அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

krishna's peace mission
ஸ்ரீ கிருஷ்ணரின் வருகையை ஒட்டி திருதராட்டிர மகராஜா அவரை வரவேற்க ஆயத்தமாகிறார். பெரிய மாளிகைகளை நவமணிகளால் இழைத்துத் தயாராக வைத்திருக்க ஆணையிடுகிறார். யானைகளையும், உயர்சாதிக் குதிரைகளையும், பணியாட்களையும், நூறு கன்னிப் பெண்களையும், கால்நடைகளையும் பரிசளிக்க ஏற்பாடு செய்தார்.
இவற்றையெல்லாம் பார்வையிடும் விதுரர் “ நல்லது. நீர் நீதிமான் என்பதோடு புத்திமானும் கூட. அதிதியாக வரும் ஸ்ரீ கிருஷ்ணர் நீர் கொடுக்க நினைக்கும் பரிசுப் பொருட்களைப் பெற தகுதியுடையவரே. கேசவர் எந்தப் பொருளுக்கு நன்மையை விரும்பி வருகிறாரோ அதை அன்றோ நீர் கொடுக்க வேண்டும்?” என்று வினா எழுப்புகிறார்.
திருதராட்டினரோ கபடதாரி. விதுரருக்குப் பால் போன்ற வெள்ளை மனம். துரியோதனனோ இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ளவன்.” ஸ்ரீ கிருஷ்ணர் பூஜைக்கு உரியவர் என்றாலும் அவருக்கு நாம் மரியாதை செய்யக் கூடாது. பகை தவிர்பதற்காக அவர் கூறும் அறிவுரைகளை ஏற்கப் போவதில்லை எனும்பொழுது அவரை எவ்வாறு நல்லவிதமாக வரவேற்க முடியும்? அவரை அப்படி வரவேற்று பூஜை செய்வோமேயானால் அவருக்கு பயந்து கொண்டு செய்வதாகத்தானே மற்றவர் கருதுவர்? என்னிடம் வேறு ஒரு உபாயம் உள்ளது. நாம் கிருஷ்ணரை சிறைப் பிடிப்போம். ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களின் பலம்; அவர்களுடைய சூத்திரதாரி. அந்த ஜனார்த்தனரை பிடித்து அடைத்து விட்டால் பிறகு பாண்டவர்கள் என் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடுவார்கள். “ என்று துரியோதனன் கூறினான்.
இந்த வார்த்தைகள் புத்திரப் பாசமும் பேராசையும் படைத்த திருதராட்டினரைக் கூட கொதிப்புறச் செய்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் தூது நிமித்தம் கௌரவர்களை நல்லவர்கள் என்று நம்பி அத்தினாபுரம் வந்திருக்கிறார். துரியோதனனின் இந்த கொதிப்படையச் செய்யும் வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர் கோபம் கொண்டு சபையை விட்டு வெளிநடப்புச் செய்கிறார்.
சிறிது நேரத்தில் கௌரவர்களில் சிலரும் அத்தினாபுர மக்களும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உரிய மரியாதை அளித்து அழைத்து வந்தனர்.
தனது வருகைக்காக அலங்கரிக்கப் பட்டிருந்த மாளிகைகளையும்,பரிசுப் பொருட்களையும் பார்வையிட்ட ஸ்ரீ கிருஷ்ணர் அவற்றை ஒதுக்கி விட்டு நேரே திருதராட்டினன் மாளிகைக்குச் செல்கிறார். தானே ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் அவரவர் தகுதிக்கு ஏற்றது போல பேச ஆரம்பிக்கிறார். திருதராடினருக்கும் விதுரருக்கும் வேத வியாசர்தான் நேரடித் தந்தை. திருதராட்டிணனின் தாயான அம்பிகா விசித்திரவீரியனின் தர்ம பத்தினி. விசித்திர வீரியனின் அரண்மனையில் பணிபுரியும் வைசிய குல தாசியின் மகனே விதுரராவார்.{ அந்த கால வழக்கப்படி விசித்திர வீரியனுக்கு நேரடி வாரிசாக திருதராட்டினனே அறியப் பட்டார். அதே சமயம் விதுரனை விசித்திர வீரியனின் மகனாகவே ஜனங்கள் கருதவில்லை.}
மிகவும் எளியவரான விதுரர் தர்மத்தின் வழி நிற்பவர். கௌரவர் மாளிகைக்குள் நுழையும் ஸ்ரீ கிருஷ்ணர் நேரே விதுரரின் குடிலுக்குள் நுழைந்து அவருடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். பாண்டவர்களின் தாயும் ஸ்ரீ கிருஷ்ணரின் அத்தையுமான குந்தி தேவி அந்த குடிலில்தான் வசித்து வந்தார். வனவாசம் செல்ல நேரிடும்பொழுது பாண்டவர்கள் தங்கள் அன்னையை விதுரரின் பாதுகாப்பில்தான் விட்டு விட்டு செல்கின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் குந்தியை மரியாதை நிமித்தமாகப் பார்க்க சென்றபொழுது தங்களுடைய மக்கள் காட்டில் அல்லலுருவதற்காகக் குந்தி கதறி அழுதாள். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் குந்தியை சமாதானப் படுத்தும் விதமாக கூறும் வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை. “ பஞ்ச பாண்டவர்கள் தூக்கம் சந்தோசம், சோம்பல், பசி, தாகம், குளிர், வெப்பம் இவற்றை மறந்து துணிவுடன் இருப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர். புலன்களின் இன்பத்தை துறந்து விட்டு துணிவின் பரவசத்தில் மூழ்கி இருக்கிறார்கள். எவர்க்கும் அஞ்சாது ஆர்வம் மிக்க அவர்கள் எளிதில் சமாதனம் அடையாதவர்களாக இருக்கிறார்கள்.அவர்களைப் போன்ற தீரர்கள் வலியின் உச்சத்தையோ, அல்லது மகிழ்ச்சியின் உச்சத்தையோ அனுபவிக்கப் பிறந்தவர்கள். ஆனால் சராசரி மனிதர்களோ புலன்வழி சென்று, உயர் இலக்கு எதுவுமின்றி, அற்ப ஆசைகளின் பின் சென்று அழிகின்றனர். ராஜ்யத்தை போரிட்டுப் பெறுவதும் வனத்தில் வசிப்பதும் அவர்களைப் பொறுத்த வரையில் ஒன்றுதான். அவர்களுக்கு இரண்டுமே பேரின்பம் அளிக்கக் கூடியது.”
ஸ்ரீ கிருஷ்ணர் தன் அத்தைக்கு சமாதானம் கூறும் முகமாக பாண்டவர்கள் தங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற்று இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவார்கள் என்று கூறுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்கள் எந்த விதத்திலும் அமைதி பேச்சு வார்த்தைக்கு உடன்பட மாட்டார்கள் என்பதையும் போர் தவிர்க்க முடியாதது என்பதையும் இதன் மூலம் தெரியப் படுத்துகிறார். இருப்பினும் பங்காளிகள் நடுவில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருப்பது பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய வேண்டும் என்ற அவரது கோட்பாட்டினை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே.. இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கர்ம யோகத்தில் குறிப்பிடுகிறார் இரு சகோதர்கள் நடுவில் அமைதிக்கான பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அந்த இரு பிரிவினருக்கும் இடையில் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த வழி. ஆத்மார்த்தமான முயற்சிகள் தோல்வியில் முடிந்து போர் தவிர்க்க முடியாமல் போகும் நேரம் ஸ்ரீ கிருஷ்ணரே மருள் சூழ்ந்த பார்த்தனின் நம்பிக்கை விளக்கமாகவும், உறுதுணையாகவும் மாறுகிறார். இணக்கம் சாத்தியமில்லாமல் போகும்பொழுது யுத்தம் தவிர்க்க முடியாமல் போகிறது. அதுவே இன்றியமையாக் கடமையாகிறது. இதன் மூலம் தான் ஸ்தாபித்த வைணவ மதத்தினை பின் பற்றும் முதல் நபராக ஸ்ரீ கிருஷ்ணரே மாறுகிறார்.
அன்றிரவு விதுரரின் வீட்டில் தங்கியிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடன் ஆலோசனை செய்கிறார். விதுரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவர் தூது நிமித்தமாக அத்தினாபுரம் வந்திருக்கக் கூடாது என்கிறார். ஏன் எனில் துரியோதனன் எப்படியும் பாண்டவர்களுக்குரிய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். ஸ்ரீ கிருஷ்ணர் மறுமொழி கூறும் முகமாக “ எந்த ஒரு மனிதன் தன் நண்பனுக்கு அவனுடைய ஆபத்துக் காலங்களில் உதவி புரிய மறுக்கிறானோ அவன் மனிதாபிமானமற்றவனாகவே அறிவுடையவர்களால் தூற்றப் படுகிறான். அதே நேரம் தன் நண்பன் தவறு செய்யும்பொழுது அவன் சிகையைப் பற்றி இழுத்தாவது அவனை தடுக்க வேண்டும். என் கருத்து செறிவு மிக்க யோசனைகளை கேட்ட பின்பாவது துரியோதனன் மனம் மாறுவான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. அவனுக்கு நல்ல விஷயங்களை எடுத்துரைத்தேன் என்ற சமாதானமாவது எனக்கு மிஞ்சும். தன் சுற்றத்தினரின் நடுவில் ஏற்பட உள்ள பிளவினை தடுக்க இயலாதவன் அவர்களது உறவினனாக இருந்து பயனில்லை.”
மறுநாள் காலையில் துரியோதனனும் சகுனியும் ஸ்ரீ கிருஷ்ணரை தங்கள் சபைக்கு அழைத்துச் செல்ல விதுரரின் குடிலுக்கு வருகின்றனர். கௌரவர் சபையில் ஒரு பெருங்கூட்டம் நடைபெறுகிறது. தேவரிஷியான நாரதரும், முனிவரில் சிறந்தவரான ஜமதக்னி முனிவரும் அந்த பெருங்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றனர். நிதானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு ஸ்ரீ கிருஷணர் ஆற்றியப் பேருரையில் அவர் துரியோதனனிடம் பாண்டவர்களுடன் சமாதானமாக போகுமாறு கேட்டுக் கொள்கிறார். திருதராட்டினன் இந்த விஷயத்தில் மெளனமாக இருந்து விடுகிறார்.” என்னால் ஒன்றும் செய்வதற்கில்லை. துரியோதனனைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறி விடுகிறார்.ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மர், துரோணர் முதலியோர் காரண காரியங்களுடன் துரியோதனனிடம் எடுத்துரைகின்றனர். அவர்களுடைய புத்திமதிகள்துரியோதனனைக் கொதிப்படையச் செய்கிறது. முடிவில் அவன் கோபம் அதிகமாகி ஸ்ரீ கிருஷ்ணரை தூற்றும் அளவிற்கு சென்று விடுகிறான். ஸ்ரீ கிருஷ்ணரும் கொதிப்படைந்து சீறுகிறார். துரியோதனனை அவனுடைய துர்புத்திக்கும் பாவச் செயல்களுக்கும் அவனைத் தூற்றுகிறார். இதனால் வெறுப்படைந்த துரியோதனன் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறுகிறான்.
ஒரு அரசருக்குரிய குணங்களுடன் செயலாற்றும்படி ஸ்ரீ கிருஷ்ணர் துரியோதனனுக்கு அறிவுரைக் கூறுகிறார். குடிகளைப் பாதுகாப்பதும், குற்றவாளிகளை தண்டிப்பதும் ஒரு அரசனின் கடமையாகும் என்கிறார். ஆயிரக் கணக்காநவர்களைக் கொல்ல நினைக்கும் ஒரு பாவியை சிறையில் அடைப்பது தவறில்லை என்கிறார் இந்த ஒரு காரணத்தால்தான் ஐரோப்பிய தேசத்தில் உள்ள மன்னர்களும் அவர்களது மந்திரிகளும் நெப்போலியனைக் கைது செய்து ஆயுட்கைதியாக சிறையில் அடைத்தனர். இதே நோக்கத்துடன்தான் திருதராட்டினனிடம் துரியோதனனைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி கூறுகிறார் தானே விருந்துக்கு சென்ற இடத்தில் தாய் மாமனான கம்ச மகராஜவைக் கொன்றதைக் கூறுகிறார்.
அவர் கூறியது செவிடன் காதில் ஊதிய சங்கின் ஒலி போலானது.
கோபம் கொண்ட துரியோதனன் கர்ணனுடன் ஆலோசனை செய்து ஸ்ரீ கிருஷ்ணரை சிறைப் பிடிக்க திட்டமிடுகிறான். ஸ்ரீ கிருஷ்ணரின் உறவினர்களான சாத்யகியும், கிருதவர்மனும் அந்த சபையில் இருந்தனர். சாத்யகி சிறந்த கிருஷ்ண பக்தன். துரோணரிடம் வில்வித்தை பயின்று குருவுக்கு நிகரான சீடன் என்ற பெயர் பெற்றவன். புத்தி கூர்மை மிக்க சாத்யகி ஒருவருடைய உடல் மொழியைக் கொண்டு அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதில் நிபுணன். கர்ணனும் துரியோதனனும் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் சாத்யகி மாளிகை வாசலில் கிருதவர்மனையும் வேறொரு யாதவ அபிமானியையும் காவலுக்கு வைத்துவிட்டு ஸ்ரீ கிருஷ்ணரையும் எச்சரிக்கிறான். இந்த விஷயத்தை சபையில் போட்டு உடைத்து விடுகிறான். இதைக் கேள்விப் பட்டதும் விதுரர் திருதராட்டினனிடம் “ இவர்களது நடவடிக்கை விளக்கின் ஒளியுடன் மோத நினைக்கும் விட்டில் பூச்சிகளின் நிலையை ஒத்தது. போர் தொடங்கிய பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே இவர்களை அழித்து விட மாட்டாரா? “ என்று கேட்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் திருதராட்டினனிடம் உரையாடும்பொழுது சிறிதும் மரியாதைக் குறைவாகப் பேசவில்லை. தனது பலம் குறித்து நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் பரிவு மிக்கராகவும் , நட்பு பாராட்டுபவராகவுமே இருந்தார்.” ஓ அரசரே! திருதராட்டிரரே! இவர்கள் கோபம் கொண்டு என்னை சிறை பிடிப்பார்களோ அல்லது நான் இவர்களைச் சிறைப்பிடிப்பேனோ தெரியாது. பார்க்கலாம். அனுமதி கொடுங்கள். நான் ஒருவனே இவர்களை கட்டி விடுவேன். ஆனால் எப்பொழுதும் மற்றவர்கள் தூற்றும்படியான செயலை புரிய மாட்டேன். பாண்டவர்களின் செல்வத்திற்குப் பேராசைப் பட்டு உன் புதல்வர்கள் தங்களது செல்வத்தையும் இழக்கப் போகிறார்கள். இவர்கள் இவ்வாறு என்னைக் கட்டிப் போட நினைத்தால் யுதிஷ்டிரரின் எண்ணம் ஈடேறியது என்றுதான் சொல்வேன். நான் இப்பொழுதே என்னை சிறைப்பிடிக்க வருபவர்களை பிடித்து பாண்டவர்கள் முன் ஒப்படைப்பேன். இவன் ஒன்று செய்ய நினைத்தால் நான் வேறொன்று செய்வேன். பாண்டவர்களுக்கும் சிரமமின்றி நினைத்த காரியம் ஈடேறும். இவர்களை சிறைப்பிடித்து பாண்டவர் வசம் ஒப்படைத்தால் பெரும் புண்ணியம் என்னை வந்து சேரும். உம்முடைய கண் முன்னால் அடுத்தவர் நிந்திக்கும் வண்ணம் கோபமான செயலையோ பாவமான செயலையோ செய்ய மாட்டேன். துரியோதனன் எப்படி விரும்புகிறானோ அது அப்படியே ஆகட்டும். வரச் சொல். உன் புதல்வர்கள் என்னை கட்டுவதற்கு அனுமதி அளிக்கிறேன்.”
திருதராட்டினன் துரியோதனனை வரவழைத்து வேறு எவராலும் கட்டமுடியாத ஸ்ரீ கிருஷ்ணரை சிறைப் பிடிக்க அவன் திட்டமிட்டதற்கு கண்டிக்கிறார். விதுரரும் துரியோதனனை நிந்திக்கிறார்.
பகைவரை வேரறுக்கும் அந்த கோவிந்தர் இதனை சொல்லி விட்டு சாத்யகி மற்றும் கிருதவர்மனின் தோள்களில் கை போட்டுக் கொண்டு சபையை விட்டு வெளியேறுகிறார்.
இதுவரையில் மகாபாரதத்தில் விவரிக்கப் பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ண தூது இயல்பாக உள்ளது. நம்பும்படியாக உள்ளது. எந்த இடத்திலும் குழப்பமான அல்லது தடுமாற்றமான செய்திகள் இல்லை. என்ன செய்ய? இதுவரையில் பொறுமை காத்து வந்த இடைசெருகும் கவிஞர்களுக்கு பொறுமை போய்விடுகிறது. சில அமானுஷ்ய சக்திகளை ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புபடுத்தாவிட்டால் பின் எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு கடவுளாக நிறுவ முடியும் என்று எண்ணியிருக்க வேண்டும். எனவேதான் இந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதாக இந்த இடை செருகும் கவிஞர்கள் கூறுகிறார்கள். மகாபாரத பீஷ்ம பர்வத்தில் இடம்பெறும் கதையில் இதுபோல ஒரு விஸ்வரூப தரிசனம் இடம் பெறும். இந்த விஸ்வரூப தரிசனம் மிக மென்மையாகவும் அற்புதமாகவும் விவரிக்கப் பட்டுள்ளது. பீஷ்ம பர்வத்தில் இடம் பெறும் விஸ்வரூப தரிசனம் குறித்த விவரணை மிகவும் கவித்துவம் மிக்கது. அழகானது. உலகத் தரத்துக்கு ஈடான இலக்கிய நயம் மிக்கது. ஆனால் உத்தியோக பர்வத்தில் இடம்பெறும் இந்த விஸ்வரூப தரிசன விவரணை மொன்னையாக கவிதையின் அருகில் கூட வரத் தகுதியின்றி அமைந்துள்ளது.
கௌரவர் சபையில் ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் எடுக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. அறிவற்றவர்கள் கூட இப்படி ஒரு சக்தி பெற்ற ஒருவரை தரக் குறைவாக பேச மாட்டார்கள். மேலும் துரியோதனனும் அவன் சகாக்களும் ஸ்ரீ கிருஷ்ணரை சிறை பிடிக்க வேண்டுமா வேண்டாமா என்று ஆலோசனைதான் செய்தார்களே ஒழிய சிறைப் பிடித்து விடவில்லை. தந்தையாலும் சிற்றப்பனாலும் ஆத்திரம் அடையும் துரியோதனன் மௌனம்தான் சாதித்தான். மேலும் ஸ்ரீ கிருஷ்ணரும் தன்னை பிடிக்க எடுக்கப் படும் முயற்சிகள் யாவும் தோல்வியில் முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு வேளை தன்னை காத்துக் கொள்ள அவருடைய படைபலம் போதாது என்று கருதினாலும் கூட விருஷிணி தேசத்து மன்னன் கிருதவர்மனும், கிருஷ்ண பக்தனான சாத்யகியும் படையுடன் துணை நின்றனர். எனவே இந்த இடத்தில் அவர் தன்னை ஒரு பிரபஞ்ச நாயகனாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.
இந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் காட்டினார் என்பதை ஒதுக்கி விடுவோம். ஏன் எனில் இது ஒரு மட்டமான கவியின் இடைசெருகலாகவே உள்ளது. நான் மீண்டும் மீண்டும் கூறி வருவது என்னவென்றால் ஸ்ரீ கிருஷ்ணர் முழுவதும் மனித சக்திக்கு உட்பட்டே செயல்பட்டு வந்தார். வேறு அமானுஷ்ய சக்திகளை பிரயோகிக்கவில்லை.
கௌரவர் சபையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் குந்தி தேவியை சந்திக்கசென்றார். பிறகு பாண்டவர்களின் வசிப்பிடமான உபப்லவ்யம் நோக்கி செல்கிறார். வழியில் கர்ணனை தன்னுடன் தேரில் தனியாக அழைத்துச் செல்கிறார்.

Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *