வணக்கம் சென்னை

This entry is part 14 of 26 in the series 27 அக்டோபர் 2013

– சிறகு இரவிச்சந்திரன்

எதிர்மறையான குணங்கள் கொண்ட இருவர், ஒரு அறையில் மாட்டிக் கொண்டதால் நிகழும் மோதல்களும், முடிவாக ஏற்படும் காதல் உணர்வுகளுமே கதை..

அஜய் தேனி பக்கத்து கிராமத்துப் பையன். அப்பா இல்லை.. அம்மா வளர்ப்பு. கல்லூரி படிப்பில் தங்கப் பதக்கம்.. வேலை கிடைத்து சென்னைக்கு வரும் அவனுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு படுக்கை அறை வீட்டை ஏற்பாடு செய்து தரும் வீடு தரகர் நாராயணன், அதே குடியிருப்பை, லண்டன் வாழ் அஞ்சலிக்கும் வாடகைக்கு விட்டு விடுகிறான். அஞ்சலிக்கு அம்மா இல்லை.. அப்பா மட்டுமே.. தகிடுதத்தம் வெளியாகும் முன் நாராயணன் எஸ்கேப்.. உள்ளே நுழையும் ஒரிஜினல் ஓனர் கேப்டன் நாசர், கடுப்படித்து இருவரையும் வெளியேறச் சொல்ல, வீட்டை தக்க வைக்க இருவரும் கணவன் – மனைவி என்று பொய் சொல்ல வேண்டிய நெருக்கடி.. இறுகும் சிக்கலுக்கு, கூடுதல் முடிச்சுகள் போட்டு, இடியாப்ப சிக்கலாக்கும் காவல் அதிகாரி ஊர்வசி, அந்த குடியிருப்பில், குடியிருப்போர் சங்கத்தின் காரியதரிசி.. இதையெல்லாம் விட, அஞ்சலிக்கும் அஜய்க்கும் ஏழாம் பொருத்தம். மெல்ல வேற்றுமைகள் மறைந்து, காதல் அரும்பும் நேரத்தில், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அஞ்சலியைத் தேடி வர களேபர க்ளைமேக்ஸ்..
அறிமுக இயக்குனராக கிருத்திகா உதயநிதி சறுக்கவில்லை என்றாலும், சம்பவங்கள் இல்லாத திரைக்கதை, கற்பனை வறட்சியை பறை சாற்றுகிறது. தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் உதவியால் பளிச் சுத்தமாக படம் போகிறது. ஆனால் அடுத்து என்ன? என்கிற எதிர்பார்ப்பு இல்லாததால் வாய் மொழி விளம்பரமாக ‘சேனலில் பார்த்துக் கொள்ளலாம்’ என்னும் செய்தி பரவ விடுகிறான் ரசிகன்.
‘ ஒசக்கே ஒசக்கே’ என்கிற அற்புத பாடல் அனிருத்தின் பெயர் சொல்கிறது. ஆனால் அதையே, வாத்தியங்களாலும், ஹம்மிங்காலும், பல தடவை ஒலிக்க விட்டதில், சலிப்பு தட்ட ஆரம்பித்து விடுகிறது. மெல்லிசை மன்னர்கள், அந்தக் காலத்தில், ஒரு பாடலின் இடை இசையை, அடுத்த படத்தில் பின்னணி இசையாகப் பயன்படுத்துவார்கள். அடுத்த படம் என்ன? என்று தெரியாத சூழலில், பாடலையே பின்னணியாக அனிருத் பயன்படுத்தி இருப்பது, அவருடைய ஸ்திரமின்மையை எடுத்துக் காட்டுகிறது. வரும் நாட்களில், ஹாரிஸ் போல், ஒரே மெட்டில் பல படப்பாடல்கள் வரக்கூடிய அபாயம் அவரிடம் தெரிகிறது. உஷார்!
ஸ்டாண்ட் அப் காமெடி போல சிவா இன்னமும் எத்தனை படங்களில் நடிப்பார் என்று தெரியவில்லை. தண்டால், பஸ்கி நடன அசைவுகள் இன்னமும் அவரைப் பற்றிய சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்துகின்றன. எல்லாவற்றையும் கிண்டல் செய்வதை விட்டு விட்டு, முழுசான ஹீரோவாக அவர் மாறவேண்டியது, அவருக்கு மட்டுமே நல்லது.
பெண் இயக்குனர் என்பதால், பிரியா ஆனந்தை கவர்ச்சிக் கோணங்களில் காட்டாதது ஆறுதல். ஆனால் அடிக்கடி, மிஷ்கின் பாதிப்பில், வாழைத்தண்டு கால்கள் க்ளோசப் வைத்திருப்பது, வியாபாரத்தின் நெருக்கடியால் என நினைத்துக் கொள்வோம்.
சந்தானம் பின்பாதியில் வருகிறார். பின் விளைவுகள் ஏதும் இல்லாமல் காணாமல் போகிறார். 4 நாள் கால்ஷீட்டில் என்ன கொட்டி கொடுத்துவிட முடியும் அவரால்?

கிருத்திகா, வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுக்குப் பிடித்த படங்களை இயக்க வேண்டும். நஷ்டம் ஆனாலும், அடுத்தடுத்த ஸ்டார் படங்களை கைப்பற்றி, ரெட் ஜெயிண்ட் பிழைத்துக் கொள்ளும்.
0
தீர்ப்பு : சுணக்கம்.

பாமரன் காமெண்ட்: தப்படிக்கற கையிலே தவிலைக் கொடுத்தாப்பல இருக்கு சாரே!
0
கொசுறு:
கடைசி காட்சியில் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். கிரேசி மோகன் நாடகக் காட்சி போல் இருக்கிறது. ஒரே ஆங்கிள் கேமரா கூட, இது நாரத கான சபாவா என்று யோசிக்க வைக்கிறது.
0

Series Navigationஅழித்தது யார் ?தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *