கவிதைகள்

This entry is part 24 of 33 in the series 6 அக்டோபர் 2013

உள்ளுக்குள் வானரசு

 

கொஞ்சம் பொறுங்கள்

வெற்றிக் கோப்பையை

பறிகொடுத்து

எதிரியை சம்பாதித்துக்

கொண்டேன்

கவனமாய் இருங்கள்

பல தவறுகளை

செய்தாலும்

தண்டனை ஒன்று தான்

விழிப்புடன் இருங்கள்

எதிர்ப்படுபவர்கள் அனைவரும்

மனிதரில்லை

அன்பாக இருங்கள்

தன்னுடைய படைப்புகளில்

கடவுள் தன்னை

வெளிப்படுத்திக் கொள்கிறார்

தயாராய் இருங்கள்

எங்கிருந்தேனும் அம்பு

எய்யப்படலாம்

பணிவாக இருங்கள்

கடவுள் எந்த ரூபத்திலும்

உங்களை வந்து சந்திக்கலாம்

கனிவுடன் இருங்கள்

இறைவன் வேறொன்றையும்

உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை

பக்தியுடன் இருங்கள்

இறைவன் உங்களுக்கு

இன்னொரு வாய்ப்பு

வழங்கலாம்

வைராக்யத்துடன் இரு்ங்கள்

எந்த ஒன்றும் உன்னுடைய

உறுதியைக் குலைக்க முயலலாம்

தைரியாகமாய் இருங்கள்

உங்களுக்குள்

உறங்கிக் கொண்டிருக்கும்

மிருகம் எப்போது

வேண்டுமானாலும்

வேட்டையைத் தொடங்கலாம்.

 

 

முத்திரை

 

எனது உள்ளத்தில் ஏற்பட்ட

வெற்றிடத்தை நிரப்புங்கள்

நான் விலங்கல்ல

வேட்டையாடித் தின்ன

நான் பறவையல்ல

அடை காக்க

நான் மீனல்ல

இரைக்கு ஆசைப்பட்டு

குழம்பில் மிதக்க

நான் பைத்தியமல்ல

ஊர் கேலி செய்து

சிரிக்க

நான் ரட்சகனல்ல

முள்கிரீடம் தரிக்க

நான் அரக்கனல்ல

தவம் செய்து

வரம் வாங்க

நான் துறவியல்ல

பெண்களை வெறுக்க

நான் அரசனல்ல

போர் தொடுக்க

நான் சிவனல்ல

பிட்டுக்கு மண்

சுமக்க

நான் பரந்தாமனல்ல

விஸ்வரூபம் எடுக்க

நான் இயேசு அல்ல

விண்ணரசு அமைக்க

நான் புத்தன் அல்ல

கடவுளை எதிர்க்க

நான் பாரதி அல்ல

உயிரை வதைத்து

தமிழை வளர்க்க

நான் நாத்திகனல்ல

கோயிலை இடிக்க.

 

 

 

ஆரோகணம்

 

எது இங்கே நிரந்தரம்

பால்யத்தின் மரணம் தானே

விடலைப் பருவம்

குழந்தையின் இறப்பு

மனிதனின் பிறப்பு

ஒன்றைப் பெற

ஒன்றை இழந்தாக வேண்டியது

கட்டாயம்

அகிலத்தை எடுத்து சாட

ஒரு உள்ளம் அமைந்தால்

சூரல் நாற்காலியே

கதியென்று அமர்ந்திருக்கலாம்

நேற்று வேறுமாதிரி இருந்தான்

இன்று எதுமாதிரியும் இல்லாமல்

புதுமாதிரி இருக்கிறான்

அப்படியென்றால்

நேற்றின் இறப்பு

இன்றின் பிறப்பு

எனது எழுதுகோல்

எதைப் பற்றியும்

கவலை கொள்ளாமல்

தன்னை எழுதிக் கொள்கிறது

ஒவ்வொரு விடியலும்

புதுமாதிரி இருந்தால் தானே

உலகம்

எனக்கு வாசகனைப் பற்றி

கவலை இல்லை

நான் எனக்காக

எழுதுகிறேன்

உளிபட்டு கல்

சிற்பமாகலாம்

தெய்வத்துக்கு

வார்த்தைகளால் மாலை

கோர்ப்பதே எனது வேலை

வெள்ளியம்பலத்தில் சிவன்

கால்மாற்றி ஆடுகிறான்

உக்கிரம் கொண்ட காளி

என்னை எழுத

தூண்டுகிறாள்.

 

 

 

முகவரி சீட்டு

 

விலாசத்தைத் தொலைத்தவன்

தேடினான்

முதலில் பெயரை ஞாபகப்படுத்திக்

கொண்டான்

வீட்டு எண்

பூஜ்யத்திலிருந்து ஒன்பதுக்குள் தானே

இருக்கும் என்ற  அலட்சியம்

அவனிடத்தில் இருந்தது

தெருவின் பெயர்

தியாகிகள், புலவர்கள்,

பெருந்தலைவர்கள்

இவர்களுக்குள்ளே தான்

இருக்கும்

நகர்களுக்கு பெரும்பாலும்

அரசர்கள் பெயரையே

சூட்டுகிறார்கள்

ஊர் பெயர் ஏற்கனவே

ஞாபகத்தில் இருந்தது

அவன் எழுதி முடித்த

முகவரியில்

அந்த ஊரின் வெட்டியான்

குடியிருந்தான்

கூப்பிட்ட உடன்

சேவகம் செய்ய

பேய்கள்

ஓடோடி வந்தன

புதையலை

வைத்துக் கொண்டு

பூதம் வாசலில் நின்றது

அன்றிலிருந்து இவன்

கண்ணுக்கு மட்டும்

எல்லோரும்

பிணங்களாகவே தெரிந்தனர்.

 

Series Navigationநிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்புஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *