நீங்காத நினைவுகள் – 30

This entry is part 6 of 27 in the series 19 ஜனவரி 2014

ஆழ்ந்து யோசிக்காமல் ஒருவர் செயல்படும் போது தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. தவறுகள் நேர்வதோடு மட்டுமல்லாமல், அவர் தப்பாகப் புரிந்து கொள்ளப்படுவதும் நேர்ந்து விடுகிறது என்பதற்குக் கீழ்வரும் நிகழ்வு ஓர் உதாரணம்.

பல்லாண்டுகளுக்கு முன்னால், தமிழகத்தின் மூத்த வார இதழ் ஒன்று ஒரு பக்கக் குட்டிக்கதைகளை வரவேற்றுப் பரிசுத் திட்டம் ஒன்றை அறிவித்தது.  ஏற்கப்படும் அனைத்துக் கதைகளும் வெளிவந்த பிறகு. அவற்றுள் சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப் படும் சில கதைகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, முன்றாம் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவ்வறிவிப்புக் கூறியது. அதில் கலந்து கொண்டு நான் அனுப்பிய் மூன்று குட்டிக்கதைகள் வெளியாயின.  ஆனால் பரிசுக்குரியதாக அதில் எதுவும்  தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அப்போட்டிக்கு நான் அனுப்பியிருந்த ஒரு குட்டிக்கதை பிரசுரத்துக்குக் கூட ஏற்கப்படாமல் திருப்பி யனுப்பப்பட்டது. “நீ எல்லாம் ஒரு கம்யூனிஸ்டு!” என்பது அதன் தலைப்பாகும். தொழிலாளிகளின் அளவுக்கு மீறிய வேலைச்சுமையையும், அதைக் கண்டுகொள்ளாமல் வேலை வாங்கும் இரக்கமற்ற முதலாளிகளையும் சுட்டிக்காட்டக் கூட்ட்ங்கள் போட்டுக் கூச்சலிடும் பொது உடைமைவாதிகள் தங்கள் குடும்பத்துப் பெண்கள் ஓய்வு இன்றி உழைத்துக்கொண்டிருப்பது பற்றிச் சிறிதும் கவலைப்படாமலும், அவர்களின் வேலைச் சுமையைச் சிறிதளவேனும் குறைப்பதற்கு அதில் கடுகளவுப் பங்கும் ஏற்காமலும் இருப்பதோடு மட்டுமின்றி, அவர்களை 24 மணி நேரப்பணிப் பெண்ணாய்க் கருதும் மகாராஜாக்களைப் போல் – காப்பி குடித்த கோப்பையை  எடுத்து வந்து தொட்டிமுற்றத்தில் போடக்கூடச் செய்யாது  – இரக்கமற்ற சோம்பேறிகளாக இயங்கி வருவது பற்றியும் சுட்டிக்காட்டும் கதை அது.

அந்தக் குட்டிக் கதை திரும்பி வந்ததும், அதற்கு வலுவூட்டும் வண்ணம் மேலும் சில நிகழ்வுகளையும் உரையாடல்களையும் சேர்த்து அதை விரிவுபடுத்தி நீண்ட சிறுகதையாக்கினேன்.

இதற்கிடையே நான் எழுதிய சர்ச்சைக்குரிய வேறொரு சிறுகதையைச் சில வார இதழ்கள் திருப்பியனுப்பியிருந்தன. சமுதாயத்தில் நிலவி வந்த – இப்போதும் நிலவி வரும் – ஒரு தலைப்பில் அமைந்த அந்தக் கதையைக் கம்யூனிஸ்டுகள் வெளியிட்டு வந்த மாத இதழ் ஒன்றுக்கு நம்பிக்கையுடன் அனுப்பிவைத்தேன். ஆனால், வழக்கமான பரிசீலனைக்கு உரிய காலத்துக்குப் பிறகு அதை அவர்களும் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.  ஆனால், அத்துடன் ஒரு கடிதமும் வைத்திருந்தார்கள். பொதுவாய்க் கதைகளைத் திருப்பி அனுப்புகையில் ஆசிரியர் குழுவினர் ஓர் அச்சடித்த துண்டு நிராகரிப்புக் கடிதம் வைப்பார்களே தவிர, அதை ஏன் வெளியிட இயலவில்லை என்பதற்கான காரணங்களை விவரித்துக் கடிதம் எழுதி உடன்வைக்க மாட்டார்கள். கதையில்  தேவையற்ற சில நிகழ்புகளும் அவை சார்ந்த உரையாடல்களும் இருப்பதால் கதை நீண்டு விட்டதாகவும், எனவே – எடுத்துக்கொண்ட விஷயம் பிடித்து இருப்பினும் – அது நீளமாக இருக்கும் காரணத்தால் அதை வெளியிட இயலவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்விதழின் தலையாய உதவி ஆசிரியர்களுள் ஒருவர் அதில் கையெழுத்திட்டிருந்தார்.

அவர்களுக்குக் கீழ்க்கண்ட முறையில் ஒரு கடிதம் எழுதினேன்:

’பொதுவாய்ப் பத்திரிகை ஆசிரியர்கள் கதையைத் திருப்பி யனுப்புவார்களே தவிர, அத்துடன்  அது நிராகரிப்பட்டதற்கான காரணங்களை எழுத்தாளருக்குத் தெரிவித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மெனக்கெட்டுக் கடிதமும் எழுதி உடன் வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

ஆனால், தேவையற்றவை என்று கருதியவற்றை நீக்கிவிட்டு நீங்கள் அதை வெளியிட்டிருந்திருக்கலாமே. பரவாயில்லை.  வேறு ஏதேனும் இதழுக்கு அனுப்பிப் பார்க்கிறேன்.’ – இவாறு எழுதியதோடு நான் நிறுத்தியிருந்திருக்க வேண்டும். துளியும் யோசிக்காமால் (அசட்டு) வேலை ஒன்றைச் செய்துவிட்டேன். கடிதத்தின் முடிவில், ‘இத்துடன் “நீ எல்லாம் ஒரு கம்யூனிஸ்டு” எனும் சிறுகதையை உங்கள் பரிசீலனைக்கு அனுப்புகிறேன்.’ என்றெழுதி, அந்தக் கதையையும் கடிதத்தோடு அவர்களுக்கு அனுப்பிவைத்தேன்.

பொது உடைமைவாதிகளைக் குறை கூறும் கதையாக அது இருந்த போதிலும், அவர்கள் நடத்திக்கொண்டிருந்த இதழ் எதற்கும் அனுப்பாமல், அதை நிறைய எண்ணிக்கையில் விற்பனையாகும் பிரபல இதழ்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்ததற்குக் காரணம் அது கம்யூனிஸ்டுகளுக்கான செய்தியாக மட்டும் இல்லாமல், பொதுவாக எல்லா ஆண்களுக்குமான செய்தியாக இருந்தது என்பதால் அது பலரையும் சென்றடையுமே என்பதுதான்  ஆனால் அவை அதை வெளியிடா வென்று இப்போது தெரிந்ததால், அதைப் பொது உடைமைவாதிகளின் அந்த இதழுக்கு அனுப்பினேன்.

கொஞ்சமும் யோசிக்காமல் அதை அவர்களுக்கு அனுப்பியது தவறாகிவிட்டது.  அதாவது, நேரம், காலம் பற்றிச் சிந்திக்காமல் செய்த அசட்டு வேலை யாயிற்று. ஒன்று, சில நாள் முன்பே அதை அனுப்பியிருந்தாலும், அல்லது அதன் பிறகு வேறு சில கதைகளை அவர்களுக்கு அனுப்பிய பின் சில மாதங்கள் போல் இடைவெளிவிட்ட பின்னர் அதை அனுப்பியிருந்தாலும் அவர்கள் என்னைத் தப்பாகப் புரிந்துகொண்டிருந்திருக்க வாய்ப்பில்லை. சில நாள் பரிசீலனையில் இருந்திருக்க வேண்டிய அது மறு தபாலில் திரும்பிவிட்டதும பிறகு தான் எனக்கு எனது அசட்டுத்தனம் விளங்கியது. சர்ச்சைக்குரிய கதையை அவர்கள் திருப்பி அனுப்பியதால் எனக்கு ஏற்பட்ட எரிச்சலில்,  “நீயெல்லாம் ஒரு கம்யூனிஸ்ட்!” என்கிற தலைப்பில் ஒரு கதையை எழுதி அனுப்பிவிட்டதாய் அவர்கள் நினைத்துவிட்டார்கள் என்பது புரிந்தது. அது மட்டுமின்றி அக்கதையின் நாயகனின் பெயரில் பாதி நிராகரிப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த – எனக்கு அறிமுகமான – உதவி ஆசிரியரின் பெயரில் பாதியாக இருந்துதொலைத்தது! இந்தக் கொடுமையை என்ன சொல்ல! இது தற்செயலானது, வேண்டுமென்று அப்பாத்திரத்துக்குக் கிசுகிசுப் பாணியில் அப்படிப் பெயர் வைக்கவில்லை என்று சொன்னால் யார் நம்புவார்கள்? அப்படி ஒரு பெயரை அந்தக் கதையின் நாயகனுக்குச் சூட்டி அவ்வுதவியாசிரியரை நான் மறைமுகமாய்த் தாக்கிக் கிண்டல் செய்து விட்டதாக அவர் நினைத்து விட்டது என் தீவினைப் பயனயல்லாது வேறேன்ன? எனவே  உடனுக்குடனாய் அதை அனுப்பிய மடமையை நொந்துகொள்ளுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

எனினும் என் மீது மரியாதை வைத்திருந்த அவ்வுதவி ஆசிரியருக்குக் கீழ்க்காணும் முறையில் ஒரு தன்விளக்கக் கடிதம் எழுதினேன்.

“இந்தக் கதை பல ஆண்டுகளூக்கு முன்னால் ஆனந்த விகடன் வைத்த குட்டிக் கதைகளுக்கான போட்டியில் கலந்துகொண்ட ஒன்றாகும். பின்னர் அதை விரிவுபடுத்திப் பெரிதாக்கி வேறு சில வார இதழ்களுக்கு அனுப்பினேன். அவர்களும் அதை ஏற்கவில்லை. அண்மையில், சர்ச்சைக்குரிய என் பிறிதொரு கதையை நீங்கள் திருப்பியனுப்பிய பிறகு, அதையும் உங்களுக்கு அனுப்பினேன். அது மறு தபாலில் திரும்பியதும்தான் யோசிக்காமல் நான் செய்த காரியம் எனக்குப் புரிந்தது. உங்கள் மனநிலையும்  புரிந்தது. சில நாள் முன்பே அதை நான் உங்களுக்கு அனுப்பியிருந்திருப்பின், என்னை நீங்கள் தப்பாகப் புரிந்துகொண்டிருந்திருக்க மாட்டீர்கள். இது என் துரதிருஷ்டமே. சர்ச்சைக்குரிய கதையை நீங்கள் திருப்பி யனுப்பிய கோபத்தில்,  “நீயெல்லாம் ஒரு கம்யூனிஸ்ட்” என்று புதிதாய் ஒரு கதையை எழுதி யனுப்பவில்லை. சத்தியமாக் அதன் பிறகு அதை எழுதவில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல், பல நாள் முன்பு ஆனந்த விகடன் வைத்த குட்டிக் கதைப் போட்டியில் கலந்து கொண்ட கதை அது. இந்த விவரத்தை ஆனந்த விகடனில் அடிக்கடி எழுதும் நீங்களே அவர்களிடம் கேட்டுத் தெளியலாம்.  ஏனெனில் அவர்கள் விகடனுக்கு வருகிற கதைகளையெல்லாம் தேதி போட்டுப் பதிவு செய்கிறார்கள். திருப்பும் நாளையும் எழுதி வைக்கிறார்கள்.

பின்னர், அதை விரிவு படுத்தி நான் எழுதியதைச் சிலர் திருப்பிவிட்டார்கள். அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்த அதை உங்களுக்கு இப்போது அனுப்பி வைத்தேன். சமய சந்தர்ப்பம் பாராமல் இப்போது அதை அனுப்பியதுதான் தவறாகிவிட்டது.

எனவே ஆனந்த விகடனுடன் பேசி நீங்கள்                                                                   உண்மையை அறியலாம். அறிந்த பின்  “உங்களைத் தவறாக நினைக்கவில்லை.  நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்” என்று எனக்கு எழுதினால், என் மனம் அமைதியடையும்.”  – இக்கடிதத்துடன் ஆனந்த விகடனுக்கு  அதை அனுப்பிய தேதி, பிறவற்றுக்கு அனுப்பிய தேதிகள் ஆகியவற்றையும் அவருக்குத் தெரிவித்தேன். (இக் கடிதத்தின் நகல் என்னிடம் உள்ளது.  ஆனால், தேட முடியவில்லை. கடித வாசகம் மாறியிருக்கலாம்.  ஆனால் சொன்ன விஷயம் இதுதான்.)

அவர் எனக்குப் பதில் எழுதவில்லை.  மீண்டும் என் அமைதியின்மையைக் குறிப்பிட்டும், அது புதிதாக எழுதியதன்று என்று எடுத்துக் காட்டியும் நான் எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை.  என்னை அவர் நம்பவில்லை என்று தோன்றியது. அதன் பிறகு அவருக்கு நான் கடிதம் எழுதவில்லை. எனினும், இன்றளவும் என்னை வருத்திக்கொண்டிருக்கும் விஷயம் இது.

சில நேரங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது. நம்மை நாமே நொந்துகொள்ளுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

………

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

3 Comments

 1. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் கிரிஜாம்மா,

  அனுபவம் மிகவும் யதார்த்தமாக இருந்தது.”ஒரு வரி”க்கு இருக்கும் கனம் தெரிகிறது.

  நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிக்க சரி. அவசரத்தில் பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் செய்யும் எந்த தவறுக்கும் நிதானத்தில் நினைத்து மனம் வருந்த வேண்டியிருக்கும் வாய்ப்பு அதிகமாவது நிஜம்.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்

 2. Avatar
  ameethaammaal says:

  இப்படித் தப்பாக நினைப்பவர்களை நீங்கள் சமாதானப்படுத்த முயற்சித்தது தேவையில்லை என்றே தோன்றுகிறது. உங்கள் நோக்கத்தில் தவறில்லை. நீங்கள் இத்தனை தூரம் இறங்கி வந்து எழுதியது கொஞ்சம் உறுத்துகிறதம்மா

 3. Avatar
  IIM Ganapathi Raman says:

  இலக்கியம் எதார்த்தங்களை அடிப்படைகருக்களாக வைத்து புனையப்படுகிறது. புனைவை நேரடியாகச் சொல்லிவிட்டால் அது டாகுமென்ட்ரி அல்லது குறும்படம் போலத்தான். இலக்கியம் கிடையாது.

  சிறுகதைகளின் தலைப்புக்களும் நேரடியாகச் சொல்லும் போது, சுவாராசியம் போய் அலுப்பு வரும். அப்படி நேரடியாகச் சொல்லும் தலைப்புக்கள் ‘நீயெல்லாம் ஒரு கம்யூனிஸ்டு!” என்றிருக்கும்போது, இது புனைவா, இலக்கியமா அல்லது இலக்கியத்தின் ஊடாக அரசியல் பிரச்சாரமா? என்ற கேள்விகள் எழும்.

  புத்தக விழாவில் நான் வாங்கிய நூல்களில் ஒன்று ‘தாமரை’ இதழார் வெளியிட்டச் சிறந்த தாமரைச் சிறுகதைகள் தொகுப்பொன்று. அதிலொரு கதை:

  ஒருவன் கட்ட வேண்டிய பணத்தை வழியில் தொலையவிட்டுவிடுகிறான். அப்பணத்தைக் கட்டாவிடில் பேரிடியை அக்குடும்பம் சந்திக்க வேண்டும். பணத்திற்காக பலரையும் கட்ன் கேட்க ஏமாற்றம்தான். ஒவ்வொருவரும் கண்ணியமாக நிராகரிக்கிறார்கள்; சிலர் க்ந்துவட்டிக்குத் தருகிறோம் என்றார்கள். அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கூலித்தொழிலாளிப் பெண்ணிடம் அவர்கள் பணம் கேட்கவில்லை. ஆனால் பேச்சினில் பணம் தொலைந்ததையும் அதன் பிரச்சினைகளையும் அத்தம்பதியினர் சொல்லக்கேட்டு அப்பெண் தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை முந்தானை முடிச்சிலிருந்து பிரித்து உடனே கொடுக்கிறாள். திருப்பித்தருவதைப்பற்றி இப்போது பேசவேண்டாம்; எப்போது முடியுமோ அப்போது தாருங்கள் என்கிறாள். கதை முடிகிறது.

  சொல்லவரும் நீதி: அடித்தட்டு மக்கள் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. அவர்கள் இரக்க சுபாவமுள்ளவர்கள். ‘தாமரை’ கம்யூனிஸ்டு இதழ். இப்படிப்பட்ட பாட்டாளிவர்க்கத்தைத் தூக்கிபிடித்து பூஜவாக்களை இகழ்வது அவர்கள் பழக்கம்.

  இக்கதையில் என்ன பிரச்சினை? தலைப்புதான்: ‘பணம் கொடுத்த பெண்” கதை நான்கு பக்கங்கள். முதல்பக்கத்திலேயே தெரிந்துவிடுகிறது ஆசிரியர் எங்கே போகிறாரென்பது. அதை தலைப்ப்லேயே வெளிபபடுத்திவிட கதை படுத்துவிடுகிறது சுவாரசியத்தில்.

  ஆக, தலைப்புக்கள், வாசகரை ஈர்க்கவும், விரட்டவும் செய்யும். ‘நீயெல்லாம் ஒரு கம்யூன்ஸ்டா? என்ற தலைப்பு ஜோதிர்லதா கிரிஜாவின் நண்பரைக்கூட விரட்டியது மட்டுமன்று; என்னையும் முகஞ்சுழிக்க வைக்கிறது. நான் கம்யூனிஸ்டு இல்லை :-)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *