எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு வெளியாக இருக்கிறது

NovelAdஅன்புடையீர்,
எதிர்வரும் 10-ஜனவரி-2014 அன்று சென்னையில் நந்தனம் மைதானத்தில் புத்தகத்திருவிழா துவங்க இருக்கிறது.
காவ்யா பதிப்பகம் வாயிலாக எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு நாவல் தொகுப்பென வெளியாக இருக்கிறது. எனது நாவல் தொகுப்பு கிடைக்கும் இடம் காவ்யா பதிப்பகம், ஸ்டால் 491 & 492.
எனது நாவல் புத்தகத்தின் முன் & பின் அட்டைகளையும், காவ்யா பதிப்பகம் சார்பில் விழா அழைப்பிதழையும் இங்கே இணைத்திருக்கிறேன்.
2009 ல் எனது முதல் கவிதை ஒரு இணைய கவிதையிதழில் வெளியான போதும் சரி, எட்டு மாதங்களுக்கு பிறகு என் முதல் சிறுகதை ஒரு இணைய இதழில் வெளியான போதும் சரி அதன்பிறகு குங்குமம், குமுதம், ராணி என வெகுஜனஊடகங்களிலும், உயிரோசை, கணையாழி என சமூக கலை இலக்கிய இதழ்களிலும் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்ட போதும் சரி, என் முதல் புத்தகம் இரண்டு நாவல்கள் கொண்ட தொகுப்பென உருவாகும் என்று கற்பனை கூட செய்ததில்லை.
இது போன்ற நிகழ்வுகள் இயற்கை குறித்தும் அதன் இயங்குமுறை குறித்தும் தீவிரமாக யோசிக்க வைக்கிறது.
நாவல் எனப்படுவது ஒரு கதையை பக்கம் பக்கமாக நீட்டி, பக்கத்துக்கு பக்கம் எதிர்பாராத நிகழ்வுகள் தந்து எழுதுவது அல்ல. அது வாரா வாரம் தொடரும் தொடர்கதையும் அல்ல. வேறெங்கோ வாசித்த வாக்கியத்தை குறியீடுகள், உவமானங்கள், உவமேயங்கள் என மாற்றி எழுதுவதுமல்ல. 6 ப‌க்க‌ங்க‌ள் வ‌ரை சிறுக‌தை என‌வும், 50 ப‌க்க‌ங்க‌ள் வ‌ரை குறுநாவ‌ல் என‌வும் 90 அல்ல‌து அத‌ற்கு மேற்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌து நாவ‌ல் என்கிற‌ ஆகிருதியும் அல்ல‌.
என்னைப் பொறுத்த‌ அள‌வில், நாவல் எனப்படுவது யாதெனில், இதற்கு முன் முன்மொழிந்திரப்படாத அல்லது ஓர் மாற்றுக்கருத்தை முன்வைப்பதான ஒரு கருத்தாக்கத்தை விளக்க, அதன் சூழலுக்கு பொருந்துவதான கதை மாந்தர்களை உருவாக்கி, பொருத்தமான கதைக் களம் ஒன்றில் சாதகமான வாதங்களை முன்வைத்து எழுதுவது.
அதிலும் சமூக நாவல் எனப்படுவது, சமூக அடையாளங்களை, மதிப்பீடுகளை, வழமைகளை கேள்விக்கு உட்படுத்துவது. அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்வது. காலாவதியாகிவிட்ட அடையாளங்களை, மதிப்பீடுகளை, வ‌ழ‌மைக‌ளை க‌ண்டுகொண்டு மாற்றுச் சிந்த‌னைக‌ளை முன்மொழிவ‌து. சமூகத்தின் புரிதலுக்கு அது பயன்பட வேண்டும். சமூகத்தில் உள்ள குழப்பங்களை போக்கும் வண்ணம் தெளிவு தரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது சமூகத்தில் நிலவும் குழப்பங்களை தீர்க்கும் வண்ணம் அமைய வேண்டும். எழுத்தாளனின் படைப்பின் நோக்கமும், வாசகனின் தேடலும் இணையும் கோட்டில் பயணிக்கவேண்டும். வாசகனுக்கு தெளிவு தரும் ஒன்றாக இருக்க வேண்டும். மலினமான, வெறும் ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டதாக இருத்தல் கூடாது.
ச‌மூக‌ நாவ‌ல்க‌ள் எழுதுவதில் உள்ள‌ சிக்க‌ல், இந்திய‌ ச‌மூக‌ அமைப்பு என்ப‌து புரிந்துகொள்ள மிக‌ மிக‌ சிக்க‌லான‌து. த‌மிழ்ச்ச‌மூக‌ம் அதைவிட‌ சிக்க‌லான‌து. இதில் ச‌மூக‌ அடையாள‌ங்க‌ளை, ம‌திப்பீடுக‌ளை, வ‌ழ‌மைக‌ளை இன‌ம் காண்ப‌தே முத‌ல் ச‌வால்.
ச‌மூக‌ நாவ‌ல் எழுத‌ முத‌லில் ச‌மூகத்தின் இயங்குமுறை துல்லிய‌மாக‌ புரிந்திருக்க‌ வேண்டும். ஒரு சிக்க‌லான‌ ச‌மூக‌ அமைப்பை புரிந்துகொள்வ‌து அத்த‌னை சுல‌ப‌ம‌ல்ல‌.
காவ்யா சன்முகசுந்தரம் ஐயாவை அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். எனது ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ நாவல்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.
 ‘இன்று கேரளா செல்கிறேன். வரும் வியாழன் அன்று தான் திரும்ப வருகிறேன். ஒரு கருத்தரங்கம். பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், தலித்தியம் முதலான தலைப்புக்களில் மூவர் கட்டுரை வாசிக்கிறார்கள். நானும் பேச இருக்கிறேன். அந்த பேச்சில், உங்கள் நாவலில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை பயன்படுத்திக்கொள்ளட்டுமா?‘ என்று கேட்டார்.
எனக்கு மனிதம், நேர்மை, வயதில் சிறியோரிடம் கூட எளிமையாக இருத்தல், திறந்த மனம் போன்ற பண்புகள் மீது அவ்வப்போது அவ நம்பிக்கை தோன்றுகையில், எனது நம்பிக்கைகளை மீண்டும் தூக்கி நிறுத்த சில நிகழ்வுகளை நினைவூட்டிக்கொள்வேன். அப்படியான நிகழ்வுகளில் இந்த நிகழ்வினையும் சேர்த்துகொண்டுவிட்டேன்.
‘ஒப்ப‌னைக‌ள் க‌லைவ‌த‌ற்கே’ ஒரு ச‌மூக‌ நாவ‌ல். பொதுவாக‌ காத‌ல் என்ப‌து உண‌ர்ச்சிக‌ள் சார்ந்த‌து என்கிற‌ பொதுவான‌ க‌ருத்து நில‌வுகிற‌து. காத‌ல் என்ப‌து உண‌ர்ச்சிக‌ள் சார்ந்த‌து என்றால் உண‌ர்ச்சிக‌ள் என்ப‌து புரித‌ல்க‌ளால் தூண்ட‌ப்ப‌டுவ‌து.
ஆகையால், காத‌ல் என்ப‌து புரித‌ல்க‌ளின் ப‌க்க‌விளைவு என்கிற‌ க‌ருத்தாக்க‌த்தினை பதிவு செய்யும் நாவ‌ல்.
ஆண் பெண் ஈர்ப்பின் வேர் காமமே என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்வார். அதோடு முடிந்துவிட மனிதன், விலங்கினம் மட்டும் அல்லவே. மேலும், காம உணர்வே தோன்றாத இடத்தும் கூட ஆணும் பெண்ணும் ஈர்ப்பு கொள்ளக் காண்கிறோமே?
காமத்தைத் தூண்டும் வாளிப்பான பெண்களுக்கும் கூட காதல் தோல்விகளும், மணவாழ்க்கைத் தோல்விகளும் நிகழக் காண்கிறோமே? ஆண் பெண் ஈர்ப்பிற்கு காமத்தை மட்டுமே முதன்மைப் படுத்துவது மடமை. ஈர்ப்பின் முதல் கட்டம் காமமாகவே இருந்தாலும், அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு காமம் தாண்டிய‌ பிறிதொன்று தேவைப்படுகிறது என்பதே திண்ணம்.  அந்தப் பிறிதொன்றில் புரிதல்களின் பங்கு குறித்து இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.
இந்த நாவலில் வரும் மஞ்சு, ரவி, ஜானகி, மகேஷ், சடகோபன், ரேவதி முதலானவர்களை நீங்கள் உங்களைச் சுற்றிலும் எங்கெங்கும் காணலாம். இந்த நாவலின் கதை மாந்தர்கள், பொருளாதார படி நிலைகளில், மிகவும் தாழ இருப்பவர்கள் அல்ல.
எல்லையில்லா அர்ப்பணிப்பிலும், அறியாமையிலும், குறுகிய சமூகத்தாலும் அவ்வாறானவர்களின் இயங்குமுறைகளில் புரிதல்களின் படி நிலைகளில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. வித்தியாசங்கள் இருப்பினும் அவைகள்
மையப்படுத்தப்படுவதில்லை. ஆயினும், இன்றைய‌ ச‌மூக‌ அமைப்பின் சிக்க‌ல்க‌ளில், அவ‌ர்க‌ளுள்ளும் சில‌ விதிவில‌க்குக‌ள் இருக்க‌லாம்.
‘முடிச்சு’ ஒரு சமூக நாவலே. இன்றைய கணிணி யுகத்தில், பெண்கள் எத்தகைய பிறழ்வை சந்திக்கிறார்கள் என்பதை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன். இந்த நாவலில் வரும் வினீத், மது, இளவஞ்சி, மதன், திலீப், கார்த்திக் முதலானவர்களை
நீங்கள் உங்களை சுற்றிலும் காண மிக மிகப்பல சாத்தியக்கூறுகள் உள்ளன. கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் , ஆண் பெண் என இரு பாலரும் கூடும் அத்தனை இடங்களிலும் பெண்களின் தேர்வுகள் குறித்து பல குழப்பங்கள் நீடிக்கின்றன. அந்த
தேர்வுகளின் வேர் குறித்து இந்த நாவலில் பதிந்திருக்கிறேன்.
இயற்கை தன்னை சமன்படுத்திக்கொள்ளும் இடத்தில், சமூகக் கடமைகளால் மட்டுமே மனிதன் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளவோ மீட்டெடுக்கவோ இயலும். அப்படியான இடத்தில், பெண்மையின் பிறழ்வுகளால் நிகழும் விபரீதங்களை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.
எனது இவ்விரண்டு நாவல்களும் நாவல் தொகுப்பென காவ்யா பதிப்பகம் மூலமாக புத்தகமாக 13 ஜனவரி 2014 அன்று, 10 தேதியிலிருந்து துவங்கி 21 தேதி முடிய நடக்க உள்ள புத்தக திருவிழாவில் வெளியாக இருக்கிறது. புத்தகத் திருவிழாவில் காவ்யா பதிப்பகத்தின் ஸ்டால் எண் 491 & 492 .
இந்த இரண்டு நாவல்களையும் வாசியுங்கள். வாசித்துவிட்டு எனக்கு எழுதுங்கள். எனது முகவரி:
மணை எண்: 2, நாதமுனி தெரு,
ஐ.பி.சி. இரண்டாவது சர்ச் அருகில்,
ஒரகடம், அம்பத்தூர்,
சென்னை – 600053
நட்புடன்,
ராம்ப்ரசாத்
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *