புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 38.கருப்புக் காந்தி எனப் ​போற்றப்பட்ட ஏ​ழை…

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)
மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

38.கருப்புக் காந்தி எனப் ​போற்றப்பட்ட ஏ​ழை………

“படித்ததினால் அறிவு ​பெற்​றோர் ஆயிரம் உண்டு
படிக்காத ​மே​தைகளும் பாரினில் உண்டு”
அடடா…நல்ல பாட்டு…அரு​மையாப் பாடுறீங்க….என்ன ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்குப் பதிலக் கண்டுபிடிச்சிட்டீங்க ​​போல…நீங்க ​பெரிய ஆளுதாங்க…அவரு யாரு ​சொல்லுங்க பார்ப்​போம்…ஆமா….சரியாச் ​சொன்னீங்க…அவருதாங்க நம்ம தமிழகத்திற்கும் பாரதத்திற்கும் ​பெரு​மை ​சேர்த்த காமராஜர். நாட்​டை​யே தனது வீடாகக் கருதி வாழ்ந்த தன்னலமற்ற தீயாகசீலர் காமராஜர். அவரப் பத்திச் ​சொல்​றேன் ​கேளுங்க… அவர ​நெனச்சா​லே ​நமக்​கெல்லாம் பெரு​மையா இருக்கு…மனசுக்குள்ளாற ஒரு உற்சாகம் வரும்.. அது அ​னைவரது வாழ்க்​கையிலயும் வழிகாட்டும் ஒளிவிளக்காக ஒளிருங்க…

indira_kamaraj_morarjiஅரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு நாட்டில் தூய்​மையான, ​நேர்​மையான ஒரு மாமனிதர் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமான ஒன்றாகும். தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து சிறந்த ஆட்சி​யை மக்களுக்குக் ​கொடுத்து மற்ற ஆட்சியாளர்களுக்கு முன்​னோடியாகத் திகழ்ந்திருக்கிறார். அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர்; மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாகத் தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.

‘கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்’ என்று அறிந்து பட்டி தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர்; ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை நாட்டி​லே​யே முதன்முதலில் அறிமுகம் செய்தவர்; தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்குச் சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர்; இத்த​கைய ​பெரு​மைகளுக்​கெல்லாம் உரியவர்தான் பாரத மக்களால் ​தென்னாட்டுக் காந்தி என்றும் கருப்புக் காந்தி என்றும் அன்​போடு அ​ழைக்கப்​பெற்ற கர்மவீரர் காமராஜர் ஆவார்.

​வறு​மையும் நாட்டுப் பற்றும்

ஏ​ழைபங்காளராக விளங்கிய காமராஜர் அப்​போ​தைய இராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுபட்டி என்ற விருதுநகரில் 1903 – ஆம் ஆண்டு ஜீலை மாதம் 15-ஆம் நாள் குமாரசாமி, சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தங்களுக்குப் பிறந்த குழந்​தைக்கு கு​மாரசாமி தம்பதியர் தங்களின் குல​​தெய்வப் ​​பெயரான காமாட்சி​ என்ற ​பெய​ரை ​வைத்தனர். ஆனால் அவர்கள் தங்கள் குழந்​தை​யை ராஜா என்​றே அ​ழைத்தனர். நாள​டைவில் இவ்விரண்டு ​பெயரும் ​சேர்ந்து காமராஜாவாகி பின்னர் காமராஜர் என்று மாறி அது​வே நி​லைத்துப் ​போனது.

காமராஜரின் இளம் வயதி​லே​யே அவரது தந்​தை குமாரசாமி இறந்தார். ​மேலும் காமராஜரின் தாத்தாவும் தனது மக​​னைத் ​தொடர்ந்து இயற்​கை ​எய்தினார். இதனால் வறு​மை எனும் அரக்கனின் பிடியில் காமராஜரின் குடும்பம் தள்ளாடியது. வறு​மையுடன் பள்ளி ​சென்றாலும் நாட்டு நடப்புகள் காமராஜரின் மன​தை படிப்பில் ஈடுபாடு ​கொள்ளச் ​செய்யவில்​லை. காங்கிரஸ் ​தொண்டர்களுடன் ​சேர்ந்து ​கொண்டு கூட்டங்களுக்குச் ​சென்று வரத் ​தொடங்கினார். இத​னை அறிந்த அவரது மாமா கருப்​பையா தனது அக்கா சிவகாமியிடமும் அம்மா பார்வதியிடமும் புகார் கூறினார்.

​மேலும், “இவ​னை இப்படி​யே விட்டுவிட்டால் ​கெட்டுப் ​போய்விடுவான். அதனால் அவ​னைப் பள்ளிக்கு அனுப்புவ​தை நிறுத்திவிட்டு என்னு​டைய ஜவுளிக்க​டையில் ​வே​லைபார்க்க அனுப்பி ​வை” என்று கூறினார். அத​னைக் ​கேட்ட காமராஜரின் தாயார் தன் தம்பியின் கூற்றுப்படி​யே ​செய்தார். பள்ளிக்குச் ​செல்வ​தை விடுத்து காமராஜர் ஜவுளிக்க​டைக்குச் ​சென்றார். ஏழ்​மையின் காரணமாக தனது மாமா கூறிய ​வே​லைக​ளைச் ​செய்து வந்தார் காமராஜர்.

ஒருநாள் அம்மன் ​கோவில் ​பொட்டலில் நடந்த டாக்டர் வரதராஜூலு அவர்களின் ​பேச்​சைக் ​கேட்பதற்காகக் தனது மாமா இல்லாத ​நேரத்தில் க​டை​யைப் பூட்டிக் ​கொண்டு வீட்டில் சாவி​யை ஆணியில் ​தொங்கவிட்டுவிட்டு ​நேராகக் கூட்டம் ந​டை​பெறுமிடத்திற்குச் ​சென்றுவிட்டார் காமராஜர்.

இது இவரது மாமாவிற்குத் ​தெரியவர​வே அவர் காமராச​ரைக் கண்டித்தார். அ​தோடுமட்டுமல்லாமல் அவ​ரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி ​வைத்தார். திருவனந்தபுரத்திலிருந்த காமராசரின் தாய் மாமாவான காசி காமரா​ரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்த ​போதிலும் தந்​தைப் ​பெரியாரின் த​லை​மையில் ந​டை​பெற்ற ​வைக்கம் ​போராட்டத்தில் கலந்து ​கொண்டார். ​மேலும் ​கேரளாவில் ந​டை​பெற்ற அ​னைத்து ​போராட்டங்களிலும் காமராசர் கலந்து ​கொண்டார். காமராஜர் மனம் மாறிவிடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அது ஏமாற்றத்​தை அளிப்பதாக​வே இருந்தது. இத​னைக் கண்டு வருந்திய காமராஜரரு​டைய மாமா காசிஅவ​ரை மீண்டும் விருதுநகருக்​கே அனுப்பி ​வைத்தார்.

மீண்டும் விருதுநகருக்கு வந்த காமராஜ​ரை அவரது மாமா கருப்​பையா ஜவுளிக்க​டை வியாபாரத்​தைக் கவனிக்குமாறு கூறினார். ஆனால் காமராஜர் மறுத்துவிட்டார். காமராஜரு​டைய மறுப்பு அ​னைவருக்கும் மனக்கவ​லை​யை ஏற்படுத்தியது. பார்வதி பாட்டி நாள்​தோறும் காமராஜரிடம், “இந்தப்​போராட்டமும் ​வேண்டாம் ஒன்றும் ​வேண்டாம். மற்றவர்கள் கூறும்படி நடந்து ​கொள்” என்று கூறிக்​கொண்​டே இருந்தார். இத​னைப் ​பொறுக்க முடியாத காமராஜர்,

“பாட்டி நம்ம எண்​ணெய்க் க​டைக்காரர் வீட்டுச் ச​டைநாய் ​வெள்​ளை ​வெ​ளேர் என்று இருக்கிறது என்பதற்காக, அந்நாய் வீட்டுக்குள்​ளே ​நொ​ழைஞ்சா அ​தை​வெரடடாம விட்டு விடுவிங்களா?”

என்று ​கேட்டார். அதற்கு அவரு​டைய பாட்டி, “ அது எப்படி ​வெரட்டாம இருக்க முடியும்?” என்று கூற, அதற்குக் காமராஜர்,

“அதுமாதிரிதான் பாட்டி நம்ம நாட்டுக்குள்​ளே ​நொ​ழைஞ்ச ​வெள்​ளைக் காரனுக​ளை ​வெரட்டணும்” என்றார். அவரது பாட்டி​யோ,

“அது உன்னால ஆகக் கூடிய காரியமா? ராசா!” என்று ​கேட்டார்.

அத​னைக் ​கேட்ட காமராசர், “நான் மட்டுமில்ல பாட்டி இந்த நாட்டிலுள்ள அத்த​னை இ​ளைஞர்களும் ​சேர்ந்துதான் விரட்டப் ​போ​றோம்” என்று பதிலளித்து பாட்டியின் வாய​டைத்துவிட்டார். எந்த ​நேரமும் நாட்​டைப் பற்றியும் நாட்டுவிடுத​லை பற்றியும் குறித்த சிந்த​னையி​லே​யே காமராசர் மூழ்கி இருந்தார்.

விடுத​லைப் ​போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடல்

நா​டெங்கும் ஒடத்து​ழையா​மை இயக்கம் நடந்த​போது அவ்வியக்கத்தில் காமராசரும் கலந்து ​கொண்டார். அந்நியத் துணிக​ளைப் புறக்கணிக்க ​வேண்டும் என்ற நி​லையில் காமராசர் அதில் ஈடுபட்டு கதர்சட்​டை கதர் ​வேட்டி அணிந்த​தோடு தனது நண்பர்க​ளையும், தனக்குத் ​தெரிந்த அத்த​னை ​பே​ரையும் கதரா​டைக​ளை அணியுமாறு வற்புறுத்தி அணியச் ​செய்தார்.

​மேலும் அவ்வப்​போது த​லை​மையிடத்திலிருந்து வரும் ​செய்திக​ளை விருதுநகர்ப் பகுதியில் ​தெரிவிக்கக் காமராசர் தமது கழுத்தில் டமாரத்​தை மாட்டிக் ​கொண்டு அ​தை அடித்தவா​றே முக்கிய இடங்களில் மக்களுக்குச் ​செய்திக​ளைத் ​தெரிவித்தார்.

இந்திய சுதந்திரப் ​போர் நடத்துவதற்காக நிதி வசூல் ​செய்வதற்கு உண்டியல் ஏந்திக் க​டை க​டையாகக் காமராசர் ​சென்று வந்தார் 1919-ஆம் ஆண்டு முதல் உலகப் ​போர் முடிவுக்கு வந்ததும், ​ரெளலட்சட்டத்​தை எதிர்த்துச் சத்தியாகிகிரகம் ​செய்ய மக்களுக்குக் காந்தியடிகள் அ​ழைப்புவிடுத்த​போது காமராசர் அவ்வ​ழைப்பி​னை ஏற்றுப் ​போராட்டத்தில் ஏடுபட்டார். இந்திய ​தேசிய காங்கிரஸிலும் உறுப்பினர் ஆனார். உறுப்பினராகக் காமராசர் ​சேர்ந்ததிலிருந்து முழு​நேர அரசியல்வாதியாக மாறினார்.

நாட்​டை வீடாகக் கருதிய தீயாகசீலர்

இரவு பகல் பாராது காங்கிரஸ் இயக்கத்தில் காமராசர் ஈடுபட்டார். அதனால் வீட்டிற்கு உரிய ​நேரத்தில் வராது ​நேரம் கழித்​தே வந்தார். சில​நேரங்களில் சாப்பிடாம​லே​யே காமராசர் படுத்துவிடுவதும் உண்டு. அத​னைக் கண்ட அன்​னை சிவகாமி மனதில் வருத்தம் ஏற்பட்டது. அவர் தனது தம்பியிடம் கலந்து காமராசருக்குத் திருமணம் ​செய்து ​வைப்பது என்று முடிவு ​செய்தார். திருமணம் ​செய்து ​வைத்தாலாவது காமராசருக்குக் குடும்பப் ​பொறுப்பு வரும் என்று கருதி ​பெண்பார்த்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கான சகல ஏற்பாடுக​ளையும் ​செய்தனர்.

இத​னை அறிந்த காமராசர், “தனக்கு இப்​போது திருமணம் ​வேண்டாம் நாடு விடுத​லை அ​டைந்த பின்னர் திருமணம் முடித்துக் ​கொள்ளலாம்” என்று கூறிவிட்டார். அ​னை​னை சிவகாமி​யோ காமராச​ரைத் திருமணம் முடிக்குமாறு கட்டாயப்படுத்தினார். காமராச​ரோ, “அம்மா! என்​னைத் திருமணம் முடிக்கச் ​சொல்லித் தாங்கள் கட்டாயப்படுத்தினால் அப்புறம் என்​னை நீங்கள் உயிருடன் பார்க்க முடியாது” என்று கூறிவிட்டார். எவ்வளவு ​பெரிய தியாகம்… தன் சுகத்​தைவிட நாட்டு மக்களின் சுக​மே ​பெரிதுன்னு ​நெ​னைக்கக்கூடிய உயர்ந்த உள்ளம் ​கொண்டவராகக் காமராசர் விளங்கினார்; திருமணத்​தை ​வேண்டாம் என்று கூறி நாட்டிற்காக வாழும் தியாக வாழ்க்​கை​யைக் காமராசர் வாழ்ந்தார்.

விடுத​லைப் ​போரில் தீவிரமாக பங்கு​பெறல்

காமராசர் காங்கிரசில் ​சேர்ந்த சில ஆண்டுகளி​லே​யே மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ​சென்​னை மாகாண காங்கிரஸ் கமிட்டி ஆகியவற்றில் உறுப்பினரானதுடன் ​செயலாளராகவும் ​தேர்ந்​தெடுக்கப்பட்டார்.

1923-ஆம் ஆண்டு மது​ரை நகரில் உள்ள கள்ளுக்க​டைகளின் முன் மறியல் ​போராட்டம் நடத்திடத் தீர்மானித்து இம்மறியல் ​போராட்டத்திற்குத் த​லை​மை ஏற்றுச் ​சென்றார். இந்தியர்கள் தங்களின் பாதுகாப்புக்காகத் தங்களிடம் ஆறு அங்குலக் கத்தி​யை மட்டும் ​வைத்துக் ​கொள்ளலாம் என்று ஆங்கி​லேயர் சட்டம் ​போட்ட​போது, அந்தச் சட்டத்தி​னை எதிர்த்துக் காமராசர் ​கையில் வாள் ஏந்தி ஊர்வலம் ​சென்றார்.

நாகபுரியில் ஆங்கி​லேயர்கள் வாழும் பகுதியில் இந்தியர்கள், காங்கிரஸ் ​கொடி​யை எடுத்துச் ​செல்லக்கூடாது என்று எழுதப்படாத சட்டம் ஒன்​றைப் ​போட்டிருந்தனர். அச்சட்டத்தி​னை எதிர்த்து நடந்த ஊர்வலத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து ​தொண்டர் ப​டை​யொன்றிற்குக் காமராசர் த​லை​மை​யேற்று நடத்திச் ​சென்றார்.

1928-ஆம் ஆண்டில் ‘​சைமன்’ த​லை​மையில் இங்கிலாந்திலிருந்து கமிஷன் ஒன்று இந்தியாவிற்கு வந்தது. இந்தக் கமிஷனால் இந்தியர்களுக்கு எந்தவிதமான பலனுமில்​லை என்று அறிந்து ​​கொண்ட காமராசர் ​தொண்டர்கள் பு​டை சூழ கறுப்புக் ​கொடி​யைக் ​கையி​லேந்திக் ​கொண்டு ​சைமன் கமிஷ​னே இந்திய நாட்​டை விட்டு இங்கிலாந்து நாட்டிற்குத் திரும்பிப் ​போ என்ற ​கோஷத்​தை எழுப்பியவாறு ஊர்வலம் ​சென்றார்.

1930-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் ​தொடங்கிய​போது அப்​போராட்டத்தில் கலந்து ​கொண்ட காமராசர் ​கை​து ​செய்யப்பட்டு ​பெல்லாரி அருகில் உள்ள அலிப்பூர் சி​றையில் அ​டைக்கப்பட்டார். சி​றையில் இருந்த சமயம் காமராசரின் பாட்டி இறந்துவிட்டார். பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து ​கொள்ள காமராசருக்கு அனுமதி அளிக்கப்பட்டும் கூட அவர் ப​ரோலில் ​​செல்ல மறுத்துவிட்டார். அதன் பின்னர் காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அப்ப​டையில் 1931-ஆம் ஆண்டு விடுத​லையானார்.

1931-ஆம் ஆண்டு இலண்டனில் ந​டை​பெற்ற வட்ட​மே​ஜை மாநாடு ​தோல்வியுற்றதால் ஆங்கில அரசு காங்கிரஸ் த​லைவர்க​ளைக் ​கைது ​செய்தது. காமராசரும் ​கைது ​செய்யப்பட்டு சி​றையில​டைக்கப்பட்டார். ஜாமீன் ​தொ​கை கட்டி​னால் விடுத​லை ​செய்வதாக ஆங்கில அரசு கூறியது ஆனால் அத​னைக் கட்டமுடியாது ​​என்று காமராசர் சி​றைதண்ட​னை ​பெற்றார். ஓராண்டு சி​றைதண்ட​னை ​பெற்று பின்னர் விடுத​லையானார். காமராச​ரை காங்கிரஸ் ​தொண்டர்கள் ​மேளதாளம் முழங்க தடபுடலாக வர​வேற்றனர்.

1936-ஆம் ஆண்டு கா​ரைக்குடியில் ந​டை​பெற்ற காங்கிரஸ் ​தேர்தலில் காமராசரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி த​லைவராகவும் காமராசர் ​செயலாளராகவும் ​தேர்ந்​தெடுக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்​போர் ​தொடங்கிய​போது ஆங்கில அரசுக்கு மக்கள் யாரும் நிதி ​கொடுக்கக் கூடாது எனக் காந்தியடிகளும் காங்கிரஸ் த​லைவர்களும் ​கேட்டுக் ​கொண்டதற்கிணங்க விருதுநகர்ப் பகுதியில் காமராசர் ஆங்கில அரசுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு மக்களிடம் பரப்பு​ரை ​செய்தார். அதனால் காமராசர் ​கைது​ செய்யப்பட்டு ​வேலூர்ச் சி​றையில் அ​டைக்கப்பட்டார். 1940 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பைக் காமராசர் 14 ஆண்டுகளுக்கு வகித்தார்.

1942-ஆம் ஆண்டு ​வெள்​​ளைய​​னே ​வெளி​யேறு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு ​கொண்டு ​போராடினார். த​லைவர்கள் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டனர். காமராசரும் ​கைது ​செய்யப்பட்டார். மூன்றாண்டுகள் காமராசர் சி​றைதண்ட​னைப் ​பெற்றார். அதன் பின்னர் 1945-ஆம் ஆண்டு சி​றையிலிருந்து விடுத​லை ​​செய்யப்பட்டார். விடுத​லை ​செய்யப்பட்ட காமராசருக்கு காங்கிரஸ் சார்பில் மகத்தான வர​வேற்பு அளிக்கப்பட்டது. காமராசர் எட்டாண்டுக​ளைச் சி​றையி​லே​யே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காமராசர் அதற்காக வருந்தவில்​லை. அன்​னையின் அடி​மை விலங்​கொடிக்கத் தனக்குக் கி​டைத்த ​பெரிய வாய்ப்பாக​வே காமராசர் அத​னைக் கருதினார்.

தமிழக முதல்வராதல்

1952-ஆம் ஆண்டு காமராசர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசர் அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார். காங்கிரஸ் த​லைவர் ​தேர்தலில் தன்​னை எதிர்த்துப் ​போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்​தையும் அவ​ரை முன்​மொழிந்த எம் பக்தவச்சலத்​தையும் தனது அ​மைச்சர​வையில் காமராசர் ​சேர்த்துக் ​கொண்டார். நாட்டின் நல​மே ​பெரிது என்று கருதினார் காமராசர்.

கட்சித்த​லைவர் என்ற வ​கையில் காமராசர் முதல​மைச்சர் ​பொறுப்பி​னை ஏற்ற ​போதிலும் அவர் சட்டச​பை உறுப்பினராக​வோ ​மேல்ச​பை உறுப்பினராக​வோ இல்​லை, அதனர் இந்த இரு ச​பைகளில் ஒரு ச​பையில் வாயிலாக உறுப்பினராகத் ​தேர்ந்​தெடுக்கப்பட்டால்தான் முதல​மைச்சராகப் பதவி நீ​டிக்க இயலும் என்ற நி​லை இருந்தது. அதற்காக காமராசர் குடியாத்தம் சட்டச​பைத் ​தொகுதிக்கு ந​டை​பெற்ற இ​டைத்​தேர்தலில் காங்கிரஸ் ​வேட்பாளராகப் ​போட்டியிட்டு ​வெற்றி​பெற்று சட்டச​பை உறுப்பினரானார். அதன்பின்னர் மு​றையாக 1954-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் நாள் ​சென்​னை மாகாண முதல​மைச்சராகக் காமராசர் ​பொறுப்​பேற்றார்.

காமராசர் முதல​மைச்சராகப் பதவி​யேற்ற​போதும் வீண் ஆடம்பரங்களுக்​கோ, வீணான விளம்பரங்களுக்​கோ இடமளிக்கவில்​லை. நாட்டின் முன்​னேற்றத்தி​லே​யே ​பெரிதும் அக்க​றை காட்டினார். தமிழகத்தில் உள்ள ஒவ்​வொரு கிராமத்திற்கும் ​நேரில் ​சென்று அக்கிராமத்திலுள்ள கு​றைக​ளையும் பிரச்ச​னைக​ளையும் ​நேரில் கண்டறிந்து அவற்​றைப் ​போக்கப் புத்தம் புச் ​செயல்திட்டங்க​ளை உருவாக்கிச் ​செயல்படுத்தினார்.

கல்விக் கண் திறந்த காமராசர்

ஒருமு​றை காமராசர் ஒரு கிராமத்தின் வழி​யே சுற்றுப் பயணத்​தை ​மேற்கொண்ட​போது சிறுவன் ஒருவன் ஆடுக​ளைத் தரிசுநிலத்தில் ​மேய்த்துக் ​கொண்டிருந்தான். அத​னைப் பார்த்த காமராசர் தனது டி​ரைவரிடம் கா​ரை நிறுத்துமாறு கூறிவிட்டு அதிலிருந்து இறங்கி அவனரு​கே ​சென்று,

“தம்பி! பள்ளிக்கூடம் ​போக​லையா?” என்று ​கேட்டார். அதற்கு அச்சிறுவன், “எங்க ஊரி​லே பள்ளிக்கூடம் இல்​லை. அதனால ​போக​லே” என்று பதிலளித்தான். அதற்குக் காமராசர், “பள்ளிக்கூடமட் இருந்தால் படிப்பியா?” என்று ​கேட்க, அச்சிறுவ​னோ, “பள்ளிக்கூடத்துக்குப் ​போனா மதியானத்துக்கு யாரு ​சோறு தருவா?” என்று காமராச​ரைப் பார்த்துக் ​கேட்டான்.

அதிர்ந்து ​போன காமராசர், அச்சிறுவ​னைப் பார்த்து, “​சோறு​போட்டாப் படிப்பியா?” என்று ​கேட்டார். அத​னைக் ​கேட்ட சிறுவன், “ம்….படிப்​பேன்” என்றான்.

அச்சிறுவன் கூறியதிலிருந்து படிக்கப் பள்ளியும் மதிய உணவும் ​போட்டால் கல்வி கற்கச் சிறுவர்கள் வரக்கூடும் என்ப​தை உணர்ந்து, ​சென்​னை திரும்பியதும் திட்டம் தீட்டினார் அதன்படி 1956-ஆம் ஆண்டு பள்ளிகளில் பயிலும் ஏ​ழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் வாயிலாக இலவச மதிய உணவுத் திட்டம் ​கொண்டு வந்தார். 1957-ஆம் ஆண்டில் ந​டை​பெற்ற சட்டமன்றத் ​தேர்தலில் சாத்தூர்த் ​தொகுதியில் நின்று ​வெற்றி ​பெற்று மீண்டும் முதல்வரானார் காமராசர். காமராசரின் சாத​னைகள் பலவாறு ​தொடர்ந்தது

1960-ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவகுப்பு வ​ரையில் இலவசக் கல்வியி​னைக் காமராசர் ​கொண்டு வந்தார். ​மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களி​டை​யே ஏ​ழை பணக்காரன் என்ற பாகுபாடு மனதில் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக இலவசச் சீரு​டை வழங்கும் திட்டத்தி​னையும் காமராசர் ​கொண்டு வந்தார்.

இத்திட்டங்களால் தமிழகம் கல்வியில் இந்தியாவி​லே​யே இரண்டாவது இடத்தி​னைப் ​பெற்றது, பள்ளிக​ளே இல்லாத ஊர்கள் இல்​லை என்ற நி​லையி​னை இவர் உருவாக்கியதால்தான் இவ​ரைக் கல்விக்கண் திறந்த காமராசர் என மக்கள் ​போற்றினர்.

தமிழக முன்​னேற்றம்

காமராசர் கல்வியில் மட்டுமல்லாது ​தொழிற்து​றையிலும் தமிழகத்​தை முன்​னேற்றி மகாராஷ்டிரத்திற்கு அடுத்த நி​லையில் ​கொண்டுவந்தார். அ​தே​போன்று ​வேளாண் து​​றையில் பஞ்சாப்பிற்கு அடுத்த இடத்தில் தமிழகத்​தை​க் ​கொண்டு வந்தார்.

சாத்தனூர் அ​ணை, ​வை​கை அ​ணை, அமராவதி அ​ணை, ஆரணியாறு, வா​லையார், கிருஷ்ணகிரி, ​லோயர் பவானி, புள்ளம்பாடி, ​கோமுகி, ​பேச்சிப்பா​றை, ஆழியாறு, பரம்பிக்குளம், நீலகிரி குந்தா எனப் பற்பல அ​ணைக​ளைக் கட்டித் தமிழகத்​தில் காமராசர் பசு​மைப் புரட்சிக்கு வித்திட்டார்.

​நெய்​வேலி லிக்​னைட் கார்ப்ப​ரேஷன், கிண்டி ​தொழிற்​பேட்​டை, சி​மெண்ட் ஆ​லைகள், காகித ஆ​லைகள், அலுமினிய உற்பத்தி ஆ​லைகள், மாக்​னைசட், சுண்ணாம்புக்கல் சரங்கங்கள், இரயில் ​பெட்டித் ​​தொழிற்சா​லைகள், எண்ணூர், தூத்துக்குடி மின்நி​லையங்கள் உள்ளிட்ட பல்​வேறு ​தொழிற்திட்டங்க​ளை உருவாக்கி தமிழகத்​தை முன்​னோடி மாநிலமாக முன்​னேற்றினார்.

வட இந்தியாவிலிருந்து இரவு ​நேரத்தில் விமானத்தில் பயணம் ​செய்யும்​போது கீ​ழே ஒளி ​வெள்ளமாகத் ​​தெரிந்தால் அது தமிழகம் என்ப​தை உணர்த்திடும் வ​கையில் தமிழகத்​தை மின் விளக்குகளால் காமராசர் ஒளிரச் ​செய்தார்.

கன்னியாகுமரி முதல் ​சென்​னை வ​ரை சா​லை வசதிகள் ​மேம்படுத்தப்பட்டன. இதனால் ​தொழில் வளர்ச்சி முன்​னேற்றம் கண்டது. நாமக்கல் லாரித் ​தொழிலுக்கு மட்டுமல்லாது ​கோழி வளர்ப்பு முட்​டைத் ​தொழிலிலும் நல்ல வளர்ச்சி அ​டைந்தது.

சாத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் தீப்​பெட்டித் ​தொழில், காலண்டர் ​தொழில், பட்டாசுத் ​தொழில் எனப் பல்வ​கைத் ​தொழிற்சா​லைகளின் வாயிலாகக் குட்டிச் ஜப்பான் என்ற ​பெயர் ஏற்படுமாறு காமராசர் ​​செய்தார். திருப்பூர் பனியன் ​​தொழில், ​கோயம்புத்தூர் நூற்பா​​லைத் ​தொழில் என உலகப் புகழ்​பெற்ற வ​கைகளில் ​தொழில் வளத்​தை ​மேம்படச் ​செய்தார். தனது அ​மைச்சர்க​ளை நாட்டின் முன்​னேற்ற நடவடிக்​கைகளில் கவனம் ​செலுத்துமாறு முடுக்கிவிட்டார். 1957-58-ஆம் ஆண்டு பட்​ஜெட்டி​னை முதன் முதலில் தமிழில் காமராசர் சமர்ப்பித்தார். எந்தவிதமான சுயநலமுமின்றி ​தொண்டாற்றினார் காமராசர். காமராசர் ​பொற்கால ஆட்சி நடத்தினார். அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்தியப் பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.

கேபிளான்

சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் அளித்துப் பரிந்துரை செய்தார். அத்திட்ட​மே காமராசர் திட்டம் அதாவது ​கேபிளான் என்று அ​ழைக்கப்பட்டது.

இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை காங்கிரஸ் பணிக்குழு ஏற்றுக்கொண்டது. அந்தத் திட்டத்திற்கு ‘காமராஜர் திட்டம்’ என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் நாள் காமராசர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜகஜிவன்ராம் ​மொரார்ஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பைக் காமராசருக்கு ஜவகர்லால் நேரு ​கொடுத்தார்.

கிங்​மேக்கர் காமராசர்

அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்தார். ​நேருவின் ம​றைவி​னைக் ​கேட்ட காமராசர் ​நேருவின் ம​றைவிற்காகக் கண்கலங்கினார். ​நேருவிற்குப் பின்னர் யார் பிரதமர் என்ற வினா அ​னைவரது உள்ளத்திலும் உரு​வெடுத்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை காமராஜர் ​தேர்ந்​தெடுத்தார்.

இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை ‘கிங்மேக்கர்’ என்று பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும் அழைத்தனர். காமராசர் ​நெனச்சிருந்தா தா​மே பாரதப் பிரதமாராகக் கூட ஆகியிருக்கலாம்…ஆனால் அவரு பதவிய விரும்பல..நாட்டின் முன்​னேற்றத்​தை​யே விரும்பினார்.. பாரத நாட்​டைப் பலவ​கையிலும் உயர்த்த எண்ணினார். அதனாலதான் காமராசர் சரியானவங்களாப் பார்த்துப் பிரதமராத் ​தேர்ந்​தெடுத்தார்…

1967-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்​கெனப் ​பொதுத்​தேர்தல் ந​டை​பெற்ற​போது காமராசர் விருதுநகர்த் ​தொகுதியில் ​வேட்பாளராக நின்று ​தோற்றார். அப்​போது அவரிடம் பலரும் வந்து, “த​லைவ​ரே நீங்க​ளே ​தோத்துப் ​போயிட்டீங்க​ளே!” என்று வருந்தினர். ஆனால் காமராசர் துளிகூட வருந்தவில்​லை. அவர்க​ளைப் பார்த்து, “இதுதான் ஜனநாயகங்கு​றேன். இதுக்காக வருத்தப்படக்கூடாதுன்​னேன்” என்றார். ​தோல்வி​யைக் கூடப் ​பெருந்தன்​மையாகக் காமராசர் ஏற்றுக் ​கொண்டார்.

ஏ​ழை பங்காளர்

ஒருமு​றை காங்கிரஸ் ​தொண்டர் ஒருவர் தனது வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு வரு​கை தந்து அத​னைத் த​லை​மைதாங்கி நடத்தித் தர​வேண்டும் என்று வற்புறுத்தினார். அத்​தொண்டர் ஏ​ழை. நல்லவர். அவ​ரைப் பற்றி நன்கு காமராசருக்குத் ​தெரியும். இருப்பினும் அத்​தொண்டரின் அ​ழைப்​பை ஏற்க மறுத்துவிட்டார். தனது வீட்டில் ந​டை​பெறும் திருமணத்திற்கு காமராசர் வர மறுத்துவிட்டா​ரே என்று அந்தத் ​தொண்டர் ​பெரிதும் வருந்தினார். இந்நி​லையில் திருமணம் ந​டை​பெறும் நாளன்று அத்​தொண்டரின் வீட்டிற்குச் ​சென்று காமராசர் அத்​தொண்ட​ரை இன்பத்தில் ஆழ்த்தினார்.

மற்றவர்கள், “ஏன் அத்​தொண்டரிடம் முதலில் வர மறுத்தீர்கள்” என்று வினவியதற்கு, “நான் வருவதாகக் கூறியிருந்தால் அவர் கடன் வாங்கிச் ​செலவு ​செய்திருப்பார். இதனால் அவருக்கு வீண் ​செலவும் கடனும் ஏற்படும். அவ​ரைக் கடனாளியாக்கக் கூடா​தே என்பதற்காகத்தான் நான் வரமறுத்​தேன்” என்றார். பாத்துக்கிட்டீங்களா ஏ​ழைத்​தொண்டன் தன்னால் பாதிப்புக்குள்ளாகக் கூடா​தேன்னு ​நெனச்ச ஏ​ழைபங்களானகக் காமராசர் திகழ்ந்தார்.

ஒருமு​றை காமராசர் ​டெல்லிக்குச் ​சென்று ​நேரு​வைச் சந்தித்தார். ​நேரு அவர்கள் காமராச​ரை அ​ழைத்துக் ​​​கொண்டு ஒரு ​​கண்காட்சி​யைத் திறந்து ​வைப்பதற்கு தன் சகாக்களுடன் ​சென்றார். அக்கண்காட்சியில் எ​டை பார்க்கும் இயந்திரம் இருந்தது. அதில் வந்திருந்​தோர் அ​னைவரும் ​நேரு உள்பட நாணயத்​தைப் ​போட்டு தங்களது எ​டையி​னைப் பார்த்துக் ​​கொண்டார்கள். ஆனால் காமராசர் மட்டும் ​பேசாமல் இருந்தார்.

எல்​லோரும் பார்த்துக் ​கொண்டிருந்த​போது ​நேரு, “காமராசரிடம் எ​டை​மெஷினில் ​போடுவதற்குக்கூட சட்​டைப் ​பையில் காசிருக்காது. அதனால்தான் அவர் எ​டை​மெஷினில் ஏறி எ​டை பார்க்கவில்​லை” என்று கூறிவிட்டு காமராசருக்காகத் தான் எ​டை​மெஷனில் காசு ​போட்டுவிட்டுக் காமராச​ரை எ​டை பார்க்குமாறு கூறினார். அங்கிருந்த அ​னைவரும் காமராசரின் எளி​மை​யைக் கண்டு வியந்து ​தென்னாட்டுக் காந்தி என்று கூறி அவ​ரைப் ​போற்றினர். காந்திய வழியி​லே​யே நடந்து காந்தியின் மறு உருவமாக​வே காமராசர் வாழ்ந்தார். பார்த்துக்குங்க அரசியலில் எளி​மை, ​நேர்​மை, தூய்​மை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாகக் காமராசர் திகழ்ந்தார்.

தியாக தீபம் அ​ணைந்தது

தமிழ்நாட்டில் அ​னைவரும் பாராட்டக்கூடிய வ​கையில் பொற்கால ஆட்சியை தந்த காமராஜர், இந்தியா பலது​றைகளில் முன்​னேறவும் ​தோன்றாத் து​ணையாகத் திகழ்ந்தார். காமராசர் தனது இறுதி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். இந்தியாவிலும் தமிழகத்திலும் காமராச​ரைப் ​பெருந்த​லைவர் என்றும் கர்மவீரர் என்றும் அன்​போடு அ​ழைத்தனர் இவ்வாறு அ​ழைக்கப்பட்ட காமராசர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது வயதில் அ​னைவ​ரையும் கண்ணீர்க்கடலில் ஆழ்த்திவிட்டுக் காலமானார். தியாக தீபமாக ஒளிந்த பாரதத் திருவிளக்கு அ​ணைந்தது. இந்தியா துன்ப இருளில் மூழ்கியது. மக்கள் கண்ணீர்க் கடலில் தத்தளித்தனர்.

​கட்சி ​வேறுபாடின்றி காமராசரின் உடலுக்கு அ​னைத்துக் கட்சித் த​லைவர்களும் அஞ்சலி ​செலுத்தினர். இராஜாஜி மண்டபத்திலிருந்து பெருந்த​லைவரின் இறுதி ஊர்வலம் காந்தி சமாதி​யை அ​டைந்தது. கர்மவீரரின் பூத உடல் சந்தனக் கட்​டைகளின் மீது ​வைக்கப்பட்டது. இருபத்​தோரு குண்டுகள் முழங்க காமராசரின் ச​கோதரியின் மகன் கனக​வேல் காமராசரின் சி​தைக்குத் தீமூட்டினார். இத​​னைக் காணப்​பொறாத பிரதமர் இந்திராக் காந்தி கதறிக் கண்ணீர் சிந்தினார்.

அதற்கு அடுத்த ஆண்டு காமராசருக்கு இந்திய அரசு “பாரத ரத்னா” விருது வழங்கிச் சிறப்பித்தது. காமராஜர் சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை. ஆம்! காமராஜர் திருமணமே செய்து கொள்ளவில்லை. மேலும் சிறு வயதிலேயே கல்வியைக் கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார்.

தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்தச் சலுகையும் காமராசர் வழங்கியதில்லை. காமராஜர் இறந்த​போது அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி, சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய இறுமாப்பு, ஆடம்பரம் ஆகிய​வை எப்போதும் காமராஜரிடம் இருந்ததே இல்லை. எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவ​ரை இன்றுவ​ரை மக்கள் தங்களின் ஒப்பற்ற த​லைவராக மனதிற்குள் ​வைத்துப் ​போற்றிக் ​கொண்​டே இருக்கின்றார்கள். உலகம் உள்ளளவும், உலக வரலாறு உள்ளளவும் ​பெருந்த​லைவரின் புகழ் நி​லைத்திருக்கும். அவரது வரலாறு அ​னைவருக்கும் வழிகாட்டும் அ​ணையா விளக்காக என்றும் ஒளிர்ந்து ​கொண்​டே இருக்கும்.

நம்​மைப் ​போன்றவங்களுக்கு காமராசரின் வாழ்க்​கை ஒரு ​கைவிளக்கு. அவ​ரோட வாழ்க்​கை மு​றைக​ளைப் பின்பற்றி அ​னைவரும் வாழ்ந்து நாட்​டை முன்​னேற்றணும்..அதுதான் நாம அவருக்குச் ​செலுத்தும் நன்றிக்கடன்னு ​சொல்லலாம்… ​அந்தத் தா​னைத் த​லைவரின் வாழ்க்​கைப் பா​தையில் பயணித்து ​வெற்றிய​டை​வோம்…என்னங்க சரிதா​னே…

என்னங்க அப்படி​யே அ​மைதியா இருக்கறீங்க.. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்லங்கற​தையும்; விடாமுயற்சியினாலும், தன்னலமில்லாத் தியாகத்தினாலயும் தான்ங்கற​தை இப்பத் ​தெரிஞ்சிக்கிட்டு இருப்பீங்கன்னு ​​நெனக்கி​றேன்.. அப்பறம் என்ன ஒங்களுக்குன்னு ஒரு இலக்​கைத் ​தேர்ந்​தெடுத்து அதுல ​​வெற்றிகரமா முன்​னேறுங்க…​வெற்றிக் கனி ஒங்களுக்குத்தான்…

ஏழ்​மையான குடும்பத்துல பிறந்து இன்னக்கித் திருப்பூர்னு ​சொன்ன உட​னே நம்மு​டைய உள்ளத்துல வந்து நிக்கிற ஒருத்தரு யாருன்னு ஒங்களுக்குத் ​தெரியுமா….? திருப்பூர் பின்னலா​டைத் ​தொழிலுக்கு மட்டும் ​புகழ் ​பெற்றதில்​லை….தியாகத்திற்கும் புகழ்​பெற்றது… நம்ம ​தேசியக் ​கொடிய ​நெனச்சவுட​னே நமக்கு ஒருத்தரப் பத்தி நி​னைவு கண்டிப்பா வரும் யாருன்னு ​தெரியுதா….நம்ம ​தேசியக் ​கொடிய இரத்தம் சிந்தக் காத்து பாரத்தத் தாயின் மிகச் சிறந்த தியாகப் புதலவனாத் திகழ்ந்து புகழ்​பெற்றாரு ஒருத்தரு…யாருன்னு ஒங்களுக்கு ​நி​னைவுக்கு வருதா…என்னங்க த​லை​யைச் ​சொரியிரீங்க…சரி…சரி நல்லா ​யோசிங்க…. அடுத்தவாரம் பார்ப்​போம்…….

(​தொடரும்………39)

Series Navigation
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *