நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்

This entry is part 25 of 32 in the series 15 டிசம்பர் 2013

டாக்டர் ஜான்சன்

நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர். இது சிதம்பரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஊரைச் சுற்றிலும் நெல் வயல்கள் கொண்டது. வீராணம் ஏரி மேற்கில் இருந்தது. அதிலிருந்து இராஜன் வாய்க்கால் மூலமாக விவசாயத்துக்கு நீர் வரும்.

ஊரில் மாதா கோவிலும் பள்ளியும் உள்ளது. அதில்தான் நான் துவக்கக் கல்வி பயின்றேன். அதன்பின் நான் சிங்கப்பூர் சென்றுவிட்டேன்.

ஆதலால் எனக்கு தெரிந்த கிராமம் அதுதான். அதன்பின் பத்து வருடங்கள் கழித்து நான் மீண்டும் தமிழகம் வந்தாலும் நான் வேலூரில் ஆறு ஆண்டுகள் கழித்துவிட்டு திருப்பத்தூர் சென்றுவிட்டேன். அதனால் நான் எங்கள் கிராமம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.

அந்த வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. நான் பிறந்து இளம் பிராயத்தில் வளர்ந்த கிராமம் பற்றி எழுதுவதில் ஏனோ ஒருவித பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

நான் தெம்மூர் என்றால் எங்கள் தெரு என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் அது தவறு. மொத்தம் பத்து தெருக்கள் கொண்டது தெம்மூர். அவை வருமாறு:

!. பெரிய தெரு

2. மணல்மேட்டு தெரு

3. பட்டித் தெரு

4. சின்னத் தெரு

5. மேட்டுத் தெரு

6. செட்டித் தெரு

7. வடக்குத் தெரு

8. திடீர்க் குப்பம்

9. சாவடிக் கரை

10. மெயின் ரோடு

எல்லா வீதிகளையும் சேர்த்து மொத்தத்தில் 600 வீடுகள் கொண்டது தெம்மூர். இவற்றில் சுமார் 400 மண் சுவர், வைக்கோல் கூரையால் கட்டப்பட்ட குடிசை வீடுகள். மற்றவை கல்வீடுகள்.

CIMG2035
மொத்த ஜனத்தொகை 4000. இவர்க்ளில் 80 சதவிகிதத்தினர் இந்துக்கள். 20 சதவிகிதத்தினர் கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர் இல்லை.

CIMG2024ஆலயங்களில் அற்புதநாதர் ஆலயம் தெம்மூர் பெயர் சொல்லும் அளவுக்கு உயர்ந்த கட்டிடமாக ஊரின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இதை எல்லாரும் மாதா கோவில் என்பர், ஆனால் இது கத்தோலிக்க கோவில் அல்ல. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஏசு நாதரின் கோவில். நூறு ஆண்டுகள் பழமைமிக்க இந்தக் கோவிலைக் கடந்து செல்லும் அனைவருமே ஒரு கணம் நின்று வேண்டிச் செல்வது வழக்கில் உள்ளது. தற்போது ஊர் வழியே செல்லும் அரசு பேருந்துகூட ” மாதா கோவில் ஸ்டாப் ” என்று அங்கு நிற்கிறது.

CIMG2025தற்போது வடக்குத் தெரு தாண்டி வடமூர் செல்லும் பாதையில் புதிதாக ஒரு பெரிய பெந்த்தேகோஸ்த்து சபையின் கோவிலும் எழுந்துள்ளது.

இந்துக்கள் அதிகம் இருந்தாலும் அவர்களால் சரியான முறையில் ஆலயங்களைக் கட்டி பராமரிக்கவில்லை.பெரிய தெருவில் மாரியம்மன் ஆலயம் உள்ளது. அது மிகவும் சிறியது.தெரு மூலையில் பழைய கல் கட்டிடத்தில் இருந்தாலும் அங்கு விழா எடுக்கும் பிரச்னையால் ஆலயம் கவனிப்பு இல்லாமல் உள்ளது.

அதுபோன்றே பிள்ளையார் கோவிலும், சிவன் கோவிலும் சரியான கட்டிடம் இல்லாமல் இடிபாடுகளுக்குள் உள்ளன. இவற்றில் எப்போதாவது திருவிழாக்கள் நடப்பதுண்டு.

CIMG2023இந்து கோவில்கள் சரிவர பராமரிக்கப்படாமலிருப்பதற்கு முக்கிய காரணம், சாதி வேற்றுமையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. காரணம் சிவனை ஒரு சாதியினரும், பிள்ளையாரை ஒரு சாதியினரும், மாரியம்மனை ஒரு சாதியினரும் அதிக முக்கியத்துவம் தந்து வழிபடுகின்றனரோ என்பது எனக்கு சரிவரத் தெரியவில்லை.

அதோடு கிறிஸ்துவ ஆலயங்களில் ஞாயிறுதோறும் ஆராதனை நடப்பதுபோல் இந்துக்கள் வாரந்தோறும் ஒன்றுகூடி வழிப்படும் வழக்கம் இல்லை. அதனால் அவர்களின் கோவில்கள் அதுபோல் கேட்பாரற்று கிடக்கின்றன என்றும் கருதுகிறேன்.

CIMG2021தெம்மூர் கிராமத்தில் உள்ள தெருக்களில் சாதி வாரியாக மக்கள் வாழ்கின்றனர். இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம். இவர்கள்தான் பெரிய தெரு, மணல்மேட்டுத் தெரு, பட்டித் தெரு, சின்னத் தெரு, மேட்டுத் தெரு, செட்டித் தெருவில் வாழ்கின்றனர். வடக்குத் தெருவிலும் சாவடிக் கரையிலும் வன்னியர்களும் வலங்கர்களும் வாழ்கின்றனர். மெயின் ரோட்டில் பிள்ளைமார்களும், பிற்படுத்தப்பட்டர்களும் வாழ்கின்றனர்.

ஊர் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம்.

சுமார் 400 குடும்பத்தினர் சொந்த நிலம் வைத்திருக்கிறார்கள்.

CIMG2020இவர்களில் 50 பேர்களுக்கே பத்துக்கு மேற்பட்ட காணிகள் இருக்கிறது. 200 குடும்பத்தினருக்கு சொந்தமாக நிலம் இல்லை. இவர்கள் கூலிவேலை செய்து பிழைப்பவர்கள். வருடத்தில் 75 நாட்கள் வேலை செய்யும் இவர்களில், ஆண்களுக்கு 200 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாயும் கிடைக்கிறது. இது போதுமானது அல்ல .

ஊர் இளைஞர்கள் பலர் சிதம்பரம், பாண்டி, சென்னை சென்று வேறு வேலைகள் செய்து தினமும் 400 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இதுபோன்று சுமார் 300 பேர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.பல இளைஞர்கள் பெயின்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு சாதிச் சண்டைகள் வந்ததில்லை. சுமார் 30 கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. இவை பெரும்பாலும் காதல் திருமணங்கள். சாதிகளுக்கிடையில் உண்டாகும் காதல் உண்மை என்று கூறுகின்றனர். ” நாடகத் திருமணம் ” என்பது இங்கு முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்கின்றனர்.

இறந்தவர்களிக்கூட பொதுவான சுடலையில் தனித்தனி இடத்தில் எரிக்கின்றனர்.

சாதியைவிட இங்கு அ ரசியல் கட்சிகளின் அபிமானம் அதிகம் உள்ளது ஒருவகையில் இது அரசியல் விழிப்புணர்வையே காட்டுகிறது. கிராமத்து மக்களின் அரசியல் கட்சி உறுப்பினர்களை இவ்வாறு பிரிக்கலாம்:

* விடுதலை சிறுத்தைகள் – 60%

* தி. மு. க. – 15%

* அ. தி. மு. க. – 15%

* பாட்டாளி மக்கள் கட்சி – 5%

* காங்கிரஸ் – 5%

எங்கள் கிராமம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு. முருகுமாறன். BSc Agri. BL. இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். சென்றமுறை விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியைச் சேர்ந்த திரு. ரவிக்குமார் MA. BL. வென்றுள்ளார்.

பாராளுமன்ற தொகுதியில் சிதம்பரம் ,காட்டுமன்னார்கோவில், புவனகிரி,, குன்னம் ஆகிய பகுதிகள் அடங்குகின்றன. பரம்பரை பரம்பரையாக இங்கு திரு. இல. இளையபெருமாள் வென்றுவந்தார்.

இவர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராகத் திகழ்ந்தவர். அவர்களை கல்வி கற்கவும், தைரியமாக சுயமரியாதையுடன் வாழவும் விழிப்புணர்வை உண்டுபண்ணினார்.

திருமணம் , சாவு என்றால் சிரமம் பாராது வந்துவிடுவார். சாதிக் கலவரம் எங்கு நடந்தாலும் அங்கும் இவர்தான் வந்து சமரசம் பேசுவார்.

இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் இவரிடம் ” இளையபெருமாள் கமிஷன் ” என்ற ஒரு முக்கிய பணியைத் தந்திருந்தார்.

அப்போது இவர் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தமிழக முதல்வர் கலைஞருடன் ஒற்றுமையாகச் செயல்பட்டார்.

இப்பகுதி மக்கள் இவரை எப்போதுமே எம்.பி. என்றே உரிமையோடு அழைப்பதுண்டு.

சென்ற முறையும் இப்போதும் இங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் வென்றுள்ளார்.

இவரும் இளையபெருமாள் மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து தைரியம் தருவார் என்பது இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இவர் தமிழ்நாடு முழுவதும் கட்சிப் பணிக்காக செல்லவேண்டியுள்ளதால், அடிக்கடி இந்தப் பக்கம் வர முடிவதில்லை. இருப்பினும் மக்கள் இதை ஒரு குறையாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரிடம் சென்று முறையிடும் அளவுக்கு இங்கு பெரிய பிரச்னை இல்லை என்கின்றனர்.

தெம்மூரில் ஒரு சீறிய கல் கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. உள்ளூர் பஞ்சாயத்தில் ஆறு பேர்கள் உள்ளனர். ஜாதி அல்லது கட்சி பார்க்காமல் மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் வருமாறு:

திரு. கோபாலகிருஷ்ணன் – தலைவர். வன்னியர். Diploma in Mechanical Engineering.

திரு. மோகன் – உதவித் தலைவர் . SC

திரு. ரங்கநாதன். BC.

திருமதி செல்வி. SC

திரு. கேசவன் மனைவி. SC

திரு. சக்திவேல். SC.

கிராமக் கூட்டம் மாதம் ஒருமுறை அலுவலகத்தில் நடைபெறும். சில அடிப்படையான பஞ்சாயத்து போதுநலத் திட்டங்களை நிறைவேற்ற இவர்கள் முயல்கின்றனர்.

ரோடுகள் பராமரிப்பு, மயானக் கொட்டகை, குடிநீர்த் திட்டம், ஆழ் துளைக் கிணறு , குளம் பராமரிப்பு , நூறு நாள் வேலைத் திட்டம் , வீட்டு வசதி ஆகியவை இவர்களின் பார்வையில் உள்ளன.

குமராட்சி வட்டார ஊராட்சி ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. இவை 19 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் 5000 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 19 கவுன்சிலர்கள் ( ஒன்றிய குழு உறுப்பினர்கள் ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் தலைவர் திரு. JA. பாண்டியன். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

தெம்மூர், மெய்யாத்தூர், கூடுவெளிச்சாவடி ஆகிய ஊர்கள் சேர்ந்தது எங்கள் வார்டு. இங்கு திரு. மனுநீதிச் செல்வன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

இந்த தேர்தல்கள் பற்றி ஊரில் நல்ல அபிப்பிராயம் இல்லை. தேர்தல் முறை சரியானாலும், முடிவுகள் அறிவிக்கும் முறை சரியில்லை என்றும் எண்ணிக்கை மோசடி நிகழ்வதாகவும் கூறுகின்றனர். முன்பும், தற்போதும், இனி எப்போதும் ஆளுங் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்று அடித்து கூறுகின்றனர்.

கிராம மக்களின் மிகவும் அவசரமான அடிப்படைத் தேவை குடியிருக்க பாதுகாப்பான வீடுதான். ஆனால் சுதந்திரம் அரை நூற்றாண்டுகள் தாண்டியும் இன்னும் மக்கள் மண் குடிசைகளில் வாழ்ந்துவருவது எந்த வகையில் நியாயம்?

புதிய ரோடுகள் போட்டு கிராமங்களுக்கு பஸ் வசதிகள் உள்ளன. மின்சாரம் தற்போது தட்டுப்பாடாக இருந்தாலும், எல்லா கிராமங்களுக்கும் ன் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. கிராம மக்கள் இப்போது கைப்பேசி பயன்படுத்துகின்றனர். கல்விச்சாலைகளும், கல்லூரிகளும் கிராமப்புறங்களில்கூட அமைந்துவருகின்றன. இவை அனைத்தும் முன்னேற்றத்தின் அறிகுறிகள்.

ஆனால் என்னதான் இத்தகைய சிறப்புகள் இருந்தாலும் இன்னும் கிராம மக்கள் குடிசைவாசிகளாக தேள், பூரான், எலி, பாம்புகளுடன் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. அது முன்னற்றத்தின் அறிகுறியும் ஆகாது. ( திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் தமிழகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு கட்சியிலும் ” முன்னேற்றம் ” உள்ளது! )

நான் இதை கற்பனையில் எழுதவில்லை. நான் சிறு வயதில் ஆறு வயது வரை எங்கள் கிராமத்தில் மண் வீட்டில்தான் வாழ்ந்தேன். வீட்டு அறையிலேயே எலிகள் பொந்துகள் குடைந்திருந்தன. ஒரு நல்ல பாம்பும் அந்த பொந்துகளில் எங்களுடன் வாழ்ந்துள்ளது! தேள் கடியும் பூரான் கடியும் பாம்பு கடியும் நிறைய பார்த்துள்ளேன்.

மத்திய அரசு இரண்டு வகையான வீடமைப்புத் திட்டத்தையும், மாநில அரசு ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முயன்றுள்ளது தோல்வியில் முடிந்துள்ளது. இவை இரண்டுமே ஏழைகளுக்கான திட்டங்கள் கிடையாது.அவை பற்றிய சிறு விளக்கம் வருமாறு:

* IAY – இந்தியா அவாஸ் யோஜானா.

இது மத்திய அரசின் திட்டம். இதன் கீழ் 1 லட்சம் 20 ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. 200 சதுர அடியில் வீடு கட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் இடம் சொந்த பட்டா நிலமாக இருக்கவேண்டும். இதனால் சொந்த இடம் இல்லாத ஏழைகளுக்கு இதில் இடம் இல்லை. இதுவரை 100 வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன. இது ஏழைகளுக்கான திட்டமே இல்லை.

* THANA – தானே வீடு

இதுவும் மத்திய அரசின் திட்டம். ஆனால் மாநில அரசு அமுல்படுத்துகிறது. இதில் 1 லட்சம் ரூபாய் தரப்படுகிறது. இதில் 200 சதுர அடியில் வீடு கட்டவேண்டும். சொந்த இடமாக இருக்க வேண்டும். ஆனால் வீடு கட்டி முடிக்க 3 லட்சம் ஆகும். ஆகவே 2 லட்சம் பற்றாக்குறை உள்ளது. அது உள்ள பணக்காரர்கள் மட்டுமே வீடு கட்டமுடியும். இதுவரை 49 பேர்கள் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுவும் ஏழைகளுக்கான திட்டம் இல்லை.

* பசுமை வீடு

இது முற்றிலும் மாநில அரசின் திட்டம். இதில் 2 லட்சம் 20 ஆயிரம் தரப்படுகிற்து. 300 சதுர அடிகளில் வீடு கட்ட வேண்டும்.

வீடு கட்ட 4 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். பற்றாக்குறை 1 லட்சம் 50 ஆயிரம். இது முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கான திட்டம். ஏழைகளின் புறக்கணிப்பு நிச்சயம் உள்ளது.

இவை தவிர தனிநபர் கழிப்பறைத் திட்டம் ஒன்று உள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செயல்படுத்தும் திட்டம் இது. வீட்டுக்குள்ளோ அல்லது தோட்டத்திலோ கழிப்பறை கட்டும் திட்டம் இது. இத ற்காக 5,500 ரூபாய் தரப்படுகிறது. ஆனால் 12,000 செலவாகும்,. இதுகூட பணக்காரர்களுக்கான திட்டமே. இதுவரை 70 பேர்கள் கழிப்பறை கட்டியுள்ளனர்.

மத்திய அரசின் மற்றொரு திட்டமாக கிராமத்தில் ஒரு பால்வாடி இயங்குகிறது. பஞ்சாயத்து இடத்தில் மத்திய அரசின் கட்டிடம் உள்ளது. ஒரு ஆசிரியை உள்ளார், இரண்டு ஆசிரியைகள் இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன. 3 வரையிலிருந்து 5 வயது வரையிலான 150 பிள்ளைகள் இங்கு பராமரிக்கப்படுவர். இங்கு இலவச மதிய உணவு, ஊட்டச் சத்து மாவு , திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் முட்டை, செவ்வாய்க்கிழமைகளில் பாசிப்பயிறு, வெள்ளிக்கிழமைகளில் உருளைக்கிழங்கு தரப்படும்.

இது தோல்வியுற்ற திட்டம். வீட்டில் எங்களால் உணவு தர முடியும் என்கின்றனர் பெற்றோர். இதனால் பல பெற்றோர் தங்களின் பிள்ளைகளை இங்கு அனுப்புவது இல்லை. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளில் ஒருவர்கூட இங்கு வருவதில்லை. இது வெறும் சாப்பாட்டுக்கான திட்டம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் டேனிடா ( DANIDA ) திட்டம் ஒன்று சிவக்கம் எனும் பக்கத்து ஊரில் உள்ளது..

இதிலுள்ள கிராம சுகாதாரப் பணியாளர்கள் சுற்று வட்டார கிராமங்களுக்குச் சென்று சிறு குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடுகின்றனர்.

தற்போதைய தமிழக அரசு பிரசவச் செலவுக்கு தாய்மார்களுக்கு 12,000 ரூபாய் வழஙுகுகிறது. அதோடு எல்லாப் பெண்களுக்கும் இலவச பஞ்சுப் பெட்டியும் ( sanitary pads ) தருகிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது வழங்கப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் அநேகமாக எல்லா வீடுகளிலும் நல்ல பொழுதுபோக்காகவும், தகவல் சாதனமாகவும் செயல்படுகின்றன!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மேசை விசிறி ,ஆடு மாடுகள் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ் 2, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி சுமார் 100 பெருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணாவ் மாணவிகள் சுமார் 200 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் இளைஞர்களுக்கு விளையாட்டுத் திடல்கள் இல்லை. இதனால் மாலை வேலையில் அவர்கள் காற்பந்து , கபடி போன்ற ஆரோக்கியமான விளையாட்டுகளில் ஈடுபடமுடியாமல் மதுவை நாடி அடிமையாகிவருவது ஆபத்தானது. இதனால் இளம் வயதிலேயே சரியான குடிகாரர்களாகி சமுதாயத்திற்கு தலைகுனிவை உண்டுபண்ணுகின்றனர்.

தற்போது கிராமங்களில் கள்ள சாராயம் இல்லை. கள் கிடைப்பதில்லை. ஆனால் இளைஞர்கள் இப்போதெல்லாம் டாஸ்மார்க் மதுவை நாடுகின்றனர். குமராட்சியில் ஒரு கடை உள்ளது. அங்கிருந்து மொத்தமாக வாங்கிவந்து கிராமத்தில் இரண்டு இடங்களில் இலாபத்துக்கு விற்பனை செய்கின்றனர். ஒரு கால் பாட்டில் ( quarter ) 100 ரூபாய்க்கு கிடைக்கிறது.

எனது முடிவுரை .

இந்தியா கிராமங்களில் உள்ளது என்றார் மகாத்மா காந்தி. கிராமங்களில் வாழும் மக்கள் தமிழர்களாக ஒரே இனமாக வாழவேண்டும். சாதி , மதம் பார்க்காமல் ஒற்றுமையாக கிராம மக்கள் வாழலாம். சாதி ஒழிப்பு கிராமங்களில் துவங்க வேண்டும். அப்போதுதான் நாடு முழுதும் சாதிகள் அற்ற சமுதாயம் மலரும். பிள்ளைகளை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்ய வேண்டும். தற்போது கிராமங்களில் அடிப்படை வசதிகள் உள்ளன. இளைஞர்கள் மது அருந்தும் பழக்கத்திலிருந்து விலக வேண்டும். கலை, விளையாட்டுகளில் அவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்களாகத் திகழவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கிராமமும் செயல்பட்டால் நாடு நலம்பெறும்.

( முடிந்தது )

!

Series Navigationசில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.கடத்தலின் விருப்பம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

19 Comments

 1. Avatar
  புனைப்பெயரில் says:

  அருமையான பதிவு. இதுவரை இந்தக் கோணத்தில் தன் கிராமம் பற்றி யாருமே பதிவு செய்ததில்லை….

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

  விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் ஆயிரக் கணக்கான கிராமங்களில் ஒன்றான உங்கள் பிறந்தகச் சிறு கிராமம் “தெம்மூர்” இந்த அளவு நாகரீமாக முன்னேறி இருப்பது பாராட்டத் தக்கது.

  தெம்மூர் எம்மூர்
  செம்மை யானச் சிற்றூர் !
  செல் ஃபோன் உள்ளது
  மடிக் கணனி உள்ளது
  தடைப்படும்
  மின்சாரம் உள்ளது !
  மேற்படிப்பு உள்ளது ! ஆயினும்
  விலைவாசிகள் ஏறி
  கீழ்ப் படிக்கு வாரா !
  மேல் மக்கள் மேல் மக்கள்தான் !
  கீழ் மக்கள் கீழேதான் !
  சமமாகக் கருதப் பட்டாலும்
  தனித்தனித் தீவில் தான்
  மனித இனம் வசிக்கும்
  தமிழ் நாட்டில் !

  நல்லதோர் வரலாற்றுக் கட்டுரை. பாராட்டுகள் நண்பரே.

  சி. ஜெயபாரதன்.

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   அடுத்த பிதற்றல் :::: மேல் மக்கள் மேல் மக்கள்தான் !
   கீழ் மக்கள் கீழேதான் !
   சமமாகக் கருதப் பட்டாலும்
   தனித்தனித் தீவில் தான்
   மனித இனம் வசிக்கும்
   தமிழ் நாட்டில் ! —>
   அப்ப கனடாவில், அகதி தமிழர்களுடன்… ஆதியாக அங்கு வந்த தமிழர்கள் பெண் கொடுத்து எடுக்கிறார்களா..? கனடா செட்டியார்கள் சங்கம் என்று இல்லையா..? கிறிஸ்துவராக, முஸ்லீமாக மாறினும், ஜாதி வேற்றுமை இருக்கிறதா இல்லையா ..? கோட் சூட் டை போட்டா , ஸ்டேட்டஸ் என்றால், முழுக்கை கதர் சட்டையுடன் ரஷ்யா போன காமராஜரும், கோட் சூட் போட்டு அமெரிக்கா போன கருணாந்தியும் என்று கம்பேர் பண்ணலாம்…

   1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு உள்ளது என்று எண்ணுமாம் புனை பெயராரே.

    கோழை போல் ஒளிந்து கொள்ளாமல், முதலில் சுயப் பெயரோடு ஊக்கமுடன் திண்ணையில் நீங்கள் எழுத வாருங்கள்; நான் பதிலிடுகிறேன்.

    சி. ஜெயபாரதன்.

   2. Avatar
    rajamani says:

    I have lived in Canada for over 40 years. The younger generation who are born here, I am happy to say, know no caste. Most of the early families from Tamil Nadu were upper castes; almost all their children have married out of caste, a few even other religion or races. The Sri Lankan have been here in large numbers since late 1990s. Their children have grown up with caste free values, and are intermarrying with other groups. I am celebrating my first wedding in my family in 6 months, when my nephew is marrying a Sri Lankan Tamil girl. Btw, the Tamil refugees have very worked and are now comfortable middle class professionals, and their children are reaching high levels in corporate and government sectors. :)

 3. Avatar
  subrabharathimanian says:

  ல்ல ஊர்.

  ஒவ்வொருத்தரின் சொந்த ஊர் பற்றியும் எழுத எல்லோருக்கும் நிறைய உள்ளன. உங்களுக்கும் .

  சுவாரஸ்யம்

  சுப்ரபாரதிமணியன்

 4. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் மரு. திரு. ஜான்சன் அவர்களுக்கு,

  ஒவ்வொருவரும் அவரவர்கள் பிறந்த ஊர் பற்றி எப்படி அறிந்திருக்க வேண்டும், அதை எப்படி அழகாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த கட்டுரை. நாம் பிறந்த மண்ணை எந்த அளவிற்கு நேசிக்கிறோமோ, அது முன்னேறவேண்டும் என்று துடிக்கிறோமோ, அந்த அளவிற்கே நம்முடைய வளர்ச்சியும் இருக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் இப்படி ஒரு குக்கிராமத்தில் பிறந்த உங்களின் வளர்ச்சி, உங்கள் ஊரையும் உயர்த்தி காட்டுகிறது. வாழ்த்துகள்.

  அன்புடன்
  பவள சங்கரி

 5. Avatar
  ருத்ரா இ.பரமசிவன் says:

  அசோகச்சக்கரத்துக் கல்தூணிலிருந்து
  அமிஞ்சிக்கரை கூவக்காவா வரைக்கும்
  இந்தியாவின்
  ஒரே நரம்புதான் ஓடுகிறது.
  தெம்மூர் என்றொரு சிற்றூரின்
  திருமண்ணிலும்
  அதன் ஒவ்வொரு துளியிலும்
  மனித வர்ணங்கள் மாறவில்லை.
  மூவர்ண விடியலின்
  சூரியக்கிரணங்கள் கூட‌
  ஏழு வர்ணம் எதற்கு என்று
  இன்னும் நான்கு வர்ணங்களில் தான்
  முலாம் பூசிக்கொண்டிருக்கிறது.
  எல்லாவற்றுக்கும்
  புள்ளிவிவரம் கொடுத்தார்
  டீக்கடைகளில்
  ரகசியமாக தொங்கிக்கொண்டிருக்கும்
  கொட்டாங்கச்சிகளுக்கும்
  தகரக்குவளைகளுக்கும் மட்டும்
  இன்னும்
  கணக்கு இல்லை.
  திருமாவளவன் தொகுதி என்பதால்
  அந்த ஊரில்
  அவை அச்சங்கொண்டு
  இன்னும் ரகசியமாக‌
  ஒட்டடைத் தோரணங்கள் போல்
  இருட்டு மூலையில்
  எங்காவது பதுங்கி இருக்கலாம்.

  ==========================================ருத்ரா

 6. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் டாக்டர் திரு.ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

  “தெம்மூர் ” கிராமத்தைக் கண் முன்னே கொண்டு நிறுத்தி விட்டீர்கள். நீங்கள் அங்கு
  பிறந்து பின்னர் அதன் மறுகோடியில் வாழ்ந்து வந்தாலும், சமீபத்தில் மீண்டும் “தெம்மூர்”
  வந்து சென்ற அடையாளங்களாக உங்கள் கட்டுரை சொல்லுகிறது. “பிறந்த மண் மீது பற்று”
  என்பது கண்கூடாகத் தெரிகிறது. வழக்கம் போலவே, நிறைவான பதிவு.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்

 7. Avatar
  ருத்ரா இ.பரமசிவன் says:

  அன்புக்குரிய டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களே.

  உங்கள் தெம்மூர் ஏதோ ஒரு பஞ்சாயத்து அலுவலத்தின் முன் மாட்டப்பட்ட “தகவல் பலகையாக”த்தான் எனக்கு தெரிந்தது.இந்தியாவின் “ஒரு கிராமத்து அத்தியாயம் தான்” அதுவும்.ஆனாலும் மறைவாய் அதனுள் கோர்த்திருந்த ஒரு கருப்புக்கண்ணீர்த் துளியை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.இருப்பினும் உங்கள் இதயத்தின அடி ஆழத்திலிருந்து ஒரு சமாதான அன்பின் அந்த வெள்ளைப்புறா சிறகடிப்பதை நான் குறிப்பிடாமல் விட்டது சரியல்ல என்று பின் குறிப்பாக இதை எழுதுகிறேன்.

  நம்பிக்கை விழுதுகளுடன் மகிழ்ச்சி நிறைந்த ஒரு புத்தாண்டு வாழ்த்தோடும்
  பாராட்டுகளுடனும் “தெம்மூர்”ஐ தரிசிக்கிறேன்.

  அன்புடன் ருத்ரா

 8. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள புனைப்பெயரில் அவர்களுக்கு வணக்கம். இந்த பரபரப்பான உலகில் நாம் பிறந்த ஊரையும், நாம் வழிவழியாக வந்துள்ள நம்முடைய குடும்ப வரலாற்றையும் முழுதும் அறியாதவர்களாகவே வாழ்ந்து வருகிறோம். எது எதையோ பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளும் நாம் நம்முடைய குடும்ப வரலாறுகூட தெரியாமல் வாழ்கிறோம். நமது பிள்ளைகளுக்கு மாமாவுக்கும் சித்தப்பாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருவரையும் UNCLE என்று அழைக்கும் அவலம் வந்துள்ளது. அதனால்தான் பூர்வீகத்தை மறக்கக் கூடாது என்று எங்கள் ஊர் பற்றி எழுதி உவகை கொள்கிறேன். நன்றி . அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 9. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் ஜெயபாரதன் அவர்களே, உங்களின் கவிதை கண்டு மகிழ்ந்தேன். உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. மேல்மக்கள், கீழ்மக்கள் என்று நீங்கள் சாதிகளின் ஏற்றத்தாழ்வைச் சாடியுள்ளீர்கள். இந்த சாதிகளை ஒழிக்க ஒரே வழி கிராமங்கள் அளவிலான ஒன்றுபட்ட சமுதாயம். இந்தியாவின் அடிமட்ட பிரிவு சிறு கிராமம். அந்த சிறு கிராமத்தில் வாழும் மக்களுக்குள் சாதி வேற்றுமை மறைந்து கலப்புத் திருமணங்கள் பெருகி சாதிகளற்ற புதிய தமிழ்ச் சமுதாயம் உருவாகவேண்டும் என்பதே என்னுடைய கனவு.ஒவ்வொறு கிராமமும் இவ்வாறு மாறினால் எவ்வாறு சிறப்பாக இருக்கும் இந்த நாடு! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 10. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு நன்றி. உண்மைத்தான். ஒவ்வொரு கிராமமும் ஒரு கதை சொல்லும். டக்டர் ஜி. ஜான்சன்.

 11. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள பவள சங்கரி, அருமையான கருத்து கூறியுள்ளீர்கள். நன்றி. ” ஈன்ற பொழுதித் பெரிதுவக்கும் ” நாம் பிறந்த மண்ணும்!… அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 12. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள ஜெயஸ்ரீ ஷங்கர் , உங்கள் கருத்துக்கு நன்றி. ” பிறந்த மண் மீது பற்று ” என்ற வரிகளைப் படித்ததும் எனக்கு சிங்கப்பூரில் பள்ளிப் பருவத்தில் படித்த ஒர் அங்கிலக் கவிதை நினைவில் வந்தது. காலத்தால் அழியாத அந்தக் காவியக் கவிதையை எழுதியவர் சர் வால்டர் ஸ்காட் . அதைப் படித்துப் பாருங்கள்:
  ‘Breathes there the man’

  Poem

  I
  Breathes there the man, with soul so dead,
  Who never to himself hath said,
  This is my own, my native land!
  Whose heart hath ne’er within him burn’d,
  As home his footsteps he hath turn’d,
  From wandering on a foreign strand!
  If such there breathe, go, mark him well;
  For him no Minstrel raptures swell;
  High though his titles, proud his name,
  Boundless his wealth as wish can claim;
  Despite those titles, power, and pelf,
  The wretch, concentred all in self,
  Living, shall forfeit fair renown,
  And, doubly dying, shall go down
  To the vile dust, from whence he sprung,
  Unwept, unhonour’d, and unsung.

  II
  O Caledonia! stern and wild,
  Meet nurse for a poetic child!
  Land of brown heath and shaggy wood,
  Land of the mountain and the flood,
  Land of my sires! what mortal hand
  Can e’er untie the filial band,
  That knits me to thy rugged strand!
  Still as I view each well-known scene,
  Think what is now, and what hath been,
  Seems as, to me of all bereft,
  Sole friends thy woods and streams were left;
  And thus I love them better still,
  Even in extremity of ill.
  By Yarrow’s streams still let me stray,
  Though none should guide my feeble way;
  Still feel the breeze down Ettrick break,
  Although it chill my wither’d cheek;
  Still lay my head by Teviot Stone,
  Though there, forgotten and alone,
  The Bard may draw his parting groan.
  .

  Sir Walter Scott
  அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்

 13. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

  “தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற எங்கள்
  தாயென்று கும்பிடடி பாப்பா”

  என்று முதன்முறை எடுத்து முரசடித்தவர் பாரதியார்.

  வங்காள நாட்டை “எங்க தங்க வங்காளம்” என்று தாகூர் பாராட்டினார்.

  தமிழர் மட்டும் மாறுபட்டுப் பிடிப்பில்லாத தமிழ்மொழியைத் தமிழ்த்தாய் என்று வணங்கினர். உலகில் இப்படி யாரும் ஒரு மொழியை வழிபடுதாய்த் தெரியவில்லை.

  தமிழ்மொழி இதுவரை தமிழகத் தமிழரை ஏனோ ஒன்றுபடுத்த வில்லை.

  தமிழ்மொழி உலகத் தமிழரை ஒன்று படுத்துகிறது.

  சி. ஜெயபாரதன்.

 14. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திரு ருத்ரா இ. பரமசிவன் அவர்களே, தங்களின் நீண்ட கவிதை வரிகளையும் இரண்டாவது பின்னூட்டத்தையும் கண்டு மகிழ்ந்தேன். நீங்கள் கேட்டுள்ள அந்‌த கொட்டாங்கச்சியும், தகரக் குவளையையும் நான் தவர்த்தாம்பட்டு எனும் பக்கத்து ஊர் டீ கொட்டாயில் பார்த்துள்ளேன் –சுமார் 60 வருடங்களுக்கு முன்பு. அப்போது எங்கள் கிராமத்தின் உள்ள பேருந்து வராது., சிதம்பரம் செல்ல அங்கு நடந்து சென்று ( 3 கிலோமீட்டர் ) பஸ் ஏறணும். இப்போதெல்லாம் அவை இல்லை. அனைவருக்கும் சின்ன கிளாஸ்தான்.

  அதோடு இன்னொன்றும் நினைவில் உள்ளது. தவர்த்தாம்பட்டு செல்ல மெய்யாத்தூர் கிராமம் வழியாக நடந்து வர வேண்டும். அங்கு பிள்ளைமார்கள் என்பவர்கள் வசிக்கும் தெரு வழியாக செல்பவர்கள் காலணிகளை கையில் தூக்கிச் செல்வர். அப்போது அது ஏன் என்பது புரியவில்லை.— நான் சிறுவன். நான் மருத்துவ மாணவனாக திரும்பியபோது, அவர்கள் உயர்ந்த சாதி என்பதால் அப்படி செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டபின், நான் வேண்டுமென்றே பாட்டா ஷூ அணிந்துகொண்டு அனைவரும் பார்க்கும் வண்ணம் அந்‌த தெருவில் நடந்து செல்வேன். அவர்கள் நான் யார் என்று மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். டாக்டர் படிப்புக்கு பாருங்கள் எவ்வளவு மதிப்பு என்று ஊர் மக்கள் அப்போது பேசிக்கொண்டனர்! அன்புடன், நடந்தவற்றை என்றுமே மறவாத Dr. G.Johnson.

 15. Avatar
  IIM Ganapathi Raman says:

  Very objectively written. A lot of home work has been done. Well done Dr.

  Now some potshots.

  சாதிகளை பட்டி தொட்டிகள் இருக்கும்வரை ஒழிக்கமுடியா என்பதே உண்மை. மேன்மக்கள், கீழ்மக்கள் எனக்குறிப்பிட்டது எதார்த்தமாகும். மேன்மக்கள் மேன்மக்களாகத்தான் இருப்பர்.கீழ்மககள் அவர்களுக்குக் கீழேதான் இருப்பர். மேன்மை, கீழ்மை என்பது பொருளாதாரம், அதன் வழிவரும் வாழ்க்கைமுறை (இதில் கலாச்சாரமும் அடங்கும்). இவற்றைக் குறிக்கும். கனடா வேறு; தமிழகம் வேறு. ‘சூ மந்திரக்காளி’ என்றால் எல்லாம் மாயமாக மறைந்துபடும் என்பது உண்மையானால் புனைப்பெயரில் தார்மீகக்கோபம் கொள்ளலாம். உண்மையதுவல்லவே!

  மருத்துவர், தம்மூரில் சாதிகளுண்டு என்றெழுதியிருக்கிறார். சாதிப்பிர்ச்சினையில்லை என்றுமெழுதியிருக்கிறார். பின் ஏன் சாதிகளை ஒழிக்கவேண்டுமென்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

  குடிசைகளையெல்லாம் கலகட்டிடங்களாக மாற்றிவிட வேண்டுமென்கிறார். எனக்கு உடன்பாடில்லை. குடிசைகளையும் நன்கு வாழவகைசெய்யும்படி கட்ட முடியும். Make the best use of worst world. என்பதே வாழ்க்கையில் இலக்காக இருக்கமுடியும். அதாகப்பட்டது imperfections, inequalities இருந்தே தீரும். அதை எப்படி சமாளித்து எவ்வளவு தூரம் தமக்கு நல்வாழ்க்கை வரப்பண்ணவியலுமென்றுதான் பார்க்கவேண்டும். குடிசைகளை நீக்கிவிட்டால் சிற்றூர்களில் அழகே போய்விடும். கட்டான கிராமத்துப்பெண்ணை அவள் மனங்கவர்ந்த காளையொருவன் ‘ஒத்தையடி பாதையிலே என் அத்தை மக போகையிலே’ எனக காதல் செய்வதும், அக்காளையில் காதலை, ‘பக்கத்துவீட்டு பருவ மச்சான். பார்வையிலே .படம் புடிச்சான்’ என அவ்வேழைப்பெண் பாடுவதும் ஒரு தனிசசுவை நிறைந்த காதல். வர்க்க பேதங்களையும், வாழ்க்கைமுறைகளையும் அழிக்கும்போது, காதல் மட்டுன்று, எல்லாமே செயற்கையாகிவிடும்.

  ஓரளவுக்கு மாற்றுங்கள். ஒரேயடியாக காலிபண்ணிவிடாதீர்கள் எனபதே என்போன்றோரின் வேண்டுகோள்.

 16. Avatar
  புனைப்பெயரில் says:

  என்பது உண்மையானால் புனைப்பெயரில் தார்மீகக்கோபம் கொள்ளலாம். –> புரியவில்லை. எனக்கும் உங்கள் கருத்துத் தான்.
  ஏற்றத் தாழ்வு வேறு வேறு ரூபத்தில் இருந்தே தீரும். வெளிநாட்டு -கனடா என்று வெச்சுங்கோங்கோ… – பெரிய அண்டாவில் குதிரை ஓட்டுபவர்கள், இந்தியாவில் மட்டுமே சிலர் இருக்கிறார்கள் என்று நினைத்து குண்டுச் சுட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் என்று பிறரை நினைப்பது மாதிரி :) . கோட்டா , இட ஒதுக்கீடு, என்று ஒருவன் மேலே வந்தவுடன் தன இனத்தின் ஒதுக்கீட்டை தன் மகளுக்காக காலில் போட்டு மிதிப்பது நடக்கிறது – தேவயானியின் அப்பா, ஐ எப் எஸ் தன் மகள் பாஸ் பண்ண “ஜெர்மன்” மொழி பாட ஊழல் தகிடு தித்தம் செய்தது மாதிரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *