கடந்த சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். அவ்வப்போது இலங்கைத் தமிழர் பற்றிய செய்திகளை, தமிழ் நாட்டுச் செய்திகளைத் தொகுத்து திருவள்ளுவர் இலக்குவனார் அனுப்பும் மடல் ஒன்றில் இந்த செய்தியும் இருந்தது. தமிழ்த் தினசரிப் பத்திரிகை எதிலும் இந்த செய்தி வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியாது. வாரப் பத்திரிகைகள் எதுவும் இதை ஒரு பொருட்டாகக் கருதுமா என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு இந்தப் புறக்கணிப்பு அதிர்ச்சி தரவில்லை. இது இந்தக் காலத்தில் நடப்பது தான், ஒன்றும் புதிதல்ல என்ற காலத்தை ஒட்டி உணரும் புத்தி இருந்தாலும், வேதனையாகத்தான் இருந்தது. இப்போது இது குறித்து நான் எழுதும் போது எந்தனை பேர் தமிழர்கள், இணையங்களில் தொடர்பு கொண்டவர்கள் என் வேதனையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஒரு வேளை நான் யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்பதும் தெரிகிறது. பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை. ஆனால் தனக்கு எது சரி, எது நடப்பது சரியல்ல, எது சரி செய்யப் படவேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்வதில் முனைப்புக் கொண்டு செயல்பட்டு வந்தார். அது என்ன பலனைத் தருகிறது, யார் தனக்கு துணைவருவார்கள் என்பது பற்றியும் அவர் கவலைப் பட்டவர் இல்லை. அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர். அந்த தர்மங்கள் இப்பொது அழிந்து விட்டன். செலவாணி அற்றுப் போய்விட்டன.
அவரது மரணத்தைப் பற்றி அடுத்த நாளே தனது மடலில் எழுதிய திருவள்ளுவர் இலக்குவனார் பின் வரும் செய்தியையும் உடன் தருகிறார்.
”ரயில்வே பணியை ராஜிநாமா செய்துவிட்டு 1987-ஆம் ஆண்டு காந்திய தரிசன கேந்திரம் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, காந்திய சிந்தனைகளைப் பரப்பும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
எழுத்தாளர் கா.சீ.வேங்கடரமணி தொடங்கிய பாரதமணி பத்திரிகையை இவர் தொடர்ந்து நடத்தி வந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்.
அதன் விளைவாக கடந்த 2010-ஆம் ஆண்டு திலகர் கட்டம் என்ற பெயர் சூட்டப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. இளைஞர்களை ஆண்டுதோறும் மகாத்மா காந்தி தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் மூலம் இளைஞர்களுக்கு காந்தியின் மகத்துவத்தை உணரச் செய்தார்”
திரு பி.என். ஸ்ரீனிவாசனை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது எழுத்து ஆசிரியர் சி.சு. செல்லப்பா தான். அது நான் தில்லியில் இருந்த போது. எண்பதுகளின் நடு வருடங்கள் ஒன்றில். எனது அலுவலகத்துக்கு தொலை பேசி செய்தி வந்தது. செல்லப்பா தான் பேசினார். தான் தில்லி வந்திருப்பதாகவும் ரகாப் கஞ்ச் ரோடில் ஒரு எம்.பி.யின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தில்லிக்கு எப்படி வந்தார்?. எதற்கு வந்தார்? இந்த மாதிரி தூரப் பயணங்கள் எல்லாம் போகும் வசதி அவருக்கு இருந்ததில்லை. போயும் போயும் தில்லி எப்படி அவர் விருப்ப வலையில் விழுந்தது?. அதெல்லாம் போக, அவருக்கு என் அலுவலக தொலைபேசி எப்படித் தெரிந்தது?. நான் சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று பரவலாக தமிழ் உலகில் செய்தி பரப்பிய பொதுத் தொண்டை கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய அங்கமான முற்போக்குகள் சுமார் முப்பது வருடங்களாக அயராது பாட்டாளி மக்கள் நலன் கருதி தொண்டு ஆற்றி வந்துள்ளனர். ஆனால் அது செல்லப்பாவுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருந்திருக்குமா என்ன? சாமிநாதன், சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று டைரக்டரியில் தேடினால் கிடைக்குமா? இல்லை அமெரிக்க தூதராலயம் தான் உதவுமா? முற்போக்குகளின் பிரசாரத்துக்கு பயன்பட்டது உண்மை. ஒரு வேளை அவர் தங்கியிருந்த எம்,.பி உதவியிருக்கக் கூடும். அப்படியும் அது சுலபத்தில் கிடைத்திராது. சரி எப்படியோ தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விட்டார்.
அந்த எம்.பியின் வீடு அலுவலகத்திலிருந்து நடை தூரத்தில் தான் இருந்தது ரகாப் கஞ்ச் குருத்வாரா செக்ரெடேரியேட்டுக்கு அடுத்து எதிர்த்தாற்போல் இடது பக்கம். அதைச் சுற்றியிருக்கும் ரோடில் தான் எம்.பி. இருக்கும் வீடு நான் போன போது எம்.பி. இல்லை. யார் அந்த எம்.பி என்பதும் இப்போது நினைவில் இல்லை. வீட்டில் இருந்தது செல்லப்பாவும், கூட நீண்ட தலைமுடியும் தாடியுமான ஒரு பெரியவர். அறுபது வயதுப் பிராயர். பின்னர் பேச்சில் தெரிந்தது அவரும் ஒரு தீர்க்க காந்தி பக்தர். அவர் தான் பி.என். ஸ்ரீனிவாசன். இருவருக்கும் மிக நெருங்கிய தோழமை தெரிந்தது. “இப்போ எனக்கு அரசு கொடுக்கும் தியாகிகள் உதவித் தொகை 1,500 ரூபாய் ஆகியிருக்கிறது .அதோட உங்களுக்கெலலாம் கொடுக்கறது போல, இந்தியாவில் எங்கே வேணுமானாலும் ரயிலில் இலவசமாகப் போய்க்கலாம். வயசானவாளுக்கு கூட ஒருத்தரைத் துணைக்கு கூப்பிட்டுக்கொள்ளலாம். அவருக்கும் பயணம் இலவசம் தான். சரி, தில்லி போய்ட்டு வரலாம்னு கிளம்பிட்டோம்.” என்றார் செல்லப்பா. இதோ ஸ்ரீனிவாசன். முதல் தடவையாகப் பார்க்கும் பி.என். ஸ்ரீனிவாசன் முகம் மலர்ந்து வெகு நாட்கள் பழகியவரைப் போல மிகுந்த சினேக பாவத்தோடு சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். “இங்கே தான் இருக்கணுமா? எத்தனை நாட்களுக்கு? என்று கேட்டேன். “இங்கே இருந்து என்ன பண்றது? நீங்க இருக்கற இடத்துக்குப் போகலாம் வாங்கோ. இனிமே உங்களோட தான்” என்றார் செல்லப்பா அவருடைய வழக்கமான குரலில்.
அவர்கள் இருந்தது இரண்டோ, மூன்றோ நாட்கள் தான். என் விடு போய்ச் சேர்ந்ததும், அவர்களுக்கு உடன் கிடைத்தது ரொட்டியும் சப்ஜியும் தான். “இதென்ன சாப்பாடு? என்றார் செல்லப்பா. ”ராத்திரியிலேர்ந்து நமக்கு பழக்கமான சாப்பாடு கிடைக்கும்”, என்றேன். இரண்டு நாட்களும் பேச்சு, பேச்சு பேச்சுத் தான். வழக்கம் போல பிள்ளையார் கோயில் தெரு 19A வீட்டு சூழல் மீண்டும் உருவாகியது. ஒரே சத்தம். பி.என். ஸ்ரீனிவாசன் நானும் செல்லப்பாவும் சண்டை போடுவதை ஆச்சரியத்துடன் மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். என் மனைவிக்கு இதெல்லாம் சகஜமானது தான். விடுமுறையில் சென்னை வரும்போதெல்லாம் பார்த்திருக்கிறாள்.
பின்னர் பி.என். ஸ்ரீனிவாசன் என்னிடம் தன் ஆச்சரியத்தை மிகுந்த பரவசத்துடன் சொன்னார். இரண்டு மூன்று முறை சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். செல்லப்பா இருந்த போதும், இல்லாத போதும். அது ஏதும் ஒரு பொருட்டல்ல. “என்னமா நீங்க சண்டை போட்டுக்கறேள். விரோதம் இல்லாமல், கல்மிஷம் இல்லாம. சண்டை போட்டுக்கறேள். பின்னர் கூடிக்கறேள். என்ன இது? இப்படி நான் பார்த்ததே இல்லை” என்றார். “அவருக்கும் உங்க கிட்ட ரொம்ப பாசம். உங்களுக்கும் அவர் கிட்டே ரொம்ப மரியாதை” இப்படித் தான் இருக்கணும்”. என்றார்.
தீஸ் ஜனவரி மார்க் என்று 30.1.1948க்குப் பிறகு பிர்லா மாளிகை இருந்த ரோடு பெயர் மாற்றப்பட்டது. செல்லப்பாவும் ஸ்ரீனிவாசனும் சுற்றி வந்தனர். காந்தி கடைசியாக இருந்த அறை அன்று இருந்த வாறே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அந்த அறையிலிருந்து புல்வெளியைத் தாண்டி பிரார்த்தனை மேடைக்கு மனு, அபாவின் தோள் பற்றி நடந்து செல்ல, கோட்சேயால் சுடப்பட்டு வீழ்ந்த இடம் வரை அவரது காலடிகள் கான்க்ரீட் சுவடுகளாக பதியப்பட்டுள்ளன. செல்லப்பா அங்கு வந்ததும் கண்மூடி நின்று பிரார்த்தனை செய்தார். அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
தில்லியைத் தேர்ந்தெடுத்ததும், தில்லி யாத்திரை வந்ததும் இங்கு நின்று பிரார்த்திக்கத்தான் போல யாத்திரை சாபல்யம் அடைந்தது.
சுந்தர ராமசாமியும் இதே போலத்தான். எங்கும் போக அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை. “இங்கே எதுக்கு வந்திருக்கு. உங்களையெல்லாம் பார்த்து பேசீண்டிருக்கத் தான்” என்பார் சிரித்துக்கொண்டே. அவர் வந்த போதெல்லாம் நண்பர்களோடு தான் அவர் பொழுது கழிந்தது. ரவீந்திரன் அறையில், ப்ரெஸ் க்ளப் பாரில். அல்லது அவரது சகோதரி வீட்டில்.
பின் கடைசியாக பூஸா ரோடில் இருக்கும் தில்லித் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் நடந்த தில்லி தமிழ் எழுத்தாளர் சந்திப்பு. அதிகப் பேர் இல்லை. பத்து பதினைந்து பேர் இருந்திருப்போம். புதிதாக அறிமுகம் ஆகிறவர்கள். எல்லோரும் இளைஞர்கள். ஏதோ சந்திப்புப் போலத் தான் அது கழிந்தது. செல்லப்பாவும் பி.என். ஸ்ரீனிவாசனும் நடு நாயகமாக இருக்கச் சுற்றிச் சூழ்ந்திருப்பவர்கள் மரியாதை உணர்வோடு இருந்தவர்களே அன்றி, கேள்விகள் கேட்டுத் தெளிய வந்தவர்கள் அல்ல. சம்பிரதாயக் கூட்டமாகக் கழிந்தது அது.
செல்லப்பாவும் சரி, பி.என். ஸ்ரீனிவாசனும் சரி, கடந்து கல்வெட்டுச் சமாசாரமாகிவிட்ட காந்தியுகத்தில் பிடிவாதமாக வாழ்பவர்கள். இன்னமும் அந்த யுகத்துக்கான வாழ்வுக்கும் உயிர்ப்புக்கும் தேவை இருப்பதாக, அது இன்னமும் வாழும் நியாயம் கொண்டதாக நம்பி வாழ்ந்திருப்பவர்கள்.
இந்தத் தோழமையை செல்லப்பா முன்னர் சொல்லி நான் கேட்டதில்லை. சந்தர்ப்ப வசமாக தில்லி வந்தபோது ஸ்ரீனிவாசனும் கூடத் துணைக்கும் உதவிக்கும் வந்த காரணத்தால் நான் தெரிந்து கொண்டவர். காந்தி ஒன்றே அவர்களைப் பிணைக்கும் ஒரே சக்தி என்றே நான் நினைத்துக்கொண்டேன். அது போக, ஸ்ரீனிவாசன், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்பதும் ஒரு கூடுதல் மகிழ்ச்சி.
இதன் பிறகு ஸ்ரீனிவாசன் காந்தி பற்றிய சிந்தனைகளை பரப்புவதற்காகவும் காந்திய வழியில் செயலபடவும் ஒரு மேடையாக பாரத மணி என்று ஒரு மாதப் பத்திரிகை நடத்தி வருவதாகச் சொல்லப்பட்டதே அது எனக்கு வரத் தொடங்கியது. எப்போதிருந்து என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை.
நான் சென்னைக்கு குடி பெயர்ந்ததும் ஸ்ரீனிவாசன் திடீரென்று ஒரு நாள் என் மடிப்பாக்கம் வீட்டிற்கு வந்தார். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. பாரத மணிக்கு என் சென்னை முகவரி மாற்றத்தை தெரிவித்ததிலிருந்து அவர் தெரிந்திருக்க வேண்டும். அவர் திடீரென்று முன் நின்றது மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தந்த விஷயம். அவரது அத்யந்த நண்பர் செல்லப்பா மறைந்து விட்டார். இப்போது இல்லை. இருந்தாலும் அவருடன் ஒரு நட்பும் நேரிடை பழக்கமும் புதுப்பிக்கப்படுவதில் சந்தோஷம் தான். சிட்லபாக்கத்தில் இருப்பவர். அங்கிருந்து ரயில் ஏறி மௌண்ட் வந்து அங்கிருந்து மறுபடியும் பஸ் பிடித்து பின்னர் மறுபடியும் பஸ் நிறுத்தத்திலிருந்து மடிப்பாக்கம் தெருக்களில் இவ்வளவு தூரம் வருவது என்பது, ஏதோ சந்திர மண்டலத்தில் நடப்பதற்கு இணையானது தான் கற்களும், சின்னச் சின்ன பாறைகளும், குழிகளும், வழிந்தோடும் சாக்கடைத் தண்ணீருமான மடிப்பாக்கம் தெருக்களில் நடந்துவருவது ஒரு பெரிய சாகஸ காரியம் தான். என்னிலும் ஐந்தாறு வயது மூத்தவர் தனித்து வந்திருக்கிறார். பக்கத்தில் யாரும் தெரிந்தவர் இருக்கக் கூடும், , ஏதோ காரியமாக வந்தவர் என்னையும் நினைத்து வந்திருக்கக் கூடும். இருப்பினும், திரும்பியும் போகணுமே. சிட்ல பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து அவர் வீடு எவ்வளவு தூரமோ?
எனக்குத் தான் இந்த குழப்பங்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனவே தவிர அவர் எந்த கவலையுமின்றி, சௌஜன்யத்தோடு ஏதோ அடுத்த வீட்டீலிருந்து அரட்டை அடிக்க வந்த தோரணையில் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு நான் பாரத மணிக்கு எழுத வேண்டும். பாரத மணிக்கு எழுத எனக்கு என்ன தெரியும்? என்ன தகுதி? என்று கேட்டால், எல்லாம் எழுதலாம் எழுதுங்கோ. நீங்க எழுதணும்” இதே பல்லவி.. பின் செல்லப்பாவும் நானும் சண்டையா இலக்கிய விவாதமா என்று கேள்வி தொனிக்க சத்தமிட்டுக்கொண்டிருந்ததை நினைவு படுத்தி அட்டகாசமாகச் ஒரு சிரிப்பு வெடிக்கும். ”.இப்படிக் கூட நடக்குமான்னு நான் அதிசயப்பட்டுப் போனேன்,” என்று மறுபடியும்.. அவரை பஸ் நிறுத்தம் வரை சென்று பஸ்ஸில் ஏற்றித் திரும்பினேன். அதன் பிறகு அவர் அனேகம் முறை இப்படி வந்திருக்கிறார். இல்லையெனில் தொலை பேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். நான் அவ்வப்போது, ஆறு மாதம் கழித்தோ,பத்து மாதங்கள் கழித்தோ இப்படி தோன்றுகிறபோது அவருக்கு நூறு ரூபாய் பாரதமணி சந்தா என்று அனுப்பி வந்தேன். “இல்லாவிட்டால் மறந்து போகும்” என்றும் ஒரு குறிப்புடன்.
பாரத மணியில் காந்தியை நினைவு படுத்தும் அவரது செயல்கள் பற்றித் தகவல்கள் இருக்கும். கூட்டங்கள், பேச்சுக்கள், பாரதி நினைவு விழாக்கள்
நமக்கெல்லாம் மறந்துவிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், யாருக்கு ந. சோமையாஜுலுவை நினைவில் இருக்கும்? ஒரு காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட காலங்களில் தன் பெயரை பிரகாசிகக்ச் செய்தவர். அவரைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை, பாரத மணியில் வந்திருந்தது. ஸ்ரீனிவாசனிடமிருந்து தொலைபேசிவரும்.” எழுதணும் நீங்களென்று”. எனக்கு எந்த சோமையாஜுலுவைத் தெரியும்? 40 களின் ஆரம்பத்தில் காந்தி மதுரை வந்த போது அவரை அம்மையநாயக்கனூர் ரயில் நிலையத்தில் பார்க்க பக்கத்து கிராமங்களிலிருந்தெல்லாம் திரள் திரளாக மக்கள் திருவிழாவுக்குப் பொவது போல் காந்தி தரிசனம் செய்து வந்ததை எழுதினேன் அது என் நினைவுகளின் சுவட்டில் எழுதியது. அது ஏற்கனவே வந்தது என்றோ இல்லை வேறு எந்த காரணமோ அவர் அதை பயன் படுத்திக் கொள்ளவில்லை. வேறு என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை. அவர் நேரில் வரும் போதும் அவ்வப்போது தொலை பேசியில் பேசும் போதும் நினைவு படுத்திக்கொண்டிருப்பார். சிட்ல பாக்கம் போய் அவரை ஒருதரம் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னவோ எனக்கு இருந்தது தான். என்னிலும் ஐந்து வயது மூத்தவர் செய்த சாகஸ காரியத்தை நான் செய்ய முடியவில்லை.
இப்படி. பின்னர் அவர் திலகர் கட்டம் என்ற சரித்திரப் பதிவுகள் கொண்ட பெயரை அந்த சரித்திரத்தோடு தனக்கு எவ்வித உறவோ மரியாதையோ கிடையாது என்று சொல்லும் வகையில், எத்தனையோ சரித்திரப் பதிவுகள் நினைவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அறநிலையத் துறையே, திருவொற்றியூர் கோயில் கல்வெட்டுக்களை அழிக்கும் காரியத்தைச் செய்கிறது. கோவில் புனருத்தாரணம் என்று சொல்லி. கோயில் நிலங்கள் பறிக்கப்பட்டதை ஒரு வேளை திரும்பப் பெறலாம். கோயில் வருமானம் சூறையாடப்படுவதை ஒரு வேளை ஒரு காலம் நிறுத்தலாம். ஆனால், உடைத்து நிர்மூலமாக்கப்பட்ட கல்வெட்டுக்களை எப்படி திரும்பப் பெறுவது? சரித்திரமும் சரித்திரச் சின்னங்களும் அல்லவா அழிகின்ன்றன? அழிந்தது அழிந்தது தானே.
இங்கு நினைவில் இருப்பது காந்தி என்ற பெயர் தான். காந்தியா சிந்தனையே யாருக்கும் இல்லையென்றால்…..அவரால் செய்யக் கூடியது என்ன? யார் அவரோடு ஒத்த சிந்தனை கொண்டவர் இருக்க முடியும்? அவர் கடைசியில் செய்ய முடிந்தது என்ன? இவரும் ஒரு கல்வெட்டை அங்கு நிறுவியது தான். மனித வாழ்வில், மனித சிந்தனையில் இந்த பிரக்ஞை இல்லையெனில் அந்தக் கல்வெட்டும், திலகர் கட்டம் என்ற பெயரும் எத்தனை நாட்கள் நிற்கும்?.. இப்பொது அது இருக்கிறதோ என்னவோ?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு என ஒரு சிலை கம்பீரமாக,, காந்தி சிலையே ஒரு ஓரத்துக்கு ஒதுங்கிக் காண்பது போல, ஒரு நடு நாயகமான இடத்தில் நிறுவ அரசு தீர்மானித்து விட்டால், அதை யார் எதிர்க்கக் கூடும். ஒன்று அரசு பலம். இன்னொன்று சிவாஜி கணேச மகாத்மியம் மக்கள் மனதில். இரண்டும் மகா சக்திகள். நீதி மன்றம் சென்றார். வேறென்ன செய்ய இயலும்?
அவருக்கு துணை நிற்க யாரும் இருந்தனரா?. அவர் போல் ஒத்த சிந்தனையும் செயலூக்கமும் கொண்டவர் யாரும் இருந்தனரா? காந்தியைப் பற்றி அதே உணர்வு கொண்டவர் இன்று இருக்கிறார்களா? தமிழகத்தை விடுங்கள். தமிழ்க அரசை விடுங்கள். காங்கிரஸ் கட்சியை விடுங்கள் காந்தி பெயர் கொண்டு வாழும், அரசோச்சும் குடும்பத்திலாவது யாரும் உள்ளார்களா?
கடைசி காந்தி சிந்தனை கொண்ட, செயல் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். அவரும் இரண்டு நாட்களுக்கு முன் மறைந்துவிட்டார். தாகூரின் ஒரு கவிதை “ஏக்லா சொல்” என்று. உன் பேச்சைக் கேட்க யாரும் இல்லையெனில்,தனித்தே செல், தனித்தே செல் என்று. கடைசியில் தனித்துச் சென்ற ஒரு மனிதர் இருந்தார். இப்பொது அவருக்கு அந்தக் கவலையும் இல்லை.
—————————————————————–
- எதிரி காஷ்மீர் சிறுகதை
- உணவு நச்சூட்டம்
- நட்பு
- புகழ் பெற்ற ஏழைகள் – 24
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி
- ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……19
- தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்
- ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.
- தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !
- கம்பராமாயணக் கருத்தரங்கம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…
- முக்கோணக் கிளிகள் [5]
- ஞாநீ
- ஆமென்
- துகில்
- அப்பா என்கிற ஆம்பிளை
- சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !
- தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு