மருமகளின் மர்மம் – 12

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

‘டெலிகிராம்’ என்று பொய்க் குரலில் அறிவித்துவிட்டு, தான் கதவைத் திறந்ததும்  நொடிப் பொழுதுக்குள் உள்ளே பாய்ந்து கதவைத் தாளிட்டுவிட்டு அதன் மீது சாய்ந்தவாறு நின்று தன்னைப் பார்த்து வெற்றிப் பெருமிதத்துடனும் நக்கலாகவும் இளித்த அர்ஜுனைப் பார்த்ததும் சகுந்தலா வெலவெலத்துப் போனாள். ஆயினும் மறு கணமே தனது மன நிலை அவனுக்குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாகி அவனை ஆத்திரத்துடன் பார்த்தாள்.

‘சாரி, சக்கு! குரலை மாத்திக்கிட்டு டெலிக்ராம்னு சொன்னதுக்கு!’

‘இந்தா! சக்குன்னு என்னைக் கூப்பிடாதேன்னு எத்தினி வாட்டி உனக்குச் சொல்லியிருக்கேன்? சூடு சொரணை இருக்கா இல்லியா?  நீ என்ன எனக்கு மாமனா, மச்சானா?’

‘சாரி, சகுந்தலா மேடம்!  மறந்து மறந்து போகுது. சகுந்தலாங்கிற பேருள்ளவங்களை அவங்க வீட்டில சுருக்கமா ‘சக்கு’ன்னு கூப்பிட்றது உண்டுதானே?’
‘உண்டுதான். ஆனா அந்து உரிமை என் புருஷனுக்கு மட்டுந்தான்.’

‘அவன் தான் போயிட்டானே?’

‘இந்தா! அவன் இவன்னெல்லாம் மரியாதை இல்லாம பேசாதே.’

‘சரி,சரி. வந்ததும் வராததுமா நமக்குள்ளே எதுக்கு சண்டை? உக்காரச் சொல்ல மாட்டியா?’

‘இனிமே உன்னை மாதிரி ஆளுங்களோட சங்காத்தமே வேணாம்னு நான் தான் ஒதுங்கிட்டேனில்ல? எதுக்கு இப்படி வந்து வந்து கழுத்தறுக்குறே?’

‘ஒரு அஞ்சாயிரம் குடு. அதுக்கு அப்புறம் தலை காட்ட மாட்டேன்.’

‘அஞ்சு நயா பைசா கூட இல்லே இப்ப எங்கிட்ட. போனதரம், ‘இதுதான் கடைசி. இனிமே வர மாட்டேன்’ னு சொல்லி அஞ்சாயிரம் வாங்கிட்டுப் போனே இல்லே?’

‘அதை விட்டுடு, சக்கு! சாரி, சாரி. சகுந்தலா மேடம். இதுதான் நிஜம்மா கட்டக் கடோசி!’

‘சரி. இதுதான் கடைசி. இனி நீ இங்க வரவே கூடாது. அப்படி உக்காரு.’

அவன் வெற்றிப் புன்சிரிப்புடன் நாற்காலி ஒன்றில் சட்டமாக உட்கார்ந்துகொண்டான். உள்ளே போன சகுந்தலா மூன்றாம் நிமிடம் திரும்பி வந்தாள். ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ? கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடிப் பேசும் விந்தை தானோ!’ என்று பழைய திரைப்படப் பாடலை  முணுமுணுப்பாய்ப் பாடிக்கொண்டிருந்த அவன் திரும்பினான். அவள் தனது கைப்பையிலிருந்து எடுத்தது பளபளவென்று காணப்பட்ட கைத் துப்பாக்கி. அதன் குதிரையை அவளது விரல் வளைத்துப் பிடித்துக்கொண்டிருந்தது. கண்களில் குரூரம் கூத்தாடியது.

‘கண்ணெல்லாம் இனி பேசாது, அர்ஜுன்! இனி என்னோட ‘கன்’ (gun)  தான் பேசும். உன்னோட உள்ளமும் இனித் துள்ளாது! குண்டு துளைச்சதும் உன்னோட உடம்புதான் துள்ளும்!’

அவளது கண்களில் தெறித்த ஆத்திரமும் குரலில் ஒலித்த ஆவேசமும் அவள் விளையாட்டுக்காக அப்படிச் சொல்லவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தின. அவனது முகம் செம்மை இழந்தது.

‘கை ரெண்டையும் மேலே தூக்கு.’
அவன் அப்படியே செய்தான்.

‘சினிமாவில வர்ற மாதிரி சடார்னு பாய்ஞ்சு கைத்துப்பாக்கியைப் பிடுங்கிடலாம்னு கனவு கூடக் காணாதே. நான் சொல்லப் போற அசைவுகளை மட்டுந்தான் நீ இப்ப செய்யணும். மாறுதலா ஒரு அங்குலம் அசைஞ்சாலும் நான் ட்ரிக்கரை அழுத்திடுவேன். நான் துணிஞ்சுட்டேன், அர்ஜுன்! மரண தண்டனை யெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லே. இன்னொண்ணும் கேட்டுக்க. ஷைலஜா ஒரு காபரே ஆட்டக்காரியான என்னோட மகள்ங்கிறதை நேத்து அவளோட புருஷன் வீட்டுக்காரங்க கிட்ட நானே சொல்லிட்டேன். தங்கமான மனுஷங்க. அதை ஒரு இழுக்காகவே அவங்க நினைக்கல்லே. அதனால என்ன ப்ளான் பண்ணலாம்னு யோசிக்கிறதை நிறுத்து. நான் சொல்ற வரைக்கும் அப்படியே இரு.’

அர்ஜுனின் முகம் வெளிறி யிருந்ததே தவிர, ‘என்ன செய்து இவளை வீழ்த்தலாம்?’ என்று அவன் யோசிக்கலானான்.

..  ..  .. ‘நாளைக்கு நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியாச் சந்திக்கலாமா?’ – – லூசியின் ஆர்வம் வழிந்த விழிகள் ரமேஷைப் பாதிக்கவே செய்தன. ஒரு பெண்ணே இப்படி வெளிப்படையாகப் பேசுகையில், அவளுடன் போய் என்னதான் அவளது நோக்கம் என்று பார்க்கலாமே என்னும் ஆவல் அவனுள் கிளர்ந்த தென்னவோ உண்மைதான். ஆனால் மறு விநாடியே, சோமசேகரனின் குரல் ‘ப்ளெய்ன்லி, நோ செக்ஸ்’ என்று அவன் செவிகளுள் இரைந்து ஒலித்தது. ‘லூசியின் அழைப்பு  ஒருகால் சாதாரணமானதாகவே இருக்கலாம். ஆனால், தப்புச் செய்யாமல் தாக்குப் பிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வது’ எனும் அச்சமும் அவனுள் கிளர்ந்தது. அவன் தலையை உதறிக்கொண்டான். அவளது அழைப்பை ஆதாயப் படுத்திக்கொள்ள வேண்டாம் எனும் முடிவுக்கு வந்தான். எனவே,  ரமேஷ் அவளுக்குப் பதிலே சொல்லாமல் இருப்பது என்று முடிவு செய்தான் –  அவள் மறுபடியும் அது பற்றிப் பேசினாலொழிய.

லூசியின் ஆழமான பார்வையைத் தவிர்த்து அவன் எங்கோ பார்த்தான். அவள் புரிந்துகொண்டிருந்திருக்க வேண்டும். மறுபடியும் அது பற்றி அவள் பேசவே இல்லை. இன்று நினைத்துப் பார்க்கையில் அவனுக்குப் புரிந்தது – தன்னை உள்ளபடி வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாமென அவனது மவுனத்தால் அவள் உடனே செய்த முடிவு அதுவென்று.

..  ..  .. கடைசியில் லூசி அவனிடமிருந்து பிரியா விடை பெற்றுச் சென்றாள். வழியனுப்ப செண்ட்ரலுக்கு அவன் வர வேண்டாமென்று சொல்லிவிட்டாள். ‘அந்தத் தடியன்’ தன் அம்மாவுடன் வரக்கூடுமென்று தான் அஞ்சுவதாய் அதற்கு அவள் காரணம் கூறினாள். தன் தாயை அவன் சந்திப்பதை அவள் தவிர்க்கப் பார்க்கிறாளோ எனும் ஐயம் அப்போது முதன் முறையாக அவனுள் கிளர்ந்தது. ‘இருக்காது’ என்று சொல்லிச் சமாதானப் படுத்திக்கொண்டான்.

மும்பைக்குச் சென்ற மறு நாளே அவள் அவனுடன் தொலை பேசினாள். வாரம் ஒரு தரம் என்று முறை  போட்டுப் பேசிக்கொண்டார்கள். அவள் திங்களன்றும், அவன் வெள்ளியன்றும் பேசவெண்டும் என்பதாய். அது மட்டுமின்றி, ஒவ்வொரு திங்களன்றும் அவள் அவனுக்குக் கடிதம் எழுதுவாள். மறு திங்களில் அவன் அவளுக்குப் பதில் எழுதுவான். கடிதம் எழுதுவதில் லூசி ‘தாராளமாகவே’ சொற்களை உபயோகித்தாள். பதிலுக்கு அவனும் எழுத வேண்டியதாயிற்று. இதனால் அவர்களிடையே நடந்த கடிதப் போக்குவரத்து ஒரு ‘காதல் காவியம்’ ஆயிற்று.

சரியாக ஆறு மாதங்கள் கழித்து அவளிடமிருந்து அவனுக்குக் கடிதம் வருவது நின்றது. வழக்கப்படி தொலைபேசியில் அவளுடன் தொடர்புகொள்ள அவன் முயன்றபோதெல்லாம் அவள் விடுப்பில் இருப்பதாய்ச் சொல்லப்பட்டது. நான்கு தடவைகள் அதே பதில் சொல்லப்பட்டது. ஆனால் ‘என்று வரை’ போன்ற எந்த விவரமும் அவன் வினவியும் அவனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ‘தெரியாது’ என்னும் ஒற்றைச் சொல்லே அவனுக்குப் பதிலாய்ச் சொல்லப் பெற்றது. அவன் விடுப்புக்கான காரணம் கேட்டபோது, அதற்கும் ‘தெரியாது’  எனும் பதிலே கிடைத்தது. இரண்டு மாதங்கள் போல் இவ்வாறு கழிந்துவிட்டன.

கடைசியாக ஒரு முறை அவன் முயன்ற போது, பதில் சொன்ன பெண், ‘ஒரு நிமிஷம்!’ என்று சொல்லிவிட்டு, ‘லூசி! உனக்கு •போன் கால்!’ என்றாள். அவளது அழைப்பு அவன் செவிகளில் சன்னமாக – ஆயினும் தெளிவாக – விழுந்தது. ‘மெட்ராசிலிருந்து யாரோ ரமேஷாம்!’ என்று அந்தப் பெண் பதில் சொன்னதிலிருந்து, லூசியே, ‘யார்’ என்று கேட்டிருந்திருக்க வெண்டும் என்று அவன் ஊகித்தான்.
சில நொடிகள் கழித்து, ‘சாரி, மிஸ்டர்! லூசி பக்கத்து அறையில் இருக்கிறாள் என்று நினைத்துக் கூப்பிடுவதாய்ச் சொல்லிவிட்டேன். நான் ஒரு வாரமாக விடுப்பில் இருக்கிறேன். அதனால் நேற்று லூசி டூர் போன விஷயம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை,’ என்றாள் அந்தப் பெண். ‘பின், மெட்ராசிலிருந்து ரமேஷ் என்று சொன்னீர்களே?’ என்று அவன் விடாப்பிடியாய் வினவினான். ‘அவளது இடத்தில் வேலை செய்யும் பெண் கேட்டாள், சொன்னேன். டூரிலிருந்து திரும்பியதும் லூசிக்குச் சொல்ல வேண்டுமல்லவா? அதற்காக அவள்தான் யார் என்று கேட்டாள்,’ என்று அந்தப் பெண் விளக்கினாள். ஆனால் அப்படிச் சொன்ன போது அவள் குரலில் தெறித்த நையாண்டி  அவள் பேசியது உண்மையன்று என்பதை அவனுக்கு உணர்த்தியது. ரமேஷ் ஏமாற்றத்துடனும் குழப்பத்துடனும் தொடர்பைத் துண்டித்தான். அவள் சொன்ன விளக்கம் சரியானதாகப் பட்டாலும், ஏதோ தப்பு நடந்துகொண்டிருந்ததாயும் அவனுக்குத் தோன்றியது. ‘ஏன் ஒரு மாதிரிரியாக இருக்கிறாய்’ என்று அவன் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி கேட்டார்கள். அவ்வாறு அவர்கள் கேட்ட போதெல்லாம் எப்போதும் போல்தான் இருப்பதாய் அவன் பொய் சொன்னான். மேலும் ஒருவாரம் போல் ஓடிவிட்ட பிறகு, ரமேஷ் மும்பைக்கு ஒரு நடை நேரில் சென்று என்ன, ஏது என்று பார்த்துவரத் துடித்தான்.

அவ்வாறு முடிவு செய்ததற்கு மறு நாள், ‘ அப்பா! நான் பாம்பேக்கு ஒரு தரம் போயிட்டு வரலாம்னு இருக்கேன். லூசிகிட்டேருந்து எந்தத் தகவலும் இல்லே. கவலையா யிருக்கு,’ என்று சோமசேகரனிடம் அவன் தெரிவித்த போது, ‘அநாவசியமா அலையாதே, ரமேஷ்! கடவுள் நம்ம பக்கம் இருந்திருக்காரு. தாராவியிலே இருக்கிற உன்னோட மாமாவுக்கு அவளோட ஆ•பீஸ் அட்ரெஸ் குடுத்து ஏற்கெனவே அவளைப் பத்தி விசாரிக்கச் சொல்லில் எழுதினேன், ரமேஷ்!’ என்று சோமசேகரன் பதில் சொன்னார்.

‘எப்பப்பா எழுதினீங்க?’ என்று ரமேஷ் பிளந்த வாயுடன் கேட்டான். ‘கடவுள் நம்ம பக்கம் இருந்திருக்காரு’ என்பதன் பொருள் புரியாத குழப்பம் அவன் முகத்தைக் களை யிழக்கச் செய்திருந்தது.

‘அவளைக் கூட்டிடு வந்தே இல்லே? அதுக்கு ரெண்டு நாள் கழிச்சு எழுதினேன்.  உங்க மாமா  போலீஸ் டிபார்ட்மெண்ட்லே இருக்கிறதால, எல்லா விவரங்களும் சுலபமாக் கிடைச்சுது.’

‘என்ன விவரங்கள்ப்பா கிடைச்சுது? நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க இருக்கிறதா மாமாகிட்ட சொன்னீங்களாப்பா?’

‘நான் முட்டாள் இல்லே, ரமேஷ்! ‘எனக்குத் தெரிஞ்ச கிறிஸ்டியன் குடும்பத்துல அந்தப் பொண்ணு எப்படி, ஏதுன்னு விசாரிக்கச் சொல்லியிருக்காங்க. நீ கொஞ்சம் கண்காணிச்சுச் சொல்லு’ அப்படின்னு எழுதி போட்டேம்ப்பா. நேத்துதான்  உங்க மாமா கிட்டேர்ந்து எனக்கு எல்லா விவரமும் கிடைச்சுது.’

ரமேஷின் இதயம் தடதடத்துக் கொண்டிருந்தது. பார்வை மட்டும் வியப்புடன் சோமசேகரன் மீது பதிந்திருந்தது.

‘ரமேஷ்!’

‘சொல்லுங்கப்பா.’

‘உங்கம்மா தூங்கிட்டாளா?’
‘அப்பவே தூங்கிட்டாங்க.’

‘இருந்தாலும், கதவைச் சாத்தித் தாப்பாப் போட்டுட்டு இப்படி வந்து உக்காரு.’ – அவன் அப்படியே செய்துவிட்டு அவருக்குப் பக்கத்தில் கட்டிலில் அமர்ந்துகொண்டான்.

‘கடவுள் நம்ம பக்கம் இருக்கார்னு சொன்னீங்களேப்பா? அதுக்கு என்ன அர்த்தம்?’

‘கடவுள் உன்னை அந்த லூசி கிட்டேர்ந்து காப்பாத்திட்டார்னு அர்த்தம்!’

‘எனக்கு ஒண்ணும் புரியல்லேப்பா.’

‘பதட்டப்படாதே, ரமேஷ். உங்க மாமா எனக்கு எழுதின லெட்டரையே குடுக்கறேன். படிச்சுப்பாரு.’ – கட்டிலிலிருந்து எழுந்த அவர் அலமாரியிலிருந்து அந்தக் கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் அதைப் படிக்கத் தொடங்கியதும், ‘நிதானமாப் படி. நான் பாத் ரூமுக்குப் போயிட்டு வர்றேன். கதவைத் தாள் போட்டுக்க,’ என்ற சோமசேகரன் நாசூக்காய் எழுந்து போனார். ரமேஷ் பதற்றமாகவும், ஒரு நம்பமுடியாமையுடனும் அதை வாங்கிப் படிக்கலானான்.

‘அன்புள்ள சோமசேகர்,

உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிட்ட லூசி என்னும் பெண்ணைக் கண்காணித்ததில் கீழ்க்காணும் விவரங்கள் தெரியவந்துள்ளன.

சென்னையிலிருந்து மாற்றப்பட்டு வந்துள்ள அவள் ‘ஒரு மாதிரியான’ பெண். இங்கு எம்.டி.- யின் செயலராக இருக்கிறாள். ராபர்ட் என்பவனுடன் டிக்கெட் எடுத்துப் பயணம் செய்து ஜனவரி 18- இல் மும்பை வந்திறங்கிய இந்தப் பெண் ஒரு சிறிய •ப்ளாட்டில் தனியாக வசித்துவருகிறாள். அவளுக்கு அம்மா, அப்பா இல்லை. நடத்தை சரி இல்லாதவள் என்று உறுதியாய்த் தெரிகிறது. இரவுகளில் அவளது இருப்பிடத்துக்கு ஆண்கள் வந்து போகிறார்கள். மாலை நேரங்களில் மட்டும் ஒரு குறிப்பிட்ட நபருடன் சுற்றுகிறாள். சினிமா, கடற்கரை என்று போகிறாள். அந்த ஆள் இங்கே பெரிய பிஸ்னெஸ்மேன். ஆள் அமர்த்தி அவளைத் தொடரச் செய்ததில், –  ஒரு தியேட்டரில் இருவருக்கும் பின்னால் அந்த ஆள் அமர்ந்து செவியுற்றதில்   –  அவளும் அந்தப் பணக்காரனும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பது தெரியவந்துள்ளது. குடிக்கிற பழக்கமும் அவளுக்கு இருப்பது தெரிந்தது. அவளது அலுவலகத்தில் அதற்காக அவள் மெமோ மூலம் கண்டிக்கப் பட்டிருக்கிறாள். அவளுக்குத் திருமணம் ஆனதன் பிறகு தகவல் தருகிறேன்.

ரமேஷ¤ம் சாரதாவும் நலந்தானே? நீங்களும் நலந்தானே? எல்லாருக்கும் என் அன்பு. இங்கும் யாவரும் நலமே. இங்ஙனம், அன்புள்ள, ராஜரத்தினம்..  ..  ..’

ரமேஷின் அதிர்ச்சி உச்சத்துக்குப் போயிற்று. தலை சுழல்வது போல் இருந்தது. கடிதத்தை மறுபடியும் படித்தான்: ‘லூசி! நீயா! நீயா இப்படி? இவ்வளவு கீழ்த்தரமானவளா நீ? நம்பவே முடியவில்லையே!’ –  அவன் விழிகளில் நீர் நிறைந்தது. சிலையாய்ச் சமைந்திருந்த அவனருகே சோமசேகரன் சற்றுப் பொறுத்து வந்தமர்ந்தார். கண்கலங்கி அமர்ந்திருந்த தனது நிலையால் அவரும் பெரிதும் கலங்கிவிட்டது அவரது சிவந்த விழிகளிலிருந்து அவனுக்கு விளங்கியது.

‘ரமேஷ்! அந்த லெட்டரை இப்படிக் குடுப்பா. பத்திரமா வெச்சுக்க வேண்டிய லெட்டர் அது.,’ என்று கூறி அதைப் பெற்றுக்கொண்ட அவர் கோத்ரெஜ் அலமாரியின் பெட்டகத்துள் அதை வைத்துப் பூட்டினார். பின்னர், ரமேஷின் அருகே அமர்ந்து அவன் தோளில் தம் கையைப் பதித்தார். ஆதரவு மிக்க அந்தத் தொடுகையால், அவனுள் உணர்ச்சிகள் பொங்கின. ‘அப்பா! நா.. நா.. நான் யாருக்கும் எந்தக் கெடுதியும் பண்ணினதில்லையேப்பா! எனக்கு ஏம்ப்பா இப்படி ஒரு கொடுமை?’

‘•பூல்! கண்ணீர் விடாதே. காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விட்டிச்சேன்னு சந்தோஷப்பட்டுக்க, ரமேஷ்! உனக்கு தியானம் சொல்லித் தறேன். ஒரே மாசத்தில உன்னோட சோகம் ரொம்பவே குறைஞ்சுடும், பாரு. ஏதோ ஒரு விதத்துல காதல் தோல்வி எல்லாரையுமே தாக்குது.  வெற்றி அடையறவங்க ரொம்பக் கம்மிப்பா. உன்னோட உணர்ச்சிகளை என்னால புரிஞ்சுக்க முடியுது, ரமேஷ்! ஏன்னா, உன் வயசை நான் கடந்து வந்தவன், இல்லியா?’

அவன் கண்களைத் துடைத்துக்கொண்டு வியப்புடன் அவரைப் பார்த்தான். அவர் கசப்புடன் புன்னகை செய்தார். ‘கல்யாணத்துக்கு முன்னால செக்ஸ் வேண்டாம்னு அன்னைக்கு நான் சொன்னது என்னோட அனுபவ அடிப்படையிலதாம்ப்பா, ரமேஷ்! எங்க கிராமத்தில ஒரு பொண்ணோட எனக்குப் பழக்கம் ஏற்பட்டுது. நல்ல பொண்ணுதான். ரொம்ப அடக்கமானவ என்னோட வற்புறுத்தலாலயும், ‘அப்படின்னா என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?’ ங்கிற என்னோட கசப்பான கேள்வியைத் தாங்க முடியாமயும், அவ எனக்குத் தன்னை அரை மனசோட இழந்தா. அதுக்கு அப்புறம், நான் பாட்டுக்குப் பொறுப்பு இல்லாம ஆல்-இண்டியா டூர் கிளம்பிப் போயிட்டேன். காலேஜ் மூடின சமயம். திரும்பி வர்றதுக்கு மூணுமாசம் போல ஆயிடுச்சு. அவ கன்சீவ் ஆகி இருந்திருக்கா. அவளுக்கு ஒரு அக்கா இருந்ததால, அவளுக்கு முதல்ல கல்யாணம் நடக்கிறதுக்கான சாத்தியமும் இல்லே. தவிர இப்படி ஆயிட்டதை வெளியே சொல்லிக்க முடியாத அவமானத்தில அரளிவிதையை அரைச்சுச் சாப்பிட்டுட்டு உசிரை விட்டுட்டா..  .. ரமேஷ்! அந்த உறுத்தல் இன்னும் என்னை விட்டுப் போகல்லே. இப்ப கூட அடிக்கடி அவளைப் பத்திக் கனாக் கண்டுட்டு வேர்த்து விறுவிறுத்துப் போய்த் திடுக்னு முழிச்சுப்பேன். நானும் ஒரு விதத்துல அயோக்கியன்தான்.’

இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் ரமேஷ் அதிர்ந்து போய்த் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

அவர் தொடர்ந்தார்:  ‘லூசிகிட்ட நமக்கு மெட்ராஸ்ல ரெண்டு சொந்த வீடுகள் இருக்குன்னு சொன்னேனே, நினைப்பு இருக்கா?’

‘இருக்குப்பா. எதுக்கு இந்தப் பேச்சுசுன்னு நான் கூட ஆச்சரியப்பட்டேன்.’

‘காரணமாத்தாம்ப்பா அப்படிச் சொன்னேன். நீ லூசியைக் கூட்டிட்டு வர்றதுக்குக் கொஞ்ச நாள் முந்தி யாரோ ஒரு ஆளு எனக்கு என்ன சொத்துபத்து இருக்குன்னு நைஸா என் பியூன் கிட்ட விசாரிச்சிருக்கான். ஏதோ சம்பந்தம் பண்றதுக்காகப் பொண்ணு வீட்டுக்காரங்க சார்பில விசாரிக்கிறதாவும் சொன்னானாம். அவன் கழுத்தில இருந்த சிலுவையைப் பியூன் சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்டப்ப, ஒரு இந்துக் குடும்பப் பொண்ணுக்காகக் கேட்டதாச் சொல்லியிருக்கான். என்னோட பியூனும் ரெண்டு வீடு, நிலபுலன், நிறைய சேமிப்பு எல்லாம் இருக்குன்னு   சொல்லியிருக்கான். கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ஓட்டல்ல பிஸ்னெஸ் கான்•பரன்ஸ் நடந்திச்சு. ஓட்டலை விட்டு வெளியே வர்றப்ப பியூன் அந்த ஆளைக் காட்டினான்… லூசியை நீ அறிமுகப் படுத்தினியா? ஒருக்கா அவளோட அண்ணன்காரனா யிருக்கலாம்னு நினைச்சேன். ஆனா லூசி வந்து போன மாறு நாளே அதே ஆளையும் லூசியையும் அதே ஓட்டல்ல வெச்சுப் பாத்தேன். அவங்க உக்காந்திருந்த விதம் அண்ணந்தங்கச்சி மாதிரிரி இல்லே, ரமேஷ்!’   –   ரமேஷ் கூனிக் குறுகிப் போனான்.

Series Navigationஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது“மணிக்கொடி’ – எனது முன்னுரைதொடாதேசீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​6​இந்திய விஞ்ஞான மேதைகள் சி. ஜெயபாரதனின் நான்காவது விஞ்ஞான நூல் வெளியீடு”புள்ளும் சிலம்பின காண்”தினம் என் பயணங்கள் – 1உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு விழாதாகூரின் கீதப் பாமாலை – 98 நீ அளித்த கொடை .. !கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2திருக்குறளும் தந்தை பெரியாரும்படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்விதூதும், தூதுவிடும் பொருள்களும்மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *