புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

This entry is part 3 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

20. மக்கள் அதிபரான ஏ​ழை

என்னங்க இப்படிப் பாக்குறீங்க..ஒங்க பார்​வை​யே சரியில்​லை​யே… என்னன்னு ​சொல்லுங்க.. அப்படி​யெல்லாம் பார்க்காதீங்க..என்ன​மோ ​சொல்ல வர்ரீங்க..​மொதல்ல அதச் ​சொல்லுங்க.. என்னது…வி​ளையாடறீங்களான்னா ​​கேட்குறீங்க.. அப்படி​யெல்லாம் நான் வி​ளையாட​லைங்க… என்ன..யா​ரோட து​ணையுமில்லாம ஒருத்தரு எப்படி மக்கள் அதிபரா வரமுடியும்னு ​கேட்கிறீங்களா?… அட இதுக்குத்தான் இப்படி​யொரு பார்​வை…இப்படி​யொரு ​​கேள்வியா?…..

ஏங்க முடியாது?…எல்லாம் மனசு இருந்தா மார்க்கம் உண்டுங்க… மனசுமட்டும் இருந்தாப் பத்தாது…முயற்சி, உ​ழைப்பு எல்லாம் ​வேணும்.. இ​தெல்லாம் இருந்தா ஏன் மக்கள் அதிபரா ஒருத்தரால வரமுடியாது? சரி அப்படிச் சிங்கப்பூர்ல மக்கள் அதிபரா வந்தவரு யாருன்னு ​கேட்குறீங்களா? ​சொல்​றேன்…​சொல்​றேன்… அவருதான் டாக்டர் வீ கிம் வீ….

வீ கிம் வீ 1915 – ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 4 –ஆம் நாள் சிங்கப்பூரில் ஒரு சராசரி குடும்பத்தில் நான்காவது குழந்​தையாகப் பிறந்தார். அன்புக்குப் பஞ்சமில்லாத அந்த வீட்டில் வறுமைக்கு மட்டும் பஞ்சமில்லை. உணவு, உ​டை என்ற அத்த​னைக்கும் பஞ்சம். வீ கிம் வீ மிக எளிமையான சூழ்நிலையில் வளர்ந்தார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை ‘பெர்ல்ஸ் ஹில்’ தொடக்கப்பள்ளியில் பயின்றார். அதுகூட இ​றைவனுக்குப் ​பொறுக்க முடியவில்​லை. வீ கிம் வீ –க்கு எட்டு வயதானபோது அவரது தந்தையார் தொண்டைப் புற்று நோயால் காலமானார். அதனால் குடும்பத்தின் நி​லைமை மிகமிக மோசமானது. ஆனாலும் வீ கிம் வீ எப்படியோ சிரமபட்டு ‘ராஃபிள்ஸ்’ கல்விக் கழகத்தில் உயர்நிலைக் கல்வி​யை மேற்கொண்டார். ஆனால் அவ​ரைக் குடும்ப வறுமை அலைக்கழிக்க இரண்டு ஆண்டுகள்தான் அவரால் அங்கு கல்வி கற்க முடிந்தது.

உ​​ழைப்பால் உயர்ந்தவர்

வறு​மை காரணமாக அவர் படிப்​பைத் ​தொடர முடியாமல் 1930 – ஆம் ஆண்டில் “ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்” பத்திரிக்கையில் அலுவலக உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அவர் அலுவலகத்தில் கடுமையாக உழைத்ததால் பத்திரிக்​கை நிர்வாகம் அவ​ரைப் விளம்பரப் பிரிவில் பணியமர்த்தியது. அதிலும் வீகிம்வீ சிறப்பாகப் பணியாற்றினார். அதனால் மகிழ்ந்த பத்திரிக்​கை நிர்வாகம் அவரது திற​மை​யைப் பாராட்டி அவருக்கு நிருபர் பதவி வழங்கிப் பாராட்டியது.

1936 – ஆம் ஆண்டு ‘கோ சாக் ஷியாங்’ என்பவரை மணந்து கொண்ட வீ கிம் வீ அவர்களுக்கு ஒரு ஆண், ஆறு பெண்கள் என எழு பிள்ளைகள் பிறந்தனர். தனது இல்லற வாழ்க்​கையிலும் எளி​மை​யை​யே வீ கிம் வீ அவர்கள் க​டைபிடித்தார். “ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்” பத்திரிக்கையில் நிருபராகச் சிறப்பாகப் பணியாற்றினார். இத​னை அறிந்த யு.பி.ஏ. என்ற அ​மெரிக்கச் ​செய்தி நிறுவனம் அவ​ரைத் தமது நிறுவனத்தில் பணியாற்ற அ​ழைத்தது. அதனால் வீகிம்வீ 1941-ஆம் ஆண்டில் ‘யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷன்(யு.பி.ஏ)’ எனப்படும் அமெரிக்க செய்தி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

ஜப்பானிய ஆட்சிக் காலத்தின்போது அந்த வேலையை அவரால் தொடர முடியவில்லை. ஜப்பானிய இராணுவ அமைப்பில் எழுத்தராக வேலை செய்தார். 1945 – ஆம் ஆண்டு ஜப்பானிய ஆட்சியிலிருந்து சிங்கப்பூர் விடுபட்டபோது அவர் மீண்டும் ‘யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷனில்(யு.பி.ஏ)’ சேர்ந்தார். அதில் அவருக்கு நல்ல பத்திரிக்கை அனுபவம் கிடைத்ததால் மீண்டும் அவர் 1959 – ஆம் ஆண்டில் “ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில்” உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

அந்தக்கால கட்டத்தில் நிருபராக இருந்து பல முக்கிய நிகழ்வுகளை சிங்கப்பூர் மக்களுக்கு கொண்டு வரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குறிப்பாக 1966 – ஆம் ஆண்டு இந்தோனோசியாவுக்கும், மலேசியாவுக்கு இடையே நிலவிய ‘கான்ப்ரெண்டேஷன் (CONFRONTATION)’ எனப்படும் அரசியல் பதற்றத்தின்போது மனஉறுதியுடன் ஜகர்தாவுக்குச் சென்று இந்தோனோசியாவின் முன்னால் அதிபர் சுகார்த்தோவை நேரடியாகப் பேட்டி எடுத்தார். அடுத்த நாளே மூன்றாண்டு பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தோனோசியா விரும்புகிறது என்ற தலைப்புச் செய்தியை உலகுக்குத் தந்தார் வீ கிம் வீ.

சிங்கப்பூர் அதிபராதல்

1966 – ஆம் ஆண்டு ‘justice of the peace’ ஆக நியமிக்கப்பட்டார். 1963-ல் பொதுச்சேவைக்கான நட்சத்திர விருதையும், 1979 ஆம் ஆண்டு மெச்சத்தக்க சேவை விருதையும் வென்றார்.

1973 ஆம் ஆண்டு அவர் பத்திரிக்​கை ஆசிரியர் பதவி ஓய்வுபெற இரண்டு ஆண்டுகளே இருந்தபோது சிங்கப்பூர் அரசாங்கம் அவரை மலேசியாவிற்கான தூதராக நியமித்தது. மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்க வேண்டிய அந்த பதவியில் திரு. வீ ஏழு ஆண்டுகள் நீடித்தார். அந்த ஏழு ஆண்டுகளில் சுமூகமான சிங்கப்பூர், மலேசிய உறவுகளுக்கு அவர் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

அந்தப்பணி முடிந்து 1980 – ஆம் ஆண்டில் ஜப்பானுக்கான தூதராகவும், அதற்கு அடுத்த ஆண்டு கூடுதலாக கொரியாவுக்கான தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அவருடைய தூதரகப் பணி 1984-ஆம் ஆண்டில் முடிவடைந்ததும் சிங்கப்பூர் ஒளிப்பரப்புக் கழகத்தின் தலைவராக சிங்கப்பூர் அரசாங்கத்தால் வீ கிம் வீ நியமிக்கப்பட்டார்.

அவரது உ​ழைப்​பையும் திற​மை​யையும் கண்டுணர்ந்த சிங்கப்பூர் நாடாளுமன்றம் 1985 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 – ஆம் நாள் அவரைச் சிங்கப்பூரின் நான்காவது அதிபராகத் தேர்ந்தெடுத்தது. வீ கிம் வீ ​தொடர்ந்து எட்டு ஆண்டுகள் அந்தப் பணியைச் செவ்வெ​னே செய்தார்.

டாக்டர் பட்டமும் உருக்கமான உ​ரையும்

1993 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். தனது கல்விப் பயணத்தில் பல்கலைக்கழகத்தில் காலடி வைக்க முடியாத வீ கிம் வீ அவர்களுக்கு 1994 – ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 30 – ஆம் நாள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ​கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதனை ஏற்று வீ கிம் வீ ஆற்றிய உருக்கமான உரையில்…. “வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே கைவிட்ட எனக்கு பட்டப்படிப்பு படிக்காமலேயே இவ்வுளவு பெரிய ​கெளரவம் கிடைத்தது குறித்து உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் சென்ற ஒரே பல்கலைக் கழகம் வாழ்க்கை என்ற பல்கலைக்கழகம்தான்” என்று கூறினார். ​மேலும் “வாழ்க்கை என்ற அதிர்ஷ்ட குலுக்கில் நாம் எவ்வாறு பிறக்கிறோம் என்பதையோ, பிறந்த பிறகு வரும் அதிர்ஷ்டங்களையோ துரதிர்ஷ்டங்களையோ நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் அவற்றை எவ்வாறு சமாளிக்கிறோம் என்பது நம் கைகளில் இருக்கிறது. தன்னம்பிக்கை இழக்காமல் முழுமையாக போராடினால் துரதிர்ஷ்டம் நம் பாதையைக் கடந்தாலும் நம்மால் அதனை வெற்றியாக மாற்ற முடியும்” என்று உ​ரையாற்றினார்.

அதே உரையில் வீ கிம் வீ தன் வாழ்க்கையில் பின்பற்றிய, வாழ்க்கையில் நிறைவு காண வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது ஆகிய மூன்று கொள்கைகளைக் குறித்தும் பேசினார்.

எளி​மையான வாழ்வு

இந்தக் கொள்கைகளுக்கு உதாரணமாக வீ கிம் வீ மிகவும் எளி​மையான வாழ்வு வாழ்ந்தார். எட்டு ஆண்டுகள் சிங்கப்பூரின் அதிபராக அவர் இருந்தபோது பரந்து விரிந்த “இஸ்தானா” மாளிகையில் வசிக்க வாய்ப்பிருந்தபோதும் அவர் வசிக்கவில்​லை. மாறாக அவர் சிக்லாப்பில் இருந்த தனது சொந்த வீட்டிலேயே வசித்தார் என்பது குறிப்பிடதக்கது. அவர் எல்லோரையும் உயர்வு தாழ்வு பாராது அ​னைவ​ரையும் சமமாகப் பாவித்து மதிப்புடன் நடந்து ​கொண்டார். இதனை வீ கிம் வீ வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததால்தான் அவரை ‘மக்கள் அதிபர்’ என்று எல்லோரும் அழைத்தனர். வீ கிம் வீ எப்போதும் பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொண்டார். Harry Truman என்பவர் அமெரிக்காவின் அதிபரான பிறகும் தன்னு​டைய காலணிகளைத் தாமாக​வே பாலிஷ் செய்துகொள்வார் என்ற கதையைக்கூறித் தானும் அதிபரான பிறகுகூடத் தாமாக​வே தமது காலணிகளுக்குப் பாலிஷ் செய்து கொள்வதையும், காஃபி போட்டுக் கொள்வதையும் கடைப்பிடித்தார்.

வீ கிம் வீ 2004 – ஆம் ஆண்டு ‘Glimpses and Reflections’ என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார். அவரது சுயசரிதையைப் படித்துப் பார்த்தால்தான் உன்னத நி​லை​யை அ​டைந்த ஒரு மனிதன் எப்படிப்பட்ட சாதரணமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது நமக்​கெல்லாம் புரியும். அ​தைப் படித்த ஒவ்​வொருவருக்கும் வியப்பால் புருவங்கள் விரியும். தன்னுடைய பனிரெண்டாவது வயதில் தலமையாசிரியரிடம் தான் வாங்கிய பிரம்படி எவ்வாறு தன் வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று வீ கிம் வீ அந்த நூலில் சுவைபடக் கூறியிருக்கிறார். அந்த நூலின் விற்பனை மூலம் கிடைத்த அரை மில்லியன் டாலரை எட்டு அற நிறுவனங்களுக்கு வீ கிம் வீ வழங்கினார்.

மக்கள் அதிபரின் ம​றைவு

‘மக்கள் அதிபர்’ என்று புகழப்பட்ட டாக்டர் வீ கிம் வீ, அவர்கள் ‘Prostate’ எனப்படும் சிறுநீர்ப்பை சுரப்பி புற்றுநோயால் அவதிப்பட்டார். 2005 – ஆம் ஆண்டு மே மாதம் 2 – ஆம் நாள் தமது 89 – ஆவது வயதில் இவ்வுல​கை விட்டு ம​றைந்தார். அவரது அன்பையும், மனித நேயத்தையும், புன்னகை பூக்கும் முகத்தையும் மறக்க முடியாத சிங்கப்பூர் மக்கள் தங்களுடைய உறவினர் ஒருவர் இறந்துபோனது போன்று உணர்ந்தனர். வீ கிம் வீ அவர்களின் இழப்​பைத் தங்களின் ​சொந்த இழப்பாகக் கருதிக் கண்ணீர் வடித்தனர். அதனால்தான் நவீன சிங்கப்பூர், வரலாறு காணாத அளவுக்கு பல்லாயிரம் மக்கள் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்த இஸ்தானாவில் வரிசையில் நின்று தங்களது இறுதி மரியா​தை​யைச் ​செலுத்தினர்.

வாழும்போது எளிமையை விரும்பிய டாக்டர் வீ, மறைந்தபோதும் எளிமையாகவே மக்களால் தான் நினைக்கப்படுதல் ​வேண்டும் என்று விரும்பினார். அதனால் தன்னுடைய அஸ்தியை சராசரி சிங்கப்பூர் மக்களின் அஸ்திகளுக்கு மத்தியில் வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் பொதுவாக அதிபர்கள் ‘கிராஞ்சி’ சமாதியில்தான் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் டாக்டர் வீ அவர்களின் அஸ்தியோ அவரது விருப்பம்போலவே ‘மண்டாய்’ அஸ்தி மாடத்தில் அடக்கம் ​செய்யப்பட்டு மற்ற சாரசரி சிங்கப்பூர் மக்களின் அஸ்திகளோடு அவரது அஸ்தியும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் உயர்ந்த பதவியை எட்டியபோதும் அதிகாரமோ, தலைக்கணமோ, அகம்பாவமோ அவரது தலைக்கு ஏறவில்லை. மாறாக எட்டாத தூரத்திலிருந்த ஒரு பதவியை அவர் சாமானிய மக்களுக்கும் எட்டும் உயரத்திற்குக் கொண்டு வந்தார். அவரது புன்னகைக்கும், கனிவான பேச்சுக்கும் வசப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏழ்மையில் பிறந்து பட்டப்படிப்பு படிக்காமலேயே சிங்கப்பூரின் உயரிய பதவியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவருடைய நேர்மை, கனிவு, பரிவு, மனிதநேயம், தன்னம்பிக்கை, கடும் உழைப்பு, விடாமுயற்சி ஆகிய​வைதான். இவற்றிற்கெல்லாம் மேலாக… “இந்த உலகத்தில் வாழ்கின்ற காலத்தில் ஐந்து அல்லது பத்து சக மானிடர்கள் மகிழ்ச்சியோடு வாழ நான் முயன்றிருந்தால் அதுவே நான் பிறவி எடுத்ததன் பயனாகும்” என்று கூறி இறுதிவரை அவர் கடைப்பிடித்து வாழ்ந்த எளிமைதான் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

என்னங்க…குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுப் பின்னர் கெளரவ டாக்டர் பட்டம் பெற்று, ஒரு நாட்டின் அதிபரான வீ கிம் வீயின் வாழ்க்​கை நமக்​கெல்லாம் ஒரு உற்சாகம் தரக்கூடியதாகும். இனி​மே என்ன எ​தைப் பற்றியும் கவ​லைப் படாதீங்க… உங்களு​டைய இலக்கு எது​​வோ அ​தை ​நோக்கிப் பயணமாகுங்க…. ​சோர்ந்து ​போகாதீங்க….அப்பறம் என்ன ​வெற்றி உங்களுக்குத்தான்…

ஏழ்​மை காரணமா ஒருத்தர் சிறுவயதில் ஓடும் ரயிலில் ​செய்தித்தாள் விற்றார்….பள்ளியில அவர ஒன்றுக்கும் உதவாதவன் என்று முத்தி​ரை குத்தினர்…அதனால அழுது​கொண்​டே வீட்டிற்கு வந்தான் அந்தச் சிறுவன்…..அவங்க அம்மா​வே அவனுக்குப் பாடம் ​சொல்லிக் ​கொடுத்தாங்க…இதுல அந்தப் ​பையன் ​செவித்திறன் கு​றைந்து​போன ஒரு மாற்றுத் திறனாளியா இருந்தாரு ….. முயன்றார் ………..… கடினமாக உ​​ழைத்தார்…. அறிவியலில் வியத்தகு சாத​னைகள் ப​டைச்சாரு…………உலக​மே அவ​ரைப் புகழந்தது…உலகி​லே​யே அதிகமான கண்டுபிடிப்புக​ளைக் கண்டுபிடிச்சாரு…அவரு யாரு… ​சொல்லுங்க பார்ப்​போம்…. என்ன த​லையச் ​சொரியறீங்க..ஓ​கோ…. ​யோசனபண்ண ஆரம்பிச்சிட்டீங்களா….​யோசன பண்ணுங்க அடுத்த வாரம் பார்ப்​போம்……(​தொடரும்……………..21)

Series Navigationஅம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *