மறந்து போன நடிகை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

-தாரமங்கலம் வளவன்

“ என்னோட ஒரே ஆசை எதுன்னா, நான் நடிகைங்கறத மக்கள் மறந்துடணும்.. கடைத்தெருவில நா நடந்தா யாரும் என்ன கண்டுகொள்ளக்கூடாது…. ப்ரியா இருக்கணும்… மனசுக்கு பிடிச்சதை நெறய சாப்பிடணும், வெளியில போனா, யாரும் என்ன கண்டு கொள்ள கூடாது.. இது தான் என்னோட ஆசை…” மும்பை விமானத்தில் இருந்து சென்னையில் இறங்கியவுடன், ஒரு குழந்தையைப் போல் சொன்னாள் நடிகை புஷ்பவல்லி. ஒரு கதா நாயகி நடிகைக்குள் இப்படி ஒரு ஆசையா என்று சந்திரன் வியந்து போனான்.

விமானத்தில் உடன் பயணித்தவர்களில் சிலர் அவளை நடிகை என்று தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல, இந்தியிலும் அவள் ஒரு முன்னணி கதாநாயகி. சந்திரனிடம் அவள் பேசிக்கொண்டு வந்ததைப் பார்த்து, யார் இந்த ஆள் என்று வியப்படைந்தார்கள்.

பேக்கேஜ் எடுக்கும் இடம் வந்தது.

“ நான் ஒரு பேக்கேஜ் புக் பண்ணியிருக்கேன்… வெயிட் பண்ணி நான் எடுத்துட்டு வரணும்… நீங்க கிளம்புங்க…” என்றான் சந்திரன்.

“ ஏன் என்னை கட் பண்ணி விட பாக்கறீங்க… நாம ரெண்டு பேரும் நிறைய பேச வேண்டி இருக்கு.. நானும் வெயிட் பண்ணறேன்.. பேக்கேஜ் எடுத்துக்கிட்டு வாங்க.. வீட்டுக்கு போகலாம்.. அம்மா உங்கள பார்த்தா சந்தோசப்படுவாங்க” என்றாள்.

புஷ்பவல்லிக்காக காத்துக்கொண்டிருந்த காரில் அவளுடன் சேர்ந்து சந்திரன் ஏறும் போது, நிறைய பேர் கவனித்தார்கள். சிலர் போட்டோவும் எடுத்தார்கள்.

அப்பொழுதெல்லாம், அந்த நடிகையை திரைப் படத்திலோ, டிவியிலோ பார்க்கும் போதெல்லாம், அந்த பெண்ணை நடிகை ஆவதிற்கு முன், அவள் அம்மாவுடன் தான் பார்த்த அந்த ஞாபகம் தான் வரும் சந்திரனுக்கு.

அது அவனின் முதல் ஏஸி ரயில் பயணம்.

சந்திரனைப் போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு, முதல் ஏஸி ரயில் பயணம் என்பது, கண்டிப்பாக, மற்றவர்களின் தயவில் தான் கிடைத்திருக்க முடியும். அப்படித்தான் அவனுக்கும் கிடைத்தது.

பொறியியல் படிப்பு முடித்து, நேர்முகத் தேர்வுகளுக்காக காத்திருந்த போது, டில்லியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. இரண்டாம் வகுப்பு ஏஸி ரயில் பயணக் கட்டணம் கொடுப்பதாகச் சொல்லி இருந்தார்கள்.

மதுரையில் பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறி உட்கார்ந்தான், சென்னை போய், அங்கிருந்து டில்லி போவதற்காக.

என்னதான் ஏஸி பெட்டியில் ஏறி உட்கார்ந்தாலும், அணிந்து இருக்கும் உடைகள், கையோடு கொண்டு வரும் சூட்கேசுகள், ஏஸி பெட்டிக்கு பொருந்தாமல், ஏழ்மையை காட்டி கொடுத்து விடும் அல்லவா..

அதை உடன் உட்கார்ந்திருந்த அந்த அம்மாவும், பெண்ணும் கண்டுபிடித்து விட்டார்கள்.

தன்னைப் பற்றி விசாரிக்கும் போது சந்திரன், நேர்முகத் தேர்வுக்காக டில்லிக்கு போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னான். உடனே, அந்த அம்மா,

“ஓ.. ஏஸி டிக்கட் கொடுத்து இண்டர்வியூக்கு கூப்பிடிருக்காங்களா..” என்று கேட்க, தான் சொந்த காசில் ஏஸி டிக்கட்டில் போக வசதி இல்லாதவன் என்பதைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை புரிந்து கொண்டான்.

பிறகு, தங்களைப் பற்றிச் சொல்லும் போது, தாங்கள், ராஜ பரம்பரைச் சார்ந்தவர்கள் என்றும், இப்போது கொஞ்சம் சிரமம் என்றும், அதைச் சமாளிக்க, மகளைச் சினிமாவில் நடிக்க வைக்க, சான்ஸ் கேட்டு சென்னைக்கு போய்க் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

முன்பின் தெரியாத தன்னிடம் அந்த அம்மா இப்படி வெளிப்படையாக பேசியது, சந்திரனுக்கு பிடித்து போனது.

பிறகு, அந்த டில்லி வேலை கிடைத்து, பிறகு மும்பைக்கு மாற்றலாகி வந்தான்.

அதற்கு பிறகு, அவர்ளைப் பற்றி மறந்தும் போனான். ஒரு நாள், டிவியில் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த பெண்ணைப் பார்த்தான். அந்த பட கதாநாயகி பெயர் புஷ்பவல்லி என்று போட்டிருந்தது, அவள் தன் அம்மாவுடன், ரயிலில் சினிமா சான்ஸ் கேட்டு தன்னுடன் சென்னைக்கு வந்தவள்.

அதற்கு பிறகு, அந்த நடிகை புஷ்பவல்லியைப் பற்றி கவனிக்க ஆரம்பித்தான்.

சினிமா பற்றி கண்டு கொள்ளாமல் இருந்த அவன், புஷ்பவல்லிக்காக, தெரிந்து கொள்ள பிரயத்தன பட்டான். மும்பையில் புஷ்பவல்லி நடித்த படம் வந்தால் தவறாமல் போய் பார்த்தான்.

கதாநாயகியாக கொடிகட்டி பறக்க ஆரம்பித்தாள் அவள்.

சந்திரனும், தன் வேலையில், திறமையைக் காட்டி, பதவி உயர்வு பெற்று மேனேஜர் ஆனான்.

அந்த சமயத்தில் தான், திருமணத்திற்கு அம்மா அப்பா, வற்புறுத்த ஆரம்பித்தார்கள். உடனடியாக வரவேண்டும், ஒரு பெண்ணை முடிக்க வேண்டும், வந்து பார் என்று கூப்பிட, சென்னை விமானத்திற்கு, சம்பளப் பணத்திலிருந்து ஒரு விமான டிக்கட் வாங்கி ஏறி உட்கார்ந்தான்.

விமானத்தில் உட்கார்ந்த போது, பக்கத்து சீட்டில் அந்த நடிகை புஷ்பவல்லி.

தன்னை ஐந்து வருடங்களுக்கு முன், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸில் பார்த்தது அந்த நடிகைக்கு ஞாபகம் இருக்காது என்று எதுவும் பேசாமல் இருந்தான். கொஞ்ச நேரம் கழித்து,

“ எவ்வளவு நேரம்தான், தெரியாத மாதரி நடிப்பீங்க..” என்றாள் புஷ்பவல்லி.

“ நீங்க நடிகைங்கிறது தெரிஞ்சதுதான்…” சந்திரன்.

“ நான் அதைச் சொல்லலை… நம்ம பாண்டியன் எக்ஸ்பிரஸில பார்த்ததைப் பத்தி….”

சந்திரனுக்கு ஆச்சர்யமாகப் போய் விட்டது புஷ்பவல்லி, தன்னை ஞாபகம் வைத்திருப்பது பற்றி.

ஜன்னல் ஓரத்து சீட்டில் சந்திரன் உட்கார்ந்திருக்க, புஷ்பவல்லி நடு சீட்டில் உட்கார்ந்திருந்தாள்.

“ எனக்கு உங்க சீட்டை குடுப்பீங்களா…” கேட்டாள்.

சீட்டை மாற்றிக் கொண்டார்கள்.

“ உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், அதுக்கு தான் சீட்டை மாத்திகிட்டேன்..” என்றாள்.

“ சொல்லுங்க..” என்றான் சந்திரன்.

“ எனக்கு இந்த பரபரப்பான வாழ்க்கை வெறுத்து போச்சு… கல்யாணம் பண்ணிக்கிட்டு, இந்த நடிப்புக்கு முழுக்குப் போட்டிடலாம்னு இருக்கேன்…” புஷ்பவல்லி.

“ மாப்பிள்ளை பாத்திட்டீங்களா….”

“ பாத்துக் கிட்டேயிருக்கேன்…” என்றாள் புஷ்பவல்லி.

“ கெடைச்சிடிச்சா….” சந்திரன் கேட்க,

புஷ்பவல்லி பதில் சொல்லவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து சந்திரன்,

“ உங்க மாதரி ஹீரோயின் நடிகைங்க எக்ஸிக்கூட்டிவ் கிளாஸ்லதான போவாங்க, நீங்க எக்னாமி கிளாஸ்ல எப்படி…”.

“ அது தான் சொன்னனே… கல்யாணம் பண்ணிக்கிட்டு, இந்த நடிப்புக்கு முழுக்குப் போடலாம்னு இருக்கேன்னு.. காசை மிச்சம் பிடிக்க வேண்டாமா…”

“ சரிதான்..” என்றான்.

“ உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சா..” என்று அவள் கேட்டாள்.

“ இன்னும் இல்ல… அதுக்குதான் அப்பா அம்மா கூப்பிட்டிருக்காங்க..’ என்றான்

புஷ்பவல்லியின் கார், சாலிகிராமத்தில் ஒரு பெரிய பங்களாவின் முன் நின்றது.

“ இந்த பங்களாவை எப்ப வாங்கினீங்க..” என்று கேட்டான்.

“ ரெண்டு வருஷத்துக்கு முன்னால..” என்றாள்.

உள்ளேயிருந்து வந்த அவள் அம்மாவிடம், அவள் சந்திரனை அறிமுகப்படுத்த, உடனே புரிந்து கொண்டு, அவள் அம்மா சந்திரனைப் பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.

டைனிங் டேபிள் முன் சாப்பிட உட்கார்ந்தார்கள். புஷ்பவல்லியின் அம்மா,

“ தம்பி… உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு புஷ்பவல்லி ஆசைப் படறா… நடிப்புக்கு முழுக்குப் போடும்னு சொல்றா.. எனக்கும் அது தான் சரின்னு படுது… அவளை நல்ல படியா நீங்க காப்பாத்துவிங்கன்னு நான் நம்றேன்… என்ன சொல்றீங்க..”

இதை எதிர்பார்க்காத சந்திரன்,

“ அப்பா அம்மாகிட்டே கேக்கணும்…” என்றான்.

பெற்றேர்களும் சம்மதிக்க, புஷ்பவல்லி, சந்திரன் திருமணம் உடன் நடந்தது. கையிலிருந்த படங்களை முடித்துவிட்டு, புஷ்பவல்லி நடிப்புக்கு முழுக்கு போட்டாள். அதற்குள் சந்திரனுக்கு லண்டனில் வேலை கிடைக்க மூன்று பேரும் லண்டன் செல்ல, வருடங்கள் ஓடின. அவ்வப்போது, சென்னை வந்து போவார்கள்.

லண்டன் விமானம் புறப்பட தயாராக இருப்பதாக அறிவிப்பு வர, சந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த மனைவியை கூப்பிட, புஷ்பவல்லி மகிழ்ச்சியுடன் விமானத்தில் ஏறுவதற்காக அவருடன் சேர்ந்து நடந்தாள். அவளை விமான நிலையத்தில் யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

புஷ்பவல்லியின் அந்த மகிழ்ச்சி, கதாநாயகியாக கொடிகட்டி பறந்த காலத்தில், தன்னுடன் இதே சென்னை விமான நிலையத்தில் அவள் நடக்கும் போது இருந்ததை விட அதிகமாய் இருப்பதாக தோன்றியது சந்திரனுக்கு.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *