அப்பா என்கிற ஆம்பிளை

This entry is part 19 of 22 in the series 15 செப்டம்பர் 2013
ப.அழகுநிலா
சிங்கப்பூர்

 

“அப்பதான் மொத, மொதல்ல அவளுக்கு அப்பாவை புடிக்காம போச்சு”

என்று வசந்தாவிடம் சத்தமாக சொல்லிக்கொண்டிருந்த தேன்மொழி, அறைக்குள் நுழைந்த அரசியை பார்த்தவுடன் சட்டென்று பேச்சை நிறுத்திக்கொண்டாள். அரசியிடமிருந்து வந்த மீன் கவிச்சி, வீட்டில் மீன் குழம்பு என்று சொல்லியது.

“அக்கா! ஒன்னையும், வசந்தாக்காவையும் அம்மா சாப்பிட கூப்பிடுது” ன்னு சொல்லிக்கொண்டே அலமாரியை திறந்து துண்டையும், உள்பாவாடையையும் எடுத்தவள், “ஆமாம்! நான் உள்ள நொழைஞ்சப்ப யாருக்கோ அப்பாவை புடிக்காம போச்சுன்னியே யாருக்குக்கா?” என்று அவர்கள் இருவரும் பதில் சொல்ல விரும்பாத அந்த கேள்வியை கேட்டாள்.

“ஏன் அதை தெரிஞ்சு நீ இப்ப என்ன பண்ணப்போற? ஒடனே ஓடிப்போயி அப்பாகிட்ட சொல்லுவே! அதுக்குத்தானே கேட்கிற?”

“ஏன்க்கா இப்படி பேசுற? சின்ன வயசுல அப்படி செஞ்சா இப்பயுமா அப்படி செய்வேன்? எனக்கு தெரியும். நம்ம சாந்தி அக்காவை பத்திதானே பேசிகிட்டு இருந்திங்க!”

“தெரிஞ்சுகிட்டே எதுக்கு கேட்கிற?”

“சாந்தி அக்காவை பார்த்திங்களா? எப்படி இருக்கு? எவ்வளவு நாளாச்சு பார்த்து!”

“அவளுக்கென்ன! மகாராணி மாதிரி வச்சிருக்காரு அவ புருஷன். அவளா மாப்பிள்ளை தேடிகிட்டான்னு அப்பா அவளை ஒதுக்கிவைச்சிட்டாரு. எங்களுக்கு தேடி புடிச்சு கட்டிவைச்சாரே  அவங்களை விட சாந்தி புருஷன் எவ்வளவோ பரவாயில்லை”

“ஏன் அத்தான்களுக்கு என்ன கொறைச்சல்? அப்பா எது செஞ்சாலும் நம்ம நல்லதுக்குதான்க்கா செய்வாரு.”

“ஆமாம்! ஒன் அத்தான்களை நீதான் மெச்சிக்கணும். ஒன்கிட்ட போயி சொன்னோம் பாரு. நீயாவாது அப்பாவை விட்டுக்கொடுக்கிறதாவது!. சரி! சரி! வா சாப்பிட போகலாம்”

“நீங்க மொதல்ல போங்க. அம்மாவுக்கு மீன் கழுவி கொடுத்தேனா! ஒடம்பெல்லாம் ஒரே கவிச்சி. நான் போயி ரெண்டு சொம்பு தண்ணியை மேல ஊத்திகிட்டு வர்றேன்” என்ற அரசி கொல்லைப்புறத்தை நோக்கி நடந்தாள்.

அந்த வீட்டை கிராமத்தில் பெரிய வீடு என்றுதான் அழைப்பார்கள். காலம், காலமா அந்த வீடு மட்டுமில்லை, அதுல இருந்த மனுஷங்களோட மனசும் பெரிசா இருந்ததுதான் அந்த பேருக்கு காரணமுன்னு நமச்சிவாயம் பெருமையா சொல்லிக்குவாரு. ஊருக்கே பஞ்சாயத்து பண்ற அந்த குடும்பத்தோட தற்போதைய வாரிசுதான் நமச்சிவாயம். ஊர்ல பெரிய மனுஷன். நாலு பொட்டை புள்ளைங்க, ரெண்டு பயலுகன்னு குடும்பமும் கொஞ்சம் பெரிசுதான். மூத்தவ தேன்மொழியையும், அடுத்தவ  வசந்தாவையும் வயசுக்கு வந்தவுடன சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுத்துட்டாரு. மூணாவதா பொறந்தவதான் சாந்தி. வீட்டுக்கு வேலைக்கு வந்தவனோட ஓடிப்போனதால நமச்சிவாயம் அவளை மொத்தமா தலை முழிகிட்டாரு. நாலாவதா பொறந்தவதான் அரசி. பேர்ல மட்டுமில்லை, வீட்லயும் அவ அரசிதான்.

ஊரையும், குடும்பத்தையும் அடக்கி வைச்சிருக்கிற நமச்சிவாயம் அடங்கிப்போறது அரசிகிட்ட மட்டும்தான். அவ பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டாரு. அவ்வளவு செல்லம். அதுக்கு காரணம், அரசி உருவத்துலயும், கொணத்துலயும் அப்படியே அவரு அம்மாவை உரிச்சுகிட்டு பொறந்ததுதான்.

“என்னடி இன்னைக்கு மீன் கொழம்பா? ஒன் பொண்ணுங்க வந்துட்டா ஒன்னை கையில புடிக்க முடியாதே?” என்ற நமச்சிவாயத்தின் குரல் அடுப்படிக்குள் நுழைய போன தேன்மொழியையும், வசந்தாவையும் தடுத்து நிறுத்தியது.

“எனக்கு மட்டும்தான் பொண்ணுங்களா! ஒங்களுக்கு கெடையாதா?”

“சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்டி. அதுக்கு போயி கோவிச்சுக்கிறியே! என்ன ரெண்டு பேரும் ஜோடி போட்டு வந்திருக்காங்க? ஏதாவது பிரச்சனையா? ஒன்கிட்ட இந்நேரம் சொல்லியிருப்பாங்களே!”

“பிரச்சனையா…………… அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க”

“நீ இழுக்கிறதுலயே தெரியுது ஏதோ பிரச்சனை இருக்குன்னு. எதுவா இருந்தாலும் சும்மா சொல்லு”

“நம்ம அரசிக்கு இப்ப மாப்பிள்ளை பார்த்திருக்கோம்ல! எவ்வளவு செய்யப்போறோம்ன்னு கேட்டாங்க. சொன்னேன். ரெண்டு பேரும் பிலு, பிலுன்னு பிடிச்சிட்டாங்க”

“ஏன் அவங்களை சும்மாவா அனுப்புனேன்? எந்தக் கொறையும் இல்லாமதானே கட்டிகொடுத்தேன்!”

“கொறையெல்லாம் இல்லைதான். ஆனா அவங்களுக்கு செஞ்சதைவிட அரசிக்கு அதிகமாதானே செய்யப்போறிங்க”

“யாருடி நீ வெவரம் கெட்டவளா இருக்க! நீயே தூண்டிவிடுவ போல?”

“உண்மையைதானே சொன்னேன்! நான் தூண்டிவிட்டு கேட்க அவங்க என்ன சின்ன புள்ளைங்களா? அவங்களுக்கே தெரியாதா? தெரியாமாத்தான் கேட்கிறேன். அரசி மட்டும்தான் ஒங்களுக்கு பொண்ணா? ஊரு ஒலகத்துல இல்லாத அதிசயமா அவளை ஒரேடியா தூக்கிவைச்சு ஆடுறிங்க. எல்லாமே நாம பெத்ததுதானே! ஒரு கண்ல வெண்ணெய்! மறு கண்ல சுண்ணாம்பா!”

“வாயை மூடுடி! யாருக்கு என்ன செய்யணும்? எப்ப செய்யணும்?ன்னு எனக்கு தெரியும். நீ ஒண்ணும் எனக்கு தொல்லித்தர வேண்டாம். என் மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் சொக்கத்தங்கம்டி. அவங்க எதுவும் கேட்டிருக்கமாட்டாங்க. நமக்கு பொறந்ததுங்கதான் சரியில்லை. கூடப்பொறந்த தங்கச்சியோட போட்டி, பொறாமை! இனிமே இதைப்பத்தி பேசிகிட்டு யாரும் இங்க வரக்கூடாதுன்னு சொல்லிடு. மீறி வந்தா நான் மனுஷனா இருக்கமாட்டேன்”

அடுப்படிவாசலில் அத்தனையும் கேட்டு நின்றுகொண்டிருந்த தேன்மொழிக்கும், வசந்தாவுக்கும் அதிர்ச்சி, ஆச்சர்யம் இப்படி எதுவும் ஏற்படவில்லை. அப்பா இப்படி பேசாவிட்டால்தான் அவர்களுக்கு ஆச்சர்யம், அதிர்ச்சி எல்லாம்.

“அரசின்னா அப்பாவுக்கு எப்பவுமே ஒசத்திதான். இத்தனைக்கும் அரசி கடைக்குட்டி கூட கெடையாது. அவளுக்கு அப்புறம் ரெண்டு தம்பிங்க. அப்படியே அப்பத்தாவை உரிச்சுகிட்டு பொறந்ததால அவளுக்கு அடிச்சது அதிர்ஷ்டம். அந்த காலத்துல அப்பத்தா அஞ்சாவது வரைக்கும் படிச்சுதாம். கணக்கு வழக்கு பார்க்கிறதுல அதை அடிச்சுக்க ஆளே கெடையாதுன்னு அப்பா சொல்லி, சொல்லி மாஞ்சு போவாரு. கலப்பையை புடிச்சு வயல்ல உழுவுறது, மாட்டு வண்டி ஓட்றதுன்னு ஆம்பிளைங்க செய்ற அத்தனை வேலையையும் செய்யுமாம். அரசியும் அப்படித்தான். புத்திசாலி. தைரியசாலி. குடும்பத்துலயே காலேஜுக்கு போயி படிச்ச புள்ளை அவ மட்டும்தான். நாங்கள்ளாம் சைக்கிள் ஓட்டவே பயப்பட்டப்ப டி.வி.எஸ் 50 யில பறப்பா. கிராமத்துல அவ ஏறாதா மரம் கெடையாது. மோட்டார் கெணத்துல அவ டைவ் அடிச்சு குதிக்கிறப்ப நாங்க கொலை நடுங்க ஒரு ஓரமா ஒட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். யாராவது அப்பாவை திட்டிட்டா, அது அம்மாவாவே இருந்தாலும் ஒடனே அப்பாகிட்ட போயி சொல்லி மாட்டிவிட்டுடுவா. அப்பாவை பொறுத்தவரைக்கும் அரசி எது சொன்னாலும் சரி! எது செஞ்சாலும் சரி! அப்பா செல்லமா இருக்கிறதுக்கு ஒரு கொடுப்பினை வேணும்! அது நமக்கு சுத்தமா கெடையாது” ங்கிற ஒரே எண்ண ஓட்டம் இருவர் மனதிலும் ஓட, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் அடுப்படிக்குள் நுழைந்தனர் இருவரும்.

இதே நேரத்தில், கொல்லைப்புறத்து பாத்ரூமில் உடம்புக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்த அரசியின் மனதோ ஒருநேரம் சந்தோஷத்திலும், மறுநேரம் கவலையிலும் மாறி, மாறி ஊசலாடிக்கொண்டிருந்தது. “நீயாவாது அப்பாவை விட்டுக் கொடுக்கிறதாவதுன்னு தேன்மொழி அக்கா சொன்னது எவ்வளவு உண்மை! கல்யாணத்தை நெனைச்சு ஒருபக்கம் சந்தோஷப்பட்டாலும், யாரோ ஒருத்தருக்காக அப்பாவை விட்டுட்டு எப்படித்தான் போகப்போறேனோ! என் ஒலகமே அப்பாதான்! பொறந்ததிலேந்து அம்மான்னு கூப்பிட்டதை விட அப்பாவை கூப்பிட்டதுதான் அதிகம். பொம்பளை புள்ளைங்க வயசுக்கு வந்துட்டா அப்பாகிட்டயிருந்து வெலகிடுவாங்கன்னு சொல்றது எனக்கு வேடிக்கையா இருக்கும். ஏன்னா, எனக்கு அந்த மூணு நாளும் கால் அமுக்கிவிடுறதே அப்பாதான். அப்பா சொல்ற மாதிரி நான் அப்பத்தாவோட மறுஜென்மமாதான் இருக்கணும். இல்லைன்னா நானும் மத்த அக்காங்க மாதிரி அப்பாவை விட்டு வெலகி இருந்திருப்பேனே! நான் கேட்டு அப்பா எதையும் மறுத்ததில்லை. நான் எது சொன்னாலும் ஒரு கொழந்தை மாதிரி கேட்டுக்குவாரு. என்னை பிரிஞ்சு எப்படித்தான் இருக்கப்போறாரோ”ன்னு நெனைச்ச அரசியின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

****************************************

    “ஏய்! எங்கடி இருக்க? கேசவனை பஸ்ஸ்டாப்ல பார்த்தேன். அரசி வந்துருக்குன்னு சொன்னான். எங்க என் பொண்ணு? மாப்பிள்ளை வந்திருக்காருல்ல! கார் என்னாச்சாம்? ரெண்டுபேரும் பஸ்ல வந்திருக்காங்க. என்னடி நான் நாயாட்டம் கத்திகிட்டு இருக்கேன். நீ ஆடி அசைஞ்சு வர்ற?”

    “எதுக்கு இப்படி கூப்பாடு போடுறிங்க? அரசி மாடியில தூங்கிகிட்டு இருக்கா. அவ மட்டும்தான் வந்தா. மாப்பிள்ளை வரலை.”

    “மாப்பிள்ளை வரலையா! என்னடி ஒளர்ற? கல்யாணம் ஆகி மறு அழைப்புக்கு மட்டும்தான் மாப்பிள்ளை கூட வந்துச்சு. இந்த பத்து மாசத்துல, ஆறு தடவை தனியா வந்துட்டு போயிருச்சு. கூப்பிட்டு போக கூட மாப்பிள்ளை வரலை. கேட்டா அவருக்கு வேலை, வியாபாரம்ன்னு சொல்லி மழுப்புது. என்னதாண்டி நடக்குது? ஒன்கிட்ட ஏதாவது சொன்னுச்சா?”

    “என்னத்த சொல்றது போங்க? மாப்பிள்ளைக்கு குடி பழக்கம் இருக்காம். குடிக்காதிங்கன்னு சொன்னா சண்டைக்கு வர்றாராம். அதுல கோவிச்சுகிட்டுதான் ஒவ்வொரு தடவையும் இங்க வர்றா. ஒங்ககிட்ட சொன்னா நீங்க வருத்தப்படுவிங்கன்னு என்னையும் சொல்ல வேணான்னு சொல்லிட்டா”

    “அறிவு கெட்டவளே! அவ அப்படி சொன்னான்னா ஒனக்கு எங்கடி போச்சு அறிவு? ஒவ்வொரு தடவையும் இந்த பொண்ணு இப்படி தனியா வந்து நிக்கிறப்ப வர்ற வருத்தத்தை விடவா இதை கேட்டு வந்துரப்போகுது? அதுதான் சின்னப்புள்ளை. வெவரம் இல்லாம பண்ணுது. நீயாவது புத்திமதி சொல்லி அனுப்பக்கூடாதா?”

    “இது என்ன என்னைக்கும் இல்லாத திருநாளா என்னைய பேச சொல்றிங்க? நான் சொல்லி அவ என்னைக்கு கேட்டிருக்கா? நீங்க போயி ஒரு தடவை மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு வந்தா எல்லாம் சரியாப்போயிடும்”

    “நீ என்ன அந்த புள்ளைக்கு வக்காலத்தா? அதுதான் கூறுகெட்டு போயி கோவிச்சுகிட்டு வருதுன்னா, நீயும் போயி மாப்பிள்ளையை பார்க்க சொல்ற?”

“அப்ப மாப்பிள்ளை பண்றது மட்டும் சரியா?”

“இந்த காலத்துல எவன்தான் குடிக்கலை? அதெல்லாம் இப்ப பேஷனாயிட்டுடி. வியாபார விஷயமா நாலு எடத்துக்கு போறவரு அவரு. அவருகிட்ட போயி நீங்க குடிக்கிறது என் பொண்ணுக்கு புடிக்கலைன்னு சொல்ல சொல்றியா? இந்த புள்ளைதான் பொறுத்து போவணும்”

“ஒங்க அம்மா மாதிரி இருக்கான்னு சொல்லி, சொல்லி அவளுக்கு செல்லம் கொடுத்திங்க. வீட்டுல எல்லாரும் அவ சொல்றதுக்கெல்லாம் ஆடுனோம். இப்ப மாப்பிள்ளை அவ சொல்றதை கேட்கலைன்னவுடன அவளால தாங்கிக்க முடியலை”

“நீ என்ன என் மேல பழியை தூக்கிபோடுற? நம்ம வீட்ல எனக்கு பொண்ணா இருக்கிற வரைக்கும்தான் செல்லமெல்லாம். இப்ப இன்னொருத்தனுக்கு பொண்டாட்டி ஆனப்புறம் சும்மா, சும்மா பொறந்த வீட்ல வந்து நிக்கிறது நல்லாவா இருக்கு? எங்க அப்பன் எவ்வளவு பெரிய குடிகாரரு. எங்க அம்மா பொறுமையா இருந்துதானே குடும்பம் பண்ணுச்சு”

“என்ன பேசுறிங்க நீங்க? ஒங்க அம்மா காலமும், இப்ப இருக்கிற காலமும் ஒண்ணா? அரசி படிச்ச பொண்ணு.”

“படிச்சுட்டா பொம்பிளை இல்லைன்னு ஆயிடுமா? அவகிட்ட பேசி ஊருக்கு அனுப்புற வழியை பார்ப்பியா அதை விட்டுட்டு தேவையில்லாததை பேசிகிட்டு நிக்கிற! ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க. அது இந்த மாதிரு கோவிச்சிகிட்டு இங்க வர்றது இதுதான் கடைசியா இருக்கணும். இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்துச்சு அதை ஒண்ணும் செய்ய மாட்டேன். ஒன்னை கொன்னே போட்டுடுவேன். பொம்பிளை புள்ளைக்கு என்னத்துக்கு இம்புட்டு கோபம்? கட்டிகிட்டவனை அனுசரிச்சு போக தெரியாத இந்த புள்ளை என்னத்தை படிச்சு கிழிச்சுது?”

தூங்கி எழுந்து மாடியிலிருந்து இறங்கி வந்த அரசி யதேச்சையாக அம்மாவும், அப்பாவும் பேசுவதை கேட்டுவிட்டு கனத்த மனதுடனும், கண்களில் கண்ணீருடனும் மீண்டும் மாடிப்படியில் ஏறத்தொடங்கினாள்.

கதையின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்.

முற்றும்

Series Navigationதுகில்சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36
author

ப.அழகுநிலா

Similar Posts

4 Comments

  1. Avatar
    Rama Vairavan says:

    Nice story and the ending is super. namachivayam nalla sonnaaru. ஏந்தேன் இந்தப் பொம்பிளைகளுக்குப் புரியமாட்டேங்குதோ தெரியலை? நமச்சிவாயம் நமக்காகவே சொன்ன மாதிரி இருக்கு.

    “இந்த காலத்துல எவன்தான் குடிக்கலை? அதெல்லாம் இப்ப பேஷனாயிட்டுடி. வியாபார விஷயமா நாலு எடத்துக்கு போறவரு அவரு. அவருகிட்ட போயி நீங்க குடிக்கிறது என் பொண்ணுக்கு புடிக்கலைன்னு சொல்ல சொல்றியா? இந்த புள்ளைதான் பொறுத்து போவணும்”

    அன்புடன், வயிரவன்

  2. Avatar
    Dr.Ezhilvendan says:

    “என் ஒலகமே அப்பாதான்! பொறந்ததிலேந்து அம்மான்னு கூப்பிட்டதை விட அப்பாவை கூப்பிட்டதுதான் அதிகம். பொம்பளை புள்ளைங்க வயசுக்கு வந்துட்டா அப்பாகிட்டயிருந்து வெலகிடுவாங்கன்னு சொல்றது எனக்கு வேடிக்கையா இருக்கும். ஏன்னா, எனக்கு அந்த மூணு நாளும் கால் அமுக்கிவிடுறதே அப்பாதான். அப்பா சொல்ற மாதிரி நான் அப்பத்தாவோட மறுஜென்மமாதான் இருக்கணும்”

    அப்பாவின் அன்பையும் பாசத்தையும் வெளிபடுதும் வரிகள்.

    “பொம்பிளை புள்ளைக்கு என்னத்துக்கு இம்புட்டு கோபம்? கட்டிகிட்டவனை அனுசரிச்சு போக தெரியாத இந்த புள்ளை என்னத்தை படிச்சு கிழிச்சுது?”

    அதே அப்பா பேசியவார்த்தைகளின் தீவிரத்தையும் காட்டி, கதையின் முதல் வரியை மீண்டும் படிக்கவும் முடித்திருப்பது அருமை.

    “அப்பதான் மொத, மொதல்ல அவளுக்கு அப்பாவை புடிக்காம போச்சு”

  3. Avatar
    அமீதாம்மாள் says:

    குடிகாரன்னு தெரிந்த பிறகு அவனுடன்தான் வாழவேண்டு மென்று எந்ந அப்பா சொல்வார். அப்படிச் சொன்னால் அவரை ஒரு அப்பாவாக மட்டுமல்ல ஒரு ஆம்பளையாகக் கூட பார்க்க முடியாது

  4. Avatar
    N Sivakumar, New Delhi says:

    அருமை! அன்றாட நிகழ்வுதான் என்றாலும் கதை அமைப்பு நன்று!! முதல் வரியை மீண்டும் இணைத்திருப்பது மிக அருமை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *