மருமகளின் மர்மம் 8

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா

 

‘என்ன, லூசி, இது? நாம பழகத் தொடங்கிக் கொஞ்ச நாளுக்குள்ளே இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்றே?’ என்ற ரமேஷ், ஏமாற்றத்துடன் அவளையே பார்த்தபடி இருந்தான்.

‘என்னங்க செய்யிறது, ரமேஷ்? நான் வெறும் ஸ்டெனோதான். இப்ப ஒரு சீனியர் பி.ஏ. விலகிட்டதால எனக்கு அந்தப் பதவியைக் குடுத்து பாம்பேக்குப் போன்றாங்க. இப்ப ப்ரொமோஷன் வேண்டாம்னு சொல்றேன்னு வைங்க. அப்பால எனக்கு இன்னும் பல வருஷங்களுக்கு அது கிடைக்கவே கிடைக்காதுங்க. பாம்பேல எங்க சொந்தக்காரக் குடும்பம் ஒண்ணு இருக்கு. அவங்க வீட்டுல ஒரு போர்ஷனை எங்களுக்குத் தர்றேன்னிருக்காங்க. அம்மாவும் நானும் போறோம்.. .. ..ரமேஷ்! எனக்கும் ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. உங்களை விட்டுப் பிரிஞ்சு நான் எப்படித்தான் இருக்கப் போறேனோ?’ என்ற லூசி கண் கலங்கினாள்.

‘போய்த்தான் ஆகணுமா, லூசி? ப்ரொமோஷன் வேண்டாம்னு சொல்லிடேன்.’
‘ ரெண்டாயிரம் ரூபா ஜம்ப், ரமேஷ்! எப்படி வேணாங்கிறது? ரெண்டு பேருமே நிறைய சம்பதிச்சா நாளைக்கு நம்ம குடும்பத்துக்குத்தானே நல்லது, ரமேஷ்? அங்க போய்க் கொஞ்ச நாள் இருந்துட்டு மாற்றல் கேட்டுக்கிட்டு மெட்ரசுக்கே திரும்பி வந்துட முடியும். அது சாத்தியப் படாட்டி, நான் வேலையையே விட்டுட்றேன், ரமேஷ்! நீங்கதான் எனக்கு முக்கியம்..’

‘அது சரி, உங்கம்மாவுக்கு என்னை அறிமுகப் படுத்த வேண்டாமா, லூசி? பாம்பேக்குப் போறதுக்கு முந்தி என்னை உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ.’

‘நீங்க சொல்றது சரிதான். அறிமுகப் படுத்தணும்தான். அப்ப, நான் கிளம்புறதுக்கு முந்தி நீங்களும் உங்க அப்பா அம்மாவுக்கு என்னை அறிமுகப் படுத்தி வைப்பீங்கல்லே?’ – இந்தக் கேள்வியால் ரமேஷ் பொட்டில் அடி வாங்கியது போல் உணர்ந்தான்.
‘லூசி! அது இப்போதைக்கு வேண்டாம்னு நினைக்கிறேன். என்னைத் தப்பாப் புரிஞ்சுக்காதே. உங்க மொத்தப் பரம்பரையும் கலப்புக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க. எங்க குடும்பம் அப்படி இல்லே. அதாவது, முதல்ல அவங்க சம்மதத்தை நான் பெறணும். அதுக்குக் கொஞ்ச நாள் ஆகும். நேரங்காலம் பாத்துப் பக்குவமா எடுத்துச் சொல்ல வேண்டிய விஷயம், இல்லியா? திடீர்னு இப்ப உன்னைக் கூட்டிக்கிட்டுப் போய் அவங்க முன்னாடி நின்னா அவங்க ரீயாக்ஷன் எப்படி இருக்கும்னு என்னால நிச்சயமாச் சொல்ல முடியல்லே. எங்க அப்பா பரந்த மனப்பன்மை உள்ளவர். புரிஞ்சுப்பார். எங்க அம்மா ரொம்ப நல்லவங்கதான். ஆனா, பழமைவாதி. நல்ல ஆரோக்கியம் இல்லாதவங்க. அதனால, இது மாதிரி சமாசாரங்களை திடுதிப்னு அவங்க கிட்ட சொல்லிட முடியாது.’

‘சரி. அப்ப முதல்ல உங்கப்பா கிட்ட அறிமுகப் படுத்துங்க!’

‘அதைத்தான் நானும் இப்ப சொல்ல வந்தேன். இன்னைக்கே எங்கப்பா கிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லிடறேன். நீ பாம்பே போறதுக்கு முந்தி உன்னைக் கூட்டிட்டுப் போய் அவருக்குக் காட்டிட்றேன். சரிதானே? அது சரி, நீ என்னைக்குப் புறப்படணும்?’

‘வேலை உயர்வுக்கான ஆர்டரைக் கையில குடுத்துட்டு நாலு நாள் அவகாசமும் குடுத்திருக்காங்க. அதுக்குள்ள நான் போய்ச் சேரணும்.’

‘சரி. அப்ப நாளைக்கே உன்னை அப்பாவோட ஆ•பீசுக்குக் கூட்டிட்டுப் போய்க் காட்டிட்றேன்.’

‘ரமேஷ்! உங்களைச் சந்திக்காம நான் எப்படி இருக்கப் போறேனோ, தெரியல்லே. எனக்கு ஒரே வெறுப்பா யிருக்கு. ஒண்ணுமே பிடிக்கல்லே. ஆனா இப்போதைக்கு ப்ரொமோஷன் வேண்டாம்னு சொல்லவும் முடியல்லே. எங்கம்மாவுக்கு வைத்தியம் பார்த்த வகையில நிறைய கடன் இருக்கு. இல்லாட்டி நான் பாம்பே போகவே மாட்டேன், ரமேஷ்!’

‘எனக்குப் புரியுது, லூசி! முடிஞ்சப்ப நாம •போன்ல பேசிக்கலாம். வாரம் ரெண்டு தடவை பேசலாம். நீ ஒரு தரம் பேசினா நான் மறு தரம் பேசறேன். அப்படி வெச்சுக்கலாம்.’

‘சரி, ரமேஷ்! பை!’

மறு விநாடியே அவன் சோமசேகரனுடன் பேசினான்: ‘அப்பா! •ப்ரீயா யிருக்கீங்களா?’

‘•ப்ரீயாத்தான் இருக்கேன். சொல்லு.’

‘இன்னைக்கு மூணரையிலேருந்து நாலு மணிக்குள்ள – எப்படியும் அஞ்சு மணிக்குள்ள – நான் உங்க ஆ•பீசுக்கு வர்றேன். உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய ஒருத்தரோட வருவேன்.’

‘பொண்ணுதானே?’

‘அப்பா!’

‘என்ன, ரமேஷ்! ஆச்சரியமா யிருக்கா?’

‘எ.. எ.. எப்படிப்பா கண்டுபிடிச்சீங்க?’

‘உன் குரல்லே தெரிஞ்ச வழிசல்லேருந்துப்பா!.. .. .. அது சரி, பொண்ணு யாரு?’

‘அ.. அ.. அதுதாம்ப்பா கொஞ்சம் உதைக்குது.’

‘என்னடா இது! அநியாயமா யிருக்கே! இப்பவே உதைக்கிறாளா?’

‘அது இல்லேப்பா. ஒரு சிக்கல் இருக்குப்பா.’

‘வேற ஜாதியா?’

‘மதமே வேறப்பா.. .. .. கிறிஸ்டியன்.’
‘எங்கே பிடிச்சே? எப்படிப் பிடிச்சே?’

‘அதெல்லாம் அப்புறமா சொல்றேம்ப்பா.’

‘ரைட். என்னைப் பொறுத்த மட்டிலே எந்த ஆட்சேபணையும் இல்லே.’

‘அம்மாவை நீங்க தாம்ப்பா எப்படியாச்சும் வழிக்குக் கொண்டுவரணும்.’

‘முயற்சி பண்றேம்ப்பா. ஆனா எனக்குக் கொஞ்சம் அவகாசம் குடு.’

‘சரிப்பா. அவசரம் ஒண்ணுமில்லே. மத்த விவரமெல்லாம் நேர்ல சொல்றேம்ப்பா.’

‘சரி, ரமேஷ். ஆல் த பெஸ்ட்!’

‘தேங்க்ஸ்ப்பா. இது மாதிரி ஒரு அப்பாவுக்கு நான் புண்ணியம் பண்ணி யிருக்கணும்!’

‘எதுக்கு உணர்ச்சி வசப்பட்றே? அந்தப் புண்ணியத்தை நாங்களும் தான் பண்ணியிருக்கோம், ரமேஷ்! ஒரே மகனா யிருந்தும், அது வேணும், இது வேணும்னு வாயைத் திறந்து நீ இது வரையில கேட்டதே இல்லே. முதல் தடவையா ஒண்ணு சொல்றே. அதை நிறைவேத்தி வைக்கவேண்டியது என்னோட கடமைப்பா!’

‘தேங்ஸ்ப்பா! தேங்க் யூ!’
‘சீச்சீ! பைத்தியம்! பெத்த அப்பாவுக்கு எதுக்கு தேங்க்ஸ¤ம் இன்னொண்ணும்? அவளைக் கூட்டிக்கிட்டு வா. லேட்டானாலும் பரவால்லே. நான் வெய்ட் பண்றேன்.’

‘சரிப்பா.’

தன் அப்பாவின் எதிரொலியை இப்போது நினைத்தாலும் அவனுக்குப் புல்லரித்தது. அப்பாவுக்குப் பரந்த முகம். அதில் பரந்த நெற்றி. பரந்த விழிகள். பரந்த உடம்பு. நல்ல உயரம். மொத்தத்தில் அவரது பரந்த உள்ளத்தை எடுத்துக் காட்டுகிறாப் போன்ற பரந்த உடலமைப்பு என்று நினைத்து ரமேஷ் மனம் பொங்கிக் கண் கசிந்தான்.

அன்று பிற்பகல் சரியாக நான்கு மணிக்கு அவன் லூசியுடன் அவரது அறைக் கதவைத் தட்டிவிட்டு நுழைந்த போது சோமசேகரன் எழுந்து நின்று இருவரையும் புன்னகையுடன் வரவேற்றார். ரமேஷ¤க்குப் பின்னால் ஒண்டியபடியே வந்த லூசியை அன்பாக நோக்கி, ‘வெல்கம், மை டியர் வுட்-பி-டாட்டர்-இன்லா!’ என்று அவளை ஆங்கிலத்தில் முகமன் கூறி வரவேற்றார்.

‘உக்காருங்க ரெண்டு பேரும். லைட்டா டி•பன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்,’ என்ற பின் மணியடித்துப் பியூனை வரவழைத்து மூன்று பீங்கான் தட்டுகளில் இனிப்பு, கார வகையறாக்களைப் பரிமாறச் செய்தபின், ‘காப்பி •ப்ளாஸ்கையும் கப்களையும் இப்படி வெச்சுட்டுப் போப்பா. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு யாரும் இங்க வர வேண்டாம்,’ என்ன?’ என்ற பின் சிவப்பு விளக்குப் பொத்தானை அழுத்தினார்.

பியூன் போன பிறகு, ‘கொஞ்சம் எந்திரிங்க, மாமா. உங்களை வணங்கிக்கிறேன்,’ என்ற லூசி எழுந்தாள்.

‘நோ •பார்மாலிட்டீஸ்!’ என்று அதை மறுத்த போது சோமசேகரனின் குரலில் ரமேஷ் ஒரு கடுமையை உணர்ந்து வியப்படைந்தான். அல்லது அந்தக் கடுமை தனது பிரமையோ என்றும் எண்ணினான். லூசியின் பார்வையும் அவரது பார்வையும் கலந்தன. அவர் இமைக்காமல் அவளைப் பார்த்தபடி இருக்க, லூழி சற்றே முகம் வாடியவளாய் விழிகளைத் தாழ்த்திக்கொண்டு உட்கார்ந்தாள். அந்த அறையினுள் இன்னதென்று சரியாய்ச் சொல்ல முடியாதபடி ஓர் இறுக்கம் சட்டென்று தோன்றியது மாதிரி ரமேஷ¤க்கு இருந்தது.

அடுத்து, ‘நல்லா, சவுகரியமா உக்காரும்மா. தப்பா எடுத்துக்காதேம்மா. மரியாதைங்கிறது மனசில இருந்தாப் போதும்னு நினைக்கிறவன்மா, நான். சாப்பிடு. உன் பேரென்ன?’ என்று சிரித்தவாறு அவர் வினவியதும், அந்தத் திடீர் இறுக்கம் பட்டென உடைந்தது.

‘லூசி, மாமா.’

‘சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். உன் குடும்பப் பின்னணி யெல்லாம் சொல்லு.’

லூசி துளியும் தயங்காமல் தன்னைப்பற்றிய விஷயங்களை யெல்லாம் விவரமாய் அவருக்குத் தெரிவித்தாள்.

எல்லாவற்றையும் கேட்ட பின்னர், ‘ரமேஷ் உனக்கு எங்க குடும்பத்தைப் பத்திச் சொல்லி யிருப்பான். இருந்தாலும் நான் சொல்றதையும் கேட்டுக்கோம்மா. எங்களுக்கு இந்த மெட்ராஸ்ல ரெண்டு பெரிய சொந்த வீடுங்க இருக்கு. டி. நகர்ல ஒரு வீடு, மயிலாப்பூர்ல ஒரு வீடு. மயிலாப்பூர் வீட்லதான் இப்ப நாங்க இருக்கோம். ரெண்டையும் வித்தா இன்னைத் தேதியில கிட்டத்தட்ட ரென்டு கோடிக்கு மேலயே கிடைக்கும். அப்புறம்.. .. ..’

‘என்ன மாமா இது! உங்க சொத்து விவரமெல்லாம் எனக்கு வேண்டாம், மாமா. உங்க மகன் எப்படி உங்களுக்கு விலை மதிக்க முடியாத சொத்தோ, அதே மாதிரி எனக்கும் அவர் விலை மதிக்க முடியாத சொத்து!’

சோமசேகரன் வாய் விட்டுச் சிரித்தார்: ‘நல்லாப் பேசறே, லூசி! சரி. மத்த விஷயங்களைப் பத்திப் பேசுவோம். என் ஒய்•பைக் கன்வின்ஸ் பண்ணி என்னைக்கு அவ சம்மதம் வாங்கறேனோ, அதுக்கு அடுத்த நல்ல நாள்லே உங்களுக்குக் கல்யாணம்!’

‘அவங்க விருப்பப்பட்டா நான் இந்துவா மாறுறதுக்கும் தயாரா யிருக்கேன், மாமா!’ – மதமாற்றம் பற்றி அதுகாறும் நினைத்தே பார்த்திருந்திராத ரமேஷ் வியப்படைந்தான். லூசி மிகவும் கெட்டிக்காரி என்பதை அறிந்திருந்த அவன் தன் அப்பாவிடம் ஒரு வகையான – இலேசான – இணக்கமின்மை இருப்பதாக அவளுக்குத் தோன்றி யிருந்திருக்குமோ என்று எண்ணத் தலைப்பட்டான். ஆனால், அவரே அதற்குப் பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

‘அதெல்லாம் அடி முட்டாள்தனம்மா, லூசி! நீ இந்துவா யிருந்துக்கிட்டு மனசுக்குள்ள கிறிஸ்துவை வழிபடலாமில்லே? அதே மாதிரி ரமேஷ் கிறிஸ்டியனா மாறிட்டு கிருஷ்ணனை வழிபடலாமில்லே? இதுல எல்லாம் என்னம்மா இருக்கு? ஆனா ஒண்ணு. என் ஒய்•போட திருப்திக்காக நீ விட்டுக் குடுத்து மதம் மாறினா, நான் அதுக்குக் குறுக்கே நிக்க மாட்டேன்.’

லூசி அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை ரமேஷ் கவனித்தான். தன் அப்பாவின் பேச்சு அவனையும்தான் வியப்புறச் செய்துகொண்டிருந்தது.

சோமசேகரன் புன்சிரிப்புடன் தொடர்ந்தார்: ‘ஆனா, ஒண்ணு. கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்குப் பிறக்கக் கூடிய குழந்தைகள் கிட்ட ரெண்டு மதங்களையும் பத்திச் சொல்லி வளர்க்கணும். கோவிலுக்கும் கூட்டிக்கிட்டுப் போகணும்; சர்ச்சுக்கும் கூட்டிக்கிட்டுப் போகணும். எந்த மதத்துல இருக்கிறதுங்கிறதை அவங்க விருப்பத்துக்கு நாம விட்டுடணும். அதுதான் செக்யுலர் அப்ரோச்! உங்க ரெண்டு பேருக்குமே சொல்றேன்.’

சோமசேகரன் குழந்தைகளைப் பற்றிக் குறிப்பிட்டதால் லூசியின் முகம் சிவப்புக்குப் போனது. வெட்கத்துடன் தலை உயர்த்திச் சோமசேகரனைப் பார்த்து, ‘நீங்க ரொம்ப, ரொம்ப நியாயமாப் பேசறீங்க, மாமா! ரமேஷ் உங்களைப் பத்தி நிறையவே சொல்லி யிருக்காரு. ஆனா நீங்க இந்த அளவுக்குப் பெரிய மனசு உள்ளவரா யிருப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்லே, மாமா!’’ என்றாள். அவளது குரலில் அன்பு, மரியாதை, வியப்பு எல்லாமே ஒரு சேரத் ததும்பிக் கொண்டிருந்தன.

‘நீ ரொம்பவுமே புகழறேம்மா! இதெல்லாம் பெருந்தன்மையோட சேர்த்தி இல்லே, லூசி. ஒரு மனுஷத்தனம். அவ்வளவுதான். மத்தவங்க உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் குடுக்கிற ஒரு முயற்சின்னு வேணும்னா சொல்லு. ஒத்துக்குறேன். மத்தப்படி பெரிசாப் புகழுறதுக்கு இதிலே அப்படி என்ன இருக்கு?’

அதற்குப் பிறகு அவள் பதவி உயர்வுடன் தனக்கு மும்பைக்கு மாற்றல் ஆகி இருப்பது பற்றி அவருக்குத் தெரிவித்தாள்.

‘நீ அவசியம் போய்த்தான் ஆகணுமாம்மா?’

‘ரொம்பப் பெரிய ஜம்ப், மாமா. நான் கனவில கூட நினைச்சுப் பார்க்காத சம்பள வித்தியாசம். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் அதிகப்படியாக் கிடைக்கும். கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு, ட்ரான்ஸ்•பர் வாங்கிக்கிட்டு இங்கேயே திரும்பி வந்துடுவேன். கிடைக்காட்டி ராஜிநாமா பண்ணிட்டு வந்துடுவேன், மாமா.. ரமேஷ் கூட ப்ரொமோஷன் வேணாம்னு சொல்லிடேன்றாரு. ஆனா எனக்குத்தான் மனசு வரல்லே. காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு, மாமா. எவ்வளவு பணம் வந்தாலும் பத்த மாட்டேங்குது. ஆனா, ட்ரான்ஸ்•பர் கிடைக்காட்டி, நிச்சயமா விட்டுடுவேன்.’

‘நீ சொல்றதும் நியாயம்தான்.’

‘பாம்பேயிலே உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா, மாமா?’

‘பாம்பேல எனக்குத் தெரிஞ்சவங்க யாருமே இல்லேம்மா. முன்னே இருந்தாங்க. ஆனா, இப்ப யாருமே கிடையாது. எங்க சொந்தக்காரங்கல்லாம் கூட தமிழ்நாட்டிலதான் இக்காங்க..’
பொய் நிறைந்த அவரது பதில் ரமேஷை வியப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. அப்பா கவனமாய்த் தன் பார்வைச் சந்திப்பைத் தவிர்த்து லூசியையே பார்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்தான். ‘அப்பா இப்படிச் சொல்லுவதற்கு ஏதோ காரணம் இருக்கிறது. தனக்கு மும்பைக்கு மாற்றல் ஆகியிருப்பது பற்றி லூசி சொன்னதும், நல்ல வேளையாக அங்கே என் மாமா இருப்பதை அவளுக்குச் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. . .’ – இப்படி அவன் எண்ணம் ஓடினாலும் அப்பா ஏன் அப்படி ஒரு பொய்யைச் சொன்னார் என்பது அவனைப் பெருந்திகைப்பில் ஆழ்த்தியது.

– தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *