ஒரு விடுமுறையில் தமிழகம் சென்றிருந்தேன். அப்போது மகாபலிபுரம் சென்று நிதானமாக சுற்றிப் பார்க்க விரும்பினேன்.
நான் கல்கியின் ” சிவகாமியின் சபதம் ” நாவலை விரும்பி திரும்பத் திரும்ப பலமுறைகள் படித்து மகிழ்ந்திருந்ததால் மகாபலிபுரம் மீது அதிகமான ஈர்ப்பு உண்டானது.
முதலில் கடற்கரைக் கோவில் சென்றேன். சுற்றுச் சுவர்கள் சரிவர பராமரிக்கப் படாவிடினும், அதன் பழமையிலும் தனி அழகைக் கண்டேன். கோவிலின் அழகிய அமைப்பும், அருகில் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பும் அதன் சரித்திரத்தைக் கூறுவது போன்றிருந்தது. சிவகாமியின் சபதத்தில் இந்த கோவில் பற்றி கல்கி ஏன் எழுதவில்லை என்ற எண்ணமும் தோன்றியது.
மகேந்திரப் பாறையில் செதுக்கப்பட்டுள்ள அபூர்வ சிற்பங்களைக் கண்டு பிரமித்த நிலையில் வீடியோவில் பதிவு செய்து கொண்டேன்.
ஒரே பாறையில் குடைந்து செதுக்கியுள்ள குகை மண்டபத்தில் உட்கார்ந்து இளைப்பாறியபோது பல்லவ சிற்பிகளின் கலைத் திறனை எண்ணி வியந்தேன். இதே மகாபலிபுரத்தின் எழில்தானே அன்று கல்கியையும் அந்த மாபெரும் காவியத்தை எழுத வைத்திருக்கும் என்றும் எண்ணிக்கொண்டேன்.
வீதியின் மறு பக்கத்தில் சிற்பக் கூடங்கள் வரிசை வரிசையாக இருந்தன. அங்கு சென்று பார்த்தேன். சிற்பிகள் பாறைகளில் உளியால் செதுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் கைவண்ணத்தில் அந்த உயிரற்ற பாறைகள் கொஞ்சங்கொஞ்சமாக உயிர் பெறுவது தெரிந்தது. சிற்பக் கலைக்கு பொறுமை மிகவும் தேவை என்பதும் தெரிந்தது. அதோடு மிகவும் நிதானமும் தேவை என்பதும் உண்மை. கொஞ்சம் தவறி பாறை உடைந்து விட்டால் அதை மீண்டும் ஒட்ட முடியாது.
அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த சிற்பிகளிடம் பேசியபோது அவர்கள் பரம்பரை பரம்பரையான சிற்பிகள் என்பதும் தெரிய வந்தது.
அதே வரிசையில் சிற்பங்கள் விற்கும் கடைகளும் இருந்தன.
கருங்கல், மரம், உலோகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதை வாங்குவது என்ற தடுமாற்றம் உண்டானது.
கண்களை மூடி தியானத்தில் இருந்த கருங்கல் புத்தர் சிலை ஒன்றை எடுத்துக்கொண்டேன். புத்தர் அரண்மனை வாசத்தையும், அன்பு மனைவியையும் துறந்து சந்நியாசி கோலம் பூண்டு ஏற்றத் தாழ்வு மிக்க சமுதாயத்தில் சமத்துவம் போதிக்க முயன்ற விதம் என்னைக் கவர்ந்திருந்தது. வெறும் போதனையுடன் நில்லாமல் அதன்படி வாழ்ந்து காட்டியவர் புத்தர்.
கனமான கருங்கல் சிலைதான். பிரயாணத்தின்போது கைப் பையில் தூக்கிச் செல்லலாம்.
வேறு எதை வாங்கலாம் என்று யோசித்து திரும்பினேன்.
தொலைவில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் என்னைப் பார்த்து சிரிப்பது போன்றிருந்தது! நான் அவரை நோக்கிச் சென்றேன். ஆம். அவர் சிரித்துக்கொண்டுதான் ஆடுகிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள அதே நடராஜரின் அச்சு.
நான் சிதம்பரத்தில்தான் பிறந்து வளர்ந்தவன். எனது முன்னோர்கள் வழிபட்ட கடவுள் அவர்.
அவரை உற்று நோக்கினேன். ” என்னையும் உன்னோடு கொண்டு போ . ” என்று சொல்வது போன்றிருந்தது. தூக்கிப் பார்த்தேன். புத்தாரைவிட நான்கு மடங்கு கனம். உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது. பளபளக்கும் தங்க நிறம்.
” இது என்ன உலோகம்? இவ்வளவு கனமாக உள்ளதே! ” விற்பனையாளரிடம் வினவினேன்.
” சார். இது ஐம்பொன் சிவன். ” என்றார்.
தங்கம், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையை ஐம்பொன் என்பது நான் அறிந்ததுதான்.
அதன் விலை பத்தாயிரம் ரூபாய் என்றார். நான் புத்தரை இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். அவர் வெறும் கருங்கல். ஆனால் இவரோ ஐம்பொன்! பேரம் பேசி ஒருவாராக எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். அதற்கான ரசீதையும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். ஒரு வேளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கோவில் சிலையை கடத்திச் செல்கிறேன் என்று எண்ணலாம் அல்லவா.
மகள் சில்வியா வீட்டில் பிரயாணப் பெட்டிகளை தயார் செய்தேன். இரண்டு பெட்டிகளை நூல்கள் அடைத்துக்கொண்டன. கைப்பையில் புத்தரையும் சிவனையும் கச்சிதமாக வைத்துத் தந்தார் மருமகன் குமரன்.
அன்று நள்ளிரவில் புத்தரும் சிவனும் பிரயாணச் சீட்டு இல்லாமலேயே என்னுடன் விமானத்தில் பயணம் செய்தனர்!
வீடு திரும்பியதும் முதல் வேலையாக புத்தரை என்னுடைய படிக்கும் அறையில் மேசை மீது வைத்தேன். தாண்டவமாதும் சிவனை ஹாலில் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்தேன்.
அதன் பின்புதான் பிரச்னை எழுந்தது.
சிவனைப் பார்த்த சில உறவினர்கள் முகம் சுளித்தனர்.
” இதை ஏன் கொண்டு வந்தீர்கள்? ” இப்படிக் கெட்டவர் என்னுடைய மூத்த மைத்துனர் இயேசுதுரை.
” இதைக் கும்பிட நான் கொண்டு வரவில்லை. கலை அம்சத்திற்காக கொண்டு வந்துள்ளேன். இது நான் பிறந்த ஊரான சிதம்பரத்தை நினைவு படுத்தும். ” நான் சமாளித்தேன்.
அநேகமாக அனைத்து கிறிஸ்துவ உறவினரும் நண்பர்களும் அது பற்றி ஏதாவது கேட்கத்தான் செய்தனர். நான் அது பற்றி கவலை கொள்ளவில்லை.
என் நண்பர் ஒருவரிடம் அது பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டேன்.
” ஆமாம். பொதுவாக சிவனை வீட்டின் நடுவில் வைத்திருந்தால் வீடு ஆட்டம் கண்டுவிடும். ” அவர் திட்டவட்டமாகக் கூறினார். அவர் ஒரு ஹிந்து.
எதற்கு வீண் வம்பு என்ற எண்ணத்துடன் சிவனை அங்கிருந்து அகற்றி அவரையும் எனது படிக்கும் அறையில் புத்தரின் பக்கத்தில் வைத்துக்கொண்டேன்.
நான் ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தரைத் துடைத்து
பளபளக்கச் செய்வேன். சிவனுக்கு உலோக பாளிஸ் போட்டு மின்னச் செய்வேன்.
வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பூக்கள் அப்போது நிறைய பூத்திருந்தன. அவற்றில் சிலவற்றைப் பறித்து புத்தருக்கும் சிவனுக்கும் வைத்து அழகு பார்த்தேன். ஆனால் நான் அவர்களை வணங்கவில்லை. நான் அனைத்தையும் கலைக் கண்களுடன்தான் பார்த்தேன். ஆனால் மற்றவர் கண்களுக்கு இது சந்தேகத்தை உண்டுபண்ணிவிட்டது.
மற்றவர் என்பது வேறு யாரும் இல்லை. அவள் என் மனைவிதான். புத்தர் பற்றி அவள் ஏதும் சொல்லவில்லை. ஆனால் சிவனை அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவரை யாரிடமாவது கொடுத்துவிடச் சொன்னாள். நான் மறுத்துவிட்டேன்.
நல்ல வேளையாக அந்த நேரம் பார்த்து என்னுடைய பால்ய நண்பன் செல்வன் தாய்லாந்திலிருந்து வந்து சேர்ந்தான்.
அவன் பிறப்பால் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவன். ( நான் அதிலிருந்து பிரிந்து வந்த சீர்திருத்த்தச் சபையைச் சேர்ந்தவன் – தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபை )
ஆனால் அப்போது அவன் சிவபக்தன்! திருவண்ணாமலை சிவ ஆலயம் சென்றபோது சிவபெருமானின் தரிசனம் கிடைத்து அன்றிலிருந்து சிவபக்தனாக மாறிவிட்டான். கைலாஷ் வரை யாத்திரையும் சென்று வந்துள்ளான்.
அவன் சிங்கப்பூரில் என்னோடு வளர்ந்தவன். சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் ( Political Science ) பட்டம் பெற்றவன். அவன் ஆங்கில எழுத்தாளன். சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ பற்றி ஒரு ஆங்கில நூல் எழுதி மலேசியாவில் பத்தாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன! ( அது சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுவிட்டது ).
ஒரு கத்தோலிக்க கிருஸ்துவன் சிவனை வழிபடுவது வினோதமே. ஆனால் அவன் அதோடு நிற்கவில்லை. புத்தரைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால்தான் தாய்லாந்து சென்று ஒரு புத்த மடத்தில் பல மாதங்கள் தங்கி புத்த பிக்குகளின் வாழக்கை முறையை அறிந்து வந்துள்ளான் ,
செல்வன் உண்மையான கடவுளை தேடி இன்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவன். மதங்களைப் பற்றி நிறைய படித்து வாதிடுபவன்.
என் நண்பன் மீது மனைவிக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு.
அவளை நான் பெண் பார்த்தபோது அவனும் இன்னொரு பால்ய நண்பனான நா. கோவிந்தசாமியும் ( அவன் சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளனும் கணினித் தந்தையுமாவான். அவன்தான் உலகில் முதன்முதலாக தமிழில் விசைப் பலகையை கண்டு பிடித்தவன். அவன் இப்போது உயிருடன் இல்லை )
பெண்ணைப் பார்த்ததும் , ” அழகான இளம் பெண் ” என்று செல்வன் வர்ணித்தான் . அப்போது அவளுக்கு வயது பதினெட்டு . என் வயது இருபத்தெட்டு.
செல்வன் வந்தது எனக்கு சாதகமானது.
அறைக்குள் நுழைந்த அவன் சிவனைப் பார்த்து பிரமித்து நின்றான்.
” என் அப்பன் எப்போது இங்கே வந்தார்? ” என்னைப் பார்த்து கேட்டான். இரு கரம் கூப்பி அவரை வணங்கினான்.
நான் மகாபலிபுரம் பற்றி கூறினேன்.
” இவரும் இங்கு வந்துள்ளாரா? இவரிடம் இருந்துதான் இங்கே வந்தேன். இங்கும் இவர் உள்ளாரே? ” புத்தரைப் பார்த்துக் கூறினான்.
அன்று இரவு விடிய விடிய அவன் சிவன் பற்றி விளக்கம் தந்து கொண்டிருந்தான்.
சைவ சித்தாந்தம், ஓம் என்பது பற்றியெல்லாம் விளக்கம் கூறினான். ஒரே மதத்தைப் பற்றி மட்டும் தெரிந்திருப்பது போதாது, அனைத்து மதங்கள் பற்றியும் அறிந்திருப்பது நல்லது என்றான்.
அவன் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்ட நான் சிவனை ஒரு கலைப் பொருளாகத்தான் கொண்டுவந்துள்ளேன் என்பதையும், அவர் சிதம்பரத்தின் சின்னம் என்பதையும் கூறினேன். அவன் அது பற்றி கவலை கொள்ளவில்லை. சிவன் தன்னை எவ்வாறு அழைத்து தன் வசமாக்கினார் என்பதையே திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தான்.
நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதை என் மனைவியும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பாள். நான் வேலைக்குச் சென்றபோது அவளிடமும் அவன் சிவன் பற்றிதான் பேசிக்கொண்டிருப்பானாம். எனக்கு அது கேட்டு உள்ளூர மகிழ்ச்சிதான்.
இவ்வாறு சிவபக்தன் செல்வன் என்னுடன் ஒரு வாரம் கழித்துவிட்டு மெர்சிங் கடற்கரையிலுள்ள தன்னுடைய குடிலுக்குச் சென்றுவிட்டான். அங்குதான் அவன் தனிமையில் இரவு பகலாக ஆங்கில நூல்களில் மூழ்கிக் கிடந்தான்.
கொஞ்ச நாட்கள் புத்தரும் சிவனும் என்னுடைய அறையில் எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் இருந்தனர். புத்தர் அதே தியான நிலையில். சிவன் அதே ஆனந்த தாண்டவ நிலையில்!
ஆனால் அந்த நிம்மதி நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.
வீட்டிலும் குடும்பத்திலும் எழும் சிறு சிறு பிரச்னைகளும் சிவனின் தலையில் விழுந்தது. அவரை யாரிடமாவது தந்துவிடுமாறு என் மனைவி நச்சரித்தாள்.
நான் புத்தரைப்போல் அமைதி காத்தேன். சிவனாரோ எது பற்றியும் கவலை இன்றி தொடர்ந்து இடது காலைத் தூக்கியவண்ணம் ஆடிக்கொண்டிருந்தார்.
அப்போது பார்த்து சிங்கபூரிலிருந்து என்னுடைய பால்ய சிநேகிதி லலிதா கணவருடன் வருகை தந்தாள். சிவனைப் பார்த்ததும் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது.
” உனக்கு வேண்டாம் என்றால் எனக்கு தந்துவிடு .” என்று அவள் என்னிடம் சொன்னபோது நல்ல வேளையாக மனைவி அருகில் இல்லை. இருந்திருந்தால் அன்றே சிவன் அவளுடன் சிங்கப்பூர் சென்றிருப்பார்!
ஒரு நாள் நிலமை விபரீதமானது. அன்று மனைவிக்கும் எனக்கும் சண்டை பெரிதாகிவிட்டது. என்றுமே கோபப்படாத நான் அன்று நிலை தடுமாறிவிட்டேன்.
அந்த கோபத்தில் ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்த சிவனைத் தூக்கி காரில் வைத்துக்கொண்டு வேகமாக வீட்டை விட்டு புறப்பட்டேன்.
உள்ளூரில் எனக்கு இன்னொரு தோழி இருந்தாள். அவளும் என்னிடம் கேட்டிருந்தாள். அவளிடமே சிவனைத் தந்துவிடலாம் என்றுதான் கிளம்பினேன்.
எனது வீடு ஒரு மலை மீது அமைந்திருந்தது. கீழே செல்லும் வீதி வலது பக்கம் வளைந்து சென்று பிரதான வீதியை அடையும். வேகமாகச் சென்ற நான் அங்கு காரை வளைக்காமல் நேராகச் சென்றுவிட்டேன். அடுத்த நிமிடம் டமார் என்ற ஓசையுடன் எதிரே நின்ற கனரக வாகனத்தின் மீது மோதி நின்றது. ஒரு கணம் நான் நிலை தடுமாறி அதிர்ச்சியில் நினைவிழந்தேன்.
விழித்துப் பார்த்தபோது அருகில் என் வீட்டுக்குப் பின்புறம் வாழும் சீன நண்பர் நின்று கொண்டிருந்தார்.
என்னுடைய வலது கையில் அடிபட்டு வீங்கி வலித்தது. நெற்றியில் இரத்தம் வழிந்தது.
சிரிது நேரத்தில் காரை இழுத்துச் செல்ல பழுது பார்க்கும் ஆட்களும் காவல் துறையினரும் வந்து விட்டனர்.
சீன நண்பர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எக்ஸ்ரே படத்தில் எலும்பு முறிவு தெரிந்தது. மாவுக் கட்டு போட்டுக்கொண்டு இரண்டு வார மருத்துவ விடுப்புடன் வீடு திரும்பினேன்.
மறு நாள் காலையில்தான் கார் பட்டறைக்குச் சென்றேன். அதன் முன்பக்கம் பரிதாபமாக நொறுங்கியிருந்தது. முன் இருக்கையில் வைத்திருந்த என்னுடைய சிவனைக் காணவில்லை!உள்ளே நுழைந்து இருக்கைகளின் அடியில் தேடினேன்.
அங்கு அவர் படுத்த நிலையில் ஆடிக்கொண்டிருந்தார்.
ஆனந்தம் அடைந்தவனாக அவரைத் தூக்கிக் கொண்டேன். நண்பரின் காரில் மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம். எங்களைப் பார்த்த மனைவி ஏதும் சொல்லவில்லை.
இன்றும் என்னுடைய சிவன் என் அறைக்குள் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டுதானிருக்கிறார்!
( முடிந்தது )
- நீங்காத நினைவுகள் – 19
- மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
- மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு
- சிலை
- அழகிப்போட்டி
- நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’
- திண்ணையின் இலக்கியத்தடம்-4
- புகழ் பெற்ற ஏழைகள் - 28
- ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்
- அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”
- அத்தம்மா
- டௌரி தராத கௌரி கல்யாணம் …22
- பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.
- தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !
- கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்
- அவசரகாலம்
- நீண்டதொரு பயணம்
- கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
- தேடுகிறேன் உன்னை…!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1
- புண்ணிய விதைகள் – சிறுகதை
- காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
- சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை
- பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
- தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
- காதலற்ற மனங்கள்
இந்த வ்யாசத்தை வாசித்ததும் எனக்கு ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்களின் நினைவு வந்து மனது நெகிழ்ந்தது. வந்தனங்கள் ஸ்ரீமான் ஜான்சன்.
\ சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள அதே நடராஜரின் அச்சு. நான் சிதம்பரத்தில்தான் பிறந்து வளர்ந்தவன். எனது முன்னோர்கள் வழிபட்ட கடவுள் அவர். \
நான் ஏன் இங்கு ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்களை நினவு கூர்ந்தேன் அவர் யார் என நீங்கள் அறிய விழையலாம். அவகாசம் இருந்தால் நான் எழுதிய இரு பாகங்களாலான தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான வ்யாசத்தை வாசிக்கவும். சுட்டிகள் :-
http://www.tamilhindu.com/2013/04/hindutva-transcending-religion-1/
http://www.tamilhindu.com/2013/04/hindutva-transcending-religion-2/
\ இன்றும் என்னுடைய சிவன் என் அறைக்குள் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டுதானிருக்கிறார்!\
அருமை. பாவ க்ராஹி ஜனார்த்தன: – இறைவன் உகந்து மகிழ்வது அடியாரின் மனோபாவங்களை (manobhAvam) என்று வசனம்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் உரிய இறைவா போற்றி
தாங்கள் புத்தரைப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். போதம் (ஞானம்) அடைந்த போதிசத்வர்கள் பல கோடி என பௌத்த சாஸ்த்ரங்கள் குறிப்பிடுகின்றன. மஹாயான / வஜ்ரயான பௌத்தத்தில் ( எனக்குப் பரிச்சயமான) பௌத்த த்ரயர்கள் என ஆர்ய அவலோகிதேஸ்வரர், மஞ்சுஸ்ரீ மற்றும் மைத்ரேய (எதிர்கால பௌத்தர்) புத்தரை ப்ராதான்யமாகக் கொண்டாடுவர்.
அதில் ஆர்ய அவலோகிதேஸ்வரர் பற்றி கரந்தவ்யூஹ சூத்ரம் (என்ற பௌத்த சாஸ்த்ரம்) சொல்லும் அழகான சூத்ரம் :-
ந தேவா: அபி து மானுஷோஹம் போதிஸத்வபூத:
ஏவம் ஹீன தீனானுகம்பகோ போதிமார்க்கம் உபதர்சக:
தேவனில்லை மனுஷ்யன் யான்; போதிசத்வனாக ஆனேன்
தாழ்ந்த மற்றும் தீன தசையில் இருக்கும் மக்களுக்கு போதிமார்க்கத்தை உபதேசிப்பதன் மூலம்
அருமையன பகிர்வு.
ஜான்சன் ஸார்! சிவனுக்கும் சக்திக்கும் இடையில் நீங்கள் பட்ட பாடு படிக்க சுவையாக இருந்தது.உங்கள் சக்தி (மனைவி) யின் பேச்சைக்கேட்டு சிவனை புறக்கணித்ததால் அவர் ஆட்டத்தை ஆரம்பித்து உங்களையே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டார். சிவனில்லையேல் சக்தி இல்லை!என்பதைக்கூறி இந்தப்பாட்டை பாடிக்காட்டுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்.
உண்டு என்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை.
இது சுவையான நல்ல வேடிக்கை பன்மதச் சிலைக் கதை. டாக்டர் ஜி. ஜான்சன் நடந்தால் கதை, பயணம் சென்றால் கதை, கார் ஓட்டினால் கதை, சண்டை போட்டால் கதை, காயம் பட்டால் கதை, தும்மினால் கதை, இருமினால் கதை.
டாக்டர் ஜி. ஜான்சனே ஒரு நடமாடும் நிஜக்கதை.
சி. ஜெயபாரதன்.
ஒருவேளை மஹாபலிபுரத்தில் சிற்பக்கடையில் புத்தர், சிவபெருமான் சிலைகளுக்குப் பதிலாக வேறிரு சிலைகள் கலைவண்ணத்தில் இருக்கக்கண்டு மருத்துவர் அச்சிலைகளை வாங்கிச்சென்றிருந்தால், அல்லது சிவபெருமானுக்குப்பதிலாக வேறொரு இந்துக்கடவுள் சிலையாக இருந்தால்…? கதை வேறுமாதிரி சென்றிருக்கும். குறிப்பாக அவை செகுலர் சிலைகளாக இருந்திருந்தால் எதிர்ப்புக்கள் வந்திருக்கா. மருத்துவரின் மனைவி இந்துவாக இருந்திருந்தால்…? கதையே இருக்காது.
நான் சொல்லவருவது, சிலையா கலையா? என்பதில் மருத்துவர் மனதில் குழப்பமில்லாதிருந்தால், அத்தெளிவை அவர் தன் மனையாளுக்குப் புரியவைத்திருந்தால், கதையே இல்லை. அவர் கலைதான் என நம்மிடம் சொன்னாலும் எனக்கு நம்பிக்கையில்லை. இரு தோணிகளில் காலைவைத்து பயணப்பட விழைகிறார்.
இவர் மனதில் குழப்பம் இவர் மனையாளையும் இழுத்துக் குழப்பு முயல்கிறது.
நடராஜர் சிலைகள் இசுலாமியர் வீடுகளிலும் – பெரும்பணக்காரர்களைச்சொல்கிறேன் – கண்டதுண்டு. அன்பளிப்பாகவும் கொடுக்கப்படுதலுண்டு. நம் இந்தியப்பிரதமரின் அலுவலகத்தில் நுழைந்தால் பெரிய நடராஜரின் சிலைதான் வரவேற்கும். அவர் ஒரு ட்வோட்டர் சீக்கியர்.
மனம் ஒரு குரங்கு. அதைக்கட்டிப்போட்டு விட்டால், நடராஜர் கலையாகத்தான் தெரிவார் நம் மருத்துவருக்கு.
அன்பு நண்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய ” சிலை ” தங்களை வெகுவாகக் கவர்ந்தது குறித்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அயாஸ் ரசூல் பற்றிய தங்களின் கட்டுரையை தமிழ் ஹிந்து தளத்தில் படித்துப் பார்க்கிறேன். நன்றி. அன்பன் ஜி. ஜான்சன்.
அன்பு நண்பர் ஷாலி அவர்களே. வணக்கம். உண்மைதான். சிவனும் சக்தியும் சேர்ந்து திட்டமிட்டு என்னையே மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர். இந்த கதையைப் படித்த சக்தி, ” சிவன் இன்னும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார் .” என்கிறாள். நான் உண்மையைச் சொல்கிறேன். நான் அவரை சிலையாகப் பார்க்கவில்லை. ..கலையாகத்தான் பார்க்கிறேன்…. டாக்டர் ஜி.ஜான்சன்.
அன்பு நண்பர் திரு சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கம். ” சிலை ” தங்களையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி. நீங்கள் கூறியுள்ளது முழுக்க முழுக்க உண்மையே. படைப்பாளர்களான நமக்கு நாம் காணும் அனைத்திலும் கதைகள் புதைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நமக்கு கற்பனைக்கும் என்றுமே பஞ்சமில்லை..நன்றி. அன்புடன் ஜி. ஜான்சன்.
திரு IIM கணபதி ராமன் அவர்களே. என்னுடைய மனத்தில் எந்த குழப்பமும் இல்லை. ஒரு சிலையை கலை அம்சத்துடன் வீட்டு ஹாலில் வைத்தால், அந்த வீடு ஆட்டம் கண்டுவிடும் என்று எதை வைத்துக் கூறுகிறார்கள் என்பதுதான் இன்னும் எனக்குப் புரியவில்லை….நன்றி. அன்புடன் ஜி.ஜான்சன்.
மத நம்பிக்கைகளுக்கு விஞ்ஞான விளக்கங்கள் பொதுவாக கூறப்படுவதில்லை. இந்துக்கள் பலவிதமான நம்பிக்கைகள் உடையோர். அவற்றுள் சிலபல விளக்கங்களுக்குட்படும். சிலபல படா. அப்படியே பட்டாலும் அதை தியாலாஜியன்கள் மட்டுமே புரிவர்; அவர்களுக்குள்ளே பேசிக்கொள்வர். சிலர் ஆர்வமிகுதியால் அறிய விழைவர்.
அப்படிப்பட்ட நம்பிக்கைகளுள் ஒன்றுதான் இது. வைணவத்தில் காடேகும் இராமனின் படத்தை வீட்டில் வைக்ககூடாது. நாடேகும் இராமனின் படத்தைத்தான் வைக்கலாம். அதாவது பட்டாபி இராமன். வீட்டு நிலைப்படியில் படங்களை மாட்டக்கூடாது. (பலர் செய்வதுண்டு), நரசிம்மரின் படங்களை வீட்டில் வைப்பதில்லை. சாந்த நரசிம்மர் இலக்குமியிடன் இருக்கும் படத்தை வைப்பர். பெருமாள் தனித்திருக்கும் படம் நல்லதன்று.. திருவாழ்மார்பனாகத்தான் இருக்கவேண்டும்.
சிலபடங்களோ சிலைகளோ கூடா என்பதெல்லாம் நம்பிக்கைகள். அதிலொன்றுதான் ஆடிய பாதம் நடராஜர் என்பது நீங்கள் எழுதியிலிருந்து தெரிகிறது.
அவர்கள் நம்பிக்கையை பற்றி நீங்களேன் சட்டை பண்ணுகிறீர்கள் என்பது புரியவில்லை என்று சொல்வதைக்காட்டிலும் இப்படிச்சொல்லலாம்;
“தெரியாதவரை பயமில்லை! தெரிந்தால் பயம்.”
Ignorance is bliss. Therefore, better to remain ignorant in such matters.
கடவுளை மறந்து நம்மை சிந்திப்பதற்கு எவரும் கற்றுக் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
நண்பர் சத்தியப்பிரியன்,
சத்தியமே கடவுள். பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய அணுவுக்கும் அணுவான, குறைபாடுள்ள கர்வம் பிடித்த மனிதனே பணிவின்றி எல்லாம் வல்ல இயற்கை அன்னையை நினைக்க மாட்டான்.
சி. ஜெயபாரதன்
//அந்த வீடு ஆட்டம் கண்டுவிடும் என்று எதை வைத்துக் கூறுகிறார்கள் என்பதுதான் இன்னும் எனக்குப் புரியவில்லை….நன்றி. அன்புடன் ஜி.ஜான்சன்.//
பொதுவாக வாஸ்து நிபுணர்கள் வீட்டில் எதை வைக்கலாம்,எதை வைக்கக்கூடாது என்று கூறும்போது, “ நடராஜரின் நடனம் உலக இயக்கங்களுக்காகத்தான் என்று கூறுவார்கள்.அனைத்து நடனக்கலைஞர்களின் வீடுகளிலும் நடராஜரின் உருவம் உள்ள சிலையோ,படமோ இருக்கும்.ஆனால் “தாண்டவ நிருத்ய” எனப்படும் நடனம் ஊழிக்காலத்தை அதாவது அழிவினை உணர்த்தக்கூடியது என்கின்றனர்.எனவே ஒரு காலைத் தூக்கி நடனமாடியபடி இருக்கும் நடராஜர் சிலையை வீட்டில் வைப்பது நல்லதல்ல என்கின்றனர்.எல்லா தெய்வச் சிலைகளும் கிழக்கு நோக்கியே வைக்கப்பற்றிருக்கும்.ஆனால் நடராஜர் சிலை மட்டும் தெற்கு நோக்கி வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.”
டாக்டர் ஸார்! உங்களுக்கு வாஸ்து பிரச்சினை இல்லையென்றால் சிவன் தோஸ்த்து தான்.
எதற்கும் கீழே உள்ளதை ஒருதரம் படித்துக்கொளுங்கள்.
II கொரி 6:14-17 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கார்ல் சாகன் என்ற இனத்தால், பிறப்பால் கிறிஸ்துவர் எழுதிய “காஸ்மாஸ்” புத்தகத்தில் தில்லை நடராஜர் சிலை படத்துடன் அற்புத விளக்கம் இருக்கிறது. கார்ல் சாகன், சிதம்பரத்திற்கு வந்துள்ளார். திரு.ஜான்சன் அய்யா ஒரு வேளை அப்புத்தகம் படித்திருக்கலாம், இல்லையெனில் படித்தால் இதற்கான பதில் கிடைக்கும்.
இன்னொரு அரசியல் கட்சிக்கு தன் கட்சி உறுப்பினர்கள் போவதை எப்படி ஒரு அரசியல் கட்சி வெறுக்குமோ, அதை விட ஆயிரம் மடங்கு தன்னுடைய சர்ச்சை சேர்ந்தவர் மற்ற மதத்துக்கோ வேறு பிரிவு சர்ச்சுக்கோ போவதை கிறுத்துவம் வெறுக்கிறது.
அதனை தடுப்பதற்காக மற்ற மதத்துக்காரர்களும், மற்ற சர்ச்சுகளும் சாத்தானின் வேலைகள் என்று அவர்கள் போதிப்பது வழக்கம்.
நடக்கும் நல்லதெல்லாம் ஆண்டவனின் கிருபை என்றும், நடக்கும் கெட்டதெல்லாம் சாத்தானின் கிருபை என்றும் கிறுத்துவம் போதிக்கிறது.
அதனால், மற்ற தெய்வ உருவங்கள், நூல்கள், அடையாளங்களால் கெட்டது நடக்கும் என்கிற அச்சத்தை கிறுத்துவம் உருவாக்கி விட்டது.
அச்சத்தை வைத்து மனிதரை அடிமையாக்கி வைத்திருக்கும் அரசியல் ஆக்கிரமிப்பு மதங்கள் ஆபிரகாமிய மதங்கள். மனித மனத்தின் பலவீனத்தை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை பயன்படுத்தி மனிதரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எந்த மதமும் பின்பற்றத்தக்கது இல்லை.
மனித மனம் கணிணி போன்றது. பதிவுகளின்படிதான் அது யோசிக்கும்.
உதாரணமாக, ஒரு சிலுவையில் சாத்தான் குடியேறி விட்டது என்று வீட்டில் சொல்லிப் பாருங்கள். அதன்பின் வீட்டில் உள்ளவருக்கு நடக்கும் பிடிக்காத விஷயங்களுக்கு எல்லாம் அந்தச் சிலுவைதான் காரணம் என்ற சந்தேகம் மனதில் ஏற்படத்தான் செய்யும்.
சிலுவையோ, சிவனோ, காபாவோ – மனதின் நினைவில் இருந்து பார்க்கப்படும்வரை பார்க்கப்படுவது மனதின் அச்சங்களும் ஆசைகளும்தான்.
அதனால்தான் மனதைத் தாண்டித்தான் இறையை அறிய முடியும் என்று ஹிந்து வேத நூல்கள் சொல்லுகின்றன.
மனதின் மூலம் பார்க்கப்படும் சிவனின் சிலையும் சிவன் இல்லை.
எனக்கு இசுலாத்தைப்பற்றித் தெரியாது. கிருத்துவத்தைப்பற்றியும் இந்துமதத்தைப்பற்றியும் ஓரளவு தெரியும். அதனடிப்படையில் சொன்னால் வனவாசி எனபவர் இங்கு எழுதியிருப்பது ஹாஃப் டுரூத்.
இந்துமதத்தில் அச்சுறுத்தல் நிறையவே உண்டு. ருத்ர தாண்டமாடும் சிவனும், மண்டையோடுகளிடன் அசுரனைக் காலில் போட்டு நசுக்கிக்கொள்ளும் காளியும் புலியின் மேலமர்ந்துவரும் துர்கையும் ஹம்சனின் குடலைக்கிழித்து மாலையாகக் காட்டும் நரசிம்மரும் அச்சுறுத்தல் என்பதற்கு எடுகோள்கள். நரபலி கொடுப்போர் மேற்சொன்ன காளி படங்களைவைத்தே செய்வர். இந்துமதத்தின் ஒரு பிரிவான தன்ட்ரிக் இந்துமதம் அச்சுறுத்தலை அடிப்படையாககொண்டது.
நாட்டார் தெய்வங்கள் – மாடன், புலையன், கருப்பசாமி, கொற்கை,- போன்ற்வை இந்துமதக்கடவுள்களே. அவர்கள் பயங்கர ஆய்தங்களின் தோன்றுவார்கள்.
மதுரையில் சுடுகாட்டில் காளி உதசவமுண்டு. மதுரை பாண்டிகோயில் கிடா வெட்டு உதசவம் விசேசமானது. கருப்பசாமிக்கு அருவாளும், சாராயமும்தான் படையலதான்.
சிவனின் மகன் சுடலைமாடன். சிவனுக்கு சுடலை என்ற பெயரும் உண்டு. இடுகாட்டில் உலாவும் பிசாசுகளையும் பேய்களையும் கட்டுப்படுத்தி மக்களைக்காப்பது இவர்கள் கடமை.
சதுக்கப்பூதம் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் நாட்டார் தெய்வம் இன்று முனியசாமி. இத்தெயவம், தெரு சந்திப்புக்களில் நின்று கெட்ட ஆவிகளைக் கொல்வது. சிலப்பதிகாரத்திலும் இத்தெயவம் காட்டப்படுகிறது.
வனவாசி, இந்துமதத்தின் ஒரு பிரிவைமட்டும் காட்டுகிறார். அனைத்தையுமே பார்த்தால் அவ்ர் கூற்று எவ்வளவு பொய்யென்று தெரியும்.
அச்சுறுத்தல் என்ற் பதமே வனவாசியால் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன இந்துத்தெய்வங்கள் மக்களை அச்சுறுத்தவில்லை. மக்களுக்கு இடர்தரும் கெட்ட சக்திகளை அழிக்க அவை ஏற்கும் வடிவங்களும் செயல்களும் பயங்கரமானவை என பார்வைக்குப்படும். அதாவது போலீசு வேலை. அதற்காக போலீசு மக்களை அச்சுறுத்துகிறதெனலாமா?
அதைப்போலவே கிருத்துவமதத்தையும் எடுத்துக்கொள்ளலாம். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்’ என்று விவிலியம் தொடங்குகிறது. இந்தப்பயப்படுத்தல் இறைவன் பயங்கரமானவன், நாமெல்லாரும் பயப்படவேண்டுமென்ற் பொருளில் கொள்ளப்படுவதில்லை. ஏனெனின் அதே விவிலியம் இறைவன் சாந்தமானவன், அன்பானவன் என்றெல்லாம் சொல்கிறதல்ல்வா? எனவே இந்த பயப்படுதல் என்பதன் பொருள்: (இசுலாமும் அப்படியே சொல்கிற்து. அதை இங்கு ஒரு இசுலாமியர் வந்து விளக்கவேண்டும்)
மனிதனால் முடிந்தது ஒரு எல்லை வரைதான். அதற்கப்பால ஒரு பரந்த வெளி இவ்வுலக்த்திலேயே உள்ளது. அவன் வாழ்க்கையிலும் உள்ளது. அவன் நாட்களோ சில. இப்படிப்பட்ட குறுகிய ஆயுளும் குறுகிய வலிமையும் உடைய மனிதன் தன்னை மாபெரும் சக்தியாக உருவகித்து ஆட்டம்போடுவது கூடாது. இறைவனே அவனை மனிதனின் சக்திக்கப்பால் பட்ட இடர்களிலுருந்து காப்பவன்”
இதை வலியுறுத்தும் வண்ணம் மனிதனுக்கு அடக்கத்தை காட்டும் வண்ணம் ‘பயப்படுதல்’ என்ற் பதம் எடுத்துக்கொள்ள்ப்படவேண்டும். இந்துப்புராணக்கதைகள் இப்படிப்பட்ட தன்னை ம்ஹாசக்தியாகக்கருதி ஆட்டம்போடும் மனிதர்களை அசுரர்களாக உருவகம் செய்து இறைவனால் தண்டிக்கப்பட்டதை நமக்குச் சொல்கின்றன. அதிலொன்றுதான் நரசிம்மரின் ஹம்சவதம்.
இஃது எல்லாமதங்களுக்கும் பொதுவானது. இந்துமதத்தில் ஞானிகளும் சித்தர்களும் யாக்கை நிலையாமை பற்றியும் குறைமனிதனும் குறைவட்டங்களைப்பற்றியும் நினைவுபடுத்தி இறைவனின்டம் தஞ்சமடைந்தால் நிலைபேறு பெறலாமென்றனர்.
மதங்களின் கருத்துக்களைச் சரியாகப்புரிந்துகொணடால் மட்டுமே நன்மை பெறலாம்.
திரு IIM கணபதி ராமன் அவர்களே, சாமி சிலைகளும் படங்களும் சிற்பியாலும் ஓவியானாலும் உருவாக்கப் படுபவை என்பதே உண்மை,. அவற்றை வீட்டிலும் கோவிலிலும் வைத்து வழிபடுவதும், பூஜைகள் செய்வதும் அவரவர் விருப்பம். அதனால் நான் அதைக் கண்டு பயப்படவில்லை. அதற்கு மாறாக அதை கலை அம்சமாகத்தான் பார்த்து வருகிறேன். நான் சீர்திருத்த கிறிஸ்துவ சபையைச் ( லூத்தரன் ) சேர்ந்தவன். நாங்கள் எங்கள் ஆலயங்களில் வெறும் சிலுவையைத் தவிட வேறு சிலைகளோ படங்களோ வைப்பதில்லை. சீர்திருத்தம் செய்த மார்ட்டின் லூத்தர் கோவில்களில் சிலைகள் வைக்கக் கூடாது என்றதோடு, சிலுவையையும் வணங்கக் கூடாது என்று போதித்தார். அதற்குக் காரணம் கடவுளால் மோசே மூலம் தரப்பட்ட முதலாம் கட்டளையாகும். அதோடு ” வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்க வேண்டாம் ” ( யாத்திராகமம் 34 : 17 ) என்ற வேத வசனமும் உள்ளது…. டாக்டர் ஜி. ஜான்சன்.
திரு சாத்தியப்பிரியன் அவர்களே, கடவுளை மறந்து நம்மை சிந்தித்தாலும் நம்முடைய உடலின் ஒவ்வொரு பாகமும் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை வளர்வதும், செயல்படுவதும், அனைத்து உறுப்புகளும் செயல்படுவது எப்படி என்று எண்ணும்போது கடவுளை நினைக்கவேண்டியுள்ளது…கருத்துக்கு நன்றி………..டாக்டர் ஜி. ஜான்சன்.
அன்புள்ள ஷாலி அவர்களே, எனக்கு வாஸ்து மீது நம்பிக்கை இல்லை. அதனால் பிரச்னை இல்லை. II கொரிந்தியர் 6 : 14 – 17 வசனங்கள் படித்து பார்த்தேன். மிக்க நன்றி . ஆம் . அதுவே உண்மை . நன்றி…..
டாக்டர் ஜி. ஜான்சன்.
திரு புனைப் பெயரில் அவர்களே, கார்ல் சாகன் எழுதிய ” காஸ்மாஸ் ” நான் படித்ததில்லை. என்னுடைய சிவபக்த நண்பன் செல்வன் நிச்சயம் அதை வைத்திருப்பான்.. அதை வாங்கி படித்துப் பார்க்கிறேன். நன்றி. டாக்டர் ஜி. ஜான்சன்.
திரு வனவாசி அவர்களே, கிறிஸ்துவ மதம் பற்றி தாங்கள் கூறியுள்ள கருத்து உங்களுடையதாக இருக்கலாம். அதுவே உண்மையாகி விடாது. நீங்கள் கிறிஸ்துவ மதத்தின் தீவிரவாதப் பிரிவினர் கூறுவதை வைத்து அனைத்து கிறிஸ்துவர்களும் அப்படிதான் என்று எண்ணுவது தவறு. கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைத் தத்துவமே அன்பும் மன்னிப்பும்தான். ஏசுவின் மலைப் பிரசங்கம் மகாத்மா காந்தி அவர்களையும் கவர்ந்ததாகும். இதை அவரே கூறியுள்ளார். பயத்தை உண்டுபண்ணும் மதம் அல்ல கிறிஸ்துவம். நீங்கள் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்று பாருங்கள். அங்கு பக்தர்களைப் பயமுறுத்தும் கோரமான உருவங்களைக் காண முடியாது. ” சிலை ” கதையை இலக்கியக் கண்ணோட்டத்துடன் பார்க்கவும். இங்கு மதம் பற்றிய சர்ச்சை வேண்டாம். எந்த மதம் சிறந்தது, எந்த கடவுள் உண்மையானவர் என்று முடிவு கூறும் அளவுக்கு நாம் யாருமே ஞானிகள் அல்லவே !. … டாக்டர் ஜி. ஜான்சன்.
hello! Just the same thing I would like to tell you as வனவாசி said.
இன்னொரு அரசியல் கட்சிக்கு தன் கட்சி உறுப்பினர்கள் போவதை எப்படி ஒரு அரசியல் கட்சி வெறுக்குமோ, அதை விட ஆயிரம் மடங்கு தன்னுடைய சர்ச்சை சேர்ந்தவர் மற்ற மதத்துக்கோ வேறு பிரிவு சர்ச்சுக்கோ போவதை கிறுத்துவம் வெறுக்கிறது.
அதனை தடுப்பதற்காக மற்ற மதத்துக்காரர்களும், மற்ற சர்ச்சுகளும் சாத்தானின் வேலைகள் என்று அவர்கள் போதிப்பது வழக்கம்.
நடக்கும் நல்லதெல்லாம் ஆண்டவனின் கிருபை என்றும், நடக்கும் கெட்டதெல்லாம் சாத்தானின் கிருபை என்றும் கிறுத்துவம் போதிக்கிறது.
அதனால், மற்ற தெய்வ உருவங்கள், நூல்கள், அடையாளங்களால் கெட்டது நடக்கும் என்கிற அச்சத்தை கிறுத்துவம் உருவாக்கி விட்டது.
அச்சத்தை வைத்து மனிதரை அடிமையாக்கி வைத்திருக்கும் அரசியல் ஆக்கிரமிப்பு மதங்கள் ஆபிரகாமிய மதங்கள். மனித மனத்தின் பலவீனத்தை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை பயன்படுத்தி மனிதரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எந்த மதமும் பின்பற்றத்தக்கது இல்லை.
மனித மனம் கணிணி போன்றது. பதிவுகளின்படிதான் அது யோசிக்கும்.
உதாரணமாக, ஒரு சிலுவையில் சாத்தான் குடியேறி விட்டது என்று வீட்டில் சொல்லிப் பாருங்கள். அதன்பின் வீட்டில் உள்ளவருக்கு நடக்கும் பிடிக்காத விஷயங்களுக்கு எல்லாம் அந்தச் சிலுவைதான் காரணம் என்ற சந்தேகம் மனதில் ஏற்படத்தான் செய்யும்.
சிலுவையோ, சிவனோ, காபாவோ – மனதின் நினைவில் இருந்து பார்க்கப்படும்வரை பார்க்கப்படுவது மனதின் அச்சங்களும் ஆசைகளும்தான்.
அதனால்தான் மனதைத் தாண்டித்தான் இறையை அறிய முடியும் என்று ஹிந்து வேத நூல்கள் சொல்லுகின்றன.
மனதின் மூலம் பார்க்கப்படும் சிவனின் சிலையும் சிவன் இல்லை.
Sarvam sivamayam
Subramaniam logan
Norway
திரு நார்வே சுப்ரமணியம்!
மருத்துவர் ஜாண்சன் சொன்னதைப்போல – மற்றும் நானும் சுட்டியதைப்போல – கிருத்துவம் பலபல பிரிவுகளைக்கொண்டது. இந்துமதமும் அப்படியே. தத்ரிக் இந்துமதத்தில்தான் நரபலியும் பிணத்தின் எலும்புகளைக் கடிக்கும் நாகாக்களும் உண்டு. உடலெங்கும் சாம்பலைப்பூசிக்கொண்டு அம்மணமாக நடந்து செல்லும் இவர்களை கும்பமேளாக்களில் காணலாம். நல்லவேளை இவர்கள் இன்று தமிழகத்தில் இல்லை. தந்திரிக் இந்து மதத்தை ஒரு சிலர் தவிர பிற இந்துக்கள் அணுகுவதே இல்லை. நாகாக்களை மட்டும் சொல்வதாக நினைத்துவிடாதீர்கள். நம்மூரிலும் கிடா வின் குரல்வலையை முதலில் கீறு போட்டு குருதியை உறிஞ்சுவார்கள். நள்ளிரவு, இடுகாடு அல்லது சுடுகாட்டிற்கு காவு போவார்கள், இப்படி எத்தனை எத்தனையோ பயங்கராமான செயலகளும் இந்துமதம்தான்- இவைகள் பிரிவுகளில் சில மட்டுமே. இவற்றைச்சுட்டிக்காட்டி இந்துமதமே பயங்கரமானது என்று சொல்ல்வீர்களா ? தவறுதானே? ஆனால் அதே தவறை இந்துமதம் என்றுவரும்போது வசதியாக மறந்துவிட்டு, கிருத்துவம் என்றுவரும்போது சுட்டிக்காட்டுவது எங்ஙனம்?
பயத்தைக்காட்டி மிரட்டி மக்களை அடக்கும் கிருத்துவ பிரிவும் உண்டு. உண்மை. அதைக்காட்டி கிருத்துவ மதமே பயத்தைக்காட்டி எல்லோரையும் கிருத்துவமத்ததில் கட்டிப்போட்டிருக்கிறார்களா? இப்படியும் அப்படியும் உண்டு. அஎது வேண்டுமே அதை எடுத்துக்கொள்க என்கின்றன இம்மதங்கள். நடராஜரை எடுத்துக்கொண்டு சர்வம் சிவமயம் என நீங்கள் வழிபடுகிறீர்கள்; நாகாக்களை வடவர்கள் கண்டு தொழுகிறார்கள். கருப்பசாமியையும் சுடலைமாடனையும் தமிழ்நாட்டு கீழ்சாதியினர் தொழுகிறார்கள்.
இசுலாமில் இப்படி சாய்ஸ் கிடையாது. ஒரே மதம், ஒரே கோட்பாடு. அங்கு பிரச்சினையே இல்லை.
என்னுடைய சிவபக்த நண்பன் செல்வன் –> சிவபக்தனுக்கும் , கார்ல்சாக்னுக்கும் சம்பந்தம் இல்லை. அது விஞ்ஞான தேடல் சம்பந்தப்பட்டது. அதில் உலகின் கடைசி நாள் பற்றிய ஆராய்ச்சியும் உண்டு. http://www.carlsagan.com/ அதில் காஸ்மிக் டான்ஸின் மெட்டஃபர் ஆராயப்பட்டிருக்கும். ஹிந்துவோ, இஸ்லாமே, கிறிஸ்துவமோ பாவிகள் பிராயசித்த வேண்டுதல் தாண்டி விஞ்ஞானம் இன்னும் தொடமுடியாத இடங்களை தொடக்கூடிய மெஞ்ஞானம் இருத்தல் வேண்டும். அதனால் தான் மெஞ்ஞான தேடலின் போது தமிழகமோ இல்லை இமயமலையோ வந்தாக வேண்டும். அது ஒரு ஆச்சரியமே…The late scientist, Carl Sagan, in his book, Cosmos asserts that the Dance of Nataraja (Tandava) signifies the cycle of evolution and destruction of the cosmic universe (Big Bang Theory). http://www.rationalskepticism.org/religions-belief/carl-sagan-on-hinduism-validated-t26053.html
கடவுள் என்றால் நம்புவர்களுக்கு மட்டும்தான். அவர்க்ளுக்கு மெட்டாஃபாரும் சிமிலியும் இமேஜரியும் தேவையில்லை. எனினும் பலவிதமான உருவங்களைக்கொடுத்தால் அதற்கும் பொருட்கள் கூறவேண்டுமல்லவா? அதனாலேயே கொடுத்தவர்கள் நடராஜரின் தாண்டவத்துக்கு பொருள் கூறுகிறார்கள்.
புரிந்தும் மதம். புரியாமலும் மதம். இரண்டும் உண்டு. இரண்டில் இரண்டாவதே உயர்ந்தது. ஞான மார்க்கம்; பக்தி மார்க்கம். தமிழ் வைணவம் பகதி மார்க்கமே உயர்ந்தது; அது போதும் என்கிறது. இந்துக்களில் எல்லாரும் புனைப்பெயரில் போல ஞானஸ்தர்களுக்கு நடராஜர் ஆடல் ஒரு மெட்டாஃபார்.