அதிகாரி

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன் சோடா பாட்டிலை வைத்துக் கொண்டு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு அனல் பறந்தது.
“அதிகாரிகளால் அதிகாரிகளுக்காக, அதிகாரிகளாக சேர்ந்து கண்டுபிடித்த விஷயம்தான் பஞ்சுவாலிட்டி. ஆனால் அந்த பஞ்சுவாலிடி அதிகாரிகளுக்கு மட்டும் இல்லை என்பதில் அந்த அதிகாரிகள் தெளிவாக இருப்பார்கள். அதிகாரத்தை ஒரு இடத்தில் நிலைநிறுத்துவதற்கு தன்னிலிருந்து மற்றவர்களை தாழ்த்தி பிரித்து வைப்பதற்கு, ஒரு அதிகாரி கடைபிடிக்கும் உபாயமே பஞ்சுவாலிடி என்ற வார்த்தை. நீ என்னைப்போல் அல்ல. நீ என்னிலும் தாழ்ந்தவன், கடைநிலையில் இருப்பவன் என்பதை ஒவ்வொருநாளும் ஒரு கடைநிலை ஊழியனாக ஒருவனை உணரவைக்க இந்த பஞ்சுவாலிடி என்கிற விஷயத்தை ஒரு அதிகாரி உபயோகிக்க வேண்டியதாக இருக்கிறது. நேரம் தவறாமைக்கு இருக்கின்ற மரியாதையை, அதில உள்ள அழகை, அதனால் உணரப்படக்கூடிய திருப்தியை கொச்சைப்படுத்தி, நாற்றமெடுக்கச் செய்யும் பக்குவம் அதிகாரிகளுக்கு கைவந்த கலை. நேரம் தவறுவதால் ஏற்படக்கூடிய படபடப்பை ஒரு நாளும் அனுபவிக்காதவர்கள் அதிகாரிகள். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆண்டதையும், வெள்ளையர்கள் கருப்பர்களை ஏறிமிதித்து ஏய்த்து பிழைத்ததையும், இன்றைய அதிகாரிகள் வேறு பரிமாணத்திற்குகொண்டு சென்றுவிட்டார்கள். நூற்றாண்டுகள் தோறும் அடிமைத்தனத்துக்கு பெயர்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன. அடிமைத்தனம் பல்வேறு அவதாரங்கைள எடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.
தான் வாழும் இடத்தையே அரித்து உண்ணும் கரையானைப் போன்ற மனநிலையை அடைபவர்கள் மட்டுமே அதிகாரிகளாக உருவெடுக்கும் தகுதி படைத்தவர்கள். அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களால் அதிகம் நம்பப்படுகிறவர்கள். அதிகாரமிக்கவர்களிடம் வெளிப்படுத்துவதற்காக பசப்பு வார்த்தைகள் அதிகம் தெரிந்துவைத்திருப்பவர்கள். கடைநிலை ஊழியனை கடிந்து கொள்ள கசப்பு வார்த்தைகள் அதிகம் தெரிந்தவர்கள். அவர்கள் தங்களுக்குள்ளாக ஒரு உலகைப் படைத்துக் கொண்டு, அதில் சில அடிமைகளை வைத்துக் கொண்டு அரசாட்சி நடத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அவர்களாக சிருஷ்டித்த உலகிற்குள்ளாக வாழ்ந்து திருப்தியடைந்து இறந்து விடக்கூடிய மனோவசியம் படைத்தவர்கள். எனக்கு இரண்டு அடிமைகளை மட்டும் கொடுங்கள் எனது வாழ்நாள் முழுவதையும் எந்தவித சலிப்பும் இல்லாமல் ரசனையோடு வாழ்ந்து மடிந்து விடுவேன் என்று சொல்லக்கூடிய மனநிலை அதிகாரிகளிடம் உண்டு. தேனில் விழுந்து வண்டைப் போல அவர்கள் அதிலேயே சுகமாக வாழ்ந்து இறந்துவிட தயாராக இருப்பவர்கள்.”

ஒரு கொசு மட்டும் நறுக்க்க்க………….. கென்று கடிக்கவில்லை என்றால் அவர் கனவு கலைந்திருக்காது.

பிராய்டின் கனவுகளின் விளக்கத்தின் படி திரு. சம்பத் சாரின் கனவுக்கு அடிப்படைக் காரணம், அவரது அலுவலகத்தில் அதிகாரியாக இருக்கும் திரு. பெரியாசமி சாரின் திருவிளையாடல்கள் தான். அவர் பெயர் திரு. பெரியசாமி அல்ல…….. திரு. பெரியசாமிசார்…..
திரு. பெரியாசாமி சாரை பொறுத்தவரை பஞ்சுவாலிடி என்ற வார்த்தையை உபயோகித்தால் உங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று எவ்வித விசாரணையும் இன்றி அரசாங்கம் தாராளமாக தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு பங்சுவாலிடியை கடைபிடிப்பவர். ஒரு முறை…… ஒரே ஒரு முறை மட்டும்…. 2012 டிசம்பர் 25ம் தேதி அவர் நேரத்திற்கு அலுவலகம் வந்து விட்டார். மாயன் காலண்டர்படி அன்று உலகம் அழிந்துவிடும் என்பதாக நம்பப்பட்டு வந்ததால், அந்த கோர சம்பவம்…..அந்த எதிர்பாராத அசம்பாவிதம்…..அந்த துக்க நிகழ்வு துரதிஷ்டவசமாக அன்று நிகழ்ந்து விட்டது. அந்த கோர நிகழ்விலிருந்து அவர் மாயன் காலண்டரையும், உலக அழிவையும் நம்பியிருக்கிறார் என்பது தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு நேரம் தவறி வருவதில் ஆழ்ந்த மகிழ்ச்சியும், பெருமையும், அனைத்து அலுவலர்களும் தனக்கு முன் வந்து தனக்காக காத்திருக்கிறார்கள் என்கிற குரூரமான திருப்தியும், தன்னை யாரெல்லாம் கவனிக்கிறார்கள், தன்னை யாரெல்லாம் புறக்கணிக்கிறார்கள் என்பதை புறக்கண்களால் நொடிப்பொழுதில் கவனித்து உள்வாங்கி, அவர்களுக்கு இன்றைக்குரிய தண்டனை விவரக்குறிப்புகளை (டார்ச்சர்) மனிதிற்குள்ளாக வடிவமைப்பதிலும், வீட்டில் எவ்வளவுதான் மனைவியிடம் கேவலப்பட்டு அசிங்கப்பட்டு, துன்பப்பட்டு, அடி, உதை எல்லாம் பெற்று வந்தாலும் அதையெல்லாம் ஒரு சித்தர் மனநிலையில் புறந்தள்ளிவிட்டு, வீரத்தையும், விவேகத்தையும் (நரித்தனமும், முட்டாள் குரங்கின் குணமும்) நெற்றியின் நடுப்பொட்டில் கொண்டுவந்து நிறுத்தி ஒரு தியான நிலையில் அலுவலகத்தில் தினசரி வேலைகளைத் தொடங்குவதில் கைதேர்ந்தவர் திரு. பெரியசாமி சார்….
ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் காலண்டரில் உள்ள மீன் குளத்தி அம்மன் படத்தைப் பார்த்து கண்களை மூடி மௌனமாக 2 நிமிடங்கள் வேண்டுதலில் ஈடுபடுவார். அவ்வளவு நரித்தனமான எண்ணங்களுக்கும் நடுவே ஒரு மனிதால் கடவுளை எப்படி வேண்டிக் கொள்ள முடியும் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான் என்றாலும், அவர் தினசரி அந்த வேண்டுதலைக் கடைபிடிக்கிறார் என்பது உண்மை. அது என்னவிதமான மனநிலை என்று இன்றுவரை பலபேருக்கு புரியவில்லை. அவர் நல்லவராக நடிக்க முயற்சிக்கிறாரா? அல்லது அவர் உண்மையிலேயே நல்லவர்தானா, அல்லது அவருக்கு தான் நல்லவனா, கெட்டவனா என்பது தெரியவில்லையா?…… அவர் ஏன் இந்த சமுதாயத்தை இப்படிக் குழப்புகிறார் என்று அலுவலகத்தில் பலர் தங்கள் மனதிற்குள்ளாக நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு திரைப்படத்தில் வருவதுபோல் வில்லன் என்றால் வில்லனாக வாழ்ந்து விட்டு போக வேண்டியதுதானே. அது எதற்கு 2 நிமிட ஹீரோ ட்விஸ்ட் எல்லாம் குடுக்கிறார் என்று பலர் கூடி பேசிக்கொள்வதுண்டு.
பெரியசாமி சாருக்கு தான் ஒரு போர்க்கலத்தில் இருப்பது போலவும், தன்னை எப்பொழுது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எந்தத் திசையிலிருந்தும் தாக்கி விடலாம் என்கிற பயத்தில் எச்சரிக்கை உணர்வுடனே காணப்படுவார். அது அவரது உள்மனம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த எச்சரிக்கை உணர்வு. ஏனெனில் அவரைப் பிடிக்காதவர்கள் அவ்வளவு பேர் அவரைச் சுற்றி இருக்கிறார்கள் என்று அவரது உள்மனம் அவரை எச்சரித்தப்படியே இருப்பதால் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வு. எனவே அவருக்கு ஒவ்வொரு எதிரியையும் (அப்படி இல்லாவிட்டாலும்) சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு, ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் தோற்கடிப்பதற்கான முன்னேற்பாடுகளுடனும், சிந்தனையுடனும்தான் காணப்படுவார்.
அவர் அலுவலகத்துக்குள் நுழையும்பொழுது தனது மனம் என்னும் குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளும் குறிப்பேடுகள்….
1. 4 பேர் தனக்கு வணக்கம் சொன்னார்கள்.
2. 7 பேர் தன்னை கவனிக்கவில்லை
3. 3 பேர் தன்னைக் கவனித்தும் புறக்கணித்துவிட்டார்கள்.
4. 3 பேர் இன்று தன்னை ஏதோ ஒரு வகையில் பழிவாங்கத் தயார்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். ( இது அவருடைய சிறப்புத்தகுதி….இதை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பது ஒரு பேராச்சர்யம்)
5. ஒரு மூன்று பேர் அசமந்தமாக இருக்கிறார்கள். இன்று அவர்களை என்ன வருத்தெடுத்தாலும் கண்டு கொள்ளப்போவதில்லை.
6. அலுவல் பணிகளில் ஏதேனும் தவறு நேர்ந்தால் மேலிடத்தில் கோர்த்து விடுவதற்கு இன்று இரண்டு மாங்காய்கள் இருக்கிறார்கள்.
7. இன்று உபயோகிக்க வேண்டிய மோசமான, மிக மோசமான மற்றும் அதி கேவலமான மற்றும் உச்சகட்ட நாகரீகமான கெட்டவார்த்தை
8. 15 நாட்களில் வேலையை விட்டு அனுப்படவேண்டிய அந்த இரண்டு பேருக்கு இன்று 8வது நாள் என்கிற குறிப்பு.
9. இன்றைய ஜால்ராக்களில் எத்தனை பேர் அலுவலகம் வந்திருக்கிறார்கள் என்பது பற்றிய குறிப்பு.
10. நேற்று தன்னை எதிர்தது பேசியவன், இன்று தன்னை எதிர்த்து பேசுவான் என்று எதிர்பார்க்கப்படுபவன் ஆகியோர் பற்றிய குறிப்பு
11. அலுவலகத்தில் எத்தனை பெண்கள் வந்திருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்
12. டீ கொடுக்கும் பையன் இன்று டீ…யில் எச்சில் துப்பி தருவானா, மாட்டானா என்பது பற்றிய உளவியல் ஆராய்ச்சிக் குறிப்புகள்.
13. அலுவலகம் விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் தனது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு வைக்க வேண்டிய ஆப்பு அல்லது செய்ய வேண்டிய தாஜா (முகஸ்துதி) உள்ளிட்ட குறிப்புகள்

அத்தனை குறிப்புகளையும் அட்டவணையிட்டு நெஞ்சில் நிலைநிறுத்தி, இடையிடையே செய்ய வேண்டிய அலுவலகப் பணிகள் குறித்தும் சற்று ஆழகமாக மூச்சு வாங்கியபடி சிந்தனை செய்வார்.
அலுவலகப் பணிகள் அதுபோல நடைபெற்று முடிந்துவிடும். அதற்கு அவர் அவசியம் இல்லை என்பதை மற்ற அனைவரைப்போலவே அவரும் அறிவார் என்பதால், அதைப்பற்றி அவர் உட்பட யாருமே கவலைப்படுவதில்லை. ஆனால், அன்று நடைபெற வேண்டிய வேலைகளில் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டிய கடமை திரு.பெரியசாமி சாருக்கு உண்டு. இல்லையென்றால் தான் வாங்கும் சம்பளத்திற்கு அர்த்தமே இல்லை என்று நினைப்பவர் அவர்.
ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு செல்லப்பிராணி உண்டு.
செல்லப்பிராணிகள் ஏன் செல்லமாக வளர்க்கப்படுகின்றன தெரியுமா? அவற்றை அடிக்கலாம், உதைக்கலாம், அதற்கு சோறு போடாமல் வாட விடலாம், அதன் மீது ஏறி சவாரி செய்யலாம். அதை வேலை வாங்கலாம், காயப்படுத்தலாம், கடிவாளமிட்டு கட்டிப்போடலாம், சுருக்கமாகச் சொல்வதென்றால் செல்லப்பிராணி என்பது நூறு சதவீத அடிமை. அதனால்தான் அது செல்லப்பிராணி. ஒரு நாய் தன் எஜமானனைப் பார்த்து வெறுப்புடன் குறைத்தால் அது செல்லப்பிராணி அந்தஸ்தை இழந்து விடும். அதுபோலவே திரு. பெரியசாமி சாரின், எதிர்த்து பேசாத, எல்லாவித துன்பங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொள்ளக்கூடிய, கடிவாளமிட்ட ஒரு செல்லப்பிராணிதான் திரு. சம்பத் சார்.

திரு. பெரியசாமி சாருக்காக அலுவலகத்தில் தனியாக ஒரு டொயோட்டோ கார் ஒதுக்கியிருந்தாலும் அவரது செல்ல வாகனம் திரு. சம்பத் சார் மட்டுமே…தினசரி திரு. பெரியசாமி சார் ஏறி அமர்ந்து குதிரை ஓட்டுவதற்கு வசதியான குனித்த முதுகு திரு. சம்பத் சாருக்கு மட்டுமே வாகாக அமைந்துள்ளது. எனவே திரு. பெரியசாமி சார், சம்பத் சாரின் முதுகில் தினசரி அமர்ந்து சவாரி செய்வதில் அலாதி ஆனந்தம் கொள்வார் என்றால் அதில் மிகையில்லை. சென்னையைப் பொருத்தவரை யாரேனும் குனியத் தயாராக இருக்கும் பட்சத்தில் அவர் மேல் அமர்ந்து சவாரி செய்வதற்கு பலர் காத்திருந்தாலும், திரு. சம்பத் அவர்களை வாழ்நாள் முழுவதற்கும் வாடகைக்கு எடுத்திருப்பவர் திரு. பெரியாசமி சார் மட்டுமே. அவரது அந்த உரிமையில் வேறு யாரும் பங்கெடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார். அவருக்கு மட்டுமே முழுமையான சொந்தமான ஒரு பதிவிரதையான ஜீவன் அந்த அலுவலகத்தைப் பொறுத்தவரை திரு. சம்பத் சார் மட்டுமே. அவர் ஒரு கடைநிலை ஊழியனாக சேர்ந்தார். கடைநிலை ஊழியனாக வாழ்கிறார். கடைநிலை ஊழியனாக சாகப் போகிறார் என்பதை அவர் நெற்றியில் உற்றுப் பார்த்தால் படிக்க முடியும். அதை திரு. பெரியசாமி சார், சம்பத்தின் நெற்றியில் புரண்டிருந்த கற்றை முடியை விளக்கி படித்து விட்டார் போல. அதனால் அவரது செல்லப்பிராணியாக திரு. சம்பத் சாரை விலையில்லாமல் வாங்கிக் கொண்டார் திரு. பெரியசாமி் சார்.

சம்பத் – ஒரு சிறு குறிப்பு
எறும்பு தன்னைக் கடித்துக் கொண்டிருக்கும்போது அதனிடம் இவ்வாறு கூறுவார், “பார்த்து பற்கள் வலிக்கப் போகின்றன.” என்று. யாரேனும் அவரிடம் 10 ரூபாய் கேட்டால், எதற்கு என்று கேட்பார். டீ குடிப்பதற்காக என்று பதில் வரும்…. 10 ரூபாயில் எப்படி டீ குடிக்க முடியும் என்று எதிர் கேள்வி கேட்பார். பிறகு இந்தா 40 ரூபாயைப் பிடி என்று சரியாக எண்ணாமல் 70 ரூபாயை எடுத்துக் கொடுப்பார்.
ஒரு நாள் உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவரிடம் சென்ற அவருக்கு ஊசிபோட்டிருக்கிறார் மருத்துவர். அந்த நேரத்தில் பற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த எதையோ ஒரு பால்பாய்ண்ட் பேனா முனையால் நோண்டிக் கொண்டிருந்தார். அவருக்கு உணர்ச்சி உள்ளத்தில் மட்டும் இல்லை, உடலிலும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. ப்ரிஸ்கிரிப்ஸனில் பெயர் எழுதுவதற்காக மருத்துவர் அவர் பெயரைக் கேட்டபொழுது, புகழ்பெற்ற விஞ்ஞானி எடிசனுக்குப் பிறகு, வரலாற்றில் இரண்டாவது முறையாக தன்பெயரை கடினமாக யோசித்திருக்கிறார் திரு. சம்பத் சார்…
அவர் பேசும்போது, ஏதோ ஊட்டியில் அதிகாலைப் பனியில் பேசுவதுபோல் வாயிலிருந்து புகை வந்தபடி இருக்கும். அது எப்படி சென்னையில் கொளுத்தும் வெயிலில் வாயிலிருந்து ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவே பனிப்புகை வருகிறது என்று ஆச்சரியமடையத் தேவையில்லை. அது பனிப்புகை அல்ல. அது சிகரெட் புகை. ஒரு குப்பையில் தீப்பிடித்து எறிந்து முடித்த பின்னரும், அதிலிருந்து புகை வந்து கொண்டே இருப்பதுபோல, திரு. சம்பத் சிகரெட் குடித்துமுடித்த பின்னரும் அவரது வாயிலிருந்து புகை வந்தபடியே இருக்கும். அந்த புகை அடங்குவதற்கு அவர் நேரம் கொடுப்பதேயில்லை. அவரை நம்பி இந்தியாவில் பல சிகரெட் கம்பெனிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன. தன்னந்தனி ஆளாக இருந்து ஒரு சிகரெட் கம்பெனியையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்கிற பெருமை திரு. சம்பத் சாருக்கு உண்டு. புகை பிடிப்பது ஒன்றுமட்டுமே அவரது ஒரே பொழுதுபோக்கு.

வேட்டை நாயிடம் சிக்கிக் கொண்ட முயல்கூட சற்று துள்ளி எதிர்ப்பு காட்டும். ஆனால், பெரியசாமி சாரிடம் மாட்டிக்கொள்ளும் சம்பத் சார் யாருக்கும் கேட்காமல் முணங்குவதோடு சரி. வேறு எந்தவித எதிர்ப்பும் காட்டுவதில்லை.
அதிகாரமிக்க, தோரணையான, வெறுப்பை உமிழ்கிற, கொடூரமான கணவனிடம், மென்மையான, பூவிதழ்களைப்போன்ற புது மனைவி, தலையைக் குனிந்தபடி காஃபி கொடுப்பதுபோல (தற்பொழு வழக்கொழிந்து போனாலும் ஒரு காலத்தில் அவ்வாறு நடைபெற்றது) திரு. சம்பத் சார்….தலைக்கு மேல் இரண்டு கொம்புகளைக் கொண்ட, கோரைப்பற்கள் இரண்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்ற, சாத்தானையொத்த திரு. பெரியாசமி சாரிடம் எப்பொழுதும் தாழ்பணிந்து நடந்து கொள்வார்.
அது எந்த அளவுக்கு சீஃப்பாக நடைபெறுமெனில் ………………….
முதலில் உயிர்துறந்து சொர்க்கத்திற்குச் செல்வதா… நரகத்திற்குச் செல்வதா… என்கிற வழக்கிற்காக, மேல் உலகத்தின் வாசல்படியில் அமைக்கப்பட்டுள்ள மேல் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக வரிசையில் திரு. சம்பத் சார் காத்திருக்கும் போது (ஆஃப்டர் டெத்), யார் செய்த புண்ணியத்தினாலோ சற்று தாமதமாக உயிர் துறந்து, (பொதுவாக நரகாசுரன், ராவணன், தாரகாசுரன் போன்ற அரக்கன்களுக்கெல்லாம் தூய்மையான பதிவிரதைகள் கிடைத்து விடுவதுண்டு… அதுபோல) மேலுலகத்துக்கு, இறுதி வழக்கு விசாரணைக்காக வரும் திரு. பெரியசாமி சார், தனக்கு முன்னதாக வரிசையில் நிற்கும் சம்பத்தை…… இது மேலுலகம், இறுதித் தீர்ப்பு வழங்கப்படப் போகிற இடம், இனிமேல் தன் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகின்ற நீதிமன்றம் என்பதையெல்லாம் மறந்து…… அவர் உள்ளிருக்கும் சாத்தானின் உந்துதலால்….. அவரை உருட்டி, மிரட்டி அறிவுரை கூறி, அந்த மட்டமான அறிவுரையை வலுக்கட்டாயமாக ஏற்கச் செய்து, சம்பத்தை தனக்கு பின்னால் வந்து நிற்குமாறு செய்து விடுவார்…..
கிலோ தக்காளி 2 ரூபாய்க்கு சரிந்து போவதைவிட, ஒரு கிலோ ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு தரப்படுவதைவிட, ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுவதைவிட, சீ………ப்பான ஒரு விஷயம் திரு. பெரியசாமி சாரின் பரந்து விரிந்த மனது என்பது திரு. சம்பத்துக்குக்குத் தெரியும் என்பதால் அவர் அதிகமாக எதிர்ப்பு காட்டுவதில்லை.

இதேபோல…..

ஏதேனும் ஒரு இடத்தில் கலவரம் நடைபெறும் பட்சத்தில் அவ்வழியே திரு. சம்பத் சார் செல்ல நேரிடும்போது, எந்த ஒரு காயமுமின்றி தப்பி வந்து விடக்கூடிய தகுதியும், திறமையும் அவருக்கு உண்டு. அது எவ்வாறெனில்…..

திரு. சம்பத் சாரின் நெற்றியில் அழுத்தமாக பச்சை குத்தப்பட்டிருக்கும் “அப்பாவி” என்கிற வார்த்தையை, எழுதப்படிக்கத் தெரியாத கைநாட்டு வன்முறையாளனால் கூட படித்து புரிந்து கொண்டுவிட முடியும் என்பதால், ஒரு தீவிரமான கலவரத்தின் நடுவே எந்தவிதமான சேதாரமும் இன்றி அவர் தப்பித்து “நடந்து” வந்துவிடுவார். .

நிற்க……. அதே கலவரத்தில் திரு. சம்பத்துடன், திரு. பெரியசாமிசாரும் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில்,
“சம்பத், எனக்கு எட்டு தையல் போடப்பட்டால், அட்லீஸ்ட் 7 தையலாவது நீங்கள் போட்டுக் கொள்ள வேண்டும். அதனால் ஒரு கட்டையை எடுத்து நீங்களே உங்கள் தலையில் அடித்துக் கொள்ளுங்கள்….” என்று கூறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஒருவேளை திரு. பெரியசாமி சாரின் அந்த அறிவுரையை (அதாவது உத்தரவை), திரு. சம்பத் சார் மீறிவிடும் பட்சத்தில் ஒரு கட்டையை எடுத்து வந்து
“சம்பத் வலிக்காமல் உங்கள் தலையை நான் பிளக்கிறேன், கவலைப்படாதீர்கள்” என்று திரு. பெரியசாமி சார் கூறுவதற்கும் வாய்ப்புண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு அழகான இளம்மனைவி, எதற்காக ஒரு குடிகார, எதைப்பற்றியும் கவலைப்படாத, மனைவியை டார்ச்சர் செய்து குரூரமாக ரசிக்கின்ற, காயம் ஏற்படும் வகையில் அடிக்கின்ற. கணவனை பொறுத்துக் கொண்டு அவன் ஒருவனுடனேயே வாழ வேண்டும் என்று நினைக்கின்றாள் தெரியுமா?…..

99 சதவீதம் பொருளாதார ரீதியாக கணவனை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையும், ஒரு சதவீதம் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒருத்திக்கு ஒருவன் என்கிற பழக்கவழக்கமும்தான்.

ஆனால் மனைவியிடம் குரூரத் தன்மையை அனுபவித்த ஒரு சிலருக்கு அது (அடக்கியாளும் ஆசை) போதாத காரணத்தாலோ அல்லது துரதிர்ஷ்டவசமாக, கிடைக்காத காரணத்தாலோ, அலுவலகத்தில் வேறு ஒரு ஜீவனை தேர்ந்தெடுத்து தங்களது குரூரத்தன்மையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

அப்படியொரு அடக்கியாளும் குரூரத் தன்மையின் வெளிப்பாடுதான் திரு. பெரியசாமி சாரினுடைய எண்ணங்களும். சரியாகச் சொல்ல வேண்டுமேன்றால், திரு. சம்பத் சாரை ஒரு இந்திய மனைவியாக்கும் முயற்சியில் திரு. பெரியசாமி சார் ஈடுபட்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை.
திரு. சம்பத் சார் பொருளாதார ரீதியாக அலுவலகத்தை நம்பியிருக்கும் ஒரு அப்பாவி. அவரது பொருளாதாரத் தேவையை உபயோகித்து அவர் மீது சவாரி செய்ய நினைக்கும் பெரியாசாமி சார், ஒரு தார மனம் கொண்டவரல்ல. அவருக்கு பல அடிமைகள் தேவைப்படுகிறார்கள். பல இந்திய மனைவிகளைப் போன்ற குணம் படைத்தவர்கள் தேவைப்படுகிறார்கள். அதாவது பொருளாதார ரீதியாக ஒருவனையோ, அல்லது ஒரு நிறுவனத்தையோ நம்பியிருக்கும் எந்த ஒரு ஜீவனும் அடிமைகளே……
சம்பத் சார் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமையாகிப்போனார். திரு. பெரியசாமி என்கிற அதிகாரியின் நோய்க்கு மருந்து கொடுப்பதை விடுத்து, திரு. சம்பத்சாரை பிடித்துக் கொடுத்துவிட்டார் அந்தக் கடவுள். கடவுளுக்கு அவசரமாக பாத்ரூம் வந்த பொழுது பெரியசாமி சாரை படைக்கும் வேளையில் ஈடுபட்டுவிட்டார். அவஸ்தையில் அலங்கோலமான எண்ணங்களுடன் படைக்கப்பட்டுவிட்டார் பெ.சாமி சார்.
கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்கிற பழமொழியை முதன் முதலில் உருவாக்கியவர் திரு. பெரியசாமி சாரை அகஸ்மாஸ்தாக சந்தித்திருக்கும் பட்சத்தில், அந்தப் பழமொழி இவ்வாறு மாறியிருக்க வாய்ப்புண்டு… அதாவது…
“கோபம் இருக்கும் இடத்தில் தான் குரூரம் இருக்கும்” என்று…
திரு. பெரியசாமி சாரின் குரூரத்துக்கு தினசரி பலிகடாவாக தலையை நீட்டியபடி என்றென்றைக்கும் எதிர்ப்பு காட்டாமல் வாழ்ந்து வரும் திரு. சம்பத் சார், அவர் அசந்திருக்கும் நேரத்தில் அலுவலகத்தில் உள்ள மற்றவர்களைப் போல, பாத்ரூம் சென்றிருப்பார். மீன் தூண்டில் முள்ளில் அப்பாவியான புழுவை மாட்டுவது நீர்நிலையில் உள்ள மற்ற மீன்களின் அட்டென்ஷனைக் கவர்வதற்காகத்தான் என்பது புழுவுக்குத் தெரிவதில்லை. அதுபோல திரு. சம்பத் சார் மூச்சா போய்க் கொண்டிருக்கும்போது கூட, மிகக்கடினமாக கத்தி கூப்பாடுபோட்டு, பாதியில் அலுவலகத்துக்குள் வரவழைக்கும் திரு. பெரியசாமி சாரின் பழக்கம், யாருடைய அட்டென்ஷனையோ கவர்வதற்கு என்பது அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

அந்தப் புழு ஒவ்வொரு நாளும் புகைக்கப் போய்விடுவது வழக்கம். தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பவர்களுக்கெல்லாம், தான் அலுவலகம் வந்து விட்டதை உணர்த்துவதற்காகவும், தான் மிகவும் கோபத்தில் இருப்பதை அனைவருக்கும் (முக்கியமாக பெண்களுக்கு) தெரியப்படுத்துவதற்காகவும்…………10வது மாடியில் அப்பாவிப் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியபடி ஒளிந்துகொண்டிருக்கும் மோசமான வில்லனை, கீழ்தளத்திலிருந்து, பழைய ஜெய்சங்கர் படத்தில் வரும் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி தொண்டை கிழிய கத்தி கடமையை ஆற்றும் போலீஸ் உயரதிகாரி போல, திரு. பெரியாசாமி சார் (ஒலிப்பெருக்கி இல்லமல்) வெறித்தனமாகக் கத்துவார்.
“சம்பத்த்த்த்த்த்த்த்த்………..”
அந்தக் குரல் அலுவலகத்தின் நாலாபுறமும் காண்டாமணியைப் போல எதிரொலிக்கும்.
திரு. பெரியசாமி சாரின் குரல்வளை மிகவும் புகழ்பெற்றது.
அது………அது கிட்டத்தட்ட லேப்ரடார் வகை நாயின் குரலைப் போன்று கனீரென்று, ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலியெழுப்புதைப்போல, குறிப்பிட்டு சொல்வதென்றால் அருகில் இருப்பவரின் காதுகளை செவிடாக்கும் தன்மை கொண்ட, காதுகளை எவ்வளவு இருக்கமாக பொத்திக் கொண்டாலும் தெளிவாக கேட்கக் கூடிய அளவுக்கு சற்று வெறித்தனமானது.
காதுகள் இரண்டும் செவிடான ஒருவர் அவர் அருகில் அமர்ந்திருக்கும் பட்சத்தில் தன்னை இவ்வளவு நாளாக செவிடன் என்று நம்பி வந்ததை எண்ணி வருத்தப்படுவார். தனக்கு காதுகள் இரண்டும் நன்றாகத்தான் கேட்கின்றன என்பதை உணர்த்திய திரு. பெரியசாமி சாருக்கு தனது உளம் கனிந்த நன்றிகளைக் கூறுவார். உலக வரலாற்றில் ஜீசசுக்குப் பிறகு செவிடனை கேட்க வைக்கக் கூடிய திறமை திரு. பெரியசாமி சாருக்கு மட்டுமே உண்டு.

அலெக்சாண்டர் கிரஹாம்பெல்லுக்கு திரு. பெரியாசமி சாரைப் போன்ற நண்பர் அமைந்திருக்கும் பட்சத்தில் அவர் தொலைபேசியின் தேவையை உணர்ந்திருக்கவே மாட்டார். ஏனெனில் இருவரும் அவரவர் வீட்டிலிருந்து கத்தி பேசிக்கொள்வார்கள். எவ்வாறு சத்தமாக பேசுவது என்பதை கிரஹாம்பெல்லுக்கு திரு. பெரியசாமி சார் கற்றுக் கொடுத்திருப்பார்.

அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் நெளிவு சுளிவுடன் புகைவிட்டுக்கொண்டிருக்கும் சம்பத் சார், அலுவலகத்தின் முதல் தளத்திலிருந்து திரு. பெரியசாமி சாரால் எழுப்பப்படும் ஒலியால் மிரட்சியடைந்து கையை சுட்டுக் கொள்வார். பின் அநியாயமாக ஒரு சிகரெட் வீணாகிப்போனதை நினைத்து வருத்தப்படுவார். அப்பொழுது ஏனோ அவருக்கு இந்தத் திருக்குறள் ஞாபகத்திற்கு வரும் .

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”

தமிழர்களைப் பொறுத்தவரை சம்பந்தமில்லாத நேரத்தில் சம்பந்தமில்லாத விஷயங்கள் ஞாபகத்திற்கு வருவது வழக்கம்தான் என்பதை நண்குணர்ந்திருக்கும் திரு. சம்பத் சார். சுட்டபுண்ணில், இந்தியர்களின் இயற்கை மருத்துவ வழிமுறையைப் பயன்படுத்தி எச்சிலைத் தடவி விட்டுக் கொள்வார். இரண்டிரண்டு படிகளாக தாவி ஓடிச் சென்று, பெரியசாமிசாரின் முன்னிலையில் அட்டென்ஷென்னில் நிற்பார்.

சுமார் 20 நிமிடங்கள் சிற்சில மோசமான வார்த்தைகளையும், பற்பல கேவலமான அர்த்தங்களையும் பயன்படுத்தி அறிவுரை என்கிற பெயரில் நாகரீகமாகவும், சத்தமாகவும் சில விஷயங்களை எடுத்துரைப்பார் திரு. பெரியசாமிசார். நிச்சயமாக மானம் என்கிற ஒரு வஸ்து உடம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்சத்தில் எந்த ஒரு மனிதனும் உயிர்வாழ விரும்பமாட்டான் என்றாலும், முந்தைய நாள் கழற்றிப்போட்ட சட்டைப்பையில் மானத்தை மறந்து வைத்துவிடடு அலுவலகம் வந்து விடுவதால் திரு. சம்பத் சார் வழக்கம்போல் தலையை செம்மறி ஆட்டைப்போல் ஆட்டிவிட்டு தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொள்வார்.

நிச்சயமாக திரு. பெரியசாமி சார் கூறும் அருவெறுப்பான அறிவுரைகள், மூன்று அறைகள் தள்ளி அமர்ந்திருக்கும் பெண்களின் காதுகளில் விழுந்திருக்கும் என்பதை உணர்ந்து குரூரமாக திருப்பதியடைவார். பொதுவாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் அடுத்த அறையில் இடிவிழுந்தால் கூட “யார் கடுகு தாளிப்பது” என்று பக்குவமாக உணர்ந்து கேட்பார்கள். அத்தகைய தன்மை கொண்ட பெண்களை அசைத்துப் பார்க்கும் தன்மை திரு. பெரியசாமி சாரின் குரூரமான குரள்வளைக்கு உண்டு. அவர்கள் நிச்சயமாக அங்கிருந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் எள்ளவும் அவருக்கு சந்தேகமிருப்பதில்லை.

அவரது செல்ஃபோன் ரிங்டோனாக ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை வைத்திருக்கிறார். அது தினசரி ஆஞ்சநேயரை தூக்கில் ஏற்றுவதற்குச் சமம். உலகில் கடவுள் என்று ஒருவர் இல்லை என்பதற்கு வலிமையானதும், முதன்மையானதுமான ஒரு காரணம் இருக்கிறதென்றால் அது இதுதான். எவ்வாறெனில், ஆஞ்சநேயர் என்று ஒருவர் மட்டும் இருந்திருந்தால், திரு. பெரியசாமி சாரை சகித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு அவருக்கு பொறுமை இருந்திருக்காது. ஆஞ்சநேயரிடம் ராவணன் முதலில் சாக வேண்டுமா? அல்லது திரு. பெரியசாமி சார் உயிர்துறக்க வேண்டுமா? என்று சாய்ஸ் கேள்வி கேட்கப்பட்டிருக்கும் பட்சத்தில், யார் கண்டது ராவணனை ஒரு நிமிடம் அவர் மறந்துவிடலாம். திரு. பெரியசாமிசாரின் பெயரை அவர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பெண்களிடம் நிரூபிக்க வேண்டிய விஷயங்கள் ஆண்களுக்கு நிறைய உண்டு போல. ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வாரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், அவர்கள் எதையாவது ஏற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் ஆண்கள் எதையாவது அவர்கள் முன்னிலையில் நிரூபித்துக் கொண்டிருக்க முயற்சி செய்து கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வாரு விநாடியும்.

ஆண்கள் எதை நிரூபிக்க வேண்டும், பெண்கள் எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது புரியாதபுதிராகவே இருக்கிறது. ஆனால் தினசரி முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு பொது இடத்தில், நிரூபிக்கப்படுதலும், ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுதலும், சாக்கடை முடைநாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

முடிக்க முடியாத சிக்கலான அலுவல்களைத் தேடிப்பிடித்து தான் ஒப்படைப்பார் என்பது இருவருக்கும் நன்றாகத் தெரியும் இது தினசரி நடைபெறும் ஒரு விளையாட்டு. அதுதான் ஒரு அதிகாரியின் பலமும் கூட. அதையும் மீறி உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து, ஒரு கின்னஸ் சாதனை முயற்சியாக வேலையை முடித்துக் கொடுத்தால், அதிலும் ஆயிரத்தெட்டு நொட்டை சொல்ல, 30 வருட அனுபவமிக்க அதிகாரி ஒருவரால் முடியாதா என்ன?
எதிர்பார்க்கக்கூடிய சாக்கடை முடைநாற்ற நேரம் வரும்பொழுது மூளையில் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் எல்லாம்வேகமாக சுரந்து திரு. சம்பத் சாரின் மனதையும், உடலையும் இரும்பாக்கிவிடும். அவர் உணர்ச்சியற்று போய்விடுவதற்காக அவரது உடலே அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு அது.

அதன்பின் ஓட்டுவீட்டில் பெய்த ஆலங்கட்டி மழையாய் அவ்வப்போது அங்கங்கு உடைந்து சிதறி அலுவலகம் முடியும் வேளையில் மனம் அமைதியாகி அமர்ந்திருக்கும்.
அமைதியில் பல்வேறு அமைதிகள் உள்ளன. மனம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வாய் அமைதியாக இருப்பது. மௌன விரதம். ஏற்கெனவே தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இறந்த கால செய்திகளுடன், மூளை நம்முடைய அனுமதியின்றி தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கும்.
மனம் விழித்துக்கொண்டிருக்கும் பொழுது மூளை தூங்கி விடுவது கனவு. மனம் தொடர்ந்து தனது கிறுக்குத் தனமாக எண்ணங்களை வெறியோடு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். மனதைக் கட்டுப்படுத்தி சீராகக் கொண்டு செல்லும் மூளை அங்கு தூங்கி விடுவதால் மனம் தறிகெட்டு சென்று கொண்டிருக்கும். தூங்கிக்கொண்டிருப்பவனைப் பார்த்தால் அமைதியாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் தூங்கிக் கொண்டிருப்பவனுள் அமைதி இல்லை.

காயப்பட்டவனிடம் ஒருவித அமைதி காணப்படும்.

காயப்பட்டவனின் மனதிற்கு எதையும் நினைக்கப்பிடிக்காது. மனம் கசப்பாக இருக்கும் மனம் புண்பட்டு ரணமாக கிடக்கும். அதற்கு சற்று ஓய்வு தேவைப்படும். அந்த மனம் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கும். அல்லது ஒதுங்கிச் செல்லும். கசப்பான மனம் ஐம்புலன்களையும் தனக்குள் அடக்கிக் கொள்ளும். அதற்கு பார்க்கப்பிடிக்காது. கேட்கப்பிடிக்காது. சுவைக்கப்பிடிக்காது. சிந்திக்கப் பிடிக்காது. அது அமைதியாக இருக்கம். அந்த மனம் அமைதியை தனக்குள் நிரம்பிக் கொண்டிருக்கும்.
காயப்பட்டவனின் அமைதி மூளை, மனம், சிந்தனை, புலன்களை் என அனைத்திலிருந்தும் விடுபட்ட ஆழ்ந்த அமைதி.

இப்பொழுது இரவு உணவு உண்பது என்பது வெறும் கடமை மட்டுமே. பகவத்கீதையில் கிருஷ்ணன் சொன்னது போல, காயப்பட்டவனின் இரவு உணவு தாமரை இலை நீருக்கு ஒப்பானது.

அன்று இரவு மீண்டும் கனவு வந்தது…….. கனவில் திரு. சம்பத் சாரின் முன்னாள் அதே ஒலிப்பெருக்கி…..ஆச்சரியப்படத்தக்க வகையில் அதே சோடா…..அதே பையன்…..இன்னும் அந்த சோடாவை குடிக்க அவருக்கு நேரமில்லை. தொடர்ந்து அவர் பேசினார், அனல்பறக்க….அவருள் ஒரு தீ இன்னும் அணையாமல் இருந்தது.

____

surya lakshminarayanan
ljsurya@gmail.com

Series Navigation
author

சூர்யா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *