புகழ் பெற்ற ஏழைகள்
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
dR.SRK “தத்துவமில்லாத நடைமுறை மலட்டுத்தனமானது; நடைமுறையே இல்லாத தத்துவம் குருட்டுத்தனமானது” வாங்க வாங்க… என்னங்க தத்துவ மழையாப் பொழிஞ்சிக்கிட்டு வர்ரீங்க…..“எழுத்தறிவித்தவன் இறைவனாகும்”, “கல்விக்கழகு கசடற மொழிதல்”, என்னங்க நம்ம முன்னோர்கள் நமக்குச் சொன்ன நீதிக் கருத்துக்களை எல்லாம் எழுத்துப் பிசகாம அப்படியே சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க…என்ன போனவாரம் நான் கேட்ட கேள்விக்குப் பதிலக் கண்டுபிடிச்சிட்டீங்களா…?அட ஆமா…நீங்க சொன்னது ரொம்ப ரொம்பச் சரிங்க.. டாக்டர் ராதாகிருஷ்ணன்தான் அவரு…அவரோட பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் நாளைத்தான் ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடுறாங்க… அதனாலதான் எழுத்தறிவித்தவன் இறைவனாகும் அப்படீன்னு பாடிக்கிட்டே வந்தீங்களா…
ஆமங்க…ஆசிரியர் தாங்க இந்த சமுதாயத்தோட தெய்வம்…நமக்குக் கண்கள் இரண்டுதான்…ஆனா அறிவாகிய மூன்றாவது கண்ணைத் திறக்கறவங்க இந்த ஆசிரியர்கள்தான்…அதனாலதான் நம்ம முன்னோர்கள் மாதா, பிதா, குரு தெய்வம் என்று சொல்லிருக்காங்க..சரி…சரி அவரப் பத்தி ஒங்களுக்குத் தெரியுமா….?என்னது ஓரளவுக்குத்தான் தெரியுமா…? இப்ப என்ன ஒங்களுக்கு நம்ம முன்னாள் குடியரசுத் தலைவரோட வாழ்க்கையப் பத்திச் சொல்றேன் கேட்டுக்குங்க…
சேர்ந்தே இருப்பது கல்வியும் வறுமையும்
நம்ம ஊருல ஒண்ணு சொல்லுவாங்க அதாவது கல்வி, இருக்கும் இடத்தில செல்வம் இருக்காது அப்படீன்னு…இது ஓரளவுக்கு உண்மைதாங்க…நம்ம இராதாகிருஷ்ணன் அவர்களோட வாழ்வும் வறுமை என்ற கொடுமையின் பிடியில் சிக்கித் திணறுச்சுங்க… அவரு பிறந்தது மிகுந்த வறுமையான குடும்பம் தெரியுமா…? ஆனாலும் அந்த வறுமையை மீறி தன்னுடைய முயற்சியால கல்வி உதவித்தொகையைப் பெற்று அதனை வைத்துக்கொண்டே படித்து முன்னேறியவர்தான் ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமி, சீதம்மா ஆகியோருக்கு மகனாக ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார். சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்ததால் அவருடைய பெயரும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்று வழங்கப்படலாயிற்று.
தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் அவர்கள், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ராதாகிருஷ்ணன் ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், தமது கல்வியைஉதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் 1896 – ஆம் ஆண்டு முதல் 1900-ஆம் ஆண்டு வரை திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர்பள்ளியிலும்’ படித்தார். ராதாகிருஷ்ணன் 1900-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்து படித்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறி அங்கு கல்வி கற்றார்.அக்கல்லூரியில் 1904-ஆம் ஆண்டு முதல் 1908-ஆம் ஆண்டு வரை ராதாகிருஷ்ணன் கல்வி கற்றார். இளங்கலையிலும், முதுகலையிலும் ராதாகிருஷ்ணன் தத்துவத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் பயின்றார். இளமையில் தனிமையை நாடிய அவர் எப்போதும் ஏதேனும் சிந்தனையிலேயே இருப்பார்.
ராதாகிருஷ்ணன் தத்துவப்பாடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு அவரோட பேராசிரியர்தான் காரணம். ராதாகிருஷ்ணன் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்தபோது டாக்டர் ஷாத் என்பவர் பேராசிரியராக இருந்தார். அவருடைய தொடர்பினால்தான் ராதாகிருஷ்ணன் தத்துவத்தைப் பாடாமாக எடுத்துப்படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பணி
இராதாகிருஷ்ணன் சமஸ்கிருதம் கற்றவர். இந்தியும் அவர் கற்றுக் கொண்டார். அதோடு மட்டுமல்லாது நம்நாட்டின் வேதங்கள், உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்ரா ஆகியவற்றையும் நன்கு கற்றார். அவர் புத்தமத மற்றும்சமண மதத் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்ததுடன் அவற்றை நம் நாட்டிலும் அறிமுகப்படுத்தினார்.மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமை இராதாகிருஷ்ணன் அவர்களையே சாரும். தத்துவமேதையான இராதாகிருஷ்ணன் இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில்விதைக்கக் காரணமாக இருந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவ இயல் உதவிப் பேராசிரியராகத் தனது பணியை இராதாகிருஷ்ணன் தொடங்கினார். 1910-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்காக சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து எல்.டி. பட்டம் பெற்றார். 1917-ஆம் ஆண்டுவரை தர்க்கவியல் பேராசிரியராக சென்னை மாநிலக் கல்லூரியில் இராதாகிருஷ்ணன் பணியாற்றினார். அவ்வாறு பணியாற்றியபோது தன்னுடைய முதலாவது ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி வெளியிட்டு தத்துவயியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.
“ஆசிரியப் பணி அறப்பணி அதற்கு உன்னை அற்பணி” என்பதற்கேற்ப அவர் தனது ஆசிரியர் பணியைச் செம்மையாகச் செய்தார். இரவீந்திரநாத் தாகூரின் நூல்களை இராதாகிருஷ்ணன் விரும்பிப் படித்தார். தனது சமயக் கருத்துக்களும் தாகூரின் பற்பல சமயக் கருத்துக்களும் ஒன்றுபட்டு அமைந்திருப்பதைக் கண்டு இராதாகிருஷ்ணன் வியப்படைந்தார். அதன் பயனாக அவர் “கவி தாகூரின் சமயக் கருத்துக்கள்” என்ற அரிய ஆராய்ச்சி நூலை வெளியிட்டார்.
இராதாகிருஷ்ணனின் அந்த நூலைப் படித்துப் பார்தத தாகூர் மிகவும் வியப்படைந்தார். என்னுடன் நேரடியாகப் பழகாத போதிலும் என்னுடைய நூல்களைப் படித்தே என்னுடைய கருத்துக்களை நன்கு உணர்ந்து கொண்டுள்ளீர்கள்! வெளியிட்டுள்ள நூலும் உங்கள் பேரறிவும் போற்றுவதற்குயது. உங்களைப் போலத் தெளிவாக வேறுயாரும் என்னை இவ்வளவு நன்றாக உணர்ந்தவர் இல்லை” என்று கூறினார். இதன் மூலம் இராதாகிருஷ்ணனின் பெயரும் புகழும் நாடு முழுவதும் மேலும் பரவியது.
தத்துவஞானி
1918 –ஆம் ஆண்டில், மைசூரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அப்போது மைசூரில் வாழ்ந்து வந்த உலகப் புகழ் பெற்ற டாக்டர் எம்.விஸ்வேஸ்வரையா டாக்டர் இராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்று மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராக நியமித்தார். இப்பல்கலைக்கழகத்தில் இராதாகிருஷ்ணன் பணியாற்றிய போதுதான் அவருடைய இயல்பான அறிவு எட்டுத்திக்கிலும் பெருகிப் புகழைப் பரப்பியது.
மேலும் 1921-ஆம் ஆண்டில், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பணியாற்ற இராதாகிருஷ்ணன் பரிந்துரைக்கப்பட்டார். 1923-ஆம் ஆண்டில், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அரிய படைப்பான “இந்தியதத்துவம்” என்ற நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகம், இராதாகிருஷ்ணன் அவர்களின் இப்படைப்பு பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலை சிறந்தப் படைப்பாகத் திகழ்கிறது. 1931-ஆம் ஆண்டு “ஆந்திரப் பல்கலைக்கழகம் உருவானபோது அதன் துணைவேந்தர்” ஆனார்.
அவரது சிறப்பை அறிந்திருந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இந்து மதத் தத்துவங்கள் பற்றி சொற்பொழிவாற்றுவதற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில் சொற்பொழிவுகளாற்றிய இராதாகிருஷ்ணன் தமது சொற்பொழிவை இந்தியா விடுதலை பெறுவதற்குரிய ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள்சார்புடையதாகவே உள்ளது என்று இராதாகிருஷ்ணன் வாதிட்டார். இந்திய தத்துவங்களை மொழிபெயர்த்தால், மேற்கத்திய தத்துவங்களையும் அது விஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்திய தத்துவத்தை உலகறியச் செய்த தத்துவஞானியாக இராதாகிருஷ்ணன் விளங்கினார்.
தலைசிறந்த சமயக் கருத்துக்களிலும் தத்துவக் கருத்துக்களிலும் ஈடுபாடு கொண்டு விளங்கிய இராதாகிருஷ்ணன் அவர்களை இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்த பல்கலைக்கழகங்கள் சமயச் சொற்பொழிவுக்காக அழைத்தன. அவருடைய சொற்பொழிவு,
“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்”
என்ற திருக்குறளுக்கு ஏற்ப அமைந்திருந்தது. அவரது தத்துவ உரையைக் கேட்ட அனைவரும் தேனுண்ட வண்டைப் போல் மயங்கினர்.
இல்லற வாழ்க்கை
இராதாகிருஷ்ணன் அவர்கள், தனது பதினாறாவது வயதில் தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். 1956-ம் ஆண்டு,இராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது, அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தைக் கடந்திருந்தது. இவர்களது வாழ்க்கை,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
என்ற திருக்குறளுக்கேற்ப அமைந்திருந்தது.
மாணவர்கள் விரும்பிய ஆசிரியர்
இராதாகிருஷ்ணன் மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கினார். நன்னூல்னு ஒரு தமிழிலக்கண நூல் இருக்குது. அந்நன்னூல்,
“குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோள் மலர் நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியனே”
என்று சிறந்த ஆசிரியருக்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது. இந்த இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார்.
மைசூரில் இராதாகிருஷ்ணன் பணியாற்றும் போது அவரிடம் படித்த மாணவர்கள் அவரைத் தெய்வத் தன்மை நிறைந்த மகான் என்றே குறிப்பிட்டனர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் தத்துவப் பேராசிரியராகப் பணி ஏற்க மைசூரை விட்டு இராதாகிருஷ்ணன் புறப்பட்டபோது அவருடைய மாணவர்கள் அவரை ஒரு கோச்சு வண்டியில் அமர வைத்து மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் கைகளால் அவ்வண்டியை இழுத்துச் சென்று புகைவண்டி நிலையத்தில் சேர்த்தார்கள் என்பதொன்றே அவரிடம் மாணவர்கள் வைத்திருந்த மதிப்பை அனைவருக்கும் உணர்த்தும். இவ்வாறு மாணவர்கள் விரும்பிப் போற்றிய புகழ் பெற்ற பேராசிரியராகத் திகழ்ந்தவர் இராதாகிருஷ்ணன் அவர்கள் ஒருவர் மட்டுமே என்பது நோக்கத்தக்கது.
இராதாகிருஷ்ணன் தனது மாணவர்களை பாசத்துடன் நேசிப்பார். அவர்களை எப்போதும் இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு நல்வழி காட்டுவார். அவர்களிடம் எப்போதும் பரிவுடன் அன்புகாட்டி உறவு கொண்டாடுவார். அவர் பாடம் நடத்துவதைக் கேட்கும் மாணவர்கள் பூமியில் கால்படாது ஆகாயத்தில் மிதப்பது போல் மகிழ்வர் என்று கூறுவர். அந்த அளவுக்கு மாணவர்கள் இராதாகிருஷ்ணன் அவர்களை விரும்பினார்கள்.
எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய மேதை
மிகச் சிறந்த ஆசிரியர்கள் சிறந்த எழுத்தாளர்களாகவும் திகழ்வர். அந்தவகையில் இராதாகிருஷ்ணன் அவர்கள் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவர் கல்காத்தாவில் இருந்தபோது அங்கு பணியாற்றிய டாக்டர் அஸூத்தோஸ் முகர்ஜி என்னும் பேராசிரியர் டாக்டர் இராதாகிருஷ்ணன் நிலைத்த புகழ் பெறக் காரணமாக இருந்தார். கல்க்கத்தாவில் இராதாகிருஷ்ணன் வாழும்போதுதான் அனைத்துலகத் தத்துவத்துறை நூலகத்திற்காக ஒரு நூல் எழுதித் தருமாறு நூல்நிலையப் பொறுப்பாளர் பேராசிரியர் ஜே.எச்.முரிஹெட் (E/D/Muriaead) அவர்களின் வேண்டுகோள் கிடைக்கப் பெற்றார். அத்துடன் ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திற்காகவும் இராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த படைப்பொன்றினை வழங்கினார்.
1926-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ மான்செஸ்டர் கல்லூரியில் “மதங்களிடையே ஒப்பீடு!” என்ற தலைப்பில் இராதாகிருஷ்ணன் மிகச் சிறந்த உரை வழங்கினார். 1929-30-ஆம் ஆண்டுகளில் இலண்டன் ஹாக்பர்ட்டில் “இந்துக்களின் வாழ்வியல் நோக்கம்” எனும் தலைப்பில் 17 சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பலரும் குருதேவர் இரவீந்திரநாத் தாகூருக்குப் பிறகு தனிப் பெரும் சிறப்பும் தகுதியும் பெற்ற இரண்டாவது இந்தியர் என்று இவரைப் போற்றினர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புனித பாலியால்ஸ் கல்லூரி முதலவர் பேராசிரியர் இப்பர்ட் ஜோன்ஸ் அவர்கள், “இராதாகிருஷ்ணன் பார்வையில் மாயாஜாலம் இருக்கின்றது; சொற்பொழிவில் இன்னிசை இனிக்கின்றது; முகத்தில் தேஜஸ் ஜொலிக்கின்றது” என்று இராதாகிருஷ்ணனின் சொற்பொழிவு குறித்து குறிப்பிடுவது இராதாகிருஷ்ணன் அவர்களின் மேதைமைத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
1938-ஆம் ஆண்டில் இராதாகிருஷ்ணன் பிரிட்டிஷ் அறிஞர் சங்கத்தில் கெளதமபுத்தர் பற்றி சொற்பொழிவாற்றினார். அதனைக் கேட்ட அறிஞர்கள் தங்களின் சங்கத்தின் உறுப்பினராக இராதாகிருஷ்ணன் அவர்களைத் தேர்வு செய்தனர். இவையனைத்தும் நூலாக வெளிவந்துள்ளன.
பெற்ற சிறப்புகள் வகித்த பொறுப்புகள்
ஆங்கில அராசாங்கம் இராதாகிருஷ்ணன் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் 1931-ஆம் ஆண்டு அவருக்கு “சர்” என்ற சிறப்புப் பட்டம் வழங்கியது. அதனால் அவரை சர் எஸ். இராதாகிருஷ்ணன் என்று குறிப்பிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாது கீழ்த்திசை நாடுகளின் பண்பாட்டுத் துறைப் பேராசிரியராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக நியமிக்கப் பெற்ற ஆசிய நாட்டவர் என்ற பெருமை பெற்றவர் இராதாகிருஷ்ணன் அவர்களே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் அரசு பலகலைக்கழகங்களின் மாநாடு ஒன்றை 1936-ஆம் ஆண்டில் நடத்தியது. அதற்கு இந்தியாவிலிருந்து பிரதிநிதியாக இராதாகிருஷ்ணன் அவர்கள் சென்றார். பின்னர் 1937-38-ஆம் ஆண்டுகளில் லக்னோவில் நடைபெற்ற ஆசியக் கல்வி மாநாட்டிற்குத் தலைமைதாங்கும் சிறப்பும் இராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்டியது.
டாக்டர் இராதாகிருஷ்ணன் பல பொறுப்புகளைத் திறம்பட வகித்தார். 1948-ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்விக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் யுனஸ்கோ நிர்வாக அமைப்பின் தலைவராகவும் இருந்தார். படிப்படியாக உயர்ந்து 1952-ஆம் ஆண்டில் இராதாகிருஷ்ணன் யுனஸ்கோவின் தலைவரானார். 1949 – ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத்யூனியனுக்கும் இந்தியாவிற்கும் ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது. இவர் வகித்த பொறுப்புகளால் அப்பொறுப்புகள் அனைத்தும் சிறப்படைந்தன.
சான்றோர் போற்றிய சான்றோர்
1952-ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 5-ஆம் நாள் ரஷ்யநாட்டுத் தூதுவர் பணியிலிருந்து இராதாகிருஷ்ணன் அவர்கள் விடைபெறும்போது அந்நாட்டின் அதிபர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது ரஷ்யநாட்டின் மனஇயல் பேராசிரியர் பாவ்லோவ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். அப்போது இராதாகிருஷ்ணன் ஸ்டாலினிடம், “நாங்கள் ஒரு பேரரசரைப் பெற்றிருந்தோம். ரத்த ஆறு ஓடிய மாபெரும் யுத்த வெற்றிக்குப் பிறகு அந்த சக்கரவர்த்தி அசோகர் துறவியாக மாறிவிட்டார், நீங்கள் உங்கள் பாதையை நிர்பந்தக் கட்டுப்பாட்டின் மூலம் நிர்ணயித்திருக்கிறீர்கள். அந்த மனமாற்றம் உங்களுக்கும் ஏற்படலாம் எனபதை யாரே அறிவார்?” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த ஸடாலின், “ஆம் அற்புதங்கள் சில சமயங்களில் நடைபெறலாம், நானும் ஐந்தாண்டு காலம் வரை தத்துவங்களில் ஈடுபட்டிருந்தேன்” என்றார். இதைக் கேட்ட இராதாகிருஷ்ணன் ஸ்டாலின் கன்னம் முதுகு இரண்டிலும் பாசத்துடன் தடவினார். அன்புடன் தலையையும் தொட்டார். அந்த அன்புப் ஸ்பரிசத்தில் மகிழ்ந்த ஸ்டாலின் “நாட்டின் தளபதியாக அல்லாமல் என்னை மனிதனாக நடத்திய முதல் மனிதர் நீங்கள்தான். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது என் விருப்பம்! நான் நீண்ட காலம் வாழ விரும்பவில்லை!” என்றார். அவ்வாறே ஆறுமாத காலத்தில் ஸ்டாலின் இறந்துவிட்டார். ஆனால் இராதாகிருஷ்ணன் நீண்ட காலம் உயிருடன் வாழ்ந்தார்.
ஒருமுறை காந்திஜி அவர்கள் இராதாகிருஷ்ணனிடம், “நான் உங்களுக்கு அர்ச்சுனன். நீங்கள் எனக்குக் கிருஷ்ணன். நான் அர்ச்சுனன் போலவே குழப்பத்தில் இருக்கிறேன்” என்று குறிப்பிடார். உலகப் புகழ் பெற்ற வின்ஸ்டன் சர்ச்சில் டாக்டர் இராதாகிருஷ்ணனை ஒரு விருந்துக்கு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்ற இராதாகிருஷ்ணன் விருந்துக்குச் சென்றார். விருந்தின்போது இராதாகிருஷ்ணன் கைகளால் சாப்பிடத் தொடங்கினார்.
அதனைப் பார்த்த சர்ச்சில் இடைமறித்து, “இந்தாருங்கள் டேபிள் ஸ்பூன். கைகளால் சாப்பிடுவதைவிட ஸ்பூன் வைத்துச் சாப்பிடுவதுதான் சுத்தமானது. இந்தியர்களுக்கு இந்தச் சுத்தம் தெரியாமல் கைகளால் சாப்பிடுகிறார்கள். இங்கிலாந்து நாட்டினர் சுத்தம் பற்றி நன்கு தெரிந்தவர்கள்! அதனால்தான் ஸ்பூன் வைத்துச் சாப்பிடுகிறோம்.” என்றார்.
இதனைக் கேட்ட இராதாகிருஷ்ணன் புன்சிரிப்புடன், “சர்ச்சில் இல்லை! ஸ்பூன் வைத்துச் சாப்பிடுவதை விடவும் சுத்தமானது கைகளால் சாப்பிடுவதுதான். ஏனேன்றால் நமது கைகளை வைத்து வேறு யாரும் சாப்பிடமுடியாது. ஆனால் நமது ஸ்பூனை வைத்து மற்றவர்கள் சாப்பிட முடியுமே? அதனால்தான் இந்தியர்கள் கைகளால் சாப்பிடுகிறார்கள்” என்றார். இராதாகிருஷ்ணன் அவர்களின் பதிலைக் கேட்ட சர்ச்சில் பதில் பேசாமல் தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் இராதாகிருஷ்ணனின் மேதைமைத் தன்மையைக் கண்டு வியந்தார். இங்ஙனம் சான்றோர்கள் போற்றிய சான்றோராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார்.
குடியரசுத் தலைவரான ஆசிரியர்
1952-ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராக இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இரண்டு முறை துணை குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய பிறகு, 1962-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தபோது, இந்தியா, சீனாமற்றும் பாகிஸ்தானுடன் போர் நடத்தியது. குடியரசுத்தலைவராக இருந்து அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. ஆசிரியராக இருந்து இந்தியாவின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவராக உயர்ந்த இராதாகிருஷ்ணன் அவர்களின் முன்னேற்றம் ஆசிரியர் குலத்திற்கே பெருமை சேர்த்தது.
1962-ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவர் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடாகியது. ஆனால் தாம் குடியரசுத் தலைவராக உயர்ந்தாலும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத் தொடக்கத்தில் பாணியாற்றிய காலத்தை எண்ணி இராதாகிருஷ்ணன் மகிழந்தார். அருட்பணி செய்யும் ஆசிரியர் பணிக்குப் பெருமையும் புகழும் சேர்க்க விரும்பினார்.அந்த எண்ணம் அரசின் ஆணையாகியது. அன்று முதல் ஆண்டுதோறும் சேப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருவது நோக்கத்தக்கது. 1967-ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவியிலுருந்து இராதாகிருஷ்ணன் ஓய்வுப் பெற்றுசென்னையில் குடியேறி வாழ்ந்தார்.
தத்துவ ஞானியின் மறைவு
ஏழையாக இருந்து கல்வி உதவித் தொகையின் மூலம் கல்விகற்று, ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியை அடைந்த டாக்டர்ராதாகிருஷ்ணன் அவர்கள் 1975 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் நாள் தனது 86-ஆவது வயதில் உலக வாழ்வை நீத்தார். தத்துவஞானியின் பிரிவுக்காக உலகமே கண்ணீர் வடித்தது. அம்மேதை மறைந்தாலும் அவரது படைப்புகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள ஏராளமான பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து வருகின்றன. உலகம் உள்ள அளவும் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்… “அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்” என்ற வாழ்வியல் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைத் திகழ்கின்றது. தத்துவமாகத் தோன்றி வளர்ந்து தத்துவமாக மறைந்த அவரின் வாழ்க்கை நமக்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழும்.
என்னங்க கேட்டுக்கிட்டீங்கள்ள… அப்பறம் என்ன உங்களோட குறிக்கோள நோக்கிப் பயணப் படுங்க..
“முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!”
தெரிஞ்சுக்குங்க…வெற்றி ஒங்களுக்குத்தான்…
நிலையான மனமில்லாத தந்தை…அடிக்கடி வீட்டை விட்டு ஓடிவிடுவார்… திரும்ப வருவார்… இதனால வாழ்க்கையில வறுமை… வறுமையை விரட்ட தனது தாத்தாவின் உதவியால அம்மாவோட வாழவேண்டிய நிர்பந்தம்…இருந்தாலும் முயன்றார்..படித்தார்…இந்தியாவின் தவப்புதல்வராகத் திகழ்ந்தார்….அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் புயலெனப் புறப்பட்டார்…..41 ஆண்டுகளே வாழ்ந்தார்…பாரதியாரால் வீர சிவாஜி என்று பாராட்டப்பட்ட பாரதத் தாயின் தவப்புதல்வர்… யாரு தெரியுமா…? என்னங்க சிவனேன்னு ஒக்காந்திருக்கீங்க…? என்ன யாருன்னு கண்டுபிடிக்க முடியலயா…? கப்பலோட்டிய தமிழரோட சிறை சென்றவர்…என்ன இப்ப கண்டுபிடிச்சிட்டீங்களா…என்ன முடியலயா…?அப்ப காத்திருங்க…அடுத்தவாரம் வரைக்கும்….(தொடரும்………37)
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி