது. எம்.ஆர். ஐ. பற்றியும் தெரியாது. இவற்றின் உதவி இல்லாமல் கண்மூடித்தனமாக குலத் தொழில், பரம்பரையாகக் கற்றது என்று சொல்லிக்கொண்டு இவர்கள் தொழில் புரிவது நியாயமற்றது என்றும் எண்ணியது உண்மையே.
ஆனால் ஒரு சொந்த அனுபவத்திற்குப் பின்பு என் எண்ணங்கள் தாறுமாறானது.
ஒரு விபத்தில் என்னுடைய வலது காலில் பாதத்தின் மேல் பகுதியிலுள்ள நான்கு எலும்புகள் ( Metataarsal bones ) குறுக்கெ முறிந்துவிட்டன. உடன் கால் வீக்கமுற்று கடுமையாக வலித்தது.
நான் உடன் மதுரை சென்றேன். அங்கு பிரபல எலும்பு சிகிச்சை நிபுணரைப் பார்த்தேன். அவர் உடன் எக்ஸ் – ரே எடுத்துப் பார்த்தார். எலும்புகள் முறிந்துள்ளன என்று கூறினார். அதற்கு மாவு கட்டு ( plaster of Paris ) போட்டு மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று விடுப்பு தந்தார். அந்த கால கட்டத்தில் நடக்கக் கூடாது என்றார். நடந்தால் முறிந்த எலும்புகள் கூடாமல் போகலாம் என்றார்.
நான் வீடு திரும்பினேன்.
ஆனால் என்னால் ஒரு நாளுக்குமேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. கட்டு போட்டுள்ள இடத்தில் பயங்கர அரிப்பு ! காலை உயரத்த்தில் தூக்கி வைத்துக் கொண்டு நாள் முழுதும் படுத்திருக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தடுமாறினேன்.
அப்போது எங்கள் ஃபிஸியோதேராபிஸ்ட் ( physiotherapist ) டேணியேல் ஒரு யோசனை கூறினார் .
” டாக்டர், நான் சொல்கிறேன் என்று தப்பாக எண்ணாதீர்கள். நானும் இந்த பீ ஓ பீ போடும் வேலைதான் செய்கிறேன். இதை போட்டுக்கொண்டு ஒரு மாசம் சிரமப்படணும் . உங்களுக்கு வேறு அலர்ஜி. ” என்றார் பீடிகையுடன்.
” சொல்லுங்க . என்ன செய்யலாம் ? ” என்று கேட்டேன்.
” எனக்கு குன்னக்குடி நுட வைத்தியர் நல்ல பழக்கம். அவர் ஒரு எண்ணைய்ப் போட்டு கட்டுவார். வலியும் இருக்காது. வீககமும் குறைந்துவிடும். நீங்கள் சரியென்றால் அவரை காரில் இப்போதே அழைத்து வருகிறேன் . ” என்றார்.
அப்போது இருந்த அவஸ்தையில் நான் வேறு எது பற்றியும் எண்ணவில்லை.
பங்களா வெளியில் காவலுக்கு நின்றிருந்த சாமுவேல் மூலமாக லட்சுமனனை அழைத்து வரச் சொன்னேன். அவன் மருத்துவமனை அம்பாசிடர் காரை ஓட்டுபவன். அவன் கொண்டு வந்த காரில் டேனியேல் ஏறிச் சென்றார்.
ஒரு மணி நேரத்தில் வைத்தியர் வந்துவிட்டார்.
நலம் விசாரித்துக்கொண்டோம்.
நான் நடந்ததைக் கூறினேன்.
அவர் கட்டை பிரிக்கணும் என்றார்.
நான் தயங்கினேன். மூன்று வாரம் கட்டு இருக்கணும் என்பது எலும்பு சிகிச்சை நிபுணரின் உத்தரவு.
” அதெல்லாம் ஒன்றுமில்லை டாக்டர். இந்த கட்டை பிரித்து விடுவோம். ” என்று தைரியம் கூறினார்.
நான் சரி என்று சொன்னதும் அந்த மாவுக் கட்டு வெட்டி அகற்றப்பட்டது.
அடி பட்டு வீங்கியுள்ள கால் பகுதியை தடவியும் அழுத்தியும் பார்த்தார்.
” எலும்புகள் முறிந்துள்ளன. அதனால் இரத்தக் கட்டு உள்ளது. நான் எங்களுடைய மருந்து வைத்து கட்டு போடுறேன். ஒரு வாரத்தில் சரியாகிவிடும் , ” இவ்வாறு அவர் சொன்னது கேட்டு வியந்து போனேன். ஒரு வாரத்தில் உடைந்துப்போன எலும்புகள் எவ்வாறு கூடும் என்பது என் சந்தேகம்.
அவர் மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறியது எனக்கு வியப்பையூட்டியது.
” ஒரு நாலு முழ வேட்டிவேண்டும் .” என்றார்.
நான் அதை வாங்கி வர லெட்சுமணனிடம் கூறினேன்.
அவன் விரைத்து சென்று திரும்பினான்.
வேட்டியை அவர் நீண்ட தூண்டுகளாகக் கிழித்தார்.
தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒரு டப்பாவிலிருந்து குழகுழவென்றிருந்த களிம்பை எடுத்து காலில் தடவினர். அதன்மேல் கிழிக்கப்பட்ட வேட்டி துண்டால் சுற்றினார்.
அப்பகுதி மதமதவென்றிருந்தது. காலுக்குள் ஏதோ ஒன்று இழுப்பது போன்ற உணர்வும் உண்டாக்கியது.
அதன்பிறகு அவர் சொன்னது என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.
” எழுந்திருந்து நன்றாக காலை ஊன்றி நடங்கள். ” என்றார்.
எலும்பு சிகிச்சை நிபுணர் இரண்டு வாரங்கள் நடக்கக் கூடாது என்று கூறியிருந்தார். இந்த நுட வைத்தியர் ஒரு நாளில் நடக்கலாம் என்கிறாரே!
” டாக்டர். பயப்படாமல் ஊன்றி நடங்கள். அப்போதுதான் எலும்பு செட் ஆகும் . நான் மருந்து போட்டுள்ளேன். வலி இருக்காது. ” என்று தைரியமூட்டினார்.
நடந்தால் அசைவு உண்டாகி உடைந்த எலும்புகள் மேலும் விலகும். அசைவு எலும்புகள் கூடுவதை தடை பண்ணும். குணமாகும் நாட்களும் நீடிக்கும். இவையெல்லாம் எனக்கு தெரியும்தான். ஆனால் இவர் சொல்வதுபோல்தான் செய்து பார்ப்போமே என்று எழுந்தேன்.
மெல்ல காலடி வைத்து நடந்தேன்.
எனக்கு ஒரே ஆச்சரியம்!
வலி தெரியவில்லை!
சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டேன்!
வீட்டுக்குள் நடந்தால் போதும் , வெளியே போகவேண்டாம் என்று கூறிவிட்டு விடை பெற்றார். நான் நூறு ரூபாய் நீட்டினேன். அதை வாங்க மறுத்துவிட்டார்.
இரண்டு நாளில் மீண்டும் வந்தார்.
கட்டைப் பிரித்தார். வேட்டித் துணி உலர்ந்திருந்தது. கால் வீக்கம் வற்றியிருந்தது. மீண்டும் களிம்பு மருந்து பூசி துணியால் சுற்றி கட்டு போட்டார்.
இது போன்று மூன்று முறை வந்து கட்டு போட்டார். வீககமும் வலியும் முற்றிலுமாக குணமாகி விட்டது. அதன் பின்பு தடவுவதற்கு களிம்பு மட்டும் தந்தார். அதன் பெயர் மயில் கால் எண்ணை
அவரும் என் நண்பராகிவிட்டார்.
அப்போது குன்றக்குடி அடிகளார் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவரைக் காண மடத்திற்குச் செல்லும் போதெல்லாம் , நுட வைத்தியசாலையும் சென்று அவரைப் பார்த்து வந்தேன். அவரிடம் நிறைய பேர்கள் மயில் கால் எண்ணை வாங்க வருவது கண்டேன்.
அது பற்றி அவரிடம் கேட்டேன். அது எதிலிருந்து செய்யப்படுகிறது என்று கேட்டேன்.
” அது எங்கள் குடும்ப பாரம்பரிய இரகசியம். அதை வெளியில் சொன்னால் பலிக்காது. நீங்கள் நண்பர் என்பதாலும், ஒரு மருத்துவ்ர் என்பதாலும் சொல்கிறேன். அதில் மூன்று பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. மயில் கால்களை கொதிக்க வைத்து அதன் சாறு எடுத்து நல்ல பாம்பின் இரத்தம் கலந்து ஒரு மூலிகையுடன் சேர்த்து செய்யப் படுகிறது. ” அந்த மூலிகையின் பெயரை அவர் கூறவில்லை.
” அது என்ன மூலிகை? ” நான் வேண்டுமென்றே கேட்டு பார்த்தேன்.
” மன்னிக்கணும் .” ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்!
( முடிந்தது )
- தாயின் அரவணைப்பு
- அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘
- புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
- 3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்
- நடுங்கும் என் கரங்கள்…
- உனக்காக ஒரு முறை
- இந்திரா
- உழவு
- ஆகஸ்ட் 15
- இராஜராஜன் கையெழுத்து.
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15
- முக்கோணக் கிளிகள் ! [நெடுங்கதை] மீள் பதிப்பு
- சிவதாண்டவம்
- கொம்புத்தேன்
- வசை பாடல்
- மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு
- பாரம்பரிய இரகசியம்
- பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1
- வேர் மறந்த தளிர்கள் – 29
- விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !
- கருத்தரங்க அழைப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30
- விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்
- சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…
- அசடு
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33
- மங்கோலியன் – II
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23