குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31

This entry is part 29 of 31 in the series 13 அக்டோபர் 2013

31  

       இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விழிப்பதும் உறங்குவதுமாய் மாறி மாறிக் கழித்துக்கொண்டிருந்த ராதிகாவுக்கு மிகவும் அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது.

 

ஒன்பது மணிக்கு அவள் பாங்க் ஆஃப் இண்டியா அலுவலகத்தை அடைந்தபோது, சிந்தியா அவளுக்காக அங்கு வந்து ஏற்கெனவே காத்துக்கொண்டிருந்தாள்.

 

“வாம்மா, ராதிகா!” என்று அழைத்தபடி, அவள் கையைப் பற்றிய சிந்தியா அவளை வங்கியினுள் கூட்டிச் சென்றாள். வழியில் ராதிகா மெல்ல மெல்லத் தன் கையை அவளது பிடியினின்று தளர்த்தி விடுவித்துக்கொண்டாள்.

 

அலுவலரின் அனுமதி பெற்று, அவள் பின்னர் ராதிகாவுடன் வாடிக்கையாளர்களின் பெட்டகங்கள் இருந்த பெரிய அறையை அடைந்தாள். அவளது பெட்டகத்துள் ஒரு சாவியை நுழைத்த பின் அலுவலர் அங்கிருந்து அகன்றார். சிந்தியா தன் மறு சாவியால் அப்பெட்டகத்தைத் திறந்து அதனுள்ளிருந்து தான் எடுத்த ஒரு தோல் பையிலிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை உருவி எடுத்து ராதிகாவிடம் கொடுத்தாள்.

 

“இங்கேயே அதைத் திறந்து பாத்துட்டுக் குடுத்துடும்மா.”

 

உறையினுள் சில புகைப்படங்கள் இருந்தன.  சிந்தியாவின் தோள்மீது கைபோட்டபடியும், அவளது இடை பற்றியவாறும் தீனதயாளன் சிரித்துக்கொண்டிருந்த படங்கள். மிகச் சிறிய வயதுக்காரராக அவர் அவற்றில் தெரிந்தார். மொத்தம் பத்துப் படங்கள் இருந்தன.

 

“நிஜமான படங்களா இல்லாட்டி காமிரா ட்ரிக் ஏதாச்சும் பண்ணினதான்னு தெரிஞ்சுக்கணும்னா ரெண்டு, மூணு படங்களை மட்டும் எடுத்து வெச்சுக்க.   …. அப்புறம், இந்த இன்னொரு பையில இருக்கிறதெல்லாம் அவர் எனக்கு எழுதின லெட்டர்ஸ். இதுகளை யெல்லாம் இங்க நின்னுக்கிட்டு படிச்சு முடிக்க நேரமாகும். அதனால சிலதை மட்டும் எடுத்துக்கலாம். எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போகணும்னு அவசியமில்லே.”

 

“போட்டோஸ்ல எதையும் நான் எடுத்துக்கல்லே,  மேடம். கைதவறி நான் எங்கேயாச்சும் வெச்சு, அது எங்கம்மா கண்ணுல பட்டுட்டா வம்பு. அவங்களோட கனவுக்கோட்டையெல்லாம் பொடிப்பொடி யாயிடும்!”

 

அவள் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்த படங்களை மீண்டும் உறைக்குள்  போட்டுப் பெட்டகத்துள் வைத்து விட்டுச் சில கடிதங்களை மட்டும் எடுத்துத் தன் கைப்பையினுள் வைத்துக்கொண்டபின் அதைப் பூட்டிவிட்டு ராதிகாவுடன் வெளியேறினாள்.

ஓர் ஆட்டோ பிடித்து இருவரும் சிந்தியாவின் வீட்டுக்கு அரை மணிக்குள் வந்து சேர்ந்தார்கள்.  வீட்டின் உள்ளே நுழைந்ததும் மின்விசிறியைப் போட்ட சிந்தியா, “உக்காரும்மா.. இதோ வந்துடறேன்,” என்று சமையலறைக்கு விரைந்து சென்று இரண்டே நிமிடங்களில் இரண்டு கண்ணாடிக் கோப்பைகளில் எலுமிச்சைச் சாறு எடுத்து வந்து ஒன்றை ராதிகாவிடம் நீட்டினாள்.

 

“நான் வயிறு முட்டச் சாப்பிட்டுட்டுத்தானே வந்திருக்கேன்? வேணாங்க.”

 

“ஆனா எனக்கு வேணுமே! இந்த வெயிலுக்கு நல்லாருக்கும். சூட்டையும் தணிக்கும்!”

 

ராதிகா ஒன்றும் சொல்லாமல் அதை வாங்கிக்கொண்டாள். ‘சூட்டையும் தணிக்கும்’ என்று அவள் இரு பொருள்படப் பேசியதைப் புரிந்துகொண்ட ராதிகாவுக்கு முகம் சிறுத்தது. எனினும் எலுமிச்சைச் சாற்றை உறிஞ்சலானாள்.

 

கோப்பையை எதிர் முக்காலிமீது வைத்த ராதிகா தன் முகத்தைத் துடைத்துக்கொண்டது கண்டு அவளது மன இறுக்கத்தைச் சிந்தியா புரிந்துகொண்டாள். தன் கோப்பையை வைத்த பின், “சொல்லும்மா, ராதிகா! என்னவெல்லாம், என்னைக் கேக்கணும்னு தோணுதோ, எல்லாத்தையும் தயங்காம கேட்டுடும்மா.”

 

உடனே தலை உயர்த்தி அவளை நோக்கிய ராதிகா, சற்றும் அயராது தன்னை உற்றுப் பார்த்தபடி சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்த சிந்தியாவின் மன உறுதியைக் கண்டு வியந்து போனாள். அவள் தொண்டையைச் செருமிக்கொண்டு பேசலானாள்: “ராகேஷ் கிட்டேருந்து என்னை விடுவிச்சதுக்காக மறுபடியும் உங்களுக்குத் தேங்க்ஸ், மேடம்! அந்த விஷயத்துல நான் உங்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன்!” – “அந்த” எனும் சொல்லை வேண்டுமென்றே அழுத்தமாக உச்சரித்தாள்.

 

“ஆனா, வேற ஒரு விஷயத்துக்காக நீ என்னை வெறுக்கறேன்றதை ரொம்ப அழகாச் சொல்லிட்டே!  … ஆனா, நீ என்னைக் குற்றவாளிக் கூண்டில நிறுத்திக் கேள்விகள் கேக்குறதுக்கு முந்தி, நான் உங்கிட்ட ரெண்டே ரெண்டு கேள்விகள் கேக்கணும், ராதிகா!”

 

“கேளுங்க.”

 

“உங்கப்பா… வந்து… என்னை… வந்து… உனக்கு எப்படித் தெரிய வந்திச்சு?”

“எங்கப்பா உங்களை ‘வெச்சிட்டிருக்கிறது’ எப்படித் தெரிய வந்திச்சுன்னு கேக்கறீங்க! அதானே?”

இப்படி ஒரு சங்கடமான கேள்வியின் வாயிலாகச் சிந்தியாவின் முகத்தில் அவள் தோற்றுவிக்கப் பெரிதும் விரும்பிய சிறுமை அவள் முகத்தில் சிறிதும் ஏற்படவே இல்லை.  மாறாக, அவள் உதடுகள் புன்சிரிப்புக் கொண்டிருந்தன. “அதேதான்!” என்று புன்சிரிப்புக் குறையாமல் அவள் பதிலிறுத்தி ராதிகாவை அயர்த்தினாள்!

 

“ஒரு நாள் நான் உங்க ரெண்டு பேரையும் காசினோ தியேட்டர்ல சமீபத்துல பாத்தேன்.  அப்புறம்,. இன்னொரு நாள் அப்பாவை ரகசியமாப் பின் தொடர்ந்து போய் இந்த வீட்டுக்கு அவர் வந்து போனதைக் கண்டுபிடிச்சேன். காசினோவில ரொம்ப நெருக்கமா இருந்த உங்க ரெண்டு பேரையும் பாத்த நிமிஷத்துலேர்ந்து என்னோட நிம்மதி பறி போயிடிச்சு. … எங்கம்மா எவ்வளவு நல்லவங்க, தெரியுமா?  எங்கப்பா அவங்களுக்குத் துரோகம் செய்யிறதுக்கு நீங்க ஒரு கருவியா இருந்து வந்திருக்கீங்க! எங்கப்பா உங்களையும் காட்டிலும் மோசமான துரோகி. நான் மறுக்கல்லே!”

 

அந்தக் கணத்தில் யாரோ வாயிற்கதவைத் தட்டினார்கள்.  மின்வெட்டு ஏற்பட்டிருந்ததால் கூப்பிடு மணியை இயக்க முடியவில்லை.  சிந்தியா எழுந்து போய்த் தனக்கு வந்திருந்த கோரியர் உறையைச் சன்னல் வழியாகப் பெற்றுக்கொண்டு திரும்பினாள்.  தன் இருக்கையில் உட்கார்ந்து உறையைப் பிரித்துக் கடித்த்தைப் படித்தாள். தான் திடீரென்று விடுத்த வேண்டுகோளை ஏற்று, தயா, சாந்தி ஆகிய இருவரையும் தன் விடுதியில் தங்க அனுமதித்ததற்காகச் சிந்தியாவுக்குத் தயாவின் அலுவலக இயக்குநர் எழுதியிருந்த நன்றிக் கடிதம் அது.  புன் சிரிப்புடன் அதை ஓரமாக வைத்துவிட்டு, அவள், “சொல்லும்மா.” என்றாள்.

 

“அதான் சொல்லிட்டேனே! அவ்வளவுதான். கல்யாணம் ஆன ஒருத்தருக்குச் சின்னவீடா இருக்கச் சம்மதிச்சு எங்க குடும்பத்துல குழப்பம் விளைவிச்சிருக்கீங்களே, அது நியாயமாங்கிறதுதான் நான் உங்க கிட்ட கேக்க விரும்பின முக்கியமான கேள்வி.  இப்போதைக்கு என் ஒருத்திக்கு மட்டுந்தான் இது தெரியும். எங்கம்மாவுக்கு நான் எதுவும் சொல்லப் போறதில்லை. இதை ஏற்கெனவே உங்க கிட்டவும் சொல்லியாச்சு.  ஆனா, அவங்களுக்கு வேற வழியிலே எப்படியோ இந்த விஷயம் தெரிய வந்திருச்சுன்னு வெச்சுக்குங்க – அப்ப அவங்க மனசு என்ன பாடு படும்! அது பத்திக் கொஞ்சமாச்சும் ஒரு மனச்சாட்சியோட நினைச்சுப் பாத்திருந்தீங்கன்னா, எங்கப்பாவுக்குக் கான்குபைனா (concubine) இருக்கச் சம்மதிச்சிருப்பீங்களா!”

ஆத்திரத்துடனும் அழுத்தந்திருத்தமாகவும் ராதிகா உச்சரித்த  வைப்பாட்டி எனப் பொருள்படும் “கான்குபைன்” எனும் அந்த ஆங்கிலச் சொல் சிந்தியாவின் செவிகளுள் சூட்டுக்கோலாய்ப் பாய்ந்தது.  அவள் விழிகள் உடனே நிறைந்துவிட்டன.

 

“ராதிகா! அந்த வார்த்தை மட்டும் சொல்லாதேம்மா!”

 

“கல்யாணம் ஆன ஒருத்தருக்கு வைப்பாட்டியா இருக்கிறவங்களை அப்படிச் சொல்லாம வேற எப்படி மேடம் சொல்றது?”

 

சிந்தியா முகம் பொத்திக் குரலெழுப்பிக் கட்டுப்பாட்டை இழந்தவளாய் அழுததை ஒரு குரூரமான மகிழ்ச்சியுடன் ராதிகா பார்த்துக்கொண்டிருந்தாள். சரியாக ஒரு நிமிஷத்துக்குப் பின் தலை உயர்த்திய சிந்தியா, “உங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் ஆன வருஷம் உனக்குத் தெரியுமாம்மா?” என்று, குரலைச் சரிப்படுத்திக் கொண்ட பின், வினவினாள்.

 

“ஏன் தெரியாம? அதான் வுருஷா வருஷம் ஆன்னிவெர்சரி கொண்டாடுறாங்களே! மே மாசம், பதினெட்டாந்தேதி.”

 

“வருஷம் தெரியுமா?”

 

“1974 ஆம் வருஷம் அவங்க கல்யாணம் நடந்திச்சுன்னு சொல்லியிருக்காங்க. அடுத்த வருஷம் வெள்ளி விழா!”

 

சிந்தியா மேசை இழுப்பறையிலிருந்து வங்கியிலிருந்து எடுத்து வந்திருந்த ஓர் உறையை எடுத்தாள். அதிலிருந்து ஒரு சான்றிதழை உருவி எடுத்து ராதிகாவிடம் நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்த ராதிகா அதிர்ச்சியின் உச்சத்துக்குப் போனாள்.  அது, சிந்தியாவுக்கும் தீனதயாளனுக்கும் 1972 ஆம் ஆண்டில் நடந்த பதிவுத் திருமணத்துக்கான அரசுச் சான்றிதழ்! தன் கண்களை நம்ப முடியாமல் ராதிகா திரும்பத் திரும்ப அதைப் பார்த்தபடி இருந்தாள்.  அவளால் தலை உயர்த்திச் சிந்தியாவைப் பார்க்க முடியவில்லை. – ‘இந்தச் சான்றிதழின் படி இவளுக்கும் அப்பாவுக்கும் தான் முதலில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.  நடுவில் வந்தவள் அம்மாதான் !   அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம்? என்ன அர்த்தம் இதற்கு?’

 

“என்னம்மா ராதிகா, மவுனமாயிட்டே? இந்தக் கல்யாணத்துக்கு வெள்ளி விழா நடந்து முடிஞ்சாச்சும்மா.  நாந்தான் சீனியர்!”

 

ராதிகாவை அவமானம், வெட்கம், வேதனை,  சிந்தியாவைக் கிண்டலாகவும் எடுத்தெறிந்தும் தான் பேசிய பேச்சின் குற்ற உணர்வு  ஆகிய எல்லாம் சேர்ந்து தாக்க, அவள் நொறுங்கிப் போய்த் தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு அழலானாள்.  அவளது மடியில் இருந்த தன் திருமணச் சான்றிதழை எடுத்துப் பத்திரப்படுத்திய பின் சிந்தியா, “ஈசி, ஈசி!  அழாதேம்மா. அழாதே…” என்றாள்.

 

தன் வாழ்க்கையில் அதற்கு முன்னால் தோள்கள் குலுங்க அழுதே அறிந்திராத ராதிகா இனி என்றுமே இப்படி அழப்போவதில்லை என்பது போன்ற உக்கிரத்துடன் விம்மலும் கேவலுமாக அழுதுகொண்டிருந்தாள்.

 

அவள் அழுததைத் தாங்க முடியாத சிந்தியா, அதற்கு முன் தான் அவளைத் தொட்ட போதெல்லாம் அருவருப்புடன் நாசூக்காய் நழுவியவள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவளைத் தூக்கி நிறுத்தித் தழுவிக்கொண்டாள். அவள் தோளில் திரும்பத் திரும்பத் தட்டிக்கொண்டே இருந்தாள். அவள் கண்களும் கலங்கி யிருந்தன.  கடைசியில் ஒருவாறு அவளது அழுகை நின்றதும் அவளைச் சிந்தியா தன் பிடியினின்று விடுவித்து அவளை உட்கார்த்தினாள்.  முன்பு போல் அவள் தன் கைகளை விலக்காதது அவளுள் பெரு மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது.

 

“கண்ணைத் தொடைச்சுக்க, ராதிகா.”

 

‘ஆணித்தரமான கேள்விகளாலும், குத்தலான குற்றச் சாட்டுகளாலும் இவளை அழ வைக்கும் நோக்கத்துடன் இங்கு வந்த நானே அழுது மாயவும், இவளால் அணைத்துக்கொள்ளப்பட்டுத் தேற்றப்படவும் ஆயிற்று! எல்லாம் உங்களால்தான், அப்பா.  ஏன், ஏன், ஏன் இப்படிச் செய்தீர்கள், அப்பா?’

 

“அய்ம் வெரி, வெரி சாரி, மேடம்.  இப்படி நடந்திருக்கக்கூடும்னு எனக்குத் தோணவே இல்லே! காதலிச்சுப் பதிவுத் திருமணமும் செய்துக்கிட்ட நீங்க ரெண்டு பேரும் ஏன் தொடர்ந்து கணவன் மனைவியா வாழல்லே?”

 

“அது ஒரு கதை மாதிரி இருக்கும், ராதிகா.  உனக்கு மொதல்லேருந்து சொல்றேன். உங்கப்பா மொதல்ல ஒரு பிரைவேட் கம்பெனியில க்ளார்க்கா இருந்தாரு.  அங்க நான் ஸ்டெனோவா யிருந்தேன். அப்பதான் எங்களுக்குள்ள பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டு அது லவ்வாக் கனிஞ்சிச்சு. ஒரு நாள் உங்கப்பா ஊட்டிக்கு எக்ஸ்கர்ஷன் மாதிரி போலாம்னு கூப்பிட்டாரு. அவரும் நானும் மட்டுந்தான்னு அவர் சொன்னதும், ‘கல்யாணத்துக்கு முந்தி ஹனிமூன் போற வேலையெல்லாம் வேணாம், அதெல்லாம் கல்யாணத்துக்குப் பெறகுதான்’னு கண்டிப்பாச் சொல்லிட்டேன். தான் ஒரு கிறுஸ்துவப் பொண்ணைக் கலியாணம் கட்டுறதுக்கு வீட்டில சம்மதிக்க மாட்டாங்கன்னும், அதனால அவங்களுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிடலாம்னும், அப்பால சமயம் பாத்து விஷயத்தை அவங்க கிட்ட சொல்லிக்கலாம்னும் யோசனை சொன்னாரு. எனக்கு அம்மா-அப்பா கிடையாது. எங்கத்தைதான் என்னை எடுத்து வளத்தாங்க. உங்கப்பா கிறிஸ்டியனா மாறணும்னு அவங்க வற்புறுத்தினாங்க.  அது நியாயமா எனக்குப் படல்லே.  உங்கப்பாவுக்கும் அது சம்மதமாயில்லே. எங்கத்தையை அது பத்திச் சந்திச்சுப் பேச உங்கப்பா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்தாரு. அத்தை கொஞ்சங்கூட இறங்கி வர்றதா யில்லே. கடைசியில நான் ஒரு யோசனை சொன்னேன். ரெஜிஸ்டர்ட் மேரேஜ் பண்ணிக்கலாம்னு. அதுக்குப் பதிலா உங்கப்பா எனக்குத் தாலி கட்டிடறேனேன்னாரு. எம்மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்டாரு.  ஆனா எங்கத்தையும் சரி, நானும் சரி அதுக்கு ஒத்துக்கல்லே. நான் செஞ்சதுதான் சரின்னு இப்ப தோணுது. வெறும் தாலி மட்டும் கட்டியிருந்தாருன்னா, நாந்தான் உங்கம்மாவுக்கும் முன்னாடி உங்கப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன்றதை நிரூபிக்க முடிஞ்சிருக்காதில்லே? உன் சந்தேகத்தை என்னால போக்கவே முடிஞ்சிருந்திருக்காது…. அப்பல்லாம் நான் ரொம்ப அழகாயிருப்பேன்…” – இப்ப்டிச் சொல்லிவிட்டு, சிந்தியா வெட்கிச் சிவந்தாள்.

 

“ஏன்? இப்பவும் நீங்க அழகுதான்!” என்று கூறிவிட்டு ராதிகா இயல்பாய்ச் சிரித்தாள்.

 

“என் அழகைப்பத்தி நான் ஏன் சொல்றேன்னா – தற்பெருமைன்னு நினைச்சுக்காதே –  கடைசியில பதிவுத் திருமணத்துக்கு உங்கப்பா சம்மதிச்சுட்டாரு. அதுக்குக் காரணம் உங்கப்பாவை என் அழகு அந்த அளவுக்கு மயக்கி வெச்சிருந்துச்சுன்றதுக்காகச் சொல்ல வந்தேன்.  … கல்யாணம் பண்ணிக்கிட்டோம். … அப்ப உங்கப்பாவுடைய அம்மா திருச்சியில இருந்தாங்க. உங்கப்பா மாசா மாசம் அவங்களுக்குப் பணம் அனுப்பிக்கிட்டு இருந்தாரு. எங்க விஷயம் அவங்களுக்குத் தெரிய வந்துடக் கூடாதுன்றதுக்காக அவங்களை அங்கேயே தங்க வெச்சுட்டாரு.  ‘எப்படியும் ஒரு நாள் சொல்லித்தானே ஆகணும்’னு நான் கேட்டதுக்கு, ‘ இப்ப வேணாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்’ அப்படின்னுட்டாரு. நானும் சரின்னுட்டேன்.  எங்களுக்குக் கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல நான் கர்ப்பமானேன்.  ஆனா கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம்னு சொல்லி, என் மறுப்பையெல்லாம் காதுலயே போட்டுக்காம, அதைக் கலைக்கவெச்சுட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சு ரெண்டாந்தடவை கன்சீவ் ஆனப்பவும், எனக்குத் தெரியாம, எதையோ பால்ல கலந்து என்னைக் குடிக்க வெச்சு அதையும் கலைச்சுட்டாரு. எனக்குக் கோவமான கோவம். … கொஞ்ச நாள் கழிச்சு அம்மாவைப் பாத்துட்டு வர்றேன்னு திருச்சிக்குப் போனாரு.  ஏன்னா அவங்க புறப்பட்டு வந்துடக்கூடாதேன்ற பயம் அவருக்கு. ஒரு மாசம் போல இருந்துட்டுத் திரும்பி வர்றப்ப, உங்கம்மாவோட வந்தாரு….அந்த விஷயம் உடனே எனக்குத் தெரிய வரல்லே. ஒரு தனி வீடு பாத்து, எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுத்தான் திருச்சிக்கே போயிருந்திருக்காரு. அவரோட அம்மா – உங்க பாட்டி – ஏற்கெனவே உங்கப்பாவோட சம்மதத்தோட பாத்து வெச்சிருந்த பொண்ணாம் உங்கம்மா!  தவிர உங்க பாட்டி ஹார்ட் பேஷண்ட்டாம். ஒரு விதவையா யிருந்தும் ரொம்பக் கஷ்டப்பட்டு உங்கப்பாவைப் படிக்க வெச்சிருந்திருக்காங்க. ஒரு கிறிஸ்துவச்சியைக் கல்யாணம் பண்ணிக்க இருக்கிறதைத் தெரிவிக்கவோ, பண்ணிக்கிட்ட பெறகு அதை அவங்க கிட்ட சொலறதுக்கோ அவருக்குத் தைரியம் வரலையாம்!  இதையெல்லாம் பின்னால ஒரு நாள் எனக்குச் சொன்னாரு. மொத்தத்துல ஏமாத்தப்பட்டவ நாந்தான்! அப்பால, உங்கம்மாவும் ஏமாந்துட்டாங்கதான்!  நான் மறுக்கல்லே. ஆனா ஏமாந்த வரிசைப்படி நாந்தான் சீனியர்! இதுக்கு இடையில எங்கத்தை இறந்துட்டாங்க.  ஒரே ஆஃபீஸ்ல் இருக்கிற அவஸ்தையைத் தவிர்க்கிறதுக்காக நான் வேற வேலை தேடிக்கிட்டேன்.”

 

“கொஞ்ச நாள் கழிச்சு அவரும் கவர்ன்மென்ட் உத்தியோகத்துக்குப் போனாரு. நிறைய எக்ஸாம்ஸெல்லாம் எழுதி இப்ப சீனியர் க்ளாஸ் ஒன் ஆஃபீசராயிட்டாரு. உங்கம்மாவைக் கல்யாணம் கட்டிக்கிட்ட பெறகு ஒரு ஆறு மாசம் போல் என்கிட்ட வராம இருந்தாரு. அப்பால வரத் தொடங்கினாரு. நிறைய சண்டை யெல்லாம் போட்டேன்.  நான் நினைச்சிருந்தா கம்ப்ளெய்ன் பண்ணி அவரோட வருங்காலத்தையே நாசமாக்கியிருந்திருக்க முடியும்.  ஆனா நான் அப்படியெல்லாம் அற்பமா நடந்துக்கல்லே. ஏன்னா என்னோட லவ் உண்மையான லவ்!…சரி. அதெல்லாம் கிடக்கட்டும்…. ஹ்ம்… என்னைப்பத்தின உன் தப்ப்பிப்பிராயத்தைப் போக்கிட்டேன்னு நினைக்கறேன். … இன்னும் என்ன கேக்கணுமோ, கேளும்மா!”

 

“நான் கேக்க வேண்டிய ஒரே விஷயம் – உங்க மன்னிப்புத்தாங்க!”

 

“சேச்சே. விடும்மா… உன் மேல எந்த்த் தப்பும் இல்லே.”

“அப்புறம் ஏன் வேலையை விட்டுட்டீங்க?”

 

“எங்கத்தை எனக்கு நிறைய சொத்து வெச்சுட்டுச் செத்துப் போனாங்க. அவங்க காலமானதுக்குப் பெறகும் நான் கொஞ்ச நள் வேலை பாத்தேந்தான். ஆனா, அதுக்கு அப்புறம் உபயோகமா ஏதாச்சும் பண்ணணும்னு தோணிச்சு.  அதான், அநாதை விடுதி தொடங்கினேன்.  நல்லாப் போயிட்டிருக்கு.  ஏதோ நம்மளால ஆனது…”

 

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

 

“உங்கப்பா கிட்ட இதையெல்லாம் பத்தி விலாவாரியாப் பேசி அவரைத் துன்புறுத்தாதேம்மா.  ஆம்பளைங்க அம்புட்டுத்தான்.  ஒரு புகழ்பெற்ற ஆங்கிலப் பெண் எழுத்தாளர் சொன்னாங்க ஒரு தரம்  – தாய்மைங்கிற பதவியையும், பேற்றையும் அடையறதுக்காகத் தவிர, வேற எதுக்காகவும் இந்த ஆம்பளைங்க நமக்குத் தேவையே இல்லே!  அந்த ஒண்ணுக்காகத்தான் அவங்களைக் கட்டிக்கிட்டு நாம அழ வேண்டியிருக்கு’ அப்படின்னு! அது முழுக்க முழுக்க உண்மைம்மா! நீயும் வாழ்க்கையில அடிபட்ட பெறகு புரிஞ்சுப்பே.”

 

“அதான் வாழ்க்கையைத் தொடங்குறதுக்கு முந்தியே ராகேஷ் மூலமாத் தெரிஞ்சுக்கிட்டேனே! … ஆனா, ஆம்பளைங்களும் இதே வார்த்தைகளை நம்மைப் பத்திச் சொல்ல்லாமில்லே?”

“சொல்ல்லாந்தான்.  ஆனா அது வெறும் போட்டா போட்டித் தர்க்கத்துக்காகச் சொல்றதா மட்டுமே இருக்கும். அதுல உணமை இருக்காதும்மா. ஏதோ கொழந்தை பெத்துக்குறதுக்காக மட்டுந்தான் பொம்பளைங்க தேவைன்னா, உலகத்துலெ இத்தனை விபசாரிகளை ஆண்கள் உலாவ விட்டிருக்க மாட்டாங்கதானே! தாய்மைங்கிற மாதிரி ‘தந்தைமை’ ங்கிறதுக்காக மட்டுமே அவங்க வாழ்ந்தாங்கன்னா, நீ கொஞ்ச நேரத்துக்கு முந்திச் சொன்னியே ‘கான்குபைன்’ அப்படின்னு ஒரு வார்த்தை. அது மாதிரியான வைப்பாட்டிகளைத் தேடிக்கிட்டு ஆம்பளைங்க போக மாட்டாங்க. சின்ன வீடுகளும் இருக்காது. அவங்களைப் பொறுத்த வரையில, கல்யாணம்கிறது குழந்தை பெத்துக்கிறதுக்காக மட்டுந்தான்கிறது பச்சைப்பொய்! உங்கப்பா மேல உள்ள வெறுப்பில இப்படியெல்லாம் பேசறேன்னு நினைக்காதே. நிறையப் பாத்துட்டேன்.  என்னோட விடுதியில இருக்கிற ஒவ்வொரு பொண்ணும் ஒரு சோகம்! இந்த உலகத்துத் துன்பங்கள் எல்லாத்துக்கும் ஆண்களுடைய காமம்தான் அடிப்படைக் காரணம்…அது இழுக்கிற வழியில எல்லாம் கணடபடி சுத்திட்டு, உடம்புல இருக்கிற ஜீவனெல்லாம் வத்திப் போனதும் – சிவப்பு அணுக்கள் செத்துப் போனதும் – பெரிய ஞானிகள் மாதிரி, ‘பெண்ணாகி வந்த்தொரு மாயப் பிசாசம்’ னு பாட்டெல்லாம் எழுதுவானுக.  தங்கள் கிட்ட இருக்கிற பேயை அடக்க முடியாம, கண்டமேனிக்குச் சுத்தித் திரிஞ்சு உடம்பைக் கெடுத்துக்கிட்டதுக்கு அப்புறம், பொம்பளையைப் பிசாசுன்னு திட்டுவானுக. இதைச் சுட்டிக்காட்டுற என்னைய மாதிரிப் பொண்ணுகளைப் பெரும் பிசாசுன்னுவானுக!”

 

மீண்டும் இருவரிடையேயும் ஒரு பேசாமை விளைந்தது.

 

“நீ காலேஜ்ல எத்தனை மணிக்கு இருக்கணும்?”

 

அப்போதுதான் சுவர்க்கெடியாரத்தை நோக்கிய ராதிகா, “மை காட்! ரொம்ப லேட் ஆயிடிச்சு. எனக்கு மனசும் சரியா இல்லே.  அதனால நான் காலேஜுக்கு இன்னைக்குப் போக வேணாம்னு நினைக்கறேன். வீட்டுக்கே போயிடறேன்.”

 

“வீட்டுக்கு எதுக்குப் போறே, ராதிகா? நானும் இன்னைக்கு ஹோமுக்குப் போறதாயில்லே. சாயந்தரம் வரைக்கும் இங்கேயே இரேன்.  இங்கேயே சாப்பிடலாம்.“

 

“இல்லீங்க.  நான் கெளம்பறேன்…” என்று எழுந்த ராதிகாவின் தோள்களைப் பற்றி அழுத்தி அவளைச் சிந்தியா உட்காரவைத்தாள்.

 

“ராதிகா! இப்ப உண்மையைச் சொல்லும்மா.  இப்பவும் நீ என்னை வெறுக்கிறயா?”

 

ராதிகாவின் விழிகள் உடனே நிறைந்தன.  “என்னோட வெறுப்புக்குரிய முதல் ஆளு எங்கப்பா.  அடுத்தது, ராகேஷ்! நீங்க ஒரு ஜெம், சிந்தியா மேடம்!”

 

“சரி, சரி. ரொம்பவும் புகழாதே… நான் நல்லாவே சமைப்பேன்னு சொன்னா, பெருமையடிச்சுக்கிறதா நினைக்க மாட்டேதானே?”

 

ராதிகா பதில் சொல்லாதிருந்தாள்.

 

“அழுததனால உன் முகமெல்லாம் வீங்கினாப்ல இருக்கு. கண்ணும் இடுங்கி இருக்கு. அதனால, நீ இந்தக் கோலத்துல வீட்டுக்குப் போனா, உங்கம்மாவுக்கு இல்லாத பொல்லாத சந்தேகமெல்லாம் வரும்.  அதனால சாயங்காலம் போய்க்கலாம்!”

 

“எங்கப்பா இங்க வர்றதுக்கு முன்னால கெளம்பிப் போயிடறேன்.”

 

“சரி…. அவரு ஆறு மணிக்குத்தான் வருவாரு. …”

 

“நானும் கிச்ச்ன்ல உதவி பண்றேன்.  அதுக்குச் சம்மதிச்சா, இங்க சாப்பிடுவேன்…”

 

“சமையலெல்லாம் முடிச்சாச்சும்மா. முடிச்சுட்டு எல்லாத்தையும் ஹாட்பேக்ல மூடி வெச்சிருக்கேன். அதனால உனக்கு எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடலாம்.!” என்ற சிந்தியா எழுந்து உள்ளேபோனாள்

–              தொடரும்

jothigirija@live.com

 

Series Navigationபு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழாதேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *