நீங்காத நினைவுகள் – 24

This entry is part 16 of 24 in the series 24 நவம்பர் 2013

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும்

ஓர் எழுத்தாளரின் தன்மைகளைப் பற்றியோ, அவர் வாழ்வில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகள் பற்றியோ அவர் படைப்புகளின் அடிப்படையில் ஊகிப்பது பெரும்பாலும் சரியாக இருக்காது. என் படைப்புகளின் அடிப்படையில் என்னைப்பற்றியும் என் பெற்றோர் பற்றியும் தாறுமாறான கணிப்புக்கும் முடிவுக்கும் சிலர் வந்தது பற்றி அறிய நேர்ந்து நான் தொடக்க நாள்களில் திடுக்கிட்டுப் போனதுண்டு. ஆனால், சராசரி மனிதர்கள் அப்படித்தான் யோசிப்பார்கள் என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டு சமாதானம் செய்தும் கொள்ளும் பக்குவத்தையும் விரைவிலேயே அடைந்து யாரும் எதையும் பேசிவிட்டுப் போகட்டும் என்று அவற்றை மேற்போட்டுக்கொள்ளாத மனப்பக்குவத்தை அடைந்துவிட்டதும் உண்டு.
பெரியவர்களுக்கான எனது முதல் கதை குறுநாவலாக ஆனந்தவிகடனில் வெளியான போது, அதில் வரும் தகப்பனார் என் அப்பாதான் என்று ‘திட்டவட்டமாக’ ஊகித்தவர்கள் உண்டு! ஜாதிப் பிரிவுகளில் கடுகளவும் நம்பிக்கையே இல்லாத என் அப்பா தம் மகளின் கலப்பு மணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று சிலர் காது கடித்ததை என்ன சொல்ல! அது மட்டுமா? என் அப்பா பள்ளி ஆசிரியர் என்பதை யறிந்திருந்த சிலர் அவர் – அந்தக் கதையில் வருவது போல் – ஒரு சம்ஸ்கிருதப் பேராசிரியரா என்பதைக் கண்டுபிடிக்க முற்பட்டதும் உண்டு! ஓர் அய்யர்ப் பெண்ணும் அய்யங்கார்ப் பையனும் காதலித்ததை அந்த அய்யர்ப் பெண்ணின் அப்பா எதிர்த்ததாக அந்தக் கதையில் வருகிறது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்தக் கதையில் வரும் தாய்தந்தையர் பெருநகர்களில் உள்ள படிதத பெற்றோரிடையே பெருமளவு குறைந்துவிட்டாலும்,  கிராமப்புறங்களில் அப்படி ஒரு மாற்றம் பெரிய அளவில் நிகழ்ந்துள்ளதாய்ச் சொல்ல முடியாது.  அதிலும் பிராமணர் அல்லாதாரிடையே துளியும் மாற்றமில்லை என்றே சொல்லிவிடலாம். அவர்கள் படிப்புக்கும் நடந்துகொள்ளுவதற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது. ஏன்? கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, நகர்ப்புறங்கள் அருகே உள்ள ஊர்களிலும் கூட அவர்கள் நடவடிக்கைகள் அப்படித்தான் சொல்லுகின்றன.
“அரியும் சிவனும் ஒண்ணு” எனும் அந்தக் குறுநாவல் வெளியான போது என் தந்தையார் காலமாகி ஓர் ஆண்டு முடிந்திருந்தது. அதுகாறும் அவ்வப்போது சிறுவர்களுக்காக எழுதிக்கொண்டிருந்த நான் பெரியோர்க்கான எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றது அந்தக் கதையின் வாயிலாகத்தான. அவரது மறைவுக்குப் பின்னர்தான் எனது இந்தக் கதை வெளியானது என்பதை வைத்து அவர் உயிருடன் இருந்த காலத்தில் தம் மகளின் கலப்பு மணத்தை எதிர்த்தார் என்பதாய்த் தாங்களாகவே சிலர் ஒரு கற்பனைக் கதையை எழுதிக்கொண்டதை என்னவென்று சொல்ல! சாதிகளில் கடுகளவும் ஈடுபாடில்லாத நம் அப்பாவுக்கு இப்படி ஓர் அவதூறா என்று மனம் வேதனைப்பட்டது. அவருக்கும் அந்தக் கதைக்கும் தொடர்பே இல்லை என்று நான் பத்திரிகையில் விளம்பரமா கொடுப்பது!
அடுத்து அதே இதழில் வந்த  “அக்காவுக்கு வயசாச்சு” எனும் கதை ‘இவளது சொந்தக் கதையேதான்’ என்று பந்தயம் கட்டியவர்களும் உண்டு என்று கேள்விப்பட்ட போது அழுவதா சிரிப்பதே என்று தெரியவில்லை.
சில நாள் கழித்து “அதிர்ச்சி” எனும் கதை அதே இதழில் வெளிவந்தது. அதன் விளைவு எனக்கு அதிர்ச்சியே அளித்தது எனலாம். புரோகிதனாக இருக்கும் ஒரு தகப்பன் தன் மனைவி மரித்ததும் திருமண வயது நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இரண்டு மகள்கள் இருக்கையில் பொறுப்பற்று மறுமணம் செய்துகொண்டு மேன்மேலும் தன் குடுபத்து நபர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறான்.  இரண்டு பெண்களும் தெருக்களில் திரிந்து வீட்டில் தயாரிக்கும் தின்பண்டங்களை விற்றுச் சம்பாதிக்க நேர்கிறது.  தன் அக்காவுக்கு வயது ஏறிகொண்டே போவதையும், அவள் திருமணம் பற்றி அப்பா ஒப்புக்குக் கூடப் பேச்செடுக்காத நிலையையும் சகித்துக்கொள்ள முடியாத அவள் தங்கை ஒரு நாள் தன் அப்பாவைக் கடுமையாய்ச் சாடுகிறாள். அவர் மறுமணம் செய்துகொண்டு குடும்பத்தைப் பெருக்கிக் கொண்டிருந்ததை வெளிப்படையான – சற்றே மரியாதைக்குறைவான – சொற்களால் தாக்குகிறாள் என்று கதை போகிறது. இதைப் படித்துவிட்டு என் அப்பா ஒரு புரோகிதரா என்று அக்கம்பக்கத்தில் விசாரித்துத் துப்பறிய முயன்றவர்கள் உண்டு!
இதுவாவது பரவாயில்லை. ஆனால், சில அறிவாளிகள் அந்தக் கதையில், தனக்குத் திருமணம் ஆகவில்லையே என்று வேதனைப்படும் மூத்த மகள் நானே என்று கற்பனை செய்துகொண்டு விட்டார்கள்!  மேலும், அந்த அக்காளே தன் குடும்பக் கதையைச் சொல்லுவது போல்  நான் எழுதியிருந்தேன். தன்னிலையில் சொல்லப்பட்டதால் அந்தக் கதாநாயகி நானே என்று பலரும் முடிவு செய்துவிட்டார்கள்! அது பற்றிக் கவலை இல்லை.  ஆனால், அதன் பின் எனக்கு வந்துகொண்டிருந்த அசட்டுத் தனமான காதல் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிலும் இந்தக் கதையைத் தொட்டும், அதன் சாரத்தை என்னுடன் தொடர்பு படுத்தியும் அவை எழுதப்பட்டன. அவ்வாறு கடிதங்கள் மூலம் என்னை அணுகியவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே மணமாகி, மனைவி, குழந்தைகுட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் என்பதுதான் விந்தை!  ‘சின்ன வீடு’ வைத்து எனக்கு ‘வாழ்வு’ அளிக்கத் தயாரக இருப்பதாக அவர்கள் உளறினார்கள். ‘அட, பாவிகளே!’ என்று சினந்து, சிரிக்கவும் செய்தேன்.  எங்கள அலுவலகத்தில் பணியில் இருந்த ஒருவரே – மணமாகி மனைவியுடனும், குழந்தைகளுடனும் வாழ்ந்துகொண்டிருந்தவர் –  எனக்கு அப்படி ஒரு கடிதம் எழுதினார். அதைச் சுக்கு நூறாய்க் கிழித்து அந்தத் துகள்களை அதே உறையில். போட்டு, அதை இன்னொர் உறையில் வைத்து அவருக்கே அதைத் திருப்பி யனுப்பினேன். அலுவலக வராந்தாக்களில் தற்செயலாய் எதிர்ப்படுகையில் வணக்கம் சொல்லும் வழக்கமுள்ள அவர் அதற்குப் பிறகு என் கண்ணிலேயே படவில்லை.
சாதாரணக் கடிதங்களுக்கே இப்படி முட்டாள்தனமாக எதிரொலிக்கும் அசடுகள் ‘வேறு மாதிரியான’ – அதாவது “ஒரு மாதிரியான” – எழுத்துகளுக்கு எப்படி எதிரொலிப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், அதற்கெல்லாம்  கவலைப்  பட்டுக்கொண்டிருந்தால் எழுத்துலகில் எந்தச் சாதனையையும் நிகழ்ந்த முடியாது என்பதும் உண்மைதான். ‘போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்’ என்னும் பற்றற்ற மனப்பக்குவத்துடன் எழுதுவதே சிறப்பு. நியாயங்களைச் சொல்லுவதற்காகவும், அநீதிகளைச் சுட்டிக்காட்டுவதற்க்காகவும் – நம் கருத்துகளை ஏற்காதவர்களைப் பொருட்பதடுத்தாமல் நடு நின்றும், அச்சமின்றியும் – மாறுபட்ட கருத்துகளைச் சொல்லுவதற்காகவும் மட்டுமே இந்தப் பற்றற்ற பக்குவம் தேவையே ஒழிய, சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவற்றைக் கூறுவதற்காக அன்று. உண்மையாகவே தூற்றுதலுக்கு உரியவற்றை நாம் மனித சமுதாயத்துக்குத் தரலாகாது என்பதே ஏற்கப்பட வேண்டிய நியாயம் என்பதையும் எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தூற்றுதலும் போற்றுதலும் காலமாறுதல்களுக்கு ஏற்ப மாறும் எனும் சால்சாப்பு இது போன்ற விஷயங்களுக்குப் பொருந்தாது. சில நியாயங்கள் நிரந்தரமானவை. காலம் எதுவானாலும், சில விஷயங்கள் எப்போதுமே தீமை பயப்பன.  சில எப்போதுமே நன்மை பயப்பன.  இது யாவர்க்கும் தெரியும். தெரிந்தே தப்புச் செய்கிறவர்களைத் திருத்த முடியாது. ‘திருக்குறள் பெரும்பாலான மக்களைத் திருத்திவிட்டதா?’ என்று விதண்டாவாதம் செய்கிறவர்களை என்ன செய்வீர்கள்?                    காந்தி அடிகள் என்ன சொன்னார்?  ‘ஒரு பெண் கதாபாத்திரத்தை வர்ணிக்கும் போதோ, அவள் சார்ந்த அந்தரங்க விஷயங்கள் பற்றி எழுதும் போதோ, அந்தப் பாத்திரத்தின் இடத்தில் உங்கள் தாயைக் கற்பனை செய்து பாருங்கள். ஆட்சேபத்துக்குரிய எந்தச் சொல்லையும் எழுத மாட்டீர்கள்’ என்று அவர் எழுத்தாளர்க்குச் சொன்னாரல்லவா! இதை விடவும் சுருக்கமான அறிவுரை இருக்க இயலுமா?
மேற்காணும் காந்தியடிகளின் அறிவுரையை மனத்தில் கொண்டால் மனச்சாட்சியுள்ள எழுத்தாளர்கள் படிப்பவர் மனங்களில் காமவிகாரங்கள் எழும் எழுத்துகளைப் படைக்க மாட்டார்கள். ஏற்கெனவே உள்ள ஊடகங்களின் கைங்கரியத்துடன், இவர்களின் படைப்புகளும் சேர்ந்து கொள்ளூம் போது, நாட்டில் கற்பழிப்புகளே மேலும் பெருகும்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதத்தின் இறுதிப் பகுதியைப் படிடத்தவர்களில் கண்கலங்காதார் எவரேனும் உண்டா? அது எப்பேர்ப்பட்ட காதல் காவியம்! அவரும்தான் காதல் கதைகள் எழுதினார். உள்ளது உள்ளப்டி எழுதுவதாய்ப் பிதற்றிக்கொண்டு சமுதாயத்து இளைஞர்களின் பாலுணர்வுகளைத் தூண்டும் வண்ணம் ஒரு படைப்பையேனும் அவர் தந்துள்ளாரா?
இந்தக் கட்டுரையை எழுத நேர்ந்ததன் பின்னணி சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர் அமரர் சரஸ்வதி ராம்நாத் அவர்கள், ‘கிரிஜா! நீ செக்ஸ் எழுதுவதைக் கவனமாய்த் தவிர்த்து வருவதாய்த் தோன்றுகிறது. நல்லதுதான்.  அப்படியே தொடர்ந்து எழுது. காசுக்கும், மலினமான புகழுக்கும் ஆசைப்பட்டு, உன் கொள்கையைத் துறந்து விடாதே. நீயும் தான் காதல் பற்றி நிறையவே எழுதுகிறாய். ஆனால், உன் எழுத்தில் விரசமோ, கண்ணியக் குறைவான நிகழ்வுகளோ இல்லை. மனத்தின் பாற்பட்ட் உணர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாய்.  உன்னைப் பாராட்டுகிறேன். அப்படியே தொடர்ந்து எழுது. …’ என்று குறிப்பிட்டிருந்த கடிதம் இன்று என் பார்வையில் பட்டு இதனை எழுதுவதற்கு ஒரு தூண்டுகோலாயிற்று. அவருக்கு எனது நன்றி. (என்னை நானே முதுகில் தட்டிக்கொண்டதற்கு மன்னிக்கவும்.)

Series Navigationஜூனோ (அமெரிக்கா, இயக்குநர் – ஜேசன் ரைட்மன்) மற்றும் ஆதலால் காதல் செய்வீர் (தமிழ்நாடு, இயக்குநர் – சுசீந்திரன்) இரண்டு கலாச்சாரங்களும் ஒரு நிகழ்வும்ஜாக்கி சான் 17. குருவின் இளவல்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    கதையை படித்துவிட்டு பெரும்‘பலான’ ஆண் வாசகர்கள் காதல் கடிதம் எழுதிய செய்தியைப் படித்து ஆச்சரியப் படவில்லை. நம்ம தமிழர்கள் எல்லாம் இரக்கமுள்ள மனசுக்காரங்க.கதையை படிக்கும்போதே அவர்கள் மனதில் இது “கதையல்ல நிஜம்” என்று நெஞ்சுக்குள்ளே செய்தி வரி ஓடிக்கொண்டிருக்கும் அளவிற்கு கதை அதன் போக்கில் ஒரு உண்மைத்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறது.இது கதாசிரியருக்கு கிடைத்த வெற்றி என்றுதான் நினைக்க வேண்டும்.ஆண் எழுத்தாளர்கள் அப்படித்தான் நினைப்பார்கள்.இதில் கோபப்பட ஒன்றுமேயில்லை.எழுத்தாளர் பெண்ணாய் இருப்பதால் இவைகளை எதிர் கொள்வதில் சங்கடம் இருக்கத்தான் செய்யும்.உண்மையில் பெண்கள் எழுதும் கதைக்கு ஆண்களிடம் கூடுதல் ஈர்ப்பு இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே.இந்த ஈர்ப்பை எதிர்பார்த்தே பெண் பெயரில் ஆண்கள் எழுதினார்கள்.சுஜாதா,புஷ்பா தங்கதுரை.சில கதைகள் கதை மாதிரியே தெரியாது.அச்சு அசலா கதாசிரியர் அனுபவம் போலவே இருக்கும்.உதாரணத்திற்கு,
    சென்னை ஐஐடி இளம் பேராசிரியர் திரு.அருண் நரசிம்மன் அவர்கள் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். “வக்கிர துண்டம் மகா காயம்”அச்சு அசலாக அவரே பேசுவதுபோல் காமெடி கலாட்டாவாக இருக்கும்.ஆனால் அது சிறுகதை.ஆனால் நடந்த உண்மை போல் இருக்கும்.கற்பனையை உண்மையாக்குவதில்தான் கதாசிரியனின் திறமை உள்ளது.அவசியம் படியுங்கள்.
    http://www.ommachi.net/archives/4338

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *