முகவுரை
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து. பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் சிறப்பை, கலாச்சாரத்தை, மனித இயல்புகளை என் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நெடுநாள் ஆசை எனக்கு இருக்கிறது.
அன்றாடப் பணிகளில் கடக்கக் கூடிய தூரமே பெரும் பளுவாக இருக்க, இதில் ஊர்சுற்ற, என்னைத் தன் வலிமையினால் தாங்கிக்கொள்ளும், ஒத்த கருத்துடைய நண்பர்களை இது வரையில் சந்திக்காததால், என் தினசரிச் சவால் நிறைந்த அந்த வாழ்க்கையையே என் வாழ்வியல் பயணமாகப் பதிவு செய்கிறேன் இவ்விடத்தில்.
இது என் வாழ்க்கை அனுபவம், என் சுய சரிதை அல்ல. சிலருக்கு இது பைத்தியக்காரத்தனமாகத் தோணலாம், சிலருக்கோ ஒரு பேதையின் மனப் பிதற்றலாகலாம், சிலர் இதைக் கண்டும் காணமல் கடந்து போகலாம். வாழ்வில் எதிர்பாராத பல முரண்களை அனுதினம் சந்தித்துத் துவண்டுக் கொண்டிருக்கும் பலருக்கு என் வாழ்க்கை முன்மாதிரியாகவும், ஓர் உந்து சக்தியாகவும் அமையும் என்பது திண்ணம். இதில் கற்பனை எதுவும் இல்லை. நிஜத்தின் சாயலையே உங்களுக்குப் படையல் ஆக்குகிறேன்.
******************************
தினம் என் பயணம் – 1
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி
இன்றைய விடியலின் விசித்திரம், மனவிழித்தலின் நிகழ்விலும் தொடர்ந்தது. நான் உறங்குவேன் என்று மூடிய விழிகளை வற்புறுத்தி விழிக்கச் செய்தேன். இன்று அலுவலகங்கள் முழுவதும் வேலை நிறுத்தமாம். நானும் போக வேண்டிய தில்லை என்று முடிவெடுத்த போதுதான், திரு. சுப்பிரமணி, தேர்தல் துணை வட்டாட்சியர் போன் செய்து தொலைத்தார். “ஆபீஸ் வந்து சேர்” என்று. விழிகளின் சோம்பல் இதயத்தை ஒட்டிக் கொண்டால் என்ன வாகும் என்று ஒரு எண்ணம் தோன்றி மறைய சிவலோக பதவிதான் என்று எனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டேன்.
என் சிரிப்பை கண்ட அக்காவின் மகன் கேட்டான் “என்ன சித்தி மெண்டல் ஆயிடலியே” “சீ போடா” என்று சிணுங்கிய போதுதான், பொட்டு வச்சிட்டு போறாளா பாரு என்று முனங்கினாள் அம்மா.
அம்மாவிற்கு வயது 61, நான் ஏலாத மாற்றுத் திறனாளி ஆனாபடியால் அவள் உதவி யின்றி எதுவும் செய்து கொள்ள முடிவதில்லை என்னால். நான் துணி துவைத்து அலசி வைத்தால் காயப் போடுவதற்கு அவள் வேண்டும். முனகாமல் செய்த அம்மா… இப்போதெல்லாம் முறுமுறுக்கிறாள்…அந்த முறுமுறுப்பில் அவளின் வயோதிகம் ஓய்ந்திருக்க யாசிப்பது தெரிந்தது எனக்கு. முன்பெல்லாம் “எதுக்கு என்னை இப்படி பெத்தயாம், நீ தான் செய்யனும்னு,” வீம்பு பேசுற நான்…இப்பொழுதெல்லாம் என்ன திட்டினாலும் வாயை இறுக மூடிக் கொள்வதோடு சரி. அவள் இன்னும் கொஞ்ச நாள் வாழ விரும்புவது எனக்கு சேவை செய்ய என்பது எனக்கு புரிந்தே இருந்தது ஒரு காரணம்.
இந்த சாலை பயணம் எனக்கு ஒரு தினச் சவால்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, நெரிசலான வாகனங்களுக்கு நடுவில் நெளிந்து, நகர்ந்து நுழைந்து, நின்று, தொடர்ந்து, நீந்திக் கடக்க வேண்டியிருக்கிறது இந்த ஜன சமுத்திரப் பிறவிப் பெருங் கடலை !!!
தினமும் என் மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் அமர்ந்து, பின்வாங்கி, முன்னேறிச் சாலை ஓட்டத்தில் கலந்த போது, இளைய தம்பியின் 2 வயது மகன் “அத்தை” என்று கையசைத்துச் சிரித்தான். பக்கத்துக் கடை பெரிய பஜாரின் முதலாளி குண்டு ரமேஷ்… வணக்கம் என்று ஒற்றைக் கரம் தூக்கினார். தலையசைப்பில் வணக்கம் ஏற்றுக் கடந்து செல்ல, தள்ளு வண்டியில் தக்காளி விற்கும் இலாலின் வணக்கத்திற்கு புன்னகைதான் என் பதில். சாலையில் பார்க்கிற அறிமுகங்களுக்கு எல்லாம் புன்னகைதான் என் தலை வணங்குதல்.
சர்ர்ர்ர் என்று வீறி தூசி பரப்பி விடும் வாகனங்களின் அடாத செயலில், நாசியில் நெடி ஏறித் தும்மல் வந்து விழும் தொடராக. எம் பயணம் நின்று தடைப்படும்.
வழியில் பொதி இழுக்கும் எருது சிறுநீர்க் கோலமிடும், சிறுநீர் வளைந்து வளைந்து கோடுகாளாக விழப் புவி முகம் சுளிப்பதாக தோன்றும் எனக்கு. பொத் பொத் பொத் சாணம் தரையில் விழ ஒன்றுமே நடவாதது போல் நடந்து கொண்டிருக்கும் எருதுகள். “ஹேய் ஹேய் ஹேய்” என்று அதட்டியபடி ஓட்டுபவன். அதைத் துரிதப்படுத்துவதாக எண்ணி வாலை முறுக்கி இழுக்க அது வலியில் வேகப்படுவது, என் இதயத்தை நோகச் செய்யும்.
விழுந்த சாணத்தை வீதியில் ஒதுக்கி விடவோ….அல்லது ஒதுங்கி போகவோ நேரமிருக்காது வாகன ஓட்டிகளுக்கு, சாணம் முழம் நீளத்திற்கு நீட்டப்பட்டு தட்டையாய்ப் புது வடிவம் பெறும். அது மூன்று சாலைகள் கூடுமிடம். முக்கூட்டு ரோடு என்பார்கள் வழக்கமாக, ஞாயிறுகளில் திருஷ்டி கழிக்கிற பேர்வழியின் கற்பூரம் எரியும், கொட்டாங்குச்சி எரியும். எனக்கு அவ்விடத்தை கடக்கும் போது பூதகியின் உயிர்மையத்தில் பயணிக்கும் உணர்வு ஏற்பட்டுப் போகும். மனம் இயல்பாய் மன்னிப்பு கேட்கும், இருமருங்கிலும் காகிதங்கள் பரம்பி குப்பையும் கூளமுமாக என் கண்களைக் கவர்ந்து குத்தும்.
தம்மிடத்தைத் தூய்மையாய் வைத்துக் கொள்ளும் ஞானம் கூட இல்லையே நம் நாகரீக மக்களுக்கு என்று வேதனைதான் மிஞ்சும் எனக்குள்.
கோழி இறைச்சிக் கடைகளில் தொங்கும் தோல் உரித்த கோழிகளி்ன் மேல் நீங்காது மொய்க்கும் ஈக்கள் நோய்களுக்கு எச்சரிக்கை என்பதை உணராமல் அதை வாங்கி சமைத்துண்ணும் பாமர மக்கள்.
பெருச்சாளி ஒன்று எப்படியோ இறந்து போயிருக்க, தரையில் டயர்களில் தேய்த்துச் சிவப்பும் கருப்புமாக நைந்து போயிருக்க, அதை கொத்தித் தின்று சுத்தம் செய்யும் காகம். அதை அகற்றிப் போடக்கூட மனதில்லாமல் ஒதுங்கி கடந்து போகும் நட ராஜர்கள் !
அதற்கு முன்பிருக்கும் கடை முதலாளி, தொழிலாளி யாருக்கும் கூடவா அந்த நாற்றம் மூக்கைத் துளைக்க வில்லை…?
வெற்றிலைச் சிவப்பு எச்சில், மூக்குச் சளி, துப்பல்கள் தரையில் மண்ணோடு மண்ணாய்ச் சுருண்டு காலில் ஒட்டிக் கொண்டு எரிச்சலை உண்டாக்கும்.
மனைவியின் மேல் துப்பினால், கணவன் மேல் துப்பினால், நண்பன் மேல் துப்பினால், நமது உறவுகள் மேல் துப்பினால் என்ன நடக்கும்….?
ஆனால் தரையில் துப்ப மட்டும் நமக்குச் சுதந்திரம் உண்டு. புவியின் மேல் துப்பும் போது உறுத்த வில்லையா ஒருவருக்கும் ?
வாடிய முகங்கள் பல கடந்துபோகும். காலை மலராக வண்ணச் சீருடையில் பள்ளி மாணவர்கள். சாலைவிதி தெரியுமா என்பதே கேள்விக் குறிதான். நான் இடதுபுறம் சென்றால் அவர்களும் நேர் எதிரில் இடதுபுறமாக வருவார்கள் (அவர்களின் வலது புறத்தில்) ஏன் இப்படி…? ஒரு சில நாட்கள் நான் சொல்வது உண்டு. சாலை விதிகளைக் குறித்து அப்பொழுதெல்லாம் அவர்கள் பார்வையில் சிநேகம் தெரிவதில்லை. ஒருவித அலட்சியமே காணப்படும். நெரிசலால் அவதானித்து போகும் வாகனங்கள். இல்லை யென்றால். ………………..நம் இந்தியா இவர்களின் கைகளில்தான் தவிக்கப் போகிறது.
சாலை ஓரங்களில் விவேகானந்தரையும், முதல்வரையும் [ஜெயலலிதா] தாங்கிய பதாகைகள். மத நல்லிணக்கக் கூட்டம், பாரத முதல்வராக்க உறுதி எடுப்பு போன்ற வாசகங்கள்.
வட்டாட்சியர் அலுவலக சுற்றுச் சுவரில் கோபமாக விஸ்வரூபக் கமல். அரைகுறை ஆடையில் ஏதோ ஒரு நடிகையின் ஆபாசப் பட போஸ்டர். சிதைவடைந்த பழைய காவல் நிலையம்.
கழிவு நீர் ஓடுவதற்காக வடிவமைக்கப் பட்டிருந்த கால்வாயின் மேல் நிறுத்தப்பட்ட தள்ளுவண்டிகளில் பழக்கடை, காய்கறிக் கடை, வேர்க்கடலை கடை, பூக்கடை….எலந்தை பழம், விளாங்கா, கொய்யாக்கா விற்பனை என்று நீளும் பட்டியல்.
கால்வாயில் ஓடும் கறுப்பு நிறக் கழிவுநீர் போல் அத்தனைக் கருமையாய் கடவுள் சிலைகள் கூட இருக்க வாய்ப் பில்லை. நாற்றமெடுக்கும் அவ்விடத்தில் மனிதர்கள் குந்தி விற்பனை செய்வது எங்ஙனம் ? அவ்விடத்தைக் கடக்கும் போது, குடல் வெம்பி இயல்பாய் கை மூக்கை பொத்தும். நாசி சுளித்து ஒவ்வாமையை வெளிப்படுத்தும்.
வட்டாட்சியர் அலுவலகம்
அதை முன் நின்று நம்மை வரவேற்பது அசோக ஸ்தூபிதான் ! பின் நின்று காந்தி புன்னகைச் சிலையாக வரவேற்பார் ! எது எப்படியோ காந்திக்கு இரும்புக் குடைபோன்று வடிவமைத்திருப்பதால் காக்கை எச்சம் காந்தி தலையில் காணப்பட வில்லை ! நுழையும் போது சற்று மகிழ்ச்சிதான் !
மரங்களில் வாழும் பறவைகளின் எச்சமும், வாகனப் புகைகளின் கண்ணெரிச்சலும் கூட்டமைப்பாக ஆரோக்கியமற்ற வாடை குடி கொண்டிருக்கும் அவ்விடத்தில்.
தரையில் விழும் இலைகளை ஒதுக்கித் தள்ளக் கூடப் பணியாளர் யாரும் இல்லாத அலுவலகம் அது. அலுவலகம் பெருக்க வரும் வாடிக்கை மாது, அன்னக்கிளிக்கு ஊதியம் போதவில்லை என்ற கவலை ! நொல்ல முப்பது ரூவாய்க்கு இம்மாம் பெரிய ஆபிசப் பெருக்கணுமா….? கேள்வியும் புலம்பலுமாக உயர் அதிகாரி யாரேனும் வருவதென்றால் மட்டும் துரித கதியில் அங்குமிங்கும் விளையாடும் விளக்குமாறு அவள் கைகளில்.
தினம் என் அலுவலகப் பயணத்தில் என்னைக் காயப்படுத்தும் சில காட்சிகள் மட்டுமே இவை.
வருங்காலத்தில் என் உலகக் குழந்தைகள் புவியின் உயிர் உணர்வை மதித்து தூய்மை காத்து செயல் பட வேண்டும் என்பது என் மனதின் ஆவல்.
அப்படி நிகழ்ந்து கொண்டிருப்பதான பாவனையில் என் கனவுகள் நிச்சயம் உறுதி பெறும். அதை நான் காணலாம் அல்லது காணும் முன்பே என் உடல் கூடு மண்ணில் புதைந்து போகலாம். ஆனால் என் தினப் பயணப் பதிவுகள் கதை பேசும் ஒவ்வொரு மனங்களிடமும்.
[தொடரும்]
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3
- அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது
- “மணிக்கொடி’ – எனது முன்னுரை
- தொடாதே
- சீதாயணம் நாடகப் படக்கதை – 1 6
- இந்திய விஞ்ஞான மேதைகள் சி. ஜெயபாரதனின் நான்காவது விஞ்ஞான நூல் வெளியீடு
- ”புள்ளும் சிலம்பின காண்”
- தினம் என் பயணங்கள் – 1
- உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு விழா
- தாகூரின் கீதப் பாமாலை – 98 நீ அளித்த கொடை .. !
- கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
- அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2
- திருக்குறளும் தந்தை பெரியாரும்
- படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி
- தூதும், தூதுவிடும் பொருள்களும்
- மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்
- கமலா இந்திரஜித் கதைகள்
- நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!
- முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை
- மருமகளின் மர்மம் – 12
- நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 42
- நீங்காத நினைவுகள் – 30
- திண்ணையின் இலக்கியத் தடம் -18
- ‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
தினம் என் பயணங்கள் தொடர் திண்ணையில் வராது என்று எண்ணியிருந்தேன். இது ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்வனுபவம், தன் ஊடாக பயணிக்கும் சக மனிதர்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு தொடர் இதை பதிவிட்ட திண்ணை ஆசிரியருக்கும், அதற்கு காரணமாய் இருந்து, என்னை அனுதினமும் ஊக்கப்படுத்தும் திரு.ஜெயபாரதன் அவர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
என்ன செய்வது தமிழ்செல்வி? இந்தியாவில் மட்டும் இது போன்ற காட்சிகள் தான் எங்கு சென்றாலும் தென்பட்டு மனத்தை உறுத்திக் கொண்டு முன் நிற்கிறது. “இந்தியாவில்” என்று ஒட்டு மொத்தமாக ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமீப காலமாக நிறைய இடங்கள் சென்று பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். அவசரம்….யாரைப் பார்த்தாலும் இறுகிய முகம். ஏதோ மன அழுத்தம்…இருப்பது போலவே..! சுகாதாரம்….! இது எந்தக் கடையில் விற்கிற புரோட்டா…? என்று கேட்கிற அளவுக்கு அதைப் பற்றிய பிரஞ்கையே இல்லாது மாறிக் கொண்டு வருகிறது. அரசியல் தலைவர்களுக்கு “நீயா….? இல்லை…. நானா…?” என்ற போட்டிக்கே நேரம் போதவில்லை. தோண்டிய ரோடுகள் பல்லாங்குழிகள். ஆயிரம் பேர்கள் நேராக்க நினைத்தாலும்…..நேராக்க முடியுமா ? என்ற சந்தேகம் தான். நாட்டில் எத்தனையோ பண விரயங்கள்…தேவை இல்லாத விடயங்களுக்கு செலவாகிறது. அதை நிறுத்திவிட்டு சிங்கப்பூர் போலவா கேட்கிறோம்….ஏதோ முடிந்த அளவுக்கு ….சுகாதாரத்துக்கு செலவு செய்தால், ஒருவேளை இந்த நிலை மாறுமோ? மக்களிடமும் விழிப்புணர்ச்சி வர வேண்டும். நமது இந்தியாவிலிருந்து ஓட ஓட விரட்ட ஏகப்பட்ட விடயங்கள்….! அப்போது தான் நல்லதெல்லாம் உள்ளே வரும்.
தங்களின் ஊக்கமும், ஆக்கமும். அருமை. தொடருங்கள்.
மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
எல்லாரும்தான் இந்தக் காட்சிகளை பார்க்கிறோம். ஆனால் இப்படிச் சிந்திக்கிறோமா. அருமையான பதிவு நன்றி
Wonderful impressions! Congrats. Keep providing us with your rich observations.
best wishes,
அன்பின் தமிழ்ச்செல்வி,
வாழ்த்துகள். நல்லதொரு ஆரம்பம். தொடருங்கள் தோழி, தொடர்கிறோம்.
அன்புடன்
பவள சங்கரி
பொதுவாக,கதை கவிதைகளை நான் கண்டு கொள்வதில்லை.ஒரு தனி மனிதனின் சிந்தனையோட்டம் கொஞ்சம் உண்மை, நிரம்பி வழியும் கற்பனை.அன்றாட உண்மை நிகழ்வுகள் எழுத்துக்களானால் அதன் வீச்சு அனைவரையும் ஈர்க்கும்.என்னையும்.கட்டுரை நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள் சுற்றி உள்ள சமூகத்தை கிட்ட இருந்து நாங்களும் பார்த்து மாற முயற்சிக்கிறோம்.
//சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து.//
உண்மைதான் சகோதரி.ஆனால் வாழ்க்கையை ஒவ்வொருவரும் அவர்களாக கேட்டு வாங்கி வரவில்லை.இறைவன் அவரவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தில் உலக மேடையில் நடித்துக்கொண்டிருக்கிறோம். எம் மனிதனும் முழுமையாக இங்கு வரவில்லை.ஆளாளுக்கு ஆயிரம் குறை.மாற்றுத் திறனாளிகளுக்கு உறுப்பு இல்லாத குறை.எல்லாம் உள்ள மனிதன் கவலையில் ஆழ்ந்து நிம்மதி இழந்து நடைபிணமாக உள்ளான்.சுய இரக்கத்தை இடித்து தள்ளுங்கள்.”எனக்கும் கீழே உள்ளவர் கோடி என்று…” என்று நினைத்து உலகத்தைப் பார்த்தால் பிற மக்களைப்பார்க்கும் போது புன்னகை மட்டுமல்ல புத்துணர்சசியும் கூட வரும். உங்கள் முக மகிழ்ச்சி,எல்லாம் உள்ள நடைபிணங்களை உயிர்த்தெழ செய்யட்டும்.
ஒரு வரலாற்று சம்பவத்தை கூறுகிறேன்.
இஸ்லாமிய பேரரசின் இரண்டாவது ஜனாதிபதி உமர் பின் கத்தாப் அவர்கள்,தன் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளை பார்த்துவர புறப்பட்டார்கள். சிரியா நாட்டுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் பயணம் செய்தபோது,அங்கு ரோட்டு ஓரத்தில் ஒரு கை,கால் அழுகிய நிலையில் ஒரு குஷ்டரோகி படுத்துக்கிடந்தார். ஜனாதிபதியுடன் கூட வந்த ஒருமனிதர்,”ஜனாதிபதி அவர்களே! இந்த மனிதனுக்கு இறைவன் ஒரு அருட்கொடைகளையும் கொடுக்க வில்லையே!” என்று அனுதாபத்துடன் கூறினார்.அதற்க்கு கலீபா உமர் அவர்கள, ”இந்த மனிதருக்கு சாப்பாடு சாப்பிட்டு சிறுநீர், மலம் எல்லாம் நல்லமுறையில் கழிகிறதா?” என்று கேட்டார்கள். “அதிலெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை,நல்லமுறையில் கழிகிறது” என்று அங்குள்ளவர்கள் கூறினர்.உடனே உமர் கூறினார், “ இந்த ஒரு அருட்கொடைக்கே இந்த மனிதன் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.” நாம் எங்கே இருக்கின்றோம்? குஷ்டரோகி நிலையிலா?
உலகம் ஒளி மயமே! உள்ளம்தான் இருள் மயமே!
அந்த ஒளியும் இருளும் அந்த இறைவன்
அருள் மயமே!
ஒரு பாடல்.இந்த பாடல் ஒவ்வொரு உள்ளங்களிலும் உறுதியானால்,உலகில் குறை உள்ளவர் எவருமே இல்லை.நிறைவான மகிழ்ச்சியே எவருக்கும்.
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
தவழும் நிலவாம் தங்க ரதம்
தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்.
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்.
It is good writing. India need changes.
Last December ,traveled with my wife from Nagarcoil to thene, but difficult to find proper toilet facility for her and she abstained from drinking water for many hours. It is not the money or lack of money, just attitude.
அன்புள்ள,
கருத்துரையிட்ட நண்பர்கள், ஜெயஸ்ரீ சங்கர்,ameethaammaal,Arun Narayanan,பவள சங்கரி,ஷாலி, மற்றும் nadesan ஆகிய அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். வேலை பளுவின் நிமித்தம் உடன் பதில் தரமுடியாமையால் மிகவும் வருந்துகிறேன்.
நட்புடன்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி