குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24

This entry is part 12 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

சிந்தியாவின் வீட்டிலிருந்து திரும்பிய தீனதயாளன் தமக்குக் கதவு திற்நத ராதிகாவை ஆழ்ந்து பார்க்க இயலாதவராய், செயற்கைத்தனமான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தம் பார்வையை உடனே நகர்த்திக்கொண்டு அப்பால் நகர்ந்தார்.

‘இந்த அப்பா  சிந்தியாவின் வீட்டுக்குத்தான் போய்விட்டு வருகிறார்.  இங்கு வந்தது பற்றி அவளுடன் சண்டை போடுவதற்காகப் போயிருந்திருப்பார்.’

மகள் தம்மை ஏளனமாகப் பார்ப்பது போல் அவருக்குத் தோன்றியது.  சில குடும்பங்களில், தகப்பன்மார்கள் தங்களின் ஒரு பார்வைக்கே உறைந்து போகிற அளவுக்கு ஓர் அச்சத்திலேயே மனைவி-குழந்தைகளை ஏன் வைத்திருக்கிறார்கள் என்பதை முதன் முறையாக அவர் நினைத்துப் பார்த்தார்! ‘நான் தப்புப் பண்ணிவிட்டேன். வீட்டுப் பெண்பிள்ளைகளை அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கத் தவறினேன்!  அவர்களுக்கு அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுத்து வந்துள்ளேன்.  இல்லாவிட்டால், ஒரு மகளுக்குத் தன் தகப்பன் மீது ஜாடைமாடையாகச் சொல்லம்புகளை வீசுவதற்கான துணிச்சல் வராது.  பொடிவைத்துப் பேசுவதற்கும், மறைமுகச் சாடல்களில் ஈடுபடுவதற்கும் தெம்பும் வராது.  …. பாவம், தனலட்சுமி!  சாது. ராதிகாவுக்கு வாய் ஜாஸ்திதான். படித்த பெண்ணாயிற்றே! பெண்களைப் படிக்க வைப்பதும், அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதும் ஆண்களுக்கு இடைஞ்சல்.  அதனால்தான் பெண்களுக்கு ஆண்கள் கல்விமறுப்புச் செய்துவந்துள்ளார்கள்.   நான் இதுகாறும் பேசிவந்துள்ள முற்போக்குக் கருத்துகளுக்கு மாறாக இப்படியெல்லாம் சிந்திப்பது தெரியவந்தால், ஆண்களின் அடிப்படைத் தன்மைகள் மாறவே இல்லையென்று ராதிகா சாடுவாள்!   ‘பெண்ணுரிமையிலும், பெண்களின் சுதந்திரத்திலும் தங்களுக்குப் பெரிதும் ஈடுபாடு போல் ஆண்கள் காட்டிக் கொள்ளுவதெல்லாம்  வெறும் வேஷம்; பூனைகளால் எலிகளுக்கு எங்கேனும் நன்மை உண்டா?’ என்று தந்தை பெரியார் சொன்ன சொற்களால் என்னைச் சாடுவாள். தந்தை பெரியாரின் புத்தகங்களை இவளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னது கூட நான் செய்த பெருந்தவறு.  …’  – அவர் ஒரு பெருமூச்சுடன், கைகால்களைக் கழுவிக்கொண்டபின்,  சிற்றுண்டி யருந்த மேசை முன் உட்கார்ந்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிக்கும் தன்மை ஆணுக்கு உண்டு என்று இவளுக்கு எடுத்துச் சொல்லுவது எவ்வாறு?  ஆனால் ராதிகா அதை ஏற்பாளா?  … ராதிகா சிந்தியாவைப்பற்றி நேரடியாகவே கேட்டுவிட்டாலும் கூட ஆணின் இந்தத் தன்மை பற்றிச் சொல்லித் தான் அவள் அம்மாவுக்குத் துரோகம் பண்ணவில்லை என்று அவளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.  …ஆனால், தனலட்சுமியின் மனம் என்ன பாருபடும்!…’  – இந்தக் கடைசி வினா அவருள் திகிலைத் தோற்றுவித்தது. முகம் கழுவிக் குளிர்ச்சியுடன் உட்கார்ந்திருந்த நிலையிலும் அவருக்கு வேர்க்கலாயிற்று.
”என்னப்பா? ஆஃபீசுக்கா போயிருந்தீங்க?”  என்றவாறு மேசைக்கு எதிரே வந்து நின்று ராதிகா வினவியது அவர் செவிகளில் விழுந்தும் மூளையில் பதியவில்லை.

“என்னப்பா? உங்களைத்தான். என்ன யோசனை? ஆஃபீசுக்கா போயிருந்தீங்கன்னு கேட்டேன்.”

தனலட்சுமி சூடான சப்பாத்திகளையும் தக்காளிக் குருமாவையும் கொண்டுவந்து மேசை மீது வைத்துக்கொண்டிருந்தாள் :
”உங்கப்பாவுக்கு வேற என்னடி யோசனை இருக்கப் போவுது? எல்லாம் உன்னனைப் பக்தின யோசனையாத்தான் இருக்கும்!”  என்று சிரித்த தனலட்சுமி அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டாள்.

“ராதிகா டிஃபன் சாப்பிட்டாச்சா?”

“ஆச்சுப்பா.”

ஐந்தரை மணிக்குள் வந்து விடுவதாய்ச் சொல்லிச் சென்றிருந்தும், வழக்கம் போல் தமக்காகக் காத்துக்கொண்டிராமல், ராதிகா சாப்பிட்டுவிட்ட்து அவரை முள்ளாய்க் குத்தியது.  இப்படி அவள் அதற்கு முன்னால் செய்ததில்லை. பசியைப் பொறுத்துக்கொண்டும் அவரைச் செல்லமாய்த் திட்டிக்கொண்டும் காத்திருப்பாளே தவிர, இப்படிச் செய்தது கிடையாது.

“இன்னைக்கு அவளுக்கு ரொம்பவுந்தான் பசி போல.. சப்பாத்தி பண்ணிக்கிட்டு இருக்கும் போதே தட்டை எடுத்துட்டு வந்து உக்காந்துட்டாங்க,” என்ற தனலட்சுமி தானும் சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டாள்.

“என்னங்க! குருமா நல்லாருக்குதா?”

“என்ன கேள்வி இது? நீ செய்யிற குருமான்னா கேக்கணுமா!”

இதற்குள் ராதிகா சற்று அப்பால் சென்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். ‘இப்படித்தான் நீ அந்த சிந்தியாவிடமும் சொல்லி ஐஸ் வைப்பாயோ? நீ எத்தகைய மோசக்காரன்! உன் மகளாகவா நான் பிறந்தேன்? எத்தகைய அவமானம் இது எனக்கு!’

“என்னங்க! நம்ம ராதிகாவுக்கு ஈடான அழகி வேற ஒருத்தியும் இருக்கமாட்டான்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா இன்னைக்கி மதியம் நம்ம வீட்டுக்கு வந்திருந்த சிந்தியா அவளையும் தூக்கிச் சாப்பிட்டுட்டாளேங்க! அது மாதிரி ஒரு அழகை நான் பாத்த்தே இல்லீங்க!”

ராதிகாவின் விரல்கள் அவள் கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாலும், அவள் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு உவ்கார்ந்திருந்தாள். ஓரத்துப் பார்வையைக் கவனமாய்த் தவிர்த்தாள்.  ஏனெனில் தீனதயாளன் அவளுக்கு நேரெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

“அதுக்கென்ன இப்ப?” என்று மனைவியின் கேள்விக்குப் பதிலிறுத்த தீனதயாளன் குரல் சாதாரணமாய் ஒலிக்கும்படி பார்த்துக்கொண்டார்.

“அட, சொல்லக்கூடாதா! … அடியே, ராதிகா! அந்தச் சிந்தியா உன்னைவிட அழகுன்னு சொன்னதும் உங்கப்பாவுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்திடிச்சு! மூஞ்சியைப் பாரேன்!”

ராதிகா தன் தலையை உயர்த்தி, தீனதயாளனைப் பார்த்தாள்.  ஆனால் அவர் அவள் பார்வையைச் சந்திக்காமல் சப்பாத்தியை மென்று கொண்டிருந்தார்.

“என்னம்மா இது, நீங்க பேசுறது! சிலருக்குக் கட்டின பொஞ்சாதியைத் தவிர வேற யாரும் அழகாத் தெரிய மாட்டாங்கம்மா.  அல்லது வேற யாரு அழகா யிருந்தாலும் ஒத்துக்கவும் மாட்டாங்க!  அப்பா அந்த ரகம்னு சொல்லுவீங்களா, அத்த விட்டுட்டு, என்னை இழுக்கிறீங்களே இதிலே!”   – ராதிகாவின் குரலில் வழிந்த நக்கலும் அவள் ஒவ்வொரு சொல்லையும் அழுத்தந்திருத்தமாய் உச்சரித்த தினுசும், தலையை உயர்த்தி அவரைப் பாராமலே அவள் குரலில் ததும்பிய கிண்டலின் மூலம் அவள் முகத்திலும் கூட இருந்திருக்கக்கூடியதாய்த் தாம் உணர்ந்த குத்தலும் அவரை நிலை குலைத்தன.
புன்னகை புரிய முயன்று தோற்றுப் போன தீனதயாளன் ராதிகா சொன்னதைக் கவனியாதவர் போல், “இன்னும் ஒரே ஒரு சப்பாத்தி போடு!” என்றார்.

இது போன்ற கிண்டல் பேச்சுகளுக்கெல்லாம் சரிக்குச் சரியாய் மகளுடன் தாமும் கிண்டலடிக்கும் வழக்கமுள்ள அவர்  மவுனமாக இருந்தது தனலட்சுமிபை வியப்புறச் செய்தது. “ஏங்க, உடம்பு கிடம்பு சரி இல்லியா?”

“என்னது நீ? நான் எப்பவும் போல சாதாரணமாத்தான் இருக்கேன்.”

“.. சரி. அப்புறம், காலையில நாம பேசிக்கிட்டமே – அந்தப் பிள்ளையாண்டானைப் பத்திக் கொஞ்சம் விசாரியுங்க.”

“சரி. நானே விசாரிக்கலாம்னுதான் இருக்கேன்.”  – – சாப்பிட்டுவிட்டுக் கை கழுவிக்கொண்டபின் தமது அறை நோக்கி நடந்த அவரை இரண்டு பெண்களுமே பார்வையால் பின்தொடர்ந்தார்கள்.  ஆனால் பார்த்த பார்வைகளில்தான் வித்தியாசம் இருந்தது!

மறு நாள் ராதிகாவும் பத்மஜாவும் கல்லூரி முதல்வரைப் பார்த்து டிக்கெட்டுகள் விற்ற பணத்தை ஒப்படைத்தார்கள்.
“அதுக்குள்ள அத்தனையையுமா வித்துட்டீங்க? பரவால்லியே!”

“ராகேஷ்னு ஒருத்தரு, மேடம், மொத்தமா எல்லா டிக்கெட்டுகளையும் வாங்கிக்கிட்டு மூவாயிரத்தை உடனே குடுத்துட்டாரு. அதான்.”

“ராகேஷா? யாரது?”

சொன்னார்கள்.

“ஓ! அந்தப் பையனா? எனக்குத் தெரியும். எ வெரி நைஸ் பாய்! அவங்கப்பா ரொம்ப தாராள குணம். அவனும் அப்படி இருக்குறான் போல!”

“சரி, மேடம். நாங்க வரட்டுமா?”

“ரைட். தேங்க்யூ வெரி மச். சிந்தியாவுக்கு ஃபோன் போட்டு இப்பவே வரவழைக்கிறேன்.  வந்து, பணத்தை வாங்கிட்டுப் போகட்டும். ஷி வில் பி வெரி ஹேப்பி…”

முந்திய நாள் அவள் தன் வீட்டுக்கு வந்திருந்ததைப் பற்றி அவரிடம் சொல்லலாமா என்று கணம் போல் யோசித்த ராதிகா வேண்டாம்  என்று உடனேயே தீர்மானித்தாள். அதன் பின், இருவரும் தங்கள் வகுப்பறை நோக்கி நடக்கலானார்கள்.

“ராதிகா! நான் ஒண்ணு சொல்லட்டுமா? சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?”

“இல்லே.. சும்மாச் சொல்லு.”

“அந்த ராகேஷ் இருக்கானே, அவன் உன்னைப் பாத்ததும் அப்படியே ஸ்டன்னாயிட்டான்!  நீ தலையை குனிஞ்சுக்கிட்டு டிக்கெட்ஸை எண்ணிட்டிருந்தப்ப உன்னைக் குறுகுறுன்னு எப்படிப் பாத்தான், தெரியுமாடி?  ஒரு நிமிஷம் எனக்கே பொறாயா இருந்துச்சுடி!   அப்பால,  ‘சீச்சீ! என்ன இருந்தாலும் நம்ம சிநேகிதி’ன்னு சமாதானப்படுத்திக்கிட்டேன்…”

“சீ, கழுதை!”

“விளையாட்டு இருக்கட்டும்டி, ராதிகா. எனக்கென்னமோ ஒரு நாள் அவன் உங்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லி வழியப் போறான்னு தோணுதுடி!. நான் பெட் கட்டத் தயார்!”

“அப்படி யெல்லாம் வழியற ஆளாத் தெரியல்லேடி அவன். ஒருக்கா, கல்யாணம் ஆனவனாக் கூட இருக்கலாம்.  தன்னை அவன் பேச்சிலர்னு சொல்லிக்கிட்டது கூட விளையாட்டுகா இருக்கலாம்.”

“இல்லேடி. எனக்கு அப்படித் தோணல்லே. அப்படியே கேட்டான்னு வெச்சுக்க, சரின்னு சொல்லிடுடி. என்ன?”

“சும்மாருடி. ரொம்பவும் தான் கற்பனை பண்றே. நீ எழுத்தாளராகலாம்!”

… இரண்டு நாள்கள் கழித்து, செருப்புக் கடை யொன்றில் பத்மஜா ராகேஷைத் தற்செயலாய்ச் சந்தித்தாள்.  அவள் கவனியாதவள் போலிருக்க, அவன் தானாகவே முன்வந்து அவளுடன் பேசினான்: “ஹல்லோ, மிஸ்!… ஞாபகம் இருக்கா?”

“அதெப்படி மறக்கும்? மிஸ்டர் மூவாயிரம்!”

“அப்படின்னா மூவாயிரத்துக்கு டிக்கெட் வாங்கினதுனாலதான் ஞாபகம் வெச்சுக்கிட்டு இருக்கீங்களா!?”

“பின்னே? யாருக்கு மனசு வரும்?”

சில நொடிகளுக்கு ராகேஷ் மவுனமாக இருந்தான். பிறகு சற்றே செம்மை படர்ந்த முகத்துடன், “உங்களோட கொஞ்சம் பேசணும்…. ஒரு ரெண்டு நிமிஷம் ஸ்பேர் பண்ண முடியுமா?” என்றான் சன்னக் குரலில்.

“ஓ! தாராளமா. அதுக்கும் மேலேயே! ஏன்னா, ராதிகா என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட், மிஸ்டர் ராகேஷ்!” என்று அவள் சிரிக்க அவன் அயர்ந்து போனான். பின்னர், அவளது சிரிப்பில் அவனும் வெட்கத்துடன் கலந்துகொண்டான்.

“மை காட்! நீங்க ரொம்பவே ஷ்ரூட்!”
`     “நேத்திக்கே நான் ராதிகா கிட்ட சொன்னேன் அந்த ராகேஷ் உங்கிட்ட சீக்கிரமே ஐ லவ் யூ சொல்லப்போறாரு, பாருன்னு!”

“நீங்க ரொம்பவே புத்திசாலி, பத்மஜா!”

“ஹ்ம்! என்ன பிரயோசனம்? புத்திசாலித்தனம் மட்டும் இருந்தாப் போதுமா?  அழகாயும் இருக்கணுமில்ல?”

“ஐம் சாரி….”

“நீங்க ஒண்ணும் சாரி சொல்ல வேணாம்.  நான் கொஞ்சம் தமாஷாப்  பேசுவேன். சீரியஸா எடுத்துக்காதீங்க…பொதுவா, புத்திசாலித்தனம் இருக்கிற இட்த்துல அழகு இருக்காது, அழகு இருக்கிற இடத்துல புத்திசாலித்தனம் இருக்காதுன்னு சொல்லுவாங்க..  ஆனா எங்க ராதிகா கிட்ட ரெண்டுமே இருக்கு.!”

“நீங்க ராதிகாவுக்கு ரொம்ப நல்ல தோழிதான், மிஸ் பத்மஜா! ராதிகா ரொம்பக் குடுத்து வெச்சிருக்கணும்….”

“ராதிகாவை மனைவியா அடையவும் ரொம்பக் குடுத்து வெச்சிருக்கணும், மிஸ்டர் ராகேஷ்!”

“அந்தக் குடுத்து வெச்ச ஆளு நானான்னு ராதிகா கிட்ட கேட்டு நீங்க எனக்குச் சொல்லணும், பத்மஜா!”

“கண்டிப்பா, மிஸ்டர் ராகேஷ்! …அவகிட்ட உங்களுக்காகப் பரிஞ்சும் பேசறேன். சரியா?”

“தேங்க்யூ! தேங்க்யூ! அப்புறம் எனக்கு எப்படி முடிவைச் சொல்லுவீங்க?”

“உங்க பெர்சொனல் ஃபோன் நம்பர் குடுங்க. சொல்றேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சந்திச்சு மத்த விஷயங்களை யெல்லாம் விவரமாப் பேசிக்கலாம்.  அநேகமா அவ யெஸ்னு சொல்லுவான்னுதான் நினைக்கிறேன்.  ஆனா படிப்பை முடிச்சுட்டுத்தான் அவ கல்யாணம் பண்ணிப்பா. அதுக்கு நீங்க குறுக்கே நிக்கக் கூடாது…”

“நெவர்! ஒண்ணும் அவசரமே இல்லே. … இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்ட். ஆஃபீஸ் நம்பர், பெர்சொனல் நம்பர் ரெண்டுமே இருக்கு அதிலே. எதுல வேணா கூப்பிடலாம்…”

“ரைட்…. ராத்திரி நிம்மதியாத் தூங்குங்க.  ஸ்வீட் ட்ரீம்ஸ்…பை….” – குறும்புச் சிரிப்புடன் கையசைத்து நடந்து சென்ற பத்மஜாவை நன்றியுடன் சில கணங்கள் போல் பார்த்துக்கொண்டிருந்த பின் ராகேஷ் தன் பைக்கைக் கிளப்பினான்.

அதன் பின் நிகழ்ச்சிகள் மடமடவென்று நடந்தேறின. பத்மஜா ராதிகாவிடம் ராகேஷின் காதலைத் தெரியப்படுத்தியது, அவள் சரி சொன்னது, அதன் பிறகு அவளது கல்லூரி விட்ட்தும் அவளும் ராகேஷும் ஓட்டலுக்குச் சென்று சிற்றுண்டி யருந்தியபடியே அளவளாவியது, பின்னர் அதுவே ஒரு தினசரிச் சடங்காகிவிட்டது ஆகியவற்றை யெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை.
இதற்கிடையே, தீனதயாளனும் ராகேஷைப் பற்றி விசாரித்து அவன் நல்ல பையன் என்னும் தகவலைச் சேகரித்திருந்தார்.  எனினும் மகளின் படிப்பு முடியக் காத்திருந்தார்.

… மகள் கொஞ்ச நாள்களாய்த் தாமதமாய் வீடு திரும்பிக்கொண்டிருந்த்து பற்றி தனலட்சுமி கவலைப்பட்த் தொடங்கி யிருந்தாள்.  ராதிகாவின் அழகு கூடி யிருந்ததாகவும், அவள் உற்சாகமாய்த் தென்பட்டதாகவும் நினைத்த அவள், ‘என்ன காரணத்தால் இருக்கும்?’ என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.  தான் கல்லூரியில் மாலைகளில் நிறைய விளையாடுவதே அதற்குக் காரணம் என்று ராதிகா சொல்லியிருந்த பதிலில் அவளுக்கு முழு நம்பிக்கை விழவில்லை.
ராகேஷுடனான புதிய உற்வின் திளைப்பில் ராதிகா தீனதயாளனை மறைமுகமாய்ச் சாடுவதைப் பெருமளவு குறைத்துக்கொண்டிருந்தாள்.

… ஒரு நாள் மாலையில் ராகேஷுடன் ஓர் ஓட்டலில் அவள் சிற்றுண்டி யருந்திக்கொண்டிருந்த போது, எதிர் மேசைக்குச் சிந்தியா இன்னொரு பெண்மணியுடன் வந்து அமர்ந்தாள்.  இருவர் பார்வைகளும் சந்தித்தன.  ஆனால் சிந்தியா அவளை அடையாளங் கண்டுகொண்ட்தாய்க் காட்டிக்கொள்ளவில்லை. ராகேஷ் சிந்தியாவுக்குத் தன் முதுகு தெரிய உட்கார்ந்திருந்தான். …

… மறு நாள் கல்லூரி முதல்வர் ராதிகாவைத் தம் அறைக்குப் பியூன் மூலம் கூப்ப்பிட்டு அனுப்பினார்.

“உனக்கு ஃப்போன், ராதிகா. பேசு…”

ராதிகா ஒலிவாங்கியைக் காதில் பொருத்திக்கொண்டு பேசினாள் :  “ஹெல்லோ! ராதிகா ஸ்பீக்கிங்… என்னது? நான் வந்து உங்களை உடனே சந்திக்கணுமா? இன்னைக்கு முடியாது.  நாளைக்குப் பெர்மிஷன் போட்டுட்டு வந்து சந்திக்கிறேன்… இல்லாட்டி, காலையில வரட்டுமா? சரி. வெச்சுடட்டுமா?” என்ற ராதிகா பெருங்குழப்பத்துடன் தன் வகுப்பறைக்குத் திரும்பிப் போனாள்.

–    தொடரும்

jothigirija@live.com

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *