சில ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்முக நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. ஓர் எழுத்தாளரைத் தொலைக் காட்சி பேட்டி கண்ட நிகழ்ச்சி அது. அந்த எழுத்தாளர் துளியும் ஆணவமே இல்லாதவர். எனினும் தம் சாதனைகள் சிலவற்றை நோக்கர்களுக்கு ஒரு தகவல் போல் செருக்கே இல்லாத தொனியில் சற்றே கூச்சத்துடன் தெரிவித்தார். தம் சாதனைகளை அவர் பகிர்ந்துகொண்ட விதம் பாராட்டும்படி இருந்தது. அந்த “இனிய” எழுத்தாளருக்கு உடனே ஒரு பாராட்டுக் கடிதம் எழ்தி யனுப்பினேன்.. ’நாம் செய்யும் சில நற்செயல்களை நாலு பேர் அறியச் செய்வதில் தவறு ஏதும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டேன். அவற்றை யறியும் போது, “நாமும் இது போல் நல்லதைப் பிறர்க்குச் செய்ய வேண்டும்’ என்னும் ஆர்வமும் உந்துதலும் நமக்கு ஏற்படுமன்றோ! அது நல்லதுதானே?’ எனும் பொருள்பட நான் எழுதியிருந்த கடிதம் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அவரது பதிலிலிருந்து தெரிந்தது.
சில நாள்களுக்கு முன் ‘நான் எழுதிச் சாதித்தது என்ன்?’ என்பது போன்ற தலைப்பில் எழுத்தாளர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று அவற்றை ஒரு நூலாய்த் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்ட ஒரு பதிப்பகத்தின் சார்பில் ஒரு நண்பர் என்னிடமும் கட்டுரை கேட்டிருந்தார். ஏனோ எனது இயல்பான கூச்சம் குறுக்கிட, ‘நான் என்ன சாதித்தேன் என்பதை நானே சொல்லுவது முறையாக இருக்குமா? அதை மற்றவர்கள் அன்றோ சொல்ல வேண்டும்?’ எனும் தொனியில் ஒரு சிறு கட்டுரையையே எனது பதிலாக எழுதி அவருக்கு அனுப்பினேன். ஆயினும் அப்ப்டிச் செய்திருந்திருக்க வேண்டாமோ என்று (தாம்தமாய்) இப்போது தோன்றுகிறது. நான் குறிப்பிட்ட, தொலைக்காட்சியில் எழுத்தாளரின் பேட்டி பற்றிய ஞாபகம் திடீரென்று கிளர்ந்ததன் விளைவு.
இவ்வாண்டின் தொடக்கத்தில் மன்னார்குடியில் நடந்த செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரியின் கூட்டத்தில் இது பற்றிப் பேசும்படி ஆயிற்று. அந்தக் கல்லூரியின் மாணவியர் பலருக்குப் இலக்கியம் படைக்கும் ஆர்வம் இருந்ததைப் புரிந்து கொண்டதன் விளைவாகச் சற்றே சுயத்தம்பட்டம் அடித்துக்கொள்ளும்படி ஆயிற்று.
‘எழுத்தினால் ஏதேனும் சாதிக்க முடியுமா?’ என்பது கேள்வி. ‘பெரிய அளவில் சிலராலும், சிறிய அளவிலேனும் சிலராலும் நல்ல விளைவுகளைத் தங்கள் எழுத்துகளால் ஏற்படுத்த முடியும்’ என்பதே பதிலாகும். இக்கருத்திலிருந்து வேறுபடும் எழுத்தாளர்கள் சிலர் இருக்கிறார்கள். இவர்கள், ‘எழுத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. நாம் நல்லவற்றை எவ்வளவுதான் வாய்ப் பிரசாரத்தின் மூலமும் எழுத்தின் மூலமும் சொன்னாலும் இந்த உலகத்தை – அதாவது மனிதர்களை – மாற்றவே முடியாது. அது தன்பாட்டுக்கு வழக்கம் போலவே (தவறான வழியில்) போய்க்கொண்டிருக்கும். திருக்குறள், பைபிள், திருக்குரான், பகவத் கீதை ஆகிய நூல்கள் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. அவை பற்றிய பிரசாரங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் மக்கள் திருந்திவிட்டார்களா?’ என்பது இவர்களது வாதம். இது குதர்க்க வாதமே என்பது வெளிப்படை. இந்த எழுத்தாளர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லவர்களாகவே இருந்தாலும், காசுக்கும் மலினமான புகழுக்கும் ஆசைப்பட்டுத் தங்கள் எழுத்துகளில் ஆங்காங்கு நச்சைக் கலந்து வாசகர்களுக்குகத் தேவையற்ற கிளுகிளுப்பான எண்ணங்களை ஏற்படுத்துகிறவர்கள். இது அவர்களுக்கே நன்கு தெரியும். தெரிந்தே கையாளுகிற உத்திதானே இது! எனினும், ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நல்லவற்றை எழுதினால் வாசகர் மனக்களில் நல்ல் எண்ணங்கள் ஏற்படும் என்பதை இவர்கள் ஏன் ஏற்பதில்லை யென்றால், அவ்வாறு ஏற்றால், கெட்டவை வாசகர் மனங்களில் கெட்ட எண்ண்ங்களை ஏற்படுத்தும் என்பதையும் ஏற்க நேரிடும் என்பதனால்தான் என்பது வெளிப்படை! இவர்களின் விகாரமான எழுத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்களை நோக்கி இவர்கள் கேட்கும் கேள்வி, ‘உங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால், படிக்காமல் இருக்க வேண்டியதுதானே?’ என்பதாகும்!
இப்படி ஒரு நழுவலான பதிலைக் காலஞ்சென்ற ஒரு பிரபல எழுத்தாளர் கூறியுள்ளார். ஓர் இலட்சிய எழுத்தாளர் அவரை நேரடியாகவே ‘ஏன் இப்படி யெல்லாம் ஆங்காங்கு விகாரமாக எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘அதையெல்லாம் நான் உங்களைப் போன்றவர்களுக்காக எழுதவில்லை, சார்!’ என்று அவர் பதில் சொன்னாராம். அந்த நல்ல எழுத்தாளர் இதை என்னிடம் தெரிவித்து வருத்தப்பட்டதோடு, ‘இதெல்லாம் ஒரு பதிலா, அம்மா?’ என்றார். உண்மைதான். அப்பட்டமான நழுவல்தான்.
மாக்சிம் கோர்க்கியின் “தாய்” என்னும் நாவல் சோவியத் ரஷ்யாவில் மாபெரும் புரட்சி வெடிக்க வித்திட்டதாய்ச் சொல்லுவார்கள். வெளி நாட்டு உதாரணங்கள் இன்னும் சில உள்ளன. ஏன்? நம் நாட்டையே எடுத்துக்கொண்டாலும், நிறைய உதாரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் தியாக பூமி நாவலின் தாக்கத்தால் வேலையை விட்டுவிட்டும், படிப்பை நிறுத்திவிட்டும் பலர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களாகி இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்ததாயச் சொல்லுவார்கள். எனவே. ஒட்டுமொத்தச் சமுதாய மாற்றத்தையே எழுத்தால் விளைவிக்க இயலும் எனும் போது, தனிமனிதர்களை நல்ல் எழுத்தால் மாற்ற இயலாது என்று சொல்லுவது அண்டப் புளுகாகும். யாரையும் யாரும் திருத்த முடியாது என்று கூறுவது நொண்டிச் சாக்கேயாகும். அரிச்சந்திரன் நாடகம் வெறும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைக் காலப் போக்கில் மகாத்மா காந்தியாக் மாற்றவில்லையா! எல்லாரும் காந்தியாக முடியாதுதான். ஆனால், சிறு மாற்றங்களேனும் கண்டிப்பாக விளையும்தானே? பத்தாம் வகுப்பில் தேறாததால் உள்ளம் உடைந்து தற்கொலை செய்துகொள்ள ரெயிலடிக்குப் போன இன்றைய நீதிமன்ற நடுவர் திரு கற்பகவிநாயகம் அவர்கள் ரெயில் வர நிறைய நேரம் இருந்ததால் அருகில் இருந்த நூலகம் ஒன்றுக்குத் தம் பொழுதைக் கழிக்கச் சென்றாராம். அங்கே காந்தியடிகளின் “சத்திய சோதனை”யைப் படித்துள்ளார். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த காந்தி மனம் மாறி அவ்வெண்ணத்தைக் கைவிட்டது பற்றி அதில், படித்துத் தாமும் மனம் மாறி வீடு திரும்பி மறுபடியும் தேர்வை எழுத முற்பட்டாராம். இன்று அவர் ஒரு நேர்மையான நீதிபதி யென்று பெயரெடுத்துள்ளார். அவரை மாற்றியது காந்தியின் வரலாறு பற்றிய நூல்தானே?
எனவே எழுத்தால் தனிமனிதர்களைத் திருத்த முடியாது என்று மலினப் புகழ் எழுத்தாளர்கள் சிலர் கூறுவது “லாஜிக்”கே இல்லாத புளுகு! அதாவது நேர்மையே இல்லாத குதர்க்கவாதம்.
எழுத்தா.ளர்கள், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் பிற தொழில்கள் புரிபவர்களை விடவும் உயர்ந்தவர்கள் – அதாவது இவகளின் தொழில்கள் பிற்வற்றையும் விட உயர்ந்தவை – என்பதாய் ஒரு கருத்து நிலவுகிறது. (தோட்டியின் தொழில் தொடங்கி அனைத்துத் தொழில்களுமே உயர்ந்தவைதானே? தோட்டி ஒரு நாள் செயல்படாவிட்டால், ஊரே நாறிப் போகுமே!) இந்தக் கருத்தின் படி நோக்கினால், எந்தத் தொழிலாளியும் மக்களுக்குக் கேடு செய்யாத முறையில் செயல் படுவதே நேர்மை என்பது வெளியாகிறது. எழுத்தாளர்களும் பிற ஊடகத்தினரும் மட்டும் இதிலிருந்து விதிவிலக்குக் கேட்பது முறைதானா?
பல்லாண்டுகளுக்கு முன், ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்த்தது. அப்போது தீங்கு செய்யும் எழுத்துகள் பற்றிய சர்ச்சை கிளம்பியது. கூட்டத்தில் இருந்த ஓர் அன்பர் எழுந்து ஒரு கேள்வி கேட்டார்: “ஆபாச எழுத்துகளுக்கு நீங்கள் விரோதி என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மறைமுகமாகவும், சமயங்களில் நேரடியாக்வும் விகாரமான படைப்புகளை வெளியிட்டு வரும் ‘அந்தப் பத்திரிகையில்’ நீங்கள் அடிக்கடி எழுதுகிறீர்களே! இதென்ன நியாயம்? இது உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் மதிப்பைக் குறைக்கிறதே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?”
கூட்டத்தினர் கைதட்டினார்கள்.
“என் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றி. கேள்வி கேட்டவர்க்கு முன்னதாய்ப் பேசிய அன்பர் அந்தப் பத்திரிகையின் அனைத்துப் பக்கங்களிலும் ஆபாசம் என்று சாடினார். என்னுடைய கதை அதில் ஐந்தாறு பக்கங்கள் போல் வரும்போது, அந்தப் பக்கங்களில் அவ்விதழின் வாடிக்கையான விகாரம் தவிர்க்கப்படுகிறது என்பதைக் கவனித்தீர்களா? அதாவது, அந்தப் பக்கங்கள் என் பங்களிப்பால் அதன் வழக்கமான ஆபாசம் இல்லாமல் வெளியாவதை நீங்கள் பாராட்ட வேண்டாமா?” – இவ்வாறு பதிலளித்ததும் முன்னிலும் அதிக ஓசையுடன் கைதட்டல் ஒலித்தது. (இதில் தற்பெருமையும் ஒலித்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.) இது பற்றி நினைவு கூர்ந்ததற்குக் காரணம் எது பற்றியும் ஆழமாய்ச் சிந்தித்து எதற்கும் மாற்றுக்கோணம் ஒன்று இருக்கும் என்பதை உணராமல் நாம் முடங்கிய எண்ணப்போக்குடன் இருப்பதைச் சுட்டிக்காட்டத்தான். சுட்டிக்கட்டப்பட்ட கோணத்தில் யொசித்திருப்பின், நான் ஆபாசப் பத்திரிகைக்குத் துணை போவதாய் அந்த நேயர் குற்ற்ஞ்சாட்டியிருந்திருக்க மாட்டார்தானே!
நான் பெரியவர்க்கான எழுத்தாளராக அறிமுகமாகிய பின் மிகச் சில ஆண்டுகளுக்குள் (ஐந்தே ஆண்டுகளுள்) பெண்ணுரிமை இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, “நீங்கள் விரசம் கலக்காமல் எழுதுகிறீர்கள். காதலைக் கூடக் கண்ணியமாய்க் கையாளுகிறீர்கள். பாராட்டுகள். ஆனால் உங்கள் கதைகளுக்குப் படம் வரையும் ஓவியர்களில் சிலர் அதை விரசமாக வரைகிறார்களே! அதை நீஙகள் ஏன் ஆட்சேபிப்பதில்லை? நீங்கள் பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் கூறி அதைத் தடுக்கலாமே! அப்படித்தான் வரைவேன் என்று ஒருவர் சொன்னால் அவர் என் கதைகளுக்குப் படம் போடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கலாமே!” என்று ஒரு கேள்வியை முன் வைத்தார்.
திகைத்துப் போய்க் கணம் போல் நின்ற பின், “உங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி. ஆனால் எழுத வந்து ஐந்து ஆண்டுகளே ஆகியுள்ள என்னால் அப்படியெல்லாம் நிபந்தனை விதிக்க முடியாது. ஏன்? என்னைக் காட்டிலும் மூத்த எழுத்தாளரால் கூட அது இயலாது. அப்படியெல்லாம் நிபந்தனை விதித்தால் என் ஒரு கதை கூட வெளிவராது!” என்றேன்.
“சோ? பத்திரிகைகளில் எழுதுவதற்காகக் கொள்கையைத் துறந்து காம்ப்ரமைஸ் செய்துகொள்ளுவீர்கள். அப்படித்தானே?”
“நான் பத்திரிகை முதலாளி அல்லேன். என் கதைகளில் விரசம் இல்லாமல் பார்த்துக்கொள்ள மட்டுமே என்னால் இயலும். நீங்கள் சொல்லுகிறபடி நான் செய்தால், என் ஒரு கதை கூட வெளிவராது. நான் வித்தியாசமாக் எழுதுபவள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு வரும் வாசகர் கடிதங்களும் அப்ப்டித்தான் சொல்லுகின்றன. இந்நிலையில் நீங்கள் சொல்லுகிறபடி நடந்தால் என் வித்தியாசமான கருத்துகள் மக்களைச் சென்றடையும் வாய்ப்பு இல்லாது போய்விடும். ஏன்? நீங்களே ஒரு பத்திரிகை தொடங்குங்களேன். ஆபாச ஓவியம் இல்லாமல் என் கதைகளைப் போடுங்கள். சன்மானமே வாங்காமல் எழுத்த் தயாராக இருக்கிறேன்.” என்று நான் சொன்னதும் சிலர் சிரிக்க அந்தப் பெண்ணும் சிரித்துவிட்டு மேற்கொண்டு என்னைத் தர்ம சங்கடக் கேள்விகள் கேட்காமல் விட்டு விட்டார்.
இது ஒரு புறம் இருக்க, எழுத்தால் நல்லதைச் சாதிக்க முடியுமா எனும் கேள்விக்கு வருவோம். இதற்குப் பதில் சொல்லும்போதும் சிறிது தற்பெருமை தலைகாட்டத்தான் போகிறது. என்ன செய்ய? தவிர்க்க முடியவில்லை.
அமரர் மணியன் அவர்களின் ‘இதயம் பேசுகிறது’ வார இதழில் எனது சிறுதை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. திருமணம் ஆகிச் சில ஆண்டுகள் கழிந்த பிறகும் தாய்மைப் பேற்றை யடையாத ஒரு பெண் ஏக்கத்தில் வாடுகிறாள். அவள் கணவ்னும்தான். முடிவில் தங்கள் குடும்ப நண்பர்களான மருத்துவத் தம்பதியரிடம் இருவரும் சோதனை செய்து கொள்ளுகிறார்கள். குறைபாடு பெண்ணிடமே என்பது வெளியாகிறது. ஆனால் அவள் கணவன் மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் அதை மறைத்து இருவருமே சரியாகத்தான் இருப்பதாகவும், சில நேரங்களில் காரணம் ஏதுமின்றித் தாய்மைப் பேறு ஒத்திப்போகும் என்றும் அதனால் போறுமை காக்கும்படியும் மருத்துவர் சொன்னதாய் அவளிடம் கூறி அவளைத் தேற்றுகிறான்.
நாள்கள் விரைகின்றன. ஆனால் அப்படி நிகழவில்லை. மனமுடைந்து போகும் அந்தப் பெண் விழாக்காளுக்கெல்லாம் போவதைக் கூடத் தவிர்க்கிறாள். கேள்விகளுக்குப் பதில் சொல்லை அவளுக்கு மாளவில்லை.
ஒரு நாள் அவள் தோழி ஒருத்தி அவள் வீட்டுக்குத் தன் சிறு குழந்தையுடன் வருகிறாள். குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு அவள் கழிவறைக்குச் செல்லுகிறாள். வேற்றுமுகம் பாராமல் அவளிடம் தாவிவரும் சிறுவன் அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் முகத்தை அவள் முகத்தோடு உரசுகிறான். தன் மழலையில் ஏதேதோ அவளோடு மிழற்றுகிறான். அவனது அணைப்பு அவளுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அவளும் அவனை அணைத்துக்கொள்ளுகிறாள். அவளது சிலிர்ப்பு அதிகரிக்கிறது. ‘பெற்றால்தான் பிள்ளை என்பதில்லை. பெறாத பிள்ளையையும் நேசிக்க முடியும்’ எனும் தத்துவத்தை அவள் புரிந்துகொள்ளுகிறாள். உடனே அவளுக்குத் தாங்கள் ஏன் ஓர் அநாதைக் குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றுகிறது. தோழி தன் குழந்தையுடன் கிளம்பிப் போனதும், கணவனின் அனுமதியுடன், “உதவும் கரங்கள்” அமைப்புடன் தொலைபேசுகிறாள். அதன் அமைப்பாளர் திரு வித்தியாகர் அவர்களிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள். “அதுக்கென்னம்மா? எங்கிட்ட நிறையவே இருக்குங்க குப்பைத்தொட்டிகள்ளேர்ந்து நான் எடுத்து வந்து வளர்த்துக்கிட்டு இருக்கிற குழ்ந்தைங்க. நாளும் நேரமும் கேட்டுக் குறிச்சுக்கிட்ட பெறகு நீங்க்ளும் உங்க வீட்டுக்காரருமா இங்க வந்து உங்களுக்குப் பிடிக்கிற குழந்தையை செலக்ட் பண்ணி தத்து எடுத்துக்கலாம்…” என்கிறர்ர்.
அவள் நிம்மதியுடன் கணவனின் வரவுக்குக் காத்திருக்கிறாள்….
இப்படி ஒரு கதை (சில மாறுதல்கள் இருக்கக் கூடும். நான் ஞாபகத்திலிருந்து எழுதியுள்ளேன்.) வெளிவந்த பின் இரண்டாம் நாள் “உதவும் கரங்கள்” வித்தியாகர் என்னோடு தொலை பேசினார்: “என்னம்மா! நீங்க பாட்டுக்கு உதவும் கரங்கள்ளேர்ந்து குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு கதையில சொல்லிட்டீங்க்ளா? நேத்துலேர்ந்து ஃபோன் காலஸ் குழந்தை யில்லாதவங்ககிட்டேர்ந்து வந்துக்கிட்டே இருக்குது. தத்துக் குடுக்கிற எண்ணம் இருக்குதான். ஆனா இன்னும் ஃபைனலைஸ் ஆவலை. அது
சம்பந்தப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பத்தி கவர்ன்மெண்ட்டோட பேசிக்கிட்டு இருக்கோம். அதுக்கு இன்னும் கொஞ்ச நாளாகும்னு அவங்களுக்கெல்லாம் பதில் சொன்னேன்.”
”ஐம் சாரி, மிஸ்டர் வித்யாகர். என்னால உங்களுக்கு வீண் தொந்தரவு!” என்று வருந்திய என்னை அவர் இடைமறித்தார்: “நோ, நோ. அது பத்திப் பரவாயில்லீஙக. நான் எதுக்கு ஃபோன் பண்ணீனேன்னா, உங்க கதைக்கு இப்படி ஒரு நல்ல் ரெஸ்பான்ஸ் இருக்குன்றதை உங்களுக்குச் சொன்னா நீங்க சந்தோஷப் படுவீங்களேன்றதுக்காக மட்டுந்தாங்க பேசறேன்…”
எனக்கு உண்மையில் பெருமிதமாகத்தான் இருந்ததென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கதையின் விளைவாகக் குறைந்த பட்சம் இரண்டு-மூன்று அநாதைக் குழந்தைகளுக்கேனும் அம்மா-அப்பா கிடைத்திருந்திருக்கக் கூடும் அல்லவா!
இன்னொரு சுயத்தம்பட்ட நிகழ்ச்சி. என் தங்கையிடம் அவளுடைய தோழி சொன்னது: “நேத்து நான் என் ஃப்ரண்ட் ஒருத்தி வீட்டுக்குப் போயிருந்தேன் நான் போனப்ப தோட்டத்துப் பக்கத்துலேர்ந்து அவ தன் வீட்டுக்காரர் கிட்ட இப்படிக் கத்திக்கிட்டு இருந்தா” ‘எத்தினி ஜோதிர்லதா கிரிஜாக்கள் வந்து என்னதான் பக்கம் பக்கமா எழுதினாலும் ஆம்பளைங்க திருந்த்ப் போறதில்லே..மத்த நாள்கள்லேத்தான் கண்டுக்கிறதே இல்லைன்னா,
ஒரு நாயித்துக் கெழ்மையில கூடச் சின்னச் சின்ன ஒத்தாசை கூடச் செய்ய மாட்டேன்றீங்க. காப்பி குடிச்ச தம்ப்ளரைத் தொட்டி முத்தத்துல கொணாந்து போட்டா உங்க காலு என்ன குட்டையாயிறுமா? நீங்க உங்க் ஆபீஸ்ல கிழிக்கிறதைத்தானே நானும் எங்க ஆபீஸ்ல் கிழிக்கிறேன்? வீட்டுக்கு வந்ததும் ஹாய்யா உக்காந்துர்றீங்க டிவி. முன்னால ரீமோட்டும் கையுமா!”
அவள் கணவன் “திருந்தாதது” பெருமை யளிக்காவிட்டாலும், அந்தப் பெண்மணியை என் பெண்ணாதரவுக் கதைகள் பாதித்திருந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தரவே செய்தது.
இவற்றையெல்லாம் பிதற்றியதற்குக் காரணம் எழுத்தால் எதையும் சாதிக்க முடியாது என்று சில எழுத்தாளர்கள் சொன்னதும், சொல்லிக்கொண்டிருப்பதும் எவ்வளவு பெரிய பொய் என்பதைச் சொல்லத்தான்!
………
- ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு
- ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை
- நைஸ்
- எழுந்து நின்ற பிணம்
- உடலின் எதிர்ப்புச் சக்தி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33
- ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
- மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
- உரையாடல் அரங்கு – 13
- மறுநாளை நினைக்காமல்….
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……18
- தலைகீழ் மாற்றம்
- ‘யுகம் யுகமாய் யுவன்’
- முக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]
- புகழ் பெற்ற ஏழைகள் – 23
- கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு
- கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது
- நீங்காத நினைவுகள் 16
- கறுப்புப் பூனை
- மருத்துவக் கட்டுரை மயக்கம்
- திலீபன் கண்ணதாசன் கவிதைகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26
- பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.
- தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !