பாவண்ணன்
பொதுக்பொதுக்கென்று அழுந்தும் ஈரத்தரையில் கவனமாக அடியெடுத்து வைத்துக் கரையேறினான் சொக்கலிங்கம். அலைவேகத்துக்குத் தகுந்தமாதிரி தாவிக் குதித்தும் விழுந்தும் புரண்டும் கடலில் அரைமணிநேரமாக தொடர்ந்து குளித்ததில் இன்னும்கூட நிதானத்துக்கு வரமுடியாமல் மிதப்பதுபோலவே இருந்தது உடல். காதுக்கு வெகு அருகில் யாரோ உறுமுவதுபோன்ற ஓசை கேட்டது. வேகமாகப் பொங்கிவந்த அலையொன்று அவன் நடந்துவந்த காலடித்தடங்களை அழித்துவிட்டுச் சென்றது. உச்சிவெயிலில் கண்கள் கூசின.
கரையில் வைத்திருந்த துண்டை எடுத்து தலையைத் துவட்டியபடி, கடலை விட்டுவர விருப்பமில்லாமல் இன்னும் குளித்துக்கொண்டிருந்த மல்லிகாவையும் மகள்களையும் பார்த்து “போதும் போதும்… சீக்கிரமா வாங்க..” என்று சத்தம் கொடுத்தான். அலைச்சத்தத்தில் அவர்கள் சொன்ன பதில் கேட்கவில்லை. கூந்தல் தலையோடு ஒட்டிக் கிடக்க அவர்கள் சிரிப்பதைமட்டும் அவனால் பார்க்கமுடிந்தது. உடைமாற்றிக்கொண்டு குமுறும் கடல்மீது பார்வையைப் படரவிட்டான். அமைதியில்லாமல் உறுமியபடி புரண்டுகொண்டே இருக்கிற விலங்குபோல அதன் சத்தம் காதை அடைத்தது. வெள்ளை நுரை ஒரு மாலைச்சரமென சுருண்டுசுருண்டு வந்து கரையில் மோதிக் கரைந்தது. வெகுதூரத்துக்கு தாவிவந்த அலையொன்று ஒரு கந்தல் துணியை ஒதுக்கிவிட்டுப் பின்வாங்கியது. வெண்மையும் நீலமும் படிந்த கிளிஞ்சலொன்று ஒரு கணம் வெயிலில் மின்னி பிறகு மண்ணில் புதைந்தது.
“எழுந்து வாங்கம்மா, நேரமாவலையா?” என்று அவர்களைப் பார்த்து மறுபடியும் அழைத்துவிட்டு, துணிமணிகளையெல்லாம் அள்ளி இன்னும் கொஞ்சம் தள்ளி மேடான இடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தான். மஞ்சுளாவுக்கும் சரளாவுக்கும் இருக்கிற உற்சாகத்தைப் பார்த்தால் கடலைவிட்டு எழுந்திருக்க இன்னும் ஒருமணிநேரமாவது ஆகும் என்று தோன்றியது. அக்கம்பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாக் கும்பலின் உற்சாகத்தைப் பார்த்து இவர்களுடைய உற்சாகம் பல மடங்காகப் பெருகிவிட்டது. துண்டை விரித்து வேகமாக உதறியபிறகு, உலரும்வகையில் முதுகோடு போர்த்தியபடி தொலைவில் தெரிந்த சிதைந்துபோன பழங்காலத்துக் கோட்டைச்சுவர்களைப் பார்ப்பதற்காக நடந்தான். தனிமையான கடலோரத்தில் இடிந்த கோட்டையின் தோற்றம் அச்சமூட்டுவதாகவும் வசீகரமாகவும் இருந்தது. காமிராவை வாகனத்திலேயே வைத்துவிட்டு வந்ததை நினைத்து நாக்கைக் கடித்துக்கொண்டான்.
‘லோன்லி ப்ளேனெட்’ புத்தகத்தில் இடிந்த கோட்டையைப்பற்றிப் படித்த குறிப்பு நினைவுக்கு வந்தது. யாரோ ஒரு நாயக்கர். அந்தக் காலத்து மனிதர். அரசகுடும்பத்தைப்போல கோட்டைகட்டி வாழ்ந்திருக்கிறார். அவன் குடும்பத்துக்கு நூற்றுக்கணக்கான காணிகள் சொந்தம். ஒரு பக்கம் நெல். இன்னொரு பக்கத்தில் கரும்பு. வாழை. அக்கம்பக்கம் பதினாறு கிராமங்கள் அவர் நிலத்தை அண்டி வாழ்ந்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் அடைக்கலம் அந்தக் கோட்டை. பண்ணை மாடுகளுக்கும் வண்டிக்காளைகளுக்கும் கோட்டைக்குள் நூறு தடுப்புகள் கொண்ட தொழுவம் கட்டப்பட்டிருந்தது. பண்ணை ஆட்களுக்கு மூன்று வேளைகளுக்கும் தேவையான சோறும் குழம்பும் கொதிக்கும் அணையா அடுப்புகள் கொண்ட சமையல்கூடம் இன்னொரு பக்கம் இருந்தது. ஒருநாள், துரத்திவந்த பிரிட்டிஷ் படையினரிடமிருந்து தப்பித்து ஓடிவந்து தஞ்சம் கேட்ட பிரெஞ்சுப் படையினருக்கு கோட்டைக்குள் அடைக்கலம் கொடுத்தார் நாயக்கர். குதிரைக் குளம்புகளின் தடத்தைப் பார்த்து பின்தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் படை கோட்டையைப் பார்த்து ஒருகணம் மிரண்டு பின்வாங்கியது. பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான கோட்டை என்கிற தப்புக்கணக்கில் மறுகணமே ஆத்திரத்தோடு அவர்களுடைய பீரங்கிகளிலிருந்து குண்டுகள் புறப்பட்டு கோட்டையைத் தரைமட்டமாக்கின. நெருப்புப் பற்றியெரிந்த வீடுகளும் வயல்களும் மரங்களும் சோலைகளும் பத்து நாட்களுக்கும் மேல் இடைவிடாமல் எரிந்து சாம்பலாகிச் சரிந்தன. தவறாக தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ் படைத்தலைவன் பதவியிறக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பியனுப்பப்பட்டான். அரைவட்டக் கோடுபோல பூமியில் பதிந்திருந்த கோட்டை அஸ்திவாரங்களும் அரைகுறைச் சுவர்களும் தொழுவச் சிதைவுகளும் நிகழ்ந்துபோன வரலாற்றுச் சாட்சிகளாக எஞ்சிவிட்டன. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கரும்புள்ளியாகிவிட்ட அச்சம்பவத்தை மானுடத்தின் ஆழ்மனத்தில் பதியவைக்க நினைத்த பிரெஞ்சுத் தந்திரத்தின் விளைவாக அப்புறப்படுத்தப்படாத அந்த சிதிலங்கள் அப்படியே நின்றன.
காலருகில் கிடந்த செங்கல்லைக் குனிந்து எடுத்தான் சொக்கலிங்கம். பாறையைப்போன்ற அதன் உறுதி ஆச்சரியமாக இருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை அதிக் உறைந்திருந்தது. எவ்வளவு வெயில். எவ்வளவு மழை. உருக்குப்போல குலையாதிருந்தது செங்கல். கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் எருக்கு முளைத்திருந்தது. சின்னச்சின்ன முட்செடிகள் அடர்ந்து புதராகக் கிடந்தன. காலடிச்சத்தம் கேட்டு பதவியிலிருந்து வெளியே ஒரு பன்றி உர்ரென அவனைப் பார்த்த உறுமிவிட்டு வேறொரு திசையில் ஓடியது. இடதுபக்கம் நாலடி அகலத்துக்கு சுற்றுமதிலின் ஒரு துண்டு தெரிந்தது. உற்சாகமாக அதைநோக்கி நடந்தான். இரண்டு ஆள் உயரம். மெதுவாக விளிம்பைப்பற்றி ஏறி அதன்மீது நின்றான். வானம் கண்ணைக் கூசியது. எதிரில் நீலப் பட்டாடைபோல விரிந்திருக்கும் கடலைப் பார்த்தான். அவன் மனம் விம்மியது. தொலைவில் குளிக்கும் மல்லிகாவையும் மகள்களையும் பார்த்து ஓவென்று சத்தமெழுப்பியபடி இரண்டு கைகளையும் தூக்கி அசைத்தான். அவன் ஓசை எட்டாத தொலைவில் இருந்தார்கள் அவர்கள். நெஞ்சில் மோதிச் செல்லும் காற்றை அனுபவித்தபடி சில நிமிடங்கள் அப்படியே நின்றான். பிறகு மெதுவாக இறங்கி நடந்தான். மதிலையொட்டி ஆறேழு அடி தொலைவில் வட்டமாக கல்லறைப்பூக்கள் பூத்திருந்தன. ஒரு ஓணான் தலைநீட்டிப் பார்த்துவிட்டு சரசரவென்று அடர்ந்த இலைப்பரப்பில் நகர்ந்து மறைந்தது. சுமைதாங்கிக்கல்போல நின்றிருக்கும் குட்டிச்சுவரில் ஒரு செம்பதக்கக்குருவி தலையை அசைத்துச் சத்தமிட்டது. சத்தமிடும்போது அதிரும் அதன் தொண்டைக் குழியும் மார்பில் படர்ந்த பதக்கம்போல காணப்பட்ட சிவப்புநிறத்திட்டும் பார்க்கப்பார்க்க ஆசையாக இருந்தது.
திரும்பிவிடலாம் என்று யோசித்தபடியே மேலும் கொஞ்ச தொலைவு நடந்தான். பார்த்த இடங்களிலெல்லாம் சிதிலங்களால் நிறைந்திருந்தன. தோற்றத்தை வைத்து அவையே நாயக்கர் எழுப்பிய நூறு அறைத் தொழுவமாக இருக்கலாம் என்று நினைத்தான். ஏராளமான எருக்கஞ்செடிகளிடையே அதன் உருவம் அமுங்கித் தெரிந்தது. வண்டிவண்டியாக கற்களை ஏற்றிவந்து ஒழுங்கில்லாமல் கொட்டிக் குவித்ததுபோன்ற தோற்றம். முன்புறம் முற்றிலுமாகச் சிதைந்திருந்தது. பக்கவாட்டுச் சுவர்களும் கொஞ்சம் கூரையும் மட்டுமே நின்றிருந்தன. இடிபாடுகளின் நடுவிலிருந்து ஒற்றைக்கரமொன்று நீட்டியதுபோல முளைத்த ஒரு செடி காற்றில் அசைந்தது. வேறு எதையும் பார்க்காமல் அச்செடியின் தனிமையைமட்டுமே உற்று நோக்கியபோது ஒருகணம் உள்ளூர கலவமுற்றது மனம்.
“ஸ்…” என்று காக்கையை விரட்டும் ஒரு குரலை அருகில் கேட்டு அதிர்ச்சியடைந்தான். பலவீனமாக மனிதக்குரல். ஆனால் உருவம்மட்டும் தெரியவில்லை. காக்கை விலகிப் பறந்து வானைச் சுற்றி வட்டமடித்துவிட்டு மறுபடியும் பழைய பாதையில் சுவருக்குப் பின்னால் போனது. மீண்டும் “ஸ்…” குரல். மறுகணமே காக்கை வெளியே பறந்துவந்தது. நிச்சயம் மனிதக்குரல்தான். பதற்றமும் ஆர்வமும் அவனை அந்தத் திசையில் செலுத்தின. உதட்டை ஈரமாக்கியபடி மெதுவாக முட்செடிகளை விலக்கிக்கொண்டே முன்னோக்கி நடந்தான். கல் குவியல்களுக்கிடையே சரிவாக விழுந்திருக்கும் நிழலில் உடல்குறுக்கி ஒதுங்கியிருந்தது ஒரு உருவம். உடைந்துபோன மரச்சட்டங்களின் குவியல்போல. கன்னங்கரேலென அழுக்குத் துணியொன்றை அந்த வெயிலிலும் அது போர்த்தியிருந்தது. இரண்டு அடிகள் நடந்து அதன் முன்னால் நின்றான். சோர்வும் பசியும் அச்சமும் வேதனையும் படிந்த அதன் கண்கள் ஒளிகுன்றிய கண்ணாடித் துண்டுகள்போல காணப்பட்டன. அவன் கால்கள் நடுங்கினாலும் அசைய மறுத்தன. கன்னங்கரிய அதன் துணி காற்றில் விலகியபோது அதன் முகம் முழுக்கத் தெரிந்தது. தலைநிறையப் புண்கள். சிவன்று கன்றிய சதை. நரைத்த புருவங்கள். தாடை எலும்பு துருத்திக்கொண்டிருந்தது. ஒரு கன்றுக்குட்டிபோல அந்த உருவம் வாயைத் திறந்துதிறந்து மூடியது. அச்சம் காரணமாக முதலில் எதுவும் புரியவில்லை. இடைவிடாத அந்த அசைவு மூளையைத் தாக்கிய கணத்தில் அதன் பொருளை உணர்ந்தான். பசி. அனிச்சையாக கால் சட்டைப்பைக்குள் நுழைந்து தேடின அவன் விரல்கள். நோட்டுகளோ சில்லறைகளோ எதுவுமே இல்லை. எல்லாமே வாகனத்தில் இருந்தன. கடவுளே என்று நொந்தபடி நிமிர்ந்தன அவன் கண்கள். திறந்துமூடும் அந்தக் கருத்த உதடுகள். தடுமாறியபடி திரும்பியபோதுதான் சுவரோரமாக வைக்கப்பட்டிருந்த அலுமினியத் தட்டைப் பார்த்தான். தட்டுக்கு அருகில் உலர்ந்து விறைத்த சோற்றுப் பருக்கைகளை ஒட்டி எறும்புகள் ஊர்ந்துசென்றன. அக்கணமே அந்த இடத்தைவிட்டு ஓடிவிடவேண்டும் என அச்சத்திலும் அருவருப்பிலும் அவன் உடல் பதறியது. தன்னிச்சையாக மீண்டும் அந்த உருவத்தின் கண்கள்மீது பார்வையைப் படரவிட்ட கணத்தில் எல்லாம் விலகிவிட இரக்கம்மட்டுமே எஞ்சியது. அவன் நெஞ்சம் இரக்கத்தால் நிரம்பத் தொடங்கியது.
வேகமாக வீசிய காற்றில் அந்தத் துணி பறந்து விலகிவிட அதன் உடலைப் பார்த்தான். தோல்மட்டுமே படிந்த எலும்புக்கூடு. மக்கிப்போன முளைக்குச்சிபோன்ற கால்கள். உடைந்த பானைஓடு என ஒட்டிக் குழிந்த வயிறு. கிழிந்த கந்தல் முறம்போல எலும்புவரியோடிய மார்பு. உலர்ந்த வாழைமட்டையென இருபுறமும் தொங்கும் கைகள். குருவிக்கூட்டிலிருந்து சிதறிய சுள்ளிகள்போல விரல்கள். பஞ்சத்தை விவரிக்கும் ஆப்பிரிக்கப் புகைப்படங்களில்மட்டுமே இத்தகு மனிதர்களை அவன் கண்டிருந்தான். அப்படிப்பட்ட காட்சிகள் அவனை ஒரே கணத்தில் நிலைகுலைய வைத்துவிடும். பசியற்ற உலகமென்னும் மாபெரும் கனவை நெஞ்சின் ஆழத்தில் அவன் எப்போதுமே சுமந்திருப்பவன். பசிநெருப்பில் வெந்துகொண்டிருக்கும் ஒருவரை நேருக்குநேர் பார்த்ததும் யாரோ அவனை அறைவதுபோல வேதனையாக இருந்தது.
இந்தக் கிழவர் எதற்காக இந்த இடத்தில் என்று யோசித்துக் குழம்பியபடி தொடர்ந்து நடந்தான். ஏராளமான முட்புதர்கள். அவற்றைக் கடக்கமுனைந்தபோது தற்செயலாக அவன் பார்வை அடுத்த அறையில் படிந்தது. அங்கும் ஒரு குவியல். பிளந்து வீசிய விறகுபோல ஒரு உருவம் மூலையில் ஒடுங்கியிருந்தது. அதன் அருகில் ஒரு தட்டு. அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாதவனாக அடுத்த அறைநோக்கி நடந்தான். உடலைக் குறுக்கி கைகளை தொடையிடுக்கில் கொடுத்து தூங்கிக்கொண்டிருந்தது ஒரு உருவம். நரைத்து நீண்டு தொங்கும் அதன் கூந்தலை வைத்து அந்த உருவம் பெண்ணாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. அதன் அருகில் நாலு செம்பதக்கக் குருவிகள் கீச்கீச்சென்று சத்தமிட்டபடி விளையாடின. மிகவும் சுதந்திரமாக உறங்கும் அந்த மூதாட்டியின் முதுகில் ஏறி நடந்தன. பக்கத்து அறையில் சுவரையொட்டிச் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்த உருவம் எதையும் கவனிக்காததைப்போல கண்கூசும் வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
பெருமூச்சோடு அடுத்த அறையின் பக்கமாக திரும்பமுனைந்தபோது பக்கத்தில் நெருங்கமுடியாதபடி துர்நாற்றம் விரட்டியடித்தது. சுற்றியும் மலக்குவியல். மூத்திர வாடை. உருண்டையான கருவண்டுகள் மலத்தைப் பிளந்து நாலாபுறங்களிலும் ஊர்ந்துகொண்டிருந்தன.
தொடர்ந்து பார்ப்பதற்குத் தேவையான தைரியம் அவனிடம் இல்லை. தலைக்குள் ஒரு பெரிய கோபுரம் தரைமட்டமாகி சரிந்துவிழுந்ததுபோல ஒரே தடுமாற்றமாக இருந்தது. எலும்பும் தோலுமாகக் கண்ட அவர்களுடைய அரைநிர்வாணக்கோலம் அவன் எண்ணங்களின் மையப்புள்ளியில் ஆணியடித்ததுபோல உறைந்துவிட்டது. காரணமே இல்லாமல் அவன் பெற்றோரின் முகங்கள் ஒருகணம் மனத்திரையில் சுடர்விட்டன. ஆசிரியர் வேலையிலிருந்து இருவருமே ஓய்வடைந்துவிட்டார்கள். முப்பது ஆண்டுகள் வாழ்ந்த பழைய வீட்டை இடித்துவிட்டு இன்னும் கூடுதலான அறைகளோடு புதுவீடு கட்டிக்கொண்டு வாழ்ந்தார்கள். விடுமுறைக் காலத்தில் வீட்டுக்கு வந்து பேரப்பிள்ளைகளோடு விளையாடும்போது, அவர்களும் குழந்தைகளாகிவிடுவதைக் கண்டு ஆச்சரியப்படாத நாளே இல்லை.
எதிர்த்திசையிலிருந்து ஓர் இளைஞன் வேகவேகமாக வருவது தெரிந்தது. வாளிகள்போல இரண்டு கைகளிலும் பாத்திரங்கள் தென்பட்டன. கோட்டையைப் பார்க்க தன்னைப்போல வந்தவனாக இருக்கக்கூடும் என்று நினைத்தான். புறப்பட்டுவிடலாம் என்று திரும்பிய நேரத்தில் “கொஞ்சம் நில்லுங்க சார்…” என்றான். சந்தேகமாக முகம் திருப்பிப் பார்த்தான். “ஒங்களத்தான், ஒரே ஒரு நிமிஷம் நில்லுங்க…” என்றான்.
பறப்பதுபோல நடந்துவந்த அவன் நடைவேகம் ஆச்சரியமாக இருந்தது. மூத்திரவாடையைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாதவனாக தாண்டி வந்து அறையின் முன்னால் வாளிகளை வைத்தான். நின்ற கோலத்தில் இருந்த பெரியவருடைய தோளைத் தொட்டுத் திருப்பினான். “எந்தக் கப்பல் வரப்போவுதுன்னு இப்பிடி இந்த வேவாத வெயில்ல உத்துஉத்துப் பாக்கறியோ. வா வா வந்து ஒக்காரு…” என்றபடி அவரை கைத்தாங்கலாகப் பிடித்து நடக்கவைத்து மதில்சுவரின் நிழலோரமாக உட்காரவைத்தான். பக்கத்தில் இருந்த தட்டை எடுத்துக் கழுவிவிட்டு, வாளியிலிருந்து கஞ்சியை எடுத்து ஊற்றி நீட்டினான். அப்போதும் அவர் கடலையே வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அவருடைய விரல்களை இழுத்து கஞ்சித்தட்டுக்குள் வைத்ததும், முடுக்கிவிடப்பட்ட இயந்திரத்தைப்போல அவர் இயங்கத் தொடங்கினார். கஞ்சியை ஒரு கை அள்ளி வாய்க்குள் வைத்தார்.
சொக்கலிங்கத்தின் பக்கமாகப் பார்த்து புன்னகைத்தபடியே அடுத்த அறைக்குள் நுழைந்தான் இளைஞன். “இன்னா பெரிம்மா, இன்னா சொல்லுது ஒன் குருவி? நாலாம் பேருக்குத் தெரியாம இருட்டுல கொண்டாந்து உட்டுட்டு போன புள்ளகாரன் வந்துருவான்னு ஏதாச்சிம் குறி சொல்லுதா? இல்ல, போனவன் போனான்டின்னு பாடுதா?” என்று பேச்சுக் கொடுத்தான். தட்டைக் கழுவி கஞ்சியை ஊற்றிவிட்டு குருவிகளின் பக்கமும் ஒரு கல்மீது ஒரு கை அள்ளி வைத்துவிட்டுப் போனான். அந்தக் குருவிகள் அவன் வைத்த சோற்றின் பக்கம் பார்க்கவே இல்லை. மாறாக, மூதாட்டியையே பார்த்தபடி நின்றன. அவள் தன் தட்டிலிருந்து கொஞ்சம் சோற்றுப்பருக்கைகளை எடுத்து அவற்றின் முன் பரப்பினாள். உடனே அவை ஆவலோடு நெருங்கிவந்து கொத்தியெடுத்தன. “ஓகோ, நான் வச்சத எடுத்தா உள்ள எறங்காதா குருவிங்களா? அம்மா வச்சத எடுத்தாதான் வழவழன்னு போவுதா? இருக்கட்டும் இருக்கட்டும் நாளைக்கி வச்சிக்கறேன்…” காலகாலமாக பழகுகிறவர்களிடம் பேசுவதுபோல இருந்தது அவனுடைய பேச்சு. அவர்களிடம் அவனுக்கு ஆழ்ந்த பரிவு இருக்கவேண்டும். ஒவ்வொருவரிடமும் நெருக்கம் பாராட்டிப் பேசினான். அருகில் அமர்ந்தால் மணிக்கணக்கில் நேரம் போவதே தெரியாமல் பேசுவான் போலத் தெரிந்தது.
தாமதிப்பதை உணர்ந்ததால் சங்கடத்தோடு, “ஒரு மணிக்கே தரவேண்டிய கஞ்சி சார். இன்னிக்கு மணி மூணுக்கும் மேல ஆயிடுச்சி. பாண்டிச்சேரிவரிக்கும் ஒரு வேலயா போய்வந்ததுல எல்லாமே முன்னபின்ன மாறிபோச்சி. சரியா பஸ்ங்க கெடைக்காம லேட்டா வந்து, லேட்டா சோறாக்கி, லேட்டா எடுத்தாந்துன்னு எல்லாத்தலயும் லேட்டு. வயசான உயிருங்க. எவ்வளோ நேரம்தான் பசிய தாங்குமோ சொல்லுங்க…?” என்றான்.
“நீங்க எல்லா வேலயயும் முடிச்சிட்டே வாங்க. ஒரு பிரச்சனயும் இல்ல. நான் இங்கயே நிக்கறேன்..” என்றான் சொக்கலிங்கம். பிறகு மெதுவான குரலில் “யாரு இவுங்கள்ளாம்? இங்க எதுக்கு இருக்காங்க?” என்று கேட்டான்.
“எல்லாம் நம்ம தலைமுறைங்களுடைய கைங்கரியம்தான் சார்” என்று சோகமாகச் சிரித்தான். “நமக்கும் ஒரு காலத்துல தள்ளாம வரும், நோய்நொடி வரும்ன்னு இந்த காலத்து புள்ளைங்களுக்குத் தெரியமாட்டுது சார். கடல பாக்கவர மாதிரி வந்து இப்பிடி அனாதயா உட்டுட்டு போயிடறாங்க சார். எப்படியாவது கையும் களவுமா புடிக்கணும்ன்னுதான் பாக்கறன். இன்னிய தேதிவரிக்கும் ஒன்னும் மாட்டமாட்டுதுங்க. எல்லாமே நமக்குமேல வில்லனுங்களா இருக்குதுங்க…”
“பெத்தவங்களயா?” நம்பமுடியாமல் பதற்றத்தோடு கேட்டான். “பெத்தவங்களோ, மத்தவங்களோ? யாருக்குத் தெரியும்? கூடவச்சி பாத்துக்க மனசில்லாம, கொண்டாந்து தள்ளிட்டு போயிடறாங்க? குப்பய கொட்டறமாதிரி.”
சொக்கலிங்கம் திரும்பி அந்த உருவங்களை மறுபடியும் பார்த்தான். கொஞ்சம் பருக்கைகள் வயிற்றுக்குள் இறங்கியதும் அவர்கள் கண்களில் சற்றே உயிர்க்களை திரும்பியதுபோல இருந்தது. வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தவர் கண்கள் இப்போது அருகில் எருக்கஞ்செடிமீது உட்கார்ந்திருந்த வெட்டுக்கிளியை வெறித்துப் பார்த்தன.
“ரெண்டு வருஷத்துக்கு முன்னால இப்பிடி யாரோ ஆரம்பிச்சி வச்சிட்டாங்க சார். ஒவ்வொரு அறயிலயும் ஒவ்வொன்னும் படற அவஸ்தய கண்ணாலியே பாக்கமுடியாது சார். மழகாலம் குளுருகாலம்னு வந்தா இன்னும் கொடும. என்னால முடிஞ்சத கொண்டாந்து நா குடுப்பன். இங்க வர டுரிஸ்டுகாரங்க யாராச்சிம் குடுத்துட்டு போவாங்க. எவ்வளவோ காலம்தான் சார் அப்படி வச்சிருக்கமுடியும்? பாண்டிச்சேரியில இப்பிடிபட்டவங்களுக்கு ஒரு ஆசிரமம் இருக்குதுன்னு கேள்விப்பட்டு நேருலயே போயி அவுங்ககிட்ட சொல்லிட்டு வந்தன். தோ தோன்னு சொன்னாங்களே தவுர, அவ்வளவோ சீக்கிரத்துல அவுங்க வரலை. என்னமோ அவுங்களுக்கு என் மேல சுத்தமா நம்பிக்கயே வரல. படிக்காதவன்னு ரொம்ப அலட்சியமா நடந்துகிட்டாங்க. நானும் உடாம தெனமும் போனதால ஒருநாளு கௌம்பி வந்தாங்க. அதுக்கப்புறம்தான் நம்பிக்க வந்திச்சிபோல அவுங்களுக்கு. அப்பறம் வேன் வச்சி ஆறாறு பேரா கூட்டிகினு போனாங்க….”
“அப்பறம் இவுங்க எப்பிடி..?”
“ஒரு செட்டு கௌம்பி போயிடுச்சின்னா, கொஞ்ச நாள்லயே இன்னொரு செட்டு வந்துருது சார். இதோட ஆறு செட்டு அனுப்பிவச்சிட்டேன். இப்ப இருக்கறது ஏழாவது செட்டு. இதும் விஷயமாத்தான் காலயிலகூட டவுனுக்கு போயிட்டு வந்தன்.”
சொக்கலிங்கத்துக்கு தொடக்கத்தில் உருவான அச்சமும் அருவருப்பும் முற்றிலும் கரைந்து போய்விட்டன. அனுதாபம் மட்டுமே எஞ்சியிருந்தது. “இவுங்கள கேட்டா யாரு, என்னன்னு விவரம் சொல்லமாட்டாங்களா?” ஆர்வத்தோடு அவனைக் கேட்டான்.
“பெரும்பாலும் புத்தி சுவாதீனம் இல்லாதவங்க சார். சுவாதீனத்தோடு இருக்கறவங்க ரொம்ப அழுத்தக்காரங்களா இருப்பாங்க. ஏதோ ஒரு அவமானம், கசப்பு. கடசிவரைக்கும் வாயே தெறக்கமாட்டாங்க. இவ்வளவு காலம் கூட இருந்தவங்களே நம்மள இப்பிடி பண்ணிட்டு போயிட்டாங்களேன்னு நெனச்சிக்குவாங்களோ என்னமோ, அப்படியே உள்ளுக்குள்ளயே ஒடுங்கி போயிடுவாங்க. பேசிபேசிதான் விஷயத்த தெரிஞ்சிக்குவன். ஒன்னு ரெண்டு பேரு சாப்பாட்டகூட தொடமாட்டாங்க. பட்டினியாவே இருந்து உயிர உட்டுடுவாங்க. நானே இந்த கையால மூணுபேருக்கு இங்க கொள்ளி வச்சிருக்கேன்.”
“கொண்டாந்து உடறவங்க யாருமே அப்பறமா தேடி வரமாட்டாங்களா?” ஆற்றாமையோடு கேட்டான் சொக்கலிங்கம். “இதுவரிக்கும் நான் அப்பிடி யாரயும் பாத்ததில்ல சார்…” என்றபடி தண்ணீர் வாளியிலிருந்து எல்லாருக்கும் தண்ணீர் கொடுத்துவிட்டு, பாத்திரங்களோடு சொக்கலிங்கத்துக்கு அருகில் வந்தான் அவன்.
இரண்டு பேரும் சிறிதுதொலைவு நடந்து எருக்கம்புதர்களைக் கடந்து மணற்பரப்புக்கு வந்து உட்கார்ந்தார்கள்.
“இந்த மொதல் அறயில இருக்கறாரே, அவரு பெரிய விவசாயியாம் சார். சொந்தமா ஊடு. ரெண்டு காணி நிலம். எல்லாம் வச்சிருந்தாராம். மூணு புள்ளைங்க. நாலு பொம்பள புள்ளைங்க. ஒன்னா வேலசெஞ்சி, ஒன்னா பொங்கி சாப்புட்ட குடும்பம் கல்யாணத்துக்கு அப்பறம் சுக்குநூறா ஒடஞ்சி போச்சி. சொத்த பிரிச்சி தான்னு ஒரே சண்ட. பஞ்சாயத்துவரிக்கும் போயிருச்சி. ஆளுக்கு கொஞ்சம் பிரிச்சி வாங்கனவனுங்க யாருமே விவசாயம் பாக்கலை. பணத்த எடுத்துகினு டவுனுபக்கமா போயிட்டானுங்க. வயசானதுங்க ரெண்டுமட்டும் சொந்த ஊருலயே கூலிவேல செஞ்சி பொழச்சிருக்குதுங்க. நாலே நாளு காயலாவுல பொண்டாட்டிகாரி போயி சேந்துட்டா. ஆதரவுக்கு யாருமில்லாம பொண்ணு ஊட்டுக்கு வந்துருக்காரு கெழவரு. சொத்தயெல்லாம் புள்ளகாரனுங்களுக்கு குடுத்துட்டு சோத்துக்கு மட்டும் இங்க வந்துட்டியான்னு தெனம் மூஞ்சடி மொறத்தடி அடிச்சி சோறு போட்டிச்சாம் அந்த பொண்ணு. ஒருநாளு மருமவன் காரன் புள்ள ஊட்டுக்கு போவலாம் வான்னு பஸ்ல ஏத்தி இட்டாந்து இந்தப் பக்கமா உட்டுட்டு போயிட்டானாம்….”
ஒரு நாயொன்று ஓடிவந்து அவன் அருகில் நின்றது. “வாடி வா வா. ஒன்னத்தான் காணமேன்னு பாத்தினுருந்தன்…” என்றபடி அகலமான ஒரு கல்லின்மீது வாளியில் மிச்சமிருந்த சோற்றை அள்ளிவைத்தான். ஆவலோடு அது நக்கிநக்கித் தின்றது. “வயசான காலத்துல பெத்தவங்க என்ன சார் எதிர்பாக்கறாங்க? பசிக்கற நேரத்துக்கு ஒரு நாலு வாய் சோறு. நாம தின்றதுலயே நாலு வாய் அள்ளிவச்சாலும் போதும். அதுகூட ஒரு புள்ளயால முடியலைன்னா, இந்த ஒலகத்தபத்தி என்ன சார் சொல்லமுடியம்?”
சில கணங்கள் மௌனம். இருவரும் தொலைவிலிருக்கும் கடலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு “நீங்க என்ன செய்றிங்க?” என்று கேட்டான் சொக்கலிங்கம். “இந்த கோட்டய கட்டன நாய்க்கரு அஞ்சாறு தலமொறைக்கு முன்னால எனக்கு தாத்தா மொற. ஆனா இன்னிக்கு எதுவும் பெரிசா என்கிட்ட இல்ல. சின்னதா ஒரே ஒரு தோட்டம் மட்டும் இருக்குது. கொஞ்சம் மல்லாட்ட, கொஞ்சம் மொளகா, தக்காளின்னு போட்டிருக்கன். நான் ஒத்த ஆளுதான். அஞ்சாங்கிளாஸ் படிச்ச சமயத்துல அப்பா பாம்பு கடிச்சி செத்துட்டாரு. அதோட படிப்ப ஏறக்கட்டியாச்சி. ரெண்டுமூணு வருஷத்துக்கு அப்பறமா, தண்ணியெடுக்க போன எடத்துல தடுமாறி அம்மாவும் கெணத்துல உழுந்து செத்துடுச்சி. நானே பொங்கி, நானே சாப்புட்டு…. அப்படியே காலம் ஓடுது சார்” சொக்கலிங்கம் அவன் முகத்தையே பார்த்தான். அதில் தெரிந்த அமைதியைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“கல்யாணம் பண்ணிக்கலையா?” அவனுடைய உரையாடல் சொக்கலிங்கத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.
“யாராவது நல்ல பொண்ணா கெடச்சா கட்டிக்கலாம்னு எனக்கும் ஆசதான் சார். ஆனா எதுவும் சரியா கூடி வரல. பத்து பன்னெண்டு இடம் பாத்துட்டு வந்தன். அனாதயா கெடக்கறான், பெரிசா தொழில்னு ஒன்னுமே இல்ல, சொல்லிக்கறாப்புல பணப்பொழக்கம்னு எதுவும் கெடையாதுன்னு என்னென்னமோ காரணம் சொல்லி யாருமே பொண்ணு தரல. சரி நமக்கு விதிச்சது இப்பிடித்தான்போலன்னு நானும் பெரிசா கவலப்படல….” அவன் சிரிப்புமாறாமல்தான் சொன்னான். ஆனாலும் கேட்கிறபோது வருத்தமாக இருந்தது. இந்தப் பிள்ளைக்கா இப்படி என்று தோன்றியது. பேச்சை உடனடியாக வேறு திசையில் மாற்றவேண்டும் என்று நினைத்தான் சொக்கலிங்கம்.
“அந்த தாத்தாவபத்தி மட்டும்தான் சொன்னிங்க. மத்தவங்க?”
“மத்தவங்களபத்தி எதுவும் தெரியல சார். நானும் எப்படிஎப்படியோ பேச வச்சிரணும்னு ரொம்ப முயற்சி செஞ்சி பாத்துட்டேன். ஒன்னும் பலிக்கலை. ஆணா இருந்தா என்ன, பொண்ணா இருந்தா என்ன சார், ஒருதரம் மனச பூட்டிகிட்டாங்கன்னா, அப்பறம் தெறக்கவே தெறக்காது. என் அனுபவத்துல அத நல்லாவே புரிஞ்சிகிட்டேன்…”
அவன் பேசப்பேச கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல இருந்தது. “மனுசன் கைவிட்டா என்ன சார், மேல இருக்கற கடவுள் என்னைக்கும் யாரயும் கைஉடமாட்டாரு சார். எல்லாருக்கும் என்னென்ன எங்கெங்க குடுக்கணும்னு அவருக்கு நல்லா தெரியும் சார். அந்த அம்மா நெலமயயே எடுத்துக்குங்க. கரச்சிக் குடிக்கறதுக்கு கஞ்சியோ கூழோ இருந்தா போதும்னு நெனைக்கறவங்க அவுங்க. மாட்டுக்கொட்டாய்ல ஒடுங்கி நிக்கற நெலமயிலகூட நாலு குருவிங்களுக்கு தன்கூட இருக்க எடம்குடுத்து சோத்த பங்குபோட்டு சாப்படற அம்மாவ இன்னானு சொல்லமுடியும்?”
“அது சரி” சொக்கலிங்கம் கரைந்து நின்றான்.
“லச்ச ரூபா கோடி ரூபான்னு வச்சிருந்தாமட்டும் நல்லா வாழந்துடமுடியாது சார். மனசுல கொஞ்சமாச்சிம் ஈரம் இருக்கணும். ஈரத் தரயிலதான் போட்ட வெததான் மொளைக்கும் சார். கட்டாந்தரையில போட்டா காஞ்சி மக்கித்தான் போவும்..”
சொக்கலிங்கம் அவன் முகத்தையே சில கணங்கள் பார்த்தான். ஆழ்மனம் அவன் சொன்னதையெல்லாம் இன்னொருமுறை சொல்லிப் பார்த்துத் தொகுத்துக்கொண்டிருந்தது. அவன் சொன்ன ஈரம் அவனுடைய முகத்தில் மலர்ச்சியாகவும் உதடுகளில் புன்னகையாகவும் சுடர்விடுவதைப் பார்த்தான். கருணையின் தோற்றமாகவே அவன் தோன்றினான்.
“அப்பா..” சரளாவும் மஞ்சுளாவும் கரையிலிருந்து அழைப்பதைப் பார்த்தான் சொக்கலிங்கம். குரல் கேட்கவில்லை. கொடியசைப்பதுபோல கைகளை அசைப்பதுமட்டும் தெரிந்தது. எழுந்து பின்புறத்தில் ஒட்டியிருந்த மணலை உதறினான். அவர்களைநோக்கி “இதோ வந்துட்டேன்” என்பதுபோல கைகளை அசைத்தான். “ரெண்டும் என் பொண்ணுங்க. காலேஜ்ல தமிழ்நாட்டுக் கடற்கரைகள்னு ஒரு ப்ராஜெக்ட் குடுத்திருக்காங்க. லீவுல செய்றதுக்காக. பத்து நாளா தொணதொணன்னு ஒரே அரிப்பு. எங்க ஆபீஸ்ல எனக்கு இப்பதான் லீவு கெடச்சிது. அதான் ரெண்டு நாளா வண்டியிலயே ஒவ்வொரு கடற்கரயா பாத்துட்டே வரோம். இது ஏழாவது எடம்.”
இளைஞன் சொக்கலிங்கத்தைப் பார்த்துப் புன்னகைத்தான். “சரி சார். நீங்க கௌம்புங்க. அவுங்கள்ளாம் ஒங்களுக்காக நிக்கறாங்க பாருங்க. நானும் ராத்திரி பொழுதுக்கு இதுங்களுக்கு ஏதாச்சிம் ஏற்பாடு செய்யணுமே…” என்றபடி வாளிகளை எடுக்கத் திரும்பினான்.
“பொழுதோட போனிங்கன்னா உப்பளம், வீராம்பட்டணம்லாம் பாக்கலாம். அந்த ஊரு கரைங்கல்லாம் ரொம்ப விசேஷம். இப்பிடி கடல்முன்னாலயே நின்னு பாக்கறது ரொம்ப நல்ல விஷயம் சார். பச்சபுள்ளைங்க மனசுல இந்த அனுபவம்லாம் அப்படியே ஆணியடிச்சாப்புல காலத்துக்கும் நின்னுடும். புஸ்தகத்துல பாக்கும்போது கடல்ங்கறது ஏதோ உப்புத்தண்ணி ஊறி நிக்கற இடம்னுதான் தோணும். ஒலகத்துல நாலுல மூணு பாகத்த வீணா அடச்சிகினு கெடக்குதுன்னு எரிச்சல்கூட வரும். ஆனா நேரா பாக்கும்போதுதான் கடல்ங்கறது தண்ணிமட்டும் கெடயாதுன்னு மொதல்மொதலா புரிய ஆரம்பிக்கும். கடல் கடவுளுடைய மனசு மாதிரி சார். அதும் கருணதான் இப்பிடி அலயா பொங்கி வழியுது. அதனுடைய அரவணைப்புல எத்தனயோ கோடிக்கணக்கான உயிர்ங்க வாழுது. கடல பாக்கற மனுசன் அந்த ஒன்ன தெரிஞ்சிகிட்டாவே போதும் சார். பெரிய ஞானம் அது…” புன்னகையோடு சொல்லிக்கொண்டிருந்தவனை ஆச்சரியமாகப் பார்த்து நின்றான் சொக்கலிங்கம்.
(2010)
- நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!
- தெற்காலை போற ஒழுங்கை
- In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)
- 2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. !
- ஒரு பேய் நிழல்.
- மெய்த்திரு, பொய்த்திரு
- அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -9
- புகழ் பெற்ற ஏழைகள் 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் கலைஞனாகத் திகழ்ந்த ஏழை…
- மொழி வெறி
- இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர்.
- தாகூரின் கீதப் பாமாலை – 89 கண்ணீர்ப் பூமாலை .. !
- ஓட்டை
- அடைக்கலம்
- துண்டுத்துணி
- NJTamilEvents – Kuchipudi Dance Drama
- கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014
- சீதாயணம் படக்கதை -7 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி]
- இரு ஓவியர்களின் உரையாடல்கள்
- தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25
- அம்மா என்றொரு ஆயிரம் கவிதை
- மருமகளின் மர்மம் 3
- ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்
- அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்
- நீங்காத நினைவுகள் -23
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. !
- வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2