மொழியாக்கம்-சத்தியப்பிரியன்
யது வம்சம்.
ரிக் வேதத்தின் பத்தாவது பகுதியில் ஆயு என்ற மன்னனை பற்றிய குறிப்பு வருகிறது. ஆயுவின் புதல்வன் நகுஷன். ஆயுவின் பேரன் யயாதி. யயாதிக்கு ஐந்து புதல்வர்கள். மூத்தவன் யது. இந்த யதுவே ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையன். இந்த வரிசையில் கடைக்குட்டி புரு என்பவன் ஆவான். இந்த புருதான் கௌரவ பாண்டவர்களின் மூதாதையன்.
ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையனான யதுவைப் பற்றிய குறிப்பு மகாபாரதத்திலும், புராணங்களிலும் காணப் பெற்றாலும் ஹரிவம்சத்தில் அவனைப் பற்றிய கதைச் செய்தி முற்றிலும் வேறாக உள்ளது. அந்த நூலில் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த ஹரஸ்யா என்ற மன்னன் அயோத்தியை ஆண்டு வந்ததாக கூறுகிறது. மதுவனம் என்று குறிப்பிடப் பெறும் மதுராபுரியின் இளவரசி மதுமதி என்பவளை ஹரஸ்யா திருமணம் புரிந்து கொள்கிறான். ஏதோ ஒரு காரணத்திற்காக அயோத்தியை விட்டு துரத்தப்படும் ஹரஸ்யா தன் சொந்த மண்ணை விட்டு தன் மனைவியின் ஊரான மதுராபுரியில் தஞ்சம் புகுகின்றான். அவனது மைந்தனான யது பின்னர் மதுராவின் மன்னன் ஆகிறான்.
ரிக் வேதத்தில் மற்றொரு பகுதியில் யது என்ற பெயருடைய ஆரியன் அல்லாத பேரரசன் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. எனவே யது என்ற பெயருடைய மன்னனைப் பற்றி இப்படி கணக்கிடலாம்.
1.யது-யயாதியின் மைந்தன்
2.யது-இஷ்வாகு குலத்தை சேர்ந்தவன்.
3.யது-ஆரியன் அல்லாத வீரன்.
ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையன் எனக் கருதப்படும் யது என்பவன் யயாதியின் புதல்வன் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். இருப்பினும் யாதவர்கள் மதுராபுரியில் நீண்ட காலம் வசித்தவர்கள் என்று வைத்து பார்க்கும்பொழுது அவர்கள் இஷ்வாகு குலத்தை சேர்ந்த யதுவும் அவர்கள் மூதாதையராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் விருஷ்ணி,அந்தகம்,குற்குரம் மற்றும் போஜ நாட்டு அரசர்களும் ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்றே யது வம்சத்தை முன்னோடியாகக் கொண்டு மதுராபுரியில் சில பகுதிகளை ஆண்டு வந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்
ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தை வசுதேவர் ஆவார். தாய் தேவகி. ஸ்ரீ கிருஷ்ணர் ஜனித்த வேளையில் உக்கிரசேனனின் புதல்வனான கம்சன் யாதவர்களின் மன்னனாக விளங்கினான். தேவகி கம்சனின் கூடப் பிறந்த சகோதரியாகவோ அல்லது ஒன்று விட்ட சகோதரியாகவோ இருந்திருக்க வேண்டும். ஏன் எனில் தேவகியின் தந்தை வழி பாட்டனும், கம்சனின் தந்தை வழிப் பாட்டனும் ஒருவரே. ஸ்ரீ கிருஷ்ணரின் ஜனன சமயத்தில் பொதுவாக கூறப்படும் கட்டுக் கதை இதுதான். தேவகி வசுதேவர் திருமணத்திற்குப் பின்னர் கம்சன் அவர்கள் இருவரையும் தேரில் அமர்த்தி தானே தேரை ஓட்டிச் செல்கிறான். கல்யாண இரதம் செல்லும்பொழுது ஆகாயத்திலிருந்து ஒரு அசரீரி கேட்கிறது. தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது சிசு கம்சனை கொல்லும் என்பதே அந்த அசரீரியின் சாரம்.
இந்த முன்னறிவிப்பே கம்சனுக்கு தேவகியின் மீது வெறுப்பு ஏற்பட காரணமாகிறது. வசுதேவர் தாமே முன் வந்து தேவகி மூலம் தனக்கு பிறக்கப் போகும் முதல் எட்டு சிசுக்களை கம்சனிடம் ஒப்படைப்பதாக வாக்கு கொடுத்து கம்சனின் கோபத்தைத் தணிக்கிறார். கம்சன் சற்று மனம் இரங்கி தேவகியை மாய்க்காமல் விடுத்து இருவரையும் சிறையில் அடைக்கிறான். முதல் ஆறு சிசுக்களையும் அவை பிறந்த கணத்திலேயே கம்சன் கொன்று விடுகிறான். தேவகியின் ஏழாவது கரு மாயமான முறையில் வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியின் கர்பத்தில் மாற்றி வைக்கப் படுகிறது. ரோகினி நந்தகோபர் என்ற கோவலனின் பாதுகாப்பில் இருந்து வருகிறாள். இந்த கருவே வளர்ந்து பலதேவனாய் பிறக்கிறது.
புயலும் மழையும் மிகுந்த இரவில் ஸ்ரீ கிருஷ்ணர் ஜனிக்கிறார். வசுதேவர் ரோஹினியிடம் மிக ரகசியமான முறையில் ஸ்ரீ கிருஷ்ணரை கொண்டு சேர்க்கிறார். பதிலுக்கு நந்தகோபரின் மனைவி யசோதாவுக்கு அந்த நள்ளிரவிலேயே பிறந்த பெண் சிசுவை தேவகிக்குப் பிறந்த சிசு என்று மாற்றி வைக்கிறார். அந்தப் பெண் சிசுவை கம்சன் கொல்ல முயற்சிக்கும்பொழுது அது மாயா என்ற உருவெடுத்து வானில் சென்று கம்சனைக் கொல்லப் போகும் பாலகன் ஏற்கனவே பிறந்து விட்டதாகவும் அவன் வேறு ஒரு இடத்தில் பத்திரமாக வளர்ந்து வருவதாகவும் கூறுகிறது.
மேற்கூறியவற்றிலிருந்து வரலாற்றுத் தொடர்புடைய பகுதிகளை மட்டும் நாம் கீழ் கண்டவாறு பிரித்தெடுக்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ணர் யாதவ குலத்தில் தேவகியின் மைந்தனாக பிறக்கிறார்.அவரது தந்தை வசுதேவர். அவரது இளமைப் பிராயம் நந்தகோபரின் குடிலில் கழிகிறது. வசுதேவர் ஸ்ரீ கிருஷ்ணரை நந்தகோபரின் பாதுகாப்பில் விட்டு விட்டு வந்த மர்மம் ரகசியமாகக் காப்பாற்றப் படுகிறது. காரணம் கம்சனுக்கு யாதவர்கள் மேல் இருக்கும் அதீத கோபம். ஔரங்கசீப்பினைப் போலவே கம்சன் பெற்ற தகப்பனை வீழ்த்தி சிறையில் அடைத்து அவரது சிம்மாசனத்தை கைப் பற்றுகிறான்.அவனுடைய இரக்கமற்ற பல செயல்கள் மக்களை அவன் ஆட்சி புரிந்த மதுராபுரியை விட்டு புலம் பெயரச் செய்கிறது. மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனின் கொடூர செயல்களை தன் வாயாலேயே குறிப்பிடுகிறார். எனவே வசு தேவர் தன் முதல் மனைவி ரோஹிணியையும், முதல் மகன் பலராமனையும் மதுராபுரியிலிருந்து கோகுலத்தில் நந்தகோபரின் பாதுகாப்பில் விட்டு விட்டு வந்ததற்கு நியாயம் உள்ளது. அதேபோல் ஸ்ரீ கிருஷ்ணரையும் நந்தகோபர் பாதுகாப்பில் கொண்டு விட்டதையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.
ஸ்ரீ கிருஷ்ணரின் பிள்ளைப் பிராயம்.
புராணங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பிள்ளைப் பிராயத்துடன் தொடர்புடைய பல பழங்கதைகளை வரிசைப் படுத்துகின்றன. நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1) பூதனையின் மரணம்.
புராணக் கதைகளின் படி பூதனை என்ற பெயருடைய அரக்கி ஸ்ரீ கிருஷ்ணரை கொல்வதற்காக கம்சனால் நந்தகோபரின் குடிலுக்கு அனுப்பப் படுகிறாள்.பூதனை அழகிய மெல்லியலாள் உருவெடுத்து நந்தகோபரின் வீட்டிற்குள் நுழைகிறாள். அந்த அழகியின் முலைக்காம்புகளில் நஞ்சு குழம்பு பூசப் பட்டிருக்கிறது. ஆனால் பாலகன் ஸ்ரீ கிருஷ்ணனின் தாங்க முடியாத இம்சையால் பால் கொடுக்கும்பொழுதே பூதனை இறந்து விடுகிறாள்.இறக்கும்பொழுது அரக்கி உடல் ஆறு இடங்களில் சிதறி விழ இறக்க நேரிடுகிறது.
மேற்சொன்ன கதை இது போன்ற உண்மைச் சம்பவத்திலிருந்து உரு மாறியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
பூதனா என்பது ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் குழந்தைகளைத் தாக்கிய பெருநோய்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.எந்த குழந்தை இந்த நோயால் தாக்கப் பட்டிருக்கிறதோ அந்த குழந்தை தன் தாயின் முலைக்காம்பையோ அல்லது செவிலியின் அமுத கலசங்களையோ வேகமாக உறிஞ்சி பாலைக் குடித்தால் நோய் குணமாகும் என்பது ஒரு சிகிச்சையாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் பூதனா என்ற நோயினால் தாக்கப்பட்டு பின்னர் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த நோயிலிருந்து பூரணமாக குணமாகி இருக்க வேண்டும். அந்த நோயே பின்பு பூதனை என்ற அரக்கியாக உருவகப் படுத்தப் பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
2)கள்ளச் சகடம் காலால் உதைத்தது.
ஸ்ரீ கிருஷ்ணரின் வளர்ப்புத் தாயான யசோதா ஒரு சமயம் கண்ணன் சிறு குழந்தையாக இருந்த பொழுது ஒரு மாட்டு வண்டியின் நிழலில் படுக்க வைத்திருந்தாள். பாலகனான ஸ்ரீ கிருஷ்ணர் தன் பிஞ்சு கால்களால் உதைத்து வண்டியை உருண்டோடச் செய்கிறார்.
ரிக் வேதத்தில் இது போன்ற கதை ஒன்று உண்டு. வண்டியின் தேரினை இந்திரன் உதைத்து உடைத்ததாக ஒரு கதை கூறப் படுகிறது.ஒருவேளை இந்தக் கதையும் ஸ்ரீ கிருஷ்ணரின் தொல் கதைகளுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
3) மண்ணை உண்டு ஈரேழு உலகம் காட்டிய மாயன்.
பாலகன் ஸ்ரீ கிருஷ்ணன் வாயில் சிறிது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறான். யசோதா அவனைக் கடிந்து கொண்டு மண்ணை எடுப்பதற்காக அவன் வாயை திறக்கச் சொல்கிறாள்.
கண்ணன் வாயை திறக்க யசோதா அவனுடைய சின்னஞ்சிறு வாயினில் அண்ட சராசரங்களையும் கண்டு வியந்து நிற்கிறாள்.
இந்த கதை முதன் முதலாக ஸ்ரீமத் பாகவதத்தில்தான் வருகிறது.ஸ்ரீ மத் பாகவத்திற்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையைக் கூறும் எந்த நூலிலும் இந்த கதை குறிப்பிடப் படவில்லை. எனவே இது பாகவதத்தை எழுதிய ஆசிரியரின் கற்பனையில் உதித்தது என்றே கொள்ள வேண்டும்.
4) திரிணவரதன் வதம்.
திரிணவரதன் என்ற அரக்கன் ஒருமுறை குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு ஆகாயம் வரை கொண்டு செல்கிறான்.
மேற்சொன்ன கதை புனைவிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் திரிணவரதன் என்பது ஒரு சுழற் காற்றாக இருந்திருக்க வேண்டும்.ஸ்ரீமத் பாகவதம் ஒரு படி மேலே போய் திரிணவரதன் குழந்தை கண்ணனை அழிக்க கொடிய காற்றின் வடிவில் வந்ததாக கூறுகிறது. அதி வேகமாக சுனன்று வீசும் சுழற்காற்றால் தவழக் கூட இயலாத சினஞ்சிறு குழந்தையை தரையின் மீதிருந்து இரண்டடி உயரம் உயர்த்துவது இயலாத காரியமில்லை. இந்தக் கதையும் முதன் முதலாக ஸ்ரீமத் பாகவதத்தில்தான் குறிப்பிடப் படுவதால் இதன் நம்பகத் தன்மை ஏற்புடையதாக இல்லை.
5) வெண்ணை திருடி.
ஹரிவம்சத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் கோபிகளின் இல்லங்களில் கண்ணன் வெண்ணை திருடி உண்ட நிகழ்ச்சி குறிப்பிடப் படுகிறது.அதோடு மட்டுமல்லாமல் அந்த வெண்ணையை மந்திகளுக்கு கொடுத்து உண்டதாக கூறுகிறது. ஸ்ரீமத் பாகவதத்தில் இது மிகை படுத்தி கூறப் படுகிறது.
இதன் தாத்பரியம் என்ன வென்றால் ஸ்ரீ கிருஷ்ணரின் உதாரர குணத்தையும் ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் மீதும் அவருக்கு இருந்த அன்பையும் வெளிப் படுத்துவதாகும். கோபியரிடமிருந்து திருடிய வெண்ணையை அவர் மந்திகளுக்கும் மற்ற கோகுலச் சிறுவர்களுக்கும் அளிக்கிறார். அவர் பார்வையில் அனைவரும் சமம் என்பதை இந்நிகழ்ச்சி விளக்குகிறது.
6) மருத மரம் பிளந்த கதை.
இந்த நிகழ்ச்சி மகாபாரதத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது. சிசுபாலன் வாயிலாக வெளிப்படும் நிகழ்ச்சியாக உள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் உரலில் கட்டி உடைத்த மரங்கள் இரண்டும் குபேரனின் இரண்டு புதல்வர்கள் என்றும் ஒரு சாபத்தால் இப்படி மரமானதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக இருக்கும் காலத்திலேயே நந்தகோபர் தன் சுற்றத்துடன் கோகுலத்தை விட்டு பிருந்தாவனத்தில் வந்து குடியேறுகிறார்.ஒரு வேளை பிருந்தாவனம் கோகுலத்தை விட வசதிகள் நிறைந்த இடமாக இருந்திருக்க வேண்டும். அல்லது ஹரி வம்சத்தில் குறிப்பிடுவது போல கோகுலத்தை ஓநாய்கள் சூழ்ந்து தாக்கத் தொடங்க அதன் காரணமாக அவர்கள் பிருந்தாவனத்திற்கு புலம் பெயந்திருக்க வேண்டும்.
- ஜெயந்தன் விருது அழைப்பிதழ்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20
- ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்
- மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்
- குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..
- சேவை
- க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –
- முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34
- தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !
- ஆன்மீகக் கனவுகள்
- அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்
- சிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்
- பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
- ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி
- நீங்களும்- நானும்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 1
- விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?
- அகநாழிகை – புத்தக உலகம்
- அருளிச்செயல்களில் மச்சாவதாரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்
- கற்றல்
- கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 25