நீங்காத நினைவுகள் – 26 –

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா

சென்ற கட்டுரைகளில் ஒன்றில், தினமணி கதிரிலிருந்து திரும்பிவந்த ஒரு குறுநாவலை ஆனந்தவிகடனுக்கு அனுப்பி விட்டு, அங்கிருந்தும் அது திரும்பிவந்தால் எழுதுவதையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு விரக்தியில் இருந்தது பற்றிச் சொன்ன ஞாபகம். எட்டு மாதங்கள் ஆன பிறகும் அது பற்றிய முடிவு தெரிவிக்கப்படாத நிலையில் அது திருப்பப்பட்டுத் தபாலில் தவறியிருந்திருக்க வேண்டும் என்று தோன்றியதில் விரக்தி மேலும் மிகுந்தது. ‘என் கதை என்னவாயிற்று?’ என்று எழுதிக் கேட்பதற்கும் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. எனினும் தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு, ‘நாளைக்கு எழுதிக் கேட்டுவிடலாம்’ என்று தீர்மானித்த அன்று ஆனந்தவிகடனிலிருந்து ஓர் அஞ்சலட்டை வந்தது. கதை ஏற்கப்பட்டிருந்ததைத் தெரிவித்த கடிதம். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்கச் சொற்கள் இல்லை. ஏனெனில் ஆனந்த விகடன் பெரிய பத்திரிகை யென்றும், அதில் கதை வரவேண்டுமென்றால் அங்குள்ள யாரையேனும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வதந்தி காதில் விழுந்திருந்தது. யாரையுமே தெரிந்திராத எனக்கு அதெல்லாம் சுத்தப் பொய் என்பது அப்போது தெரிந்து போயிற்று. ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினேன்.
மறுவாரம் விகடன் வருவதற்கு முந்தின நாள் அவ்வலுவலகத்திலிருந்து அப்போது அதில் தலைமை உதவி ஆசிரியராக இருந்த திரு. மணியன் அவர்கள் என்னோடு தொலைபேசினார். “நான் விகடன்லேர்ந்து உதவி ஆசிரியர் மணியன் பேசறேன். உங்க கதை கொஞ்சம் பெரிசா இருந்ததால அதைக் குறுநாவலாப் போட்றோம். நாளைக்கு விகடன்ல வருது. கோபுலு படம் போட்டிருக்கார்!…” என்ற பின் அக்கதையைப் பாராட்டிச் சில வார்த்தைகள் கூறினார். ஒரே பரவசமாக இருந்ததால் அவர் பேசியதை முற்றாய் மனத்தில் வாங்கிக்கொள்ள முடியவில்லை. “தாங்க்ஸ்… தேங்க்யூ!” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. “கீப் ரைட்டிங்! ஆல் த பெஸ்ட்!’ என்று சொல்லிவிட்டு, நான் மறுபடியும் நன்றி சொன்னபின் தொடர்பைத் துண்டித்தார்.
அதன் பின் வரிசையாக விகடனில் என் சிறுகதைகள் இடம் பெறலாயின. கொஞ்ச நாள் கழித்து அவரும், அங்கு மேலும் ஓர் உதவி ஆசிரியராய்ப் பணிக்கு அமர்ந்திருந்த தாமரைமணாளனும் விகடன் நிறுவனத்திலிருந்து பிரிந்து சென்று இதயம் பேசுகிறது எனும் வார இதழைத் தொடங்கினார்கள்.
“இதயம் பேசுகிறது” தொடங்கப்பட்டுச் சில நாள்கள் கழித்து, ஒரு வாசகரின் குற்றச் சாட்டுக்கோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்வின் அடிப்படையிலோ “ஆபாச” இலக்கியத்துக்கும், தம் வார இதழின் அத்தகைய உள்ளடக்கத்துக்கும் மணியன் வக்காலத்து வாங்கித் தமது கருத்தை அவ்விதழில் பதிவுசெய்திருந்தார். இலக்கிய உலகை இவ்விதம் கலக்கிய “பெருமை” ஸ்ரீ வேணுகோபாலன் என்னும் அருமையான எழுத்தாளரைப் புஷ்பா தங்கதுரை என்னும் தரங்கெட்ட எழுத்தாளராக்கிய அமரர் திரு. சாவி அவர்களையே சாரும் என்பதைப் பலரும் அறிவார்கள். அண்மையில் நட்பில் சிறந்த ஸ்ரீ வேணுகோபாலன் மறைந்த போது இதைக் குறிப்பிடவும், ஆனால் அவரைப் புஷ்பா தங்கதுரையாக மாற்றம் செய்த சாவி அவர்கள் அந்தப் பாணியில் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லை என்பதைச் சொல்லவும் ஒரு பத்திரிகை யாசிரியர் தவறவில்லை.
நிற்க, திரு மணியன் தமது கருத்தை இவ்வாறு வெளியிட்டிருந்தார்: ‘ஒரு வீடு என்று இருந்தால், அதில் பூஜையறையும் இருக்கும், கழிவறையும் இருக்கும், தம்பதியரின் படுக்கையறையும் இருக்கும். பூஜையறை மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லுவது சரியா?’ என்கிற பொருளில் அந்தக் கருத்து அமைந்திருந்தது. அந்தக் கருத்துக்கு மாறான கருத்தைத் தெரிவிக்க வழக்கம் போல் துடித்த என் விரல்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடிய்வில்லை. இப்படியெல்லாம் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுப் பத்திரிகை ஆசிரியர்களின் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளுவதால் அவர்கள் அதைத் தனிப்பட்ட விரோதமாய்க் கருத இடமாகுமே, அதனால் நமது வருங்காலம் இலக்கிய உலகில் பாதிக்கப்படுமே என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. (இப்படி நான் வெளிப்படையாக எதிர்த்தவர்களில் சில பெருந்தனமையாளர்கள் என் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து என் கதைகளை வெளியிட்டுவந்ததுண்டு. சிலர் நிறுத்தியதும் உண்டு! நிறுத்தியவர்களே அதிகம். )
திரு மணியன் அவர்களிடம் பாராட்டத்தக்க மிக நல்ல தன்மை ஒன்று ஒண்டு. மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிற கட்டுரையை வெளியிட்டுவிட்டு, அதன் கீழே, ‘இது கட்டுரையாளரின் கருத்து. இதனின்று என் கருத்து மாறுபட்ட போதிலும், மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்து இது வெளியிடப்படுகிறது’ எனும் பொருள்படும் அடிக்குறிப்பை வெளியிடுவார்.
‘ஒரு வீடு என்று இருந்தால், பூஜை அறையும் இருக்கும், கழிவறையும் இருக்கும், தம்பதியரின் படுக்கையறையும் இருக்கும் என்கிறீர்கள். ரொம்பவே சரிதான். பூஜையறையைத் திறந்து வைத்துக்கொண்டுதான் தூப, தீப ஆராதனை செய்வார்கள். ஆனால் தம்பதியரின் படுக்கையறை அப்படியா? தம்பதியர் கதவை மூடிக்கொள்ளுவார்கள் அல்லவா? நீங்களோ இலைமறைகாயாக இருக்க வேண்டியவற்றை வெளிப்படையாக வெளியிடுகிறீர்களே? இது சரியா? அண்மையில் இந்தியத் தொலைக்காட்சியில் இங்கிலாந்துப் பெண் எழுத்தாளர் பார்பரா கார்ட்லண்ட் அளித்த பேட்டியைப் பார்த்தீர்களா? பேட்டிகண்டவரின், ‘அமெரிக்க எழுத்தாளர்களைப் போல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் விலாவாரியாய் செக்ஸ் எழுதுவதில்லையே? இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?’ எனும் கேள்விக்கு, அவர் கண்களைக் குறும்பாய்ச் சிமிட்டிவிட்டு, ‘செக்ஸ் இலக்கியம் அமெரிக்காவில் நிறைய வெளிவருவதால்தான் அங்கே இங்கிலாந்தைப் போல் பன் மடங்கு எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளார்கள்!” என்றாரே! சமுதாயப் பொறுப்பு உள்ளவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா இது?” என்று நான் எழுதியதை அவர் வெளியிடவில்லை.
எனினும் தாம் தொடங்கிய சிறுகதைக் களஞ்சியம் எனும் இதழில் என் கதைகளைக் கேட்டுப் பெற்று வெளியிடலானார். சில நாள்கள் கழித்து, மணியன் எனும் தமது மாத நாவல் இதழ் ஒன்றுக்குத் தாம் எழுதிய முன்னுரையில் தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண் எழுத்தாளர்களின் பட்டியலைத் தெரிவித்திருந்தார். அதில் என் பெயர் இல்லை! மற்ற பெண் எழுத்தாளர்களின் அளவுக்கு நான் பேரும் புகழும் பெற்றிருக்கவில்லை என்பது அவரது சொந்தக் கருத்தாக இருக்கக்கூடும் என்று எண்ணிச் சமாதானமுற்றேன். எனினும் பாதி உண்மையாகவும், பாதி விளையாட்டாகவும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘மற்ற பெண் எழுத்தாளர்களின் பெயர்களை யெல்லாம் குறிப்பிட்ட நீங்கள் என் பெயரை மட்டும் விட்டுவிட்டீர்கள். காரணம் எதுவாக இருந்தாலும், என்னை அறிமுகப்படுத்திய “குற்ற”த்தில் விகடனில் தலைமை உதவி ஆசிரியராக இருந்த உங்களுக்கும் கணிசமான பங்கு உண்டுதானே! எனவே, அடுத்த முறை இது போல் ஒரு முன்னுரையோ கட்டுரையோ எழுதும் போது அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒரு வரி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்…” என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அவர் பதிலேதும் எழுதாவிடினும், என் கடிதம் தம்முள் விளைவித்திருந்த குற்ற உணர்வைப் பிரிதொரு சமயம் மறைமுகமாக எனக்கு உணர்த்திவிட்டார். அதுதான் திரு. மணியன்!
சில நாள் கழித்து, மாலை நேர விழா ஒன்றில் தலைமை தாங்க வந்திருந்த அவர் அவையில் இருந்த என்னை நோக்கிக் கையசைத்ததுடன், கூட்டம் முடிந்து எல்லாரும் சிற்றுண்டியருந்தத் தொடங்கிய நேரத்தில் தாமே என் இருக்கையை நெருங்கி வந்து நலம் விசாரித்தபின், “ஒரு நாள் எங்க ஆபீசுக்கு வாங்களேன். பேசலாம்!” என்று அழைத்தார். ஆனால் என்னால்தான் போக முடியவில்லை.
இதன் பின் ஒரு நாள் என் எழுத்தாள நண்பர் ஒருவர் தாம் எழுதிய நூல் ஒன்றுக்கு என்னிடம் வாழ்த்துரை கேட்பதற்காக என் அலுவலகத்துக்கு வந்தார். அந்நூலின் ஒரு படியையும் உடனெடுத்து வந்திருந்தார். அது அவர் எழுதிய விமர்சனகங்களின் தொகுப்பாகும். அவர் வந்தது எங்கள் அலுவலகத்தின் சாப்பாட்டு நேரம். உடனே அச்சுக்குக் கொடுக்க வேண்டியுள்ளதால் சின்னதாய் ஒரு வாழ்த்துச் செய்தியை அப்போதே எழுதித் தருமாறும் கேட்டார். அந்தக் கட்டுரைகள் யாவுமே நான் சில பத்திரிகைகளில் படித்துப் பாராட்டியவைதான் என்றும் தெரிவித்தார். எனவே, அவரது பேச்சை நம்பி ஒரு சிறு முன்னுரையை உடனே எழுதிக் கொடுத்துவிட்டேன். அவரும் விடைபெற்றுச் சென்றுவிட்டார். அந்த நூலை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன். சில நாள்கள் கழித்து அதைப் புரட்டியபோது, நான் படித்திராத சில கட்டுரைகளும் அதில் இருந்த்தைக் காண நேர்ந்தது. அவற்றுள் ஒன்று அந்த எழுத்தாளர் மணியன் அவர்களை மோசமாக விமர்சித்திருந்த கட்டுரை ஆகும். எனக்குத் திக் கென்றானது. அவர் சொன்ன யாவற்றுடனும் எனக்கு உடன்பாடு கிடையாது. அதைப் படித்திருந்திருப்பின் எனது முன்னுரையில் அது பற்றிச் சொல்லி யிருந்திருப்பேன். என்னை அறிமுகப்படுத்தியவரைத் தாக்கிய கட்டுரையைச் தாங்கிய நூலுக்கு நான் வாழ்த்துரை வழங்கியது என்னைக் கழிவிரக்கமுறச் செய்தது. உடனேயே மணியன் அவர்களுக்கு நடந்ததைத் தெரிவித்தும், அந்த நூலைத் திரும்பவும் ஒரு தரம் முவுவதுமாய்ப் படிக்காமல் வாழ்த்துரை எழுதியமைக்கு வருந்தியும் கடிதம் எழுதினேன். அதில், ‘நீங்கள் விமரிசனங்களின் பாதிப்புக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன். எனினும் என்னை மன்னித்ததாய் ஒரு வரி பதில் எழுதினால் மகிழ்ச்சி யடைவேன் இரண்டு நாள்களாய்ச் சரியாய்த் தூங்கவில்லை….’ என்றும் அதில் குறிப்பிட்டிருந்தேன்.
மறு தபாலில் அவரிடமிருந்து பதில் வந்துவிட்டது: ‘நான் விமரிசனங்க ளின் பாதிப்புக்கு அப்பாற்பட்டவன் என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே! எனவே நீங்கள் வருந்த வேண்டாம். சரியாகப் படிக்காமல் வாழ்த்துரை எழுதிவிட்டீர்கள் என்பதை நான் நம்புகிறேன்’ என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்த பிறகுதான் எனக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.
தாம் அடிக்கடி எழுதும் ஒரு பத்திரிகையில் அதற்கு ஆசிரியராகவும் இருக்கும் ஒருவர் பிற எழுத்தாளர்களின் நல்ல படைப்புகளைப் புறக்கணித்துவிடுவார் என்று கேள்வி. மணியன் அப்படிப்பட்டவர் அல்லர்.
பயணக் கட்டுரைகளை மிகவும் சுவையாக எழுதும் கலையில் மணியன் வல்லவர். இதயம் பேசுகிறது என்பது தம் பன்னாட்டுப் பயணக் கட்டுரைத் தொடர்களுக்கு அவர் இட்ட தலைப்பாகும். அவரைப் பின்பற்றிப் பலர் தங்கள் பயணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்று கேள்வி. மறைந்த பின்னரும் சிலர்தான் நினைக்கப்படுகிறார்கள். மணியன் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

4 Comments

 1. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் கிரிஜாம்மா,

  உள்ளதை உள்ளபடி, நடந்ததை நடந்தபடி, அப்படியே
  மனதோடு பேசுவது போலவே, எழுத்தில் நிகழ்வுகளை
  வடிப்பது உங்களுக்கு கை வந்த கலை என்று எண்ணுகிறேன் .

  ஒரு ஆரம்ப கால எழுத்தாளரின் மன நிலைமை, மற்றும் ஒரு
  எழுத்தாளராக அவரது சிந்தனைகளை எழுத்துக்கள் ஆள
  நீங்கள் நினைவாக முத்திரை பதித்து இருக்கிறீர்கள்.

  திரு.மணியன் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்புக் கிட்டியதில் மகிழ்ச்சி,

  அன்புடன்.
  ஜெயஸ்ரீ ஷங்கர்

 2. Avatar
  IIM Ganapathi Raman says:

  நல்ல அனுபவங்கள். தட்டுத்தடுமாறி நல்லதைத் தெரிந்து கொள்ளும்போது அதனின்பம் அலாதிதான். எனவே நினைவலைகளாக வருகின்றன: வாழ்த்துரை அளித்து அகப்பட்டுக்கொண்ட சங்கடத்தைக்குறிப்பிடுகிறேன்.

 3. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பு சஹோதரி கிரிஜா அவர்களுடைய இந்த நினைவலைகள் என்னுடைய பழைய கால நினைவுகளையும் அசை போட வைக்கின்றன ப்ரதேசாந்தரத்தில் இருந்து கொண்டு.

  எழுத்தாளர் சாவி ஒரு எழுத்தாளரையா — கிட்டத்தட்ட ஒரு படையையே ஊக்குவித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. மேலும் அந்த இளைஞர் எழுத்தாளப் பட்டாளங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் கூட சாவி பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.

  அந்த காலத்தில் *new wave* என்ற சொல்லை தமிழ் பத்திரிக்கை உலகத்தில் அறிமுகம் செய்தது ஸ்ரீ மணியன் அவர்கள் தானோ என்பது என் மங்கிய நினைவு.

  இவர் தானே பின்னாட்களில் *ஞான பூமி* என்ற முழு சமயப் பத்திரிக்கையையும் நடத்தியவர்.

  \ விமரிசனங்க ளின் பாதிப்புக்கு அப்பாற்பட்டவன் \

  கர்மண்யேவா அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன –

  பார்த்தா கடமையாற்றலே உன் செயல்பாடு. பலனைப் பற்றிச் சிந்திக்காதே என்று கண்ணன் பார்த்தனுக்குச் சொன்னதுண்டு.

  உங்களுடைய சாயிபாபா நினைவலைகளை மிகவும் நான் ரசித்திருந்தாலும் 25ம் பகுதிய நினைவலைகளின் கருத்துக்களிலிருந்து நான் மிகவும் மாறுபட்டுக் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தேன். எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை ஸ்வதந்த்ரமாக பகிர்வது போல் வாசகர்களுடைய கருத்துக்களையும் நீங்கள் அப்படியே ஏற்பீர்கள் என்றே எண்ணுகிறேன். மணியன் அவர்களது மேற்கண்ட பொன்னான வாசகத்தை நான் இணையத்தில் கிட்டத்தட்ட எனது ஐந்து ஆண்டுகால செயல்பாடுகளில் verbatim கொண்டவன்.

 4. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  இன்னொரு விஷயம் அன்பு சஹோதரி. உங்களது ச்ருங்காரம் சம்பந்தப்பட்ட ஒரு நினைவலைகள் பகுதியிலிருந்து அசுசியுடன் விலகியிருந்ததும் நினைவுக்கு வருகிறது.

  ரஸானாம் உத்தமம் ச்ருங்கார ரஸ :

  நவ ரசங்களில் மிகவும் உத்தமமான ரஸம் ச்ருங்காரம் என்பது சான்றோர் வாக்கு.

  ஆனால் கிட்டத்தட்ட அந்த நினைவலைகள் பகுதியை பகிர்ந்த தாங்களும் கருத்துத் தெரிவித்த அன்பர்கள் பலரும் ச்ருங்காரம் என்பதனைக் கிட்டத்தட்ட தரம் தாழ்ந்த காமம் என்ற படிக்குக் கருத்துப்பகிர்ந்தமை அதீத அசுசி அளித்தது என்றால் மிகையாகாது.

  ச்ருங்காரத்தைப் பற்றி ரஸம் குறையாது எழுதுவதற்கு முதலில் அந்த பாவம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ம்…………எனக்கு அந்தத் தகுதி இல்லை தான். ஆனால் தகுதி வாய்ந்த பெரியோர்கள் சொன்ன ஒரு க்ரந்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

  ஸ்ரீ ரூப கோஸ்வாமி அவர்கள் இயற்றிய நான்கு லஹரிகளால் – அலைகளால் ஆன *பக்தி ரசாம்ருத சிந்து* என்ற க்ரந்தம். இந்த க்ரந்தமும் இதற்கு ரூபரே இயற்றிய வ்யாக்யானமும் ஸ்ரீ விஸ்வநாத சக்ரவர்த்தி அவர்கள் இயற்றிய வ்யாக்யானமும் ஆங்க்ல மொழியாக்கத்துடன் கிடைக்கிறது. கௌடிய சம்ப்ரதாயத்து கோவில்களில் கிட்டும். சரியான அவதானிப்புக்கு வாசித்து அறியவும். ச்ருங்காரம் என்ற ரசத்தை உள்ளது உள்ள படி எழுதவோ அல்லது பகிரவோ செய்தால்….. மனம் இறைவன் பால் அன்பு மிக குவிய வேண்டும் அவ்வாறில்லாது அந்த எழுத்துக்கள் *பீபத்ஸம்* என்று சொல்லப்படும் *அருவருப்பு* என்ற ரசத்தைக் கொடுத்தால் — எழுத்துக்களில் தவறு உள்ளது என்று அறிக.

  உயர்வான கவிஞர்களின் உன்னதமான காவ்யங்கள் நினைவுக்கு வருகின்றன. பகிர்வதற்கு மனம் மறுக்கின்றது.

  உயர்வான ஒரு ரசத்தை தரம் தாழ்ந்து எழுதுவது தகாது.

  fools rush in where angels fear to tread என்றொரு வசனம் உண்டு;

  நான் பக்தி ரசாம்ருத சிந்து என்ற க்ரந்தத்தை பெரியோர்கள் சொல்லக்கேட்டு அறிந்த படிக்கும்…….. அந்த நினைவலைகள் பகுதியில் பகிரப்பட்ட தரம் தாழ்ந்த கருத்துக்களையும் வாசித்த பின்னும்…….. இந்த வசனமே நினைவுக்கு வந்தது.

  கடுமையான விமர்சனமே. என் பக்ஷத்தில் உள்ள ந்யாயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற படிக்கு பகிரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *