அன்புள்ள நண்பர்களே,
“சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.
அன்புடன்,
ஜெயபாரதன், கனடா
+++++++++++++
[சென்ற வாரத் தொடர்ச்சி]
முதலாம் காட்சி:
சீதா நாடு கடத்தப்படல்
****
இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,
நேரம்: பகல் வேளை.
பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருகனன்.
[காட்சி துவக்கம். இராமன் பரபரப்பாகவும், மிக்க கவலையாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் மூவரும் ஓடி வருகிறார்கள்]
இலட்சுமணன்: அண்ணியைத் தொட்ட இராவணனைத்தான் கொன்று விட்டோமே! அந்த தண்டனை போதாதா ? அண்ணியைத் தொட்டு இராவணன் தூக்கிச் சென்றது, அண்ணியின் தவறில்லையே! எதற்காக அண்ணியைக் கண்டிக்க வேண்டும் ? ஏன் அண்ணியைத் தண்டிக்க வேண்டும் ? உங்கள் தனிப்பட வாழ்க்கையில் தலையிட, குடிமக்களுக்கு உரிமை யில்லை! உங்கள் சொந்த பந்தங்களை எடைபோட இவர்களுக்கு முதிர்ந்த அறிவும் இல்லை! மூடத்தனமான குடிமக்களின் புகாரை ஓதுக்கி விடுங்கள் அண்ணா! இது சிறிய தொல்லை. இதைப் பெரியதாக எடுத்து வேதனைப்பட வேண்டாம்.
இராமன்: இது பெரிய பிரச்சனை, இலட்சுமணா. இராவணனை மட்டும் தண்டித்தது போதாது. சீதாவையும் நான் தண்டிக்க வேண்டும் என்று குடிமக்களின் சிந்தனையில் இருக்கிறது. …. சீதாவின் தலை முடியைப் பிடித்து, அவளை மடியில் வைத்துக் கொண்டு இராவணன் தூக்கிச் சென்றானாம்!
இலட்சுமணன்: அது அண்ணியின் தவறில்லையே! அதனால் அண்ணியின் புனிதம் போனது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்தென்ன ?
இராமன்: நீ போட்ட கோட்டைத் தாண்டியது சீதாவின் தவறுதான்! ஆனால் சீதாவின் புனிதத்தில் எனக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! மீட்கும் போது மனதில் சற்று குழப்பம் இருந்தாலும், சீதாவை ஏற்றுக் கொண்டு அயோத்திய புரிக்கு அழைத்து வந்தேன்!
இலட்சுமணன்: அண்ணா! அண்ணிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காது, இராவணன் தூக்கிச் செல்ல வழி வைத்தது நமது தவறல்லவா ?
இராமன்: இல்லை இலட்சுமணா! மானை வழியில் ஓடவிட்டுச் சீதைக்கு வலை விரித்தது இராவணன் சூழ்ச்சி. அதில் நம்மையும், அவளையும் இராவணன் ஏமாற்றி விட்டான்! இளங்குமரி போல் ஆசைப்பட்டு மானைப் பிடிக்க என்னை அனுப்பியது, சீதாவின் முதல் தவறு! என் அவலக்குரல் போன்று எழுந்த போலிக்குரல் கேட்டு அஞ்சி உன்னை அனுப்பியது, சீதாவின் இரண்டாவது தவறு! நீ போட்ட கோட்டைத் தாண்டி இராவணனுக்குப் பிச்சை போட்டது, சீதாவின் மூன்றாவது தவறு!
பரதன்: அண்ணா! கள்வன் சூழ்ச்சி செய்து கன்னியைத் திருடிச் சென்றால், கள்வனைத் தண்டிப்பது நியாமானது! கள்வனுடன் சேர்த்துக் கன்னியையும் தண்டிப்பது எப்படி நீதியாகும் ? கள்வன்தான் குற்றவாளி! இராம நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியும் குற்றவாளியா ? குடிமக்கள் புகாரை கேட்டும் கேளாதது போல் புறக்கணிப்பதே முறை.
இராமன்: குடிமக்களைப் புறக்கணிப்பது மன்னருக்கு முறையில்லை, பரதா ? சீதாவின் புனித்ததை நம்பினாலும், புகாரைக் கேட்டபின் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது. அரண்மனை முனிவர்கள் அக்கினிப் பரீட்சை வைக்கச் சொன்னார்கள்! அதை எப்படிச் செய்ய முடியும் ? உயிரோடு கொளுத்தி உடலின் புனிதத்தைச் சோதிப்பது எப்படி ? உடன்கட்டை ஏறுவது போன்றது அக்கினிப் பரீட்சை! அது ஓர் தண்டனை! சோதனை என்பது தவறு! சீதாவின் புனிதத்தை எப்படி அறிவது ? நாட்டுக் குடிமக்களுக்கு எப்படி நிரூபிப்பது ? …. நேற்று வண்ணான் ஒருவன் தன் மனைவியைக் கண்டிக்கும் போது, என்னை இகழ்ந்து பேசி யிருக்கிறான். முந்தைய இரவில் வீட்டுக்கு வராத மனைவியைத் திட்டும் சாக்கில், ‘நேற்றிரவு எங்கேடி படுத்துக் கிடந்தாய் தேவடியா சிறுக்கி ? இராவணன் கூட பல வருடம் இருந்த சீதாவை ஏத்துக்கொண்ட ராம ராஜான்னு என்னை நினைக்காதே! ‘ என்று என்னைக் குத்தி அவளை அதட்டி யிருக்கிறான்! இம்மாதிரி அவச் சொற்களைக் கேட்டுக் கொண்டு எப்படி நான் சும்மா இருப்பது ? அதற்கு முதலில் ஆலோசனை சொல்லுங்கள், எனக்கு.
பரதன்: அண்ணா! முதலில் உங்கள் குழப்பத்தை எப்படித் தெளிவாக்குவது என்று தெரியவில்லை! அண்ணியின் வாக்கை நீங்கள் நம்ப வில்லையா ?
இராமன்: என்மனம் நம்புகிறது. ஆனால் குடிமக்கள் அவளை நம்பவில்லை! ஏற்றுக் கொண்ட என் குணத்தை மீறி, தூற்றிவரும் அவரது துணிச்சலே என்னை வேதனைப் படுத்துகிறது.
சத்துருக்கனன்: அண்ணா! நீங்கள் நம்புவது போதாதா ? குடிமக்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும் ? அண்ணி ஓர் உத்தமி. அறிவு கெட்ட தெரு மக்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன ?
இராமன்: ஆத்திரமடையாதே தம்பி! நான் சீதாவுக்குக் கணவன் மட்டுமில்லை! பட்டம் சூடியபின் பின், குடிமக்களின் செங்கோல் வேந்தன் நான்! எனக்கு முதல் பொறுப்பு குடிமக்கள்! இரண்டாவது பொறுப்புதான் மனைவி! பேரரசனாகிய நான் குடிமக்களுக்கு ஓர் உதாரண மனிதனாய்க் காட்ட வேண்டும். மன்னன் எவ்வழி, அவ்வழி மாந்தர் என்பதை அறிந்து கொள். சீதாவைப் போல் அன்னியன் இல்லத்தில் இருந்துவிட்டு வந்தவளை என்னைப் போல் ஏற்றுக் கொண்டு, அவள் பதி அவமானப் படவேண்டுமா என்று கேட்டார்களாம், குடிமக்கள்!
இலட்சுமணன்: அண்ணா! என்ன முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இப்போது ?
இராமன்: என் இதயம் செய்ய விரும்பாததை என் ஞானம் செய்யத் துணிந்து விட்டது! நெஞ்சைப் பிளக்கப் போகும் ஒரு துயர முடிவுக்கு வந்து விட்டேன்! (கண்களில் கண்ணீர் பொங்க) தம்பி இலட்சுமணா! நீதான் இதை நிறை வேற்ற வேண்டும்! நாளை காலை சீதாவை இரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ மட்டும் புறப்பட வேண்டும்! குகன் படகில் ஏறிச் சென்று கங்கை நதியின் எதிர்க்கரையில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வர வேண்டும்! (அழுகை பீறிக்கொண்டு வருகிறது). என் கட்டளையை மீறாதே!
இலட்சுமணன்: (குமுறிவரும் அழுகையுடன்) அண்ணா! இது வஞ்சக முடிவு! நியாயமற்ற முடிவு! என்னால் இந்தப் பாபத்தைச் செய்ய முடியாது! உங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயங்குகிறேன். அந்த உத்தமிக்கு இந்தக் கொடுமையை நான் எப்படி இழைப்பது ? அண்ணா! இந்தக் கல்நெஞ்சம் எப்படி வந்தது உங்களுக்கு ? ஏழேழு பிறப்புக்கும், வாழையடி வாழையாய் பெண் பாபம் நம்மை விடாது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு இந்தப் பாபத்தின் எதிரொலி கோசல நாட்டை அடித்துக் கொண்டே இருக்கும்! எதிர்காலச் சந்ததிகள் உங்களுக்குச் சாபம் போடும்! இந்த வஞ்சகச் செயலுக்கு உங்களைத் தூற்றும்! ‘
இராமன்: நிறுத்து இலட்சுமணா! போதும் உன் சாபம்! நீ பார்க்கத்தான் போகிறாய்! கோசல நாடு என்னைப் போற்றும்! குடிமக்களுக்கு முதலிடம் தந்து முடிவு செய்யும் என்னை எதிர்காலம் கொண்டாடும்! புதிய இராம இராஜியத்தை நான் உருவாக்குகிறேன். இராம இராஜியத்தில் மன்னரின் சொந்தம், பந்தம், சுயநலம் யாவும் பின்னே தள்ளப்படும்! குடிமக்கள் கோரிக்கைதான் நான் முடிமேல் எடுத்துக் கொள்வேன்! இலட்சுமனா! என் ஆணையை நிறைவேற்று! நீதான் சீதாவைக் கானகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.
பரதன்: அண்ணா! நீங்கள் தரும் இந்த கோர தண்டனை சீதா அண்ணிக்குத் தெரியுமா ?
இராமன்: இதைப் பற்றி எதுவும் நான் சீதாவுக்குச் சொல்லவில்லை! அவளுக்குத் தெரியவே கூடாது. நேரில் சொன்னால் என் நெஞ்சம் வெடித்து விடும்! எங்களுக்குள் பெரிய சண்டை மூளும்! அவள் கண்ணீர் வெள்ளத்தில் நான் மூழ்கி விடுவேன். நீங்களும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் முன்பே சொல்லக் கூடாது! இது பரம இரகசியமாய் முடிக்க வேண்டிய தண்டனை!
இலட்சுமணன்: அண்ணி உங்கள் தர்ம பத்தினி! மிதிலை மன்னரின் மூத்த புத்திரி! ஒரு மனிதப் பிறவியாகக் கருதி நீங்கள் அண்ணியை நடத்தவில்லை! இது முழு மோசடியாகத் தெரிகிறது எனக்கு! தசரத மாமன்னரின் தவப் புதல்வன் தயங்காமல் செய்த நயவஞ்சகச் சதியாகத் தோன்றுகிறது எனக்கு!
இராமன்: போதும் உன் குற்றச்சாட்டு, இலட்சுமணா! குடிமக்களின் புகாரை நான் பொருட்படுத்தா விட்டால், நாளை யாரும் என்னை நாட்டில் மதிக்கப் போவதில்லை! நீ செய்ய மறுத்தால் நான் பரதனை அனுப்புவேன். பரதன் மறுத்தால் சத்துருக்கனனை அனுப்புவேன். அவனும் மறுத்தால், அனுமானை அனுப்புவேன். அன்னியனான அனுமான், என் அடிமையான அனுமான் என் சொல்லைத் தட்ட மாட்டான்! ஆசிரமத்தைப் பார்க்க அழைத்துச் செல்வதாய்க் கூறி சீதா கூட்டிச் செல்! ஆசிரமத்தைப் பார்க்க அவள் ஒருசமயம் ஆசைப்பட்டுக் கூட்டிச் செல்ல என்னைக் கேட்டதுண்டு. இலட்சுமணா! நாளைக் காலை சீதாவை நீ காட்டில் விட்டு வராவிட்டால், உன் முகத்தில் நான் இனி விழிக்க மாட்டேன்! நான் உன் தமையன் இல்லை, நீ என் தம்பி இல்லை என்று நாட்டில் அறிவித்து விடுவேன்.
(இலட்சுமணன் இடிந்துபோய்த் தரையில் சாய்கிறான். பரதன், சத்துருகனன் இருவரும் கண்ணீருடன் சோகமாய்ப் போகிறார்கள். கவலையோடு இராமன் ஆசனத்தில் பொத்தென அமர்கிறான்)
(முதல் காட்சி முற்றும்)
****
(இரண்டாம் காட்சி தொடரும்)
தகவல்
1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma
3. Mahabharatha By: Rosetta William [2000]
4. The Wonder that was India By: A.L. Basham [1959]
5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]
6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]
**************
S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]
- நீங்காத நினைவுகள் – 19
- மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
- மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு
- சிலை
- அழகிப்போட்டி
- நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’
- திண்ணையின் இலக்கியத்தடம்-4
- புகழ் பெற்ற ஏழைகள் - 28
- ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்
- அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”
- அத்தம்மா
- டௌரி தராத கௌரி கல்யாணம் …22
- பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.
- தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !
- கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்
- அவசரகாலம்
- நீண்டதொரு பயணம்
- கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
- தேடுகிறேன் உன்னை…!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1
- புண்ணிய விதைகள் – சிறுகதை
- காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
- சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை
- பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
- தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
- காதலற்ற மனங்கள்