ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

சிசுபால வதம் இரண்டாம் பகுதி

sisupalabeheadedஇன்று கூட நமது தேசத்தில் பெரிய மனிதர்களுக்கு மாலை அணிவித்து பூர்ணகும்ப மரியாதை அளிக்கப் படுவது ஒரு வழக்கமாகவே உள்ளது. தனிநபர் மரியாதைக்காக தேர்வு செய்யப் படும் மனிதர் அவருடைய பிறப்பின் காரணமாக தேர்வு செய்யப் படுவதில்லை. சமூகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கே காரணமாக அமைகிறது. ஒரு சபையில் அனைவரும் ஒரே இனத்தை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுள் வயது முதிர்ந்தவர் தேர்வு செய்யப் படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் இந்த முறைமை சற்று மாற்றி வைக்கப் படுகிறது. எந்த குழுவிலும் திறமையானவர்கள் அவர்கள் வயது குறைந்தவர் என்றாலும் அவர்களது திறமை காரணமாக மதிக்கப்படவும் மரியாதை செய்யவும் பட்டனர்.
யுதிஷ்டிரரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு கூடியிருந்த மன்னர்களில் முதல் மரியாதை செய்யப் படுவதற்கு உரியவர் யார் என்ற கேள்வி எழுகிறது. பீஷ்மர் எவ்விவித யோசனையும் இன்றி யாகத்திற்கு அழைக்கப்பட்டவர்களில் ஸ்ரீ கிருஷ்ணரே முதல் மரியாதைக்கு உரியவர் என்று அறிவிக்கிறார். ஒரு உதாரண மனிதனுக்கு உண்டான அனைத்து நற்குணங்களும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அமைந்திருந்தது. பீஷ்மரின் அறிவுரைப்படி ஸ்ரீ கிருஷ்ணரை முதல் மரியாதையை வாங்கிக் கொள்ள யுதிஷ்டிரன் அழைக்கிறான். ஸ்ரீ கிருஷ்ணரும் தனது மந்திரப் புன்னகையால் அதனை ஏற்றுக் கொள்கிறார்.
பொறாமைத் தீயில் வேகும் சிசுபாலனக்கு அதனை ஏற்க முடியவில்லை பீஷ்மரையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் , பாண்டவர்களையும் தூற்றி மிக நீண்ட உரை ஆற்றுகின்றான். ஆரம்பத்தில் அவன் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணமே உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணர் எந்த நாட்டிற்கும் அதிபதியாக இல்லாத பொழுது மற்ற மன்னர்கள் பலர் இருக்க அவரை மட்டும் ஏன் முதல் மரியாதைக்கு அழைக்க வேண்டும்? ஸ்ரீ கிருஷ்ணரை விடவும் அவர் தந்தை வசுதேவர் மன்னர் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் இல்லையா? பாண்டவர்களின் உறவினன் , அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன் என்பதனால் ஸ்ரீ கிருஷ்ணர் தேர்வு செய்யப் பட்டாரா? ஸ்ரீ கிருஷ்ணர் போரின் நுணுக்கங்களை பயிற்சி அளித்தவர் என்பதாலா? ( ஸ்ரீ கிருஷ்ணர் ஏற்கனவே அபிமன்யுவிற்கும், சல்லியனுக்கும் போர் நுணுக்கங்களை முறையாக சொல்லி கொடுத்திருக்கிறார். வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவர் என்பதாலா? ( இதிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் வேதத்தை நாகு கற்றுணர்ந்தவர் என்பது தெளிவாகிறது) அப்படியே ஆனாலும் வேத வியாசர் அன்றோ ஸ்ரீ கிருஷ்ணரை விட தகுதியானவர்?
ஒரு சொற்பொழிவாளன் கட்டுப்பாட்டினை இழந்து அந்த வார்த்தைகளின் வேகத்தில் அடித்து செல்லப்படுவதைப் போல சிசுபாலன் நிதானம் இழந்தான். யதார்த்தம் என்ன என்பதனை மறந்து உளறத் தொடங்குகிறான். ஒரு நேர்மையான வாக்குவாதத்தை முன்வைக்காமல் தூற்ற தொடங்குகிறான்.ஸ்ரீ கிருஷ்ணரை ஒருமைப் பெயரால் அழைக்க தொடங்கினான். வசைமாரி பொழியத் தொடங்குகிறான். ஸ்ரீ கிருஷ்ணரை பாரபட்சம் பார்ப்பபவர் முதிர்ச்சியில்லாதவர் என்று தூற்றுகிறான். இந்த தூஷனை மேலும் மோசமாகிறது. ஆறாம் தவறியவர், துராத்மா, ஆண்மையற்றவர் என்றும் தூற்றிக் கொணடே செல்பவன் இறுதியில் அவரை நாய் என்றும் தூற்றுகின்றான்.
சிசுபாலனின் வசைமாரியை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டவர்தான் ஸ்ரீ கிருஷ்ணர் என்றாலும் அவன் வசைகளை பொறுமையுடன் செவி மடுத்தார்.இப்படி ஒரு அவமானத்தை அவர் பார்த்ததில்லை என்றாலும் அவனுடைய ஒவ்வொரு தூற்றுதலையும் பொறுத்த வண்ணம் இருந்தார்.
தந்தான் அனைவரையும் யாகத்திற்கு அழைத்தவன் என்ற வகையில் யுதிஷ்டிரன் சிசுபாலனை இனிய வார்த்தைகளால் சமாதானப் படுத்த முன்றான்.பீஷ்மப் பிதாமகரால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“ ஸ்ரீ கிருஷ்ணரை முதல் மனிதராக ஏற்று கொள்ளாத எவருக்கும் உபசாரமோ இனிய சொற்களோ அளிக்கப் பட வேண்டாம்” என்று அறிவிக்கிறார்.
கூடியிருந்த சபையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் ஸ்ரீ கிருஷ்ணரை முதல் மனிதனாக ஏற்று கொண்டதற்கான காரனகளை பட்டியலிடுகிறார். பீஷ்மர் கூறியவற்றை நான் கீழே பட்டியலிட்டுள்ளேன். பீஷ்மரின் வாதங்களில் முரணான விஷயம் ஒன்று தென்படுவதை சுட்டி காட்ட விரும்புகிறேன். ஒரு சமயம் அவர் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு சிறந்த மனிதனாக போற்றுகிறார். உடனயே மறு சமயம் அவரை கடவுளின் அவதார புருஷன் என்று பாராட்டுகிறார். இந்த முரண்பாடு பீஷ்மரின் பேச்சில் பளிச் என்று தெரிகிறது.இந்த முரண்பாட்டிற்கான காரணங்களை என் வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும் என்று நான் ஆராயப் புகவில்லை.
பீஷ்மர் கூறுகிறார்.
“ இங்கு கூடியிருக்கும் அரச பெருமக்களில் எவரும் ஸ்ரீ கிருஷ்ணரை விட சக்தியும் வலிமையையும் படைத்தவர் இல்லை.”
மேற்சொன்ன வாக்கியம் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு மனிதனாகவே காட்டுகிறது. உடனே பீஷ்மர் ஒரே தாவாக தாவி அவரை கடவுளாக்குகிறார்.
“ அச்சுதனை நாம் மட்டும் கடவுளாக வணகுவதில்லை.மூவுலகமும் வணங்குகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் அவனில் அடக்கம்.”
உடனே அவரை மீண்டும் மனிதனாக பாவிக்கிறார்.
“ தன் பிறப்பிலிருந்தே ஸ்ரீ கிருஷ்ணர் பல சாகசங்களை புரிந்தவர். பலரும் அவரை மீண்டும் மீண்டும் பாராட்டுவதை நானே என் செவிகளில் கேட்டிருக்கிறேன். அவர் ஆற்றிய அருஞ்செயல்களை நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன்.”
மீண்டும் கடவுளாக பாவித்தல்.
“ இந்த புவனத்திற்கு பேரானந்தத்தை அளிக்கவல்ல அந்த அச்சுதனை வணங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து உலகமும் அவனை ஆராதிக்கிறது.”
மீண்டும் யதார்த்த வாதம்.
“ யாம் இன்று ஸ்ரீ கிருஷ்ணரை முதல் மரியாதைக்குரியவராக தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர் வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவர்.இரண்டாவது அபாரமான துணிச்சல் மிக்கவர். கருணை, தயாள குணம்,பெருந்தன்மை, பணிவு , நற்பண்பு , புத்திகூர்மை , போதுமென்ற மனம் இவற்றுடன் காண்பவர் மயங்கும் வசீகரமான அழகு இவையெல்லாம் அவருடைய அடையாளங்கள்.”
உடனே கடவுள் துதி.
“ அவரே படைப்பவர். அவரே காப்பவர். அவரே அழிப்பவர். அவரே இயற்கை. அவரே கால சக்கரம். அனைத்து தாவர ஜன்கமங்களுக்கும் அவரே உற்பத்தி ஸ்தானம்.பஞ்ச பூதங்களின் ஆதார சுருதி அவர். அனைத்து கோள்களும் சந்திர சூரியர்களும், நட்சத்திரங்களும் அவரிடமே உறைகின்றன.
பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றிப் பாடிய துதிகளிலிருந்து நமக்கு முக்கியமாக தெரிய வருவது இரண்டு குணங்கள். ஒன்று அவருடைய பராக்கிரமம். இரண்டாவது வேத பாடத்தில் அவருக்கிருந்த அபார ஞானம். அவருடைய வாழ்க்கையை முழவதும் பார்த்தால் அவருடைய பராகிரமம் வெளிப்படும் இடங்கள் பல உள்ளன. அவருடைய வேத பாடம் அவர் இவ்வுலகிற்கு அருளிய பகவத் கீதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நமக்கு தெரிந்த வரை கீதை வியாச சம்கிதை என்றே அழைக்கப் படுகிறது. அதாவது வியாசர் எழுதியது என்று பொருள்.ஆனால் பகவத் கீதையை அருளியது ஸ்ரீ கிருஷ்ணர்.எப்படி இருப்பினும் ஸ்ரீ கிருஷ்ணர் தன் காலத்தில் வேதங்களிலிருந்து விளக்கங்களை கொடுக்க வியாசர் அவற்றைதொகுத்து கீதையாக எழுதியிருக்கலாம். பகவத் கீதையை முழுவதும் படித்து பார்க்கும்பொழுது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வேதம் கூறும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது விளங்கும். அவர் வேதத்தில் உள்ளவற்றை அவ்வப்பொழுது விமர்சித்து வந்திருக்கிறார். இருப்பினும் கீதையை தன் சுயதர்ம கோட்பாடு– -களிலிருந்தும் வேதத்தின் சாரத்திலிருந்துமே இந்த உலகிற்கு அருளி செய்தார். கீதையையும் வேதத்தையும் ஒன்றாக படிப்பவர்களுக்கு இது பளிச்சென்று தெரியும்.இதிலிருந்து அவர் ஒரு வேதவித்து என்பது தெளிவாகிறது.
என் தனிப்பட்ட அபிப்பிராயத்தின்படி ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உன்னதமான மனிதப் பிறவி. ஏன் என்றால் அவர் குணங்களை சீர் தூக்கி பார்க்கும்பொழுது அவர் ஒரு ஞானி , துணிச்சல் மிக்கவர் , திறமைசாலி அயரா உழைப்பாளி , கடமைதவராதவர் , கருணாமூர்த்தி , பெருந்தகை என்பது விளங்குகிறது. இத்தனைக்கும் மேல் அவர் அறத்தின் வழி நடப்பவர். சமூக சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டவர்.
பீஷ்மர் தான் எதற்காக ஸ்ரீ கிருஷ்ணரை முதல் மரியாதைக்கு தேர்வு செய்தார் என்பதற்கான விளக்கங்களை அளித்து விட்டு சிசுபாலனிடம் சபை நடவடிக்கைகள் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அவனை சபையை விட்டு வெலியஎருமாஉ ஆணை இடுகிறார்.
சிசுபாலனின் கண்கள் கோபத்தால் சிவக்கின்றன. அவன் உடல் பதறுகிறது. உடன் உள்ள மானர்களிடம் உதவி வேண்டுகிறான்.தனக்கு ஏற்கனவே ஒரு போரினை முநின்று நடத்தியுள்ள திறமை இருப்பதால் மற்ற மன்னர்கள் அவனுடன் துணை நின்றால் யுதிஷ்டிரர் பெறப் போகும் சக்கரவர்த்தி பட்டத்தையும், ஸ்ரீ கிருஷ்ணருக்கு செய்யப் படவுள்ள முதல் மரியாதையையும் தன்னால் தடுத்து நிறுத்த முடியும் என்று சூளுரைக்கிறான்
கூடியிருந்த மன்னர் கூட்டம் பகைமை பாராட்டத் தொடங்கியதும் யுதிஷ்டிரர் .பீஷ்மரின் உதவியை நாடினார். இதைப் பார்த்த சிசுபாலன் மேலும் ஆத்திரமடைந்துஸ்ரீ கிருஷ்ணரை “ கொடுங்கோலன்” என்றும், “ சிறுவர்கள் கூட வெறுக்கும் குணம் படைத்தவன் “ என்றும் , “ சாதாரண இடையன் “ என்றும் , “ கேவலம் ஒரு வேலைக்காரன் “ என்றெல்லாம் தூற்றத் தொடங்குகிறான்.
பீஷ்மர் அவனை பேசாதிருக்கும்படி எச்சரிக்கிறார். சிசுபாலனின் சக்த்தியின் மூலாதாரமே கண்ணன்தான் என்று கூறுகிறார்.இவருடைய பேச்சு சிசுபாலனின் கோபத்தை மேலும் வளர்க்கிறது. அங்கு கூடியிருந்த மன்னர்கள் மனது வைத்தால் பீஷ்மரை தான் நசுக்கி விடுவதாக கூறுகிறான்.பீஷ்மர் அவனை எள்ளி நகையாடி ஒரு அர்ப்பபதர் என்று அவனை அழைத்து விடுகிறார்.
அவருடைய கூற்று அங்கு கூடியிருந்த மன்னர்களை கொதிப்படைய செய்கிறது. “ பீஷ்மரை ஒரு மிருகத்தை கொள்வதைப் போல அடித்துக் கொல்லுங்கள் “ என ஆவேச குரல் எழுப்பினர்.
ஸ்ரீ கிருஷ்ணரின் தகுதிகள் காரணமாக பீஷ்மர் அவரை முதல் மரியாதைக்குரியவராக தேர்வு செய்யப் போக அதுவே ஒரு பெரிய கலவரத்திற்கு காரணமாகிறது. எனவே தான் கூறியவற்றை மெய்ப்பிக்க பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்கிறார். சிசுபாலனும் தன்னை தயார்படுத்திக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை பலபரிட்சைக்கு அழைக்கிறான்.
ஸ்ரீ கிருஷ்ணர் உடனே சம்மதிக்கவில்லை.. மறவர் அரத்தின்படி ஒரு மறவன் மற்றொரு மறவனை போட்டிக்கு வருமாறு அறைகூவல் விடுக்கும்போழுது அந்த அறைகூவலை எதிர் மறவன் ஏற்க வேண்டும் என்பது மறவர் விதி.ஸ்ரீ கிருஷ்ணர் மாறாக அமைதி காக்கிறார். முன்யோசனையுடன் செயல் படுகிறார். அவருக்கு ஏற்கனவே யுதிஷ்டிரரின் யாகத்தை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
மன்னர் கூட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அமைதியாக தான் எடுக்கப் போகும் முடிவு குறித்து விளக்கம் அளிக்கிறார்.சிசுபாலன் ஏற்கனவே தனக்கும் தன் குடிக்கும் மிழைத்த இன்னல்களை பட்டியலிடுகிறார்.( முன்பொருமுறை சிசுபாலன் துவாரகைக்கு நெருப்பு வைத்தவன். பல யாதவர்களை சிறை பிடித்து சென்றவன். கண்ணனின் தந்தை வசுதேவர் மேற்கொண்ட அசுவமேத யாகத்தின் பொழுது கட்டி வைக்கப் பட்டிருந்த குதிரையை திருடிச் சென்றவன். இது போன்ற தீமைகள் பல புரிந்தவன். } இம்முறை அவன் பிழைகளை தான் போருப்பதாக இல்லை என்கிறார்.மேலும் ஒரு விஷயத்தை கூறுகிறார். இதுவரையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒருவகையில் அத்தை முறை உள்ள சிசுபாலனின் தாய்அவரிடம் சிசுபாலனின் தவறுகளுக்காக அவனை கொன்றுவிட வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டிருப்பதால் சிசுபாலன் தன்னிடமிருந்து தப்பி பிழைத்து வருவதாக கூறினார்.
ஒருவேளை சிசுபாலனின் தாய் தனது அத்தை என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவது பிற்சேர்க்கையாக இருக்குமோ? உறுதியாக கூற முடியவில்லை. எனினும் இந்த புனைவு கற்பனையாகவோ இயல்புக்கு மாரானதாகவோ தோன்றவில்லை. என்பது என் அபிப்பிராயம். சிசுபாலனின் மீது கண்ணனுக்கு ஏற்படும் வெறுப்பு எங்கே அவனை அழித்து விடுமோ என்று அஞ்சிய அவனுடைய தாய் கண்ணனிடம் அப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கலாம். இது நாள் வரையில் சிசுபாலனின் தாய் இறைஞ்சியதால் தான் அவனை கொல்லாமல் விட்டு வந்த செய்தினையும் போட்டு உடைக்கிறார். சிசுபாலன் திருந்தாததால் தான் வேறு வழியில் நடக்க வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்.
இந்த இடத்தில் நம்ப முடியாத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் தன் கையை மேலே தூக்கி பிடிக்கிறார்.மாயமான் முறையில் ஸ்ரீ சுதர்சன சக்கரம் அவர் கையில் சுழன்றபடியே வந்து .அவர் கைகளில் அமர்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அந்த சுதர்சன சக்கரத்தை ஏவி சிசுபாலனின் தலைக் கொய்து அவனை வாதம் செய்கிறார். இந்த பகுதி ஒரு அப்பட்டமான இடைச் செருகல் என்றே கூறலாம்.. இந்த சிசுபால வதம் மகாபாரதத்தில் வேறொரு இடத்தில் வேறொரு முறையில் கூறப் பட்டுள்ளது.உத்தியோக பருவத்தில் பீஷ்மர் ஸ்ரிக்ரிஷ்ணர் எவ்வாறு சிசுபாலனை கொன்றார் என்று குறிப்பிடும்பொழுது அங்கு ஸ்ரீ சுதர்சன சக்கரம் குறித்து எந்த குறிப்பும் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தேரின் மீது யாரி அவனுடன் போரிட்டதாகவே கூறுகிறார்.
யுதிஷ்டிரரின் யாகத்தை காத்தல் வேண்டி சிசுபாலவதம் தவிர்க்க முடியாமல் போனது.

Series Navigation
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *