நீங்காத நினைவுகள் – 28

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

குழந்தை எழுத்தாளர் ஆவதற்கு முன்னால், நான் முதலில் எழுதத் தொடங்கியது பெரியவர்களுக்கான கதைகளைத்தான்! தினமணி கதிர் புதிய எழுத்தாளர்கள் சிலரை அப்போது அறிமுகம் செய்துகொண்டிருந்தது. எனவே நம்பிக்கையுடன் அவ்வார இதழுக்குக் கதைகளை எழுதி அனுப்பத் தொடங்கினேன். மாமியார்-மருமகள் பிரச்சினை, கணவன் மனைவியரிடையே விளையும் மனத்தாங்கல்கள், கணவனின் கொடுமையால் மனைவி படும் இன்னல், குழந்தைகளைச் சரியாக வளர்க்கத் தவறும் பெற்றோர்ள், தந்தை-மகன் சண்டை, சாதிச் சண்டைகள், தீண்டாமை – இப்படிப் பட்ட தலைப்புகளில் கதைகள் அமைந்திருந்தன.
ஒரு கதையை எழுதி அனுப்பிவிட்டு, அது திரும்பி வந்ததும் மறு நாளே அனுப்புவதற்கு மற்றொரு கதையைத் தயாராக வைத்திருப்பேன். சோர்வே அடையாமல் இவ்வாறு சுமார் பதினைந்து கதைகளை அனுப்பிய பின், தினமணி கதிரில் அப்போது உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்துகொண்டிருந்த அமரர் திரு துமிலன் அவர்கள் நான் சற்றும் நினைத்துப் பாராதபடி தனிப்பட்ட முறையில் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்தார்.
’அன்புள்ள ஜோ. கிரிஜாவுக்கு. ஆசிகள். என்னுடைய நண்பரும் உங்கள் ஊரைச் சேர்ந்தவருமான திரு சி.சு. செல்லப்பா அவர்களிடமிருந்து உனக்குப் பதின்மூன்று-பதிநாலு வயசுக்கு மேல் இருக்காது என்று அறிய நேர்ந்தது. உன் தமிழ் நடை நன்றாகவே உள்ளது. ஆனால், பெரியவர்களுக்கான கதைகளை எழுதுவதற்கு உனக்கு வயது போதாது. அதற்கு வேண்டிய முதிர்ச்சி இந்த வயதில் வராது. நீ பல எழுத்தாளர்களின் கதைகளையும் ஏராளாமாய்ப் படிக்க வேண்டும் சில நாள் கழித்து அந்தத் திறமை தானாகவே உனக்கு வரும். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே பதினெட்டு-இருபது வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
கொஞ்சமும் சோர்வு அடையாமல் விடாப்பிடியாக டஜன் கதைகளுக்கு மேல் அனுப்பிய உனது முயற்சி பாராட்டுக்கு உரியது. எனது யோசனையை ஏற்றால் கண்டிப்பாக முன்னுக்கு வரலாம்….’ என்று அதில் கண்டிருந்தது.
அப்போதுதான் துமிலன் தினமணி கதிரில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்துகொண்டிருந்த தகவல் தெரியவந்தது. தினமணி கதிரில் அவர் கதைகளைப் படித்து ரசித்ததுண்டு. அவர் கதைகளில் மெல்லிய நகைச்சுவை இழையோடிக்கொண்டிருக்கும். துமிலன் அவர்களிடமிருந்து வந்த கடிதம் உற்சாகத்தைக் குலைப்பதற்குப் பதிலாய் ஒரு பெரிய எழுத்தாளர் என்னைப் பொருட்படுத்திக் கடிதம் எழுதியது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. யோசித்துப் பார்த்த போது அவர் சொன்னது சரிதான் என்று தோன்றியது. தமிழ்நடையையும், விடா முயற்சியையும் அவர் பாராட்டியிருந்ததில் உச்சி குளிர்ந்து போயிற்று. அவரது கடிதத்தில் காணப்பட்ட ஒரு குறிப்பு வழிகாட்டியாகவும் அமைந்தது.
‘பெரியவர்களுக்கான கதைகளை எழுதுவதற்கு உனக்கு வயது போதாது’ என்கிற குறிப்பே அது. ‘அப்படியானால் சிறுவர்களுக்கு எழுதலாம் போலிருக்கிறதே!’ என்கிற எண்ணத்தை அது தோற்றுவித்தது. அதன் பிறகுதான் குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கி, அமரர் ரா.கி. ரங்க்ராஜன் அவர்களால் ஜிங்லி எனும் குமுதம் குழுமத்தைச் சேர்ந்த சிறுவர் இதழில் அறிமுகம் செய்யப்பட்டேன்.
துமிலன் அவர்களைப் போன்றவர்களை இந்தக் காலத்தில் காண்பது அரிது என்பதைப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி, அவை பிரசுரம் ஆகாமலும், முடிவு தெரியாமலும் நீண்ட காலம் தவிக்கும் எழுத்தாளர்கள் அறிவார்கள். அட, அவர் அளவுக்குப் போகவேண்டாம். முன் பின் தெரியாதவர்களுக்கு எழுதிக்கொண்டிருக்க வேண்டாம். தங்களின் முக்கியமான கடிதங்களுக்குக் கூட அவர்களிடமிருந்து பதில் வருவதில்லை என்பது கொஞ்சம் பிரபலம் அடைந்துள்ள சில எழுத்தாளர்களின் மனக்குறை. இப்போதெல்லாம் ஏற்கப்படாத கதைகளை (அஞ்சல் பில்லையும் தன்முகவரி உறையும் கதையுடன் வைத்தாலும்) திருப்பி அனுப்ப இயலாது என்பது இந்நாளைய நடைமுறையாகிவிட்டது எனவே, கதை/கட்டுரையை அனுப்பிவிட்டு மாதக் கணக்கில் எழுத்தாளர்கள் தவமிருக்கிறார்கள். தொலைபேசியில் கேட்டாலும், எழுதிக் கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. பத்திரிகை ஆசிரியர்கள் ஒன்று செய்யலாமே. கதைகளைத் திருப்பி யனுப்புவது பெரிய வேலைச் சுமை என்பதாலும் அதற்கு ஓர் ஆளுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அதை அவர்கள் தவிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கதைகளுடன் தன்முகவரியிட்ட ஓர் அஞ்சல் அட்டையை இணைக்குமாறு எழுத்தாளர்களுக்குச் சொல்லலாமே. அந்த அஞ்சலட்டையில் கதை / கட்டுரையின் தலைப்பு, அனுப்பியதேதி ஆகியவற்றை அந்த எழுத்தாளரையே எழுதச் சொல்லிவிட்டால், அந்த வேலை கூட இல்லாமல் அவற்றைத் தபால் பெட்டியில் போடச் செய்வது மட்டுமே அவர்கள் வேலையாக இருக்குமே. முடிவை மட்டும் ஒரே சொல்லில் எழுதலாமே! பத்திரிகைகளுக்கு இது கூடவா சிரமம்? அண்மையில் ஓர் எழுத்தாளர் “திண்ணை” யில் பொருமியிருந்ததைப் படித்த போது வேதனையாக இருந்தது. துமிலன் அளவுக்குப் போகாவிட்டாலும் இது போல் செய்யலாம்தானே?
துமிலன் அவர்களைப் பற்றிச் சொல்லும் போது ஒரு முக்கியமான சேதியைச் சொல்லாமல் இருக்க முடியாது. கலைஞர் திரு கருணாநிதி அவர்கள் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்துக்குத் துமிலன் அவர்கள்தான் தினமணி கதிரில் விமரிசனம் எழுதினார். அவர் பெயருடன் அது வெளியாகாவிட்டாலும், அது ஏற்படுத்திய பரபரப்பின் விளைவாக அதை எழுதியவர் அவர்தான் எனும் செய்தி பரவலாயிற்று. “கதை, வசவு – தயாநிதி” எனும் கார்ட்டூன் தினமணி கதிரில் வெளியாயிற்று. அது தவிர, அவரது விமரிசனத்தில் தூள் பறந்தது. அதன் நகல் இல்லாவிட்டாலும், அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் நன்றாக ஞாபகம் இருக்கின்றன். ‘அது பேசாது. கல்’ என்பது போல் பிற மதங்களை அவரால் சாட முடியுமா என்பது ஒரு கேள்வி. ‘அதில் வரும் கதாநாயகன் எந்த வேலையும் செய்து உழைத்துச் சம்பாதிக்க முயலாமல், ஊருக்குப் பகுத்தறிவு உபதேசம் செய்வதைப் பார்க்கும் போது, அதை எழுதியவரையே அவன் பிரதிபலிக்கிறானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. …. இந்தப் படத்துக்கு ஓகே சான்றிதழ் கொடுத்தவர்கள் செவிடு-குருடுப் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவர்களா?’ என்றெல்லாம் அவர் விளாசி யிருந்தார். அதன் பிறகுதான் அது மறு தணிக்கை செய்யப்பட்டும் சில பகுதிகள் நீக்கப்பட்டும் வெளியானது. துமிலன் மிகவும் பேசப்பட்ட விமர்சகர் ஆனார்.
அனால், பின்னாளில் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது தமது இயல்பின்படி எதையும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல், துமிலன் அவர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார் என்பது வேறு விஷயம்.
பின்னாளில், தினமணி கதிர் வைத்த நாவல் போட்டியில் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்த போது நடுவர்களாக இருந்தவர்களில் துமிலனும் ஒருவர் ஆவார். அதன் பின்னர், எழுத்தாளர்களின் ஒரு கூட்டத்தில் அவரை முதன் முதலாய்ச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பிரசுரத்துக்குக் கூடத் தகுதியற்றது என்று தினமணி கதிரின் ஆசிரியர் கருதிய ‘துருவகங்கள் சந்தித்த போது’ எனும் எனது நாவலை ஆதரித்துத் தாம் மிகவும் வாதாட வேண்டி யிருந்தது என்று அவர் அப்போது மனம் விட்டு என்னிடம் தெரிவித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. எனினும் அதே ஆசிரியர்தான், ‘வயதானவர்களை நடுவர்களாக அமர்த்தாமல் இளந்தலை முறையினரை அமர்த்தி இருந்தால், ‘துருவங்கள் சந்தித்த போது’ மூன்றாம் பரிசுக்குத் தள்ளப்பட்ட பரிதாபத்திலிருந்து தப்பியிருக்கும்’ என்கிற ரீதியில் அக்கதையைப் பற்றி ஒரு வாசகர் எழுதிய கடிதத்தையும் தினமணி கதிரில் வெளியிட்டார்!
கடைசியாக, துமிலன் எழுதிய ஒருசிறு நகைச்சுவைக் கதை பற்றிக் கூறி இதை முடிக்கிறேன். …. ‘துணையின்றித் திரைப்படம் ஒன்றுக்குச் செல்லும் ஓர் இளம் பெண்ணின் பக்கத்து இருக்கை காலியாக உள்ளது. அவளுக்குச் சற்று அப்பாடா என்று நிம்மதியாக இருக்கிறது. ஆனால், திரைப்படம் தொடங்கி, விளக்குகள் அணைந்த பிறகு ஓர் ஆண் அந்தப் பக்கத்து இருக்கைக்கு வந்து உட்காருகிறான். அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அச்சமாக இருக்கிறது. தன் மேல் இடித்து ஏதேனும் சேட்டை பண்ணுவானோ என்று திகிலடைகிறாள். ஆனால் அவன் கை துளியும் அவள் மேல் இடிக்கவில்லை. ’கண்ணியமானவன்’ என்று மனத்துள் அவனைப் பாராட்டிக்கொள்ளுகிறான். இடைவேளையின் போது விளக்குகள் எரிகின்றன. பக்கத்து இருக்கைக்காரன் எழுந்து நிற்கிறான். அந்தக் கண்ணியவானைப் பார்க்கும் ஆவலில் அவள் தலை திருப்பி ஓரக்கண்ணால் கவனிக்கிறாள். அவளுக்கு வலப்புறம் உட்கார்ந்திருந்த அவனுக்கு இடக்கையே இல்லை என்பதைக் காண்கிறாள்’ …. என்று அந்தக் கதை முடியும்!
………

Series Navigationஅதிர வைக்கும் காணொளிவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூதுஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidismவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்அதிகாரத்தின் துர்வாசனை.திண்ணையின் எழுத்துருக்கள்வசுந்தரா..திண்ணையின் இலக்கியத் தடம் -16பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?ஒன்றுகூடல்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !கேட்ட மற்ற கேள்விகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

3 Comments

 1. Avatar
  IIM Ganapathi Raman says:

  //என்று அந்தக் கதை முடியும்!//

  இது ஓ ஹென்றி டெக்னிக். கடைசி வரியில் மட்டுமே முடிவு. இங்கே ”ஙே என்ற உணர்வை (embarraassment) அவளுக்கு உண்டாக்க. துமிலன் முயல்கிறார்.

  பலவிடங்களில் இக்கிளைமாக்ஸ் நகைச்சுவைக்காக பயனபடுத்தப்படும். ஓ ஹென்றி பல உணர்வுகளையும் பிண்ணி இணைத்துவிடுவார் – சோகம், ஙே என்ற உணர்வு, நகைமுரண் இத்யாதி.

  இப்போது இப்படி எவராவது எழுதும்போது முடிவு இப்படியாகத்தான் வருமென ஊஹித்துவிடலாம்

  இந்த டெக்னிக்கை ‘கடைசிப்பக்க கதைகள்’ என்று பிரபல வாராந்திரிகள் போட்டுவருகின்றன. அறிமுக எழுத்தாளர்கள்தான் கடைப்பக்க கதைகளை இந்த டெக்னிக்கை அடித்துத் துவைத்து சக்கையாக்கி மகிழ்கிறார்கள்.

  சாக்கி இதே கடைசி வரி முடிவை, எனிக்மாவாக ஆக்கிவிடுவதால், அவர் மாபெரும் உலகப்புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் எனப்போற்றப்படுகிறார். ஓ. ஹென்றி, டாப் டென் சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இந்த டெக்னிக்கை முதலில் வைத்து எழுதியதாலென நினைக்கிறேன்.

  உலகப்புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் வரிசைகளுள் தமிழ் எழுத்தாளர்கள் உண்டா இல்லையா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இலக்கிய அரசியல்வாதிகள் என் மீது பாய்வார்கள். எனவே தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன்.

  Unpredicable end decides the greatness of a short story. Predicability kills it.

  1. Avatar
   paandiyan says:

   //உலகப்புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் வரிசைகளுள் தமிழ் எழுத்தாளர்கள் உண்டா இல்லையா என்று தெரியவில்லை.//

   what about தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *