டாக்டர் ஜி. ஜான்சன்
தரங்கம்பாடி கடல் எப்போதுமே இறைச்சலுடன்தான் காணப்படும். அந்த அலைகளின் ஓசை யாரோ ஒரு பண்டைய புலவனின் காதிலோ அல்லது சோழ மன்னனின் செவியிலோ கீதமாகக் கேட்டிருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ அந்தப் பகுதிக்கு தரங்கம்பாடி என்று அழகான தூய தமிழில் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும். தரங்கம்பாடி என்பதற்கு ” பாடும் அலைகள் ” என்பது பொருளாகும்.
அதன் அலைகள் தொடர்ந்து வந்து கரையோரத்தில் உள்ள பாறைகள் மீது முட்டி மோதி பெரும் ஓசையுடன் சிதறி விழும். கரையோரத்தில் உள்ள மாசிலாமணி நாதர் சிவன் கோவிலின் வலது புறத்தில் நிறைய கருங்கல் பாறைகள் குவிந்திருக்கும்.
இந்தக் கோவில்தான் தரங்கம்பாடியின் புராதனச் சின்னமாக இன்றும் விளங்குகிறது. இது பதினான்காம் நூற்றாண்டில் 1306 ஆம் வருடத்தில் முதலாம் மாயவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மன்னனால் தரப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது. இன்று கடல் உள்ளே புகுந்துவரும் நிலையில் இந்தக் கோவிலின் சுவர்கள் இடிந்து கடலுக்குள் மூழ்கும் நிலையில் உள்ளது.
அவ்வாறு சிதறிக் கிடக்கும் பாறைகளின் பின்னணியில் அந்த ஊரின் சரித்திரம் புதைந்துள்ளது. அந்த பழம்பெரும் சரித்திரத்தை இன்றும் , இனி என்றும் கூறும் வண்ணம் சற்று தொலைவிலேயே ஒரு வலுவான கோட்டை உள்ளது. அதுதான் ” டேன்ஸ்போர்க் கோட்டை ” ( Dansborg Fort ).
மாசிலாமணி நாதர் கோவிலின் வலது பக்கத்தில் கடலில் மூழ்கியும் மூழ்காமலும் கிடக்கும் பெரும் பாறைகள் கிடக்கும் இடத்தில்தான் முன்பு துறைமுகம் ஒன்று இருந்துள்ளது. அதைக் கட்டியவர்கள் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள்தான் அந்த கோட்டையையும் கட்டியவர்கள்.
டென்மார்க் நாட்டின் வணிகர்கள் அங்கு வருமுன் தரங்கம்பாடி தஞ்சாவூர் நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
வணிகம் செய்ய அங்கு வந்த டென்மார்க் நாட்டின் கடற்படைத் தளபதி ஓவே ஜெடீ ( Ove Gjedde ) என்பவர் தரங்கம்பாடியில் ஆழ்கடல் உள்ளதை அறிந்து அங்கு துறைமுகம் அமைத்து ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தில் ஈடுபட விரும்பினார்.
அப்போது தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியைப் பெற்றுக்கொண்டு அங்கு 1620ஆம் ஆண்டில் டேன்ஸ்போர்க் கோட்டையைக் கட்டினார். அவர்களுக்குத் தரப்பட்ட தரங்கம்பாடி பகுதியைச் சுற்றிலும் பலம் வாய்ந்த சுவர்களும் எழுப்பப்பட்டன.
1620 ஆம் வருடத்திலிருந்து 1845 ஆம் வருடம் வரையில் தரங்கம்பாடி டென்மார்க் நாட்டின் காலனியாக ஆளப்பட்டது.
பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அந்த கோட்டைக்குள் படைவீரர்கள் தங்கும் தளம், சமையல் பகுதி, பண்டகச்சாலை, சிறைச்சாலை பகுதிகள் உள்ளன. மேல் தளத்தில் தலைமையகமும் ஆளுநரின் இருப்பிடமும் அமைந்திருந்தது.
தரங்கம்பாடியின் வீதிகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டன. பல மாடி வீடுகளும் அன்று கட்டப்பட்டன. அவற்றில் சிலவற்றை இன்றும் காணலாம்.
ஐரோப்பியாவில் நடந்த நெப்போலியன் போரின் முடிவில் 1808 ஆம் வருடம் தரங்கம்பாடி ஆங்கிலேயர்களின் கைவசம் வந்தது .பின்பு 1814 ஆம் வருடத்தில் டென்மார்க்கிடம் மாறியது. இறுதியாக 1845 ஆம் வருடத்தில் அவர்கள் தரங்கம்பாடியை ஆங்கிலேயர்களிடம் விற்றுவிட்டனர்.
இன்று அந்த கோட்டையில் காலனித்துவ பொருட்கள் வைக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி மற்றொரு விதத்திலும் வரலாற்று சிறப்பு பெற்றது. இங்குதான் இந்தியாவின் முதல் கிறிஸ்துவ
சீர்திருத்த சபையின் ( Protestant ) இறைத் தூதர்கள் ( Missionaries ) வந்து இறங்கினார்.
ஜெர்மனி நாட்டிலிருந்து அவர்கள் வந்தனர். பார்த்தலோமேயூஸ் சீகன்பால்க், ஹீன்ரிச் புலுச்சோ என்ற அவ்விருவரும் 1705 ஆம் வருடம் தரங்கம்பாடியில் ஏசுவின் நற்செய்தி போதிக்கத் துவங்கினர். அவர்கள் கட்டிய சீயோன் தேவாலயம்தான் இந்தியாவின் முதல் சீர்திருத்தச் சபையின் ஆலயம் ( The first Protestant சர்ச் in India ). அது 1701 ஆம் வருடத்தில் கட்டப்பட்டது. இன்று அது புது எருசலேம் தேவாலயமாக தமிழ் சுவிஷேச லூத்தரன் திருச்சபையால் நன்கு பராமரிக்கப் படுகின்றது.
தமிழ் கூறும் நல்லுலகில் வேறொரு மாபெரும் வரலாற்று சிறப்பும் தரங்கம்பாடிக்கு உள்ளது. இந்திய மொழிகளில் முதல் மொழியாக தமிழ் அச்சில் பொறிக்கப்பட்டு அழகு கண்டது இந்த தரங்கை எனும் தரங்கம்பாடியில்தான்!
அச்சில் ஏற்றப்பட்ட அந்த முதல் தமிழ் நூல் ஏசுவின் நற்செய்தி கூறும் புதிய ஏற்பாடு.
ஜெர்மானியரான சீகன்பால்க் தமிழ் கற்று புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்தார். அது அனைத்து மக்களுக்கும் சேரவேண்டும் என்ற ஆவலில் நூல் வடிவில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.
தமிழ் எழுத்துக்களை ஜெர்மனிக்கு கொண்டு சென்று அவற்றை அச்சில் வார்த்தார். இங்கிலாந்து அரசி ஒரு அச்சு இயந்திரம் தந்தார். அதைக் கப்பலில் தரங்கம்பாடிக்கு கொண்டு வந்தார். அங்கு அச்சுக்கூடம் அமைத்து, பொரையாரில் காகிதப் பட்டரையும் உருவாக்கி புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டு வினியோகித்தார். இது நடந்தது 1714 ஆம் வருடத்தில்.
1727 ஆம் வருடத்தில் முதன்முதலாக இந்தியாவில் நாள்காட்டி ( Calender ) தரங்கை அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டு வெளியானது!
சீகன்பால்க் 40,000 ஆயிரம் சொற்கள் கொண்ட தமிழ் அகராதியையும் உருவாக்கி வெளியிட்டார். அதில் தமிழ்ச் சொல் , அதை உச்சரிக்கும் முறை, ஜெர்மன் மொழியில் அதன் பொருள் ஆகிய மூக்கூறுகள் இடம்பெற்றிருந்தன.
தமிழ் கற்ற இரண்டு வருடங்களில் ஆவர் தமிழ் மொழியில் பதினான்கு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!
சமயப் பணி, தமிழ்ப் பணியுடன், கல்விப் பணியிலும் அந்த இருவரும் ஈடுபட்டனர். தரங்கம்பாடியில் அவர்கள் தொடங்கிய புலுச்சோ துவக்க தமிழ்ப் பள்ளி இன்றும் உள்ளது. அதோடு ஒர் உயர்நிலைப் பள்ளியும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் இன்று தரங்கையில் இயங்கி வருகின்றன.
இதுவரை பாடும் அலைகள் கொண்ட தரங்கம்பாடியின் புகழ் பாடினேன். இனி நான் சொல்ல வந்த கதைக்கு வருகிறேன். கதை சிறியதுதான்.
என்னுடைய அண்ணன் பீட்டர் அப்போது தரங்கம்பாடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அண்ணி ஹில்டா துவக்கப் பள்ளி ஆசிரியை.
நான் மருத்துவம் பயின்ற போது விடுமுறைகளில் அங்கு சென்று விடுவேன்.
அண்ணியின் தம்பி தாஸ் பி,ஏ, முடித்துவிட்டு சென்னை மெஸ்டன் கல்லூரியில் பி.டி. பயின்று வந்தார். அவரும் வந்துவிடுவார்.
விடுமுறையைக் கழிக்க அருமையான கடற்கரை ஊர் தரங்கம்பாடி. தினமும் படகுகளில் புதிதாக வந்து இறங்கும் மீன், இறால், கணவாய் , நண்டு ஆகியவை நிறைய கிடைக்கும்.
மாலையில் நாங்கள் கோட்டை அருகில் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொள்வோம்.கடற்காற்று ஜிலு ஜிலுவென்று வீசும்.
ஒரு நாள் காலையில் நாங்கள் நீச்சலடிக்க முடிவு செய்தோம். தாஸ் திருச்சியில் காவேரி அன்றாடம் நீச்சல் அடித்து குளிப்பவர். நான் சிதம்பரத்தில் குளம், ஆற்றில் நீந்திப் பழகியவன்.
நாங்கள் கிளம்பும்போதே கடல் ஆழம் என்று சொல்லி அண்ணி தடுத்தார், எங்களுக்கு இளம் இரத்தம். புறப்பட்டு விட்டோம்!
கடலில் இறங்கி ஓரமாகத்தான் நீச்சல் அடித்தோம். கொஞ்ச நேரம்தான். பெரிய அலை வந்து திரும்பியபோது அருகில் இருந்த தாஸ் காணவில்லை! பதறிப்போன நான் தேடியபோது அவர் கைகளை உயரே தூக்கி தத்தளிப்பது தெரிந்தது. அவர் மூழ்கி மூழ்கி மேலே எழுந்தார்!
நான் எதையும் யோசிக்காமல் அவரை நோக்கி நீச்சல் அடித்தேன். கொஞ்ச நேரத்தில் அவரின் கையைப் பற்றிக் கொண்டேன். கால் வைத்து பார்த்தபோது தரை தட்டுப்படவில்லை .
ஒரு கையில் அவரைப் பிடித்துக்கொண்டு மறு கையால் நீச்சல் அடிக்க முயன்றேன். முடியவில்லை. அப்போது அடுத்த பெரிய அலை கரையை நோக்கி வந்தது. அடுத்த நிமிடம் காலில் ஏதோ தட்டுப்பட்டது. இருவரும் அதை கைகளால் இறுக்க பற்றிக்கொண்டோம்!
அலை மீண்டும் கடலுக்குள் பின்வாங்கியதும் நாங்கள் சிதறிக் கிடந்த பாறைகள் மீது இருப்பது தெரிந்தது
அவற்றில் ஒட்டியிருந்த மட்டிகளும் சிப்பிகளும் கைகளிலும் கால்களிலும் சரக் சரக் என வெட்ட வெட்ட, இரத்தம் வழிந்தோட கரையேறினோம்!
( முடிந்தது. )
- மெல்ல மெல்ல…
- அகமுகம்
- விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.
- மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு
- ஆழ் கடல்
- உலகெலாம்
- சிறுகவிதைகள்
- நய்யாண்டி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !
- ஆணோ பெண்ணோ உயிரே பெரிது
- கண்ணீர் அஞ்சலிகளின் கதை
- பிரயாணம்
- லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
- பாவடி
- ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
- புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
- என்ன இது மாற்றமோ ..?
- திண்ணையின் இலக்கியத் தடம் -5
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
- சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)
- “காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.
- நெடுநல் மாயன்.
- Writing Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2nd
- க்ளோஸ்-அப்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- பார்வையற்றோர் நலப் பணி நினவு கூர்தல்