ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

 

 

குருவின் பாராமுகம் சானை வெகுவாக பாதித்தது.

 

குரு ஒரு நாள் எல்லா மாணவர்களையும் அழைத்துப் பேசினார்.

 

“உங்கள் நெடு நாளையப் பயிற்சி முழுமை பெறும் தருவாயில் இருக்கிறது.  நீங்கள் என்னை மகிழ்விக்க இதைச் செய்யவில்லை.  இன்னும் பெரிய சாதனை செய்யவே இந்தக் கடுமையான பயிற்சி. பார்வையாளர்கள் முன்னால் அதுவும்.  என் முன்னால் தவறு செய்தால், தண்டனை மட்டுமே கிடைக்கும்.  ஆனால் அவர்கள் முன் தவறு செய்தால், உங்கள் பெயர் மட்டுமல்லாது, நம் கழகத்தின் பெயர் அத்துடன் குருவின் பெயரும் கெடும்.  அது புண்களைப் போன்று வெகு விரைவில் ஆறாது.  அதனால் தான் சென்ற சில வாரங்களாக கடுமையாகப் பயிற்சி செய்ய வைத்தேன்.  முதன்முறை மேடை ஏறினாலும், தவறேதுமில்லாமல் முழுமையாகச் செய்ய வேண்டும்.  அந்தச் சந்தர்பம் உங்களுக்கு விரைவில் கிடைக்க இருக்கிறது” என்றார்.

 

கனவு நனவாகும் காலம் வந்துவிட்டது.  கைதட்டல்கள்.  ஆரவாரங்கள். புகழ். பெருமை. எல்லாமே கிடைக்கப் போகிறது.

 

முதல் நிகழ்ச்சியே அவர்களுக்கு பழக்கமான லாய் யூயுன் கேளிக்கைப் பூங்காவில்.

 

“உங்களில் சிலர் திரைக்குப் பின்னால் வேலை செய்ய வேண்டும்.  சிறப்பான சிலர் மட்டும் மேடையில் ஏறி நடிக்க வேண்டும்.  அந்தச் சிலரை நான் நாளை தேர்ந்தெடுப்பேன்” என்று கூறிச் சென்றார்.

 

ஒவ்வொருவரும் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்த போதும் யார் யார் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று கூடி கூடி பேசிக் கொண்டனர்.

 

அன்றைய மாலைப் பயிற்சியின் போது, அவரவர் தங்கள் திறமைகளைக் காட்ட குருவின் கவனத்தைக் கவர பெரிதும் கருத்துடன் செய்தனர்.  பல வருடப் பயிற்சிக்கு நாளை பலன்.  குரு ஒரு நாள் பயிற்சியில் மாணவர்களை தேர்ந்தெடுத்து விட மாட்டார் என்ற எண்ணம் இருந்த போதும் முயற்சி செய்வதில் தவறில்லை என்று எண்ணி, அதிக கவனத்துடன் மாணவர்கள் பயிற்சியைச் செய்தனர்.

 

யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அன்றைய இரவு முழுவதும் மாணவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.

 

அடுத்த நாள் காலை.  குரு மாணவர்களை அழைத்தார்.

 

“மேடையில் நாம் ஏழு சிறிய நற்பேறுகள் என்ற நாடகத்தைச் செய்யப் போகிறோம்.  அதற்கு ஏழு பேர் தேவைப்படுகிறார்கள். அவர்கள் யார் யார் என்று நான் சொல்கிறேன். முன்னால் வந்து நில்லுங்கள்..” என்றார்.

 

ஐந்து முத்த மாணவர்களின் பெயர்களைக் கூறிய பின், சிறிது அமைதியானார்.  “ஆறாவதாக யூன் பியாவ்..” என்றார். மற்ற எல்லோரையும் விட வயதில் சிறியவனான பியவைக் கூறியதும் பலர் அதிர்ச்சியடைந்தனர்.  தாங்கள் தேர்வு செய்யப்படுவோமா என்ற ஏக்கத்துடன் நின்றனர்.

 

சான் தான் சிகரெட்டைத் திருடிய தவறு செய்த பின்னர், குருவிற்கு தன்னைப் பிடிக்காமல் போனதன் பலனை அப்போது யோசித்துப் பார்த்தான்.  வாய்ப்பு கிட்டாது என்று வெளிமனம் சொல்லிய போதும், வாய்ப்பு கிட்ட வேண்டும் என்று அவன் உள்மனம் மட்டும் அரற்றிக் கொண்டது.

 

“கடைசியாக.. யூன் லோ முன்னால் வா..” சான் தேர்ந்தெடுக்கப்பட்டான்.  சந்தோஷத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், குட்டிக்கரணம் போட்டு முன்னால் சென்று நின்றான்.

 

ஏழு பேரையும் நோக்கி, “சகோதர சகோதரிகளை வணங்குங்கள்..” என்று ஆணையிட்டார்.

 

அனைவரும் மகிழ்ச்சியுடன் குனிந்து நிமிர்ந்தும், மாணவர்கள் பக்கம் நோக்கி, “மாணவர்களே.. சீன நாடகக் கழகத்தின் ஏழு நற்பேறுகளுக்கு வரவேற்புக் கொடுங்கள்..” என்றார்.

 

தாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற ஏக்கம் இருந்த போதும், வாய்ப்பு கிட்டும் நாள் தூரத்தில் இல்லை என்ற எண்ணத்துடன், எல்லோரையும் வாழ்த்த கைத் தட்டினர்.

 

இதுவே சானுக்கு முதல் பாராட்டு. கைத்தட்டல்.

 

நிகழ்ச்சிக்கு முன்னர் கடும் பயிற்சி.  மேடை ஏறும் நாள் வந்தது.  ஏழுவரும் சிறப்பாகச் செய்தனர். கழகத்திற்கு நற்பெயரும் கிட்டியது.  குருவிற்கு மகிழ்ச்சி.  ஏழு சிறிய நற்பேறுகள் பல இடங்களில் நடத்தப்பட்டது.  மற்றொரு ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு முழு பயிற்சியும் அளிக்கப்பட்டது.  ஏழுவர் குழு அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது.  சான் அதில் நடிப்பதைப் பெரிதும் விரும்பினான்.  ஒபராவில் ஆண்களே பெண்கள் வேடமிட்டு நடப்பது சகஜம்.

 

சானும் சில சமயம் பெண் வேடமிட்டு நடித்ததுண்டு.

 

நாடகம் நடிக்கச் சென்ற போதெல்லாம், வெளியே நல்ல உணவு கிடைத்தது.  அதனால் அனைவரும் மகிழ்ச்சியுடன் சென்று, சிறப்பாகச் செய்தனர்.

ஆரம்பத்தில் சாதாரண பாத்திரங்களைத் தரப்பட்ட போதும், சானுக்கு முக்கிய பாத்திரமும் ஒரு நாள் கிட்டியது.  சான் அரசானவும், மற்ற அனைவரும் காவலர்களையும் நடிக்கும் நாடகம்.  தன்னை விட மூத்தவர்களும் தனக்கு கீழ் நடப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டான்.

 

நாடகம் ஆரம்பிக்கும் முன், குரு “பதட்டமில்லாமல் நடிக்க வேண்டும்” என்றார்.  சான் இதற்காக காத்திருந்தவன் ஆயிற்றே.  தன்னுடைய வரிகளை பலமுறை சொல்லிக் கொண்டான்.

 

நாடகம் அரங்கேறும் நாள் வந்தது.  எல்லாம் தயார்.  திரைக்குப் பின்னால் பல கலாட்டாக்கள் நடந்த போதும், சான் தன்னுடைய நாயக அரங்கேற்றத்திற்காகக் காத்திருந்தான்.

 

குரு ஆரம்பிக்கும் நேரம் ஆனதும் மாணவர்களை அமைதிப்படுத்தினார்.  நான் தன்னுடைய நாயக உடையுடன் அரங்கத்திற்குள் நுழைந்தான்.  கம்பீரமாகப் பாடினான். படைவீரர்களுக்கு ஆணையிட்டான்.  “நில்” என்றால் வீரர்கள் நின்றனர்.  அவன் செய்வதற்கெல்லாம் கைதட்டல்கள் கிடைத்தன.  சிறப்பாக அமைந்தது நிகழ்ச்சி.

 

மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம், திரைக்கருகே நின்றிருந்த குருவின் மேல் ஒரு கண் இருந்த கொண்டேயிருந்தது.  அவரது கையில் பிரம்பு.  கண்களில் திருப்தியற்ற பார்வை.  சான் தான் ஏதும் தவறு செய்கிறோமோ என்று ஐயம் கொண்டு பிரம்படிகளுக்குத் தயாராய் இருந்தான்.

 

நாடகம் வெற்றிகரமாக முடிந்தது.

 

திரைக்குப் பின் வந்ததுமே, “யூன் லோ.. இங்கே வா..” என்றார் அதட்டலுடன்.

 

“நல்லா கிடைக்கும் போல இருக்கு..” என்று யூன் லுங் வேறு கிளப்பி விட்டான்.

 

“கையை நீட்டு..” என்றார்.

 

ஐந்து பிரம்படிகள்.

 

“குருவே நான் என்ன தவறு செய்தேன்” என்று தன்னுடைய நடிப்பில் ஏதேனும்  தவறிருந்தால் கேட்டுக் கொள்ளலாம் என்று கேட்டான்.

 

“தவறேதுமில்லை.  நீ நன்றாக நடித்தாய்.  ஆனால் நீ எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.  நீ எவ்வளவு தான் நன்கு நடித்த போதும்.. நீ ஒரு போதும் கர்வம் கொள்ளக் கூடாது.  மேடையில் உன்னுடன் மற்றவர்களும் நடிக்கின்றனர்.  நீ உன் திறமையில் எவ்வளவு சார்ந்து இருக்கிறாயோ, அது போல் அவர்களது திறனிலும் சார்ந்து இருக்கிறாய்..” என்று கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.

 

சான் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

 

அடுத்து வந்த பல நிகழ்ச்சிகளில் சான் நடித்தான்.  பல முறை தவறுகளைச் செய்து தண்டைனையும் பெற்றான்.

 

மாணவர்கள் சற்றே பெரியவர்களானதும், நிகழ்ச்சிகளுக்கு அவர்களாகவே சென்று வந்தனர். குருவிற்கு தெரிந்த திரைப்பட நிறுவனத்தினர் கேட்கும் போதெல்லாம், குழந்தைகளை நடிக்க அனுப்பினார்.  மூத்த மாணவர்களை ஸ்டண்ட் கலைஞர்களாக அனுப்பினார்.  நடிக்கச் செல்லும் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து வெள்ளிகளைக் கொடுத்தார்.

 

சான் இந்த வகையில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல பிரபலமான நடிகர்களுடன் நடித்தான். பல படங்களில் முகம் தெரியாத ஸ்டண்ட் கலைஞனாக பணிபுரிந்தான்.  இதன் மூலம் வெளியுலகம் என்னவென்று தெரிந்து கொண்டான்.

—-

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *